Tuesday, December 30, 2008

அய்யனார்,வாரணம்ஆயிரம் மற்றும் பாடல்கள்...

எதையாவது வாசித்தே ஆகவேண்டும் என்றிருப்பதனால், இணையத்தில் வாசித்தாலும் சிலவற்றை பிரதி செய்து அறைக்கு எடுத்துச்செல்வது என் பழக்கம் ஆகிற்று அப்படி எடுத்துச்செல்கிற பிரதிகள் பலவகையானதாய் இருக்கும் என் படுக்கையில் ஏதாவது புத்தகமோ அல்லது பேப்பர்களோ எதுவும் இல்லாமல் போனால்தான் அது ஆச்சரியம் எப்பொழுதும் ஏதாவது இருக்கும் ...

அப்படித்தான் காலில் அடிபட்ட அறைக்குள் முடங்கிப்போயிருந்த நாட்களில் ஒன்றின் பின்மதியப்பொழுதில் படுக்கையில் இருந்தபேப்பர்களை வாசிக்கத்தொடங்கினேன்...
அப்படி நான் பிரதி செய்து வாசித்தவற்றுள் முப்பத்தொரு பக்கங்களில் இருந்த டிசே அண்ணனின் "பின்னவீநத்துவம் அல்லது எனக்கு பிடிக்கப்போகும் சனி" தான் பல நாட்களாய் வாசித்த பதிவு,திரும்ப திரும்ப படிச்சாலும் தெளிவாகாமல் இருந்த பதிவுகளில் அதுவும் ஒன்று போதுமடா இந்த பின்நவீனத்துவம் என்றாகி இருந்தது!என்ன கொடுமையடா இதுங்கிற மாதிரி இருக்கும் ஆனா நிறையப்பேசி இருப்பாங்க அந்தப்பதிவிலும் பின்னூட்டங்களிலும்...

அன்றைக்கும் அப்படித்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். "ஊர் 'நியூஸ்' கொண்டு வாங்கோ தம்பி" என்கிறவர்களுக்காக கொண்டு செல்கிற அந்த அறிக்கை இந்த அறிக்கை, அவர் சொன்னது இவர் சொன்னது, போன்றவைகளையும் வாசித்துவிட்டு என்கட்டிலிலேயே விட்டுப்போயிருந்தார்கள் அவற்றை தவிர்த்து...

வாசிப்பதற்கு வேறென்ன இருக்கிறது என்று தேடியபொழுதில் அய்யனாரின் ஜோவும் இருந்தது
என்னுடைய அதிர்ஷ்டம் என்று நினைத்துக்கொண்டே வாசிக்கத்தொடங்கினேன்,
மனதிற்கு நெருக்கமாய் இருக்கிற பதிவர்கள் சிலரில் அய்யனாரும் ஒருவர்!உண்மையில் அய்யனாரிடம் ஏதோ இருக்கிறது அய்யனாரின் பல கவிதைகளில் பல பதிவுகளில் அய்யனார் என்னுடன் ஒத்துப்போவதாக உணர்ந்திருக்கிறேன்.அது போலத்தான் 'ஜோ'வை வாசிக்க வாசிக்க எனக்கும் என்னுடைய இப்போதைய நாட்களின் ரணம் தகிக்கலாயிற்று விடிய விடிய பேசுவதற்கு யாரும் இருக்கமாட்டார்களா என்கிற ஏக்கம் மறுபடி தலை தூக்கியது... இதற்காகவே இரவுப்பணியில் இருந்தேன் கிட்டத்தட்ட பதினொரு மாதங்கள் பேசுவதற்கு யாருமில்லாததில் வாசித்தல் மிக நெருக்கமாயிற்று இப்போது.

வாசிக்கிறவனை எழுத்துக்குள் ஒருவனாக்குகிற அல்லது அந்த நிகழ்வுகளில் பங்கெடுக்கிறவனாக மாற்றுகிற தன்மை அய்யனாரிடம் இருக்கிறது அதற்கு அருடைய அனுபவங்கள் என்னுடைய ரசனைகளில் இருப்பதும் ஒரு காரணமாகலாம்...


என்னய்யா எப்ப பாரு புலம்பிக்கிட்டே இருக்க என்றுதான் என்னை பல பேர் கேட்டிருக்கிறர்கள்;அதுவும் உண்மைதான் சொல்ல முடியாத அல்லது சொற்கள் இல்லாத வலிகளைத்தான் நான் சொல்லிப்பார்க்க முயன்றகொண்டிருக்கிறேன்.காரணமே இல்லாமல் சலிக்கிற மனதை என்ன செய்வது புதைந்து போயிருக்கிற சொற்களை அவற்றின் அமுக்கத்திணறல்களை எப்படி சகிப்பது அதைத்தான் எழுதிப் பழகிக்கொண்டிருக்கிறேன்!புனைவோ நிஜமோ அது அனுபவங்களின் சாயல்களில்தானே இருக்கிறது. என்ன இருந்தாலும் மனித மனம் விசித்திரங்களால் நிரம்பியதுதானே, அதனை கட்டுக்குள் வைப்பதுதானே மிகு பணியாய் இருக்கிறது கட்டவிழ்ந்து விடுகிற மனம் பிறழ்ந்து விடுகிறது அப்படித்தானே...

ஏராளம் சொற்கள் உள்ளேயிருந்தாலும்...
அவை மிகக்குறைவானதாய்தான் வெளிப்படுகின்றன!
இன்னும் நிறைய எழுத வேண்டியிருக்கிறது... இதைப்பற்றி இன்னொரு நாள் எழுதலாம்!

(நம்பினால் நம்புங்கள் நான் இயல்பில் மிக உற்சாகமானவன்,யாராவது மாட்டினா அவ்ளோதான்)


இதைப்பற்றிய குறிப்பை எழுதாமல் அய்யனாரின் பதிவுகளை படிப்பதில்லை என்றிருந்தேன் இனிமேல்தான் படிக்க வேண்டும்.அய்யனார் உங்களை இன்னொரு கேள்வியும் கேட்க வேண்டும் அய்யனார் என்கிற பெயருக்கான காரணம் என்னஅண்ணன்?அதற்கும் தனிமையின் இசை என்கிற பெயருக்கும் தொடர்பிருக்கிறதாக நான் நினைக்கிறேன்...சொல்ல முடியுமா?

நிறைய எழுதுங்கோ அண்ணன்...






இந்தச்சுடிதார் எனக்கு பிடித்திருக்கிறது!சமீராவுக்கு சுடிதார் நன்றாகவே பொருந்துகிறது!


\\
வாரணம் அயிரம் படத்தை தரமான டிவிடியில் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்...பொறுமையை கடந்து அறையில் முடங்கி இருந்த நேரம் அதனையும் பார்த்தேன் நான் எதிர்பார்த்தததை விட சிடி நன்றாகவே இருந்ததில் பார்த்து முடித்தேன்...

படத்தை பற்றி நிறையப்பேர் நிறைய சொல்லியிருக்கிறதால நான் என்பங்குக்கு படம் எனக்கு பிடிச்சிருக்கு என்பதை மட்டும் சொல்லிக்கொண்டாலும் சமீரா அழகாய் இருக்கிறார். ஆடைத்தெரிவில் சூர்யாவும் சரி சமீராவும் சரி கலக்ககலாய் இருக்கிறார்கள்.காட்சிகளை படமாக்குவதில் கௌதம் திறமை உள்ளவர் என்பது உண்மைதான்.


ஹாய்.. மாலினி..!
நா(ன்) இத சொல்லியே ஆகணும்.
நீ அவ்வளவு அழகு!
இங்க யாரும் இவ்வளவு அழகா...இவ்வளவு அழகை பாத்திருக்கவே மாட்டாங்க, and i'm in love with you.

வசனம் எல்லாம் சரியாயிருக்கா)

இந்த வார்த்தைகளை சூர்யாவோட குரல்லயே சொல்லிப்பார்த்தேன் எனக்கும் குரல் மாற்றுகிற வித்தை வருகிறது! எல்லா நடிகர்களுக்கும் நல்ல குரல் வாய்ப்பதில்லை சூர்யாவுக்கு வாய்த்திருக்கிறது.







\\
அறையில் இருந்த நாட்களில் பகல் முழுவதும் பாடல்களால் நிரம்பியிருந்தது அறை...

சும்மா சொல்வதற்கல்ல பாடல்கள் எங்களுள் எவ்வளவு தூரம் கலந்திருக்கிறது என்பதை அனுபவித்தவர்களுக்கு தெரியும்...

பாடல்கள் தருகிற அனுபவங்களைப்பற்றி பேச வேண்டும் என்பது பல நாள் ஆசை அதற்கான தருணங்கள் இன்னும் கூடவில்லை, புதுவருடத்தில் ஆரம்பிக்கலாம் அந்த அற்புதமான அனுபவங்களை இப்போதைக்கு பாடல்கள் காலத்தை மறக்கச்செய்கின்றன அல்லது வேறொரு காலத்துக்குள் எங்களை அழைத்துப்போகின்றன என்கிற சிறுகுறிப்போடு நிறுத்தி;இது பற்றிப்பேசப்போனால் இந்தப்பதிவின் நீளம் உங்களின் ஏகோபித்தஎரிச்சலை பெறக்கூடும் என்கிற எச்சரிக்கை உணர்வில் நிறுத்தி விடுகிறேன்.

Friday, December 26, 2008

அலை செய்த துரோகம்...

கொஞ்சம் பொறு அலையே -உன்னோடு
கொஞ்சம் பேசவேண்டியிருக்கிறது!
என் சிறுவயதிலிருந்து
என்னை நீ பார்த்திருக்கிறாய்
அம்மாவுடையதோ அல்லது அப்பாவுடையதோ
கைகளைப்பற்றிக்கொண்டு...
உன் பெரியதும் சிறியதுமான அலைகளுக்கு
நான் பயந்து பயந்து நடந்த நாட்களில் இருந்து
என்னை உனக்கு தெரியும்!
ஒருவேளை அதற்கு முன்னர் இருந்தே
உனக்கு என்னை தெரிந்திருக்கலாம் - ஆனால்
எனக்கு உன்னை அப்பொழுதிலிருந்துதான்
அடையாளம் கண்டு கொள்ள முடிந்திருக்கிறது...
அந்த நாட்களில் இருந்து இப்போது
அவளோடு நடந்த நாட்கள் வரைக்கும்
உனக்கு என்னை நன்றாகவே தெரியும்!
இதுவரையும் உன்னிடமிருந்து நான்
எதையும் மறைத்ததில்லையே!
என்னுடைய பள்ளி நாட்களின்
உறவுகளும் பிரிவுகளும்
என்னுடைய சிறுபராயத்தில்
நீ கொடுத்த சிப்பி சோகிகளும்
நான் வளர்த்த மீன்களின் தொட்டிக்கு
நீ கொடுத்த பூக்கற்களும் சங்குகளும்
பழைய புத்தகங்களின் பக்கங்களில்
நான் செய்து விட்ட கப்பல்களும்
என் பெயரெழுதி போத்தலில் அடைத்து
என்னால் முடிந்தவரை தூரத்தில்...
உனக்குள் அதனை எறிந்ததும் என சிறுவயதில்
நம் கொடுக்கல் வாங்கல்கள்
நம் நட்பின் பரிமாற்றங்களாகத்தானே இருந்தது...

உந்தன் காற்றோடு நான் பட்டமேற்றி விளையாடியதும்
உன்னோடு சேர்ந்து நான் நீச்சல் பழகியதும்
அதன் பிறகு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம்
உந்தன் அலைகளில் நான் மிதந்திருந்ததும்
நம் நட்பின் நெருக்கத்தை அதிகரித்திருந்ததே...

வருடம் ஒரு மறை வரும் நம்மூர் கோவிலின்
தீர்த்ததிருவிழாவில் ஊரையே மொத்தமாய்
பார்த்த சந்தோசத்தில் நீ துள்ளி விளையாடுவதும்
சில வருடங்களுக்கொரு முறை வரும்
ஏதோ ஒரு தினத்தில் நம்மூர் கோவில்
தெய்வங்கள் எல்லோரும் உன்னை
தேடிவந்து நீராடிச்சென்றதும் என
ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்
எனக்கும் உனக்குமான நெருக்கம்
அதிகமாகத்தானே ஆகியிருக்கிறது....

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
என் நண்பன் ஒருவனை நீ பறித்துக்கொண்ட பொழுதில்
அவனை உன் கரையிலேயே நெருப்பாக்கி
அவன் சாம்பலையும் உனக்குள்ளேயெ கரைத்ததற்காய்
உன்னோடு நான் கோபித்துக்கொண்ட அந்த நாட்களுக்கு பிறகு...
அந்த சோகத்தை மறப்பதற்கு கூட
உந்தன் கரையில் இருந்துதானே அழுதேன்
அப்பொழுதும் நீதானே வந்து தேற்றினாய்
அதன் பிறகு நான்
உன்னோடு பேசுவதைக்குறைத்திருந்தேன்
பார்க்க வருவதை தவிர்த்திருந்தேன்
பின்பொரு சந்தர்ப்பத்தில் நெடுநாட்களின் பின்னர்
அவளை முதன் முதலில் சந்தித்த நாளில் கூட...

உன்னைப்பபார்க்க வந்து
நெருக்கமான நண்பர்களைப்போல
தழுவிக்கொண்டோமே நினைவில்லையா?!
அதன் பிறகு அவளும் நானும்
நீயும் நிலாவும் மட்டுமேயான நாட்களில்
நேரம் போவதே தெரியாமல்
பேசிக்கொண்டிருக்கிற எங்களுக்கு
ஈரம் சேர்த்த காற்றை அனுப்பி
நேரத்தை நினைவுபடுத்துவாயே மறந்து விட்டாயா?

எனக்கும் அவளுக்கும் இடையிலான
நெருக்கமான தருணங்கள் கூட
உன் கரையில்தானே நிகழ்ந்திருக்கிறது
இவ்வளவு ஏன்
என் முதல் முத்தம் கூட
உன் பார்வையில்தானே நிகழ்ந்திருக்கிறது
இப்படி என்னுடைய
சந்தோசம்,சோகம்,சுகம் என
யாவும் உனக்கு தெரியாமல்
நான் மறைத்ததில்லையே

இப்படியிருக்க...

நீ மட்டும் எப்படி!
நெஞ்சைத்தொட்டுச்சொல்!!
நீ செய்தது துரோகம்தானே!
போ அலையே போய்விடு !
நீ செய்தததை மறக்க முடியவில்லை!!
மன்னிக்கவும் முடியவில்லை!!

இருந்தாலும்...
இப்பொழுதும் கூடப்பார்
உன்னிடம்தான் அழுதுகொண்டிருக்கிறேன்
இனியாவது...
எனக்கு தெரிந்தொ தெரியாமலோ...
இப்படியான காரியங்களை செய்யாதே.




\\
நினைத்துபாராத விசயமாய் நிகழந்த சுனாமி நினைத்துப்பார்க்க முடியாத மறக்கவும் முடியாத நிகழ்வுகளை தந்து போய் நான்கு வருடங்களாகிற்று ...சொல்ல முடியாத, வெளியே தெரியாத பல கதைகள் இன்னமும் இருக்கிறது அதன் வடுக்களின் சுவடாக...


\\
சுனாமிக்கு பின்பான நாளொன்றில் எங்களுர் கடற்கரையில் நடந்து கொள்கையில் மனதுக்குள் வந்த பல நினைவுகளை கையிலிருந்த பழைய குறிப்பேடொன்றில் தொடர்பே இல்லாமல் கிறுக்கியிருந்தேன் அப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாய் எழுதிய கடல் குறிப்புகளில் இருந்து சில வரிகளை சேநர்த்தெழுதியிருக்கிறேன்...(22/01/05)

நேற்றே தட்டச்சி முடித்திருந்தேன் பதிவாக்குவதற்கான நேரம் கிடைக்கவில்லை இன்றைக்கு வந்தவுடன் பதிவாக்கி இருக்கிறேன்.

26/12/2008
4.35pm
K.S.A


\\

சுனாமிக்கு பின்னர் கடற்கரை பிரதேசத்திலேயே வேலை செய்திருந்தாலும் கடலுடனான நெருக்கம் குறைந்துதான் இருக்கிறது...கடற்கரையிலேயே வேலை செய்திருந்தாலும் ஊரைவிட்டு வரும்பொழுதே திருகோணமலை கடலின் அலைகளினுடே கண்ணுக்கெட்டிய துரம் வரை நடந்து திரும்பினேன்.

அதே போலத்தான் எங்களுர் கடற்கரையிலும் கால் நனைக்காமல் இருந்த என்னை இரண்டு சந்தர்ப்பங்களில் கடலே அழைத்திருந்தது.

Wednesday, December 24, 2008

என் முதல் தோழிக்கு பிறந்த நாள்...

அவளுக்கு வெள்ளந்தி மனது அவள் நிறத்தைப்போலவே மூன்றாவது வருடமாக அவள் பிறந்த நாளுக்கு அவளோடு இல்லாமல் இருக்கிறேன் காலையிலேயே அழைத்துப்பேசி இருந்தாலும் அவளை கட்டிக்கொண்டு உச்சி முகர்ந்து வாழ்த்துசொல்லவும் அவளிடமிருந்து ஆசீர்வாதங்களும்,பரிசும், இனிப்புகளும் பெற முடியாமலும் போனது வலிக்கத்தான் செய்கிறது, காலம் போய்கொண்டிருக்கிறது...இன்னும் எத்தனை பிறந்த நாட்கள் இப்படி பிரிந்திருக்க வேண்டுமோ என்ன செய்வது:(

வா உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது என்பது அவள் இப்பொழுதெல்லாம் சொல்கிற முதல் வார்த்தையாய் இருக்கிறது, வந்து என்னை கண்டு கொள் பின்னர் யோசிக்கலாம் நீ யாழ்ப்பாணத்தை விட்டு போவதையும் அங்கு ஜீவிக்க விரும்பாதையும் என்று தன் அன்பின் ஆயிரங்களில் ஒரு பங்கை எனக்கு காட்டிக்கொள்வாள்...

"நீதானே ஒரு கடிதம் போடாத ஆள்" என்று நான் ஆயிரம் முறை தொலைபேசியில் அழைத்தாலும் சொல்கிறவள், கடிதங்கள மீதான என் காதலுக்கு இவளும் ஒரு காரணம்! அவள் கிறுக்கலான கையெழுத்துக்களில் நெருக்கமான மனதினை அழகாய் தருகிறவள்..."ஒரு படம் அனுப்பு பார்க்கலாம் என்றாலு நடப்பு காட்டுகிறாய்" என்பதும் நான் புகைப்படங்கள் எடுப்பதில்லை என்கிற என் வாதங்களை மீறிய அவள் குற்றச்சாட்டு!

நான் அவளோடு இருந்த நாட்களில் எல்லாம் என் எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் என் பக்கமே வாதாடுகிற அவள் அன்புக்கு தெரிவதில்லை அடுத்த கோணங்கள் 'அவன் அப்படிச்செய்கிற ஆள் இல்லை' அல்லது 'அவன் அப்படியானவன் அல்ல' என்பது அவள் வாதமாக இருக்கும் அந்த பிரச்சனைகளை ஒரு தீர்வுக்கு கொண்டு வந்த பிறகுதான் அது பற்றி என்னிடம் விவாதம் செய்வதும் என்னை கேள்வி கேட்பதும் அவளுக்குத்தான் என்னைப்பற்றி அங்குலம் அங்குலமாய் தெரிந்திருக்கிறதே பிறகென்ன :)

'இனிமேல் உனக்காக கதைக்கமாட்டேன் எக்கேடு என்றாலும் கெட்டுப்போ' என்று சொல்லிக்கொண்டாலும் அதற்கு நான் காட்டுகிற பொய்க்கோப முறுக்குகளுக்கே குழைந்து போய்விடுகிற லேசான மனதுக்காரி..எதுவும் பேசாமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியேறுகிற என்னை "தேத்தண்ணியை குடிச்சுட்டு போ" என்கிற முகம் பாராமல் சொல்கிற வார்த்தைகளிலேயே கட்டிப்போட்டு விடுகிறவள்! அவள் கையால் தேநீர் குடிக்கிற நிகழ்வும் என் சமீபத்திய கனவுகளில் அடிக்கடி நிகழ்கிறது...


வெகுவிரைவில் அவளை சந்திக்க வேண்டும் என்றிருக்கிறேன், அவள் என்னிடம் கேட்டிருப்பது தான் இந்தியா போய் பார்க்க வேண்டும் என்பது; நானும் சொல்லி இருக்கிறேன் நான் ஊருக்கு வருகையில் அழைத்துப்போகிறேன் என்று. 2009 ஏப்பரல் மாதம் அநேகமாய் அது நிகழக்கூடும்...

அவளையும் ஊரையும் பார்ப்பதற்காகவாவது ஊருக்கு போயாக வேண்டும் அதற்கான விருப்பங்களும் சூழ்நிலைகளும் இல்லாமல் போனாலும்...


சரி..! சரி..! சொல்ல வந்த விசயத்தை மறந்து அவளைப்பற்றி சிலாகிப்பதே வேலையாகி விடுகிறது எனக்கு! அவள் சார்ந்து என்ன விடயம் பேச ஆரம்பித்தாலும்.


1951-12-24 இல் பிறந்த அவளுக்கு இன்று பிந்தநாள், நான் கொண்டாடுகிற நாள், இந்த முறை அவள் பிறந்த நாளுக்கு உங்களையும் அழைத்திருக்கிறேன் சரியா?(இந்த அழைபை ஏற்றுக்கொள்வீர்கள்தானே ஏனெனில் இனி இன்னும் சில இப்படியான அழைப்புகள் வரக்கூடும்...)

மிக மெல்லிய மனதுக்காரியான நல்லவள் ஒருத்திக்கு நான் வாழ்த்து சொல்கிற தருணத்தில் நீங்களும் வாழ்த்த வேண்டாமா...



பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா...


இந்த பிறந்த நாளிலும்...
நான்தான் உன்னிடம் கேட்கிறேன்
இன்னும் நிறையப் பிறந்தநாட்களை
நீ என்னருகில்
இருந்து கொண்டாட வேண்டும்
நான் கேட்கும் வரை
நீ பிறந்தநாள் கொண்டாட வேண்டும்...

வரம் தருவது
உனக்கொன்றும் புதிதல்லவே
இந்த வரத்தையும் எனக்கு
தந்து விடு!


//
அம்மாவின் பிறந்த நாளுக்கு பதிவெழுத வேண்டும் என்பதை விட அவளுக்கான் என் வாழ்த்துக்களை என் மனதார சொல்ல வேண்டும் என்கிற எண்ணமே நிறைய இருந்தது என்னவெணன்று எழுதி பதிவு போடுவது என்று தெரியாமல்தான் இணையத்துக்கு வந்தேன்...(இந்த நாட்களில் இணையம் கிடைப்பதும் பெரும் கஷ்டமாய் இருக்கிறது இப்பொழுதுதான் சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது)அலுவலக வேலையின் குறுக்கிடல்களுக்கு மத்தியில் சட்டென்று தோன்றிய உணர்வுகளில் இருந்து இவ்வளைவையும்தான் கோர்வையாக்க முடிந்திருக்கிறது.

//
திரும்பவும் உன் சந்தோசத்திற்கும் நிறைவிற்கும் மனதார்ந்த வாழ்த்துக்கள் அம்மா தெய்வங்கள் நீ தொழுகிற தெய்வங்கள் எப்பொழுதும் உன் கூட இருக்கும்...

//
என் குடும்பத்தார்,நண்பர்கள், நீங்கள் எல்லோர் சார்பாகவும் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடுவதிலும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதிலும் புதியதொரு சந்தோசம் கிடைத்திருக்கிறது.


24-12-2008
07.07pm
KSA.

Thursday, December 18, 2008

எழுதாத குறிப்புகள்...

எழுதுவதற்கு நிறைய இருக்கிறதாய் தெரிகிறது என்ன காரணமோ எழுதவே முடியாமல் இருக்கின்றன நாட்கள்.அழுத்தமாய் இருக்கிற மனது கிடந்து சலிக்கிறது.கம்பி வேலிக்குள் அடுக்கடுக்காய் உட்கார்ந்திருக்கிற போட்டபிள் கபினெட்டுகளில் ஏதோ ஒன்றில் வசிக்கிற உடலுக்கு தெரியுமா அதன் உயிர் பயணங்களையும் புத்தகங்களையும் சுவாசிக்கிறதென்று உடல் அது பாட்டுக்கு கட்டிலோடு தஞ்சம் புகுந்து விடுகிறது, தீர்ந்து போகாத சில பிரச்சனைகளும் அவற்றோடு சேர்ந்து கொள்கிற இன்ன பிறக்களும் தூக்கம் வருகிற பொழுதுகளை குறைக்க சாண்டில்யனின் கடல் புறாவை வாசிக்கிறதற்கான மனோநிலை சற்றும் வரமாட்டேன் என்கிறது...வாசிக்காமல் கிடப்பிலிருக்கிறது அது!

கணையாளியின் கடைசிப்பபக்கங்களை படிப்பதற்காய் வெளியில் எடுக்கவில்லை இன்னமும்...

வலது காலில் மாவு கட்டு போட்டிருக்கிற எனக்கு இடது கால் விரல்களுக்கிடையில் காயம் வந்திருக்கிறது,இடது காலை மட்டுமே பாரம் கொடுத்து பயன் படுத்துகிறதில் காலும் இடுப்பும் வலியாயிருக்கிறது.

சுயவிபரக்கோவைகளில் பொழுது போக்கு என்பதில் வாசித்தலும் பயணித்தலும் என்று எழுதுகிற ஒரு மனது இரண்டரை வருடங்களாய் ஜன்னல் திறக்காத கன்டெய்னர் அறைக்குள் எப்படி அடைகிறது என்பது தமிழ் மணத்துக்கு வெளிச்சம்...!


பதிவு எழுத முடியாது என்பதல்ல...எழுதுகிற மனோநிலநிலை கிடையாது...
எப்பொழுதும் உற்சாகமாய் இருப்பதாய் நடிக்க முடிவதில்லை எனக்கு! போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது...!


சில பாடல்கள் தருகிற சிலாகிப்புகள் பற்றி பேச வேண்டும் என்பது என் நெடு நாளைய ஆசை ஆனால் என் சோம்பல்களில் அவை தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது ...

அப்படி நான் பேசப்போகிற படல்களில் முதல் பாடல்...
அனேகம் நடிகை சோபனாவுடையதாய் இருக்கலாம் அல்லது ஷாலினியுடையதாய் இருக்கலாம்,இரண்டு பாடல்களும் இடம்பெற்ற திரைப்படம் ஒரே இயக்குனருடையது.

அவை என்ன பாடல்கள் என்பதை சரியாகச்சொன்னால்...முதலில் சொல்லுங்கள் பிறகு பார்க்கலாம்!

பல நாட்களாய் என் ஆரம்ப காலத்து வரிகளை தேடிக்கொண்டிருக்கிறது மனது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை...ஏன் இந்த வலை ஆரம்பித்த நாட்களில் நான் எழுதிய வரிகள் எல்லாம் பல வருடங்களின் முன்னர் நாட்குறிகப்புகளிலும் துண்டு காகிகதங்களிலும் எழுதியவையாகத்தான் இருந்திருக்கின்றன,சில வரிகள் மனதிலேயே கிடந்திருக்கின்னறன
எழுதாமல் புதைய விட்ட வரிகளை என்னை சபித்துக்கொண்டே தேடிக்கொண்டிருக்கிறது மனது...


இருந்தும் அந்த ரம்மியமான மனோநிலை என்பது தொலைந்து போயிருக்கிறது இப்பொழுதிலிருக்கிற ஏகாந்தம் பிடிக்காமல் இல்லை என்றாலும் அந்த மொழிகளை தவிர்ப்பதை விரும்பவில்லை மனது...

09-12-2008.


சேர்துக்கொண்ட குறிப்புகள்:

கடந்த வியாழக்கிழைமையில் இருந்து மீண்டும் வலி ஏற்பட்ட காரணத்தில் வேலைக்கு வர முடியாமல் அறையிலேயெ அடைந்திருந்தேன் சில ஹிந்திப்படங்கள் தமிழ் படங்கள் பாடல்கள் என பார்த்திருக்கிறேன் நா காமராசனின் தாஜ்மஹாலும் ரொட்டித்துண்டும் என்ற புத்தகம் வாசித்திருக்கிறேன்.தூக்கம் வருவதில்லை என்று சொன்னாலும் கடந்த நாட்களில் நிறையவே துங்கினேன் என்பதுதான் உண்மை...


இன்னும் சில புத்தகங்கள் கிடைத்திருக்கிறது.

கடைசியாய் எழுதியிருந்த பதிவில் இணைப்பதற்காய் படங்களும் பதிவாய் எழுதுவதற்காய் இந்த வரிகளையும் எழுதிவைத்திருந்தேன் அசௌகரியங்களின் மிகுதியில் குழம்பல் நிலமைகளில் பதிவாக்கப்படாமலே கடந்து விட்டது நாட்கள்.


பின்குறிப்புகள்...

//
கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பின்னர் வந்திருக்கிறேன் இணையம் பக்கம் நிறைய விசயங்கள் நிகழ்ந்திருக்கிறது, எவ்வளவோ படிக்க இருக்கிறது.

//
பதிவிடுவதற்காய் எழுதியிருந்த வரிகள் சில அழிந்து போயிருக்கின்றன சில பதிவுகள் இல்லாமல் போயிருக்கின்றன உங்களுக்கு சந்தோசம்தானே.

//
என்னடா ஒரு பின்னூட்டப்பதிவரின் ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லையே என்று யாரேனும் தேடவில்லை போலிருக்கிறது ம்ம்ம் பதிவுலகம் மிகப்பெரியது...

//
இப்பொழுதும் சிறிய வலி மீதமிருப்பினும் இதற்கு மேலும் அடைபட்டிருக்க முடியாததில் கடைமைக்கு வந்திருக்கிறேன்...

Saturday, December 6, 2008

ஒரு அவசர அறிவிப்பு...!!!

இது தமிழ்நதி அக்காவிடமிருந்து வந்த அறிவிப்பு ஒன்று.நேற்று விடுமுறையில் இருந்ததால இணையத்துக்கு வர முடியவில்லை இன்றும் இப்பொழுதுதான் வர முடிந்தது...


அன்பு நண்பர்களுக்கு,

இலங்கையில் பல்லாண்டுகளாகத் தொடரும் போருள் சிக்கி அவதியுறும்
தமிழ்மக்கள் குறித்த விழிப்புணர்வையும் நிரந்தர விடிவையும் வேண்டி,
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்
கவிஞர்கள் எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9
மணியிலிருந்து மாலை 5 மணிவரை மெரினா கடற்கரை காந்தி சிலையருகில் கூடி ஒரு
கண்டனக் கவியரங்கம் நடத்தவிருப்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கக்
கூடும். இந்நிகழ்வு குறித்த கூடுதல் கவனத்திற்காக உங்கள் அனைவரது
ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். உங்கள் இணையத் தளங்களில்
இந்நிகழ்வைப் பற்றி ஒரு அறிவித்தலையோ பதிவினையோ இடுவதின் வழியாக அதனைச்
சாத்தியப்படுத்தலாம். வார்த்தைகளன்றி வேறேதுமற்ற நாம் செய்யக்கூடியது
அது ஒன்றுதான் அல்லவா?


நட்புடன்
தமி்ழ் கவிஞர்கள் கூட்டமைப்பு

குறிப்பாக...!
உங்கள் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி...

Saturday, November 22, 2008

ஒரு மைதானமும் ஒரு தேவதையும் நானும்...

வியர்வையில் நனைகிறதுன் மேலாடை
மைதானமெங்கும் வழிகிறது அழகு!

எந்தவித தயக்கங்களும் இல்லாமல் யாருமில்லாத சுதந்திரத்தில் வியர்வை நனைக்க, அழகு தெறிக்க மைதானத்தில் பயிற்சி செய்கிற பெண்களை பார்த்திருக்கிறீர்களா அது ஒரு தனி அனுபவம்..அதுவும் அவள் மனதுக்கு நெருக்கமானவள் ஒருத்தியாயிருக்கையில் அற்புதமான அனுபவமாகி விடுகிறது அது!

காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிற கடைமையை அறிமுகம் செய்தவள் அவள்! எனக்கும் அதிகாலைத்தூக்கத்துமான நெருக்கத்தை பறித்துவிட்டிருந்தாள் காலையில் அம்மாவோ அக்காவோ தண்ணி தெளிக்கும் வரை படுக்கையிலிருந்து எழுந்திருக்காத என்னை இருள் விலகாத அதிகாலையில் பனி படர்ந்த மைதானதின் புல் வெளியில் நடக்க விட்டிருந்தாள்.

யாரோடும் அதிகம் பேசாத அவள் என்னை மட்டும் சேர்த்துக்கொண்டதில் சந்தோசப்பட்டுக்கொண்டிருந்த மனதை; மிக மென்மையான இயல்பு (அவள் எப்படி அவ்வளவு வேகமும் திடமும் வைத்திருந்தாள் என்பது நான் இன்னமும் அதிசயிக்கிற விசயம்) வெகு நிதானமான பெண்மை, முடிவெடுக்கிற ஆற்றல், நிறைவான தோற்றம் என மொத்தமாய் மிக அதிகமாய் வன் முறைசெய்து கொண்டிருந்தாள் அவள்...


குறுந்தூர,நெடுந்தூர ஓட்டங்கள்,நெட் போல்,கிரிக்கெட்,எல்லே,வொலிபோல் என அவள் கலக்காத விளையாட்டே இல்லை எனலாம்.மாவட்டம், மாகாணம் என பல மட்டப் போட்டிகளில் அவளை சேர்த்துக்கொண்ட பெருமையை பெற்றிருந்தது அவள் பள்ளிக்கூடமும் எங்கள் ஊர் கழகமும்(Sports Club).

வெள்ளை நிற ‘ரீசேட்டும்’ கறுப்பு அல்லது அடர் நீல நிற ‘ரக்சூட்டும்’ வெள்ளை நிற சப்பாத்துகளும் என அவள் பயிற்சி செய்வது அழகின் அதிகாரங்கள் நிரம்பிய பட்டத்து இளவரசி ஒருத்தியின் பயிற்சியை நினைவு படுத்திப்போகிற நிகழ்வு!
அழகு தெறிக்க,வளைவுகள் அதிர,பெண்மையின் இயல்பான வாசனைகளோடு,வியர்வையில் நனைகிற அழகுகளோடு, மிக முக்கியமானதாய் என்னை தவிர்க்கவில்லை என்கிற மிக நெருக்கமானதான சினேகங்களோடும் என் அதிகாலைகளை அற்புதமாக்கிக்கொண்டிருந்தாள்...

நான் மைதானத்துக்கு அவளுக்காகத்தான் வருகிறேன் என்பது தெரிந்திருந்தாலும் என்னை தனக்கு நெருக்கமானவனாய் உணர்கிறதாகிய நம்பிக்கையை எனக்கு அவள் செயல்கள் மற்றும் சினேகமான சிரிப்புகள் மூலம் உணதர்த்திக்கொண்டாள்....இன்னொரு வகையில் நான் வருவது தனக்கு திருப்தியாயிருந்ததாயும் அவளால் என்னை கவனிக்காமல் இருக்க முடியாதிருந்ததையும் பின்னய சம்பாஷணைகளின் பொழுதுகளில் குறிப்பிட்டிருக்கிறாள்...


பள்ளிக்கூட வயதில் அது தருகிற சுகம் வாழ்க்ககையின் பக்கங்களில் எழுதாமல் நிலைக்கிற ரசனைப்பொழுதுகள்,இன்னொரு மொழியில் தேவைதையின் தருணங்கள்!எனக்கும் என் அதிகாலைத்தூக்கத்துமான உறவை தகர்த்த பெருமையும பின்னர் மொத்த தூக்கத்தையும் பறித்த பெருமையும் இன்னமும் அவளுக்கிருக்கிறது!


என்ன ஒரு சோகம் அவள் கழகத்துக்குரிய அல்லது பள்ளிக்கூடத்துக்குரிய சீருடையில் மைதானமொன்றில் போட்டிக்காக ‘நெட்போல்’ விளையாடுவதைப்பார்க்கிற தவம் அல்லது வரம் எனக்கு இதுவரையும் கிடைக்கவில்லை இனிமேலும் கிடைக்கப்போவதில்லை...

//
உன் வியர்வைத்துளிகள்
விழுந்த இடங்களில்
வண்ணத்துப்பூச்சிகள்...!

//
காற்றில் கரைகிறதுன்
வியர்வைத்துளிகள்
மைதானமெங்கும் பூவாசம்...!

//
நீ
காலைப் பயற்சிக்கு வருவாய் என்றே
விடியாமல் காத்திருக்கிறது
மைதான வெளி!

//
அவள்
வந்து போக ஆரம்பித்த பிறகு
வந்து போகின்றன சில பறவைகளும்
எங்களுர் மைதானத்துக்கு...

//
நீ
பயிற்சிக்கு வரும் வரை
காத்திருந்து பூக்கின்றன
ஆங்காங்கே இருக்கிற பெயர்
தெரியாத பூச்செடிகள்...

//
அவள்
ஓடிக்களைத்தில்
மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது
காற்று!

//
பனி-
பூத்திருக்கிறது மைதானம்
அவள்-
பயிற்சிக்கு வருகிற
அதிகாலைக்காக...

//
அதிர்ந்து வளைகிற அழகுகளில்
சிதறுகிறதென் கவனம்...
உன் மேலாடையில் வழிகிற
காற்றில் கரைகிறதென் சுவாசம்...
கன்னங்களில் இழைகிற கூந்தல்கற்றைகளில்
சிக்குகிறதென் கண்கள்...
நீ இழுத்து விடுகிற மூச்சில்
நிறைகிறதென் உயிர்!


பின் குறிப்பு:
//
இத்தனை நெருக்கமாய் இருந்தும் அவள் நெட்போல் விளையாடுகிறதைப்பார்க்கிற சந்தர்ப்பம் எனக்கு அமைந்திருக்கவில்லை அது ஒரு மாதிரியான தவிப்பாகத்தான் இன்றளவும் இருக்கிறது.

//
அவள் இப்பபொழுது எந்த பயிற்சியும் செய்வதில்லை விளையாட்டுகளில் பங்கெடுப்பதும் இல்லை பின்னர் ஒருவேளை நிகழக்கூடும் நிலவொளியில் நிழக்ககூடும் முன்பு நிகழ்திருக்கிறதைப்போலான பயிற்சியும் ஒரே ஒரு பார்வையாளனுக்கும் அவனே போட்டியானளனுமாயிருக்கிற நெட்போல் ஆட்டமும்.

//
காலம் மாற்றங்களை
காவிக்கொண்டு பயணிக்கிறது...
மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன!

Saturday, November 15, 2008

நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது...

எழுதிக்கொண்டிருக்கிற இரவுகளில் வாழ்கிறது உயிர்...
குறைந்து கொண்டேயிருக்கிற வாழ்நாட்களை கணக்கிடுகையில்
விரிகிற வெறுமையை நிரப்பப முடியவில்லை...
இதுவரையான நாட்களின் எச்சங்களை தேடி;
களைத்துப்போனதன் சோர்வு மட்டுமே மீதமிருக்கிறது!
தூங்குகிற பொழுதுகளைத்தவிர வேறெதிலும் கிடைக்கவில்லை
இருத்தலைப்பற்றிய திருப்தி!
இழந்துவிட்டதைப்பற்றிய கவலைகளை
மறந்து போக முயன்றாலும்
உயர்ந்து கொண்டே இருக்கிற கிடைக்காதைவைகள்
சலிப்புகளை இலவசமாகத்தருகிறது
எழுதாமல் இருக்கிற சொற்களை அல்லது
பேசாமல் இருக்கிற உணர்வுகளை புரிந்து கொள்ள
நெருக்கம் மிகுந்த உறவொன்றின் இல்லாமை
கனவுகளில் சஞ்சரிக்கிறது...
கிடைத்துவிடுகிற சொற்றப சுகங்களையும்
தகர்த்துவிடுகிறது பொருளாதரமும் நாட்டுப்பிரச்சனையும்...
உறவுகளை பிரிந்துவிட்ட உடலொன்று உயிரோடிருக்கிறது...
நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன!


//
பின்னர் எழுதப்பட போகிற ஒரு பதிவுக்கான முன்குறிப்பாக இது இருக்கலாம் ஆனால் இழந்து கொண்டே இருக்க்கிற தனிமையும் இருத்தலும் பல நினைவுகளையும் வார்த்தைகளையும் திமிறத்திமிற கொன்று குவிப்பதில் மனவெளியெங்கும் நிறைகிற சொற்களின் அதிகப்படியான கூச்சல்களில் எழுதப்படாமலே இருக்கின்றன நாட்கள்!

இதுவும் அப்படி ஆகக்கூடாது என்பதற்காகவோ அல்லது சொற்களின் கூச்சலை குறைப்பதற்காவோ...இந்த நினைவும் ஒரு பதிவாக எழுதப்பட்டிருக்கிறது.
//

Tuesday, November 4, 2008

சோகங்களை கொண்டாடுதல்...

சோகங்களை கொண்டாடுதல்...2

முடிந்துபோன ஆவணி மாதத்து மூன்றாவது வாரத்தின் இரண்டாவது நாளில் உன் கனவுகள் வருகிற அதிகாலையில் அழைத்திருந்தாய் அவசரமாக...உன்னுடைய கனவுகளை நீயே கலைத்திருந்தாய் அதுவே நிஜமும் ஆயிற்று! உன்னைப்பற்றிய உனக்கும் எனக்கும் மட்டுமேயான தருணங்களால் நிரம்பிய என் எதிர்காலத்தின் கனவுகளை அதுதான் கடைசி அழைப்பென்று அறிவித்து வெகுசாதரணமாய் விலகிக்கொண்டாய் நீ கொஞ்சம் பொறு!

ம்ம்ம்...


திசைகளற்று அலைந்து கொண்டிருந்த என்னை நேர்ததிசைகளின் புள்ளியில் நகர்த்தியவள் நீ!

இப்பொழுது எப்படி என் கண்களை பறிக்கிற வக்கிரம் உண்டாயிற்று! உன் இயல்புகளில் என் வாழ்நாள் முழுவதற்குமான வெளிச்சம் உன் கண்களில் நிறைந்திருக்கிறது என்கிற என் நம்பிக்கைகளின் மீது உன் சாபங்கள் நிரம்பிய பார்வையை எப்படி தர முடிகிறது உனக்கு... தேவதைகள் சாபம் தருவதில்லை என்பது என் ஆதிகால நம்பிக்ககைளில் ஒன்று...என் ஆதிகாலம் உன் தரிசனத்திலிருந்து தொடங்கிற்று! உன் பிரியங்கள் நிரம்பிய சொற்களில் நகர்கிற என் நாட்களை ஒரு அத்துவானக்காட்டின் இருள் நிரம்பிய ஏதோவொரு புள்ளியில் விட்டு என் கண்களையும் பறித்துப்போகிறாய் நீ...

'என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக'
என்கிற வரிகளை உன் கடிதங்கள் தோறும் எழுதிய நீயா! என் ஜென்மங்கள் முழுதும் தீராத சோகத்தை தந்து போகிறாய் உனக்கு இது சாத்தியமில்லாத ஒன்று என்பதை நீ உணரவில்லையா?! தேவதைகள் பொய் சொல்வதில்லை அவை அவற்றின் இயல்புளை இழப்பதில்லை என்பது உலகம் தோன்றியது முதல் இருக்கிற உண்மை காதலும் உலகம் தோன்றியதிலிருந்து இருக்கிறதுதானே...?

நீ எப்படி நடிக்கப்பழகினாய் நீயாக சொல்லி விட்டாய் என்கிற உன் தன்முனைப்புகளின் மீதான பிடிப்புகளில் ஒரு வைராக்கியத்தோடு இதுவரையான என் நூற்றுக்கணகான அழைப்புகளுக்கு பதில் தராமல் உன்னை நீயே வருத்திக்கொண்டிருக்கிறாய். ஒரு தேவதையிடம் யாசிக்கிறவன் ஒரு நாளும் தன்முனைப்புகளில் இருக்கமாட்டான் இயல்பாய் நிகழ்கிற பிரியங்களில் எந்த தன்முனைப்புகளும் 'நான்'களும் இருப்பதில்லை...

உன்னை எனக்குத்தெரியும் நீ இயல்பாய் நிகழ்கிறவள்!

நான் உயிர் பிரியும் தருணங்களிலும் சாய்ந்து கொள்ள விரும்புகிற உன் நெஞ்சைத்தொட்டுச்சொல் நீ எனக்களித்த பரியங்கள் எல்லாம் ஒரு விருந்துக்கு வந்து போனவளின் வார்த்தைகளைப்போலவா...ஒரு இறப்புக்கு வந்து போன பழைய ஊரின் மூன்றாம் நபரின் மனோ நிலையிலா! பகிர்ந்து கொண்டாய் என்னோடு; உன் பரியங்களை,சுகங்களை,பிரச்சனைகளை சோகங்களை...இல்லையில்லை!!! நான்தான் பிரச்சனைகள் சோகங்களை பகிதர்ந்திருக்கிறேன் நீ சுகங்களை மட்டுமே எனக்கு தந்தவள் பிரச்சனைகளை என்னிடம் வராதபடிக்கு பார்ப்பது உன் இயல்புகளாய் இருந்தது தேவதைகளின் இயல்புகளில் இதுவும் ஒன்றோ! என் சுகங்களுக்காக மட்டுமே நம்பிக்கைகள் நிரம்பிய உன் பிரியங்களை பகிர்ந்தவள் நீ...


ஏதோ ஒரு வருடத்தின் சித்திரைப்பொங்கலன்று குடித்திருந்த நான்;அந்த நிலைதடுமாறுகிற போதையிலும் "நீ என்னை இந்த கோலத்தில் பார்த்தால் நான் செத்து விடுவேன்" என்று சொல்லியதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை...அதற்கடுத்த நாளின் சந்திப்பில் கூட நீ உங்களுக்கு ஏலாதென்றால் ஏன் குடிக்கிறீர்கள் என்னோடு வந்த பிறகு குடியுங்கோ அப்ப கவனிக்கிறதுக்கு நானிருக்கிறேன் என்கிற உன் பிரியங்களைக்கொட்டி கோபங்களாக வெளிக்காட்டினாய்... இப்பொழுதும் குடித்துக்கொண்டுதான் இருக்கிறேன் அதுமட்டுமல்ல பல புது முகங்களுக்கு நடுவில் கண்ணீர் விட்டு புலம்பிக்கொண்டிருக்கிறேன் இதுவரையும் அம்மாவுக்கு பிறகு நான் கண்ணீர் விட்டழுத முதல் உறவு நீ மட்டும்தான்...மற்றவர்களுக்கு மத்தியில் கண்ணீர் என்ன கவலைப்படுவதையே விரும்பாதவன் நான் என்பது உனக்கு தெரியாததல்ல இப்பபொழுது முகமே தெரியாத நண்பர்களிடம் எல்லாம் புலம்புகிறேன் குடல் வெளியில் வருகிறதைப்போல வாந்தி எடுக்கிறேன்...குற்றவாளி ஒருவனை தண்டிக்கிற ராஜகுமாரி ஒருத்தியின் அழகிய திமிரோடு ஏளனமாய் பார்க்கிறாய் நீ...

எத்தனை கோப்பகைளை நிரப்பியும் உன்னை மறக்க முடியவில்லை நீ...நீ மட்டும்தான்!!! என்னை நிரப்புகிறவள் என்கிற உன்னுடைய இயல்பாய் நிகழ்கிற அன்பின் தருணங்கள்தான் இப்பொழுதும் நினைவுக்கு வருகிறது...நான் இதனை திரும்பத்திரும்ப எழுதிய ஒரு கடிதத்தின் பதிலாக பிரியங்களை சொற்களாக்கி உயிர் முழுவதும் நிறைத்திருந்தாய் நீ அந்த உன் பிரியங்கள் நிரம்பிய சொற்களை திரும்பத்திரும்ப புலம்புகிறேன் நான்...இத்தனை கோப்பைகளுக்கு பிறகும் "அவள் ஒரு தேவதை மச்சான்" என்கிற என் புலம்பல்கள்...உன் பிரியங்களாலும் நினைவுகளாலும் நிரம்பிய என்னை கேலி செய்கின்றன...சாம்பல் நிறத்தின் சிகரெட்புகைகளின் நடுவில் தேவதையென நீ வந்து சிரிக்கிறாய் உன் அடிமையொருவனின் அவஸ்தைகளை பார்த்து...


எவ்வளவு குடித்திருந்தாலும் ஒரு தேவதையை குறைசொல்ல முடிவதில்லை!
இப்பொழுதும் உன் கரிசனங்களைத்தான் அசைபோடுகிறது மனது...
உன் பிரியங்களைத்தான் பேசுகிறது நீ கொடுத்த காதல்...

உன் நினைவுகளையும் எடுத்துப்போயிருக்கலாம் உன் பிரியங்களை கொண்டு போன நீ...!




பின் குறிப்பு:

//
எப்பொழுதோ ஒரு போதை தெளிகிற பின்னிரவொன்றில் எழுதிய (புலம்பிய) வார்த்தைகளை பதிவாக்குகிற முயற்சியில் தணிக்கைகளுக்கு பிறகு மூலப்பிரதியிலிருந்து மாறுபட்டிருக்கிறது பதிவு...

//
சோகங்களும் அனுபவிக்கப்பட வேண்டியவையே காலம் கடந்து விடுகிற அல்லது புதைதந்து போகப்பண்ணுகிற சோகங்கள் எல்லாம் கொண்டாடப்பட்டவையாகவே இருக்கின்றன கொண்டாடப்படாத சோகங்கள் நாட்களை நகர விடுவதில்லை காலம் அங்கே தடுமாறி விடுகிறது என்பது போதையில் கிடைக்கிற தெளிவு...

//
இப்பொழுதெல்லாம் குடிக்காமல் இருக்க முடியவில்லை குடித்தால் அழாமல் இருக்க முடியவில்லை...

Sunday, October 26, 2008

நான் படம் பார்த்த கதைகள்...

சினிமா என்பதை விட படம் எண்டால் சரியா இருக்கும் எண்டு நினைக்கிறன் இப்ப கூட படம் எண்டால் காணும் சாப்பிடாம இருந்து பாப்பன் ஆனால் முந்தின மாதிரி என்ன படம் எண்டாலும் கிடையாது இப்ப படம் எப்பவும் பாக்கலாம் என்று இருப்பதனால் தெரிவு செய்த படங்கள் மட்டும்தான் பாக்குறது...நான் படம் பாத்த கதைகள் கனக்க இருக்கு!இன்னொரு விசயம் நான் படம் பாத்தா கதையை வசனம் விடாம சொல்லுற ஆள்,எங்கடை ஊரில படம் பாக்கேலாத நிலமை இருந்ததுதான் அந்த நேரத்துலயே நானெல்லாம் முடிந்தவரை படம் பாக்கிற ஆள் அதனால சினமா பற்றி எழுதச்சொன்னால் அந்த நினைவுகள்தான் மனதுக்குள்ள வந்திச்சுது ஆனா இப்ப கொஞ்ச நாளாவே பழைய விசயங்கள் மறந்து போய்க்கொண்டிருப்பதாக் உணர்கிறேன் அதுவும் நல்லதுக்குத்தான்!

நான் நல்லா படம் பாப்பன் அதே நேரம் நல்லா படம் காட்டுவேன்...



இனி கேள்விகளுக்கு வருகிறேன்...

*
எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் ? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
வயது எப்படியும் ஒரு ஒரு ஏழு வயதிருக்கலாம் அல்லது அதை விட குறைவுதான் சரியாக நினைவில்லை நான் முதல் பார்த்த படமாக இன்னமும் நினைவில் இருப்பது மௌன ராகம்தான் அதுக்கு முந்தியும் படங்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் இப்ப ஞாபகத்துக்கு வராதாம்... இந்தப்படம் பக்கத்து வீட்டிலதான் பாத்தது அப்ப எங்கடை ஊரில எல்லா இடமும் ரிவி கிடையாது படம் பாக்குறதுமில்லை ஆனா எனக்கு என்னமோ படப்பைத்தியம் பிடிச்சிருந்துது அந்த நாளைல அவ்வளவு படங்களை பர்த்து தள்ளி இருக்கிறேன்...ஒரே படத்தையே திரும்பத்திரும் போட்டாலும் பாக்காம விடுவதில்லை அப்பொழுது...

பக்கத்து வீட்டில படம் பாக்கிற படியாலை இவன் எத்தனை தரம் இந்தப்படத்தை பாத்துட்டான் என்னடா விளங்குது இந்தப்படத்துல அப்படி என்று கேட்டவா ஜெயராணி அக்கா ஆனா நான் அப்ப ஒண்டும் சொல்லேல்லை மௌனராகம் படத்துல கார்த்திக் செத்து விழுகிற காட்சியும் மோகன் ரேவதியை படிச்சிருக்கு என்று தனியே சொல்கிற காட்சியும் 'போடா டேய்' 'சும்மா இருடா சோம்பேறி' எண்டு ஒருத்தர் சொல்லுவாரே அதுவும் பல நாட்களாக நினைவிருந்தது...அதற்கு பிறகு திரும்ப தனியா படங்களை பார்க்கிற காலங்களில் இது என்ன படம் எண்டு தேடிப்பிடிச்சு பார்த்தேன் மணிரத்னம் நான் முதலில் ரசித்த ஒருவர்...

அப்ப நான் என்ன உணர்ந்தேன் என்று எனக்கு நினைவிருந்த காட்சிகள் உங்களுக்கு சொல்லக்கூடும் ஆனால் எனக்கு புரியவில்லை அப்பொழுது நான் நினைத்தது சொந்தமா ரீவி டெக் வாங்கி பிடிச்ச படம் எல்லாம பாக்க வேணும் எண்டு.

*
கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
இங்கு வருவதற்கு முன்னர் கொழும்பில் பார்த்த படம்தான் நினைவிருக்கு சினி சிட்டியில் பார்த்த எஸ் ஜே சூர்யா நயன்தாரா நடிச்ச கள்வனின் காதலி என்று நினைக்கிறேன் அதற்கு பிறகு எந்தப்படமும் நினைவில்லை ஆனால் யாழ்ப்பாணத்துல ராஜா மனோகரா அரங்குகளில் படம்பார்த்தது போல வேறெங்கிலும் பார்க்கவில்லை...அது ஒரு தனி சுவாரஸ்யம்! படம் பாக்க அங்கே போவதில்லை தியேட்டரை கலக்குறதுக்குதான் அங்கே போயிருக்கிறேன் நாங்கள் கலக்காமல் விட்டால் வேறொரு செட் கலக்கி கொண்டிருக்கும் அதனால நாங்களும் முடிஞ்சவரை கலக்ககி இருக்கிறோம் தியேட்டரை அதனால படத்தை முழுசா பாக்க வேணும் எண்டால் படம் வந்து சில வாரங்கள் ஆனபின்பு ஒரு நாள் போய் பார்த்துக்கொள்வேன் ...

எனக்குப்பிடித்த சில படங்களை எனக்கு நெருக்கமானவளோடு உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்பது என் ஆசை ஆனால் அந்தப்படங்கள் அரங்கில் வர வேண்டுமே...

*
கடைசியாக அரங்கிலன்றி பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கடைசியாகப்பார்த்தது ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே...
வசந்த் இயக்கிய இந்தப் படத்தை பற்றி என்ன சொல்ல காதல் சம்பந்தமா இன்னுமொரு படம் படம் பிடிச்சுப்போனதற்கு ஷ்யாம் என் சாயல்கள் உள்ள ஒரு பாத்திரத்தை செய்திருந்ததும் காரணமாக இருக்கலாம்...

படம் பார்த்து உணர்ந்தது எதுவும் இல்லை...!சினேகா அழகான பெண்மை என்பதைத்தவிர!

காதல் அழகான விசயம்...

இன்னொரு படம் உள்ளத்தை அள்ளித்தா...
இந்தப்படத்தைப் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை ரம்பாவுக்காகவே பார்த்த படம் முழு நீள நகைச்சுவை சித்திரம் சுந்தர்.C ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கொடுத்த நகைச்சுவை படங்கள் உள்ளத்தை அள்ளித்தா மற்றும் மேட்டுக்குடி இரண்டும் கைவசம் இருக்கிறது டிவிடியாக மேட்டுக்குடி பார்த்த குறையில் இருக்கிறது...

படம் பார்த்து என்ன உணர்தேன் எண்டால் ரம்பா சின்னப்புள்ளையள் மாதிரித்தான் இப்பவும் இருக்கிறா... ;)
பழனிபாரதி திரும்பவும் எழுதுகிறார் என்று கேள்வி ஆனால் அவர் கொடுத்த ஹிட்ஸ் மறக்க முடியாதவை...
சிற்பி அரபியே இசைகளில் கலந்து கட்டி அடித்தவர் என்பது திரும்பவும் நினைவுக்கு வந்திருக்கிறது...(மேட்டுக்குடியில் இது சாதாரண ரசிகனுக்கே புலப்படும்)

*
உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா...?

தாக்கிய தமிழ் சினிமா நிறைய இருக்கு தாக்கிய என்பதை விட உணர்வுகளில் மாற்றங்களை உண்டு பண்ணிய படங்கள் பல இருக்கு!

துலாபாரம்-இந்தப்படத்தை முதலாவது படமா போட்டு அதற்கு பிறகு மூன்று படங்கள் விடிய விடிய பாத்தும் இந்தப்படம் மட்டும்தான் அடுத்த நாள் முழுக்க கண்ணுக்குள்ள வந்துகொண்டிருந்தது...

அலைகள் ஓய்வதில்லை-
முதன் முதலாய் எனக்குள் காதல் சொன்ன படம்.
காதல் காதல் காதல் நிரம்பிய சின்னச்சின்ன கவிதைகளை இசையோடு சொன்ன படம்...
இந்தப்படத்தை எத்தனை முறை பார்தேன் என்று எனக்கே தெரியாது...
அழகு மேரியை(ராதாவை) இப்பொழுதும் மறக்க முடியவில்லை...
காதல் அழகானது அதன் அலைகள் ஓய்வதில்லை...!

மகாநதி-
இதற்கான காரணம் சொல்லத்தேவையில்லை

குட்டி-
இதற்கான காரணமும் சொல்லத்தேவையில்லை

பருத்திவீரன்-
படம் முழுக்க நிரம்பியிருந்த இயல்பும் படத்தின் முடிவு தந்த ரணமும்..


காதல்-
உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்...
இயல்பாய் ரணம் செய்து போன படம்.



சேது-
வார்த்தை தவறி விட்டால் கண்ணம்மா...
எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பார்த்து மனதைப்பிசைந்த படம்...

மொழி-
சில விசயங்களைப்பேசிய படம்...
ஜோதிகாவின் கண்களும் பேசியது!

இவற்றோடு இன்னும் பல படங்கள் இருக்கிறது பார்த்த பல பிறமொழிப்படங்களும் இருக்கிறது பெயர் நினைவுக்கு வரவில்லை.

*
அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
இதைப்பற்றி என்னைக்கேட்டால் சிரிப்புத்தான், ஒரு விதமான மற்றவார்களுக்கு பிடிக்காத புன்னகைதான் பதிலாக இருக்கும் சொல்ல நிறைய இருக்குப்பா...:)


ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
சினிமா தொழில் நுட்பங்களில் ஒளிப்பதிவு கலை இசை அப்படின்னு பல பிடிச்ச துறைகள் இருந்தாலும் என்னுடைய கவலை எல்லாம் உதவி இயக்குனர்கள் மீதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிசப்பட்டு ஒரு படத்தையேனும் எடுத்துவிட வேண்டும் என்று வருகையில் அதற்கு எத்தனை விமர்சனங்கள்!சிந்தனைகளை களவாடப்படுகிறது என்று தெரிந்தே மொளனமாக இருப்பவர்கள்...

*
தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா...
இல்லாமலா ஆரம்ப இலக்கியமே சினிமாதானே...ஆனால் முன்பு வாசித்ததைப்போல கிசுகிசுக்கள் பத்திக்கிச்சு மாதிரியான எல்லாவற்றையும் வாசிப்பதில்லை என்றாலும் புதுப்ட விமர்சனங்களை படம் பார்த்த பிறகு வாசிக்க வேண்டும் என்று எவ்வளவு முயன்றாலும் வாசிக்காமல் இருக்க முடிவதில்லை அநேகமான படங்களுக்கு...

தமிழ் சினிமா என்பதை விட சினிமா பற்றி நிறைய வாசிக்க வேண்டும்.
அறியாத அல்லது மறந்து போன கலைஞர்கள் மற்றும் படங்கள் பற்றி; படங்கள் பார்த்தும் வாசித்தும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது.



*
தமிழ் சினிமா இசை....?

பல நேரங்களில் துணையாக இருந்திருக்கிறது எனக்கு புத்தகங்களைப்போலவே!

தமிழ் சினிமா இசை ரொம்பப்பிடிக்கும்- ரொம்பப்பிடித்தது இளைய ராஜாதான்..

வளர்ந்து கொண்டே இருக்கிறது இசை...

*
தமிழ் தவிர வேறு இந்திய,உலக மொழி படங்களை பார்ப்பதுண்டா ? அதிகம் தாக்கிய படங்கள்?
நிச்சயமா;ஆரம்ப காலத்தில கராத்தே சம்பந்தமான படங்கள் பார்த்ததுண்டு அப்படியே படிப்படியாய் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன் ஆரம்பம் என்னவோ படம் என்ன சொல்கிறது என்று புரியாமல் பார்த்தாலும் பின்னர் ஓரளவுக்கேனும் புரிந்து கொள்கிற முயன்று கொண்டிருக்கிறேன்...

மற்றய இந்திய மொழிப்படங்களின் பரிச்சயம் யாழ்ப்பாணத்தில் இருக்கும்வரை கிட்டவில்லை இந்தி,மற்றும் மலையாளப்படங்களின் பரிச்சயம் சவுதி வந்த பிறகே கிடைத்திருக்கிறது பல மலையாளப்படங்களை பார்திருக்கிறேன் ஆனால் சொல்லிக்கொள்ளும்படி சமீபத்தில் பார்த்தது

ஒரே கடல்-
மலையாள சினிமாவிலிருந்து சில கேள்விகளை கேட்டுப்போன படம்!

நான் ஒரு ஜாக்கிசான் ரசிகன்...
The New police story
கடைசியாக பார்த்த ஜாக்கிசான் படம்

Black(இந்திப்படம்)-
வேலை முடிந்து அறை திரும்பி ஆடைகளை மாற்றக்கூட எழும்பாமல் அமர்ந்து பார்த்த படம் என்ன நடிப்புப்பா

Fire-
தீபா மேத்தாவின் இன்னொரு கேள்வி...

Titanic -
நான் பார்க்க வேண்டும் என்று பார்த்த முதல் ஆங்கிலப்படம்,பிரம்மாண்டமாய் ஒரு காதல்...

இப்பொழுது பார்க்க வேண்டும் என்று நினைத்திருப்பது
தாரே ஜமீன் பர்(இந்தி)
சில மலையாளப்படங்கள்...
this moon is mine (சிங்களப்படம் பெயர் பிழையாய் இருந்தால் திருத்தவும், சொல்லி இருக்கிறேன் வந்து சேர்ந்தால் பார்க்கலாம்)
சிருங்காரம் அரவிந்சாமி கொளதமின்னு பலர் நடிச்ச படம்
சில ஆங்கிலப்படங்கள் (பதிவர்கள் சிபாரிசு)




*
தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இவ்வளவு தமிழ் படங்களை பார்த்திருக்கிறேன் இன்னமும் பார்பேன் என்பதே ஒரு தொடர்புதானே...
சந்தர்ப்பம் கிடைத்தால் இலங்கை தமிழ் சினிமா வளர்ச்சி கண்டு கொண்டிருந்தால் அந்தத்துறையில் முடிந்தவரை பங்கெடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது... முடிஞ்சா ஒரு படத்தை இயக்கிடணும்னு இருக்கிறேன் இலங்கைல(அட நம்புங்கப்பா)


தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இன்னும் திறமைசாலிகள் இருக்கிறார்கள்...
புதிய வரவுகள் இருந்து கொண்டே இருக்கும்!

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு எதுவும் ஆகாது பார்க்க வேண்டிய படங்கள் இருக்கிறது...பார்த்துக்கொள்வேன்,
பிற மொழிப்படங்கள் பார்க்கலாம்.
ஆனால் இந்த நெடுந்தொடர்களில்ன் தொல்லைகள் தாங்க முடியாமல் இருக்கும் என்று நினைக்கிறேன்...


இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த தல தமிழ்பிரியன் இந்த தாமதத்தை பொறுத்துக்கொள்வார் என் நம்புகிறேன் நான் இந்த தொடருக்கு அழைக்கிறது...

ஏற்கனவே எழுதி விட்டார்களோ தெரியாது அவர்கள் எழுதி இருந்தால் இந்தத்தொடரை இதுவரை எழுதாதவர்கள் எழுதலாம்...

சந்திர வதனாக்கா -( இவ சமீபத்தில எழுதின சினிமா சம்பந்தமான பதிவுகளை படிச்சுப்பாருங்கோ)

தோழி நளாயினி... ( நேரமிருக்கோ உங்கடை பதில்கள்தான் கட்டாயம் எண்டில்லை தாமரை அண்ணாவின்ரையாவும் இருக்கலாம்)

அண்ணன் கரூரன்... (அண்ணன் அநேகமாய் சிவாஜி ரசிகராய் இருப்பார் எண்டு நினைக்கிறன்)

இன்னும் யாராவது எழுத இருந்தா எழுதுங்கோப்பா...


பின் குறிப்பு:
1)
தமிழ் மணத்தில் நடந்து கொண்டிருக்கிற கருத்துச்சுதந்திரத்தின் உச்ச பட்ச வெளிப்பாடுகள்,தற்போதைய சூழ்நிலைகள் எழுதுகிற மனோநிலையை சின்னாபின்னமாக்கியிருக்கிறது...

2)
பதிவு எனக்கே திருப்தி இல்லாமல் இருக்கிறது,இன்னும் நிறையப்பேசலாம் போல இருக்கிறது நான் படம்பார்த்த கதைகள், எங்கே போய்விடுவீர்கள் கொஞ்சம் பொறுத்து எழுதலாம் தானே...:)

3)
தீபாவளிக்கு பதிவு போட வேண்டும் என்று இப்பொழுதுதான் யோசித்திருக்கிறன் ஆனால் என்ன எழுதுவதென்று தெரியவில்லை...

எல்லோருக்கும்...
தீபாவளி வாழ்த்துக்கள்...

நன்றி...

Saturday, October 18, 2008

ஒரு தொடர் விளையாட்டு...

பல நாட்களுக்கு முன்னர் தோழி குமித்தா...கேட்டிருந்த தொடர் விளையாட்டுக்கு உடனே பதிவு போட முடியவில்லை. நான் வழமையாக பயன் படுத்துகிற கணினியில் இருந்த பிரச்சனைகளால் இப்பொழுதும் சில பிரச்சனைகள் இருந்தாலும் அதே பழைய கணினியில் வேலை செய்வதால் எனக்குரிய உரிமைகள் அந்த கணினியில் இருப்பதனால் அந்த தொடர் விளையாட்டுக்கான பதிவு இப்பொழுது சாத்தியமாகியிருக்கிறது ...

குமிழ்;அழைப்பிற்கு நன்றி தாமதத்திற்கு மன்னிக்கவும்...

பெரிதாக ஒன்றுமில்லை உங்கள் கணினியில் நீங்கள் தற்பொழுது வைத்திருக்கிற முகப்பு படம் (desktop picture) என்ன இதுதான் அது...




என்னுடைய தெரிவுகள் எப்பவும் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கும். இப்பொழுது சில மாதங்களாய் இருப்பது இதுதான்! இது எனக்கு ரொம்ப பிடித்துப்போன படம் பல பேருடைய பதிவுகளில் இந்தப்படம் வந்திருக்கிறது. நான் எழுதிய வரிகளை இந்தப்படத்தோடு சேர்த்து பதிவொன்றில் போடுவதற்காக செய்திருந்தேன் பின்னர் வரிகளை மட்டும் பதிவாக்கி விட்டு படத்தை கணினி முகப்பில் வைத்திருக்கிறேன்.மற்றபடி அந்தந்த நாட்களுக்கு ஏற்றது போல படங்களை சில நேரங்களில் மாற்றிக்கொள்வேன் தொடர்ச்சியாக இதுதான் இருக்கிறது.

குமித்தா ஒருவரைத்தான் அழைத்திருந்தார் நான் மூன்று பேரை அழைக்கலாம் (வேலை சுலபம்தானே) என்று இருக்கிறேன்...

இந்த தொடருக்கு நான் அழைப்பது...

தல தமிழ் பிரியன் (அந்தப்பொண்ணு படமா இருக்கலாம்...)

நம்ம மங்களூர் சிவா அங்கிள்... (கல்யாணப்படமா இருந்தா பாக்கலாமே...)


கட்டார் கட்டுமான தொழிலதிபர் ஆயில்யன் (என்ன படம் வச்சிருப்பாரு...)

பின் குறிப்பு:

*
நான் அழைத்திருக்கும் மூவரும் தனிப்பட்ட கணினி வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் அதனால இருக்கிற படத்தோட பதிவைப்போடணும் இல்லைன்னா தெரியும்தானே?!
*
யாராவது ஒருவரையேனும் கட்டாயமா மாட்டிவிடணும்;)

Friday, October 17, 2008

ஒரு வருடம்...

நானும் என் கற்பனையும் மொழியோடு பயணம் செய்ய தொடங்கிய நாட்களில் இருந்து உலகம் இனிமையானதாய் தோன்றிற்று...வாசகனாய் மட்டும் இருந்த எனக்குள் ஒரு ரசிகனும் இருக்கிறான் என்பதை அடையாளம் கண்டு கொண்ட பொழுதுகளில் எழுதவும், குறிப்புகளாய் பதியவும் தொடங்கியிருந்தேன் இருந்தும் அநேகம் குறிப்புகளை காற்றிலேயே எழுதியிருக்கிறேன் அருகிலிருப்பவரிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்திருக்கிறேன் ஆனால் அந்தச்சொற்களின் பெறுமதி இப்பொழுது மிகப்பெரிதாய் தெரிகிறது...

எழுதாமல் விட்ட வார்த்தைகளை எண்ணி இப்பொழுது என்னை நானே திட்டிக்கொண்டிருக்கிறேன் எதுவாயிருந்தாலும் எழுதி வைத்திருக்கலாம் என்கிற கேள்வி என்னை அடிக்கடி அவஸ்தைப்படுத்துகிறது...எழுதி வைக்ககாமல் போன விசயங்களுக்காக இப்பொழுது நொந்து கொண்டாலும் இப்பொழுதும் நடக்கிற விசயங்களை எழுதிவைப்பவனாக இல்லை என்பது என்ன நியாயம் என்று தெரியவில்லை...என் சூழ்நிலையும் சோம்பல்தனமும் இதற்கு முக்கிய காரணம்...

தொடர்ச்சியாக எழுதாமல் போனாலும் எழுத முடிகிறவற்றை எழுதலாம் என்கிற முடிவோடு
நானும் சொற்களை சேகரிக்க ஆரம்பித்ததுதான் என் நினைவின் வெளியில் நான்...
அதற்கு காதல் கறுப்பி என்று பெயர் வைப்பதற்கு காரணம் எல்லாம் இல்லை என்று நான் சொன்னாலும் யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை இருந்தாலும் கறுப்பி என்பது எனக்கு நான் எழுதிக்கொண்ட இன்னொரு பெயர் மட்டுமே அது நான் கவிதைகள் என்று நினைத்து சொல்லிக்கொண்ட சொற்களையும் எழுதிக்கொண்ட வார்ததைகளுக்கும் முடிவில் என்னை வெளிக்காட்டாமல் இருப்பதற்கான பெயராக இருந்தது ஆரம்பம் முதலே...

ஒரு வாசகனாய் மட்டுமே இருந்தாலும் பொதுவாகவே நிறையப்பேசுகிற எனக்கு (அலட்டல், நல்லா பிளேடு போடுவேன்) எழுதவேண்டும் என்கிற தீர்மானங்கள் இருந்தாலும் தீர்மானங்களை செயல்படுத்துவதில் எனக்கிருக்கிற இயல்பான பலவீனங்களால் எழுதாமல் விடுபட்டுப்போன சொற்களும் மனவெளியில் புதைந்து கிடக்கிற சொற்களும் பேசித்தீர்க்கப்படாமலே என்னை அவஸ்தைப்படுத்தியதில் குறிப்புகளாக எழுதலாம் என்கிற முடிவில் நான் எழுத ஆரம்பித்ததற்கு சில வலைப்பூக்களும் சில நண்பர்களும் காரணம்...இருந்தும் இங்கே எழுதியதை விட எனக்குள் எழுதாமல் இருக்கிற நினைவின் அடியில் மறைக்க முயல்கிற சொற்களே அதிகமாய் இருக்கிறது...பலது என் நாட்குறிப்புகளில் இருக்கிறது...

அந்த வகையில் நான் வலைப்பூ ஒன்றை உருவாக்குவதற்கு முதல் அடி போட்டவர் தோழி நளாயினி! வாசகனாய் மட்டுமே இருந்த என்னையும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் (ஆனால் நான் கருத்தெல்லாம் சொன்தில்லை கும்மி மட்டுமே) என்று சொன்னது உயிர் கொண்டு திளைக்கிற பூக்கள் கொண்டு பேசுகிற நளாயினி , ஆரம்பத்தில் என் பார்வைக்கு கிடைத்த வலைப்பூ சந்திரவதானா அக்காவினுடைய காதல் வலைப்பூதான் வலைப்பூ என்று தெரியாமலே வாசித்துக்கொண்டிருந்தேன் அதில் இருந்து மனஓசை மனஓசையிலிருந்து இலங்கை நண்பர்களின் வலைப்பூக்கள் என்று முதலில் வாசித்தது அநேகம் இலங்கை நண்பர்களுடையதுதான் அப்டியே தோழி நளாயினியோடு ஏற்பட்ட நட்பில் நிறையப்பேசியதில் நீங்களும் எழுதலாமே என்றார் எனக்கும் அப்படி ஒரு அவஸ்தை பல நாட்களாய் இருக்கிறது என்று சொன்னேன் அதற்கு பிறகுதான் இதுக்கு பெயர் வலைப்பூ என்று தெரிந்து கொண்டேன்! இதுக்கு பிறகு தமிழ், தமிழ்னு தேடியதில் மதி கந்தசாமியினுடைய தமிழ் புளொக்ஸ் கிடைக்க அங்கிருந்து ஆரம்பமாயிற்று பயணம்...என்ன எழுதுவது என்று தெரியாமல் கணினிக்கு முன்னால் இருந்து கொண்டு மனதில் வருகிற வார்த்தைகளை தட்டச்சி பதிவுகளாக்கி கொண்டிருக்கிறேன் அநேகம் பதிவுகளை எந்தவிதமான குறிப்புகளும் இல்லாமல்தான் எழுதி இருக்கிறேன் நான் அறிமுகம் செய்து கொண்ட என் முதல் பதிவை படித்தாலே தெரியும் எப்படி எழுதுகிறேன் என்பது எழுதும்இதனைத்தான் எழுத வேண்டும் என்று நினைப்பதில்லை ஆனால் எழுதுவோம் என்று வந்து அமர்ந்தால் நிறைய எழுதலாம் போல் இருக்கிற விடயங்கள் தட்டச்சத்தொடங்கினால் திசைமாறி விடுகிறது அல்லது அவற்றை கோர்வையாக்க முடியாமல் இருக்கிறது...


இப்படி குறிப்புகளால் நினைவு செய்ய வந்ததுதான் என்னுடைய உலகம் முதலில் அப்படித்தான் பெயர் வைத்திருந்தேன் அதற்குப்பின்னர் எழுதியதெல்லாம் ஏதோ ஒரு புள்ளியில் சுழல்கிறதாய் தோன்றவே அதற்கு கறுப்பி என்கிற பெயரோடு காதலையும் சேர்த்துக்கொண்டேன்...


அடுத்தது மடத்துவாசல் பிள்ளையாரடி இவருடைய பல பதிவுகளில் என்னை மறந்து போயிருக்கிறேன்...பழைய நினைவுகளை கிளறியதில்! எது எப்படி இருந்தாலும் கடந்து வந்த நாட்கள் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நினைத்துப்பார்த்து நிகழ்காலம் திரும்புகையில் கடந்துவிட்டவையும், இழந்து விட்ட பலதும் கண்களை ஈரமாக்குவதில் ஆச்சரியம் ஏதுமில்லையே...பல நினைவுகளை மீட்டுப்பாத்துகொள்ள வசதி செய்ததில் என்னால் அவற்றை சரியாக கோர்வையாக்க முடியாவிட்டாலும் பதிய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது சமீபத்தில் க.பிரபாண்ணாவின் நவராத்திரி பதிவொன்றில் கூட சொல்லி இருப்பேன் இதனை...

ஆரம்பத்தில் நான் பெரும்பாலும் வாசித்தவை மனஓசை, மற்றும் நளாயினி கவிதைகள் தளங்களில் இருந்த இணைப்புகள்தான் அதிலிருந்துதான் மற்றவர்களை கண்டு கொண்டேன் அதனாலேயே பழைய பதிவர்கள் பலரையும் வாசிக்கிற அனுபவம் கிட்டியது ..பல நாட்களாய் வாசித்துக்கொண்டிருந்தாலும் பதியத்தொடங்கி ஒரு வருடம்தான் ஆகிறது அதிலும் பெரிதாக எழுதி விடவில்லை ஆனால் நிறைய நட்பையும் அதிக வாசிப்பையும் பெற்றிருக்கிறேன் அந்த வகையில் வலைப்பூக்களுக்கு நன்றி...

அதற்கு அப்பால் இயல்பாகவே எனக்குள் இருந்த வாசகனும் தனிமையும் நிமிடங்களை மணித்தியாலங்களாக்கி மணித்தியாலங்களை அதிகப்படுத்தி வாசித்துக்கொண்டே இருந்ததில் எழுதுவது தடைப்பட்டுப்போனாலும் பல பேருடைய நட்பை தந்திருக்கிறது அப்படிக்கிடைத்த முதல் நட்பு வட்டம் நம்ம வேடந்தாங்கல் குழு ஆரம்பத்துல பின்னூட்டங்களை பர்த்து சிரிச்சுக்கிட்டிருந்த எனக்கு தள சிபி, குசும்பன், மங்களூர்சிவா, புலி(சிவா)-அவரு இப்ப எழுதறது குறைவு மின்னல்-இப்பொழுது மறுபடியும் இவருடைய பின்னூட்டங்களை பார்க்க முடியுது) அப்படின்னு பல பேரு அடிக்கிற கும்மிய பார்த்து இது சூப்பரா இருக்கேன்னு நினைச்சு ரசிச்சிருக்கேன் அப்புறமா மெல்ல மெல்ல நமக்குள்ள இருந்த ரொம்ப பேசுறவனும் வெளிய வர ஆரம்பிக்க நானும் ஆட்டையில கலந்துகிட்டேன்...ஜோதியில ஐக்கிமாயிட்டேன் அப்படி நான் ஆடினமுதல் கும்மில கொஞ்ச நேரத்துக்கு யாருமே முகத்தை காட்டாம வேற வேற பெயர்கள்ள வந்துட்டிருந்தாங்க அப்புறமா முதல்ல வெளிப்பட்டது சென்ஷி அதுவும் நூறை நெருங்கற சமயம்னு நினைக்கிறேன்...


அப்ப ஆரம்பிச்ச நட்பு இப்ப ரொம்ப நெருங்கிட்டம்ல...


எனக்கு இருக்கிற சொற்ப கணினி அறிவோட ஏதோ என்னால முடிஞ்ச வரைக்கும் எழுதணும்னு நினைக்கிற பல நூறு விடயங்களில் ஒரு சிலதையேனும் எழுதிக்கொண்டிருக்கிறேன்...இந்த நேரத்துல எனக்கு வலைப்பூவை உருவாக்குவதற்கு உதவி செய்த நளாயினி அக்காவுக்கும் தாமரை அண்ணனுக்கும் இணையம் சம்பந்தமான தொழில் நுட்ப உதவிகளை அப்பப் செய்து தருகிற தமிழ் பிரியன் அண்ணனுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்...(இன்னும் நிறைய உதவிகள் கேட்பேன்)


இப்படி பல நட்புள்ளங்களை தேடித்தந்திருக்கிற வலைப்பூவை ஆரம்பிச்சு ஒரு வருடமாகியிருக்கிறது இன்று...

இனி...

நெஞ்சு நிறைந்த நன்றிகளுடன்...

உங்களுடைய நட்பை எப்பொழுதும் எதிர்பார்க்கும்

அன்பு,

தமிழன்(கறுப்பி...)

Friday, October 10, 2008

பதிவர் சந்திப்பு பதிவு...





பதிவர் சந்திப்பிற்கு பிறகு (நம்மளையும் பதிவர்னு ஏத்துக்கிட்டாய்ங்கப்பா) அவ்வளவாக இணையப்பக்கம் வர முடியவில்லை...ஓரிரு தடவைகள் வந்திருந்தேன் சிலருக்கு பின்னுட்டமும் எழுதி இருந்தேன் அதுவே பதிவெழுதுகிற நேரத்தை விட அதிகமாத்தான் இருக்கு ஆனாலும் நம்ம ஆளுங்க வேகத்துக்கு என்னால பின்னுட்டங்களைக்கூட எழுத முடியலை!! என்ன வேகமா எழுதுறாய்ங்க! ஒரு நாள் வரலைன்னாலே நிறைய துரம் பின்னுக்கு போயிட வேண்டிடுது.அந்த சந்திப்பிற்கு பிறகு எனக்கும் ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கு... பல சிரமங்களுக்கு மத்தியில் அன்றய பயணம் நிகழ்ந்திருந்தாலும் இரவு ஒன்றரை மணிக்கு அறைக்கு வந்த பொழுது பல நாட்களுக்கு பிறகு எனக்கு பிடித்த விசயமொன்றை செய்து முடித்த நாளாக இருந்தது அன்றய நாள்...

*
நம்ம தல தமிழ் பிரியன் அண்ணன் என்னை உதைக்காம விட்டது அவரோட பெரிய மனசைக்காட்டிச்சு. அப்புறம் சும்மாவா சில மணி நேரங்கள் எனக்காக பசியோட வெயில்ல காத்துக்கிட்டிருந்தாரு; தல இதோவந்திட்டன்; இதோ வந்திட்டன்னு; சொல்லி சொல்லியே வெறுப்பேத்திட்டேன் ஒரு வழியா மூணு மணிக்கு நான் போய் சேந்தப்போ என்னைப்பாத்ததும் அவருக்கு எம்மேல இருந்த கோபம்லாம் போயிடுச்சுன்னு நினைக்கிறேன் ஏன்னா நான் அந்த அளவுக்கு சின்னப்பையனா இருந்தேன் (சின்ன வயசு, வெள்ளை மனசு யாருக்குத்தான் திட்ட மனம் வரும்) நான் எதிர்பார்த்த முகச்சாயலிலேயே இருந்தார் இதுவரையும் அவருடைய முகத்தை பார்த்ததே இல்லை வேறெங்கும் அனால் பார்த்த உடனேயே தோளோடு சேர்த்துக்கொண்ட நெருக்கம் வாய்த்திருந்தது ஏற்கனவே பல முறை இணையத்துல கூடி கும்மி அடிச்சசிருக்கோம்ல...

அன்னைக்கு அவரை அவ்வளவு நேரம் காக்க வச்சதுக்கு திரும்பவும் ஒரு முறை மன்னிச்சுடுங்க தல...அடுத்த முறை சரியான நேரத்துக்கு வரப்பாக்கிறேன்...

*
எழுத்தாளர் ஜமாலன் அவர்களை சந்திச்சது எனக்கு நம்ப முடியாம இருந்திச்சு கொஞ்ச நேரம் ஆனாலும் முதல் பார்வையியே அடையாளம் கண்டு கொண்டு கை குலுக்கினோம் அவரிடம் நான் கேட்ட ஒரு கேள்வி ஜமாலன் அப்படிங்கிற பெயருக்கு என்ன காரணம் என்ன அர்த்தம் என்பது அதற்கு வெகுசாதாரணமாக அவர் சொன்ன பதில் என்னை இந்தப்பெயரில்தான் இலக்கிய வட்டத்துக்கு தெரியும்கிறதால அந்தப் பெயரில் இருக்கிறேன் அர்த்தம் எல்லாம் பார்த்து வைத்துக்கொண்டதல்ல முன்பொருமுறை கையெழுத்துப்பத்திரிகை ஒன்றை நட்த்தும் பொழுது (மாலன் என்கிற எழுத்தாளர் நட்த்தியது) பின்னர் இவர் அதன் சாயலில் நடத்திய பொழுது ஜமாலன் என்கிற பெயரில் எழுதியதாகவும் அப்படியே அதுவே நிலைத்து விட்டதாகவும் சொன்னார்..
அண்ணன் அனுபவப்பகிர்வுக்கு நன்றி இன்னும் நியைப்பேச இருக்கு உங்களோடு...






*
அண்ணன் கல்ஃப் தமிழன் எழுதுவதில்லை ஒழிய தமிழ திரட்டிகளுக்கு வலைப்பூக்களுக்கு புதிய வாசகரல்ல என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம் அவர் பழையவர் என்று தெரிந்தாலும் இவ்வளவு துரம் பதிவர்களை கவனிக்கிற ஒருவர் என்பது நானும் அறியாதது பரந்த வாசிப்பு அனுபவம் அவருக்கும் இருக்கிறது...அண்ணன் எழுதுங்க படிக்கிறதுக்கு நாங்க இருக்கோம்... பல காலமா கல்ஃப்லயே இருக்கிறதால அந்தப்பெயரை வச்சுக்கிட்டார்ங்கிறது அவர் எத்தனை வருடங்களாக அங்கே இருக்கிறார் என்பதை சொன்னபோது புரிஞ்துகொள்ள முடிந்தது.அண்ணனுக்கு ஜெத்தா(Jeddah)தண்ணி பட்ட பாடு,சந்து பொந்து முட்டு முடுக்கெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கார்...:)


*
பல விசயங்களையும் பேசிக்கொண்டோம் அல்லது நான் அவர்களை பேச விட்டு கேட்டுக்கொண்டிருந்தேன்..நேரம் போனது தெரியாமல் உரையாடிக்கொண்டிருந்தோம். என்னை ஜமாலன் நீங்கள் கவிதையெல்லாம் எழுதுவிங்களான்னு கேட்டார் (என்ன இப்படி கேட்டு தர்ம சங்கடத்துல விட்டுட்டிங்களே:) நான் வலைப்பதிவு தொடங்கினதே பின்னூட்டங்களுக்காத்தான் என்று சொல்லி வாசிக்கிறதுதான் நம்ம வேலை முடிஞ்சா சில கருத்துள்ள பின்னூட்டங்கள் அப்படின்னு சொல்லி சமாளித்துக்கொண்டேன்...(உண்மையும் சில நேரங்களில் சமாளிப்புகள் ஆகிவிடுகிறது)

இன்னும் பேசலாம் என்று உரையாடல் போய்கொண்டிருக்கையிலேயே மறுநாள் காலை வேலை இருப்பதானாலும் போக்கு வரத்து பிரச்சனையாலும் நான் புறப்பட வேண்டிய அவசியம் இருப்பதை சொல்லிக்கொண்டு இட்லி,வடை,தோசையோடு விடை பெற்றுக்கொண்டோம். பரவாயில்லை தலதான் கொஞ்சம் துரத்துல இருக்கிறார், ஜமாலன் ஐயாவும், கல்ஃப் தமிழன் அண்ணனும் ஜெத்தாவுக்கு (Jeddah) பக்கத்தில்தான் இருக்கிறார்கள் அடிக்கடி பார்க்கலாம் என்று நினைக்கிறேன்...

பின்குறிப்பு :

1)
நல்லதொரு சந்திப்புக்கு அடி போட்ட அண்ணன் தமிழ் பிரியனுக்கும் தங்களுடைய வேலைகளை தவிர்த்து நேரத்தை ஒதுக்கி எங்களோடு கலந்து கொண்ட ஜமாலன் ஐயாவுக்கும் கல்ஃப் தமிழன் அண்ணனுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்...
(ஆனா இனி அடிக்கடி தொல்லை கொடுப்பேன்)

2)
நேரமின்மையும் சூழ்நிலைகளும் இணைய வசதியும் சதி செய்வதில் நவராத்திரிக்கு ஏதாவது எழுதலாம் என்றால் முடியவில்லை இருந்தும் குறிப்புக்களாக எழுதிய விடயங்கள் முற்றுப்பெறாமல் இருக்கிறது அவை நீங்கள் பொறுமை இழக்கிற அளவுக்கு பெரியதாக இருப்பதனால் அடுத்த வருடம் அல்லது அடுத்தடுத்த பதிவுகளில் அங்கங்கே...


3)

பாவனா படம் எதுக்குன்னு கேக்க மாட்டிங்கன்றது எனக்கு தெரியும்...

மறுபடியும் நன்றி...

Monday, September 29, 2008

ஒரு பிறந்த நாளும் சில குறிப்புகளும் ஐம்பதாவது பதிவும்...

இந்த பூமிக்கு நான் வந்த நாளை கொண்டாடுகிற இந்த நாளில் சில குறிப்புகளை சொல்லிப்போகிற மனோநிலையும் இல்லாமல் இருக்கிறது! இருந்தும் எனக்குள் முட்டிக்கொண்டிருக்கிற நினைவின் சொற்களை குறிப்புகளாக எழுதியே பழக்கப்பட்டு விட்ட எனக்கு (அநேகம் காற்றில்தான் எழுதியிருக்கிறேன்) இன்றைக்கும் எழுதுவதற்கான மனோநிலை வாய்க்காமல் இருந்தாலும் இணையம் அரிதாகக்கிடைக்கிற இந்த நேரத்தில் கட்டாயமாய் சிலதை எழுதி விட வேண்டும் என்கிற கடமையில் எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல், எப்பொழுதும் முன்னேற்பாடுகள் செய்வது என் இயல்பாய் இருந்ததில்லை...உனக்கான கடிதங்களையும் நான் அப்படியே எழுதி இருக்கிறேன்...!


*
என் அம்மாவின் பிறந்த நாளை
எனக்கு ஞாபகப்படுத்திய உனக்கு
என் பிறந்நாள் மறந்து போயிற்று...!

*
தவம் தடைப்பட்டுப் போனாலும்
தேவதைகள் தோற்பதில்லையே
நீ தேவதைதானே...!


*
உயிர் முழுக்க வலி
உன் பிரிவறித்த தோழி வாழ்த்தனுப்பியிருந்தாள்
இந்த பிறந்தநாளுக்கு...!


*
என்ன தரவேண்டும் உனக்கு
இந்த பிறந்தநாளுக்கு
எதை விரும்பினாலும் கேள்
உன் பரியங்களையும் நினைவுகளையும் தவிர...!


*
மூடிவைத்திருக்கிற உன் தொலைபேசியை
நெருங்க முடியாமல் இருக்கலாம் எனக்கு
உன்னை மூடி வைக்கிற முயற்சியின்..
தோல்வியை நீ தாங்க மாட்டாய் தமிழ்
அதற்காகவேனும்
உன் பிரியங்களின் சாயல்களில்
ஒரு வாழ்த்தை அனுப்பிவிடு...!


*இதுவரை எண்பத்தொன்பது அழைப்புகளுக்கு
பதில் தரவில்லை நீ இன்று மட்டும்,
எனக்கு நம்பிக்கை இருக்கிறது
நாள் இன்னமும் மீதமிருக்கிறது
நாள் முடிகிற கடைசித்தருணங்களிலும்
அநாமதேயமாய் வரக்கூடும் ஒரு வாழ்த்து...!


*
எனிந்த மௌனம்
உன் நினைவுள் அழுகிற சத்தம்
உன்னை தூங்கவிடாது தமிழ்
ஒரு வாழ்த்தை அனுப்பிடு!
மற்றொரு பிறந்த நாளைக்குள் நிகழலாம்
சில அழைப்புகளும் பதில்களும்...!


*
உனக்கென்றுதானே பிறந்திருக்கிறேன்
உன் நினைவுகளோடு
வாழ்ந்துவிடுகிறேன்...!


பின் குறிப்பு:

1)இது என்னுடைய ஐம்பதாவது பதிவு எதிர்பார்த்துக்கொண்டிருந்த சில நிகழ்வுகள் நிகழாமையில் புலம்பலை கோர்வையாக்குகிற அளவுக்கு நிதானம் இல்லாமல் இருக்கிறது...அதனால் குறிப்புகளாக மட்டும்...

2)ஒரு புகைப்படம் மற்றும் ஒரு பாடலோடு பதிவாகி இருக்க வேண்டியது நேரமும் கணினியும் செய்கிற சதியில் முடியாமல் போயிற்று


3)சந்தோசத்துக்காக...

A LOT OF
BIRTHDAY WISHES
WITH LOVE & AFFECTION
ONLY & JUST FOR YOU...

on
29.09.2005

Friday, September 26, 2008

சோகங்களை கொண்டாடுதல்...

*
நீ அழைக்கவில்லையே ஒழிய- என்னை
நினைக்காமல் இல்லையே...!
உன் பிரியங்கள் நிரம்பிய
மௌனங்கள் போதுமெனக்கு...

*
பிரிந்துவிடக்கூடும் என்று தெரிந்தேதான்
பழகத்தொடங்கி இருந்தோம்...
பரிந்திருக்கிறோம்
இழப்புகளுக்கும் வலிகளுக்கும் தெரிவதில்லை
ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகள்...

*
காதல் இயல்பாக நிகழ்கிறது
சொல்லத்தெரிவதில்லை என் காதலுக்கும்
சொல்லிக்கொண்டு நிகழ்ந்துவிட்ட
பிரிவுக்குமான காரணங்களை எனக்கு
பிரிவுகளும்...

*
உன்னை விடவும்
உன் நினைவுகளிடம் அதிகமாயிருக்கிறது
காதல்
வலிகள் மிகும்(ந்தாலும்)
பிரிவுகள் தகும்...

பின் குறிப்பு:

பல நாட்களாய் அடைந்து கிடந்த மௌனங்களை அவிழ்க்கத்தொடங்கியிருக்கிறது இப்போதைய இரவுகள் இனி அடிக்கடி கொண்டாடலாம் சோகத்தை புலம்பலை சகிக்கிற தோழர்கள் அறைக்கு வரவேற்கப்படுகிறார்கள்...

Friday, September 19, 2008

காதல் தோல்வியில் நயன்தாரா...!!!! (ஒரு திருமண வாழ்த்து)



ஒரு காதல் கைகூடுமென காத்திருந்த நயன்தாராவுக்கு மிகப்பெரிய சோகத்தை கொடுத்திருக்கிறது அந்த கல்யாணம்.இருந்தாலும் தான் விரும்பியவரும் தன்னைக்குறித்து கவிதைகள் எழுதிய அந்த காதல் மனதுக்குமாக அவருடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய காதலை தியாகம் செய்திருக்கிறது நயன்தாராவின் காதல் மனது ...

என்ன இருந்தாலும் எவ்வளவுதான் அதனை மறைக்க முயன்றாலும் காதலின் தோல்வியென்பது அவ்வளவு சேலாக மறக்கக்கூடியதா என்ன அவரது சோகங்களை பகிர்ந்து கொள்ளாமல் அவரால்...(அந்த முகத்தை பார்க்கவே முடியல அந்த பிஞ்சு முகத்துல அப்படியொரு சோகம்)

அவர் கவிதைகளில் மனதை பறிகொடுத்த நயன்தாராவை காதல் பக்குவப்படுத்தியிருந்தது போலும் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார்...

ஆனாலும் விசும்பல்களுக்கிடையே அவர் கடைசியில் சொன்னது...

எது எப்படியென்றாலும் பரவாயில்லை அவர் கவிதை எழுதுவதை மட்டும் நிறுத்த வேண்டாம் என்று சொல்லுங்கள் என்பது...

என்ன (மங்களூர்)சிவாண்ணே கவிதைகள் எழுதுவிங்க தானே...;)

மறுபடியும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்....

பதிவுலகம் சார்பாகவும் அனைத்துலக தமிழ் மக்கள் சார்பாகவும் சிவராமன் மற்றும் பூங்கொடி புதுமணத்தம்பதிகளை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்...

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!!

நன்றி...!


டிஸ்கி 1:ஒரு வாழ்த்துப்பதிவுன்னா அது சாதாரணமாத்தான் இருக்கணுமா இப்படியும் இருக்கலாம்ல!

டிஸ்கி 2: என்னடா சோகம்னு சொல்லிட்டு சிரிச்ச முகத்துல இருக்கிற படத்தை போட்டிருக்கேன்னு பாக்கறிங்களா இதுதான் அவருக்கு பிடிச்ச போட்டோன்னு நயன்தாரா சொல்லிச்சு...

Tuesday, September 16, 2008

சில குறிப்புகள்...

*
கடந்த என்னுடைய பதிவுக்கு பிறகு இப்பொழுததான் இணையப்பக்கமே வந்திருக்கிறேன் அப்ப்பா [ஏனிந்த கொலை வெறி நம்ம மக்களுக்கு ...:)] எத்தனை பதிவுகள் எவ்வளவு விடயங்கள் இத்தனையும் பார்த்து முடிக்கவே என்க்கு இன்று கிடைத்திருக்கிற சொற்ப நேர இணைய வசதி போதாது... பதிவுகள் படிக்கவேண்டும்,பின்னூட்டங்கள் எழுத வேண்டும், நான் ஏதாவது எழுத வேண்டும் ஆனால் எதை எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல் இப்படி தட்டச்சிக்கொண்டிருக்கிறேன் (யோசிக்காம எழுதுடா மகனே இதுவரையும் ஏதோ யோசிச்சு எழுதினா மாதிரி அலட்டிக்கிற; நம்ம மக்கள் ரொம்ப நல்லவய்ங்க படிச்சோ, படிக்காமலோ கட்டாயமா கமன்ட் எழுதுவாய்ங்க! - என் நம்பிக்கை வீண்போகாதே மக்கள்ஸ்!!!) நான் வழமையாக பயன்படுத்துகிற கணினி செயலிழந்து இருக்கிறது,இணைய வசதி கிடைப்பது பெரும் கஷ்டமாக இருக்கிறது அதனால புரிதல்கள் நிரம்பிய நண்பர்கள் குறைகொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன் பின்னூட்ம் எழுதுகிறேனோ இல்லையோ உங்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்பது உண்மை சொந்தங்களே எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க!!! [ஒரு கும்மி வீரனின் பின்னூட்டங்களை இழந்திருக்கிறது தமிழ் வலையுலகம் என்ன கொடுமை இது கூகுளாண்டவரே:( ]

*
புதுமணத்தம்பதிகள் மங்களூர் சிவா மற்றும் பூங்கொடி இருவருக்கும் மறுபடியும் ஒரு முறை இங்கே வாழ்த்துக்ளை சொல்லிக்கொள்கிறேன்.

நல்ல புரிதலும் முழுத்திருப்தியும் நிறைந்த அழகான வாழ்வுக்கு வாழ்த்துக்கள் நண்பர்களே...


*
கடந்த பன்னிரண்டாம் திகதி திலீபன் என்கிற மாவீரனின் நினைவுநாட்கள் ஆரம்பமாகியிருந்தது.தன்னினத்தின் கண்ணீரை துடைப்பதற்காக தண்ணீரும் வேண்டாம் என்று சொட்டுச்சொட்டாய் உயிரை விட்ட மாவீரன் தியாக தீபம் திலீபனின் பன்னிருநாட்கள் நினைவு ஆரம்பமாகியிருந்தது ஈழப்போராட்டம் பற்றிய என் பல்வேறுபட்ட கருத்துக்களிலும் மாறாமல் இருக்கிற ஒரே விடயம் என் மனதில் திலீபனுக்கு இருக்கிற இடம்தான் உறுதியானதொரு கொள்கை வீரனவன். பசிக்கெதிராக பேர்தொடுத்தல் என்பது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல என்பது சிறுவயதில் நாள் முழுக்க பசியோடு இருந்திருக்கிற எனக்கு ஓரளவேனும் தெரியும்.அப்படி இருந்த போரட்டம் இன்று...

*
கத்லின் மேகர் ( america's got talent- 2008)என்கிற சின்னப் பாடகியின் சில கண்ணொளிக்காட்சிகளை பார்க்கிற சந்தர்ப்பம் கிடைத்தது.அவள் குழந்தைத்தனமும் திறமையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது, சின்னதேவதையாய் மனதை கொள்ளை அடித்திருந்தாள். அவள் எனக்கு ஏற்படுத்திய இன்னுமொரு விடயம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் பிரிந்திருக்கிற என் மருமக்களை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை எனக்குள் ஏற்படுத்தி இருப்பது.குட்டிகளின் நினைவுகளை எனக்கு நிறையவே கொடுத்திருந்தாள் அவள்; ஆறு மருமக்கள் இருக்கிறார்கள் எனக்கு இரண்டு சிங்கங்க்ள,நான்கு தங்கங்கள் என வீடு முழுக்க நிறைகிற அவர்களையும் அவர்களின் குறும்பகளையும் மீட்டுப் பார்க்கச்செய்திருந்தாள் கத்லின்...

*
சாண்டில்யனின் கடல்புறா பாகம் ஒன்றை வாசித்து முடித்திருக்கிறேன் நண்பர் ஒருவருக்கு கடந்த வியாழக்கிழைமை அதனை கொடுத்தனுப்புவதாக சொல்லி இருந்தேன் முடியாமல் போனதால் கொடுக்கவில்லை. வருகிற வியாழக்கிழமை கொடுத்தனுப்பலாம் என்றும் கொடுத்தனுப்பிய பின்னர் அழைத்துப்பேசலாம் என்றும் இருந்தேன் இன்று அவரே அழைத்துப்பேசினார், எப்படியாவது கொடுத்தனுப்பிவிட வேண்டும்.( அது வேறுயாருமல்ல அவரை இன்னும் நேரில் சந்திக்கவில்லை)


*
அந்த சினேகா உண்மையில் அழகுதான் "ஏய் நீ ரொம்ப அழகா இருக்க..." படம் மறுபடி பார்ததேன் சினேகாஅழகாய் தெரிந்த படங்களில் இதுவும் ஒன்று ஆனால் படம் எனக்கு பிடித்துப்போனதற்கும் மறுமுறை பார்த்ததற்கும் இது காரணமல்ல! பல நினைவுகளை கிறளறியிருக்கிறது படம்...(அவளும் அவள் சார்ந்த நினைவுகளும்...)


*
கடதந்த நாட்கள் எதுவும் வாசிக்ககிடைக்காமலும் எழுதக்கிடைக்காமலும் மனம் முழுவதும் நிரம்பிக்கிடக்கிறது பல விடயங்கள். எதையும் செய்யமுடியாமல் ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல பிரச்சினைகள் சூழ்ந்து கொண்டு இருக்கிறது என்னை! அவற்றையெல்லாம் வெளித்தள்ளிவிட கிடைக்கிற ஒரே விசயம் வாசிப்பதுதான் அதற்கும் சந்தர்ப்பம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்னுடைய நாட்கள்...கொஞ்சம் கடுமையாத்தான் இருக்கிறது அவை! பார்க்கலாம் நிகழ்வுகள் மாறத்தானே வேண்டும்.

*
பலதையும் மீட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறது மனது...


குறிப்புகளின் குறிப்புகள்:

1)
இணைய வசதி கிடைக்காமல் இருக்கிறது, எப்பொழுதாவதுதான் வர முடிகிறது இணையத்திற்கு,அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட நேரஅளவு மட்டும் என் பதிவுகளின் பின்னூட்டங்களுக்கான பதில்களைக்கூட சரிவர தரமுடிவதில்லை என்கிற வருத்தம் எனக்கு பல நாட்களாக இருக்கிறது உங்கள் அன்புக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பர்களே...

2)
இந்த மாதம் முடிவதற்கிடையில் இணையவசதி கிடைக்கலாம் என்ற நினைக்கிறேன்- கிடைக்வேண்டும்! முக்கிய பதிவொன்று எழுதியே ஆக வேண்டும் இந்த மாதம் முடிவதற்கிடையில்...

3)
வாசிக்காமல் இருப்பது மிக கடினமான காரியமாக இருக்கிறது...

Monday, September 8, 2008

நானும்,நினைவுகளும்...!

சரி செய்யாமல் இருக்கிற படுக்கை
காய்ந்து போன மீதங்களோடு
தேநீர் கோப்பைகள்
கலைந்து கிடக்கிற அறையில்
நின்று போன சுவர்க்கடிகாரம்,
கழுவாமல் இருக்கிற ஆடைகளின் குவியல்
குழம்பிக்கிடக்கிற மேசையில் புத்தகங்கள்
நிரம்பிக்கிடக்கிற சாம்பல் தட்டில்
அணைந்து கிடக்கிற சிகரெட்டுகள்
தூசு படிந்திருக்கிற கம்பியுட்டரைச்சுற்றி
சிதறிக்கிடக்கிற 'சிடி'கள்...

பலதும்...
உன் வருகைகளற்ற
நாட்களைப்பற்றி பேசுகின்றன

அறை சரி செய்யப்படலாம்
நிகழ்வுகள் மாறக்கூடும்...
நானும்,நினைவுகளும்?!

Friday, August 29, 2008

இரண்டு நாட்களும் சில குறிப்புகளும்...

*
நேற்றும் நேற்றைக்கு முந்தய புதன் கிழமையும் இணைய வசதி இல்லாமல் போயிற்று, ஏதோ நாளாந்த காரியங்களில் சிலதை செய்யாமல் இருந்துவிட்ட தவிப்பு இருந்துகொண்டே இருந்தது. நித்தம் பார்க்கிற நண்பர்களை இரண்டு நாட்களாக காணமுடியவில்லை எனில் ஒரு தாக்கம் இருக்கத்தானே செய்கிறது. ஊரை விட்டு வந்த நாட்களின் ஆரம்பத்தில் இருந்தது போல ஒரு உணர்வு இரண்டு நாட்களாக இருந்தது. இப்பொழுதும் மிக சிரமத்தின் மத்தியில் இணையத்துக்கு வந்திருக்கிறேன்...

*
கிட்டத்தட்ட இரண்டு மாத கால காத்திருப்புக்கு பிறகு கடந்த இருபத்தைந்தாம் திகதி வாங்கி வரச்சொன்ன புத்தகங்கள் சிலதில் சுயாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்களும் சாண்டில்யனின் கடல்புறாவும் கைக்கு வந்து சேந்திருந்தது. கடல்புறா நான் ஏற்கனவே படித்திருந்தாலும் சாண்டில்யன் வர்ணனைகளின் தாக்கம் என் பள்ளிக்கூட காலத்து கட்டுரைகளிலும் அத்தோடு அதற்கு பிந்தய புலம்பல்களிலும் இருந்ததை நான் மறக்கவில்லை ஆனால் அந்த கட்டுரைகள் புலம்பல்கள் பெரும்பாலும் என்னோடு இல்லாமல் போய்விட்டதில் இப்பொழுது வருத்தமிருக்கிறது.கடல்புறாவுக்கு நண்பர் ஒருவர் காத்திருப்பதினால் முதலாம் பாகம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் நேரமும் சூழலும் தொடர்ச்சியான வாசிப்புக்கு தடையாக இருக்ககிறது இருந்தாலும் விரைவில் முடித்துவிடுவேன்.


*
"ஒரே கடல்" மலையாளப்படம் பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் கங்காரு நாட்டின் சிங்கம் க-பிரபா மற்றும் அமீரக இலக்கியவாதி தம்பி அண்ணன் விமர்சனங்கள் பாத்ததிலிருந்து இருந்தது. தெரிந்த ஒரு சேட்டனிடம் சொல்லி தேடி வாங்கி வந்து கொடுத்திருக்கிறார் படம் நாற்பத்தெட்டு நிமிடங்கள் பார்த்திருக்கிறேன் அறை நண்பர்களின் பலமான எதிர்ப்புகளுக்கிடையில்! மலையாளம் எனக்கு அவ்வளவாக புரிவதில்லை என்பதாலும் அறையில் இருந்த சத்தங்களாலும் படத்தை எவ்வளவு கண்ணைக்குடுத்து கவனித்தும் வசனங்களை சரியாக கேட்க முடியாமல் செய்துவிட்டார்கள் தனியாக இருக்கிற நேரத்தில் பார்த்துவிட வேண்டும்; ஆனால் பார்த்தவரையில் படம் நிறையப் பேசுகிறது அலட்டலான வசனங்கள் இல்லாமலே!

Sunday, August 24, 2008

சில சொற்களும் சில படங்களும்...!

முன் குறிப்பு:

எழுதுவதற்கு...
எதுவும் தோன்றவில்லை
அவள் நினைவுகளைத்தவிர!




உன் கண்களிரண்டில்
துடிக்கிறதெனது உயிர்...
உன் பார்வைகள் போதுமெனக்கு!





நீ காத்திருக்கிறாய் என்றால்
எனக்கு முன்னால்
என் உயிரை அனுப்புகிறேன்
உன் நலம் விசாரிக்க!





உன்னைச்சுமந்து வருகிற கர்வத்தில்
அழகாகிற்று இதுவும்!





அப்படி பார்க்காதே...
இப்படி சித்திர வதை செய்யாதே...
என் இதயம் பலவீனமானது!





அழகு என்பதற்கு
உன் சிரிப்பென்ற...
மறுபெயரும் உண்டு!





ஏற்கனவே சொல்லி விட்டேன்
என் இதயம் பலவீனமானது என்பதை!





உன்னைச்சொல்லி குற்றமில்லை
உன்னை அழகாய் அனுப்பி,
என்னை சாகடிக்கிற...
பிரம்மனுடன் இருக்கிறது வழக்கு!






ஏனடி ஒளிகிறாய்...
நான் உனக்குள்தானே இருக்கிறேன்!


முக்கிய குறிப்பு:
படங்கள் பதிவுக்கு
வார்த்தைகள் எல்லாம் தேவதைக்கு...!

Saturday, August 16, 2008

கடைசிக்கடிதம்...!




மரியாதைக்குரிய தேவதைக்கு...!

நலம்,நலம் அறிய ஆவல்;
என்கிற சம்பிரதாய விசாரிப்புகளில் விருப்பம் இல்லை என்றாலும்,எழுதப்பட வேண்டிய தூரத்தில் இருப்பதும், அதற்கான இடைவெளி நமக்குள் ஏற்பட்டிருப்தாக என் மனதும் தவித்துக்கொண்டிருப்பதால் எழுத வேண்டிய அவசியம் உருவாகிற்று!

என்ன எப்படி இருக்கிறாய் நலம்தானே? நான் நலம் விசாரித்ததும் சொன்னதும் உயிரை இன்னமும் விடாமல் வைத்துக்கொண்டிருக்கிற தேகங்களைத்தான் என்பதை இங்கே தெளிவு செய்வது நான் போலியாய் எழுதகிறேனோ என்கிற என் சந்தேகத்தை இல்லாமல் செய்திருக்கிறது. மனதளவில் பல கேள்விக்குறிகளும் விடைதெரியாத அல்லது முடிவெடுக்க முடியாத பிரச்சனைகள் இருப்பதனால் மனதை பற்றிய கேள்விகளை நான் தவிர்த்துக் கொள்கிறேன் தவிர்க்காமல் நான் கேட்டுவிட்டாலும் நீ உன் இயல்பின் வழி எனக்கு அவற்றை தெளிவு படுத்தப்போவதுமில்லை;அது அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது இதுவரையும்.

அதை நான் பாத்துக்கொள்கிறேன், எனக்கு தெரியும் என்ன செய்வதென்று, நீங்கள் யோசிக்க வேண்டாம்,நடக்கும் பொழுது பார்க்கலாம், நான் உங்களுக்குத்தான், என்கிறவைகளாலான பதில்களில் அவற்றை தவிர்த்துக்கொண்டு என் சந்தோசங்களுக்காக மட்டுமே கடிதம் எழுதியவள்...நீ!அது தேவதைகளின் இயல்பாக இருக்குமோ என்னவோ?!


நீ அற்புதங்களால் நிறைந்த தேவதை!

இந்தக்கடிதம் இதுவரையும் இல்லாத விழிப்பு வார்த்தைகளோடு வந்திருப்பதை நீ உணரக்கூடும்.அதற்கு காரணம் நீ கேட்காவிட்டாலும் நான் சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதாகப்படுகிறது;இந்தக்கடிதத்தை பின்பொருநாளில் நீ படிக்கும்பொழுது ஒரு தேவதையாக மறுபடியும் உன்னை உணர்த்தக்கூடும்,ஒரு வேளை உனக்குப்பின்பு படிக்கும் யாருக்காவது ஒரு தேவதைக்கான கடிதத்தை படித்துக்கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்தே ஆகவேண்டுமே!

எனக்கு தெரியும் நீ கடிதங்களை ஒரு போதும் தவற விடுவதில்லை என்பதும் அவற்றின் மீது நெருக்கமானதொரு பற்றுதல் உனக்கு இருப்பதும்.

கடிதங்கள் மிக நெருக்கமாய் இருக்கிறது!
கடிதங்கள் பிரியங்களை பதிகிறது!
கடிதங்கள் உணர்வுகளை எழுதுகிறது!

என்கிற அழகான விசயங்களை சொல்லிக்கொடுத்தவளே நீதானே! எனக்கு உன்னைப்போல் கடிதங்கள் எழுதத்தெரியாது போனாலும் நான் எழுதுகிற கடிதங்களில் முடிந்தவரை என்னை உனக்கு காட்டிவிட வேண்டும் என்கிற பிரயத்தனம் நிறைந்திருக்கும்;இதைக்கூட நீதான் எனக்கு சொல்லியிருக்கிறாய்! அதன் பிறகுதான் நான் கடிதங்களை தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்ததே.உண்மைதான் அனுப்புகிறோமோ இல்லையோ அவை படிக்கப்படுகிறதோ இல்லையோ(நீ நிச்சயமாய் படிப்பாய் என்பது விலக)பதில் கடிதங்கள் வருகிறதோ இல்லையோ எழுதுகிற கடிதங்கள் இறக்கி வைத்த சுமைகளைப்போலவும், தீர்ந்து விட்ட பிரச்சனைகள் போலவும், நண்பர்களோடு சேர்ந்து கொண்டாடிய பிறந்தநாளைப்போலவும், மனதுக்கு நெருக்மான அவன் அல்லது அவளோடு சேர்ந்திருந்து உணர்வுகளைப் பகிர்ந்த இரவுக்கு பிறகான காலையைப் போலவும் இருக்கிறது என்று நீ சொன்னது எவ்வளவு தூரம் நீ கடிதங்களை நேசிக்கிறாய் என்று உணர்த்திற்று.

உன்னுடைய கடிதங்களுக்கு பிறகுதான் நான் என்னால் முடிந்தவரை கடிதங்கள் எழுதியிருக்கிறேன் ஆனால் அவற்றையெல்லாம் உனக்கு அனுப்பியிருக்க மாட்டேன்.அதற்கு காரணமும் இருக்கிறது கடிதங்களைப்பற்றி கற்றுக்கொடுத்த நீயே! கேட்காமலே ஒரு கடிதத்தை குறைந்தது ஏழு பக்கங்களில் கடிதங்கள் எழுதிய நீ கடந்த மூன்று வருடங்களில் எனக்கு ஏழு கடிதங்களை வெறும் பத்தொன்பது பக்கங்களில் மட்டும் எழுதியிருந்தாய்...!?

எல்லாம் என் பலநாள் வற்புறுத்தல்களுக்கு பிறகு, அவற்றிலும் எதை எழுதுவது என என்னையே கேட்டு எழுதியிருந்தாய். ஏன் தமிழ்!? எழுதுவதற்கும் பகிர்வதற்கும் நமக்கிடையில் எதுவுமே இருக்கவில்லையா அருகிருந்து பேசுவது மாதிரியான உணர்வுகளை கடிதங்கள்தான் தருகிறது என்று சொன்ன நீயா அப்படி எழுதினாய்! என அந்த கடிதங்களை வாசிக்கும் பொழுதுகளில் எல்லாம் நினைத்ததுண்டு. கடைசியாக நான் இங்கே வருவதற்கு முன்னர் நீ எனக்கெழுதிய கடிதம் நினைவிருக்கிறதா உனக்கு, அதனை இதுவரை எத்தனை முறை படித்திருப்பேனோ தெரியாது எனக்கு கிடைத்த கடிதங்களில் அல்லது கிடைக்கப்போகும் கடிதங்கள் வரை வேறெந்தக் கடிதத்தாலும் மீள் நிரப்ப முடியாத தன்மை கொண்டு என்னை முழுவதுமாய் ஆக்கிரமித்திருக்கிறது அது! உன் மார்புக்குள் உறங்குவதை ஒத்த ஒரு சஞ்சலங்கள் அற்ற மனோநிலையை படித்து முடிக்கையில் தருவதாக எத்தனையாவது முறை படிக்கும் பொழுதும் இருக்கிறது அந்தக்கடிதம். ஏழு வருடங்களுக்கு முன்னர் நீ கொடுத்த முதல் கடிதம் தொலைந்து ஓரிரு நாட்களில் நான் வழமைக்குத் திரும்பியதற்கும் இந்தக்கடிதமே காரணம்.

உன்னைப்போலவே உன் கடிதங்களும் எனக்கு...!

இங்கே வந்து ஆறு மாதங்கள் வரை எந்த கடிதமோ தொலைபேசி அழைப்புக்களோ இல்லாத போதும் நமக்கான நெருக்கம் மனதளவில் இருந்தது. நீ என்னை நினைத்து என்னுடனா உடனடித்தொடர்பை தவிர்த்தாயோ தெரியாது அதன்பிறகு மொத்தம் ஏழுகடிதங்களையும் எண்ணிக்கைகள் அற்ற தொலைபேசி உரையாடல்களும் நிகழ்ந்து முடிந்திருந்திருக்கிறது இன்றய அதிகாலையோடு!

அதுவே கடைசி அழைப்பென்கிற உன்சார்ந்த முடிவொன்றை கூறி பிரிவின் வலிகளில் உருகிக்கொண்டிருந்த என்னை ஒரே நொடியில் ஆவியாக்கினாய்...'சாம்பல் கரையும் வார்த்தைகள் கரைவதில்லை'என்கிற ஒரு கவிஞனின் வரிகள் இப்பொழுது நினைவுக்கு வருகிறது. காற்றாகி விட்ட வாசனையை உணரலாம் கண்டு கொள்ள முடிவதில்லை அஃதாகி வலிகளை உணரலாம் அவற்றிற்கு உருவம் இருப்பதில்லலையே,இதனை வாசிக்கும் பொழுது என் வலிகளை நீ உணர்கிறாயா தமிழ்?!

எப்பொழுதும் நீ என்ன செய்தாலும் அவை பிரியத்தின் புரிதல்களாக மட்டுமே இருக்கும் என்கிற இதுவரையான உன் காதல் எனக்கு கொடுத்த திருப்தியோடு;உனக்கு அனுப்புவதற்காக எழுதுகிற என்னுடைய கடைசிக்கடிதமாக இது இருக்கலாம், மேலும் காலம் வழிசெய்கையில் உன் முகவரிகள் எனக்கு தெரிந்திருக்கிற பட்சத்தில் மற்றுமொரு கடிதத்தை நான் உனக்கு அனுப்புவதற்காக எழுதக்கூடும் மற்றபடி உனக்கான என் கடிதங்கள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும்.

பின்பொரு நாளில் நீயோ அல்லது நம்மைத் தெரிந்த யாராவதோ அவற்றைப் படிக்கவும் கூடும்!

நான் அடிக்கடி சொல்வது போல உன்னை நான் காதலிப்பதற்கு, என் நேசங்களை உனக்கு முழுவதுமாய் சொல்ல என் வாழ்நாட்கள் போதாமல் போகலாம் என்பதனை மறு முறையும் இந்த இடத்தில் சொல்வது பொருத்தமில்லை என்றாலும்; தேவதையின் மீதான பிரியமும் எதிர்பார்ப்பும் வளர்ந்து கொண்டே இருக்குமே ஒழிய அது அவள் யாசிப்பவனோடு கூடவே இருப்பதில்லை அல்லது வரம் தருவதில்லை என்பதற்காக இல்லாமல் போய்விடுவதில்லையே...!

உனக்கான என் கடிதங்களின் இறுதியில் எனக்கு திருப்தியான உறவு முறையினை இதுவரையும் எழுதியதில்லை என்பது என் நீண்ட நாள் வருத்தம் அத்தோடு அந்த கடிதங்களில் என் கையொப்பமும் இருந்ததில்லை என்பதை நீ கவனித்தும் இருக்கலாம்

அதே குழப்பம் இப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது...

என்ன எழுதுவது என்று தெரியாமல்தான் எழுத ஆரம்பித்தேன்,என்ன எழுதியிருக்கிறேன் என்றும் தெரியவில்லை, இதற்கு மேலும் நிறைய எழுதலாம் போல இருக்கிறது ஆனால் எழுத முடியவில்லை! உன் மீதான என் பிரியங்களை என்னால் முடிந்தவரையும் வெளிப்படுத்தியிருக்கிறேன் - உன்னை அருகிருந்து கவனிக்க முடியவில்லை என்கிற ஆதங்கம் என்னை முடிந்தவரை தவிக்கவிடுகிற மிகுந்த வலிகளோடு.


இப்பொழுதும் அதே தவிப்பின் மிக உயர் மீடிறண்களின் அதிர்வுகளோடு...


நான்-

தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்!

Friday, August 8, 2008

நானும் சில சொற்களும்...!

காலையில் கொஞ்ச நேரம் இணையத்துக்கு வந்திருந்தாலும் இப்பொழுது தமிழ் மணத்தை படித்துக்கொண்டிருந்த பொழுதுதான் தெரிந்தது இன்றைய திகதியின் தன்மை; திகதி,மாதம் வருடம் மூன்றுமே எட்டுகளால் ஆகியிருப்பது!இந்த கணினி வேறு அடிக்கடி வலைப்பூக்களை திறக்கமுடியாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. என்ன எழுதுவது என்று யோசிக்கையிலேயே எனக்குள் முட்டிக்கொண்டிருக்கிற எப்பொழுது புழுக்கம் தவிர்க்கலாம் என்கிற என் மனோ நிலையை ஒத்த சொற்கள் ஏக்கம் தணிக்கிற அவாவில் எகிறி குதிக்க தொடங்கியிருக்கிறது அவற்றின் வேகத்துக்கு என்னால் தட்டச்ச முடியவில்......

*
அம்மா அல்லது என் முதல் தோழி.

*
அவள் அல்லது காதல்.

*
கறுப்புத்தேநீர் அல்லது என்னை சரிபார்க்கிற தருணங்கள்.


*
புத்தகங்கள் அல்லது சொற்களால் ஆன நண்பர்கள்.


*
சொர்க்கம் அல்லது அவளும் நானும் பிறந்து வளர்ந்த ஊர்.


*
முத்தம் அல்லது அடிக்கடி எய்துகிற மோட்சம்.


*
இரவு அல்லது என்னை எழுதுகிற பொழுதுகள்.


*
மழை அல்லது நனைய விரும்புகிற பொழுதுகள்.



அட அதற்குள் எட்டு சொற்களை எழுதிவிட்டேனா வெறும் சொற்களை எழுதுவதாகத்தான் இருந்தது அவை வாக்கியங்களாகியிருக்கிறதோ என்னவோ?! ஆதலால் தமிழுக்கு இன்னமும் என்மேல் ஏதோ ஒரு பிடிப்பு இருக்கிறது!

அகப்பட்ட சொற்களை எழுதி விட்டேன் ஆனால் அவைசார்ந்த எனக்குள் இருக்கிற பிம்பங்களின் புறக்கோடுகளை மட்டுமே எழுத முடிந்திருக்கிறது மாதிரியான ஒரு திருப்தியின்மை நெருடிக்கொண்டிருக்கிறது.நான் எழுதுகிற சொற்கள் சார்ந்து இது எனக்கு எப்பொழுதும் இருப்பதுதான் என்றாலும் இன்று அதிமாயிருப்பது போல உணரச்செய்கிறது அகப்படாத சொற்களின் உழற்சி.


இனி...!

ஒரு முக்கிய குறிப்பு:

இவை எனக்கு பிடித்த விடயங்களை சுட்டுகிற சொற்களாகவும் இருக்கலாம்!

நான் எழுதிய சொற்களை மறு முறை படிக்காமல் உங்களிடம் விட்டிருக்கிறேன்!

இன்று எதையாவது எழுதி விட வேண்டும் என்கிற காரணத்துக்காக மட்டும்.

Wednesday, August 6, 2008

சிதறிக் கிடந்த சொற்களை சேர்த்ததில்...!

கடந்த பதிவுக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது என் சார்ந்த கூற்று...

*
சொல்லாவிட்டாலும்
சொல்ல முடியாவிட்டாலும்
சோகம் சுகமானதுதான்
அவை உன்னைச்சாந்தல்லவா
இருக்கிறது...!

*
நிரந்தரமாக உன்னையும்
தற்காலிகமாக உன் நினைவுகளையும்
பிரிநதுவிடத்தான் முடிகிறது
மறந்து விட இல்லை...!

*
கனவுகளை விட்டுச்சென்ற
உனக்கு என்
தூக்கத்தை எடுத்துச்சென்றது
நினைவு வரவேயில்லை...!


*
உன்னோடு பழகுகையில்
உலகத்துக்கு புதியவனாக்கினாய்
பின்பொரு நாளில் உனக்கும்...!


*
கொடுத்து வைத்தது என் காதல்
அது உன்னிடம் வந்திருக்கிறது
கொடுத்து வைக்கவில்லை நான்...!


*
நீயும் காதலிக்கையில்
எப்பொழுதாவதுதான்
உன்னோடு இருந்திருக்கிறேன்
இப்பொழுது
உன்னோடு மட்டுமே இருக்கிறேன்...!


*
உன் நினைவுகளை
விட்டுச்சென்றதிலும்
என் உயிரை
எடுத்துப்போயிருக்கலாம்...!


*
சில நாட்களாக
எதையும் எழுத முடியவில்லை
உன் பெயரைத்தவிர...!


*
உண்மைதான்
பிரிவுக்கு பின்னர்தான்
நிறையக் காதலிக்க முடிகிறது
உன்னை...!

Sunday, August 3, 2008

இரவுகளை எழுதுபவன்...!





எதையுமே எழுதத்தோன்றவில்லை எனக்கு!

ஏதோ ஒரு கலவையான மனோநிலையில் சுவாரஸ்யமற்ற விரக்கதியுற்ற பொழுதுகளாய் இருக்கிறது இப்போதைய நாட்கள். நிறைந்து விட்ட குப்பைக் கிடங்காய் இருக்கிறது மனம்! பூனைகள் தட்டி விழுத்திய குப்பைவாளியாய் பின்னிரவுகளில் விழித்திருக்கிறது குழம்பிக்கிடக்கிற மனம்...

எரிகின்ற மெழுகுதிரிக்கெங்கே தெரியும் வலிக்கின்ற மனதின் துயரம் அது பாட்டுக்கு உருகி வழிந்துகொண்டிருக்கிறது! எடுத்து வைத்த நாட்குறிப்பின் பக்கங்களில் வடிவங்களற்று கிறுக்கிக் கொண்டிருக்கிறது வலது கையில் இருக்கிற பேனை! எழுதப்படாத வார்த்தைகளை எரித்து சாம்பராக்ககும் முயற்சியில் தோற்றுக்கொண்டிருக்கிறது இடது கையில் இருக்ககிற மல்பறோ லைட்ஸ்! (சிகரெட்)

நேரம் நிமடங்களாக தூக்கத்தை விழுங்கிக்கொண்டு நகர்கிறது....எப்பொழுதோ வாசித்த வரிகளின் சாயல் அல்லது அடி மனதில் இருக்கிற சொற்களின் திமிறல் கோர்வையற்று சிதறி கறுப்பு நிறத்தில் விழுகிறது வெள்ளை நிறத்தாள்களின் மையத்தில்...

அப்படி சிதறி விழுந்த வார்த்தைகளை கோர்வையாக்க தெரியவில்லை எனக்கு.யாரோடும் பேசப்பிடிக்காத அல்லது பகிர்ந்துகொள்ள முடியாத சூழலில் எழுதுவதைத்தவிர வேறு வழியும் தெரியவில்லை எனக்கு!

உருகிக்கொண்டிருக்கிறது மெழுகுதிரி...
சாம்பலாகிக்கொண்டிருக்கிறது சிகரெட்...
எழுதிக்கொண்டிருக்கிறது பேனை...
சொற்களால் நிரம்பிக்கொண்டிருக்கிறது தாள்கள்...
நகர்ந்து கொண்டிருக்கிறது இரவு...
விழுந்து கிடக்கிறது குப்பை வாளி...

காலையில் மறுபடியும் சீர் செய்து வைக்க வேண்டும் குப்பை வாளியை!

Friday, July 18, 2008

அவளும் அவள் சார்ந்த நினைவுகளும்...!



சில மாதங்களுக்குப் பிறகு கிடைத்த ஒரு விடுமுறை நாளின் அறையில் யாருமற்றதாகிய தனிமையில் தூக்கம் கலைந்து விழிக்கையில் கண்களுக்கெதிரே அறையின் வலது பக்க மென் பலகைச் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த வினாடிகளின் முள்ளற்ற கடிகாரம் பத்து மணியை கடந்து இருபத்தாறாவது நிமிடத்தின் புள்ளியை எட்டியிருந்தது. எழுந்து உட்கார்ந்து உள்ளங்கைகளை உரசி அந்த மெல்லிய வெப்பத்தோடு கண்களை கசக்கி பார்வைய சரிசெய்து கொண்டேன். மீதமிருந்த தூக்கத்தை விரட்டுவதற்கு எனக்கு பிடித்தமான கறுப்புத் தேநீர் கட்டாயமாகப்பட்டது!அது இல்லாமல் என்னுடைய நாட்கள் தொடங்கியதுமில்லை முடிந்ததுமில்லை!



இதைப்பற்றி அம்மா பதினோராவது முறையாக பேசியிருக்கிற பெண் என்ன நினைப்பாள்...!? படிப்பதற்கு எதுவும் இல்லாமல் எனக்கு தூக்கம் வராததும், படுக்கைக்கு போவற்கு முன்னரும் ஒரு தேநீர் பருகுவது என் வழக்கம் என்பதையும், படுக்கையில் உட்கார்ந்து நாளின் கடைசி சிகரெட்டோடு ஏதாவது வாசிப்பதும் என் நெடுநாளைய பழக்கம் என்பதையும் தெளிவு படுத்த வேண்டிய அவசியம் இருப்பது இந்த நேரத்தில் தோன்றியது....

இது தோன்றிய நேரத்தில் தமிழின் நினைவுகள் என் உறக்கம் கலையாத காலைப்பொழுதின் மூளை நரம்புகளுக்கும் வந்து போனதில் எந்தவித அசாதாரணமும் கிடையாது! ஏனெனில் அவள் என் செல்களில் எல்லாம் நிறைந்து போனவள் அவளுக்காக இல்லையில்லை அவள் என்னில் ஆக்கிரமிக்காத இடம் கிடையாது என் அந்தரங்கத்தோடு சேர்த்து. அப்படியிருக்க அவள் நினைவுகளுக்கு நேரமமென்ன! இடமென்ன! அவை எனக்கு வருவதும் போவதும் வெகுசாதாரணமான நிகழ்வுகள். இருந்தும் யாருமில்லாத தனிமையல் அதன் வலிகள் மிக வன்மையான ரணங்கள்!


காலம் அவளது பிரிவுவையும் நினைவுகளையும் தாங்குகிற சக்தியை கொடுத்திருந்தாலும் இந்த ஆறாவது வருடத்தில் மற்றய பொழுதுகளில் தெரியாத பிரிவின் வலி நான் தனித்திருக்கும் பொழுதுகளில் தனக்கான விசுவரூபத்தை முடிந்த வரை எனக்கு காட்டுவதும், எனக்குள் அதற்கிருந்த உரிமையை, தனது இன்னமுமான இருப்பை சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம் உறுதிப்படுத்திக்கொண்டிருப்பதும் நிகழத்தான் செய்கிறது, இப்பொழுதும் அப்படித்தான் ஆரம்பமாகியிருக்கிறது!

தமிழ்! அவளைப்பற்றி எனக்கு தெரிந்திருந்தாலும் அவள் சார்ந்த தெரியாதது பல இருக்கலாம் அவள் என்னை மனதார விரும்பினாள் என்கிறதோடு அவளுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை என்கிற ஒன்றைத்தவிர.


அது அவளது இயல்பு அவளைப்பற்றி அவள் அதிகம் என்னோடு பகிர்ந்து கொண்டது கிடையாது எண்ணிக்ககைளற்ற முத்தங்களை தவிர அனேகமான தருணங்களில் நாம் பேசுகிற வார்தைகளே வேற, சொல்லு, ம்ம்ம்... என்பவையாகத்தான் இருக்கும். மற்றபடி கடைசியாக பார்த்த, மற்றும் சில திரைப்படங்கள், முணுமுணுக்கிற பாடல், படித்துக்கொண்டிருக்கிற புத்தகம் இப்படியாகத்தன் இருந்திருக்கிறது; தவிர அவள் தன்னுடைய நாட்கள், அதன் நகர்வுகள், அவளது சூழல் மற்றும் அதன் பிரச்சனைகள் இவற்றையெல்லாம் என்னோடு பகிர்ந்து கொண்டது அரிது அல்லது அவள் அதனை தவிர்த்து வந்தாள். உனக்கிருக்கிற பொறுப்புக்களும் கஷ்டங்களும் போதுமானதாயிருக்கிறது நான் உனக்கிருப்பது உன்னுடைய சந்தோசத்துக்காகவே எனக்கான சந்தோசங்கள் உன்னிடம் இருப்பதும் நான் உன்னிடத்தில் நிறைவடைகிறேன் என்பதும் போல நீயும் இருக்கிறாய்!
நீ அழைக்கிற தருணங்களுக்காக காத்திருக்கிற ஒருத்தியன்றி என் சார்ந்த நம் எதிர்காலத்தின் வலிகளை நாம் சேர்ந்திருக்கிறதாகிய நிகழ்காலத்தில் எதற்காக அனுபவிக்க வேண்டும் இப்பொழுது இருக்கிற கணங்கள்தானே வாழ்க்கை என்கிற நான் அடிக்கடி அவளுக்கு சொல்கிற ஆறுதல் வர்த்தையையே நம் பிவரிவுக்கான ஆயத்தங்கள் தன்னைச் சுற்றி நிகழ்வதை அறிந்து கொள்ளாமல் இருந்ததற்கும் காரணமாக்கியிருந்தாள்!
தவிர்க்க முடியாமல் அந்த பிரிவும் நிகழ்துவிட்டிருந்தது.
நாம் பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்று நமக்கு தெரிய வருகையில் அதுவரையில் இரண்டரை மணித்தியால நேர இடைவெளியிலும், சில அயிரம் கிலோமீற்றர்களையும், ஒரு கடலையும் தாண்டி மட்டுமே பிரிந்திருந்த நாம் நிரந்தரமானதொரு பிரிவின் எல்லைக்குள் தள்ளப்பட்டு அதன் காவல்கள் தீவிரமாக்கப்பட்டிருந்தது...!

சரி... இந்த நேரத்தில் பிரிவின் கதையை நிறுத்தி அவளது நினைவின் ஆரம்பத்துக்கு வரலாம் எனக்கு பற்பசை நுரை கீழுதடுகளிற்கு வெளியே வராமல் பல்துலக்கத் தெரியாது என்பதிலிருந்து நான் லுங்கி கட்டும் பொழுது அதன் முடிச்சை எப்படி போட்டிருப்பேன் என்பதும், நான் செய்கிற வேலையை பற்றியும் அதில் எனக்கு மறந்து போகிற சில விடயங்களை அவளிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவுக்கு தெரிந்து வைத்திருந்தாள் என்பதோடு என்னுடைய நாளின் ஆரம்பம் முதல் கடைசி வினாடி வரை அவளுக்கு கிழமை வாரியாக அத்துப்படியாயிருந்தது! அது எனக்கு ஆச்சரியமானதும் கூட ! என் இரண்டாவது அக்காவின் முன்றாவது குழந்தையின் பிறந்த நாளைக்கூட நினைவு வைத்திருந்தாள்,கடைசியாக நான் எப்பொழுது ஏற்பூசி போட்டுக்கொண்டேன் என்பதையும் எந்த வித குறிப்புகளும் இல்லாமல் சட்டென்று சொன்னதும், அம்மாவின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அவள் தெரிந்து வைத்திருந்ததும் அவற்றுக்கான தனியான சான்றுகள்.என் குடும்பம் மற்றும் அது சார்பாக நான் மறந்தாலும் சில விசயங்களை அவளாக நினைவூட்டுகிற சந்தர்ப்பங்கள் பல நடந்திருக்கிறது.

அவளை நான் இழந்திருக்கிறேனா? அல்லது அவள் என்னை இழந்திருக்கிறாளா? என்றால் அதற்கான விளக்கம் எனக்கு தர முடியவில்லை! அப்படி ஒரு எதிர்பார்ப்புகளின் மத்தியில் அவளுக்கும் எனக்குமான உறவு முறை இருந்ததுமில்லை எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் எதிர் பாராத பொழுதொன்றில் வண்ணத்தப்பூச்சி காவிய பூக்களின் சூல்களினால் நிகழ்து விடுகிற மகரந்த சேர்க்கை போல! அது நமக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது.

எனக்கு ஏதோ தேவைப்படுகிறது; அவளுடனான உரையாடலோ அல்லது அவள் கறுத்த உதடுகளின் ஈர முத்தங்களோ இன்னும் அவள் வலது கையின் சுட்டு விரல் நகங்களின் சுகமான கீறல்கள் பட என் இடது மார்பு ஆசைப்படுகிறது என்றோ (அவள் அனேகமாய் என் வலது பக்கத்து நெஞசில் கன்னங்களை வைத்து சாய்ந்து கொண்டு மருதாணி பூசிய நகங்களின் முனைகளில் தனக்கு தோன்றுகிற இடங்களில் எல்லாம் தன் பெயரையும் என் பெயரையும் எழுதுவது அவள் என்னைப் பார்க்க வருகிற நாட்களில் நிச்சயமாய் நிகழ்கிற நிகழ்வு! அது அவளுக்கு விருப்பமான ஒன்றாக இருந்தது என்பதும் அந்த தருணத்தில் தான் தானாக இருப்பதாகவும் அவள் பின்பொரு முறை சொல்லியிருக்கிறாள்.) என்று அவள் உணர்வதும் எனக்கான தேவையை அவளாகவே அழைத்து நிறைவு செய்வதும்

அல்லது

அவள் என்னோடு ஒரு தேநீர் பருக ஆசைப்படுகிறாள் என்றோ ஸபரிஸங்களுக்கு அவள் காத்திருக்கிறாள் என்றோ இன்னும் அவள் ஆடை மறைக்கிற பிரதேசத்தில் என் விரல்களுக்காய் இளஞ்சந்தன நிறத்திலான அவள் பூனை முடிகள் காத்திருக்கின்றன என்றோ நான் அறிந்து கொள்வதும் ஒரு நெடந்துர பயணத்துக்கான வேளையில துணையாக அவள் கேட்காமலே அவளோடு கலந்துகொள்வதும்

ஆகியவைகளால் ஆன

எதுவும் யாவும் இயல்பாக நடந்தேறுகிற மிகத்தெளிவான தன்முனைப்பற்ற இரு உயிர்களின் இருத்தலாக இருந்தது அவளையும் என்னையும் மட்டுமே சார்ந்த பொழுதுகள்...

அல்லது

தங்கியிருத்தல்கள் அற்ற ஒரு ஆணும் பெண்ணுமாகிய இரு உயிர்களின் நிகழ்வு அதற்கான தருணம் வருகையில் நிகழ்கிறதென்பதைப்போன்றோ நிகழ்ந்திருந்தது அவை...


அதனாலேயோ என்னவோ அந்த பிரிவும் நிகழ்துவிட்டிருந்தது அதற்கான சந்தர்ப்பத்தில்!

இப்பொழுது அவள் எங்கிருக்கிறாள் என்பது எனக்கு தெரியாமல் இருக்கலாம் முன்போல நான் எங்கே எப்படி இருக்கிறேன் என்பது அவளுக்கு தெரிந்திருக்கலாம் ஏன் எனக்கு பெண்பார்த்திருப்பதும் அது என்கைமீறி நிகழ்ந்திருப்பதும் கூட தெரிந்திருக்கலாம்...


ஆகையின்;
உயிரில் நிகழ்கிறதாகிய அந்த நிகழ்வு இன்றய பின்னிரவிலோ அல்லது கல்யாணத்துக்கு நான்கு நாட்கள் முன்னதாக வரும் ஞாயிற்றுக்கிழைமையின் நண்பகலுக்கு பின்னர் நான் தேநீர் பருகும் தருணத்திலோ அவளது அழைப்பொன்றின் மூலம் மீண்டும் ஒரு முறை நிகழலாம்.


இனி தொடர்வதற்காக மட்டும்!

Friday, June 27, 2008

பிரிவும் சந்திப்பும்...

கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு ஐந்து நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தேன் நான்.

நானும் நீயும் தொலைபேசியில் கூட சரிவரப் பேசிக்கொள்ள முடியாத நிலைமையில் இருந்தது உன் வீட்டு நிலவரம், இந்த நிலமையில் மூன்று நாட்கள் பகல் பொழுதுகடந்தும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் போனது இருவருக்கும். மூன்றாம் நாள் இரவில் எப்படியும் உன்னை பார்த்துவிடுவது என்ற முடிவில் பத்து மணி இருக்கையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு உன் வீடுவரை வந்தேன். முதல் முறை உன் வீட்டைக் கடக்கையில் உன்னுடைய அறையின் ஜன்னல்கள் மூடியிருந்தது தெரு முனைவரை சென்று திரும்புகையில் ஜன்னலை திறந்து வைத்திருந்தாய் நீ, எப்படித்தெரிந்து கொண்டாயோ என் வருகையை இன்றுவரையம் இருவருக்கும் தெரியவில்லை ஒருவேளை காதலுக்கு தெரிந்திருக்கலாம்!. மறுபடி திரும்பவும் சைக்கிள் "கரியரில்" சத்தம் செய்து கொண்டே தெருமுனைவரை சென்று திரும்புகையில் ஜன்னலோரம் நின்று அந்த இரவின் வெளிச்சத்தில் காதலை கண்களில் சொன்னாய் நீ...!

நான் வந்ததை நீ தெரிந்து கொண்டாய் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு உன் வீட்டுக்கு அடுத்திருந்த கலட்டி அம்மன் கோவில் கிணற்றடியில் சைக்கிளை விட்டு விட்டு நடந்து கடந்தேன் உன்னுடைய ஜன்னலை, நேர இடை வெளி விட்டடு மூன்றாம் முறை கடக்கையில் மறுபடியும் ஜன்னலில் தோன்றி மறைந்தாய் நீ, நேரம்... பதினொரு மணியை கடந்திருக்க ஊர் மொத்தமும் உறங்கியிருந்தது உன் வீட்டை தவிர! நடந்து களைத்துப்போனேன் நான்; கலட்டி அம்மன் கோவிலுக்கும் தெரு முனைக்குமாக, நீயோ சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஜன்னலில் வந்து என்னை திரும்பி போகும் படி உன் அசைவுகளிலேயெ சொல்லிக்கொண்டிருந்தாய்...

நேரம் பதினொன்றரையை நெருங்கியிருந்தது உன் வீட்டின் மற்றய விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட உன்னுடைய அறை விளக்கு மட்டும் உயிரோடிருந்தது. இன்னமும் சில நிமிடங்களில் உன் அம்மாவின் குரல் கேட்க அதனைத்தொடர்ந்து உன் அறை வெளிச்சமும் இல்லாமல் போயிற்று விளக்கை அணைத்து சில வினாடிகளில் மறுபடியும் ஒரு முறை விளக்கை போட்டு அணைத்தாய் நீ...!

இரவின் நிமிடங்கள் யுகமாய் நகர்ந்து கொண்டிருந்தது நம் இருவருக்கும்.
ஊர் முழுதும் அடங்கி விட்ட அந்த வளர் பிறைக்ககாலத்து நிலவின் வெளிச்சத்தில் கலட்டி அம்மன் கோவிலுக்காக உன் வீட்டு மதிலோரம் குவித்திருந்த குரு மணலில் கைகளை தலைக்கு கொடுத்தவாறு படுத்திருந்தேன் நான் இருபது நிமிடங்கள் யுகங்களாய் கழிகையில் உறக்கம் தழுவிக்கொண்டிருந்த என்னை எழுப்பியது உன் கொலுசுச்சத்தம்.


எதுவும் பேசாமல் வந்த நீ நெருங்கி அமர்ந்து மதிலோடு சாய்ந்து கொண்டாய் நீளமாக மூச்சு விட்ட நீ-

ஏனப்பா... என்றாய் உனக்கு மட்டும் கேட்கிற குரலில்

நான் - ம்ம்ம்...

நீ- ஏனப்பா இவ்வளவு நேரம் நித்திரையை குழப்பி கொண்டு...

நான் - நீ ஏன் என்னை பாக்க வரல்லை....

நீ- வர ஏலும் எண்டால் வந்திருப்பன் தானே....

நீ - நாளைக்கும் வேலை இருக்கல்லோ வீட்டில...

நான் - ம்ம்ம்...

நீ - அப்ப எத்தனை மணிக்கு வவுனியா போறியள்...

இந்த கேள்வியியின் முடிவில் நீ, நீளமாய் வெளிவிட்ட மூச்சு என் நெற்றியில் சுட்டது.

நான் - ம்ம்ம்..

எனக்கு நான்கு நாட்கள் அலுப்பிலும் பகல் முழுவதுமான அலைச்சலிலும் என்னை மறந்த நித்திரை கண்களை சொருகியது.

எதுவும் பேசாமல் இன்னும் நெருங்கி என் தலையை எடுத்து மடியில் வைத்து நெற்றி முடியில் விரல் நுளைத்தாய் நீ,

உந்தன் மடி மீதான நிம்மதியில் எப்பொழுது உறங்கினேன் எனத்தெரியவில்லை சட்டென்று விழிப்பு வருகையில் உன்னைப்பார்த்தேன் கண்கள் மூடிய உறக்கத்திலும் உன் விரல்கள் என் நெற்றி வருடிக்கொண்டிருந்தது இந்த கரிசனத்துக்காகதானேடி! நான் உன்னை தேவதை என்பதும் இவ்வளவு நேரம் காத்துக்கிடந்ததும்.
உன் தூக்கம் கலைக்க விரும்பாத நான் அப்படியே உன்னை பார்த்துக்கொண்டிருந்தேன் நான் விழித்துக்கொண்டதை அறிந்து கொண்ட நீ...

என்னப்பா நேரம் போகுது வீட்டுக்கு போங்கோ

நான் - ம்ம்ம்...போகலாம்

குனிந்து என் நெற்றியில முத்தமிட்டு என்ன... என்றாய்

ம்ம்ம் என்ன...

உன்கைளை எடுத்து மார்போடு வைத்துக்கொண்டேன் நான்
மறுகையை எடுத்து என் கையோடு சேர்த்து மூடிக்கொண்டாய் நீ அங்கே ஒரு கவிதை அரங்கேறியது...

நான் - ம்ம்ம்...

நீ - ம்ம்ம்...

எழுந்து மதிலுக்கு சாய்ந்து அமர்நது கொண்டேன் நானும்...

நான்- சொல்லு...

நீ - ம்...

அதுவரையும் அசைக்காமல் நீட்டியருந்ததில விறைத்து போன கால்களின் வலியை எனக்கு தெரியாமல் மறைக்க முயன்ற நீ உன்னையறியாமல் என் கைகளை இறுகப்பற்றினாய்...

ஏனடா சொல்லியிருக்கலாம் தானே என்று உன்னை அணைத்துமார்போடு சாய்த்துக்கொண்டேன் நான்

நீ- ம்ம்ம்...

ஒரு குழந்தையைப்போல ஒட்டிக்கொண்டு சாய்ந்தாய் நீ என் மார்போடு; அந்த தருணத்தில் மீண்டும் ஒரு முறை என் பிறவிப்பெருமையை உணர்த்தினாய் நீ எனக்கு...

என் கைகளை எடுத்து ஆதரவாய் பின்னிக்கொண்டேன் உன்னைச் சுற்றி...

அப்படியே எவ்வளவும் இருந்தோம் என்று தெரியவில்லை உலகத்தில் வேறெந்த நிகழ்வும் இல்லாததைப்போல எம்மை மறந்திருந்தோம். மதில் மூலையில் இருந்த பூவரச மரத்து சேவல் தொடர்ச்சியாக கூவியதில் நிகழ்காலத்துக்கு வந்தோம் இருவரும். நேரம் பார்த்தேன் மணி நாலு பத்து
கண்களை திறக்காமலே என் மார்புக்குள் நீ கேட்டாய்

நேரமென்னப்பா...

நான் - நாலு பத்து...

நான் - தமிழ்...

நீ - ம்...

நான் - தமிழ்...

நீ - ம்ம்ம்...

நான் - எழும்படா...

நீ - ம்...

நான் - விடியப்போகுது...

நீ - ம்ம்ம்...

நீ - அப்பா...

நான் - ம்...

நீ -அப்பா...

நான் - ம்ம்ம்...

என் மார்பில் முத்தமிட்டு இருவருக்குமான விடியலை ஆரம்பித்து வைத்தாய் நீ...!

அதுவரை உன்னை சுற்றியிருந்த கைகளை எடுத்து உன் முகம் நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டேன் நான்...

கண்கள் மூடி என் மார்பில் மீண்டும் ஒரு முறை சாய்ந்த உன் கன்னங்களில் இதழ் ஒற்றி எடுத்தேன்...

உன் கண்கள் மூடியிருக்க ஒரு கை என்னை சுற்றியிருக்க மறுகைவிரல்கள் என் மார்பில் என் பெயரை எழுதிக்கொண்டிருந்தது... நான் கண்கள் மூடி சாய்ந்திருக்க என் காதல் அதனை உன் பெயராக வாசித்துக் கொண்டிருந்தது என் உயிரில்...

மறுபடி ஒரு முறை சேவல் கூவ நிலமை உணர்ந்து கண்களைத்திறந்தோம் இருவரும்.

மணலை விட்டு எழுந்து கொண்டோம் இருவரும் மணல் முழுவதும் காதல் குவிந்திருந்துது...

நீ கிணற்றடி வரைக்கும் வந்தாய் என் தோள்களில் சாய்ந்தவாறே...
சைக்கிளை எடுத்துக்கொண்டு விடைபெறும் வேளைவரை நம் வலது கைகைளில் பத்து விரல்களாய் இருந்தது.

விடைபெறும் தருணத்தில் மாறி மாறி ஒட்டிக்கொண்ட கன்னங்கள் நான்கும் நனைந்திருந்தன...

அந்த இரவில் கிடைத்திருந்தது அந்த விடுமுறைக்கான திருப்தியம் அடுத்த நான்கு மாதங்கள் பிரிவுக்கான பிரியாவிடையும்.

நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!