Saturday, August 16, 2008

கடைசிக்கடிதம்...!
மரியாதைக்குரிய தேவதைக்கு...!

நலம்,நலம் அறிய ஆவல்;
என்கிற சம்பிரதாய விசாரிப்புகளில் விருப்பம் இல்லை என்றாலும்,எழுதப்பட வேண்டிய தூரத்தில் இருப்பதும், அதற்கான இடைவெளி நமக்குள் ஏற்பட்டிருப்தாக என் மனதும் தவித்துக்கொண்டிருப்பதால் எழுத வேண்டிய அவசியம் உருவாகிற்று!

என்ன எப்படி இருக்கிறாய் நலம்தானே? நான் நலம் விசாரித்ததும் சொன்னதும் உயிரை இன்னமும் விடாமல் வைத்துக்கொண்டிருக்கிற தேகங்களைத்தான் என்பதை இங்கே தெளிவு செய்வது நான் போலியாய் எழுதகிறேனோ என்கிற என் சந்தேகத்தை இல்லாமல் செய்திருக்கிறது. மனதளவில் பல கேள்விக்குறிகளும் விடைதெரியாத அல்லது முடிவெடுக்க முடியாத பிரச்சனைகள் இருப்பதனால் மனதை பற்றிய கேள்விகளை நான் தவிர்த்துக் கொள்கிறேன் தவிர்க்காமல் நான் கேட்டுவிட்டாலும் நீ உன் இயல்பின் வழி எனக்கு அவற்றை தெளிவு படுத்தப்போவதுமில்லை;அது அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது இதுவரையும்.

அதை நான் பாத்துக்கொள்கிறேன், எனக்கு தெரியும் என்ன செய்வதென்று, நீங்கள் யோசிக்க வேண்டாம்,நடக்கும் பொழுது பார்க்கலாம், நான் உங்களுக்குத்தான், என்கிறவைகளாலான பதில்களில் அவற்றை தவிர்த்துக்கொண்டு என் சந்தோசங்களுக்காக மட்டுமே கடிதம் எழுதியவள்...நீ!அது தேவதைகளின் இயல்பாக இருக்குமோ என்னவோ?!


நீ அற்புதங்களால் நிறைந்த தேவதை!

இந்தக்கடிதம் இதுவரையும் இல்லாத விழிப்பு வார்த்தைகளோடு வந்திருப்பதை நீ உணரக்கூடும்.அதற்கு காரணம் நீ கேட்காவிட்டாலும் நான் சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதாகப்படுகிறது;இந்தக்கடிதத்தை பின்பொருநாளில் நீ படிக்கும்பொழுது ஒரு தேவதையாக மறுபடியும் உன்னை உணர்த்தக்கூடும்,ஒரு வேளை உனக்குப்பின்பு படிக்கும் யாருக்காவது ஒரு தேவதைக்கான கடிதத்தை படித்துக்கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்தே ஆகவேண்டுமே!

எனக்கு தெரியும் நீ கடிதங்களை ஒரு போதும் தவற விடுவதில்லை என்பதும் அவற்றின் மீது நெருக்கமானதொரு பற்றுதல் உனக்கு இருப்பதும்.

கடிதங்கள் மிக நெருக்கமாய் இருக்கிறது!
கடிதங்கள் பிரியங்களை பதிகிறது!
கடிதங்கள் உணர்வுகளை எழுதுகிறது!

என்கிற அழகான விசயங்களை சொல்லிக்கொடுத்தவளே நீதானே! எனக்கு உன்னைப்போல் கடிதங்கள் எழுதத்தெரியாது போனாலும் நான் எழுதுகிற கடிதங்களில் முடிந்தவரை என்னை உனக்கு காட்டிவிட வேண்டும் என்கிற பிரயத்தனம் நிறைந்திருக்கும்;இதைக்கூட நீதான் எனக்கு சொல்லியிருக்கிறாய்! அதன் பிறகுதான் நான் கடிதங்களை தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்ததே.உண்மைதான் அனுப்புகிறோமோ இல்லையோ அவை படிக்கப்படுகிறதோ இல்லையோ(நீ நிச்சயமாய் படிப்பாய் என்பது விலக)பதில் கடிதங்கள் வருகிறதோ இல்லையோ எழுதுகிற கடிதங்கள் இறக்கி வைத்த சுமைகளைப்போலவும், தீர்ந்து விட்ட பிரச்சனைகள் போலவும், நண்பர்களோடு சேர்ந்து கொண்டாடிய பிறந்தநாளைப்போலவும், மனதுக்கு நெருக்மான அவன் அல்லது அவளோடு சேர்ந்திருந்து உணர்வுகளைப் பகிர்ந்த இரவுக்கு பிறகான காலையைப் போலவும் இருக்கிறது என்று நீ சொன்னது எவ்வளவு தூரம் நீ கடிதங்களை நேசிக்கிறாய் என்று உணர்த்திற்று.

உன்னுடைய கடிதங்களுக்கு பிறகுதான் நான் என்னால் முடிந்தவரை கடிதங்கள் எழுதியிருக்கிறேன் ஆனால் அவற்றையெல்லாம் உனக்கு அனுப்பியிருக்க மாட்டேன்.அதற்கு காரணமும் இருக்கிறது கடிதங்களைப்பற்றி கற்றுக்கொடுத்த நீயே! கேட்காமலே ஒரு கடிதத்தை குறைந்தது ஏழு பக்கங்களில் கடிதங்கள் எழுதிய நீ கடந்த மூன்று வருடங்களில் எனக்கு ஏழு கடிதங்களை வெறும் பத்தொன்பது பக்கங்களில் மட்டும் எழுதியிருந்தாய்...!?

எல்லாம் என் பலநாள் வற்புறுத்தல்களுக்கு பிறகு, அவற்றிலும் எதை எழுதுவது என என்னையே கேட்டு எழுதியிருந்தாய். ஏன் தமிழ்!? எழுதுவதற்கும் பகிர்வதற்கும் நமக்கிடையில் எதுவுமே இருக்கவில்லையா அருகிருந்து பேசுவது மாதிரியான உணர்வுகளை கடிதங்கள்தான் தருகிறது என்று சொன்ன நீயா அப்படி எழுதினாய்! என அந்த கடிதங்களை வாசிக்கும் பொழுதுகளில் எல்லாம் நினைத்ததுண்டு. கடைசியாக நான் இங்கே வருவதற்கு முன்னர் நீ எனக்கெழுதிய கடிதம் நினைவிருக்கிறதா உனக்கு, அதனை இதுவரை எத்தனை முறை படித்திருப்பேனோ தெரியாது எனக்கு கிடைத்த கடிதங்களில் அல்லது கிடைக்கப்போகும் கடிதங்கள் வரை வேறெந்தக் கடிதத்தாலும் மீள் நிரப்ப முடியாத தன்மை கொண்டு என்னை முழுவதுமாய் ஆக்கிரமித்திருக்கிறது அது! உன் மார்புக்குள் உறங்குவதை ஒத்த ஒரு சஞ்சலங்கள் அற்ற மனோநிலையை படித்து முடிக்கையில் தருவதாக எத்தனையாவது முறை படிக்கும் பொழுதும் இருக்கிறது அந்தக்கடிதம். ஏழு வருடங்களுக்கு முன்னர் நீ கொடுத்த முதல் கடிதம் தொலைந்து ஓரிரு நாட்களில் நான் வழமைக்குத் திரும்பியதற்கும் இந்தக்கடிதமே காரணம்.

உன்னைப்போலவே உன் கடிதங்களும் எனக்கு...!

இங்கே வந்து ஆறு மாதங்கள் வரை எந்த கடிதமோ தொலைபேசி அழைப்புக்களோ இல்லாத போதும் நமக்கான நெருக்கம் மனதளவில் இருந்தது. நீ என்னை நினைத்து என்னுடனா உடனடித்தொடர்பை தவிர்த்தாயோ தெரியாது அதன்பிறகு மொத்தம் ஏழுகடிதங்களையும் எண்ணிக்கைகள் அற்ற தொலைபேசி உரையாடல்களும் நிகழ்ந்து முடிந்திருந்திருக்கிறது இன்றய அதிகாலையோடு!

அதுவே கடைசி அழைப்பென்கிற உன்சார்ந்த முடிவொன்றை கூறி பிரிவின் வலிகளில் உருகிக்கொண்டிருந்த என்னை ஒரே நொடியில் ஆவியாக்கினாய்...'சாம்பல் கரையும் வார்த்தைகள் கரைவதில்லை'என்கிற ஒரு கவிஞனின் வரிகள் இப்பொழுது நினைவுக்கு வருகிறது. காற்றாகி விட்ட வாசனையை உணரலாம் கண்டு கொள்ள முடிவதில்லை அஃதாகி வலிகளை உணரலாம் அவற்றிற்கு உருவம் இருப்பதில்லலையே,இதனை வாசிக்கும் பொழுது என் வலிகளை நீ உணர்கிறாயா தமிழ்?!

எப்பொழுதும் நீ என்ன செய்தாலும் அவை பிரியத்தின் புரிதல்களாக மட்டுமே இருக்கும் என்கிற இதுவரையான உன் காதல் எனக்கு கொடுத்த திருப்தியோடு;உனக்கு அனுப்புவதற்காக எழுதுகிற என்னுடைய கடைசிக்கடிதமாக இது இருக்கலாம், மேலும் காலம் வழிசெய்கையில் உன் முகவரிகள் எனக்கு தெரிந்திருக்கிற பட்சத்தில் மற்றுமொரு கடிதத்தை நான் உனக்கு அனுப்புவதற்காக எழுதக்கூடும் மற்றபடி உனக்கான என் கடிதங்கள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும்.

பின்பொரு நாளில் நீயோ அல்லது நம்மைத் தெரிந்த யாராவதோ அவற்றைப் படிக்கவும் கூடும்!

நான் அடிக்கடி சொல்வது போல உன்னை நான் காதலிப்பதற்கு, என் நேசங்களை உனக்கு முழுவதுமாய் சொல்ல என் வாழ்நாட்கள் போதாமல் போகலாம் என்பதனை மறு முறையும் இந்த இடத்தில் சொல்வது பொருத்தமில்லை என்றாலும்; தேவதையின் மீதான பிரியமும் எதிர்பார்ப்பும் வளர்ந்து கொண்டே இருக்குமே ஒழிய அது அவள் யாசிப்பவனோடு கூடவே இருப்பதில்லை அல்லது வரம் தருவதில்லை என்பதற்காக இல்லாமல் போய்விடுவதில்லையே...!

உனக்கான என் கடிதங்களின் இறுதியில் எனக்கு திருப்தியான உறவு முறையினை இதுவரையும் எழுதியதில்லை என்பது என் நீண்ட நாள் வருத்தம் அத்தோடு அந்த கடிதங்களில் என் கையொப்பமும் இருந்ததில்லை என்பதை நீ கவனித்தும் இருக்கலாம்

அதே குழப்பம் இப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது...

என்ன எழுதுவது என்று தெரியாமல்தான் எழுத ஆரம்பித்தேன்,என்ன எழுதியிருக்கிறேன் என்றும் தெரியவில்லை, இதற்கு மேலும் நிறைய எழுதலாம் போல இருக்கிறது ஆனால் எழுத முடியவில்லை! உன் மீதான என் பிரியங்களை என்னால் முடிந்தவரையும் வெளிப்படுத்தியிருக்கிறேன் - உன்னை அருகிருந்து கவனிக்க முடியவில்லை என்கிற ஆதங்கம் என்னை முடிந்தவரை தவிக்கவிடுகிற மிகுந்த வலிகளோடு.


இப்பொழுதும் அதே தவிப்பின் மிக உயர் மீடிறண்களின் அதிர்வுகளோடு...


நான்-

தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்!

17 comments:

ஆயில்யன் said...

//இந்தக்கடிதம் இதுவரையும் இல்லாத விழிப்பு வார்த்தைகளோடு வந்திருப்பதை நீ உணரக்கூடும்.//

நான் உணர்கிறேன்!

நான் இன்னிக்குத்தான் நினைச்சேன் என்னாடா யாரும் காதல் கடிதம் எழுத மாட்டிக்கிறாங்களே ஒரு வேளை என்னைய மாதிரி சின்ன பசங்க பார்த்து கெட்டுப்போய்டப்போறாங்களேன்னு ஒரு விழிப்பு வந்துடுச்சோன்னு ஃபீல்பண்ணிக்கிட்டே இருந்தேன்!

தமிழ் பிரியன் said...

எப்படிப்பா.. உன்னால மட்டும் இப்படி உயிரில் திளைத்து எழுத முடியுது... நல்லா இருக்கு... :)

தமிழ் பிரியன் said...

ஏதாவது தேவதைக்கு அனுப்பி வைப்பா... கண்டிப்பா சொக்கி விழுந்து விடும்... :) தேவதைக்கு வாழ்த்துக்கள்!

நிஜமா நல்லவன் said...

//என்ன எழுதுவது என்று தெரியாமல்தான் எழுத ஆரம்பித்தேன்,என்ன எழுதியிருக்கிறேன் என்றும் தெரியவில்லை//

உங்களுக்கு தெரியலைன்னா என்ன...தேவதைக்கு அனுப்புங்க....தெரியும்!

நிஜமா நல்லவன் said...

///தமிழ் பிரியன் said...
ஏதாவது தேவதைக்கு அனுப்பி வைப்பா... கண்டிப்பா சொக்கி விழுந்து விடும்... :) தேவதைக்கு வாழ்த்துக்கள்!//

அண்ணே..ஏன் இந்த உள்குத்து...தேவதைக்கு அனுப்பினா படிக்கும் போதே தூக்கத்தில் சொக்கி விழுந்திடும்னு நீங்க சொல்ல வர்றது புரியுதண்ணே:)

நிஜமா நல்லவன் said...

தமிழ் பிரியன் அண்ணா...நீங்க சுவாதிக்கு எழுதி போஸ்ட் செய்யாமல் வைத்திருக்கும்(டிராப்ட் நான் படிச்சிட்டேனே) கடிதத்தை இன்றே பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்:)

நிஜமா நல்லவன் said...

////////ஆயில்யன் said...
//இந்தக்கடிதம் இதுவரையும் இல்லாத விழிப்பு வார்த்தைகளோடு வந்திருப்பதை நீ உணரக்கூடும்.//

நான் உணர்கிறேன்!

நான் இன்னிக்குத்தான் நினைச்சேன் என்னாடா யாரும் காதல் கடிதம் எழுத மாட்டிக்கிறாங்களே ஒரு வேளை என்னைய மாதிரி சின்ன பசங்க பார்த்து கெட்டுப்போய்டப்போறாங்களேன்னு ஒரு விழிப்பு வந்துடுச்சோன்னு ஃபீல்பண்ணிக்கிட்டே இருந்தேன்!///////

யோவ்...ஆயிலு நீ எல்லாம் சின்னப்புள்ள...இத நாங்க நம்பனுமா?...என்ன கொடும குசேலா இது???

நிஜமா நல்லவன் said...

///தமிழ் பிரியன் said...
எப்படிப்பா.. உன்னால மட்டும் இப்படி உயிரில் திளைத்து எழுத முடியுது... நல்லா இருக்கு... :)///

10000000000000000000000000000000000000000000000000000000000000 ரிப்பீட்டேய்..

Ramya Ramani said...

\\எப்படிப்பா.. உன்னால மட்டும் இப்படி உயிரில் திளைத்து எழுத முடியுது... நல்லா இருக்கு... :)

\\

:))

ஹேமா said...

தமிழன்,உண்மையோ கற்பனையோ காதல் சொட்டச் சொட்ட...உருகி ஓட ஓட உங்களால் மட்டுமே இப்படி எழுத முடியும்.கற்பனை இல்லாமல் உண்மையாய் இருந்தால் உங்கள் காதலி கொடுத்து வைத்தவர்.

Divya said...

ஒவ்வொரு வார்த்தையும் வைரமாய் மின்னுகிறது:)

உணர்வுபூர்வமான கடிதம் அழகு!

\\அதுவே கடைசி அழைப்பென்கிற உன்சார்ந்த முடிவொன்றை கூறி பிரிவின் வலிகளில் உருகிக்கொண்டிருந்த என்னை ஒரே நொடியில் ஆவியாக்கினாய்...\\

கற்பனை வார்த்தைகள் என இதை நினைக்க தோன்றவில்லை...அத்துனை ஆழமாய் வலிகளை பிரதிபலிக்கிறது வார்த்தைகள்.

SanJai said...

//உன்னுடைய கடிதங்களுக்கு பிறகுதான் நான் என்னால் முடிந்தவரை கடிதங்கள் எழுதியிருக்கிறேன் ஆனால் அவற்றையெல்லாம் உனக்கு அனுப்பியிருக்க மாட்டேன்//

தெரியுமே.. அதான் எதிர் வீட்டு ஜன்னலுக்குள் எறிந்து விடுகிறீர்களே.. அந்த கடிதங்கள் அந்த வீட்டு பாட்டி ரூமிற்குள் விழுவது கூட தெரியாமல். :P

Jeba said...

சூப்பர் நண்பா...!

r.selvakkumar said...

ஏங்க இது உண்மையிலேயே கடைசி கடிதமா?

கவிநயா said...

//கற்பனை வார்த்தைகள் என இதை நினைக்க தோன்றவில்லை...அத்துனை ஆழமாய் வலிகளை பிரதிபலிக்கிறது வார்த்தைகள்.//

அதேதான் தமிழன். கற்பனைக்கு உயிர் இத்தனை உருகுமா என்பது கேள்விக்குறிதான். அருமையான எழுத்து.

கிரி said...

//என்ன எழுதுவது என்று தெரியாமல்தான் எழுத ஆரம்பித்தேன்,என்ன எழுதியிருக்கிறேன் என்றும் தெரியவில்லை, இதற்கு மேலும் நிறைய எழுதலாம் போல இருக்கிறது ஆனால் எழுத முடியவில்லை! உன் மீதான என் பிரியங்களை என்னால் முடிந்தவரையும் வெளிப்படுத்தியிருக்கிறேன் - உன்னை அருகிருந்து கவனிக்க முடியவில்லை என்கிற ஆதங்கம் என்னை முடிந்தவரை தவிக்கவிடுகிற மிகுந்த வலிகளோடு.//

தமிழன் உண்மைய சொல்லுங்க..யாருங்க இது..:-)

vinu said...

silla nearangalil mattumea poi sudum aannaal unnmai eppoluthumea sudum unn kadithangalaiyum nee maruthuponna kaathalaiyum pola