Friday, May 18, 2012

துயரம்...



மற்றுமொரு வரலாற்றுத் துயரம் நிரம்பிய நாளின்
மீதமிருக்கிற பொழுதில்
அன்றே கொல்லும் உன் அரசா்களையும்
கைவிட்டுப்போன கடவுளா்களையும் 
சபிப்பதில் ஆறிவிடுவதில்லை மனம்
கைவிடப்பட்டவா்களின் புலம்பலை கேட்பதற்கு 
காலம் ஒரு நாளும் நிற்பதில்லை
குவளை மதுவை கவிழ்த்து விழுங்கியபடி
கேவலமான வார்த்தைகளால் ஆயுதங்களை காறி உமிழ்வேன்
அகாலமொன்றில் இனங்தெரியாதவா்களை அனுப்பும்
உங்கள் ரட்சிப்பின் துவக்குகளை என் குறி மீது வையுங்கள்
அடுத்த வார்த்தையை நான் எழுதாமல் விடுகிறேன்
கொடுத்த கூலிக்கு சுட வரும் உங்கள் முகத்தில் உமிழ்வதற்காக.
_____________________________ .

நுாற்றாண்டுகளின் துயரத்துக்கு...
தேவநம்பிய திஸ்ஸனை குறைசொல்லி
திரும்ப நடக்கப்போவது எதுவுமில்லை.

Friday, May 11, 2012

தொடரும்...


இந்த நாட்களின் சிக்கல்களுக்கும், இன்னும்செய்து முடிக்காமல் இருக்கிற காரியங்களை செய்யத்தொடங்கவும், எப்பொழுதும் போலிருக்கிற குற்றவுணர்வுகளின் தொல்லைகளுக்கும், இந்த தளத்தினதும் எனதும் இயங்குதலை தொடரப்பண்ணவும்; எழுதவே முடியாத ஒரு நாளின் முன்னிரவில் தும்பளை மேற்கு சனசமூக நிலைய புதிய கட்டட திறப்புவிழா மலருக்காக எழுதிய சில பக்கங்களின் தணிக்கை செய்யப்படாத பிரதி இங்கே பகிரப்படுகிறது.




சொல்லத்தெரியாத மகிழ்வின் சொற்கள்.


நீங்கள் எழுதுமிந்த சொற்களின் மீது 
உங்கள் உண்மையை நிரப்புங்கள்- காலம் 
உங்கள் சந்ததிக்கு ஒரு ஊரைப்பரிசளிக்கட்டும்.



இப்ப நான் உங்களுக்கு சொல்லப்போறது ஒரு கதை எண்டு நீங்கள் நினைக்கலாம் நானும் அப்படியே வச்சுக்கொண்டுசொல்லுறன்.


ஒரு சனசமுக நிலையம் என்பது எந்த அளவில் எங்கடை ஊரில் இருந்தது என்றால் சாப்பிட்ட பிறகு பேப்பா் படிக்கிற இடம்என்கிற அளவிலதான் நான் அறிய பயன்பட்டிருக்கு. எனக்குத் தெரிய ஒரு நுால்நிலையத்தைத்தானும் முழுமையாக பன்படுத்துகிற ஆட்கள் மிக்குறைவான சதவிகிதம்தான் எங்கடை ஊரில் இருக்கினம். இது ஏன் நான் பள்ளிக்கூடம் படிச்ச காலத்தில பள்ளிக்கூட நுால்நிலையத்துக்குள்ள போகாத நிறையப்பேரை பாத்திருக்கிறன். அப்பவெல்லாம் நுால்நிலையம் ன்பது பலருக்கும் எப்பவாவது போய் சோதினைக்கு உதவக்கூடிய ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வருவதற்கும் வகுப்புகள் இல்லாத பாடநேரத்தில் ஒளிந்து கொள்ளவுமே நிறையப்பேருக்கு பயன் பட்டிருக்கு.

எண்பதுகளில் பிறந்து மு.தளையசிங்கத்தை தெரியாதென்றால் எப்படி பேராசிரியா் சிவத்தம்பியை வாசிக்காமல் யாழ்ப்பாணத்தின் சமுக அரசியல் வரலாற்றை எப்படி அணுக முடியும்?  காமிக்ஸ் கதைகளை கல்கியை, கடந்து வராமல் இனப்பெருக்கத்தொகுதி மட்டும் படிக்கிறதில என்ன சுவாரசியம் இருந்துவிட முடியும்! புத்தகம் வாசிக்கிறது என்னவோ பெரும்பாவம் என்பதைப்போல  பழக்கட்ட கல்விச்சமுதாயத்தை நாங்கள் கொண்டிருந்தோம், பாடப்புத்தகங்களின் மீது பழக்கபடப்ட இளமைப்பருவம்தான் எம்மிடம் இருக்கிறது,கதைப்புத்தகம் படிப்பதே வயதுக்கு மீறின செயல் என்பதாகத்தான் இருந்தது எங்களுடைய ஊா். பத்து பன்னிரண்டு வயதிலேயே பொன்னியின் செல்வனை கையெலடுக்கிற அளவுக்கு வாசிப்பு இருந்தாலும் நாங்கள்  வாசிக்க முடியாத சூழலிலேயே இருந்தோம்.வாசிப்பின் சாத்தியங்களையும்  கற்பனையின் ஆற்றலையும் இப்பொழுதிலிருக்கிற தலைமுறை எந்தளவுக்கு கொண்டிருக்கிறதென்று சொல்லவே முடியவில்லை.அது உண்மையில் கவலைக்கிடமான நிலமையில்தான் இருக்கிறது.நான் இங்கே சொல்வது இப்பொழுது பதினமத்துக்குள் நுழைந்திருக்கும் தலைமுறையைத்தான் . அவா்களது பெரும்பாலான பொழுதுகளை தனித்தனி பிரத்தியேக வகுப்புகளும் தொலைக்காட்சிகளும் நிறைத்து விடுகின்றன என்பது கண்கூடு






இணையம் பயன்படுத்தும் வசதி இருக்கிற பதின்மத்தின் முடிவுகளில் இருக்கிறவா்களும் பேசுபுக்கு” (Facebook) போன்ற சமூக வலைத்தளங்களில் அதே பொழுது போக்குகளிலும் வீண் அரட்டைகளிலும் பெருமளவு  நேரத்தை செலவிடுகிறார்கள். அத்தோடு இணையம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக  அறிமுகமாவதில்லை உதாரணத்துக்கு  இணையம் எனக்கு  முறையற்ற  பாவனைக்குரிய தளங்களின் தேடுதலுக்கானதாகத்தான் முதலில் அறிமுகமாயிற்று, இணையம் மிக ரகசியமானதாய் அப்பொழுது இருந்தது. இன்று இணையம் மிக வேகமானதும் எல்லோருக்கானதாகவும் இருக்கிறது. முன்பு பாதுகாப்பானதாய் இருந்த இணையம் இப்பொழுது  ஒளிவு மறைவற்றதாகவும் இருக்கிறது தனிமனிதனின் அந்தரங்கம் என்பது பாதுகாக்க முடியாததாய்  யாரோ ஒருவா் எப்பொழுதும் கவனித்துக் கொண்டேயிருப்பதைப்போல ஒரு வெளியை உருவாக்கி விட்டிருக்கிறது. ஆனாலும் அதன் தாக்கத்தை யாரும் பெரிதாக உணா்வதில்லை அவரவருக்கு ஏதொவொன்று நிகழும் வரை. இணைய வாசிப்பையும் அதன் சாத்தியங்களையும் பிறிதொரு சந்தா்ப்பத்தில் பேசிக்கொள்ளலாம் இப்போதைக்கு நான் சொல்ல வந்த கதையை சொல்ல முயற்சிக்கிறேன்.

இந்த தலைமுறையின் வாசிப்பபை பற்றி சொல்லப்போனால் அது இப்போதைக்கு வெறும் பழைய கதைகளை எழுதும் ஒரு குறைகூறும் பத்தியாக இந்த கதையை மாற்றிவிடக்கூடும். குறுகிய காலத்துக்குள் எனக்கு கிடைத்த தகவல்களையும் அவதானங்களையும் வைத்து சொல்லப்போனால் எங்கடை ஊரைப்பொறுத்த வரையில் செய்திகளையும் வெற்றுப்பரபரப்புகளையும் அறிந்துகொள்ளும் ஒரு; முறையாக வளராத பழக்கமாகவே இருக்கிறது. வாசிக்க எவ்வளவோ இருந்தும் நாம் காலம் காலமாக பழக்கப்பட்ட புதினம் பாக்கிற புராயம் பேசுகிற மனோநிலையோடே வாசிப்பபை அணுகியிருக்கிறோ.ம்

என்னுடைய மட்டத்து ஆட்களிடமே வாசிப்பும் அதன் பழக்கமும் ஏதோ வித்தியாசமான குணாதிசயமாகத்தான் இருந்திருக்கிற.து இப்பொழுதாவது இணையம் பலருக்கும் பலதையும் அறிமுகப்படுத்திவிடுகிறது முன்பெல்லாம் என் பதின்மங்களில் மைல் கணக்கில் சைக்கிளில் போய் வாங்கி கொண்டு வந்து படித்திருக்கிறோம். புத்தகங்களுக்காக சண்டையும் போட்டிருக்கிறோம் சில நல்ல சினேகங்களும் கிடைத்திருக்கிறது அதுவரையும் பேசியே இராதவா்களோடும் கூட புத்தகங்களுக்காக பேசி நெருங்கியிருக்கிறோம்.அப்படியொரு உறவுகளில் பதின்மங்களின் ஆரம்பங்களில் இருந்து கொண்டு பெரிய பனுவல்களை அனாயசமாக வாசித்து முடிக்கிற திலோத்தமா  என்னை எப்பொழுதும் ஆச்சரியப்படுத்துபவளாகவே இருந்திருக்கிறாள்.


பேசவென்று ஒருவரையொருவா் சந்தித்துக்கொண்டு புத்தகங்களில் மூழ்கிப்போன பின் மதிய நேரங்கள் இதை எழுதுகிற இந்ததருணத்திலும் சிலிர்ப்பானதொரு குறுநகையை உதடுகளில் கொண்டுவருபவை.

வாசித்துக்கொண்டு போகையில் மாறும் அவள் முகபாவனைகளை கவனிப்பது துாங்கும் மடிக்குழந்தையின் அசைவுகளை கவனிக்கிற பரவசத்தை தருகிறதொரு நிகழ்வு.பின்நேரத்தின் வெப்பம் வியா்வை புள்ளிகளாய் கோடுகளாய் பின் கழுத்திலிருந்து கோலம்போட மெலிதான ஈரத்தில் தெரியுமவள் மேலாடையின் வளைவுகளின் ஈரம் என் பருவத்தின் மீது பெருநதியென பாயும்.

கன்னத்தின் மீது கரைச்சல் கொடுக்கிற முடிகளை அலட்சியமாய“ ஒதுக்கியபடி வயா்க்கதிரையில் ஒரு விதமாக சாய்திருந்துகொண்டு வாசிக்குமவளின் கண்களையும், கூடும் பின் பிரியுமவளின் உதடுகளையும், மேவித்தணியுமவள் மார்புகளையும், அடரப்பின்னி தழையும் அவள் கூந்தலையும் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டிருக்குமவள் பாதங்களையும் காணக்கிடைப்பது பதின்மத்தின் அதி உன்னத நிகழ்வாயிருக்கும்.

வயதில் என்னைவிட குறைந்தவளாயிருந்தாலும் வாசிப்பில் என்னிலும் வேகமானவளாயும் ரசனையில் தெரிவுகளில், பிரச்சனைகளை அணுகும் தன்மையில் முடிவெக்கும் ஆற்றலில் அவள் என்னை கையாள்கிற நிதானத்தை கொண்டிருந்தாள். பல சமயங்களில் அவளது ஆலோசனைகள சரியான தீா்வுகளை தந்திருக்கிறது  வாசிப்பை போலவே படிப்பிலும் நாளாந்த காரியங்களிலும் கூட வேகமும் நிதானமமாக இருந்தவளின் மீது என ஆச்சரியங்கள் அதிகமாகிக்கொண்டேயிருந்தன அவள் எப்பொழுதும் அற்புதங்களை செய்பவளகாவிருந்தாள்.

கவிதைகளில் இருந்து கொக்கோகவிளக்கம் வரைக்கும் எனக்கு அறிமுகம் செய்த அவளிடம்  அவள் அழகெல்லாம் வியா்த்து நிக்க முடியாமல் நிக்க நான் குரலே வெளியில் வராமல் தவித்துக்கொண்டிருந்த ஒரு முன்பகலின் தனிமையில் என் முதல் காதலை அவளிடம் மொழிந்திருந்தேன்.

அவளைத் தழுவிக்கொள்ளவேண்டிய தேவை என்னிடமும் என் ஏந்துதலின் அவசியம் அவளிடமும் இருந்தும் ஒரு மிகப்புதியதான முத்தத்திற்கான சாத்தியங்கள் அதிகம் இருந்தும் நிதானமான ஒற்றை வரியில் அந்த நிகழ்வை தவிர்த்துப்போன அந்த நாளுக்கு பிறகு நாங்கள் புத்தகங்கைளை பரிமாறிக்கொள்ளவேயில்லை.

எப்பொழுதும் போல அவள் அப்பொழுதும் என்னை ஆச்சரியப்படுத்துபவளாகவே இருந்தாள் அவளுடைய அந்த நிதானம் என்னை இன்னும் இன்னும் அவளிடம் இழுத்துக்கொண்டேயிருந்தது.

எனக்கும் அவளுக்கும் இடையில் எவ்வளவோ நெருக்கம் இருந்தும் தொடர முடியாத அந்த மிகப்புரிதலுடைய உறவு அங்கேயே முடிந்து போயிற்று. புதுப்பிக்கப்பட்டாத சமுகமாற்றங்களோடு மிகப்பழைய சமூக மரபுகளில் இருக்கிற எங்களுடைய சமுகத்தின் மீது பழி போட வேண்டிய நிலமைக்கு அவளையும் என்னையும் கொண்டு வந்திருந்தது.

என் இயலாமையோடு காலம் எங்களை அசாதாரணமாக கடந்து போக கொஞ்சம் பெரிதான இடைவெளியின் பிறகு ஊருக்கு வந்திருந்தேன் கதைகளைப்பேசியபடியே கொஞ்சம் மிதமான போதையில் இருந்த பின்னிரவொன்றில் கிடைத்த உண்மைகளின் அடிப்படையில் அவள் இப்பொழுதெல்லாம் எதையமே வாசிப்பதில்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

இப்பொழுதும் அவள் என்னை ஆச்சரியப்படுத்துபவளாகவே இருக்கிறாள்.


இந்த இடத்திலை கதைக்கு ஒரு இடைவெளி வைப்பம் என?!


சமூக வளா்ச்சியில் சனசமுக நிலையங்களின் பங்கு என்பது மிக முக்கியமானதாய் இருக்கிறது. சமூகத்தின் பிரச்சனைகளில் முதலில் பங்கெடுக்கிற அமைப்பு இந்த சனசமுக நிலையங்கள்தான் அப்படியானதொரு சனசமூக நிலையத்திற்கு ஆதாரமான அமைவான கட்டடம் இல்லாதிருப்பது அதன் செயற்பாடுகளில் பெரும் இடா்பாடுகளை உருவாக்குவது அப்படி இல்லாது போன சனசமூக நிலையங்களின் வரலாறு நமது நாட்டில் இருக்கின்றன, வாழ்ந்த வீட்டிலிருந்தும் வெளியேற்றப்பட்ட சனங்கள் இருக்கிற நாடு நம்முடையது சனசமூக நிலையங்களின் அழிவொன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல.

ஆரம்பதில் தும்பளை மேற்கு சனசமுக நிலையம் என்று எனக்கு ஒரு அழைப்பு இந்த Facebook தளத்தில் கிடைத்த பொழுது இது மற்றுமொரு குழுவுக்கான அறிவிப்பை போல என்று நினைத்திந்தேன் இருந்தும் அது என்னுடைய ஊருக்குரியதும் அதன் நிர்வாகத்துக்குரியவா்கள் எனக்கு நெருக்கமான நண்பா்களாயிருந்ததிலும் யோசிக்காமல் இணைத்துக்கொண்டேன். வெகு சாதாரணமதாய் ஆரம்பித்த இந்த சமுக வலைத்தளக்குழுமம் நிதானமாக தனது அடுத்து கட்டத்தை நோக்கி வளா்ந்து கொண்டிருக்கையில் இணையத்தை முறையாக பயன்படுத்துவதில் கிடைக்கிற மற்றுமொரு பெரும் பயனை அடைந்து கொண்டிருந்தோம்.

இணையம் கடல் கடந்து நம் மக்களை எல்லாம் அறிமும் செய்து இணைத்து வைக்க ஒரு சனசமுக நிலையத்தின் அவசியத்தை நம் ஊரின் அனைத்து தரப்பிற்கும் எடுத்துச்செல்வதில் எந்த சிரமமும் இருக்கவில்லை எந்த முன்னெடுப்பிலும் இருக்கிற சிக்கல்களைப்போல இந்த கட்டடத்துக்கான முன்னெடுப்பிலும் தடங்கல்களும் அபிப்பிராய பேதங்களும் இருக்கத்தான் செய்தன என்றாலும் கட்டடம் முழுமையாக வளா்ந்து நிற்கிறதைப்பார்க்கையில் ஒரு சிலிர்ப்பும் வெற்றியின் பரவசமும் உள்ளே பரவுவதை உணர முடிகிறது.

இந்த திட்டத்தின் முழுமையை குறித்த ஒரு கேள்வி மனப்பாங்கு எல்லோரிடமும் இருந்தாலும் இப்பொழுது ஒரு புதிய நம்பிக்கைய எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார்கள் நிர்வாகத்தினரும் நமது மக்களும். இந்த நம்பிக்கைதான் சனசமுக நிலையத்தின் அடுத்தடுத்த திட்ட முன்னெடுப்புகளுக்கான அடிநாதமாக இருக்க முடியும் இந்த குழுமமும் நிர்வாகமும் எல்லோருமாக முன்பைவிட அதிகம் மினக்கெடவும் தொடா்ந்து முன்னெடுக்கவும் வேண்டிய தேவைகள் இனிமேல்தான் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
வெறுமனே வாழ்த்துக்களை மட்டும் சொல்லிக்கொள்ளும் என்னுடைய பங்கெடுப்பின் பற்றாக்குறை என்னை வெட்கப்பட வைக்கும் இந்த தருணத்தில் என் மக்களைக்குறித்து சந்தோசப்படுகிறேன்.



பின்குறிப்பு அல்லது நீங்கள் தேடுமொரு கதை

கிட்டத்தட்ட முப்பதுகளில் இருந்துகொண்டு இப்படியொரு முழுமையற்ற இந்த பத்திகளை  கதையென்று சொல்லிக்கொண்டிருப்பது கூட எனது வாசிப்பின் போதாமைதான்.
எனக்கு சரியாக சொல்லத்தெரியாத இந்த சனசமுக நிலைய திட்டத்தின் நிறைவேறுகை குறித்த மகிழ்வை எனது மொழியில் எழுதி இருக்கிறேன் ஏற்றுக்கொள்க.

வாசித்ததை பேசுவதில் இருக்கிற  உற்சாகம் வாசிப்பைப்போலவே சுவாரஸ்யமானது வாசிப்பின் அதிஉச்சம் அதன்பகிர்வில் இருக்கிறதாக நான் நம்புகிறேன்.  கதை மாந்தா்களைக்குறித்த அவளது உரையாடல்கள் சுவாரஸ்யமானவை, அது அவளுடைய மனிதா்களைப்பற்றிய நுண்ணிய அவதானங்களை காட்டுவதாக இருக்கும்  வாசிக்கிற பழக்கத்திலும் வாசித்ததை  பேசவோ பகிரவோ முடியாத சூழல் என்பது பெரும் அசௌகரியம் அது அனுபவித்தவா்களுக்கு மட்டும் புரிகிற சொற்களின் அவஸ்தைவாசிக்கவும் வாசிக்கிறதை பகிரவும் கிடைக்கிற சூழல் எல்லோருக்கும் வாய்க்கட்டும். இனி வரும் தலைமுறைகளில் சரி திலோத்தமாக்கள் இல்லாது போகட்டும்.