Friday, December 24, 2010

தம்பி நீ சின்னப்பிள்ளை இல்லை, உனக்கு வயது காணும்.

24.12.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பரமேஸ்...

நேற்று காலமை வரைக்கும் நினைவிலிருந்த இந்த நாள், இன்றைக்கு காலமை வரும்போது மறந்து போட்டுது. காலமை call எடுத்து எனக்கு இண்டைக்கு பிறந்தநாள் என்று சொல்லி 'என்னடா செய்யுற இவ்வளவு நேரமும்' என்கிற தோரணையில் சண்டைபோடுகிற அவளிடம் என்ன சொல்ல. அந்த நேரத்தில் எனக்கு சொல்லக்கிடைத்தது அல்லது நிகழ்ந்தது
i love you mama என்பதுதான்...சரி (இந்த சரி என்கிற விதம் கூட ஒரு தனியாய் இருக்கும்) என்று சிரித்துக்கொண்டு பக்கத்தில் நின்ற அக்காவிடம் i love you வாம் சொல்வதை கேட்டு நானும் சிரித்துக்கொண்டேன்.

அம்மா உன் கடவுள்கள் உனக்குத்தராததை உன் மகன் தரும்படிக்கு அவன் காலம் கூட இருக்கட்டும். உன் கடவுள்களிடம் பிரார்த்தனை செய்து கொள் நான் ஊருக்கு வரும் நாள் கெதியில் வந்து சேரட்டும் என்பதாக. I misssss you mamma.



என்னுடைய,

எல்லா இரகசியங்களையும் அறிந்திருக்கிறய்

பலவீனங்களும் தெரிந்திருக்கிறது உனக்கு

அதிகமான என் தவறுகளையும் கண்டுகொள்கிறாய்

பெரும்பாலும் அசௌகரியங்களையே நான் தந்திருக்கக்கூடும்...

இருந்தும் மிகச்சிலவான என் சரிகள்

போதுமானவையாய் இருக்கிறது உனக்கு.




பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா - என்னணை செய்யுற _________ _______ ஒருவிதமான செல்லம் கொஞ்சுகிற எழுத முடியாத அந்த பரவச மொழியை இங்கே இடைவெளிகளாய் விட்டிருக்கிறேன்.(காதலில் அது புச்சுக்குட்டி என்தைப்போல ஆரம்பிக்கலாம்)அதை எனக்கிங்கே எழுதத்தெரியவில்லை. I love you mamma.

___________________________________________________

#
சரிந்த எழுத்துக்களில் இருக்கிற இந்த வரிகளை நான் எழுதக்கூடிய இன்னொரு உறவும் எனக்கிருந்தது.அந்த உறவின் நினைவுகள் இந்தக்கணங்களில் வருவதை தவிர்க்க முடியாதலில் எழுதிய குறிப்பு இது.

#
எல்லா உறவுகளும் வெறுத்துப்போகிறது. அப்படி நிபந்தனைகளற்ற எந்த அன்பும் இருக்க முடியாது என்று பெரிய படம் காட்டிக்கொண்டு திரிந்தாலும் பல உறவுகளை மறக்கவோ இழக்கவோ முடிவதில்லை பெரும்பாலும் குற்றவுணர்வே என்னை தின்று செரிக்கும்படியாக இருக்கிறது. என்னுடைய ஒரிஜினல் இதுவாகத்தான் இருக்கக்கூடும்.

#
தலைப்பு கடைசியாக அம்மா எனக்கெழுதிய கடிதத்தின் வரிகள்.இப்பொழுதும் அடிக்கடி சொல்கிற விசயம்தான்.

Monday, November 22, 2010

இந்த கோதாரிக்கு பெயர் கவிதை...

அவநம்பிக்கைளின் மொத்த இருளும் அறையில் இருக்க
எல்லாக்கடவுள்களும் என்னை பழிவாங்க காத்திருக்கும் இந்த இரவில்...

நானொரு துர்க்கனவிலிருந்து விழித்தெழுந்திருக்கலாம்
ஈரம் தொடையிடுக்கில் வழிய போர்வையைச்சரிசெய்தவாறு
நானொரு கவிதையை குறித்து யோசிக்க தொடங்குகிறேன்...

மிகப்புனிதமான சொற்களைக்கொண்டு
உருக்கமானதொரு கதையை எழுதி முடிக்கையில்
நான் யோனிகளை மறந்தவனாகிறேன்...

மேலும்,

இல்லாத சமாதானம் குறித்தும்
சாமானியர்களின் நில அபகரிப்பை நொந்தும்.
துயரங்களை சுமந்தலைகிற பாடல் பாடுகிறவர்களின்
புதிய ஒன்றுகூடல்கள் இருப்பதையும்
இலக்கிய பரமாத்மாக்களின் புதிய அவதாரங்களையிட்டும்
இணையச்சுவர்களில் எழுதி வளர்கிற மொழியை வியந்தும்
இன்னும் எல்லாவற்றையும்
உங்களைப்போலவே செய்து கொள்ளக்கூடும்.

நானிதை எழுதிக்கொண்டிருக்கிற நேரம்...

நீங்கள்
எல்லா விதிகளையும்
எல்லைகளையும்
அதிகாரத்தையும்
குறிகளையும்
இயலாமைகளையும்
சபிக்கும்படிக்கு

சாத்தான் உங்களோடு இருக்கும் படியாக
இல்லாத கடவுள்களை வேண்டிக்கொள்கிறேன்...

ஆமென்.



__________________________________________________


பிந்திய குறிப்பு :

இப்பொழுது இருக்கிற மனோநிலைக்கும் இந்த வரிகளுக்கும் இடையிலான இடைவெளி இந்த தலைப்புக்கான காரணமாயிருக்கலாம்.

Wednesday, November 17, 2010

இலக்கியம் அல்லது வில்லங்கம்.

எதையும் எழுதமுடியவில்லை
எதையுமே எழுதவில்லை...


இதையும் நானே எழுதவேண்டியிருக்கிறது,

இதைவிட எதையாவது எழுதியிருக்கலாம் என்பதையும்கூட!

Friday, November 12, 2010

எப்பொழுதுமிருக்கிறவளின் பிரார்த்தனைகள்.

நினைவுக்குறிப்புகள்.


மொத்தமாய் நினைவிலிருக்கிற விரத நாட்களின் நினைவுகளில் இருந்து இப்போதைக்கு எழுத நினைத்த இந்த முகப்புத்தகத்தின் தன்னிலைவசனம் கொஞ்சம் நீண்டு போயிருப்பதால் ஒரு குறிப்பாக எழுதப்பட்டிருக்கிறது. விரத நாட்களில் இருக்கிற அந்த சூழலை பார்த்து பலகாலமாயிற்று என்றாலும் அந்தப்பொழுதுகளின் வாசனை இன்னமும் ஈரம்மாறாமல். இருக்கிறது நாசியில்.



கந்த சஷ்டி கவசம்.

முன்னைப்பொழுதினை அதன் வாசனைகள் மாறாமல் கொண்டு வருகிற தன்மை இசைக்கு இருக்கிறதென்பது உண்மதான். சந்தன, குங்கும,சாம்பிராணி வாசனைகளோடு, கூட்டிக்கழுவி மஞ்சள் தெளித்த வீட்டு சாமி அறை, கோவில் மண்டம், கோவில் கிணத்தடி வீட்டிலிருக்கிற விரதநாட்களின் சூழல், இந்த நாட்களில் விரதமிருக்கிற பெண்கள், நண்பர்களோடு வேணுமெண்டு தனகுறது, கோவிலுக்கான உதவிகள், விதம்விதமாய் கோவிலுக்குப்போகிற பெண்கள், விரதச்சாப்பாட்டின் விருப்பும் வெறுப்பும், சூரன்போருக்கான ஆயத்தங்கள், சூரன்போர் நாளின் உற்சாகம், விரத நாட்களிலும் எந்தன் ஆக்கினைகளை பொறுத்துக்கொள்கிற அவள் எனக்காக அவள் நேரஞ்செண்டு சாப்பிட்ட பாறணைச்சோறு இப்படி இன்னும்பலதையும் எத்தனையோ வருடங்களுக்கு பிறகு கேட்டுக்கொண்டிருக்கிற இந்த கந்தசஷ்டி கவசத்துக்கு இப்பொழுதும் நினைவுக்கொண்டுவர முடிகிறது.


_________________________________________________________



நீ இருக்கிற எல்லா விரதங்களுக்குமான
என்னைக்குறித்த உன் வேண்டுதல்களை
நீ என்னிடம் ஒருபோதும் சொல்வதில்லை
ஒரு நேரம்,வெறுங்கோப்பி என்று நீயிருக்கிற
கடும் விரதங்களை நான் கண்டுகொள்வதுமில்லை
ஆறுநாளும் முழுகி,ஏழு நாளும் கோவிலுக்குப்போய்
என நீ படும் பாடுகளை நான்
எள்ளலோடு சீண்டியிருக்கவும் கூடும்
வேண்டுமென்றே உன்னை கோபமூட்டியிருக்கிறேன்
அது நினைவிலுமிருக்கிறது அதுவும்
அந்த கிளிச்சொண்டு மாங்காயும் உப்புந்தூளும்
போதாதற்கு உப்பை அரைச்சு தரச்சொல்லி இருந்தேன்,
நினைவிருக்கிறதா...?
எப்பொழுதும் போலவே நீ ஒற்றைப்புருவத்தால் கோபித்துக்கொண்டு
என் ஆக்கினைகளை பொறுத்துக்கொள்வாய்
உன்னிடமிருந்த எல்லா பிரார்ர்ததனைகளும்
என் நன்மைகள் குறித்தே இருந்தன
இப்பொழுதும் அவை அப்படியே இருக்கிறதெனவும்
முன்பை விட நீ நிறைய விரதமிருக்கிறதாயும்
தர்சினி சொல்லி இருந்தாள்...

என்னிடமும் ஒரே ஒரு வேண்டுதல் இருந்தது
எல்லா பிரார்த்தனைகளையும் கடவுள் கேட்கிறாரா என்ன?!
கடவுள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு
உன்னை மட்டும் என்னிடமிருந்து கேட்டுக்கொண்டார்.

இப்பொழுதும் என்னிடமொரு பிரார்த்தனை இருக்கிறது
அது கடவுளுக்கு அல்ல.

Tuesday, November 2, 2010

போர் தின்ற சனங்களின் கதை - ஒரு பகிர்வு.






"மரணம் தன் சார்பாக எதையாவது விட்டுச்செல்லவே விரும்புகிறது. துயரம்,அழுகை, நினைவுகள் இப்படி எதையாவது தொடர்ச்சியாக நம்மிடையே விட்டுச் சென்றுவிடுகிறது. "சாட்டில்லாமல் சாவுகிடையாது" என்ற பழமொழி மாதிரி ஒன்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லோரும் வாழ்ந்துவிடவே துடிக்கிறோம். இந்த உலகத்தின் அத்தனை சுவைகளையும் நுகர்ந்து முடித்துவிட்ட பின்னரும் ஜப்பான் நாட்டுக்காரன் மாதிரி நூறுகளைத்தாண்டிய கனவுகள் நம்மிடையே எழுந்து கொண்டுதானிருக்கின்றன.

மரணமும் அது குறித்தான பயமும் அறியப்படாத ஒரு ரகசியச்சுவை போல நம்மிடையே கலந்திருக்கிறது.யாரும் தாண்டி விட விரும்பாத சுவரைப்போலவும்
."


ஒரு புத்தகத்தைப்பற்றி எழுதுவதென்பது எனக்கு வராத ஒரு விசயம் அந்த அளவுக்கு எனக்கு எழுதத்தெரியாது அல்லது வாசிக்கத்தெரியாது அதனாலேயே வாசித்த புத்தகங்கள் எதைக்குறித்தும் எழுதத்தலைப்படுவதில்லை. ஒரு புத்தகத்தை அதை எழுதியவரிடமிருந்தே அதுவும் மனதுக்கு மிக நெருக்கமான கதைசொல்லி ஒருவரிடமிருந்து அவரெழுதிய புத்தகமொன்றை பெற்றுக்கொள்கிற பொழுதில் பள்ளிக்கூட மேடையில் பரிசு வாங்குகிற ஒரு சிறுவனாகவே இருந்தேன்.ஆனால் அந்தக் கதைசொல்லியோடு குடிக்கிற அளவுக்கான நெருக்கம் இருந்தது.(சும்மா ஒரு புழுகம்தான்)

இந்த இணையம் தந்த அனுபவங்களில் என்னுடைய ரசனைகள் மாறியிருப்பது மட்டும்தான் உண்மை. மற்றும்படி அரசியல் தத்துவ இலக்கிய நிலைப்பாடுகளில் நான் ஒரு வெறுங்குடம் சும்மா கனக்கத்தெரியும் என்பதாக காட்டிக்கொள்கிற ஒரு சராசரி மாணவன் மட்டுமே.

முதல் பதிப்பிலிருந்தே கிடைக்காமல் நழுவிக்கொண்டிருந்த மரணத்தின் வாசனையை அதன் மூன்றாம்பதிப்பின் புத்தகமொன்றை ஒரு பெருநகர மழைப்பொழுதின் மதிய உணவு நேரத்தில் அகிலனிடமிருந்து வாங்கிக்கொண்ட தருணத்தில் என் தளத்திலிருக்கிற அகிலனின் பக்கத்துக்கான சுட்டியும்,அகிலனோடு உரையாடிய சில பொழுதுகளும், ஏற்கனவே வாசித்திருந்த சில கதைகளும்நினைவுக்கு வந்து போயின. நான் ஒரு தவிப்போடு அந்த புத்தகத்தை வாங்கிக்கொண்டேன். புத்தகத்தை குறித்து பகிரவேண்டும் என சில கதைகளை அகிலனதும் சயந்தனதும் தளங்களில் படித்த பொழுதே நினைத்திருந்தேன். இருந்தாலும் புத்தகமாய் கையில் வைத்து வாசித்த பிறகே பகிர வேண்டும் என்கிற ஒரு ஆசையோடு அந்தக்கதைகளைக் குறித்து எதையும் பகிரவில்லை.

இப்பொழுதும் இந்தப்புத்தகம் குறித்து பகிர எனக்குத்தெரியவில்லை ஆனால் அந்தக்கதைகள் எனக்கு நெருக்கமாயிருந்தன அந்த மொழி எனக்குரியதாய் இருந்தது. ஈழத்தின் நிச்சயமற்ற நாட்களையும் நிரந்தரமற்ற வசிப்பிடங்களையும் கொண்ட ஒரு சூழலில் வாழ்கிற ஒரு பெடியனுக்குள்ளே இவ்வளவு உயிர்ப்பான நினைவுகள் இருக்கிறதென்பது அவனுடைய வாழ்வு குறித்த இயல்பான நெகிழ்தலை காட்டுகிற முக்கியமான விசயமாகத்தான் தெரிகிறது. சினிமாத்தனமான நட்புகளும் உண்மைத்தன்மையே இல்லலாத வெறும் நாட்களையும் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த இளைய சமுதாயத்திற்கு இவ்வளவு நினைவுகளை சுமந்தலைகிற,அவற்றை கோர்வையாக சொல்லத்தெரிகிற ஒரு கதை சொல்லி கிடைப்பது எவ்வளவு பெரிய விசயம். இதே போலவொரு உணர்வை ஷோபாசக்தியும் கொடுத்திருந்தார் அனால் ஆனால் அது கொஞ்சம் மாறு பட்டதாய் இருந்தது அது குறித்து பின்னர் பேசலாம்.


ஒரு கதைக்குள்ளாகவே என் காலம் முழுவதையும் மீட்டுக்கொண்டு வந்து தந்திருந்தார் அகிலன்.அந்தக்கதை "நீ போய்விட்ட பிறகு".(இது காயத்திரி நீ போய்விட்ட பிறகு என்று சயந்தனின் தளத்தில் வாசித்த கதை). புத்தகத்தை வாசிக்கையில் ஏதோ ஒரு கதையில் அல்லது சில கதைகளில் இந்த அனுபவம் பலருக்கும் கிடைத்திருக்கலாம். ஆனால் என்ன இத்தனை உயிர்ப்பான அந்த மொழி ஒரு சாவைக்குறித்துச் சொல்லுகிற கதையில் இருக்கிறதென்பதுதான் வலிக்கிற உண்மை. உண்மை எப்பொழுதும் ஏதோ ஒரு வகையில் நெருடுவதாகவே இருக்கிறது அது விருப்பத்துக்குரியதாயிருந்தாலும்.

"காயத்திரி நான் இழந்து போன எல்லாவற்றையும் ஈடு செய்யக்கூடிய ஒரு தேவதையாய் உன்னைக்கண்டேன்"
யுத்தம் அவனிடமிருந்து பறித்த அனையும் மறக்கச்செய்கிறதாக இந்த காதல் அவனுக்குள் இருக்கிறது.தயக்கங்களோடு பகிரப்படாமல் வைத்த காதல் ஒன்றிற்குரிய தேவதையின் சாவு வெறும் நாலே வரிகளில் மின்னஞ்சலாக கிடைக்கிற துயரம் எவ்வளவு அழுத்தமானதாய் இருக்கக்கூடும் அந்த காயத்ரி குறித்த நினைவுகள் எனக்குள் செய்து போன சலனம் அடங்காமல் இருக்கிறது இவ்வளவு அணுக்கமாக இதை எழுதியிருக்க வேண்டாம் அகிலன். காலம்தான் எவ்வளவு கொடியது அதனிலும் இந்த யுத்தம்தான் எவ்வளவு கொடியது எங்களின் காலத்தை தின்று சாவை மட்டுமே தந்திருக்கிறது. போர் எங்களுக்கு வாழ்வைத்தவிர மற்றெல்லாவற்றினதும் துயரங்களை மட்டுமே விட்டுச்சென்றிருக்கிறது.


அப்பாவை சித்தியை நண்பனை தெரிந்தவரை தேவதையை கோவிலை செல்ல நாய்க்குட்டியை ஆசை மிளகாய்கண்டுகளை என யாரையும் எதையும் விட்டுவைக்காத இந்த மரணம் அவர்களிடத்தில் திணிக்கப்பட்டதாய் இருந்தது சாவு தவிர்க்க முடியாததுதான் என்றாலும் அவற்றை ஏற்றுக்கொள்கிற மனோநிலை அனேகம் இயல்பான மரணங்களுக்கே கிடைப்பதில்லை சுடவும் உயிரைப்பறிக்கவும் மட்டுமே தெரிந்த துப்பாக்கிகளும் குண்டுகளும் தீர்மானிக்கிற அவர்களின் மரணங்களை எப்படி ஏற்றுக்கொள்ளும் இந்த மனது.


கதைமனிதர்களின் வாழ்விடமும் பழக்க வழக்கங்களும் என்னைச் சார்ந்தவையாயிருந்தாலும் அகிலன் சம்பவங்களை சொல்கிற மொழியும் அவற்றை கோர்வையாக்குகிற லாவகமும் இயல்பான பக்கத்திலிருந்து கதைக்கிறது மாதிரியான வெகு இலகுவான நடையும் அந்தக்கதைகளுள் நுழையவும் அந்த மனிதர்களோடு ஒன்றிவிடவும் செய்கிறது. நம்மையும் அந்த மனிதர்களுள் ஒருவனாக உணரக்கூடியதாக அந்த கதைகள் இருந்தன. உண்மைதான் அகிலனோடு இருந்து கதைத்த அந்த சில மணி நேரங்களில் அகிலனுடைய மொழிக்கும் பேச்சுக்கும் பெரிதான வித்தியாசங்களை என்னால் உணர முடியவில்லை. உண்மையில் அந்த சில மணித்தியாலங்கள் எனக்கு போதவே போதாமல் இருந்தது. மிக நெருக்கமான நண்பனொருவனை சில காலத்துக்கு பின்னர் ஒரு பயண இடைவெளியில் சந்தித்தது போலத்தான் உணர்ந்தேன் பேசவும் பகிரவும் நிறைய இருந்தும் மச்சான் சந்திப்பம் என்றுவிட்டு வந்த ஒரு தவறவிட்ட பொழுதாகவே உணர்ந்தேன். இந்த நிர்ப்பந்திக்கப்பட்ட நாட்கள்தான் எத்தனை கசப்பானவை உண்மையில் அது ஒரு பயணத்துக்குரிய நாளாகவே இருந்தது நான் விடுமுறையிலிருந்து திரும்புகிற அந்த கடைசி நாளின் மதிய வேளையில் கொழும்பில் அகிலனை சந்தித்திருந்தேன்.

பலருக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் அந்தக்கதைகள் பேசுகிற விசயங்கள் இலங்கையின் அரசியல் குறித்தும் யுத்தம் குறித்தும் முன்வைக்கிற கேள்விக்குறிகள் எல்லாம் மரணங்களுக்கிடையில் வாழ்ந்த அனேகம்பேரிடம் ஒரு முறையாவது உள் மனதிலிருந்து வந்திருக்க கூடியவை என்பதே உண்மை. அகிலன் என்கிற ஒருவனிடமே இத்தனை கதைகள் இருக்கையில் சொல்லப்பட்ட சொல்லப்படுகின்ற அல்லது சொல்லப்படாமலே இருக்கிற போர் தின்ற சனங்களின் கதைகள் இன்னும் எவ்வளவு இருக்கலாம்.

முப்பதாண்டு கால, உண்மையில் முப்பதாண்டு காலம்தானா? இந்த வரலாறு,இந்த அரசியல், இந்த யுத்தம் தந்த சாவுகள் எல்லாம் அது சம்பந்தப்பட்ட எல்லா மனிதர்களிடமும் பல விதமான கேள்விகளை விட்டுப்போயிருக்கலாம் ஆனால் அவை எல்லாவற்றுக்கும் விடைகள் ஓரிடத்திலேயே இருந்தும் இன்னமும் கிடைக்காமலே இருக்கின்றன.


"இந்த இரவில்
திகிலுடன் தொடங்குமிந்த
துயர்க்கனவின் வேர்கள்..
ஒரு பதுங்குகுழியில் இருந்து முளைத்தது.
சல்லடை போடப்பட்ட
ஒரு சாப்பாட்டுப் பீங்கானில்
இன்னும் மீதமிருக்கிறது..
உலர்ந்து போன பருக்கையொன்று..
இன்றைக்குப் புதிய திசைகள்
புதியகாடுகள்..
புதிய பட்டினங்கள்
ஆனாலும் துயரங்கள் பழையவைதான்..

துப்பாக்கிகள் எல்லாக்கைகளிலும்
ஓரே வேலையைத் தான் செய்கின்றன..
துப்பாக்கிகள் தீர்மானிப்பதில்லை
கரங்கள்தான்..

எங்களுக்குச் செய்யவும் சொல்லவும்
ஏதுமில்லை
எங்களை வைத்து
அதிகாரங்கள் செய்ய
அடிமைசெய்ய
அரசியல் செய்ய
முடிந்தால் பிச்சையெடுக்கவும்
ஆட்களிருக்கிறார்கள்..
ஆனால்
எங்களுக்குத்தான் செய்யவும் சொல்லவும்
ஏதுமில்லை"


- அகிலனின் கனவுகளின் தொலைவு தளத்திலிருந்து.



இங்கே சொல்ல முடியாத இன்னொரு கதை -
புத்தகத்தின் முதல் பதிப்பின்பொழுது தன்னுடைய மகிழ்தலை பகிர்ந்து கொண்ட அகிலனின் தம்பி அன்பழகனுக்கு சமர்ப்பணமாகியிருக்கிறது இந்த மூன்றாம் பதிப்பு.அந்த தம்பியையும் அதே துப்பாக்கிகள்தான காவு கொண்டிருக்கிறது .

Tuesday, October 19, 2010

ஞாபகக் குறிப்புகள் அல்லது கோர்வையாகாத சொற்கள்.



எல்லாவற்றையும் எழுதிவிட முடியுமா என்ன?! இருந்தாலும் எழுதலாமென்று ஒரு முடிவுக்கு வந்தால் எதை,எப்படி எழுத என்கிற சிக்கல் ஒன்று இருக்கிறது, எழுதிச்செல்லும் விலங்கு என்று எங்கோ படித்திருக்கிறேன் எழுதி எழுதிக் கரைநது போன சிலர் போல சொற்களில் வாழும் விலங்கு நான்.

அது சரி எழுதுறது எழுதுறது எண்டுறாய் அப்ப நீ செய்யுற கூத்துகளை எல்லாம் இலக்கியம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாய் போல...


அதில்லை மச்சான், இதுதான் இலக்கியம் என்று உனக்கு யார் சொன்னது,சொல்ல வந்த விசயத்தை சொல்ல விடு.


1700 நாட்கள்...பிறகான எழுபத்தாறு நாட்கள்.

பயணம், பரவசம், தவிப்பு,பதட்டம்,தேவைகள்,சோத்து வைக்காத பணத்தின் பெறுமதி, குற்றவுணர்வு,வெளியேற முடியாத சாபம், காமம், விரும்பி உள்ளே இருக்கிற சாத்தான், தவிர்க்கப்படுகிற புணர்வுகள்,உடல்கள். திருவிழாக்கள், திருவிழாவில் சந்தித்த தேவதை. நிராகரிக்கப்படுகிற தருணம் நிராகரித்தலின் பரிமாணம், காதல், பைத்தியக்காரத்தனங்கள். பிரச்சனைகள், போதை, கொண்டாட்டம், சில விசயங்களைச் செய்துவிடுகிற போதை.வெளிநாடு, காலங்களுக்குப்பிறகான சந்திப்புகள்,நண்பர்கள், குடும்பம், உறவுகள் போலிகள்,உறவும் பிரிவும், ஊரும் நினைவுகளும், புகைப்படங்களும் பொழுதுகளும், புதியவர்கள், பழையவர்கள், முதுமை, ஊர் எய்திய மூப்பு, தலை முறைகளுக்கிடையிலான இடைவெளிகள்.மாற்றங்கள்,நான் எழுதாத கதைகள்,இரகசியக்கதைகள்,பகிரங்க மன்னிப்புகள், துரோகம், நட்பு, விரகம்,பெண்கள், சினேகிதிகள், கல்யாணம்,சாவு, ஒன்றுகூடல், பங்கெடுத்தல்.பயணங்கள்,புத்தகங்கள்,பாடல்கள்.அவள்,நான்,கடவுள்...

எழுத தெரியெல்லை எண்டால் தெரியேல்லை எண்டு சொல்லு இப்படி நீட்டுக்கு புலம்பினால் என்ன அர்த்தம்?!

எழுத்தை திணிக்க முடியாது மச்சி,அதை கோடுபோட்டு செய்யவும் முடியாது, இப்ப நான் இதை எழுதினது எனக்கு எழுதத்தெரியும் எண்டுறதுக்காக இல்லை, நீ படிக்கோணும் எண்டுறதுக்கும் இல்லை இதுல இருக்கிறதை இலக்கியம் எண்டும் சொல்லலாம் இலக்கியம் இல்லையெண்டும் சொல்லலாம்.இலக்கியத்துக்கு யார் மச்சான் இலக்கணம் கொடுத்தது? புத்திஜீவிகள் எண்டு நினைக்கிற எல்லோரும் ஏதோ ஒரு வகையிலை தன்னை முன்னிலைப்படுத்துற ஆக்கள்தானே அப்படியான சூழல்தானே எங்கடை இலக்கியத்தில இருக்குது.இதை எழுத்தெண்டும் சொல்லலாம் எழுத்தில்லை எண்டும் சொல்லலாம் என்னை பொறுத்த வரைக்கும் இது ஒருஞாபகக்குறிப்பு எண்டு வைச்சுக்கொள்ளன். இது ஒரு இலக்கியமுமில்லை இதுக்கு இலக்கியத்தனமா பெயர் வைக்கவும் நான் விரும்பலை. ஆனால் இதை எழுதியே ஆகோணும் எண்டுறது உண்மை சும்மா இருக்கிறவனுக்கு சோலி நிறைய அது உனக்கு தெரியுமோ? எனக்கும் உனக்கும் இடையில நடந்த முடிவில்லாத சில உரையாடல்களைப்போல கதைச்சுத் தெளியுறதுக்கும் தொடர்ந்து கதைக்கிறதுக்கும் எவ்வளவு விசயம் இருக்கு எங்கடை ஊர்ல, எங்களுக்குள்ள?! அது மாதிரி தான்டா பேச ஆள் கிடைக்காத அந்த இடம் எழுத தொடங்குகிற புள்ளியாய் இருக்கலாம் அல்லது பேச நினைக்கிற சொற்களின் அமுக்கம் எழுதுவதற்கான முதல் விசையாய் இருக்கலாம்

சொற்களாலேயே வாழ்கிறோம் என்பது உனக்கு ஏன் தெரியாமல் இருக்கிறது.என்னால பேசாமல் எல்லாம் இருக்க முடியாது, அது என்னுடைய இயல்பு பேசிபேசிக் கரைந்து போன சில இரவுகளை இந்த விடுமுறையிலும் ஒருத்தி தந்திருந்தாள்,உண்மையில் இரவு முழுவதும் பேசுவதற்கு ஏதோ ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது.பெண்களோடு பேசுவதென்பது ரம்மியமான விசயம் அதிலும் கொஞ்சம் அழகான,கொஞ்சம் சிந்திக்கிற, தன்னை புத்திசாலியெண்டு நினைக்கிற(அனேகம் பெண்கள் இப்படித்தான்)கொஞ்சம் புரிதல் இருக்கிற,இயல்பான, குறைந்த பட்ச பொய்களோடு இருக்கிற பெண்களோடு பேசுவது சுவாரஸ்யம்.சரி அதை விடு இதைப்பற்றி எழுதப்போனால் கனக்க கதைக்க வேண்டி வரும் அது உனக்கு பிடிக்கவும் மாட்டுது; ஆனால் மச்சி நெருக்கமான பெண்ணோடு இருந்து கதைக்கிறது அற்புதம் அதை விட அந்தக்கதைகளின் நடுவில் வருகிற இடைவெளிகளும் அந்தக்கணங்களில் நிகழ்கிற அசைவுகளும் முடிந்தால் சில முத்தங்களும் அனுபவித்தே ஆகவேண்டிய விசயங்கள்.சரி அதை விடு.

இன்னுமொன்று இதை எப்படி எழுதுவதென்பது எனக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் இதை எழுதாமல் இருக்கிறது எப்படி என்பது என்னால் முடியாத விசயம் அல்லது அது தெரியவில்லை. இந்த எழுதுதல் என்கிற விசயம் ஒரு விதத்திலை விடுதலை அது உனக்கு புரிகிறதோ இல்லையோ எனக்கு தேவைப்படுகிறது.

ஒரு கட்டத்துக்கு மேல் எழுதாமல் இருக்க முடிவதில்லை விழித்திருக்கிற இரவுகளும் தனித்திருக்கிற பொழுதுகளும் வாழ நினைக்கிற மனமொன்றின் தேடல்களும் எப்பொழுதும் புதிர் நிரம்பியவைகளாகவே இருக்கிறது. பின் மதியம் ஒன்றில் சோம்பல் முறிக்கிற பூனையிடம் இருக்கிற அமைதியை கண்டிருக்கிறாயா.பூனைகள் மிகச்சாதுவானவை போல இருந்தாலும் அவை அனைத்தும் உண்ணிகளாயும் வேட்டையாடி உண்கிற விலங்கினத்தில் இருப்பதும் உனக்கு தெரியாததா? சொற்களும் சாதாரணமாய் இருந்தாலும் இவை பூனைகளைப்போல சினுங்கவும்,காலைச்சுற்றவும், மடியில் உறங்கவும், பிறாண்டவும் கடிக்கவும் வல்லவை என்பது உனக்கு தெரியும்தானே.

சுதந்திரமானதொரு காதலியைப்போல பூனைகள் நம்மை கவர்கின்றன,சொற்கள் அவளுடைய முத்தங்களைப்போல கிறங்கடிக்கின்றன அல்லது மயக்கம் தருகின்றன.கிடைக்காமல் இருக்கிற முத்தங்களின் தாக்கம், எழுதாமல் இருக்கிற சொற்களின் அமுக்கம் இரண்டும் நெடுநாட்கள் பொறுக்க முடியாதவை.எழுதுறது ஒரு கலை மச்சி அப்படி எண்டு புழுக விரும்பேல்லை ஆனால் அதை எல்லாராலையும் செய்ய முடியுறதுமில்லை.

சரி சரி விடு அவள் என்னவாம்?

ஆர்?

அவள்தான்டா - உதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்

அதானேடா உனக்கு ஏற்கனவே சொன்னான்தானே 'கணங்கள் நீடித்தல் என்பது வரம்' எண்டொரு வசனம் எழுதினான் எண்டு அதுதான்.எல்லா நேசங்களும் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்திலதான் இயங்கிக்கொண்டிருக்கு.ஆனால் இது அப்படியில்லை இதை நாங்கள் செய்ய விரும்பல்லை நிகழ விரும்பினோம் பிரிந்தோம்.

அப்ப இனி இது நிகழும் எண்டு சொல்லுறியோ?

நிகழலாம் நிகழாமல் போகலாம்.அது சில வருடங்களாக கூட இருக்கலாம்,சில நிமிடங்களாக இருக்கலாம்,ஏன் ஒரு முத்தத்துக்கான அவகாசமாக கூட இருக்கலாம் நிகழும் போது அனுபவிக்கத்தான் இருக்கு; அது அந்த நேர மனோநிலையைப்பொறுத்தது. இப்பொழுதிலிருக்கிற மனோநிலைக்கு இது இனி நிகழக்கூடாதென்பது என்னுடைய விருப்பம்.

"நீ கதைக்கிறதெல்லாம் தெளிவா கதைக்கிறாய் ஆனா செய்யுறதுகள்தான் அப்பிடி தெரியேல்லை"

உண்மை மச்சி அதுதான் சொன்னனே போதை சில விசயங்களை செய்து விடுகிறது, பைத்தியக்காரத்தனங்கள் அப்பிடியெண்டு இன்னுமொண்டு மச்சி; ஒரு அலட்சியமும் இந்த செய்து வைத்த விதிகளில் வாழப்பிடிக்காத என்னுடைய மனோநிலையும் கூட இதுக்கான காரணங்களா இருக்கலாம்..

உது எனக்கும் இருக்கிற பிரச்னைதான் உழைக்கிறம் சாப்பிடுறம் படுக்கிறம்- மற்றாக்கள் என்ன நினைப்பினமோ எண்டு வாழ்றது எனக்கும் பிடிக்கிறேல்லை.

"உண்மைதான் மச்சி ஊருக்கு வாழுற ஆக்கள்தான் எங்கடை ஆக்களிட்டை அதுவும் யாழ்ப்பாணத்துக்கை இருக்கிற பெரிய வியாதி. ஆர் இங்க அவனுடைய வாழ்க்கையை வாழுறான் சொல்லு?"

"உதை விடு மச்சி தேவையில்லாத விசயங்களை இப்ப கதைச்சு என்ன செய்ய gold leaf எடு அடிச்சிட்டு கிளம்புவம்"

ம்ம்...நானும் நீயும்தான் இதைக்கதைக்கிறம் எவ்வளவு கதைச்சும் என்ன என்னால இந்த குற்றவுணர்களில் இருந்து விடு பட முடியேல்லை! ஆனால் ஒண்டு மச்சி உன்னோடை நிறைய கதைக்க கூடியமாதிரி இருக்கெண்டுறது மட்டும் உண்மை.இந்த vacationல கிடைச்ச சில சுவாரஸ்யமான பொழுதுகளுக்கு நீயும் ஒரு காரணம்.

"கதைக்கலாம் மச்சான் ஆனா அதை ஏற்றுக்கொள்ளுற அளவுக்கு எங்கடை ஊர்ல ஆக்கள் இல்லை"

"அது சரி..அடி வாங்காமா தப்பினா பெரிய விசயம், சரி மச்சி சந்திக்கலாம்.."


குறிப்பு:இந்த விடுறையின் மொத்தப்பொழுதுகளையும் கலந்து பார்த்தா இப்படித்தான் இருக்குமோ என்னவோ பேச நிறைய இருந்தாலும் அவற்றையெல்லாம் பேச முடிவதில்லை அது போல எழுத நிறைய இருந்தாலும் இழுத்துப்பிடித்து எதையும் எழுத முடிவதில்லை.பெரும்பாலும் கொஞ்சம் போதையிலும் பின்னிரவிலும் நடந்த உரையாடல்களின் சாயல்களில் எழுதப்பட்டிருக்கிற இந்த பகிர்வின் முழு உருவம் வெகு நீளமானதாய் இருக்கலாம்.சொற்கள் கோர்வையாகிற நேரங்களில் அவற்றை பகிர முயல்கிறேன்.

படம் : ஊர்ல எடுத்தது. (ஒரு விளம்பரம்)

Thursday, May 27, 2010

விலகிச்செல்லும் நாட்கள்...

ஆயத்தம் செய்திருக்கிற பிரயாணம் இன்னமும் புறப்பட முடியாமலேயே இருக்கிறது.என்னை எப்பொழுதும் பழிவாங்குகிற இந்த காலம் எனக்கு விருப்பமான அல்லது நான் நிகழ வேண்டும் என்று விரும்புகிற எதையும் அதன் வேகம் குறைவதற்கு முன்னர் நிகழத்தருவதில்லை.இது கடவுள்கள் மீதான கேள்விக்கான முதல் படியாய் இருக்கலாம்.


எனக்குதெரிந்த ஒருவரின் எட்டுவயது மகளுக்கு Brain Tumor சிகிச்சைக்காக பாகிஸ்தான் போயிருக்கிறார்கள் இன்ஷா அல்லாஹ் என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும்,அல்லாஹ் விரும்பியே ஆகவேண்டும் அவள் இன்னும் நிறைய நாட்கள் வாழ்வதற்கு.


எந்த மதங்களிலும் எனக்கு நம்பிக்கையில்லை, வாழ்க்கை என்கிற பயணத்தை தவிர. இயற்கையைப்போல வேறெதுவும் இல்லை நீங்கள் கொண்டாடுவதற்கு. இயல்பாயிருத்தல் அல்லது அதிகபட்ச புரிதலோடு இயங்குதல் மகிப்பெரிய பிரார்த்தனையாய் இருக்க முடியும். என்பவை இப்போதைய நாட்களின் பேசு பொருட்களாய் இருக்கிறது என் பக்கதிலிருந்து. உண்மையைச் சொல்லுங்கள் உலகம் போதுமானதாய் இருக்கிறதா, இல்லையா! நமக்கு தேவையானதெல்லாம் கொஞ்சம் புரிதல் மட்டும்தான்.

#
அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும் - அதுவரையும்
ஒரு சிறிய விளம்பர இடைவேளை.

_______________________________________________________________________

தமிழ்-படங்களை இப்போதைக்கு பார்ப்பதில்லை என்பது என் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிற ஒரு விடயம். எடுத்ததுக்கெல்லாம் கோபம் வருகிற இந்த நாட்களில் இப்படியான முடிவுகள் மிகுந்த பாதுகாப்பைத் தருவனவாயிருக்கிறது.கடும் இலக்கியங்களையும், படிமச் சினிமாக்களையும் தவிர்த்துக்கொண்டு எழுந்தமானமாக சில படங்கள் பாத்திருக்கிறேன் அவை பின்வருமாறு.

Hindi:

Rang De basanti
Rock on!
Mangal Pandey
Wake Up sid!
Luck By Chance
Oye Lucky! Lucky Oye!
London Dreams
Golmaal
Golmaal Returns
Karthik Calling Karthik
Striker.
Dil Bole Hadippa!
Honeymoon Travels Pvt Ltd.
Kabhi Alvida Na Kehna.
Paathshala.
Chance Pe Dance.
Singh Is King.


Telugu:
Oye!
Happy Days
Konjam Ishtam Konjam Kashtam.

இன்னும் படங்கள் இருக்கலாம் நினைவில் இருப்பவை இவ்வளவுதான்.
______________________________________________________________________




கொங்கனா சென் ( Konkan Sen Sharma)சமீபத்தில் அடிக்கடி நினைவுக்கு வருகிற தேவதைகளில் ஒருத்தி. அந்தநிறமும், லேசான மயக்கம் தருகிற தோற்றமும், பொறுமையான நடிப்பும் ரசனைக்குரியவையாய் இருக்கிறது. பிடித்துப்போவதற்கென தனியான காரணங்கள் இவையென சொல்லத் தெரியாவிட்டாலும் இந்த மாதிரி சாயல்களில் உள்ள பெண்களை எளிதில் தவிர்க்க முடிவதில்லை.


Farhan Aktar: ஹிந்தி சினிமாவில் பிடித்தமானவர்களுள் ஒருவராக சேர்ந்திருக்கிறார். இயக்குனர் தயாரிப்பாளர் என்பதிலும் நடிகராக இவரை அதிகம் பிடித்திருந்தாலும், இன்னும் செய்யலாம் என்று தோன்றுகிறது எனக்கு.


__________________________________________________________________________

எழுதுதல் என்பது என்ன? இதற்கு உந்துதலாய் இருப்பது என்ன? நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் என எப்படி வகைப்பட்டுப்போகிறார்கள்! என்றைக்கும் பிடித்தமான எழுத்தாக எது இருக்கக்கூடும்? இன்னொருவர் எழுதுவதன் மூலம் அடையாளம் பெறுகையில் அதை ஏன் நமக்கு பிடிக்கிறது அல்லது பிடிக்காமல் போகிறது. நாட்குறிப்புகளை புத்தகமாக போட முடியாதா, நாட்குறிப்புகளை பொதுவில் வைப்பது எத்துணை சாத்தியம். நாட்குறிப்பு எழுதுகிற எல்லோரும் அதனை அதற்காக எழுதுகிறார்கள், எழுதப்பட்ட நாட்குறிப்புகளை வாழும் காலத்திலேயே தம் துணைகளிடம் பகிர்ந்து கொண்டவர்கள் எத்தனை பேர் இருக்கக்கூடும். நாட்குறிப்பின் சொந்தக்காரன் மறைந்த பிறகு அந்த நாட்குறிப்புகள் என்னவாகின்றன.

உண்மை விருப்பத்துக்குரியதாயும் விருப்பமின்மைக்குரியதாகவும் எப்படி இருக்கிறது. அது விரைவில் சலித்துப்போவது ஏன். எப்பொழுதும் எதிர்பார்க்கிற உண்மைத்தன்மை எப்பொழுதும் பிடிக்காமல் போவதன் முரண் எது.

_______________________________________________________________

#
நாடுகடந்த தமிழீழ அரசு என்பது என்ன அதன் சாத்தியக்கூறுகள் எவ்வளவு தூரம் நிகழக்கூடியவை. யாருக்காக இந்த தீர்வுகள். வடக்கு நோக்கி பயணிக்கிற ஒவ்வொரு சிங்கள மனதும் எதை சிந்திக்கிறது, எத்தனை சதவிகிதம் மனங்கள் சமாதானம் என்பதன் அடிப்படையை உணர்ந்திருக்கிறது.

#
"2009 அஞ்சாம் மாதம் பத்தொம்பதாம் திகதி இல்லாத பெரும்பாலான தமிழர்கள் இல்லாத கடவுளை சபித்த நாள் என் கவலை எல்லாம் எதையுமறியாத அந்தக்குழந்தைகளையும் என் சனங்களையும் அவர்களுக்கு எதையும்செய்ய முடியாத என்னையும் பொருட்டே. சீக்கிரமே அவர்களுக்கான வாழ்வு திரும்பட்டும்."


#
கடந்த வாரம் பல நாட்களுக்கு பிறகு மற்றொரு முறையாக அகிலனின் காயத்திரி நீ போய்விட்ட பிறகு கதையை பிரதி செய்து வாசித்தேன் இப்பொழுதும் என் தலையணைக்கு இடதுபக்கத்தில்தான் இருக்கிறது எனக்கு மிக நெருக்கமான உணர்வைத்தருகிற எழுத்தை செய்பவர்களில் அகிலன் முதலிடங்களில் இருக்கிற ஒருவர் அகிலனின் மரணத்தின் வாசனையை புத்தகமாக கையில் வைத்து வாசித்துவிட்டுத்தான் பகிர வேண்டும் என்றிருந்தேன் மேலே சொன்னது போல காலம் இதனையும் செய்யவிடவில்லை. இன்னும் சொல்ல இருக்கிறது அகிலன்.

_______________________________________________________________



வாச்மேன் வடிவேலு படத்தில் வந்த "கன்னத்தில் கன்னம் வைத்து" பாட்டை பலர் மறந்திருக்கக்கூடும் இதையே தமிழில் இன்னொரு பாடலாகவும் கேட்கலாம் அதையே தெலுங்கிலும் பயன்படுத்தியிருப்பார்கள் பின்னர் ஹிந்தியிலும் கூட,ஹிந்தியில் மாதுரி நெருப்பு வைத்திருப்பார்.இந்த பாடல் பிடிக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது இருந்தாலும் ஒரு மாற்றத்துக்கும் சில நினைவுகளுக்குமாக நாலு பாடலும் ஒரே இசைதான் இதில் தெலுங்கு வடிவம் சிரஞ்சீவி ஸ்ரீதேவி நடித்த படம் அந்தப்பாடலைத்தான் ரஜனி சிவாஜியில் பயன்படுத்தியிருப்பார்.


கன்னத்தில் கன்னம் வைத்து
சம்மதம் தந்துட்டேன் நம்பு
abba ne deeyani debba
dhak dhak karne laga


தமிழில் பாடலின் வடிவத்தை காணக்கிடைக்கவில்லை, தேடியதில் கிடைத்தது இதுதான்.




மாதுரி ம்ம்...
dil se dil mil gaya, mujhase kaisi ye haya -
tu hai meri dilaruba, kya lagti hai, va re va






இந்தப்பாடல்கள் குறித்த விரிவான பதிவை கானாபிரபா எழுதுவார்.


#
facebook, Twitter, gtalk என்று எதையெல்லாம் தடைசெய்ய முடியுமோ அதையெல்லாம் தடைசெய்திருக்கிறது கம்பனி அதுதான் இருக்கப்படாமல் இந்த அலம்பலை இங்கே எழுதியிருக்கிறேன். இதுவும் ஒருவித ஆசுவாசத்தையே தருகிறது, எதையாவது எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதிலிருந்தான விடுதலையும் கூட! பல விசயங்களை படிக்க வேண்டும் என்றிருக்கிற நெருக்கடியையும் தவிர்க்கலாம்.எதிர்பாராமல் படிக்கவேண்டி வந்துவிடுகிற பல விசயங்களையும் அவற்றுக்கு எதையாவது பதில் சொல்லவோ அல்லது அதனை தவிர்க்கவோ வேண்டிய அந்தரமான நிலையையும் தவிர்த்துக்கொள்ள முடிகிறது. நான் இல்லாததில் சந்தோசமாய் இருக்கிற முகப்புத்தக தோழிகளுக்கு அன்பு முத்தங்களும் வாழ்த்துக்களும்.உன்னை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் குண்டம்மா.


#
எனக்கான மீடிறண்களில் இருக்கிற உன்னை இன்னும் எத்தனை நாட்கள் தேடுவது?! கொஞ்சம்பொறு நீலி... நான் வனம்புகுகிறேன். இதை இன்னும் எழுதலாம் போலிருக்கிறது. ஆனால் இப்பொழுது வேண்டாம்.

#
எதையாவது சொல்லு சொல்லு என்றபடியே இருக்கிற இந்த நாட்களை எனக்கு பிடிக்கவில்லை தனியே ஒரு பயணம் போகவேண்டும் அல்லது அவளோடு ஒரு மலைப்பயணம் போகவேண்டும் என்கிறதான மனோநிலையில் இருக்கிறது இப்போதைய நாட்கள். குற்றவுணர்வை சுமந்தலைகிற இந்த நிர்ப்பந்த வாழ்வு எனக்கு வெறுப்பைத்தருகிறது.
வெறுமனே விலகிச்செல்கிற இந்த நாட்களை நினைவிடுக்குகளில் சேமிக்கவேனும் நீ விரைவில் வந்து சேர்.

Thursday, May 13, 2010

உண்மைகளை எழுதிப்பார்த்தல்...

எல்லாவற்றையும் எழுதிப்பாத்துவிட வேண்டும் என்றிருக்கிறது என்னுடைய உண்மையான குணம், எழுத முடியாமல் தடுத்து வைத்திருக்கிறது நிர்ப்பந்தங்களோடு வருகிற காலம். உண்மைகளை எழுதிப்பார்ப்பதில் ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது அது எனக்கும் உங்களுக்கும் இடையில் விருப்பமில்லாத மாற்றங்களை ஏற்படுத்துவதாய் இருக்கக்கூடும் என்கிற உண்மை இருப்பினும்.


ஓடிக்கொண்டிருப்பவர்களே,

என் பலவீனங்களோடு எனக்கென்று ஒரு இயல்பு இருக்கிறது
அதை உங்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம்
அல்லது புரிந்து கொள்ள நீங்கள் விரும்பாமல் இருக்கலாம்

என்னிடமான உங்கள் எதிர்பார்ப்புகள்
எப்பொழுதும் தோற்றுப்போவனவாகவே இருக்கக்கூடும்
உங்களோடு ஓடிவர என்னால் இயலவில்லைஎன்பதை
நான் ஒரு போதும் மறுப்பதில்லை

இல்லையெனில்
என்னிடமிருந்து தாரளமாக விலகிக்கொள்ளுங்கள்
இந்த ஒரு காரணம் போதும் உங்களுக்கு
என் புத்தியின் சுவாதீனம் குறித்த கேள்விகளை எழுப்புவதற்கு,


ஒரேயொரு விசயம்
என்னிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்கிற
குறைந்த பட்ச புரிதலையேனும் கொண்டு வாருங்கள்
உங்களின் அதிக பட்ச உண்மையாக அவை இருக்கலாம்

____________________________________________________________

மற்றொரு கோணம்,

என் இயலாமையை மறைக்கும் வழிகள்
இல்லாமல் போகும் தருணங்களில் எல்லாம்
உங்களை போலிகள் என்றுவிடுகிற தப்பித்தல்கள்
என்னிடம் இருக்கிறது
புரிதல்களற்ற வாழ்வுமுறையென
எப்பொழுதும் சொல்லிக்கொண்டாலும்
குற்றம் சுமத்துவதற்கு
காரணங்கள் கிடைத்தாலும்
உறங்கி எழுகிற நேரங்களில்
கலைந்து விடுகிறது வேசம்
முகம்பார்க்கும் கண்ணாடியில்
எத்தனை முறைதான் உமிழ்வது அல்லது
அதை எப்படித்தான் தவிர்ப்பது.

13.04.2010

Thursday, March 25, 2010

உன் நளினங்களை எழுதிப்பழகிய சொற்கள்.

ம்ஹீம்,இல்ல,என்னத்துக்கு, ஆஹாங் அல்லது மிக மெல்லிய மௌனம் என்பதாகத்தான் இருக்கும் நான் முத்தம் கேட்கிற பொழுதுகளில் உன்னுடைய பதில்கள் அல்லது செயல்கள். எப்பொழுதும் முத்தங்களை கேட்பதும் எப்பொழுதும் இந்த வார்த்தைகளை கொண்டு மறுப்பதும் பிடித்தமான சலிக்காததொரு இயல்பாகிவிட்டிருந்தது நமக்கு.

"எத்தனையாவது இது
ஒரு நாளைக்கு எத்தனையப்பா கேப்பியள்" என்கிற
உன் விருப்பம் நிறைந்த சலிப்புகளுக்காவே கேட்கலாம்
நீ தராமல் விடுகிற முத்தங்களை.





__________________________________________________


"நான் குளிக்கப்போகிறேன் நனைய வருகிறீர்களா" என்றொரு குறுந்தகவலை அனுப்பியிருந்தாய் நான் விழித்திருக்காத ஒரு காலைப்பொழுதில் இது போதாதா எனக்கு.


நீ குளித்துக்கொண்டிருக்கிறாய் என்று தெரிந்தே நான் எடுக்கும் அழைப்புகளும் உன் ஈரப்பதில்களும் எத்துணை தவம் செய்திருக்கிறது இந்த தொலைபேசிகள்.

“வேற நேரம் இல்லையே கோல் எடுக்க
குளிக்க விடுங்கோப்பா மனிசரை,ஒழுங்கா குளிக்கக்கூட விடாதுகள்”
என்கிற உன் பாவனைகள் தருகிற தொல்லையை விடவா
நான் எடுக்கும் அழைப்புகள் உன்னை தொல்லை செய்கிறது.

__________________________________________________________


“நீ என்னதான் குளிச்சாலும் கறுப்பிதானடி”

“அந்த கறுப்பிலதானே மயங்கினியள்”

“ஆர் மயங்கினது ஏதோ பாவம் மச்சாள் எண்டு 'லவ்' பண்ணினா ஆக்களைப்பார் மயங்கினதாம்”

“போடா... உங்களுக்கு ஆர் பொம்பிளை தாறது ஏதோ பாக்கியத்தின்ரை(மாமியின் பெயர்) மகள் கிடைச்சிருக்கு,அவற்ரை நினைப்பை பார் ஏதோ வரிசைல நிக்கிறாளுகள் எண்டமாதிரி”

நீ
குளித்து உதறிய
கூந்தலின் துளிகளில்
கரைந்து போனவன் நான்.

___________________________________________________




“ஹையோ இதைக்கல்யாணம் கட்டி என்ன பாடுபடப்போறனோ வெளிக்கிட விடப்பா சாறி கட்ட வேண்டாமே”

காதலர்களாக காதலித்துக்கொண்டிருக்கும் காலைப்பொழுதில் என் அழைப்புக்கான உன் சிணுங்கல் இதுவாயிருந்தது.

இப்படி நீ சொன்ன அந்த காலைப்பொழுதிலிருந்து தினமும் காலையில் அவசரமாய் ஆயத்தமாகிற உன்னை சீண்டுவதே காலைப்பொழுதுகளின் மிகப்பிடித்தமான வேலையாயிருக்கிறது எனக்கு.

அவசரமாய் ஆயத்தமாகிக்கொண்டிருக்கிற
உன்னை சீண்டுவதே எனக்கு வேலையாகிப்போயிற்று
முத்தங்களுக்கும் சிணுங்கல்களுக்கும் இடையில்
நீ அணிகிற சேலைகளுக்கு தெரியுமா, அவை
எழுதப்படாத எத்தனையோ கவிதைகளை
சுமந்து கொண்டிருக்கின்றன என்பது.

___________________________________________________

எப்பொழுதும் உற்சாகமாய் இருக்கிற உன்னுடைய இயல்பு
எனக்கு நேரெதிர் திசைகளில் இருந்தாலும்
என்னை உன்னிடம் அழைத்து வருகிற நிஜமாகவும்
அதுவே இருக்கிறது.

_________________________________________________

வேறெந்த மொழிகளிலும் எழுதி விட முடியாத உன்னை
என் காதல் கொண்டு எழுத ஆரம்பித்திருக்கிறேன்
எப்பொழுதும் கூடவே இரு நானெந்த
எழுத்துப்பிழைகளையும் செய்து விடக்கூடாது.

______________________________________________________

நீ பேசும்பொழுது மட்டுமல்ல
உன்னோடு பேசும் பொழுதுகளிலும்
மொழி அழகாகி விடுகிறது.

______________________________________________________

வாழ்க்கை பயப்படுத்துகிற இந்தக்கணங்களில்
ஏதாவது சொல்லாமல் விலகிப்போகதே
உருகி உருகி ஒரு நாள்
உன் காதல் என்னை கொன்று விடும் என்றாலும்
கடைசியாய் நீ சொல்லிப்போன வார்த்தைகள் மீதமிருக்கக்கூடும்.

_______________________________________________

என்னிடமிருந்த எல்லா கேள்விகளுக்கும்
பதில்கள்
உன்னிடமே இருந்தது
கேட்க முடியாத உன் குரலைப்போலவே
ரகசியமாய் இருக்கிறது
இன்னமும் சொல்லாத என் காதல்.

_________________________________________________

ரகசியமானதொரு அற்புதமாய் இருக்கிறது உன் பிம்பம்
கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் திரும்பத்திரும்ப
என்னை உன்னிடம் அழைத்து வருகிற
உன் பிரியத்தின் ஒவ்வொரு நிகழ்விலும்
ஒளிந்து கொண்டிருக்கிறது
நீ பேச மறுத்த உன் காதல்.

_______________________________________________________



//
அரைப்பாவாடை சட்டையில் அடம்பிடிக்கிற
உன்னைப்போலிருந்தில்லை வேறெந்த தேவதைகளும்.

//
ஒற்றைப்புருவம் உயர்த்துகிற இந்த வித்தையை
பிறந்ததிலிருந்தே கற்றுக்கொண்டாயா
எவ்வளவு அழகாய் வன்முறை செய்கிறது உன் கண்கள்.

____________________________________________________

இந்தச்சொற்களை எழுதி வைக்கும் பொறுமையோ நினைவில் வைத்திருக்கும் தன்மையோ இல்லாத இந்த நாட்களில் இப்படியான வரிகளை எழுதிப்பார்க்கிற மனோநிலைக்கான சந்தர்ப்பத்தை கொடுத்த பராக்கிரமநிதிக்கு.

Sunday, March 7, 2010

ஈஷாவும் சாம்பல் நிறக்கதையும்.

இலங்கையில் பிறந்து இப்பொழுது நான்கு வருடங்களாக சவுதிஅரேபியாவில் இருக்கிற என்பெயர் வல்லவன் ஈழமைந்தன்.என்னை பேஸ்புக்கில் (facebook) இப்படித்தான் உங்களுக்கு தெரியும்.

பெருங்குழப்பங்களும் சிக்கல்களும் நிறைந்த இந்த சமுதாயத்தின் கட்டமைப்புகளில் அழுந்தி உழன்று கொண்டிருக்கிற இந்த முகநூல் பக்கத்தின் பெயரை சுமந்தலைகிற நான் அகம் புறம் என்கிற இருவெளிகளிலும் தளம்பல் நிலையிலிருக்கிற அழுக்குகளை தாங்கியிருக்கிற ஒரு விலங்காக என்னை உணர்ந்து கொள்கிறேன். இனியெப்பொழுதும் என்னை சிபாரிசு செய்யாதீர்கள் தோழர்களே நானுங்கள் நண்பர்கள் பட்டியலில் இருப்பது எனக்கு குற்றவுணர்வைத்தருகிறது.

இந்த குறிப்பை எழுதும்கணங்கள் வரையிலும் என் பிறவிமீது படிந்திருக்கிற அழுக்கை எந்த மீட்பர்களும் இதுவரை நீக்க விரும்பவில்லை. நான் இது வரை போகாத பெண்களிடமிருந்தும் இந்தப்பெயரின் உடலுக்கான முழுமையை கண்டடைய முடியவில்லை. ஆதியிலே மாமிசம் இருந்ததாகவும் அது நிர்வாணமாய அலைந்ததாகவும் தேவதூதர்கள் சொல்லிய புனித நூல்களிலே கண்டிருக்கிறேன். எனக்கான மாமிசத்தை சுமந்தலைகிற அந்து தேவதூதர்கள் இந்த உடலின் முழுமைக்கான மாற்றுடலை எப்பொழுது தரக்கூடும்.

அதிகாரத்தின் மீது பிரியமுள்ள என் சனங்களே நானிந்தப்பெயரை வெறுக்கிறேன் என் உடலினிருந்தும் வெளியேறிவிடத்தீர்மானித்திருக்கிறேன் சகல ஜீவராசிகளையும் ஜலப்பிரளயத்திலிருந்து தப்புவித்த நோவா நைல் நதியின் கரையோரங்களில் பிரசன்னம் இறங்குவதற்கான பிரார்த்தனைகளில் இருப்பதாக கடைசியாய் என்னோடு இரவைப்பகிர்ந்த லெபனானில் இருந்து வந்திருந்த ஈஷா சொல்லியிருந்தாள். உண்மையில் இவளுடைய பெயரை என்னால் சரியாய் சொல்ல முடியாமல் இருக்கவே இவளுக்கு ஈஷா என்று பெயர் வைத்திருந்தேன்.

லெபானான் பெண்கள் எப்படியிருப்பார்க்ள் என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் உங்களை நான்ஸியின் மீது ஆணையாக நானே கொலை செய்து விடுவேன். இவள் சவுதிய அரேபியாவின் அடைக்கப்படட கலாச்சாரத்தின் போலிகளையும் அதன் உடைபடுதல்களையும் மற்றொரு முறையாக பகிர்வதற்கு அமைக்கப்பட்டிருக்கிற (இது சவுதி அரேபியா உலகுக்கு காட்டியிருக்கிற தங்களின் கலாச்சார அளவீடுகளின் தளர்வுத்தன்மை எனவும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்) பல்கலைக்கழகத்தில் (KAUST) படித்துக் கொண்டிருக்கிறவள். எனக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக அறிமுகமாகியிருந்தாள். அறிமுகமான முதல் நாளிலேயே "you are short but your work is sooo... good" என்று கறுப்பாடைகளால் மறைக்படாத பெருந்தனங்கள் குலுங்க சிரித்தபடி "i'm Iesha" என கையை நீட்டினாள் (இதே வசனத்தை அவள் இன்னொரு சந்தர்ப்பத்திலும் சொல்லி இருந்தாள்)பல மாதங்களுக்கு மேலாக எந்தப்பெண்களது கையும் தீண்டப்படாமலிருந்த கையை நடுக்கத்தோடு நீட்டினேன்.



ஈஷா உண்மையில் அநேகம் லெபனியப்பெண்களைப்போல அழகாகவும், கொஞ்சம் யாழ்ப்பாணப் பெண்களைப்போல திமிரோடும் இருந்தாள் (யாழ்ப்பாணப் பெண்கள் அழகில்லையா என்கிற குறுக்கால போற கேள்வி இங்கே தேவையற்றது).இவள் என்னிடம் பேசத்தொடங்கியதற்கு நான் சமைத்துக்கொடுத்திருந்த “Grilled Shrimp Scampi" காரணமாயிருந்தது. இத்தனை வருட இந்த அனுபவங்களில் ஒரு லெபனான் அழகியை கவிழ்க்க முடிந்த சமையல் காரனாயிருப்பதில் பெருமகிழ்வு என்று எழுதுவது என் கட்டமைப்பு பிம்பங்களுக்கு மாறானதாக இருக்கக்கூடும் என்பதால் "any how cooking is not only my job it's an art and i love it" என்று என் வழக்கமானதும் உண்மையானதுமான பதிலை சொல்லி வைத்தேன். ohhh nice.. என்று நன்றி கூறி விடைபெற்றவள் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் நெருக்கமாகியிருந்தாள்.சின்னச்சின்னதாய் ஏதேதோ பேசிக்கொண்டோம்.
பேசிக்கொண்டே ஓடிப்போன இரண்டரை மாதங்களில் காண்கிற தருணங்களில் எந்த இடமாயிருந்தாலும் கட்டியணைத்து கன்னங்களால் முத்தமிடுவளவுக்கு நெருக்கமாகியிருந்தாள்.

எல்லோருக்கும் வயித்தெரிச்சலை கிளப்பிக்கொண்டிருந்த எனக்கும் ஈஷாவுக்குமான நெருக்கத்தை எனக்கு மேற்பார்வை பொறுப்பிலிருக்கிற அலோசியஸ் சபித்துக் கொண்டேயிருந்தார்,இவரும் அதே இலங்கையின் தென்பகுதியில் இருந்து வந்தவர்தான்.

இவளோ யாரையும் கண்டு கொள்ளாமல் என் சங்கடமான நிலையும் மீறி "ஹபீபி" என அழைக்த்தொடங்கியிருந்தாள். அவள் அப்படி அழைப்பதற்கு காரணம் நானேதான் எனக்கு அரேபியப்பெண்கள் ஹபீபி என்றழைக்கிற விதம் நிறையப்பிடிக்குமென்பதாய் அவளிடம் அவளோடு யாருமற்ற வராந்தாவில் நிகழ்ந்த இரண்டரை நிமிட நீள முத்தத்திற்கு பிறகு சொல்லியிருந்தேன்.

கடந்த சனிக்கிழமை வந்தவள் இந்த வார விடுமுறையை தன்னோடு கழிக்கும்படியும் மறக்காமல் ஆயத்தங்களோடு வந்துவிடு என்றும் சொல்லிப்போனாள். என்ன ஆயத்தம் செய்யவேண்டியிருக்கிறது ஒரு இரவு தங்குவற்கு என்கிற என்ன அலட்சியத்தை தலையணைகளை இறுக்கியபடி அவள் கொண்டு வந்தாயா என்ற பின்னரே புரிந்து கொண்டேன். இல்லையென்றால் தன்னுடைய கைப்பையில் இருக்குமென்றவளை உனக்கும் எனக்கும் இடையில் அது தேவைப்படாதென கூறி அவள் உதடுகளை பேசவிடாமல் முத்தமிட ஆரம்பித்தேன்.

ஏவாளின் சாயல்களோடும் எனக்குப்பிடித்தமான சாயாவோடும் என்னை என்னை எழுப்பிய வெள்ளிக்கிழமையின் காலைப்பொழுதில் நான் அது வரை அறிந்திராத உணர்வுகளை கொடுத்தபடியிருந்தாள் சாயாவை பருகி முடிக்கும் வரை எதுவுமே பேசாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தவள் ஹபீபி இனி நமக்கான சந்தர்ப்பங்கள் அமையப்போவதில்லை என சலனமற்ற கண்களோடு கூறினாள்.

இந்தக்கதை இத்தோடு முடியவில்லை ஆனால் இதற்கு மேல் என்னால் சொல்லவும் முடியாது.

வளைவான கண்ணாடிக்குவளைகளில் நீந்துகிற
தங்க மீன்களென இருக்கிறது உன் கண்கள்
நான் எப்பொழுதும் எழுதி விட முடியாத மொழிகளை
அவை என்னோடு பேசுகின்றன
உனக்கான தயார்படுத்தல்களில்
எப்பொழுதும் தோற்றுப்போகிறவனாகவே நானிருக்கிறேன்
ஏழுகடல் மலைகள் தாண்டிய குகையின் பேழைக்குள் அடைப்பட்ட
அற்புதமென என்னை அலைக்கழிக்கிறது உனது பிம்பம்
என் நிறைதலுக்கான தருணம் உன்னோடே நிகழக்கூடுமென்பதாய்
நம்புகிறது பற்றுதலுக்கு காத்திருக்கிற என் வாழ்நாட்கள்.


_______________________________________



“எங்க விட்டனான் சரி...
உன்னத இசையும் மங்கள வெளிச்சமும் நிறைந்ததாய் என்னுடைய தெருக்கள் இருந்தன இருப்பதையே நானும் விரும்பகிறேன். கிடைத்திருக்கிற இந்த நாட்களின் மீது எனக்கு தீராத அவா இருக்கிறது. எப்படி பார்த்தாலும் அவை போதாதவையாகவே இருக்கின்றன. நான் அவற்றை நிதானமாக கடந்து போக ஆசைப்படுகிறேன்.

என் தெருவில் உங்களை வரவேற்கிறதற்கு நான் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறேன் நீங்கள் உங்களளுடைய திணிக்கப்படாத பெயர்களோடு வாருங்கள். உண்மை முகங்களை கொண்டு வாருங்கள் அவை குரூரமானதாய் இருந்தாலும் உங்களை இயல்பாய் அணுக முடியம் என்னால்.

இந்த உடலை எனக்கு பிடிக்கவில்லை எனக்கான வாழ்விலிருந்து நான் விலகுவதைப்போல எப்பொழுதும் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கப்பண்ணுகிற இந்த புறச்சூழலும் அதற்குண்டான நிறங்களும் பெயர்களும் குணங்களும் என்னை இயல்பிலிருந்தும் சம நிலையிலிருந்தும் தள்ளி விழுத்துகின்றன. நீங்கள் உங்களுடைய கதைகளைப்பேசலாம் அதிலொன்றும் தவறில்லை நானும் பேசலாம் என்பதை ஏன் மறுக்கிறீர்கள்.

குற்றங்கள் பழகிப்போன ஒரு விலங்காய் நானிருக்கிறேன் நேர்மையாகச்சொல்வதானால் நானொரு கீழ்ப்படிய மறுத்த தேவதூதன் எதையுமே நம்பாதவன் என்னைக்கூட. பயம் எப்பொழுதும் என் முதுகில் குந்தியிருந்து என்னை தள்ளிக்கொண்டிருக்கிறது. சாத்தான்கள் என் அறையில் விருப்பத்தோடு குடியேறுகின்றன நானில்லாத என்னுடைய அறையில் அவை பெருங்குரலெடுத்து பாடுவதாயும், புகையும் மதுவின் வாடையும் திறக்கப்படாத ஜன்னல்கள் வழியே வருவதாகவும் ஸ்தியாக்கு சொல்லியிருக்கிறான்.அவனிடம் ஒரு பூனையும் நீளமான தாடியும் இருந்தது.

___________________________________________________

உங்களுக்கு பெயர் சொல்ல விரும்பாத- சில இரவுகளையும் நிறையக்கதைகளையும், எண்ணிவிடக்கூடிய பகல் நேர முத்தங்களையும் என்னோடு பகிர்ந்த சிங்கள தோழியொருத்திக்கு -

(அவளுடைய பெயரை நான் தான் சொல்ல விரும்பவில்லை)


என்னுடைய அப்பப்பா எனக்கு ஒரு கதை சொல்லுவார்; தான் ராசாதானியொன்றில் விருந்தாளியாய் இருந்து வந்ததாகவும், அந்த மன்னனிடம் வியாபார உறவுகளை வைத்திருந்ததாயும், கடலுணவுகளையும் புகையிலையும் பெற்றுக்கொள்கிற மன்னன் ரத்தினங்களும் பணமும் தருவதாகவும் சொல்லியிருக்கிறார். பரிசாக இவருக்கு கொடுக்கப்பட்ட வயலொன்று அந்த மன்னனின் ஆட்களை வைத்தே விளைவிக்கப்பட்டு விளைச்சல் வீடு வரைக்கும்வந்து சேர்ந்ததாய் சொல்லியிருக்கிறார்.

பழைய கதைகளை எதற்கு பேசவேண்டும் நமக்கென்று ஒரு கதை இருக்க வேண்டும் என நீ நினைக்கிறாய்தானே நாம் ஒரு புதிய கதையை எழுதுவோம்; இங்கேதான் பழைய கதைகள் நமக்கு தேவைப்படுகிறது. பழைய கதைகளை நாம் அறிந்திராவிட்டால் புதிய கதைகளை நம்மால் எப்படி முழுமையாய் சொல்ல முடியும். ஆகவே நீ உன் சனங்களை பழக்கப்படுத்து சாம்பல் நிறத்தில் எழுதப்பட்ட அந்தக்கதைகளில் வேறெந்த மூலக்கூறுகளும் திணிக்கப்படாமல் இருந்ததென்கிற உண்மையை கூறு. நானும் என் மக்களுக்கு கதை சொல்ல முயல்கிறேன் என்னைப்பொறுத்த வரையில் எனக்கு இது ஒன்றும் வானைப்பிளக்கிற செயலாக தெரியவில்லை. நீயும் அறிந்திருப்பாய் தானே அது என்னுடைய சனத்தின் தனித்துவமான இயல்பு.

___________________________________________

இனிய நோவாவே...

சந்ததிகள் பிறந்து கொண்டேயிருக்கிறது அவைகள் இறந்து கொண்டும் இருக்கின்றன பிரசன்னம் மட்டும் இன்னமும் இறங்காமலே இருக்கிறது. கதைகளும் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.


என் இப்போதைய நாட்களைப்போலவே குழப்பமாயும் திருப்தியில்லாமலும் வெறுமையாயும் வெறுப்பாயும் இருக்கிற எனக்கு எழுத்தெரியாத இந்தக்கதை. இந்த வெறும் நாட்களின் விட முடியாத விசயமென என்னோடு தங்கிவிட்டிருக்கிற இணையத்தில் ஒரு போதையைப்போல பயன்படுத்தத் தொடங்கியிருக்கிற முகநூலின் போலிகளின் மீதான கோபங்களுக்கு.


pictures :
Thought Patternes
deviantart

Friday, February 5, 2010

மஞ்சள்வெயில் மற்றும் சில சொற்கள்...



"நான் என்ன செய்வேன் ஜீவிதா...உங்கள் மெலிந்த உருவமும் வட்டச்சிறு முகமும், வராண்டாவில் நடக்கும்போதான புடவைச்சரசரப்பு, அசைவுகள், புன்னகை, பார்வைகள், வார்த்தைகள் எல்லாம் நெடும்புதர்களாகச் செழித்துக்கிடக்க நான் அதன் ஊடேதான் குழந்தையைப்போலவும் ஞானியைப்போலவும் நடந்தேன். இந்த சந்தோஷ நேரத்திற்கு, எனக்கு நான் மிகப்பெரியவனாகத் தோற்றமளிக்கிற இந்த தருணத்திற்கு, அன்பு சுரந்து ததும்புகிற இந்தப்பிரகாச நிலைக்கு, எல்லையற்று விரிந்து விகாசங்கொள்ளும் மனநிலைக்கு, பாடுகள் அத்தனையலிருந்தும் விலக்கிவைத்த பேருன்னத ஏந்துதலுக்கு என்றைக்குமாக உங்களுக்கு நன்றி."

தனிமையின் அலட்சியமான வாழ்நாட்களோடு அலைகிற கவித்துவமும் கழிவிரக்கமும் கலந்திருக்கிற மெல்லிய மனதுக்காரன் ஒருவனின் காதல் பெண்ணொருத்தியை பற்றிய சிலாகிப்பு யூமாவாசுகியின் மஞ்சள் வெயில்.

காதல்தான், காதல் பெண்மைகள்தான் வாழ்வின் அத்தனை பரவசங்களையும் திறந்து விடுகின்றன என்பதுதான் எத்தனை உண்மை! அதே நேரம் காதலின் மற்றய பக்கங்கள் தருகிற விளைவென்பது மிக இருளடர்ந்திருப்பதை சொல்லாமல் விடவும் முடியாது. அதீதமான வெளிப்பாடுகள்,வேற்று மனோநிலைகள் அனைத்தும் இயங்குகிற-இயங்காமல் போகிற போன்றதான தருணங்கள் என காதல் பெண்மை தருகிற அனுபவங்கள் அனுபவிக்கப்பட வேண்டியவை.பிறழ்வு நிலைக்கு இட்டுப்போகிற காதலின் சுகத்தையும், தவிப்பையும்,வலியையும் பேசுகிற தோற்றுப்போனதொரு காதலை; கவிஞன் ஒருவனது மொழியில் எழுதிய ஞாபகங்களின் தொகுப்பென பெருங்கடிதமாய் விரிகிற மஞ்சள்வெயிலை பின்னிரவு தாண்டி ஒரே மூச்சில் படித்து முடிக்கையில் குடிக்கவேண்டும் போலிருந்தது.


கதையில் வருகிற அத்தனை மனிதர்களும் தூக்கம் வராத அந்த மிகுதி இரவில் திரும்பத்திரும்ப வந்து போனார்கள். படித்து முடித்த சில நாட்களுக்கு பிறகொரு காலையிலும் ஜீவிதாவும் நாய்க்காரச்சீமாட்டியும் கனவில் வந்து போனார்கள் விழிக்கையில் கதிரவனின் படுக்கைக்கு மேலே தொங்கிய ஒற்றைச்செருப்பு கண்களுக்கெதிரே தொங்குவதாய் உணர்ந்தேன்.

இப்போதிலிருக்கிற மனோநிலைக்கும் காதல் குறித்தான கருத்துகளுக்கும் கொஞ்சம் அதிகப்படியானதாய் எனக்கு தோன்றினாலும்; அதே பைத்தியக்காரத்தனங்களோடு அலைந்த நாட்களை நினைவு படுத்துவதும், உணர்வைக்கடத்துகிற மொழி மனதைப்பிசைவதும் புத்தகத்தை படிக்க போதுமானவையாயிருக்கிறது. யூமாவின் மொழி பிடித்துப்போகவும இதுவே. கல்யாணமானவர்கள், ஆகாதவர்கள், இன்னும் காதலை ஒரு முறையேனும் உணராதவர்கள் என்று எல்லோரும் படிக்கலாம் பழைய பரவசங்களுக்கும் உள்ளே இருக்கிற மனதின் தடுமாற்றங்களுக்கும் நிச்சயமாய் ஒரு வரியேனும் இருக்கிறது புத்தகத்தில். எத்தனை காலம் கடந்து போனாலும் ஜீவிதாக்களும் கதிரவன்களும் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.

பகிராலம் என்று புத்தகத்தின் படத்துக்கான தேடுதலில் கிடைத்த மஞ்சள் வெயில் பற்றிய தமிழ்நதியின் பதிவு.



சில நாட்களுக்கு முன்பான இரவு நேரப்பணிநாளொன்றில் எழுதிப்பார்த்த சொற்கள்.

ஒரு காதல் குறித்து-

காலம்,
காற்றிடம் கிடைத்த குறிஞ்சா பஞ்சென
என்னை கைப்பறியிருந்தது,
பனி விழுகிற நாளொன்றின்
பின் மதியத்தில் சிறகுகளோடு அறையில் நுழைந்த நீ
நான் முன்னெப்பொழுதும் அறிந்திராத ஒரு உலகத்துக்கு
என்னை அழைத்துப்போனாய் - அஃது
உன்னைப்போலவே மிக அணுக்கமானதொரு
அற்புதமானதாய் இருந்தது,
வெளிச்சமற்ற சில பகல்களுக்குப்பிறகு
நட்சத்திரங்களற்ற ஒரு இரவில்
காத்திருப்புகள் பற்றிய ஒரு கதையை சொல்லிக்கொண்டிருந்தாய் நீ
அந்த இரவிலிருந்து ,
நான் பெயரறிந்திராத மலை ஒன்றில் வசிக்கப்போவதாய்
பதினேழு முறைகள் சொல்லியிருந்தாய்,
நீயொரு பரம்பரைகளின் பெயர் சுமந்தலைகிற நதியென ஓடிக்கொண்டிருப்பதாய்
பருவ மாற்றங்களின் பிறகு பறக்கிற சிட்டுக்குருவிகள் சொல்லிப்போயின
நீ விட்டுப்போன உன் சிறகுகள் மட்டும்
எப்போதைக்குமான மிகுதிகளாய் என்னிடமிருக்கிறது.

பாடல்கள் குறித்து

எப்பொழுதாவது கிட்டுகிற மனோநிலையில் கேட்கிற
இணையப்பண்பலை ஒலிபரப்புகள்
காத்திருப்புகள் பற்றிய கேள்விகளை மட்டுமே மீதம் வைக்கிறது,
காலம் கேட்கிற சில கேள்விகளுக்கு
காலம் மட்டுமே பதில்களையும் சுமந்தலைகிறது,
எப்பொழுது வரைக்கும் இருக்கலாம்
அந்நிய நிலங்கள் தருகிற நாட்களும்
அவை தர மறந்து போகிற வாழ்வும்
முன்பே சொல்லியிருந்தாலும்,
பாடல்கள் காலத்தை மறக்கச்செய்வனவையேதான்!


புத்தகத்தை படிக்கக்கொடுத்த கடுமிலக்கியவாதி தோழர் ரௌத்ரனுக்கு...

Friday, January 15, 2010

மிதக்கும் தன்மைகளோடு கடந்து போன இரவில் அறையில் நிரம்பிய நினைவுகள்.

முன்குறிப்பு : பெரு நினைவுகள் எழுதுகிற சிறு குறிப்புகள் - 1.





மூன்றாம் சாமத்து பொழுதுகளில் தன்
முழுபலத்தையும் பிரயோகித்திருந்தது
கொண்டாடத்தொடங்கியிருந்த காதல்,

அடர்த்தியான வேப்பமிலைகளினூடு
நிலவொளி விழுகிற குருமணலின் மீது
மொழிதலில் சமன் செய்ய முடியாத அழகுகளில்
பனி விழுகிற நதியென விழி முடியிருந்தவள்

எழுதப்பழகுகிற குழந்தையின்
கிறுக்கல்களை சிலாகிக்கிறதைப்போலவென்
அத்து மீறல்களை அனுமதித்துக்கிடந்தாள்

ஆடைகள் அவிழப்போகிற தருணங்களில்
மிக மெதுவாய் சொன்ன "வேண்டாமப்பா"வில்
விளங்கப்படுத்தினாள்.

விலகி உள்ளங்கைகள்
வியர்க்க அமர்ந்திருந்த என்னை
மடிசாய்த்து முடிகோதினாள்
மிகத்தவிப்பான மௌனக்கணங்களின்
முடிவில் என் நெற்றியில் விழுந்த
சுடுவிழி நீரில் நிரம்பியிருந்தது
முழுவதுமான அவள் காதல்.

_________________________________________________





ஆயுள் முழுவதும் தொடர்கிற பெரு நினைவுகளை தந்து போனவளின் பரவசங்களை அசைபோட்டுக்கொண்டிருக்கிறது மனது.இனியெப்பொழுதும் நிகழ முடியாத அற்புதங்களை செய்து போன உன் நினைவுகள் என்னை திரும்ப முடியாத திசைகளில் தொலைத்து விட்டு சந்தோசமாய் திரும்பிக்கொண்டிருக்கிறது. அழைத்துப்போக யாருமில்லாத வெளிகளில் உனது நிழலை எதிர்பார்த்துகாத்திருக்கிறது பிரியங்களைய தாங்கியிருக்கிற பலவீனப்படவனின் உயிர். வந்தென்னை அழைத்துப்போக நீ வரவேண்டாம் கல்நுழைகிற வேர்களின் லாவகத்திலிருக்கிற என் பிரியங்கள் கொடுங்கனவுகளாய் இருக்கக்கூடும். துயர் மிகு பொழுதுகளை தவிர்த்து விடு நானிப்படியே பிழைத்துப்போகிறேன் இனியொரு பிரிவையென்னால் பொறுக்க முடியாது.முன்பே எழுதப்பட்டதுதான் என்றாலும் இனியெப்பொழுதும் சந்தித்துவிடாமலிருப்போம்.


மிதக்கிற தன்மைகளோடு கடந்து போன போதைநிரம்பிய இரவிலும் அறை முழுவதும் நிரம்பியிருந்து உன் நினைவுகள். எவ்வளவுதான் எழுதினாலும் தீர்ந்து போவதில்லை காதல்! இங்கே எழுதவராத சொற்களால் நிரப்ப முடியாத உன்னைப்போலவே.



தேவதைக்கான குறிப்பு :
இந்த முறையும்
எச்சில்பட முத்தமிட்டு வாங்கிக்கொண்ட
ஏதோ ஒரு குழந்தையிடம் கொடுத்திருக்கிறேன்
உன் பிறந்த நாளுக்கான பூச்செண்டை.

15.01.2010



எந்த மொழிதலிலும் சமன் செய்துவிட முடியாத என் கறுப்பியின் காதலுக்கு.

Sunday, January 10, 2010

புதிய நாட்களின் ஆரம்பம்.

புதிய நாட்களின் ஆரம்பம் - தாமதமான சில குறிப்புகள்.


சென்றவருடத்தைப்போலல்லாது இலேசான போதையும் மிகுந்த கொண்டாட்டமானதுமான ஒரு மனோ நிலையோடே தொடங்கியிருக்கிறது இந்த வருடம்.இருந்தாலும் இந்த வருடம் பெரிய மாற்றங்களைக்கொண்டு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் இருந்ததோ என்னவோ ஒரு மாதிரி அழுத்தமாகத்தான் ஆரம்பித்திருக்கிறது.கொண்டாட்டத்துக்குரிய மனோ நிலையை கொண்டு வருவதற்கு நிறையவே முயன்றிருக்கிறேன் என்பதாய் ஒரு உணர்வு எனக்கு உறுத்திக்கொண்டிருக்கிறது.அழுத்தம் நிறைந்த ஆரம்பமாக தோன்றுவதற்கான காரணம் அதுவாக இருக்கக்கூடும்.முத்தங்களோடு ஆரம்பித்த பழைய சில வருடங்கள் பற்றிய நினைவுகளும் கூடச் சேர்ந்து கொள்கின்றது.


இரண்டாயிரத்து ஒன்பது நினைத்ததை விட வேகமாக கடந்திருக்கிறது நினைக்காத பல விசயங்களையும் நிகழ்த்திக்கொண்டு. போர் துரத்துகிற மனிதர்கள் பற்றியதொரு துயரக்கதையை இந்த வருடம் முழுவதும் பேசிக்கொண்டே இருந்தது எனக்குத்தெரிந்த உலகம். வாழ்க்கை இன்னமும் மீதமிருப்பதாய் நம்பியிருக்கிறார்கள் மிகச்சொற்பமான என் மனிதர்கள்.

இதுவரையும் தொடர்பிலிருந்த தேவதை ஒருத்தியின் தொடர்பு கடந்த வருடத்தின் கடைசிகளில் இல்லாமல் போயிருக்கிறது.இரண்டாயிரத்து ஒன்பதின் தனிப்பட்டவலிகளில் ஆகக்க கடினமானது இதுவாயிருக்கலாம்.

புலம்புதல் என்பதிலும் வாசித்துக்கரைதல் என்பதை அதிகமாக உணர்ந்திருக்கிறேன். இப்பொழுதே வாசிக்க வேண்டும் என்கிற புத்தகங்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் கூடிக்கொண்டேயிருக்கிறது. கடந்த வருட இணைய வாழ்வின் இன்னொரு முக்கியமான விசயம் பலரது நெடுநாள் நச்சரிப்புக்கு பிறகு முகபுத்தக(facebook) ஜோதியில் ஐக்கியமாகியது.பெரும்பங்கான பேர்கள் பொழுது போக்காய் இயங்கினாலும். facebook செய்திருக்கிற முக்கியமன விசயங்களில் ஒன்று மீண்டும் புதுப்பிக்கப்டுகிற தொடர்புகளும் தேடித்தந்திருக்கிற பழைய உறவுகளும்.இது பற்றி மற்றொரு பகிர்வில் சொல்கிறேன்.

எவ்வளவுதான் குரூரங்களும் நம்பிக்கையின்மைகளும் சுற்றிக்கிடந்தாலும் வாழ்வின் நகர்தலுக்கான நம்பிக்கைகள் எங்கேயிருந்தாவது கிடைத்துக்கோண்டேயிருக்கிறது.அழுத்தம் மிகுந்த பல இரவுகளை கொடுத்திருக்கிறது 2009! நானாகவே வெளியேறி வந்திருக்கிறேன் என்பதாகத்தான் இப்பொழுது தோன்றுகிறது. இன்னமும் கொஞ்சம் தெளிவு வந்திருப்பதாய் நம்புகிறேன். அதற்கு என் தனிமையை தோள்செய்த புத்தகங்ளுக்கும்,பார்க்கக்கிடைத்த திரைப்படங்களுக்கும் என்னை மீட்டெடுத்த சொற்களை எழுதியவர்களுக்கும் நன்றி.

அருகிலிருந்தவர்களோடு பகிர்ந்து கொண்டதை தவிர்த்து ஓரிருவரை தவிர யாருக்கும் அழைப்பை ஏற்படுத்தாத இந்த வருடத்தின் தொடக்கம் எனக்கு எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறது. நான் எதிர்பார்க்கிற எதிர்பாராவின்மைகள் அப்பொழுதே தொடங்கியிருக்கலாம்.

எப்போதும் போல எழுதாத சொற்களின் திணறல் குறைவதாக தெரியவில்லை! உள்ளிருக்கும் சாத்தான் விழிக்கும்வரை நான் புலம்பலாம்.முன்னிலும் தீவிரமாக பணம் என்னை துரத்த ஆரம்பித்திருக்கிறது.வேறெதுவும் சொல்லத் தோன்றாவிட்டாலும், நம்பிக்கையோடிருக்கிறார்கள் சில மனிதர்கள்; மீதமிருக்கிற கண்ணிவெடிகளை உழுது விதைக்கிற நிலமும் விளையத்தான் போகிறது.