Friday, January 15, 2010

மிதக்கும் தன்மைகளோடு கடந்து போன இரவில் அறையில் நிரம்பிய நினைவுகள்.

முன்குறிப்பு : பெரு நினைவுகள் எழுதுகிற சிறு குறிப்புகள் - 1.

மூன்றாம் சாமத்து பொழுதுகளில் தன்
முழுபலத்தையும் பிரயோகித்திருந்தது
கொண்டாடத்தொடங்கியிருந்த காதல்,

அடர்த்தியான வேப்பமிலைகளினூடு
நிலவொளி விழுகிற குருமணலின் மீது
மொழிதலில் சமன் செய்ய முடியாத அழகுகளில்
பனி விழுகிற நதியென விழி முடியிருந்தவள்

எழுதப்பழகுகிற குழந்தையின்
கிறுக்கல்களை சிலாகிக்கிறதைப்போலவென்
அத்து மீறல்களை அனுமதித்துக்கிடந்தாள்

ஆடைகள் அவிழப்போகிற தருணங்களில்
மிக மெதுவாய் சொன்ன "வேண்டாமப்பா"வில்
விளங்கப்படுத்தினாள்.

விலகி உள்ளங்கைகள்
வியர்க்க அமர்ந்திருந்த என்னை
மடிசாய்த்து முடிகோதினாள்
மிகத்தவிப்பான மௌனக்கணங்களின்
முடிவில் என் நெற்றியில் விழுந்த
சுடுவிழி நீரில் நிரம்பியிருந்தது
முழுவதுமான அவள் காதல்.

_________________________________________________

ஆயுள் முழுவதும் தொடர்கிற பெரு நினைவுகளை தந்து போனவளின் பரவசங்களை அசைபோட்டுக்கொண்டிருக்கிறது மனது.இனியெப்பொழுதும் நிகழ முடியாத அற்புதங்களை செய்து போன உன் நினைவுகள் என்னை திரும்ப முடியாத திசைகளில் தொலைத்து விட்டு சந்தோசமாய் திரும்பிக்கொண்டிருக்கிறது. அழைத்துப்போக யாருமில்லாத வெளிகளில் உனது நிழலை எதிர்பார்த்துகாத்திருக்கிறது பிரியங்களைய தாங்கியிருக்கிற பலவீனப்படவனின் உயிர். வந்தென்னை அழைத்துப்போக நீ வரவேண்டாம் கல்நுழைகிற வேர்களின் லாவகத்திலிருக்கிற என் பிரியங்கள் கொடுங்கனவுகளாய் இருக்கக்கூடும். துயர் மிகு பொழுதுகளை தவிர்த்து விடு நானிப்படியே பிழைத்துப்போகிறேன் இனியொரு பிரிவையென்னால் பொறுக்க முடியாது.முன்பே எழுதப்பட்டதுதான் என்றாலும் இனியெப்பொழுதும் சந்தித்துவிடாமலிருப்போம்.


மிதக்கிற தன்மைகளோடு கடந்து போன போதைநிரம்பிய இரவிலும் அறை முழுவதும் நிரம்பியிருந்து உன் நினைவுகள். எவ்வளவுதான் எழுதினாலும் தீர்ந்து போவதில்லை காதல்! இங்கே எழுதவராத சொற்களால் நிரப்ப முடியாத உன்னைப்போலவே.தேவதைக்கான குறிப்பு :
இந்த முறையும்
எச்சில்பட முத்தமிட்டு வாங்கிக்கொண்ட
ஏதோ ஒரு குழந்தையிடம் கொடுத்திருக்கிறேன்
உன் பிறந்த நாளுக்கான பூச்செண்டை.

15.01.2010எந்த மொழிதலிலும் சமன் செய்துவிட முடியாத என் கறுப்பியின் காதலுக்கு.

9 comments:

gulf-tamilan said...

புனைவா? நிஜமா? நல்லா இருக்கு!!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

சோகங்களைக் கொண்டாடுதல் //

தலைப்பில் ஆரம்பித்து லேபிள் வரை லயிக்க வைத்த எழுத்து.

இந்த முறையும்
எச்சில்பட முத்தமிட்டு வாங்கிக்கொண்ட
ஏதோ ஒரு குழந்தையிடம் கொடுத்திருக்கிறேன்
உன் பிறந்த நாளுக்கான பூச்செண்டை.//


மிக நன்றாகக்கொண்டாடியிருக்கிறீர்கள் சோகத்தை

தமிழ் பிரியன் said...

கறுப்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தாராபுரத்தான் said...

சுடுகிறது தாயே.

ஆரூரன் விசுவநாதன் said...

கவிதை வரிகளை விட்டு வெளியேற மனமில்லை.....அழகு

தமிழன்-கறுப்பி... said...

நன்றி gulf-தமிழன்

நன்றி அமித்து அம்மா.

தல வாழ்த்துக்கு நன்றி

நன்றி தாராபுரத்தான்

நன்றி ஆரூரன்.

பனையூரான் said...

இந்தப் படம் .........................

ரௌத்ரன் said...

//இந்த முறையும்
எச்சில்பட முத்தமிட்டு வாங்கிக்கொண்ட
ஏதோ ஒரு குழந்தையிடம் கொடுத்திருக்கிறேன்
உன் பிறந்த நாளுக்கான பூச்செண்டை.//

யோவ்..நீர் நெசமாலுமே கவுஞ்சர் தான்யா :))

ரொம்ப நல்லாயிருக்கு தமிழன்.

தமிழன்-கறுப்பி... said...

@ பனையூரான்
பேசித்தீர்க்கலாம் ;)

படத்துக்கான காப்புரிமை எனக்குரியது.


@ரௌத்ரன்.

நீரே ஒப்புக்கொண்டா அது போதுமய்யா

:)