Saturday, November 22, 2008

ஒரு மைதானமும் ஒரு தேவதையும் நானும்...

வியர்வையில் நனைகிறதுன் மேலாடை
மைதானமெங்கும் வழிகிறது அழகு!

எந்தவித தயக்கங்களும் இல்லாமல் யாருமில்லாத சுதந்திரத்தில் வியர்வை நனைக்க, அழகு தெறிக்க மைதானத்தில் பயிற்சி செய்கிற பெண்களை பார்த்திருக்கிறீர்களா அது ஒரு தனி அனுபவம்..அதுவும் அவள் மனதுக்கு நெருக்கமானவள் ஒருத்தியாயிருக்கையில் அற்புதமான அனுபவமாகி விடுகிறது அது!

காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிற கடைமையை அறிமுகம் செய்தவள் அவள்! எனக்கும் அதிகாலைத்தூக்கத்துமான நெருக்கத்தை பறித்துவிட்டிருந்தாள் காலையில் அம்மாவோ அக்காவோ தண்ணி தெளிக்கும் வரை படுக்கையிலிருந்து எழுந்திருக்காத என்னை இருள் விலகாத அதிகாலையில் பனி படர்ந்த மைதானதின் புல் வெளியில் நடக்க விட்டிருந்தாள்.

யாரோடும் அதிகம் பேசாத அவள் என்னை மட்டும் சேர்த்துக்கொண்டதில் சந்தோசப்பட்டுக்கொண்டிருந்த மனதை; மிக மென்மையான இயல்பு (அவள் எப்படி அவ்வளவு வேகமும் திடமும் வைத்திருந்தாள் என்பது நான் இன்னமும் அதிசயிக்கிற விசயம்) வெகு நிதானமான பெண்மை, முடிவெடுக்கிற ஆற்றல், நிறைவான தோற்றம் என மொத்தமாய் மிக அதிகமாய் வன் முறைசெய்து கொண்டிருந்தாள் அவள்...


குறுந்தூர,நெடுந்தூர ஓட்டங்கள்,நெட் போல்,கிரிக்கெட்,எல்லே,வொலிபோல் என அவள் கலக்காத விளையாட்டே இல்லை எனலாம்.மாவட்டம், மாகாணம் என பல மட்டப் போட்டிகளில் அவளை சேர்த்துக்கொண்ட பெருமையை பெற்றிருந்தது அவள் பள்ளிக்கூடமும் எங்கள் ஊர் கழகமும்(Sports Club).

வெள்ளை நிற ‘ரீசேட்டும்’ கறுப்பு அல்லது அடர் நீல நிற ‘ரக்சூட்டும்’ வெள்ளை நிற சப்பாத்துகளும் என அவள் பயிற்சி செய்வது அழகின் அதிகாரங்கள் நிரம்பிய பட்டத்து இளவரசி ஒருத்தியின் பயிற்சியை நினைவு படுத்திப்போகிற நிகழ்வு!
அழகு தெறிக்க,வளைவுகள் அதிர,பெண்மையின் இயல்பான வாசனைகளோடு,வியர்வையில் நனைகிற அழகுகளோடு, மிக முக்கியமானதாய் என்னை தவிர்க்கவில்லை என்கிற மிக நெருக்கமானதான சினேகங்களோடும் என் அதிகாலைகளை அற்புதமாக்கிக்கொண்டிருந்தாள்...

நான் மைதானத்துக்கு அவளுக்காகத்தான் வருகிறேன் என்பது தெரிந்திருந்தாலும் என்னை தனக்கு நெருக்கமானவனாய் உணர்கிறதாகிய நம்பிக்கையை எனக்கு அவள் செயல்கள் மற்றும் சினேகமான சிரிப்புகள் மூலம் உணதர்த்திக்கொண்டாள்....இன்னொரு வகையில் நான் வருவது தனக்கு திருப்தியாயிருந்ததாயும் அவளால் என்னை கவனிக்காமல் இருக்க முடியாதிருந்ததையும் பின்னய சம்பாஷணைகளின் பொழுதுகளில் குறிப்பிட்டிருக்கிறாள்...


பள்ளிக்கூட வயதில் அது தருகிற சுகம் வாழ்க்ககையின் பக்கங்களில் எழுதாமல் நிலைக்கிற ரசனைப்பொழுதுகள்,இன்னொரு மொழியில் தேவைதையின் தருணங்கள்!எனக்கும் என் அதிகாலைத்தூக்கத்துமான உறவை தகர்த்த பெருமையும பின்னர் மொத்த தூக்கத்தையும் பறித்த பெருமையும் இன்னமும் அவளுக்கிருக்கிறது!


என்ன ஒரு சோகம் அவள் கழகத்துக்குரிய அல்லது பள்ளிக்கூடத்துக்குரிய சீருடையில் மைதானமொன்றில் போட்டிக்காக ‘நெட்போல்’ விளையாடுவதைப்பார்க்கிற தவம் அல்லது வரம் எனக்கு இதுவரையும் கிடைக்கவில்லை இனிமேலும் கிடைக்கப்போவதில்லை...

//
உன் வியர்வைத்துளிகள்
விழுந்த இடங்களில்
வண்ணத்துப்பூச்சிகள்...!

//
காற்றில் கரைகிறதுன்
வியர்வைத்துளிகள்
மைதானமெங்கும் பூவாசம்...!

//
நீ
காலைப் பயற்சிக்கு வருவாய் என்றே
விடியாமல் காத்திருக்கிறது
மைதான வெளி!

//
அவள்
வந்து போக ஆரம்பித்த பிறகு
வந்து போகின்றன சில பறவைகளும்
எங்களுர் மைதானத்துக்கு...

//
நீ
பயிற்சிக்கு வரும் வரை
காத்திருந்து பூக்கின்றன
ஆங்காங்கே இருக்கிற பெயர்
தெரியாத பூச்செடிகள்...

//
அவள்
ஓடிக்களைத்தில்
மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது
காற்று!

//
பனி-
பூத்திருக்கிறது மைதானம்
அவள்-
பயிற்சிக்கு வருகிற
அதிகாலைக்காக...

//
அதிர்ந்து வளைகிற அழகுகளில்
சிதறுகிறதென் கவனம்...
உன் மேலாடையில் வழிகிற
காற்றில் கரைகிறதென் சுவாசம்...
கன்னங்களில் இழைகிற கூந்தல்கற்றைகளில்
சிக்குகிறதென் கண்கள்...
நீ இழுத்து விடுகிற மூச்சில்
நிறைகிறதென் உயிர்!


பின் குறிப்பு:
//
இத்தனை நெருக்கமாய் இருந்தும் அவள் நெட்போல் விளையாடுகிறதைப்பார்க்கிற சந்தர்ப்பம் எனக்கு அமைந்திருக்கவில்லை அது ஒரு மாதிரியான தவிப்பாகத்தான் இன்றளவும் இருக்கிறது.

//
அவள் இப்பபொழுது எந்த பயிற்சியும் செய்வதில்லை விளையாட்டுகளில் பங்கெடுப்பதும் இல்லை பின்னர் ஒருவேளை நிகழக்கூடும் நிலவொளியில் நிழக்ககூடும் முன்பு நிகழ்திருக்கிறதைப்போலான பயிற்சியும் ஒரே ஒரு பார்வையாளனுக்கும் அவனே போட்டியானளனுமாயிருக்கிற நெட்போல் ஆட்டமும்.

//
காலம் மாற்றங்களை
காவிக்கொண்டு பயணிக்கிறது...
மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன!

Saturday, November 15, 2008

நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது...

எழுதிக்கொண்டிருக்கிற இரவுகளில் வாழ்கிறது உயிர்...
குறைந்து கொண்டேயிருக்கிற வாழ்நாட்களை கணக்கிடுகையில்
விரிகிற வெறுமையை நிரப்பப முடியவில்லை...
இதுவரையான நாட்களின் எச்சங்களை தேடி;
களைத்துப்போனதன் சோர்வு மட்டுமே மீதமிருக்கிறது!
தூங்குகிற பொழுதுகளைத்தவிர வேறெதிலும் கிடைக்கவில்லை
இருத்தலைப்பற்றிய திருப்தி!
இழந்துவிட்டதைப்பற்றிய கவலைகளை
மறந்து போக முயன்றாலும்
உயர்ந்து கொண்டே இருக்கிற கிடைக்காதைவைகள்
சலிப்புகளை இலவசமாகத்தருகிறது
எழுதாமல் இருக்கிற சொற்களை அல்லது
பேசாமல் இருக்கிற உணர்வுகளை புரிந்து கொள்ள
நெருக்கம் மிகுந்த உறவொன்றின் இல்லாமை
கனவுகளில் சஞ்சரிக்கிறது...
கிடைத்துவிடுகிற சொற்றப சுகங்களையும்
தகர்த்துவிடுகிறது பொருளாதரமும் நாட்டுப்பிரச்சனையும்...
உறவுகளை பிரிந்துவிட்ட உடலொன்று உயிரோடிருக்கிறது...
நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன!


//
பின்னர் எழுதப்பட போகிற ஒரு பதிவுக்கான முன்குறிப்பாக இது இருக்கலாம் ஆனால் இழந்து கொண்டே இருக்க்கிற தனிமையும் இருத்தலும் பல நினைவுகளையும் வார்த்தைகளையும் திமிறத்திமிற கொன்று குவிப்பதில் மனவெளியெங்கும் நிறைகிற சொற்களின் அதிகப்படியான கூச்சல்களில் எழுதப்படாமலே இருக்கின்றன நாட்கள்!

இதுவும் அப்படி ஆகக்கூடாது என்பதற்காகவோ அல்லது சொற்களின் கூச்சலை குறைப்பதற்காவோ...இந்த நினைவும் ஒரு பதிவாக எழுதப்பட்டிருக்கிறது.
//

Tuesday, November 4, 2008

சோகங்களை கொண்டாடுதல்...

சோகங்களை கொண்டாடுதல்...2

முடிந்துபோன ஆவணி மாதத்து மூன்றாவது வாரத்தின் இரண்டாவது நாளில் உன் கனவுகள் வருகிற அதிகாலையில் அழைத்திருந்தாய் அவசரமாக...உன்னுடைய கனவுகளை நீயே கலைத்திருந்தாய் அதுவே நிஜமும் ஆயிற்று! உன்னைப்பற்றிய உனக்கும் எனக்கும் மட்டுமேயான தருணங்களால் நிரம்பிய என் எதிர்காலத்தின் கனவுகளை அதுதான் கடைசி அழைப்பென்று அறிவித்து வெகுசாதரணமாய் விலகிக்கொண்டாய் நீ கொஞ்சம் பொறு!

ம்ம்ம்...


திசைகளற்று அலைந்து கொண்டிருந்த என்னை நேர்ததிசைகளின் புள்ளியில் நகர்த்தியவள் நீ!

இப்பொழுது எப்படி என் கண்களை பறிக்கிற வக்கிரம் உண்டாயிற்று! உன் இயல்புகளில் என் வாழ்நாள் முழுவதற்குமான வெளிச்சம் உன் கண்களில் நிறைந்திருக்கிறது என்கிற என் நம்பிக்கைகளின் மீது உன் சாபங்கள் நிரம்பிய பார்வையை எப்படி தர முடிகிறது உனக்கு... தேவதைகள் சாபம் தருவதில்லை என்பது என் ஆதிகால நம்பிக்ககைளில் ஒன்று...என் ஆதிகாலம் உன் தரிசனத்திலிருந்து தொடங்கிற்று! உன் பிரியங்கள் நிரம்பிய சொற்களில் நகர்கிற என் நாட்களை ஒரு அத்துவானக்காட்டின் இருள் நிரம்பிய ஏதோவொரு புள்ளியில் விட்டு என் கண்களையும் பறித்துப்போகிறாய் நீ...

'என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக'
என்கிற வரிகளை உன் கடிதங்கள் தோறும் எழுதிய நீயா! என் ஜென்மங்கள் முழுதும் தீராத சோகத்தை தந்து போகிறாய் உனக்கு இது சாத்தியமில்லாத ஒன்று என்பதை நீ உணரவில்லையா?! தேவதைகள் பொய் சொல்வதில்லை அவை அவற்றின் இயல்புளை இழப்பதில்லை என்பது உலகம் தோன்றியது முதல் இருக்கிற உண்மை காதலும் உலகம் தோன்றியதிலிருந்து இருக்கிறதுதானே...?

நீ எப்படி நடிக்கப்பழகினாய் நீயாக சொல்லி விட்டாய் என்கிற உன் தன்முனைப்புகளின் மீதான பிடிப்புகளில் ஒரு வைராக்கியத்தோடு இதுவரையான என் நூற்றுக்கணகான அழைப்புகளுக்கு பதில் தராமல் உன்னை நீயே வருத்திக்கொண்டிருக்கிறாய். ஒரு தேவதையிடம் யாசிக்கிறவன் ஒரு நாளும் தன்முனைப்புகளில் இருக்கமாட்டான் இயல்பாய் நிகழ்கிற பிரியங்களில் எந்த தன்முனைப்புகளும் 'நான்'களும் இருப்பதில்லை...

உன்னை எனக்குத்தெரியும் நீ இயல்பாய் நிகழ்கிறவள்!

நான் உயிர் பிரியும் தருணங்களிலும் சாய்ந்து கொள்ள விரும்புகிற உன் நெஞ்சைத்தொட்டுச்சொல் நீ எனக்களித்த பரியங்கள் எல்லாம் ஒரு விருந்துக்கு வந்து போனவளின் வார்த்தைகளைப்போலவா...ஒரு இறப்புக்கு வந்து போன பழைய ஊரின் மூன்றாம் நபரின் மனோ நிலையிலா! பகிர்ந்து கொண்டாய் என்னோடு; உன் பரியங்களை,சுகங்களை,பிரச்சனைகளை சோகங்களை...இல்லையில்லை!!! நான்தான் பிரச்சனைகள் சோகங்களை பகிதர்ந்திருக்கிறேன் நீ சுகங்களை மட்டுமே எனக்கு தந்தவள் பிரச்சனைகளை என்னிடம் வராதபடிக்கு பார்ப்பது உன் இயல்புகளாய் இருந்தது தேவதைகளின் இயல்புகளில் இதுவும் ஒன்றோ! என் சுகங்களுக்காக மட்டுமே நம்பிக்கைகள் நிரம்பிய உன் பிரியங்களை பகிர்ந்தவள் நீ...


ஏதோ ஒரு வருடத்தின் சித்திரைப்பொங்கலன்று குடித்திருந்த நான்;அந்த நிலைதடுமாறுகிற போதையிலும் "நீ என்னை இந்த கோலத்தில் பார்த்தால் நான் செத்து விடுவேன்" என்று சொல்லியதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை...அதற்கடுத்த நாளின் சந்திப்பில் கூட நீ உங்களுக்கு ஏலாதென்றால் ஏன் குடிக்கிறீர்கள் என்னோடு வந்த பிறகு குடியுங்கோ அப்ப கவனிக்கிறதுக்கு நானிருக்கிறேன் என்கிற உன் பிரியங்களைக்கொட்டி கோபங்களாக வெளிக்காட்டினாய்... இப்பொழுதும் குடித்துக்கொண்டுதான் இருக்கிறேன் அதுமட்டுமல்ல பல புது முகங்களுக்கு நடுவில் கண்ணீர் விட்டு புலம்பிக்கொண்டிருக்கிறேன் இதுவரையும் அம்மாவுக்கு பிறகு நான் கண்ணீர் விட்டழுத முதல் உறவு நீ மட்டும்தான்...மற்றவர்களுக்கு மத்தியில் கண்ணீர் என்ன கவலைப்படுவதையே விரும்பாதவன் நான் என்பது உனக்கு தெரியாததல்ல இப்பபொழுது முகமே தெரியாத நண்பர்களிடம் எல்லாம் புலம்புகிறேன் குடல் வெளியில் வருகிறதைப்போல வாந்தி எடுக்கிறேன்...குற்றவாளி ஒருவனை தண்டிக்கிற ராஜகுமாரி ஒருத்தியின் அழகிய திமிரோடு ஏளனமாய் பார்க்கிறாய் நீ...

எத்தனை கோப்பகைளை நிரப்பியும் உன்னை மறக்க முடியவில்லை நீ...நீ மட்டும்தான்!!! என்னை நிரப்புகிறவள் என்கிற உன்னுடைய இயல்பாய் நிகழ்கிற அன்பின் தருணங்கள்தான் இப்பொழுதும் நினைவுக்கு வருகிறது...நான் இதனை திரும்பத்திரும்ப எழுதிய ஒரு கடிதத்தின் பதிலாக பிரியங்களை சொற்களாக்கி உயிர் முழுவதும் நிறைத்திருந்தாய் நீ அந்த உன் பிரியங்கள் நிரம்பிய சொற்களை திரும்பத்திரும்ப புலம்புகிறேன் நான்...இத்தனை கோப்பைகளுக்கு பிறகும் "அவள் ஒரு தேவதை மச்சான்" என்கிற என் புலம்பல்கள்...உன் பிரியங்களாலும் நினைவுகளாலும் நிரம்பிய என்னை கேலி செய்கின்றன...சாம்பல் நிறத்தின் சிகரெட்புகைகளின் நடுவில் தேவதையென நீ வந்து சிரிக்கிறாய் உன் அடிமையொருவனின் அவஸ்தைகளை பார்த்து...


எவ்வளவு குடித்திருந்தாலும் ஒரு தேவதையை குறைசொல்ல முடிவதில்லை!
இப்பொழுதும் உன் கரிசனங்களைத்தான் அசைபோடுகிறது மனது...
உன் பிரியங்களைத்தான் பேசுகிறது நீ கொடுத்த காதல்...

உன் நினைவுகளையும் எடுத்துப்போயிருக்கலாம் உன் பிரியங்களை கொண்டு போன நீ...!




பின் குறிப்பு:

//
எப்பொழுதோ ஒரு போதை தெளிகிற பின்னிரவொன்றில் எழுதிய (புலம்பிய) வார்த்தைகளை பதிவாக்குகிற முயற்சியில் தணிக்கைகளுக்கு பிறகு மூலப்பிரதியிலிருந்து மாறுபட்டிருக்கிறது பதிவு...

//
சோகங்களும் அனுபவிக்கப்பட வேண்டியவையே காலம் கடந்து விடுகிற அல்லது புதைதந்து போகப்பண்ணுகிற சோகங்கள் எல்லாம் கொண்டாடப்பட்டவையாகவே இருக்கின்றன கொண்டாடப்படாத சோகங்கள் நாட்களை நகர விடுவதில்லை காலம் அங்கே தடுமாறி விடுகிறது என்பது போதையில் கிடைக்கிற தெளிவு...

//
இப்பொழுதெல்லாம் குடிக்காமல் இருக்க முடியவில்லை குடித்தால் அழாமல் இருக்க முடியவில்லை...