Friday, February 27, 2009

அனுபவிக்கத்தெரியாத தனிமை...

பிரியங்களற்ற தனிமை இருண்டிருந்த
பின்னிரவொன்றில்...
அறையில் இல்லாதவளுக்காய்
அழுது கொண்டிருந்தது மெழுகுவர்த்தி,
ஜன்னல் திறக்கிற குளிர்காற்றுக்கு தெரிவதில்லை
முத்தங்களற்ற இரவுகளின் நீளம், இல்லையா?
மிக மெல்லிய இசைகளினூடு...
ஒரு உரையாடலை ஆரம்பிக்கலாம் இறுதியல்
அவை உக்கிரமான குற்றச்சாட்டுகளாக மாறிவிடாமலிருக்க;
சிகரெட்டுகளை நிறுத்தி மது நனைத்த உதடுகளில்
சில முத்தங்களை சத்தங்களோடு பரிமாறிக்கொள்ளலாம்
உரையாடல்கள் தீர்ந்து போக
முத்தங்கள் மீதமிருக்கையில் நீ-
உன் சிறகுகளை அணிந்து கொள்ளலாம்,
மறக்காமல் இருப்பதற்காய் மேசையிலிருக்கிற...
பச்சை நிறத்தில் தேதிகள் எழுதப்பட்ட நாட்குறிப்பின்
பக்கங்களுக்கிடையில் உன் மார்புகள் மறைத்த
இறகுகளிலொன்றை விட்டுச்சென்றுவிடு,
இன்னொரு நீளமான இரவில்
உன்னை அழைப்பதற்கு அது உதவக்கூடும்!

உறங்கி விழிக்கையில்
மேஜைமீது பரவியிருந்தது
மீதமிருக்கிற மெழுகு,

உண்மைதான்...
அனுபவிக்கத்தெரியாத தனிமைகள்
மிகக்கொடியவை!


_____________________________________________________________________________

வெறுப்பேற்றிக்கொண்டிருக்கிறது அலுவலகத்தலிருக்கிற இணைய இணைப்பு, எழுதிய பின்னூட்டங்களை பதிப்பிக்க முடியவில்லை சட்டென்று அறுந்து போகிறது! பின்னூட்டத்தை எழுதி அதனை வெளிடுவதற்குரிய சுட்டியை அழுத்தியதும் இந்தப்பக்கத்தை காட்ட முடியாது என்று கடுப்பேத்திக்கொண்டிருக்கிறது இணைய உலாவி. சென்ற புதன் கிழமைதான் ஆரம்பமாகியிருந்தது இந்த பிரச்சனை! சரி அன்றைக்கு மட்டும்தான் என்று அப்படியே விட்டுவிட்டேன். நேற்று இணையத்திற்கு வரவே முடியவில்லை. இன்று காலையிலிருந்து முயன்று கொண்டிருக்கிறேன் ம்ஹீம்...கூகுளின் கடவுள்(இருக்கிறார்தானே)கண்திறக்கவேயில்லை!

அதனால் கிடைத்த அவகாசத்தில் சில சொற்களை சேமித்து ஒரு பதிவாக்கியிருக்கிறேன் அதற்கான மூல காரணம் இந்த சோகத்தை சொல்வது மட்டுமே பின்னூட்டம் எழுத முடியாத சோகம் என்னைப்போல பின்னூட்டப்பதிவர்களுக்கு தெரியும்.


_____________________________________________________________________

மிக முக்கிய விடயம்:

தமிழ்மண விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விருது பெற்ற அனைவருக்கும், பங்குபற்றிய எல்லா சொந்தங்களுக்கும் வாழ்த்துக்கள் முக்கியமாய் வாக்களித்த பெருமக்கள் அனைவருக்கும் நன்றிகள்.

தமிழ் மணத்துக்கு கடமைப்பட்டிருக்கிறது வலையுலகம் ஒரு மாதிரி இறுக்கமான சூழ்நிலையிலும் இதனை நிறைவேற்றியதற்காக.


தொடர்ந்து பயணிப்போம்.

Sunday, February 22, 2009

நிகழ் குறிப்புகள்...

\\
என்னுடைய சோகக்கவிதைகள்
வரவேற்கப்படுகின்றன...
காதலில் சோகமும் சுகம்தான் இல்லலையா?
எனக்கிருக்கிற காதல் தோல்வியை
ஒப்புக்கொள்ள முடிந்த எனக்கு
அக்காவுக்கு இருக்கிற காதல் தோல்வியை
சொல்ல முடிவதில்லை!
தவறுகள்;
ஆண்களிலும் இருக்கலாம் அல்லது
உங்களிலும் இருக்கலாம்,
இன்னும் சிலதைப்பேசலாம்!

புரிதல்களும் கட்டுடைப்புகளும்
எழுதிவைக்கப்படடிருக்கிறது...
அக்காவின் வாழ்க்கை அப்படியே இருக்கிறது!



\\
யுத்தநிறுத்தம்,
கண்டனப்பேரணி,
அடையாள உண்ணாவிரதம்,
அறிக்கைகள்,
அங்கங்கே தீக்குளிப்புகள்,
சில கவிதைகள்,
பல உரையாடல்கள்,
தீர்வுகளேயற்ற ஆய்வுகள்,
தலைவர்கள் வலியுறுத்தல்,
இன்னும்
சில தற்கொலைத்தாக்குதல்கள்
என பலதும் நிகழலாம்
கடைசித்தமிழன் உயிரோடிருக்கும் வரை!

________________________________________________________________

தல தமிழ் பிரியன் விடுமுறைக்கு ஊருக்கு போய்வந்து திரும்ப வலையுலகோடு இணைந்திருப்பதும் முதல் மொக்கையை வெற்றிகரமாக வலையேற்றியிருப்பதும் உங்களுக்கு தெரிந்தவிசயம். வந்ததும் வராததுமாய் கடமை உணர்ச்சியோடு ஜோதியில் ஐக்கியமாகிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள்! தவிர எனக்கு பல நாட்களாக பிரச்சனை கொடுத்துக்கொண்டிருந்த தளத்தின் வடிவத்தை மாற்றி இப்போதிருக்கிற மீயுருவை(அப்படின்னா டெம்பளேட்தானே)செய்து கொடுத்தமைக்கு நன்றிகளும்.

நேற்றைக்கு முன்தினத்திலிருந்து தளத்தின் தொழில்நுட்ப வேலைகளை அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

தொழில் நுட்ப உதவி தேவைப்படுபவர்கள் என்னை மின்னஞ்சல் மூலமாக அணுகவும் தரகு கூலியை தவிர மற்றய எல்லாம் இலவசமாக தொழில்நுட்ப வல்லுனர் தமிழ் பிரியனால் செய்து கொடுக்கப்படும்.

Tuesday, February 17, 2009

அடையாளமில்லாத இரவுகள்...





தேசம்,
காதல்,
தேகம்
காமம்,
கட்டுடைப்பு,
குடும்பம்,
பாசம்,
பணம்,
பாவம்,
புண்ணியம்,
சமுதாயம்...!
சுழல்கிற கனவுகளில் இப்பொழுதெல்லாம்;
இரவுகளை அடையாளம் காண்பது கடினமாயிருக்கிறது,
பெருந்துயர் நிரம்பியதொரு நாவலுக்கான
அடிப்படையாயிருக்கிற குழப்பங்களில்
திணறிக்கொண்டிருக்கிறது மூளை...

சிதறுவதற்கு முன் எழுதிவிடலாம்
சில கவிதைகளையேனும்!

Saturday, February 14, 2009

காதல் நாள் - 14-02-2009






காதல் நாளென்கிற என்கிற தலைப்போடு போன வருடம் எழுதிய வரிகளை இந்த வருடம் பார்க்கவே இல்லை, இன்னமும் அதனை வாசிக்கவில்லை இந்த வருடம் கட்டாயம் பதிவு போட்டே ஆகவேண்டும் என்கிற மனோநிலை இல்லாமல் போய்விட்டது...

இருந்தாலும் ஒற்றை வரியிலேனும் ஏதாவது சொல்லியே ஆக வேண்டும் என்று உறுத்திக்கொண்டே இருக்கிறது மனது. வேலை முடிகிற நேரம் வந்துவிட்டது இன்னும் ஏழு நிமிடங்களே இருக்கிறது பணி முடிய.

ஏதாவது எழுதிவிடவேண்டும் என்கிற ஆசையில்...


\\
உதடுகளில்
குவிகிற
சுழிகிற
நெளிகிற
திறக்கிற
மூடுகிற
சிரிக்கிறதென
எத்தனை செய்கிறாய் பேசத்தான்
மாட்டேன் என்கிறாய்!

\\
கொஞ்சம் தயக்கம் நிறையக்காதல் என
சொல்லாமல் போன நொடிகளைனைத்தும்
நிகழ மறுத்ததும் நிகழந்ததுமான அற்புதங்களாய்
நீ என் நாட்குறிப்புகளெங்கும்!


\\
யாருமற்ற வல்லிபுரக்கோவில் வீதிகளில்
சின்னதும் பெரியதுமாய் நிறைய பனைரங்கள்
நம் கதைகளைப்பேசிக்கொண்டு...
நாம் தான் பேசுவதுமில்லை,
யாரிடமும் சொல்வதுமில்லை,
பனைகள் அழிந்து போகலாம்
நினைவுகள்...?



உலகத்தின் அன்பானவர்கள அனைவருக்கும்
காதலர்தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்!

Wednesday, February 11, 2009

காதல் வாரம் - 2




\\
நவராத்திரியின் விரத நாளொன்றில்
மாதாளம் முத்துக்கள் நிரம்பிய தட்டோடு வந்தமர்ந்தவள்
மிகக் கரடுமுரடான மரத்தில இருக்கிற
மிக மென்மையான மாதாளம் பூக்களின் இதழ்களை
மிகப்பிடிக்குமென்றாய்,
செம்மஞ்சள் நிறத்தில்
மஞ்சள் மகரந்தங்களோடிருக்கிற அவற்றை
கன்னனங்களில் உரசுவது பால்யகாலங்களில்
பிடித்தமான விசயம் என்றாய் - இப்பொழுது
பிடிப்பதில்லையா என்றதற்கு
மார்புகளில் முள் குத்திய இருள்கசிகிற
மாலையொன்றிற்கு பிறகு அவை
உனக்கு கிட்டுவதில்லை என
உதடுகளை பிதுக்கினாய்...
ஆடைகளை இழந்த இரவொன்றில்
மாதுளை மகரந்தங்களை உன்
மார்பிலணிந்திருந்தாய் நீ...


\\
ஒதியடி வைரவர் சாட்சிக்கிருக்க
சப்பதமின்றி முத்தமிட்ட பொழுதுகளில்
வீசிய,அரச மரக்காற்றில்
ஆடின பூவரசம் பூக்கள்...
மூடிய விழிகள் திறக்கிற பொழுதில்
பூவரசம் பூக்களை மிகப்பிடிக்குமென்றாய்!
பின்பொருநாளில்...
கூடை நிறையக்கொண்டு வந்த பூக்களில் ஒன்றை
கூந்தலுக்குள் சிறைவைத்த கணங்களில்
உயிர்களை பரிமாறியிருந்தோம்...

கூடை கொள்ளாத பூக்கள் உன்
தேகம் முடியிருந்தது.


பின் குறிப்பு:

\\
பூக்கள் பற்றிய பத்தொன்பது வருட குறிப்புகளில் இருந்து

\\
பூவரசம் பூக்களை சூடிக்கொண்ட தேவதையின் வாசனைகள் என்கிற அறுநூற்றி இருபத்தொரு பக்கங்கள் கொண்ட எழுதப்படாத புத்தகத்தின் நடுப்பக்கங்களில் இருந்து...

\\
ஒற்றைப்பூவரசம் பூவைச்சூடிய கறுப்பியின் சாயல்களில் இருக்கவில்லை வேறெந்த தேவதைகளும்...



picture courtesy - modernartimages.com

Sunday, February 8, 2009

காதல் வாரம் - 1



\\
அறுபத்தொன்பதே நாட்களில்
அடிமை செய்த உன்னிடம் இருக்கிறதென் மீதம்,
தவணை முறைகள் வேண்டாம்
முழுவதுமாய் எப்பொழுதும் எடுத்துக்கொள்
இதுவரையான வெற்றுநாட்களை
இப்பொழுதே வாழ்ந்துவிடுகிறேன்...
எந்த வினாடியும் ஆகலாம் தேவகணம்
கணங்கள் நீடித்தல் என்பது வரம்!

\\
கறுப்பும் அற்புதங்களுமாய் கலவைசெய்து
அவள் மிக அழகாய்
தீர்வுகள் தருகிற அவள் விழிகளில்
இயல்பாய் நிகழ்கிறது அற்புதங்கள்
மெல்லத்தொடங்குகிறது தொலைதல்
நான் அவளாகிப்போக!

\\
சொல்வதும் சொல்லக்கேட்பதும்
சொல்ல முடியாதவையென்றாகி
சொற்களை பேசாதிருத்தலில்
இரவுகள் கனவுகள் தின்னக்கொடுத்த
பொழுதுகளாக்கிப்போகும்
தவிப்புகள் நிறைந்த நாட்கள்!

\\
சொல்ல முடியாத பிரியங்களோடு
என்னனை கண்டெடுத்துக்கொண்டிருந்தேன்
அவளிடமிருந்து...
மெல்ல மெல்ல சேகரித்த என்னுள்
நிரம்புகிறதவள் நினைவு..
நான் அவளென்றாகியது காதல்!


\\
பேசுதல்,
பழகுதல்,
பின் காணாமல் போதல் என்றாகும்
நான் தொலைந்து போக
நீடிக்கிற உன் கணங்களில்!


\\
கன்னத்து குழிகளில் விழுந்து
உதட்டு படிக்கட்டுகளில் கரையேறி
முத்தக்கடலில் விழுந்திட
காதல் கடலாயிற்று!


சென்ற வருடத்தின் முதல் நாள்...

பின் குறிப்பு:

நேற்றே ஆரம்பிக்க வேண்டியது நேரம் சதி செய்ததில் இன்று.அதிலென்ன எப்பொழுது சொற்கள் வசமாகிறதோ அப்பொழுதுதானே அவற்றை சேகரிக்க முடியும்.
சென்ற வருடத்தில் உருவாகிய காதல் வாரமும் அதன் மீதிச்சொற்களும் என்னாயிற்று என்று தெரியவில்லை, இப்பொழுதில் இருக்கிற சொற்களை சேகரிப்பது அவசியமாகிற்று.

picture courtesy- modernartimages.com

Monday, February 2, 2009

இதுவரை எழுதாத கடிதம்!




அன்பானவர்களே...

நேரம் பின்னிரவு என்றாலும் தனித்திருக்கிற பொழுதும்,தேசம் பற்றிய கேள்விகளும்,வாழ்வின் மீதம் பற்றிய சிந்தனைகளும் அடக்க முடியாத இரைச்சலை மனதிற்குள் தந்திருக்கிறது.

கடந்த பதிவிலெழுதிய குறிப்பைபோல இருக்கலாம் அது!

சந்தோசங்களை சேமிக்கவும் சுகங்களை மட்டுமே அசைபோடுகிறதுமான மனது எப்பொழுதும் வாய்த்திருக்க வேண்டும் வாழ்க்கை வெறுமையாகிவிடாதிருக்க இது மிக அவசியமாயிற்று.சோகங்களை கொண்டாடப்பழகியது ஒரு விதத்தில் நல்லதாயிற்று.

பெரும் பாரங்களை சுமக்கிற இனத்தின் சந்ததிகளில் பிறந்துவிட்ட உண்மை மிகக்கசப்பானதாய் இருந்தாலும் மனிதமேயற்ற நாட்டில் பிறந்ததற்காய் எதிரே வருகிற என் நாட்டு மனிதர்களை பார்க்கவே பிடிக்கவில்லை! அவர்களை கொன்றுவிடவேண்டும் என்கிறதாய் வேதனையும் விரக்கதியும் தருகிற வெறியையும் அவமானத்தையும் போதையினால் சரி செய்திருக்கிறேன்.


அன்பானவர்களே வாழ்க்கை உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது! இந்தக்கடிதத்தை நான் எழுதுகிற கணங்களில் நீங்கள் உங்கள் வீட்டில் உங்கள் படுக்கையில் குண்டுகள் பற்றிய பயமோ மரணம் பற்றிய சிந்தனைகளோ இன்றி உறங்கிக்கொண்டிருக்கலாம் அல்லது அவரவர் நேரத்துக்கும் வசதிக்குமாய் அவரவர் வேலைகளில் இருக்கக்கூடும் அது ஒன்றே போதுமானதாய் இருக்கிறது வாழக்ககை ஆசீர் வதிக்கப்பட்டதாய் கருதுவதற்கு.அடுத்த கணங்களை எதிர்கொள்ள முடியாத வாழ்வு எவ்வளவு கொடூரமானதாய் இருக்கும் என்பதை எழுத்தில் சொல்லமுடியாது,அனுபவித்தால் எழுத முடியாது.அனுபவித்தால் மட்டுமே தெரிகிற வலிகள் யுத்தம் தீர்மானிக்கிற வாழ்நாட்களைக்கொண்டு வாழ்பவர்களிடம் இருக்கிறது.


உணர்வுகளை சுமந்தவார்கள் என்றிருந்தோர் இழப்புகளையும் வலிகளையும் சுமக்கிறவர்களானார்கள், துயரங்கைள சுமக்கிற சந்ததிகளில் பிறந்த குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள்; அவர்களது துயரங்களை தவிர்கத்தெரியாத கடவுளர்கள் அதிகாரத்தின் கைகளில் அவர்களது உயிர்களை காவு கொடுத்திருந்தனர்! மரணம் எண்ணிக்கைகளால் குறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது வாழ்க்ககை இன்னமும் மீதமிருப்பதாய் உயிரை சுமந்து தெருக்களில் அலைகின்றன பொதிகளை சுமந்த உடல்கள்.


என்னுடைய தேசம் இடம் பெயர்ந்தவர்களால் நிரப்பப்படுகிறது.இழப்புகளை சுமப்பவர்களால் ஆக்கப்படுகிறது.நகரங்களை கட்டி எழுப்புதலும் பின் விட்டுப்பிரிதலும் அவர்களுக்கு சாபமென விதிக்கப்பட்டிருக்கிறது.அவரவருடைய ஜீவிதம் அவரவர் கைகளில் என்பது பொய்யென்றாகி அதிகாரத்தின் கைளில் இருக்கிறது சபிக்கப்பட்வர்களின் வாழ்வு என்பதாகிற்று!எதற்காக சபிக்கப்பட்டோம்? என்ன குற்றங்கள் செய்தோம்?எந்த நிபந்தனைகளில் தண்டிக்கப்படுகிறோம்? என்பவை உயிரை மட்டும் மீதம் வைத்திருக்கிற என் இனத்தின் கேள்விகளாய் இருக்கிறது!


உரிமைகளுக்கான போராட்டம் பயங்கரவாதமாகிப்போக,சமாதானத்துக்கான யுத்தம் என்பது அடிமைகளை உருவாக்குவதற்கான யுத்தமாகி இருக்க,அறங்களின் போராட்டம் உயிரைத்தக்கவைப்பதற்கான ஓட்டமாகிப்போன சோகம் உலகம் கண்டு கொள்ள விரும்பாத உண்மையாகிற்று!நினைவுகளால் நிரம்பிய தெருக்களெங்கும் பிணங்களின் சுவடுகள்,நிழல் தருகிற மரங்களின் வேர்களில் குருதியின் ஈரங்கள், என் தேசத்தின் தெருக்களெங்கும் இயலாமையின் கதறல்கள் அதிகாரம் செய்கிற வன்முறைகள் ஆற்றாமைகளின் துயரங்கள்!


இதுவரையும் எழுதாத வலிகளை எழுதுவதில் கை கொடுக்கவில்லை சொற்கள், பால்யத்திலிருந்து பதின்மங்கள் வரையிலும் யுத்தம் கொடுத்திருந்த கசப்பான அனுபவங்களையும் ரணங்களையும் விட வெகு அதிகமான நெருக்கிடல்களை மனது அனுபவித்துக்கொண்டிருக்கிற இந்த நாட்கள் வாழ்வு மீதான வெறுப்புகளோடு என் மீதான சுயமதிப்பீடுகளில் என்னை மிகக் கடைசியான கோழைகளில் ஒருவனாக மாற்றியிருக்கிறது.
தப்பியோடிய கோழையெனவும் சுயநலங்களின் அதிக பட்ச சாத்தியக்கூறுகளின் இருப்பிடம் எனவும் அடையாளம் காட்டி இருக்கிறது பின்பொரு நாளில் நான் அப்படி அழைக்கப்படலாம். எதுவும் செய்யாதிருக்கிற பொழுதுகளில் நினைவுகள் விழுங்குகிற என்னை சகித்துக்கொள்ள முடியவில்லை எனக்கு. போலிகளற்ற பொழுதுகளில்; முகம் பார்க்கிற கண்ணாடியும் உண்மைகளை அடையாளம் காட்டக்கூடும் என்பது மிகவுண்மை!


நினைவுகளை சேமிக்கத்தொடங்குகிற குழந்தையின் நினைவின் வெளிகளெங்கும் மரணத்தின் சுவடுகள், சிவப்பு நிறங்களில் எழுதப்படுகிற சோகப்படிமங்கள், குருதியின் தெறிப்புகளாய் வரையப்படுகிற அவர்களது பால்யங்களின் பக்கங்கள்,ரணங்களின் குறிப்புகள் பின்பொரு நாளில் அதிகாரங்களை நோக்கி உண்மைகளைப்பேசக்கூடும்.அதுவரையும் பொதிகளை சுமப்பவர்களின் கால் தடங்களில் பயணிக்கட்டும் மிகச்சொற்பமாய் இருக்கிற அடிமைகள் அல்லாத சந்ததிகள்.

தப்பியோடிய கோழையொருவனின் புலம்பல்கள் என நீங்கள் இந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம் இருப்பினும் மிகத்தொன்மையானதொரு இனத்திற்கு அதன் வரலாற்றை எழுதுகிற உரிமைகள் மறுக்கப்பட்ட உலகத்தில் வாழ்கிற நீங்கள்; அதிகாரங்கள் எப்பொழுதும் சரியான தீர்ப்புகளையே எழுதுகிறது என்கிற தவறான முடிவுக்கு மிகக்கேவலமான சாட்சிகள் என்பதை தப்பித்தோடாத அடிமைகளில் ஒருவன் எழுதக்கூடும் என்பதை நிவில் கொள்க.அப்பொழுது அதிகாரங்களை கைமாற்றுகிற வலுவை அவன் சந்ததிகள் கொண்டிருக்கலாம்!

இப்பொழுது...

மிக்சுதந்திரமான உன்னத இசைகளின் திருவிழாக்களால் நிரம்பியிருந்த என் தேசத்து தெருக்கள் மரணத்தின் பயம் நிரம்பிய உயிர் பதைக்கிற ஓலங்களோடு பதறித்தொலைகிற மனிதர்களால் நெரிசலாய் இருக்கிறது...

ஆகவே அன்பானவர்களே;

வலிகள் உங்கள் வீடுகளை தட்டும்வரை வெடிக்காமலிருக்கிற உங்கள் கதறல்களை இப்பொழுதே அதிகாரங்களை நோக்கி சப்தியுங்கள்.நம் சந்தோசங்களையும் உழைப்புகளையும் பகிர்ந்து கொண்ட உலகம் எம் துயரங்களை கண்டுகொள்ளாதிருக்கிறது.அப்பொழுது உலகம் அனுபவித்துக்கொண்டது இப்பொழுது உலகம் அமைதியாய் இருக்கிறது. நீங்கள் பேசாமல் இருப்பது முறையல்ல! நீங்கள் அதிகாரங்களின் பால் அண்டிப்பிழைப்பவர்களாக அப்படியே இருக்கலாம் நானும் தப்பியோடிய கோழையென அடையாளங்கள் இல்லாதவனாய் வாழ்ந்துவிடக்கூடும.

ஆனால்...
வலிகளை சுமக்கிற சந்ததிகள் ஒரு காலம் அதிகாரங்களை நோக்கி உண்மைகளைப்பேசும்!


பின்குறிப்பு:

\\
கடந்த இருபத்தொன்பதாம் திகதி பணியிலிருக்ககையில் தலைக்குள் சுழன்ற பல ஆயிரம் சொற்களினதும் தேசம் பற்றியெழுதிய சில கவிதைகளினதும் மிக்குறுகிய வடிவமாய் இந்தப்பதிவு இருக்கலாம்.

\\
சொற்களை எழுதிப்பழகிவிடுதல் என்பது தனித்திருக்கிறவர்களுக்கானதும் சொற்களை கொண்டிருப்பவர்களிற்கானதும் விடுதலை தருகிற நிகழ்வு.

\\
கதறி அழவும் கொலை செய்யவும் யாரும் இல்லாத வெறியில் உங்களிடம்...


29/01/1009
1.44 am
K.S.A.