Tuesday, December 30, 2008

அய்யனார்,வாரணம்ஆயிரம் மற்றும் பாடல்கள்...

எதையாவது வாசித்தே ஆகவேண்டும் என்றிருப்பதனால், இணையத்தில் வாசித்தாலும் சிலவற்றை பிரதி செய்து அறைக்கு எடுத்துச்செல்வது என் பழக்கம் ஆகிற்று அப்படி எடுத்துச்செல்கிற பிரதிகள் பலவகையானதாய் இருக்கும் என் படுக்கையில் ஏதாவது புத்தகமோ அல்லது பேப்பர்களோ எதுவும் இல்லாமல் போனால்தான் அது ஆச்சரியம் எப்பொழுதும் ஏதாவது இருக்கும் ...

அப்படித்தான் காலில் அடிபட்ட அறைக்குள் முடங்கிப்போயிருந்த நாட்களில் ஒன்றின் பின்மதியப்பொழுதில் படுக்கையில் இருந்தபேப்பர்களை வாசிக்கத்தொடங்கினேன்...
அப்படி நான் பிரதி செய்து வாசித்தவற்றுள் முப்பத்தொரு பக்கங்களில் இருந்த டிசே அண்ணனின் "பின்னவீநத்துவம் அல்லது எனக்கு பிடிக்கப்போகும் சனி" தான் பல நாட்களாய் வாசித்த பதிவு,திரும்ப திரும்ப படிச்சாலும் தெளிவாகாமல் இருந்த பதிவுகளில் அதுவும் ஒன்று போதுமடா இந்த பின்நவீனத்துவம் என்றாகி இருந்தது!என்ன கொடுமையடா இதுங்கிற மாதிரி இருக்கும் ஆனா நிறையப்பேசி இருப்பாங்க அந்தப்பதிவிலும் பின்னூட்டங்களிலும்...

அன்றைக்கும் அப்படித்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். "ஊர் 'நியூஸ்' கொண்டு வாங்கோ தம்பி" என்கிறவர்களுக்காக கொண்டு செல்கிற அந்த அறிக்கை இந்த அறிக்கை, அவர் சொன்னது இவர் சொன்னது, போன்றவைகளையும் வாசித்துவிட்டு என்கட்டிலிலேயே விட்டுப்போயிருந்தார்கள் அவற்றை தவிர்த்து...

வாசிப்பதற்கு வேறென்ன இருக்கிறது என்று தேடியபொழுதில் அய்யனாரின் ஜோவும் இருந்தது
என்னுடைய அதிர்ஷ்டம் என்று நினைத்துக்கொண்டே வாசிக்கத்தொடங்கினேன்,
மனதிற்கு நெருக்கமாய் இருக்கிற பதிவர்கள் சிலரில் அய்யனாரும் ஒருவர்!உண்மையில் அய்யனாரிடம் ஏதோ இருக்கிறது அய்யனாரின் பல கவிதைகளில் பல பதிவுகளில் அய்யனார் என்னுடன் ஒத்துப்போவதாக உணர்ந்திருக்கிறேன்.அது போலத்தான் 'ஜோ'வை வாசிக்க வாசிக்க எனக்கும் என்னுடைய இப்போதைய நாட்களின் ரணம் தகிக்கலாயிற்று விடிய விடிய பேசுவதற்கு யாரும் இருக்கமாட்டார்களா என்கிற ஏக்கம் மறுபடி தலை தூக்கியது... இதற்காகவே இரவுப்பணியில் இருந்தேன் கிட்டத்தட்ட பதினொரு மாதங்கள் பேசுவதற்கு யாருமில்லாததில் வாசித்தல் மிக நெருக்கமாயிற்று இப்போது.

வாசிக்கிறவனை எழுத்துக்குள் ஒருவனாக்குகிற அல்லது அந்த நிகழ்வுகளில் பங்கெடுக்கிறவனாக மாற்றுகிற தன்மை அய்யனாரிடம் இருக்கிறது அதற்கு அருடைய அனுபவங்கள் என்னுடைய ரசனைகளில் இருப்பதும் ஒரு காரணமாகலாம்...


என்னய்யா எப்ப பாரு புலம்பிக்கிட்டே இருக்க என்றுதான் என்னை பல பேர் கேட்டிருக்கிறர்கள்;அதுவும் உண்மைதான் சொல்ல முடியாத அல்லது சொற்கள் இல்லாத வலிகளைத்தான் நான் சொல்லிப்பார்க்க முயன்றகொண்டிருக்கிறேன்.காரணமே இல்லாமல் சலிக்கிற மனதை என்ன செய்வது புதைந்து போயிருக்கிற சொற்களை அவற்றின் அமுக்கத்திணறல்களை எப்படி சகிப்பது அதைத்தான் எழுதிப் பழகிக்கொண்டிருக்கிறேன்!புனைவோ நிஜமோ அது அனுபவங்களின் சாயல்களில்தானே இருக்கிறது. என்ன இருந்தாலும் மனித மனம் விசித்திரங்களால் நிரம்பியதுதானே, அதனை கட்டுக்குள் வைப்பதுதானே மிகு பணியாய் இருக்கிறது கட்டவிழ்ந்து விடுகிற மனம் பிறழ்ந்து விடுகிறது அப்படித்தானே...

ஏராளம் சொற்கள் உள்ளேயிருந்தாலும்...
அவை மிகக்குறைவானதாய்தான் வெளிப்படுகின்றன!
இன்னும் நிறைய எழுத வேண்டியிருக்கிறது... இதைப்பற்றி இன்னொரு நாள் எழுதலாம்!

(நம்பினால் நம்புங்கள் நான் இயல்பில் மிக உற்சாகமானவன்,யாராவது மாட்டினா அவ்ளோதான்)


இதைப்பற்றிய குறிப்பை எழுதாமல் அய்யனாரின் பதிவுகளை படிப்பதில்லை என்றிருந்தேன் இனிமேல்தான் படிக்க வேண்டும்.அய்யனார் உங்களை இன்னொரு கேள்வியும் கேட்க வேண்டும் அய்யனார் என்கிற பெயருக்கான காரணம் என்னஅண்ணன்?அதற்கும் தனிமையின் இசை என்கிற பெயருக்கும் தொடர்பிருக்கிறதாக நான் நினைக்கிறேன்...சொல்ல முடியுமா?

நிறைய எழுதுங்கோ அண்ணன்...






இந்தச்சுடிதார் எனக்கு பிடித்திருக்கிறது!சமீராவுக்கு சுடிதார் நன்றாகவே பொருந்துகிறது!


\\
வாரணம் அயிரம் படத்தை தரமான டிவிடியில் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்...பொறுமையை கடந்து அறையில் முடங்கி இருந்த நேரம் அதனையும் பார்த்தேன் நான் எதிர்பார்த்தததை விட சிடி நன்றாகவே இருந்ததில் பார்த்து முடித்தேன்...

படத்தை பற்றி நிறையப்பேர் நிறைய சொல்லியிருக்கிறதால நான் என்பங்குக்கு படம் எனக்கு பிடிச்சிருக்கு என்பதை மட்டும் சொல்லிக்கொண்டாலும் சமீரா அழகாய் இருக்கிறார். ஆடைத்தெரிவில் சூர்யாவும் சரி சமீராவும் சரி கலக்ககலாய் இருக்கிறார்கள்.காட்சிகளை படமாக்குவதில் கௌதம் திறமை உள்ளவர் என்பது உண்மைதான்.


ஹாய்.. மாலினி..!
நா(ன்) இத சொல்லியே ஆகணும்.
நீ அவ்வளவு அழகு!
இங்க யாரும் இவ்வளவு அழகா...இவ்வளவு அழகை பாத்திருக்கவே மாட்டாங்க, and i'm in love with you.

வசனம் எல்லாம் சரியாயிருக்கா)

இந்த வார்த்தைகளை சூர்யாவோட குரல்லயே சொல்லிப்பார்த்தேன் எனக்கும் குரல் மாற்றுகிற வித்தை வருகிறது! எல்லா நடிகர்களுக்கும் நல்ல குரல் வாய்ப்பதில்லை சூர்யாவுக்கு வாய்த்திருக்கிறது.







\\
அறையில் இருந்த நாட்களில் பகல் முழுவதும் பாடல்களால் நிரம்பியிருந்தது அறை...

சும்மா சொல்வதற்கல்ல பாடல்கள் எங்களுள் எவ்வளவு தூரம் கலந்திருக்கிறது என்பதை அனுபவித்தவர்களுக்கு தெரியும்...

பாடல்கள் தருகிற அனுபவங்களைப்பற்றி பேச வேண்டும் என்பது பல நாள் ஆசை அதற்கான தருணங்கள் இன்னும் கூடவில்லை, புதுவருடத்தில் ஆரம்பிக்கலாம் அந்த அற்புதமான அனுபவங்களை இப்போதைக்கு பாடல்கள் காலத்தை மறக்கச்செய்கின்றன அல்லது வேறொரு காலத்துக்குள் எங்களை அழைத்துப்போகின்றன என்கிற சிறுகுறிப்போடு நிறுத்தி;இது பற்றிப்பேசப்போனால் இந்தப்பதிவின் நீளம் உங்களின் ஏகோபித்தஎரிச்சலை பெறக்கூடும் என்கிற எச்சரிக்கை உணர்வில் நிறுத்தி விடுகிறேன்.

Friday, December 26, 2008

அலை செய்த துரோகம்...

கொஞ்சம் பொறு அலையே -உன்னோடு
கொஞ்சம் பேசவேண்டியிருக்கிறது!
என் சிறுவயதிலிருந்து
என்னை நீ பார்த்திருக்கிறாய்
அம்மாவுடையதோ அல்லது அப்பாவுடையதோ
கைகளைப்பற்றிக்கொண்டு...
உன் பெரியதும் சிறியதுமான அலைகளுக்கு
நான் பயந்து பயந்து நடந்த நாட்களில் இருந்து
என்னை உனக்கு தெரியும்!
ஒருவேளை அதற்கு முன்னர் இருந்தே
உனக்கு என்னை தெரிந்திருக்கலாம் - ஆனால்
எனக்கு உன்னை அப்பொழுதிலிருந்துதான்
அடையாளம் கண்டு கொள்ள முடிந்திருக்கிறது...
அந்த நாட்களில் இருந்து இப்போது
அவளோடு நடந்த நாட்கள் வரைக்கும்
உனக்கு என்னை நன்றாகவே தெரியும்!
இதுவரையும் உன்னிடமிருந்து நான்
எதையும் மறைத்ததில்லையே!
என்னுடைய பள்ளி நாட்களின்
உறவுகளும் பிரிவுகளும்
என்னுடைய சிறுபராயத்தில்
நீ கொடுத்த சிப்பி சோகிகளும்
நான் வளர்த்த மீன்களின் தொட்டிக்கு
நீ கொடுத்த பூக்கற்களும் சங்குகளும்
பழைய புத்தகங்களின் பக்கங்களில்
நான் செய்து விட்ட கப்பல்களும்
என் பெயரெழுதி போத்தலில் அடைத்து
என்னால் முடிந்தவரை தூரத்தில்...
உனக்குள் அதனை எறிந்ததும் என சிறுவயதில்
நம் கொடுக்கல் வாங்கல்கள்
நம் நட்பின் பரிமாற்றங்களாகத்தானே இருந்தது...

உந்தன் காற்றோடு நான் பட்டமேற்றி விளையாடியதும்
உன்னோடு சேர்ந்து நான் நீச்சல் பழகியதும்
அதன் பிறகு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம்
உந்தன் அலைகளில் நான் மிதந்திருந்ததும்
நம் நட்பின் நெருக்கத்தை அதிகரித்திருந்ததே...

வருடம் ஒரு மறை வரும் நம்மூர் கோவிலின்
தீர்த்ததிருவிழாவில் ஊரையே மொத்தமாய்
பார்த்த சந்தோசத்தில் நீ துள்ளி விளையாடுவதும்
சில வருடங்களுக்கொரு முறை வரும்
ஏதோ ஒரு தினத்தில் நம்மூர் கோவில்
தெய்வங்கள் எல்லோரும் உன்னை
தேடிவந்து நீராடிச்சென்றதும் என
ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்
எனக்கும் உனக்குமான நெருக்கம்
அதிகமாகத்தானே ஆகியிருக்கிறது....

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
என் நண்பன் ஒருவனை நீ பறித்துக்கொண்ட பொழுதில்
அவனை உன் கரையிலேயே நெருப்பாக்கி
அவன் சாம்பலையும் உனக்குள்ளேயெ கரைத்ததற்காய்
உன்னோடு நான் கோபித்துக்கொண்ட அந்த நாட்களுக்கு பிறகு...
அந்த சோகத்தை மறப்பதற்கு கூட
உந்தன் கரையில் இருந்துதானே அழுதேன்
அப்பொழுதும் நீதானே வந்து தேற்றினாய்
அதன் பிறகு நான்
உன்னோடு பேசுவதைக்குறைத்திருந்தேன்
பார்க்க வருவதை தவிர்த்திருந்தேன்
பின்பொரு சந்தர்ப்பத்தில் நெடுநாட்களின் பின்னர்
அவளை முதன் முதலில் சந்தித்த நாளில் கூட...

உன்னைப்பபார்க்க வந்து
நெருக்கமான நண்பர்களைப்போல
தழுவிக்கொண்டோமே நினைவில்லையா?!
அதன் பிறகு அவளும் நானும்
நீயும் நிலாவும் மட்டுமேயான நாட்களில்
நேரம் போவதே தெரியாமல்
பேசிக்கொண்டிருக்கிற எங்களுக்கு
ஈரம் சேர்த்த காற்றை அனுப்பி
நேரத்தை நினைவுபடுத்துவாயே மறந்து விட்டாயா?

எனக்கும் அவளுக்கும் இடையிலான
நெருக்கமான தருணங்கள் கூட
உன் கரையில்தானே நிகழ்ந்திருக்கிறது
இவ்வளவு ஏன்
என் முதல் முத்தம் கூட
உன் பார்வையில்தானே நிகழ்ந்திருக்கிறது
இப்படி என்னுடைய
சந்தோசம்,சோகம்,சுகம் என
யாவும் உனக்கு தெரியாமல்
நான் மறைத்ததில்லையே

இப்படியிருக்க...

நீ மட்டும் எப்படி!
நெஞ்சைத்தொட்டுச்சொல்!!
நீ செய்தது துரோகம்தானே!
போ அலையே போய்விடு !
நீ செய்தததை மறக்க முடியவில்லை!!
மன்னிக்கவும் முடியவில்லை!!

இருந்தாலும்...
இப்பொழுதும் கூடப்பார்
உன்னிடம்தான் அழுதுகொண்டிருக்கிறேன்
இனியாவது...
எனக்கு தெரிந்தொ தெரியாமலோ...
இப்படியான காரியங்களை செய்யாதே.




\\
நினைத்துபாராத விசயமாய் நிகழந்த சுனாமி நினைத்துப்பார்க்க முடியாத மறக்கவும் முடியாத நிகழ்வுகளை தந்து போய் நான்கு வருடங்களாகிற்று ...சொல்ல முடியாத, வெளியே தெரியாத பல கதைகள் இன்னமும் இருக்கிறது அதன் வடுக்களின் சுவடாக...


\\
சுனாமிக்கு பின்பான நாளொன்றில் எங்களுர் கடற்கரையில் நடந்து கொள்கையில் மனதுக்குள் வந்த பல நினைவுகளை கையிலிருந்த பழைய குறிப்பேடொன்றில் தொடர்பே இல்லாமல் கிறுக்கியிருந்தேன் அப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாய் எழுதிய கடல் குறிப்புகளில் இருந்து சில வரிகளை சேநர்த்தெழுதியிருக்கிறேன்...(22/01/05)

நேற்றே தட்டச்சி முடித்திருந்தேன் பதிவாக்குவதற்கான நேரம் கிடைக்கவில்லை இன்றைக்கு வந்தவுடன் பதிவாக்கி இருக்கிறேன்.

26/12/2008
4.35pm
K.S.A


\\

சுனாமிக்கு பின்னர் கடற்கரை பிரதேசத்திலேயே வேலை செய்திருந்தாலும் கடலுடனான நெருக்கம் குறைந்துதான் இருக்கிறது...கடற்கரையிலேயே வேலை செய்திருந்தாலும் ஊரைவிட்டு வரும்பொழுதே திருகோணமலை கடலின் அலைகளினுடே கண்ணுக்கெட்டிய துரம் வரை நடந்து திரும்பினேன்.

அதே போலத்தான் எங்களுர் கடற்கரையிலும் கால் நனைக்காமல் இருந்த என்னை இரண்டு சந்தர்ப்பங்களில் கடலே அழைத்திருந்தது.

Wednesday, December 24, 2008

என் முதல் தோழிக்கு பிறந்த நாள்...

அவளுக்கு வெள்ளந்தி மனது அவள் நிறத்தைப்போலவே மூன்றாவது வருடமாக அவள் பிறந்த நாளுக்கு அவளோடு இல்லாமல் இருக்கிறேன் காலையிலேயே அழைத்துப்பேசி இருந்தாலும் அவளை கட்டிக்கொண்டு உச்சி முகர்ந்து வாழ்த்துசொல்லவும் அவளிடமிருந்து ஆசீர்வாதங்களும்,பரிசும், இனிப்புகளும் பெற முடியாமலும் போனது வலிக்கத்தான் செய்கிறது, காலம் போய்கொண்டிருக்கிறது...இன்னும் எத்தனை பிறந்த நாட்கள் இப்படி பிரிந்திருக்க வேண்டுமோ என்ன செய்வது:(

வா உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது என்பது அவள் இப்பொழுதெல்லாம் சொல்கிற முதல் வார்த்தையாய் இருக்கிறது, வந்து என்னை கண்டு கொள் பின்னர் யோசிக்கலாம் நீ யாழ்ப்பாணத்தை விட்டு போவதையும் அங்கு ஜீவிக்க விரும்பாதையும் என்று தன் அன்பின் ஆயிரங்களில் ஒரு பங்கை எனக்கு காட்டிக்கொள்வாள்...

"நீதானே ஒரு கடிதம் போடாத ஆள்" என்று நான் ஆயிரம் முறை தொலைபேசியில் அழைத்தாலும் சொல்கிறவள், கடிதங்கள மீதான என் காதலுக்கு இவளும் ஒரு காரணம்! அவள் கிறுக்கலான கையெழுத்துக்களில் நெருக்கமான மனதினை அழகாய் தருகிறவள்..."ஒரு படம் அனுப்பு பார்க்கலாம் என்றாலு நடப்பு காட்டுகிறாய்" என்பதும் நான் புகைப்படங்கள் எடுப்பதில்லை என்கிற என் வாதங்களை மீறிய அவள் குற்றச்சாட்டு!

நான் அவளோடு இருந்த நாட்களில் எல்லாம் என் எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் என் பக்கமே வாதாடுகிற அவள் அன்புக்கு தெரிவதில்லை அடுத்த கோணங்கள் 'அவன் அப்படிச்செய்கிற ஆள் இல்லை' அல்லது 'அவன் அப்படியானவன் அல்ல' என்பது அவள் வாதமாக இருக்கும் அந்த பிரச்சனைகளை ஒரு தீர்வுக்கு கொண்டு வந்த பிறகுதான் அது பற்றி என்னிடம் விவாதம் செய்வதும் என்னை கேள்வி கேட்பதும் அவளுக்குத்தான் என்னைப்பற்றி அங்குலம் அங்குலமாய் தெரிந்திருக்கிறதே பிறகென்ன :)

'இனிமேல் உனக்காக கதைக்கமாட்டேன் எக்கேடு என்றாலும் கெட்டுப்போ' என்று சொல்லிக்கொண்டாலும் அதற்கு நான் காட்டுகிற பொய்க்கோப முறுக்குகளுக்கே குழைந்து போய்விடுகிற லேசான மனதுக்காரி..எதுவும் பேசாமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியேறுகிற என்னை "தேத்தண்ணியை குடிச்சுட்டு போ" என்கிற முகம் பாராமல் சொல்கிற வார்த்தைகளிலேயே கட்டிப்போட்டு விடுகிறவள்! அவள் கையால் தேநீர் குடிக்கிற நிகழ்வும் என் சமீபத்திய கனவுகளில் அடிக்கடி நிகழ்கிறது...


வெகுவிரைவில் அவளை சந்திக்க வேண்டும் என்றிருக்கிறேன், அவள் என்னிடம் கேட்டிருப்பது தான் இந்தியா போய் பார்க்க வேண்டும் என்பது; நானும் சொல்லி இருக்கிறேன் நான் ஊருக்கு வருகையில் அழைத்துப்போகிறேன் என்று. 2009 ஏப்பரல் மாதம் அநேகமாய் அது நிகழக்கூடும்...

அவளையும் ஊரையும் பார்ப்பதற்காகவாவது ஊருக்கு போயாக வேண்டும் அதற்கான விருப்பங்களும் சூழ்நிலைகளும் இல்லாமல் போனாலும்...


சரி..! சரி..! சொல்ல வந்த விசயத்தை மறந்து அவளைப்பற்றி சிலாகிப்பதே வேலையாகி விடுகிறது எனக்கு! அவள் சார்ந்து என்ன விடயம் பேச ஆரம்பித்தாலும்.


1951-12-24 இல் பிறந்த அவளுக்கு இன்று பிந்தநாள், நான் கொண்டாடுகிற நாள், இந்த முறை அவள் பிறந்த நாளுக்கு உங்களையும் அழைத்திருக்கிறேன் சரியா?(இந்த அழைபை ஏற்றுக்கொள்வீர்கள்தானே ஏனெனில் இனி இன்னும் சில இப்படியான அழைப்புகள் வரக்கூடும்...)

மிக மெல்லிய மனதுக்காரியான நல்லவள் ஒருத்திக்கு நான் வாழ்த்து சொல்கிற தருணத்தில் நீங்களும் வாழ்த்த வேண்டாமா...



பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா...


இந்த பிறந்த நாளிலும்...
நான்தான் உன்னிடம் கேட்கிறேன்
இன்னும் நிறையப் பிறந்தநாட்களை
நீ என்னருகில்
இருந்து கொண்டாட வேண்டும்
நான் கேட்கும் வரை
நீ பிறந்தநாள் கொண்டாட வேண்டும்...

வரம் தருவது
உனக்கொன்றும் புதிதல்லவே
இந்த வரத்தையும் எனக்கு
தந்து விடு!


//
அம்மாவின் பிறந்த நாளுக்கு பதிவெழுத வேண்டும் என்பதை விட அவளுக்கான் என் வாழ்த்துக்களை என் மனதார சொல்ல வேண்டும் என்கிற எண்ணமே நிறைய இருந்தது என்னவெணன்று எழுதி பதிவு போடுவது என்று தெரியாமல்தான் இணையத்துக்கு வந்தேன்...(இந்த நாட்களில் இணையம் கிடைப்பதும் பெரும் கஷ்டமாய் இருக்கிறது இப்பொழுதுதான் சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது)அலுவலக வேலையின் குறுக்கிடல்களுக்கு மத்தியில் சட்டென்று தோன்றிய உணர்வுகளில் இருந்து இவ்வளைவையும்தான் கோர்வையாக்க முடிந்திருக்கிறது.

//
திரும்பவும் உன் சந்தோசத்திற்கும் நிறைவிற்கும் மனதார்ந்த வாழ்த்துக்கள் அம்மா தெய்வங்கள் நீ தொழுகிற தெய்வங்கள் எப்பொழுதும் உன் கூட இருக்கும்...

//
என் குடும்பத்தார்,நண்பர்கள், நீங்கள் எல்லோர் சார்பாகவும் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடுவதிலும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதிலும் புதியதொரு சந்தோசம் கிடைத்திருக்கிறது.


24-12-2008
07.07pm
KSA.

Thursday, December 18, 2008

எழுதாத குறிப்புகள்...

எழுதுவதற்கு நிறைய இருக்கிறதாய் தெரிகிறது என்ன காரணமோ எழுதவே முடியாமல் இருக்கின்றன நாட்கள்.அழுத்தமாய் இருக்கிற மனது கிடந்து சலிக்கிறது.கம்பி வேலிக்குள் அடுக்கடுக்காய் உட்கார்ந்திருக்கிற போட்டபிள் கபினெட்டுகளில் ஏதோ ஒன்றில் வசிக்கிற உடலுக்கு தெரியுமா அதன் உயிர் பயணங்களையும் புத்தகங்களையும் சுவாசிக்கிறதென்று உடல் அது பாட்டுக்கு கட்டிலோடு தஞ்சம் புகுந்து விடுகிறது, தீர்ந்து போகாத சில பிரச்சனைகளும் அவற்றோடு சேர்ந்து கொள்கிற இன்ன பிறக்களும் தூக்கம் வருகிற பொழுதுகளை குறைக்க சாண்டில்யனின் கடல் புறாவை வாசிக்கிறதற்கான மனோநிலை சற்றும் வரமாட்டேன் என்கிறது...வாசிக்காமல் கிடப்பிலிருக்கிறது அது!

கணையாளியின் கடைசிப்பபக்கங்களை படிப்பதற்காய் வெளியில் எடுக்கவில்லை இன்னமும்...

வலது காலில் மாவு கட்டு போட்டிருக்கிற எனக்கு இடது கால் விரல்களுக்கிடையில் காயம் வந்திருக்கிறது,இடது காலை மட்டுமே பாரம் கொடுத்து பயன் படுத்துகிறதில் காலும் இடுப்பும் வலியாயிருக்கிறது.

சுயவிபரக்கோவைகளில் பொழுது போக்கு என்பதில் வாசித்தலும் பயணித்தலும் என்று எழுதுகிற ஒரு மனது இரண்டரை வருடங்களாய் ஜன்னல் திறக்காத கன்டெய்னர் அறைக்குள் எப்படி அடைகிறது என்பது தமிழ் மணத்துக்கு வெளிச்சம்...!


பதிவு எழுத முடியாது என்பதல்ல...எழுதுகிற மனோநிலநிலை கிடையாது...
எப்பொழுதும் உற்சாகமாய் இருப்பதாய் நடிக்க முடிவதில்லை எனக்கு! போலிகளில் வாழ்வதில்லை புரிதல்கள் நிரம்பிய மனது...!


சில பாடல்கள் தருகிற சிலாகிப்புகள் பற்றி பேச வேண்டும் என்பது என் நெடு நாளைய ஆசை ஆனால் என் சோம்பல்களில் அவை தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது ...

அப்படி நான் பேசப்போகிற படல்களில் முதல் பாடல்...
அனேகம் நடிகை சோபனாவுடையதாய் இருக்கலாம் அல்லது ஷாலினியுடையதாய் இருக்கலாம்,இரண்டு பாடல்களும் இடம்பெற்ற திரைப்படம் ஒரே இயக்குனருடையது.

அவை என்ன பாடல்கள் என்பதை சரியாகச்சொன்னால்...முதலில் சொல்லுங்கள் பிறகு பார்க்கலாம்!

பல நாட்களாய் என் ஆரம்ப காலத்து வரிகளை தேடிக்கொண்டிருக்கிறது மனது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை...ஏன் இந்த வலை ஆரம்பித்த நாட்களில் நான் எழுதிய வரிகள் எல்லாம் பல வருடங்களின் முன்னர் நாட்குறிகப்புகளிலும் துண்டு காகிகதங்களிலும் எழுதியவையாகத்தான் இருந்திருக்கின்றன,சில வரிகள் மனதிலேயே கிடந்திருக்கின்னறன
எழுதாமல் புதைய விட்ட வரிகளை என்னை சபித்துக்கொண்டே தேடிக்கொண்டிருக்கிறது மனது...


இருந்தும் அந்த ரம்மியமான மனோநிலை என்பது தொலைந்து போயிருக்கிறது இப்பொழுதிலிருக்கிற ஏகாந்தம் பிடிக்காமல் இல்லை என்றாலும் அந்த மொழிகளை தவிர்ப்பதை விரும்பவில்லை மனது...

09-12-2008.


சேர்துக்கொண்ட குறிப்புகள்:

கடந்த வியாழக்கிழைமையில் இருந்து மீண்டும் வலி ஏற்பட்ட காரணத்தில் வேலைக்கு வர முடியாமல் அறையிலேயெ அடைந்திருந்தேன் சில ஹிந்திப்படங்கள் தமிழ் படங்கள் பாடல்கள் என பார்த்திருக்கிறேன் நா காமராசனின் தாஜ்மஹாலும் ரொட்டித்துண்டும் என்ற புத்தகம் வாசித்திருக்கிறேன்.தூக்கம் வருவதில்லை என்று சொன்னாலும் கடந்த நாட்களில் நிறையவே துங்கினேன் என்பதுதான் உண்மை...


இன்னும் சில புத்தகங்கள் கிடைத்திருக்கிறது.

கடைசியாய் எழுதியிருந்த பதிவில் இணைப்பதற்காய் படங்களும் பதிவாய் எழுதுவதற்காய் இந்த வரிகளையும் எழுதிவைத்திருந்தேன் அசௌகரியங்களின் மிகுதியில் குழம்பல் நிலமைகளில் பதிவாக்கப்படாமலே கடந்து விட்டது நாட்கள்.


பின்குறிப்புகள்...

//
கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பின்னர் வந்திருக்கிறேன் இணையம் பக்கம் நிறைய விசயங்கள் நிகழ்ந்திருக்கிறது, எவ்வளவோ படிக்க இருக்கிறது.

//
பதிவிடுவதற்காய் எழுதியிருந்த வரிகள் சில அழிந்து போயிருக்கின்றன சில பதிவுகள் இல்லாமல் போயிருக்கின்றன உங்களுக்கு சந்தோசம்தானே.

//
என்னடா ஒரு பின்னூட்டப்பதிவரின் ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லையே என்று யாரேனும் தேடவில்லை போலிருக்கிறது ம்ம்ம் பதிவுலகம் மிகப்பெரியது...

//
இப்பொழுதும் சிறிய வலி மீதமிருப்பினும் இதற்கு மேலும் அடைபட்டிருக்க முடியாததில் கடைமைக்கு வந்திருக்கிறேன்...

Saturday, December 6, 2008

ஒரு அவசர அறிவிப்பு...!!!

இது தமிழ்நதி அக்காவிடமிருந்து வந்த அறிவிப்பு ஒன்று.நேற்று விடுமுறையில் இருந்ததால இணையத்துக்கு வர முடியவில்லை இன்றும் இப்பொழுதுதான் வர முடிந்தது...


அன்பு நண்பர்களுக்கு,

இலங்கையில் பல்லாண்டுகளாகத் தொடரும் போருள் சிக்கி அவதியுறும்
தமிழ்மக்கள் குறித்த விழிப்புணர்வையும் நிரந்தர விடிவையும் வேண்டி,
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்
கவிஞர்கள் எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9
மணியிலிருந்து மாலை 5 மணிவரை மெரினா கடற்கரை காந்தி சிலையருகில் கூடி ஒரு
கண்டனக் கவியரங்கம் நடத்தவிருப்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கக்
கூடும். இந்நிகழ்வு குறித்த கூடுதல் கவனத்திற்காக உங்கள் அனைவரது
ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். உங்கள் இணையத் தளங்களில்
இந்நிகழ்வைப் பற்றி ஒரு அறிவித்தலையோ பதிவினையோ இடுவதின் வழியாக அதனைச்
சாத்தியப்படுத்தலாம். வார்த்தைகளன்றி வேறேதுமற்ற நாம் செய்யக்கூடியது
அது ஒன்றுதான் அல்லவா?


நட்புடன்
தமி்ழ் கவிஞர்கள் கூட்டமைப்பு

குறிப்பாக...!
உங்கள் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி...