Sunday, October 26, 2008

நான் படம் பார்த்த கதைகள்...

சினிமா என்பதை விட படம் எண்டால் சரியா இருக்கும் எண்டு நினைக்கிறன் இப்ப கூட படம் எண்டால் காணும் சாப்பிடாம இருந்து பாப்பன் ஆனால் முந்தின மாதிரி என்ன படம் எண்டாலும் கிடையாது இப்ப படம் எப்பவும் பாக்கலாம் என்று இருப்பதனால் தெரிவு செய்த படங்கள் மட்டும்தான் பாக்குறது...நான் படம் பாத்த கதைகள் கனக்க இருக்கு!இன்னொரு விசயம் நான் படம் பாத்தா கதையை வசனம் விடாம சொல்லுற ஆள்,எங்கடை ஊரில படம் பாக்கேலாத நிலமை இருந்ததுதான் அந்த நேரத்துலயே நானெல்லாம் முடிந்தவரை படம் பாக்கிற ஆள் அதனால சினமா பற்றி எழுதச்சொன்னால் அந்த நினைவுகள்தான் மனதுக்குள்ள வந்திச்சுது ஆனா இப்ப கொஞ்ச நாளாவே பழைய விசயங்கள் மறந்து போய்க்கொண்டிருப்பதாக் உணர்கிறேன் அதுவும் நல்லதுக்குத்தான்!

நான் நல்லா படம் பாப்பன் அதே நேரம் நல்லா படம் காட்டுவேன்...



இனி கேள்விகளுக்கு வருகிறேன்...

*
எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் ? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
வயது எப்படியும் ஒரு ஒரு ஏழு வயதிருக்கலாம் அல்லது அதை விட குறைவுதான் சரியாக நினைவில்லை நான் முதல் பார்த்த படமாக இன்னமும் நினைவில் இருப்பது மௌன ராகம்தான் அதுக்கு முந்தியும் படங்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் இப்ப ஞாபகத்துக்கு வராதாம்... இந்தப்படம் பக்கத்து வீட்டிலதான் பாத்தது அப்ப எங்கடை ஊரில எல்லா இடமும் ரிவி கிடையாது படம் பாக்குறதுமில்லை ஆனா எனக்கு என்னமோ படப்பைத்தியம் பிடிச்சிருந்துது அந்த நாளைல அவ்வளவு படங்களை பர்த்து தள்ளி இருக்கிறேன்...ஒரே படத்தையே திரும்பத்திரும் போட்டாலும் பாக்காம விடுவதில்லை அப்பொழுது...

பக்கத்து வீட்டில படம் பாக்கிற படியாலை இவன் எத்தனை தரம் இந்தப்படத்தை பாத்துட்டான் என்னடா விளங்குது இந்தப்படத்துல அப்படி என்று கேட்டவா ஜெயராணி அக்கா ஆனா நான் அப்ப ஒண்டும் சொல்லேல்லை மௌனராகம் படத்துல கார்த்திக் செத்து விழுகிற காட்சியும் மோகன் ரேவதியை படிச்சிருக்கு என்று தனியே சொல்கிற காட்சியும் 'போடா டேய்' 'சும்மா இருடா சோம்பேறி' எண்டு ஒருத்தர் சொல்லுவாரே அதுவும் பல நாட்களாக நினைவிருந்தது...அதற்கு பிறகு திரும்ப தனியா படங்களை பார்க்கிற காலங்களில் இது என்ன படம் எண்டு தேடிப்பிடிச்சு பார்த்தேன் மணிரத்னம் நான் முதலில் ரசித்த ஒருவர்...

அப்ப நான் என்ன உணர்ந்தேன் என்று எனக்கு நினைவிருந்த காட்சிகள் உங்களுக்கு சொல்லக்கூடும் ஆனால் எனக்கு புரியவில்லை அப்பொழுது நான் நினைத்தது சொந்தமா ரீவி டெக் வாங்கி பிடிச்ச படம் எல்லாம பாக்க வேணும் எண்டு.

*
கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
இங்கு வருவதற்கு முன்னர் கொழும்பில் பார்த்த படம்தான் நினைவிருக்கு சினி சிட்டியில் பார்த்த எஸ் ஜே சூர்யா நயன்தாரா நடிச்ச கள்வனின் காதலி என்று நினைக்கிறேன் அதற்கு பிறகு எந்தப்படமும் நினைவில்லை ஆனால் யாழ்ப்பாணத்துல ராஜா மனோகரா அரங்குகளில் படம்பார்த்தது போல வேறெங்கிலும் பார்க்கவில்லை...அது ஒரு தனி சுவாரஸ்யம்! படம் பாக்க அங்கே போவதில்லை தியேட்டரை கலக்குறதுக்குதான் அங்கே போயிருக்கிறேன் நாங்கள் கலக்காமல் விட்டால் வேறொரு செட் கலக்கி கொண்டிருக்கும் அதனால நாங்களும் முடிஞ்சவரை கலக்ககி இருக்கிறோம் தியேட்டரை அதனால படத்தை முழுசா பாக்க வேணும் எண்டால் படம் வந்து சில வாரங்கள் ஆனபின்பு ஒரு நாள் போய் பார்த்துக்கொள்வேன் ...

எனக்குப்பிடித்த சில படங்களை எனக்கு நெருக்கமானவளோடு உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்பது என் ஆசை ஆனால் அந்தப்படங்கள் அரங்கில் வர வேண்டுமே...

*
கடைசியாக அரங்கிலன்றி பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கடைசியாகப்பார்த்தது ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே...
வசந்த் இயக்கிய இந்தப் படத்தை பற்றி என்ன சொல்ல காதல் சம்பந்தமா இன்னுமொரு படம் படம் பிடிச்சுப்போனதற்கு ஷ்யாம் என் சாயல்கள் உள்ள ஒரு பாத்திரத்தை செய்திருந்ததும் காரணமாக இருக்கலாம்...

படம் பார்த்து உணர்ந்தது எதுவும் இல்லை...!சினேகா அழகான பெண்மை என்பதைத்தவிர!

காதல் அழகான விசயம்...

இன்னொரு படம் உள்ளத்தை அள்ளித்தா...
இந்தப்படத்தைப் பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை ரம்பாவுக்காகவே பார்த்த படம் முழு நீள நகைச்சுவை சித்திரம் சுந்தர்.C ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கொடுத்த நகைச்சுவை படங்கள் உள்ளத்தை அள்ளித்தா மற்றும் மேட்டுக்குடி இரண்டும் கைவசம் இருக்கிறது டிவிடியாக மேட்டுக்குடி பார்த்த குறையில் இருக்கிறது...

படம் பார்த்து என்ன உணர்தேன் எண்டால் ரம்பா சின்னப்புள்ளையள் மாதிரித்தான் இப்பவும் இருக்கிறா... ;)
பழனிபாரதி திரும்பவும் எழுதுகிறார் என்று கேள்வி ஆனால் அவர் கொடுத்த ஹிட்ஸ் மறக்க முடியாதவை...
சிற்பி அரபியே இசைகளில் கலந்து கட்டி அடித்தவர் என்பது திரும்பவும் நினைவுக்கு வந்திருக்கிறது...(மேட்டுக்குடியில் இது சாதாரண ரசிகனுக்கே புலப்படும்)

*
உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா...?

தாக்கிய தமிழ் சினிமா நிறைய இருக்கு தாக்கிய என்பதை விட உணர்வுகளில் மாற்றங்களை உண்டு பண்ணிய படங்கள் பல இருக்கு!

துலாபாரம்-இந்தப்படத்தை முதலாவது படமா போட்டு அதற்கு பிறகு மூன்று படங்கள் விடிய விடிய பாத்தும் இந்தப்படம் மட்டும்தான் அடுத்த நாள் முழுக்க கண்ணுக்குள்ள வந்துகொண்டிருந்தது...

அலைகள் ஓய்வதில்லை-
முதன் முதலாய் எனக்குள் காதல் சொன்ன படம்.
காதல் காதல் காதல் நிரம்பிய சின்னச்சின்ன கவிதைகளை இசையோடு சொன்ன படம்...
இந்தப்படத்தை எத்தனை முறை பார்தேன் என்று எனக்கே தெரியாது...
அழகு மேரியை(ராதாவை) இப்பொழுதும் மறக்க முடியவில்லை...
காதல் அழகானது அதன் அலைகள் ஓய்வதில்லை...!

மகாநதி-
இதற்கான காரணம் சொல்லத்தேவையில்லை

குட்டி-
இதற்கான காரணமும் சொல்லத்தேவையில்லை

பருத்திவீரன்-
படம் முழுக்க நிரம்பியிருந்த இயல்பும் படத்தின் முடிவு தந்த ரணமும்..


காதல்-
உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன்...
இயல்பாய் ரணம் செய்து போன படம்.



சேது-
வார்த்தை தவறி விட்டால் கண்ணம்மா...
எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பார்த்து மனதைப்பிசைந்த படம்...

மொழி-
சில விசயங்களைப்பேசிய படம்...
ஜோதிகாவின் கண்களும் பேசியது!

இவற்றோடு இன்னும் பல படங்கள் இருக்கிறது பார்த்த பல பிறமொழிப்படங்களும் இருக்கிறது பெயர் நினைவுக்கு வரவில்லை.

*
அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
இதைப்பற்றி என்னைக்கேட்டால் சிரிப்புத்தான், ஒரு விதமான மற்றவார்களுக்கு பிடிக்காத புன்னகைதான் பதிலாக இருக்கும் சொல்ல நிறைய இருக்குப்பா...:)


ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
சினிமா தொழில் நுட்பங்களில் ஒளிப்பதிவு கலை இசை அப்படின்னு பல பிடிச்ச துறைகள் இருந்தாலும் என்னுடைய கவலை எல்லாம் உதவி இயக்குனர்கள் மீதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிசப்பட்டு ஒரு படத்தையேனும் எடுத்துவிட வேண்டும் என்று வருகையில் அதற்கு எத்தனை விமர்சனங்கள்!சிந்தனைகளை களவாடப்படுகிறது என்று தெரிந்தே மொளனமாக இருப்பவர்கள்...

*
தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா...
இல்லாமலா ஆரம்ப இலக்கியமே சினிமாதானே...ஆனால் முன்பு வாசித்ததைப்போல கிசுகிசுக்கள் பத்திக்கிச்சு மாதிரியான எல்லாவற்றையும் வாசிப்பதில்லை என்றாலும் புதுப்ட விமர்சனங்களை படம் பார்த்த பிறகு வாசிக்க வேண்டும் என்று எவ்வளவு முயன்றாலும் வாசிக்காமல் இருக்க முடிவதில்லை அநேகமான படங்களுக்கு...

தமிழ் சினிமா என்பதை விட சினிமா பற்றி நிறைய வாசிக்க வேண்டும்.
அறியாத அல்லது மறந்து போன கலைஞர்கள் மற்றும் படங்கள் பற்றி; படங்கள் பார்த்தும் வாசித்தும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது.



*
தமிழ் சினிமா இசை....?

பல நேரங்களில் துணையாக இருந்திருக்கிறது எனக்கு புத்தகங்களைப்போலவே!

தமிழ் சினிமா இசை ரொம்பப்பிடிக்கும்- ரொம்பப்பிடித்தது இளைய ராஜாதான்..

வளர்ந்து கொண்டே இருக்கிறது இசை...

*
தமிழ் தவிர வேறு இந்திய,உலக மொழி படங்களை பார்ப்பதுண்டா ? அதிகம் தாக்கிய படங்கள்?
நிச்சயமா;ஆரம்ப காலத்தில கராத்தே சம்பந்தமான படங்கள் பார்த்ததுண்டு அப்படியே படிப்படியாய் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன் ஆரம்பம் என்னவோ படம் என்ன சொல்கிறது என்று புரியாமல் பார்த்தாலும் பின்னர் ஓரளவுக்கேனும் புரிந்து கொள்கிற முயன்று கொண்டிருக்கிறேன்...

மற்றய இந்திய மொழிப்படங்களின் பரிச்சயம் யாழ்ப்பாணத்தில் இருக்கும்வரை கிட்டவில்லை இந்தி,மற்றும் மலையாளப்படங்களின் பரிச்சயம் சவுதி வந்த பிறகே கிடைத்திருக்கிறது பல மலையாளப்படங்களை பார்திருக்கிறேன் ஆனால் சொல்லிக்கொள்ளும்படி சமீபத்தில் பார்த்தது

ஒரே கடல்-
மலையாள சினிமாவிலிருந்து சில கேள்விகளை கேட்டுப்போன படம்!

நான் ஒரு ஜாக்கிசான் ரசிகன்...
The New police story
கடைசியாக பார்த்த ஜாக்கிசான் படம்

Black(இந்திப்படம்)-
வேலை முடிந்து அறை திரும்பி ஆடைகளை மாற்றக்கூட எழும்பாமல் அமர்ந்து பார்த்த படம் என்ன நடிப்புப்பா

Fire-
தீபா மேத்தாவின் இன்னொரு கேள்வி...

Titanic -
நான் பார்க்க வேண்டும் என்று பார்த்த முதல் ஆங்கிலப்படம்,பிரம்மாண்டமாய் ஒரு காதல்...

இப்பொழுது பார்க்க வேண்டும் என்று நினைத்திருப்பது
தாரே ஜமீன் பர்(இந்தி)
சில மலையாளப்படங்கள்...
this moon is mine (சிங்களப்படம் பெயர் பிழையாய் இருந்தால் திருத்தவும், சொல்லி இருக்கிறேன் வந்து சேர்ந்தால் பார்க்கலாம்)
சிருங்காரம் அரவிந்சாமி கொளதமின்னு பலர் நடிச்ச படம்
சில ஆங்கிலப்படங்கள் (பதிவர்கள் சிபாரிசு)




*
தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இவ்வளவு தமிழ் படங்களை பார்த்திருக்கிறேன் இன்னமும் பார்பேன் என்பதே ஒரு தொடர்புதானே...
சந்தர்ப்பம் கிடைத்தால் இலங்கை தமிழ் சினிமா வளர்ச்சி கண்டு கொண்டிருந்தால் அந்தத்துறையில் முடிந்தவரை பங்கெடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது... முடிஞ்சா ஒரு படத்தை இயக்கிடணும்னு இருக்கிறேன் இலங்கைல(அட நம்புங்கப்பா)


தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இன்னும் திறமைசாலிகள் இருக்கிறார்கள்...
புதிய வரவுகள் இருந்து கொண்டே இருக்கும்!

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு எதுவும் ஆகாது பார்க்க வேண்டிய படங்கள் இருக்கிறது...பார்த்துக்கொள்வேன்,
பிற மொழிப்படங்கள் பார்க்கலாம்.
ஆனால் இந்த நெடுந்தொடர்களில்ன் தொல்லைகள் தாங்க முடியாமல் இருக்கும் என்று நினைக்கிறேன்...


இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த தல தமிழ்பிரியன் இந்த தாமதத்தை பொறுத்துக்கொள்வார் என் நம்புகிறேன் நான் இந்த தொடருக்கு அழைக்கிறது...

ஏற்கனவே எழுதி விட்டார்களோ தெரியாது அவர்கள் எழுதி இருந்தால் இந்தத்தொடரை இதுவரை எழுதாதவர்கள் எழுதலாம்...

சந்திர வதனாக்கா -( இவ சமீபத்தில எழுதின சினிமா சம்பந்தமான பதிவுகளை படிச்சுப்பாருங்கோ)

தோழி நளாயினி... ( நேரமிருக்கோ உங்கடை பதில்கள்தான் கட்டாயம் எண்டில்லை தாமரை அண்ணாவின்ரையாவும் இருக்கலாம்)

அண்ணன் கரூரன்... (அண்ணன் அநேகமாய் சிவாஜி ரசிகராய் இருப்பார் எண்டு நினைக்கிறன்)

இன்னும் யாராவது எழுத இருந்தா எழுதுங்கோப்பா...


பின் குறிப்பு:
1)
தமிழ் மணத்தில் நடந்து கொண்டிருக்கிற கருத்துச்சுதந்திரத்தின் உச்ச பட்ச வெளிப்பாடுகள்,தற்போதைய சூழ்நிலைகள் எழுதுகிற மனோநிலையை சின்னாபின்னமாக்கியிருக்கிறது...

2)
பதிவு எனக்கே திருப்தி இல்லாமல் இருக்கிறது,இன்னும் நிறையப்பேசலாம் போல இருக்கிறது நான் படம்பார்த்த கதைகள், எங்கே போய்விடுவீர்கள் கொஞ்சம் பொறுத்து எழுதலாம் தானே...:)

3)
தீபாவளிக்கு பதிவு போட வேண்டும் என்று இப்பொழுதுதான் யோசித்திருக்கிறன் ஆனால் என்ன எழுதுவதென்று தெரியவில்லை...

எல்லோருக்கும்...
தீபாவளி வாழ்த்துக்கள்...

நன்றி...

Saturday, October 18, 2008

ஒரு தொடர் விளையாட்டு...

பல நாட்களுக்கு முன்னர் தோழி குமித்தா...கேட்டிருந்த தொடர் விளையாட்டுக்கு உடனே பதிவு போட முடியவில்லை. நான் வழமையாக பயன் படுத்துகிற கணினியில் இருந்த பிரச்சனைகளால் இப்பொழுதும் சில பிரச்சனைகள் இருந்தாலும் அதே பழைய கணினியில் வேலை செய்வதால் எனக்குரிய உரிமைகள் அந்த கணினியில் இருப்பதனால் அந்த தொடர் விளையாட்டுக்கான பதிவு இப்பொழுது சாத்தியமாகியிருக்கிறது ...

குமிழ்;அழைப்பிற்கு நன்றி தாமதத்திற்கு மன்னிக்கவும்...

பெரிதாக ஒன்றுமில்லை உங்கள் கணினியில் நீங்கள் தற்பொழுது வைத்திருக்கிற முகப்பு படம் (desktop picture) என்ன இதுதான் அது...




என்னுடைய தெரிவுகள் எப்பவும் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கும். இப்பொழுது சில மாதங்களாய் இருப்பது இதுதான்! இது எனக்கு ரொம்ப பிடித்துப்போன படம் பல பேருடைய பதிவுகளில் இந்தப்படம் வந்திருக்கிறது. நான் எழுதிய வரிகளை இந்தப்படத்தோடு சேர்த்து பதிவொன்றில் போடுவதற்காக செய்திருந்தேன் பின்னர் வரிகளை மட்டும் பதிவாக்கி விட்டு படத்தை கணினி முகப்பில் வைத்திருக்கிறேன்.மற்றபடி அந்தந்த நாட்களுக்கு ஏற்றது போல படங்களை சில நேரங்களில் மாற்றிக்கொள்வேன் தொடர்ச்சியாக இதுதான் இருக்கிறது.

குமித்தா ஒருவரைத்தான் அழைத்திருந்தார் நான் மூன்று பேரை அழைக்கலாம் (வேலை சுலபம்தானே) என்று இருக்கிறேன்...

இந்த தொடருக்கு நான் அழைப்பது...

தல தமிழ் பிரியன் (அந்தப்பொண்ணு படமா இருக்கலாம்...)

நம்ம மங்களூர் சிவா அங்கிள்... (கல்யாணப்படமா இருந்தா பாக்கலாமே...)


கட்டார் கட்டுமான தொழிலதிபர் ஆயில்யன் (என்ன படம் வச்சிருப்பாரு...)

பின் குறிப்பு:

*
நான் அழைத்திருக்கும் மூவரும் தனிப்பட்ட கணினி வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் அதனால இருக்கிற படத்தோட பதிவைப்போடணும் இல்லைன்னா தெரியும்தானே?!
*
யாராவது ஒருவரையேனும் கட்டாயமா மாட்டிவிடணும்;)

Friday, October 17, 2008

ஒரு வருடம்...

நானும் என் கற்பனையும் மொழியோடு பயணம் செய்ய தொடங்கிய நாட்களில் இருந்து உலகம் இனிமையானதாய் தோன்றிற்று...வாசகனாய் மட்டும் இருந்த எனக்குள் ஒரு ரசிகனும் இருக்கிறான் என்பதை அடையாளம் கண்டு கொண்ட பொழுதுகளில் எழுதவும், குறிப்புகளாய் பதியவும் தொடங்கியிருந்தேன் இருந்தும் அநேகம் குறிப்புகளை காற்றிலேயே எழுதியிருக்கிறேன் அருகிலிருப்பவரிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்திருக்கிறேன் ஆனால் அந்தச்சொற்களின் பெறுமதி இப்பொழுது மிகப்பெரிதாய் தெரிகிறது...

எழுதாமல் விட்ட வார்த்தைகளை எண்ணி இப்பொழுது என்னை நானே திட்டிக்கொண்டிருக்கிறேன் எதுவாயிருந்தாலும் எழுதி வைத்திருக்கலாம் என்கிற கேள்வி என்னை அடிக்கடி அவஸ்தைப்படுத்துகிறது...எழுதி வைக்ககாமல் போன விசயங்களுக்காக இப்பொழுது நொந்து கொண்டாலும் இப்பொழுதும் நடக்கிற விசயங்களை எழுதிவைப்பவனாக இல்லை என்பது என்ன நியாயம் என்று தெரியவில்லை...என் சூழ்நிலையும் சோம்பல்தனமும் இதற்கு முக்கிய காரணம்...

தொடர்ச்சியாக எழுதாமல் போனாலும் எழுத முடிகிறவற்றை எழுதலாம் என்கிற முடிவோடு
நானும் சொற்களை சேகரிக்க ஆரம்பித்ததுதான் என் நினைவின் வெளியில் நான்...
அதற்கு காதல் கறுப்பி என்று பெயர் வைப்பதற்கு காரணம் எல்லாம் இல்லை என்று நான் சொன்னாலும் யாரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை இருந்தாலும் கறுப்பி என்பது எனக்கு நான் எழுதிக்கொண்ட இன்னொரு பெயர் மட்டுமே அது நான் கவிதைகள் என்று நினைத்து சொல்லிக்கொண்ட சொற்களையும் எழுதிக்கொண்ட வார்ததைகளுக்கும் முடிவில் என்னை வெளிக்காட்டாமல் இருப்பதற்கான பெயராக இருந்தது ஆரம்பம் முதலே...

ஒரு வாசகனாய் மட்டுமே இருந்தாலும் பொதுவாகவே நிறையப்பேசுகிற எனக்கு (அலட்டல், நல்லா பிளேடு போடுவேன்) எழுதவேண்டும் என்கிற தீர்மானங்கள் இருந்தாலும் தீர்மானங்களை செயல்படுத்துவதில் எனக்கிருக்கிற இயல்பான பலவீனங்களால் எழுதாமல் விடுபட்டுப்போன சொற்களும் மனவெளியில் புதைந்து கிடக்கிற சொற்களும் பேசித்தீர்க்கப்படாமலே என்னை அவஸ்தைப்படுத்தியதில் குறிப்புகளாக எழுதலாம் என்கிற முடிவில் நான் எழுத ஆரம்பித்ததற்கு சில வலைப்பூக்களும் சில நண்பர்களும் காரணம்...இருந்தும் இங்கே எழுதியதை விட எனக்குள் எழுதாமல் இருக்கிற நினைவின் அடியில் மறைக்க முயல்கிற சொற்களே அதிகமாய் இருக்கிறது...பலது என் நாட்குறிப்புகளில் இருக்கிறது...

அந்த வகையில் நான் வலைப்பூ ஒன்றை உருவாக்குவதற்கு முதல் அடி போட்டவர் தோழி நளாயினி! வாசகனாய் மட்டுமே இருந்த என்னையும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் (ஆனால் நான் கருத்தெல்லாம் சொன்தில்லை கும்மி மட்டுமே) என்று சொன்னது உயிர் கொண்டு திளைக்கிற பூக்கள் கொண்டு பேசுகிற நளாயினி , ஆரம்பத்தில் என் பார்வைக்கு கிடைத்த வலைப்பூ சந்திரவதானா அக்காவினுடைய காதல் வலைப்பூதான் வலைப்பூ என்று தெரியாமலே வாசித்துக்கொண்டிருந்தேன் அதில் இருந்து மனஓசை மனஓசையிலிருந்து இலங்கை நண்பர்களின் வலைப்பூக்கள் என்று முதலில் வாசித்தது அநேகம் இலங்கை நண்பர்களுடையதுதான் அப்டியே தோழி நளாயினியோடு ஏற்பட்ட நட்பில் நிறையப்பேசியதில் நீங்களும் எழுதலாமே என்றார் எனக்கும் அப்படி ஒரு அவஸ்தை பல நாட்களாய் இருக்கிறது என்று சொன்னேன் அதற்கு பிறகுதான் இதுக்கு பெயர் வலைப்பூ என்று தெரிந்து கொண்டேன்! இதுக்கு பிறகு தமிழ், தமிழ்னு தேடியதில் மதி கந்தசாமியினுடைய தமிழ் புளொக்ஸ் கிடைக்க அங்கிருந்து ஆரம்பமாயிற்று பயணம்...என்ன எழுதுவது என்று தெரியாமல் கணினிக்கு முன்னால் இருந்து கொண்டு மனதில் வருகிற வார்த்தைகளை தட்டச்சி பதிவுகளாக்கி கொண்டிருக்கிறேன் அநேகம் பதிவுகளை எந்தவிதமான குறிப்புகளும் இல்லாமல்தான் எழுதி இருக்கிறேன் நான் அறிமுகம் செய்து கொண்ட என் முதல் பதிவை படித்தாலே தெரியும் எப்படி எழுதுகிறேன் என்பது எழுதும்இதனைத்தான் எழுத வேண்டும் என்று நினைப்பதில்லை ஆனால் எழுதுவோம் என்று வந்து அமர்ந்தால் நிறைய எழுதலாம் போல் இருக்கிற விடயங்கள் தட்டச்சத்தொடங்கினால் திசைமாறி விடுகிறது அல்லது அவற்றை கோர்வையாக்க முடியாமல் இருக்கிறது...


இப்படி குறிப்புகளால் நினைவு செய்ய வந்ததுதான் என்னுடைய உலகம் முதலில் அப்படித்தான் பெயர் வைத்திருந்தேன் அதற்குப்பின்னர் எழுதியதெல்லாம் ஏதோ ஒரு புள்ளியில் சுழல்கிறதாய் தோன்றவே அதற்கு கறுப்பி என்கிற பெயரோடு காதலையும் சேர்த்துக்கொண்டேன்...


அடுத்தது மடத்துவாசல் பிள்ளையாரடி இவருடைய பல பதிவுகளில் என்னை மறந்து போயிருக்கிறேன்...பழைய நினைவுகளை கிளறியதில்! எது எப்படி இருந்தாலும் கடந்து வந்த நாட்கள் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நினைத்துப்பார்த்து நிகழ்காலம் திரும்புகையில் கடந்துவிட்டவையும், இழந்து விட்ட பலதும் கண்களை ஈரமாக்குவதில் ஆச்சரியம் ஏதுமில்லையே...பல நினைவுகளை மீட்டுப்பாத்துகொள்ள வசதி செய்ததில் என்னால் அவற்றை சரியாக கோர்வையாக்க முடியாவிட்டாலும் பதிய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது சமீபத்தில் க.பிரபாண்ணாவின் நவராத்திரி பதிவொன்றில் கூட சொல்லி இருப்பேன் இதனை...

ஆரம்பத்தில் நான் பெரும்பாலும் வாசித்தவை மனஓசை, மற்றும் நளாயினி கவிதைகள் தளங்களில் இருந்த இணைப்புகள்தான் அதிலிருந்துதான் மற்றவர்களை கண்டு கொண்டேன் அதனாலேயே பழைய பதிவர்கள் பலரையும் வாசிக்கிற அனுபவம் கிட்டியது ..பல நாட்களாய் வாசித்துக்கொண்டிருந்தாலும் பதியத்தொடங்கி ஒரு வருடம்தான் ஆகிறது அதிலும் பெரிதாக எழுதி விடவில்லை ஆனால் நிறைய நட்பையும் அதிக வாசிப்பையும் பெற்றிருக்கிறேன் அந்த வகையில் வலைப்பூக்களுக்கு நன்றி...

அதற்கு அப்பால் இயல்பாகவே எனக்குள் இருந்த வாசகனும் தனிமையும் நிமிடங்களை மணித்தியாலங்களாக்கி மணித்தியாலங்களை அதிகப்படுத்தி வாசித்துக்கொண்டே இருந்ததில் எழுதுவது தடைப்பட்டுப்போனாலும் பல பேருடைய நட்பை தந்திருக்கிறது அப்படிக்கிடைத்த முதல் நட்பு வட்டம் நம்ம வேடந்தாங்கல் குழு ஆரம்பத்துல பின்னூட்டங்களை பர்த்து சிரிச்சுக்கிட்டிருந்த எனக்கு தள சிபி, குசும்பன், மங்களூர்சிவா, புலி(சிவா)-அவரு இப்ப எழுதறது குறைவு மின்னல்-இப்பொழுது மறுபடியும் இவருடைய பின்னூட்டங்களை பார்க்க முடியுது) அப்படின்னு பல பேரு அடிக்கிற கும்மிய பார்த்து இது சூப்பரா இருக்கேன்னு நினைச்சு ரசிச்சிருக்கேன் அப்புறமா மெல்ல மெல்ல நமக்குள்ள இருந்த ரொம்ப பேசுறவனும் வெளிய வர ஆரம்பிக்க நானும் ஆட்டையில கலந்துகிட்டேன்...ஜோதியில ஐக்கிமாயிட்டேன் அப்படி நான் ஆடினமுதல் கும்மில கொஞ்ச நேரத்துக்கு யாருமே முகத்தை காட்டாம வேற வேற பெயர்கள்ள வந்துட்டிருந்தாங்க அப்புறமா முதல்ல வெளிப்பட்டது சென்ஷி அதுவும் நூறை நெருங்கற சமயம்னு நினைக்கிறேன்...


அப்ப ஆரம்பிச்ச நட்பு இப்ப ரொம்ப நெருங்கிட்டம்ல...


எனக்கு இருக்கிற சொற்ப கணினி அறிவோட ஏதோ என்னால முடிஞ்ச வரைக்கும் எழுதணும்னு நினைக்கிற பல நூறு விடயங்களில் ஒரு சிலதையேனும் எழுதிக்கொண்டிருக்கிறேன்...இந்த நேரத்துல எனக்கு வலைப்பூவை உருவாக்குவதற்கு உதவி செய்த நளாயினி அக்காவுக்கும் தாமரை அண்ணனுக்கும் இணையம் சம்பந்தமான தொழில் நுட்ப உதவிகளை அப்பப் செய்து தருகிற தமிழ் பிரியன் அண்ணனுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்...(இன்னும் நிறைய உதவிகள் கேட்பேன்)


இப்படி பல நட்புள்ளங்களை தேடித்தந்திருக்கிற வலைப்பூவை ஆரம்பிச்சு ஒரு வருடமாகியிருக்கிறது இன்று...

இனி...

நெஞ்சு நிறைந்த நன்றிகளுடன்...

உங்களுடைய நட்பை எப்பொழுதும் எதிர்பார்க்கும்

அன்பு,

தமிழன்(கறுப்பி...)

Friday, October 10, 2008

பதிவர் சந்திப்பு பதிவு...





பதிவர் சந்திப்பிற்கு பிறகு (நம்மளையும் பதிவர்னு ஏத்துக்கிட்டாய்ங்கப்பா) அவ்வளவாக இணையப்பக்கம் வர முடியவில்லை...ஓரிரு தடவைகள் வந்திருந்தேன் சிலருக்கு பின்னுட்டமும் எழுதி இருந்தேன் அதுவே பதிவெழுதுகிற நேரத்தை விட அதிகமாத்தான் இருக்கு ஆனாலும் நம்ம ஆளுங்க வேகத்துக்கு என்னால பின்னுட்டங்களைக்கூட எழுத முடியலை!! என்ன வேகமா எழுதுறாய்ங்க! ஒரு நாள் வரலைன்னாலே நிறைய துரம் பின்னுக்கு போயிட வேண்டிடுது.அந்த சந்திப்பிற்கு பிறகு எனக்கும் ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கு... பல சிரமங்களுக்கு மத்தியில் அன்றய பயணம் நிகழ்ந்திருந்தாலும் இரவு ஒன்றரை மணிக்கு அறைக்கு வந்த பொழுது பல நாட்களுக்கு பிறகு எனக்கு பிடித்த விசயமொன்றை செய்து முடித்த நாளாக இருந்தது அன்றய நாள்...

*
நம்ம தல தமிழ் பிரியன் அண்ணன் என்னை உதைக்காம விட்டது அவரோட பெரிய மனசைக்காட்டிச்சு. அப்புறம் சும்மாவா சில மணி நேரங்கள் எனக்காக பசியோட வெயில்ல காத்துக்கிட்டிருந்தாரு; தல இதோவந்திட்டன்; இதோ வந்திட்டன்னு; சொல்லி சொல்லியே வெறுப்பேத்திட்டேன் ஒரு வழியா மூணு மணிக்கு நான் போய் சேந்தப்போ என்னைப்பாத்ததும் அவருக்கு எம்மேல இருந்த கோபம்லாம் போயிடுச்சுன்னு நினைக்கிறேன் ஏன்னா நான் அந்த அளவுக்கு சின்னப்பையனா இருந்தேன் (சின்ன வயசு, வெள்ளை மனசு யாருக்குத்தான் திட்ட மனம் வரும்) நான் எதிர்பார்த்த முகச்சாயலிலேயே இருந்தார் இதுவரையும் அவருடைய முகத்தை பார்த்ததே இல்லை வேறெங்கும் அனால் பார்த்த உடனேயே தோளோடு சேர்த்துக்கொண்ட நெருக்கம் வாய்த்திருந்தது ஏற்கனவே பல முறை இணையத்துல கூடி கும்மி அடிச்சசிருக்கோம்ல...

அன்னைக்கு அவரை அவ்வளவு நேரம் காக்க வச்சதுக்கு திரும்பவும் ஒரு முறை மன்னிச்சுடுங்க தல...அடுத்த முறை சரியான நேரத்துக்கு வரப்பாக்கிறேன்...

*
எழுத்தாளர் ஜமாலன் அவர்களை சந்திச்சது எனக்கு நம்ப முடியாம இருந்திச்சு கொஞ்ச நேரம் ஆனாலும் முதல் பார்வையியே அடையாளம் கண்டு கொண்டு கை குலுக்கினோம் அவரிடம் நான் கேட்ட ஒரு கேள்வி ஜமாலன் அப்படிங்கிற பெயருக்கு என்ன காரணம் என்ன அர்த்தம் என்பது அதற்கு வெகுசாதாரணமாக அவர் சொன்ன பதில் என்னை இந்தப்பெயரில்தான் இலக்கிய வட்டத்துக்கு தெரியும்கிறதால அந்தப் பெயரில் இருக்கிறேன் அர்த்தம் எல்லாம் பார்த்து வைத்துக்கொண்டதல்ல முன்பொருமுறை கையெழுத்துப்பத்திரிகை ஒன்றை நட்த்தும் பொழுது (மாலன் என்கிற எழுத்தாளர் நட்த்தியது) பின்னர் இவர் அதன் சாயலில் நடத்திய பொழுது ஜமாலன் என்கிற பெயரில் எழுதியதாகவும் அப்படியே அதுவே நிலைத்து விட்டதாகவும் சொன்னார்..
அண்ணன் அனுபவப்பகிர்வுக்கு நன்றி இன்னும் நியைப்பேச இருக்கு உங்களோடு...






*
அண்ணன் கல்ஃப் தமிழன் எழுதுவதில்லை ஒழிய தமிழ திரட்டிகளுக்கு வலைப்பூக்களுக்கு புதிய வாசகரல்ல என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம் அவர் பழையவர் என்று தெரிந்தாலும் இவ்வளவு துரம் பதிவர்களை கவனிக்கிற ஒருவர் என்பது நானும் அறியாதது பரந்த வாசிப்பு அனுபவம் அவருக்கும் இருக்கிறது...அண்ணன் எழுதுங்க படிக்கிறதுக்கு நாங்க இருக்கோம்... பல காலமா கல்ஃப்லயே இருக்கிறதால அந்தப்பெயரை வச்சுக்கிட்டார்ங்கிறது அவர் எத்தனை வருடங்களாக அங்கே இருக்கிறார் என்பதை சொன்னபோது புரிஞ்துகொள்ள முடிந்தது.அண்ணனுக்கு ஜெத்தா(Jeddah)தண்ணி பட்ட பாடு,சந்து பொந்து முட்டு முடுக்கெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கார்...:)


*
பல விசயங்களையும் பேசிக்கொண்டோம் அல்லது நான் அவர்களை பேச விட்டு கேட்டுக்கொண்டிருந்தேன்..நேரம் போனது தெரியாமல் உரையாடிக்கொண்டிருந்தோம். என்னை ஜமாலன் நீங்கள் கவிதையெல்லாம் எழுதுவிங்களான்னு கேட்டார் (என்ன இப்படி கேட்டு தர்ம சங்கடத்துல விட்டுட்டிங்களே:) நான் வலைப்பதிவு தொடங்கினதே பின்னூட்டங்களுக்காத்தான் என்று சொல்லி வாசிக்கிறதுதான் நம்ம வேலை முடிஞ்சா சில கருத்துள்ள பின்னூட்டங்கள் அப்படின்னு சொல்லி சமாளித்துக்கொண்டேன்...(உண்மையும் சில நேரங்களில் சமாளிப்புகள் ஆகிவிடுகிறது)

இன்னும் பேசலாம் என்று உரையாடல் போய்கொண்டிருக்கையிலேயே மறுநாள் காலை வேலை இருப்பதானாலும் போக்கு வரத்து பிரச்சனையாலும் நான் புறப்பட வேண்டிய அவசியம் இருப்பதை சொல்லிக்கொண்டு இட்லி,வடை,தோசையோடு விடை பெற்றுக்கொண்டோம். பரவாயில்லை தலதான் கொஞ்சம் துரத்துல இருக்கிறார், ஜமாலன் ஐயாவும், கல்ஃப் தமிழன் அண்ணனும் ஜெத்தாவுக்கு (Jeddah) பக்கத்தில்தான் இருக்கிறார்கள் அடிக்கடி பார்க்கலாம் என்று நினைக்கிறேன்...

பின்குறிப்பு :

1)
நல்லதொரு சந்திப்புக்கு அடி போட்ட அண்ணன் தமிழ் பிரியனுக்கும் தங்களுடைய வேலைகளை தவிர்த்து நேரத்தை ஒதுக்கி எங்களோடு கலந்து கொண்ட ஜமாலன் ஐயாவுக்கும் கல்ஃப் தமிழன் அண்ணனுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்...
(ஆனா இனி அடிக்கடி தொல்லை கொடுப்பேன்)

2)
நேரமின்மையும் சூழ்நிலைகளும் இணைய வசதியும் சதி செய்வதில் நவராத்திரிக்கு ஏதாவது எழுதலாம் என்றால் முடியவில்லை இருந்தும் குறிப்புக்களாக எழுதிய விடயங்கள் முற்றுப்பெறாமல் இருக்கிறது அவை நீங்கள் பொறுமை இழக்கிற அளவுக்கு பெரியதாக இருப்பதனால் அடுத்த வருடம் அல்லது அடுத்தடுத்த பதிவுகளில் அங்கங்கே...


3)

பாவனா படம் எதுக்குன்னு கேக்க மாட்டிங்கன்றது எனக்கு தெரியும்...

மறுபடியும் நன்றி...