Monday, November 22, 2010

இந்த கோதாரிக்கு பெயர் கவிதை...

அவநம்பிக்கைளின் மொத்த இருளும் அறையில் இருக்க
எல்லாக்கடவுள்களும் என்னை பழிவாங்க காத்திருக்கும் இந்த இரவில்...

நானொரு துர்க்கனவிலிருந்து விழித்தெழுந்திருக்கலாம்
ஈரம் தொடையிடுக்கில் வழிய போர்வையைச்சரிசெய்தவாறு
நானொரு கவிதையை குறித்து யோசிக்க தொடங்குகிறேன்...

மிகப்புனிதமான சொற்களைக்கொண்டு
உருக்கமானதொரு கதையை எழுதி முடிக்கையில்
நான் யோனிகளை மறந்தவனாகிறேன்...

மேலும்,

இல்லாத சமாதானம் குறித்தும்
சாமானியர்களின் நில அபகரிப்பை நொந்தும்.
துயரங்களை சுமந்தலைகிற பாடல் பாடுகிறவர்களின்
புதிய ஒன்றுகூடல்கள் இருப்பதையும்
இலக்கிய பரமாத்மாக்களின் புதிய அவதாரங்களையிட்டும்
இணையச்சுவர்களில் எழுதி வளர்கிற மொழியை வியந்தும்
இன்னும் எல்லாவற்றையும்
உங்களைப்போலவே செய்து கொள்ளக்கூடும்.

நானிதை எழுதிக்கொண்டிருக்கிற நேரம்...

நீங்கள்
எல்லா விதிகளையும்
எல்லைகளையும்
அதிகாரத்தையும்
குறிகளையும்
இயலாமைகளையும்
சபிக்கும்படிக்கு

சாத்தான் உங்களோடு இருக்கும் படியாக
இல்லாத கடவுள்களை வேண்டிக்கொள்கிறேன்...

ஆமென்.



__________________________________________________


பிந்திய குறிப்பு :

இப்பொழுது இருக்கிற மனோநிலைக்கும் இந்த வரிகளுக்கும் இடையிலான இடைவெளி இந்த தலைப்புக்கான காரணமாயிருக்கலாம்.

Wednesday, November 17, 2010

இலக்கியம் அல்லது வில்லங்கம்.

எதையும் எழுதமுடியவில்லை
எதையுமே எழுதவில்லை...


இதையும் நானே எழுதவேண்டியிருக்கிறது,

இதைவிட எதையாவது எழுதியிருக்கலாம் என்பதையும்கூட!

Friday, November 12, 2010

எப்பொழுதுமிருக்கிறவளின் பிரார்த்தனைகள்.

நினைவுக்குறிப்புகள்.


மொத்தமாய் நினைவிலிருக்கிற விரத நாட்களின் நினைவுகளில் இருந்து இப்போதைக்கு எழுத நினைத்த இந்த முகப்புத்தகத்தின் தன்னிலைவசனம் கொஞ்சம் நீண்டு போயிருப்பதால் ஒரு குறிப்பாக எழுதப்பட்டிருக்கிறது. விரத நாட்களில் இருக்கிற அந்த சூழலை பார்த்து பலகாலமாயிற்று என்றாலும் அந்தப்பொழுதுகளின் வாசனை இன்னமும் ஈரம்மாறாமல். இருக்கிறது நாசியில்.



கந்த சஷ்டி கவசம்.

முன்னைப்பொழுதினை அதன் வாசனைகள் மாறாமல் கொண்டு வருகிற தன்மை இசைக்கு இருக்கிறதென்பது உண்மதான். சந்தன, குங்கும,சாம்பிராணி வாசனைகளோடு, கூட்டிக்கழுவி மஞ்சள் தெளித்த வீட்டு சாமி அறை, கோவில் மண்டம், கோவில் கிணத்தடி வீட்டிலிருக்கிற விரதநாட்களின் சூழல், இந்த நாட்களில் விரதமிருக்கிற பெண்கள், நண்பர்களோடு வேணுமெண்டு தனகுறது, கோவிலுக்கான உதவிகள், விதம்விதமாய் கோவிலுக்குப்போகிற பெண்கள், விரதச்சாப்பாட்டின் விருப்பும் வெறுப்பும், சூரன்போருக்கான ஆயத்தங்கள், சூரன்போர் நாளின் உற்சாகம், விரத நாட்களிலும் எந்தன் ஆக்கினைகளை பொறுத்துக்கொள்கிற அவள் எனக்காக அவள் நேரஞ்செண்டு சாப்பிட்ட பாறணைச்சோறு இப்படி இன்னும்பலதையும் எத்தனையோ வருடங்களுக்கு பிறகு கேட்டுக்கொண்டிருக்கிற இந்த கந்தசஷ்டி கவசத்துக்கு இப்பொழுதும் நினைவுக்கொண்டுவர முடிகிறது.


_________________________________________________________



நீ இருக்கிற எல்லா விரதங்களுக்குமான
என்னைக்குறித்த உன் வேண்டுதல்களை
நீ என்னிடம் ஒருபோதும் சொல்வதில்லை
ஒரு நேரம்,வெறுங்கோப்பி என்று நீயிருக்கிற
கடும் விரதங்களை நான் கண்டுகொள்வதுமில்லை
ஆறுநாளும் முழுகி,ஏழு நாளும் கோவிலுக்குப்போய்
என நீ படும் பாடுகளை நான்
எள்ளலோடு சீண்டியிருக்கவும் கூடும்
வேண்டுமென்றே உன்னை கோபமூட்டியிருக்கிறேன்
அது நினைவிலுமிருக்கிறது அதுவும்
அந்த கிளிச்சொண்டு மாங்காயும் உப்புந்தூளும்
போதாதற்கு உப்பை அரைச்சு தரச்சொல்லி இருந்தேன்,
நினைவிருக்கிறதா...?
எப்பொழுதும் போலவே நீ ஒற்றைப்புருவத்தால் கோபித்துக்கொண்டு
என் ஆக்கினைகளை பொறுத்துக்கொள்வாய்
உன்னிடமிருந்த எல்லா பிரார்ர்ததனைகளும்
என் நன்மைகள் குறித்தே இருந்தன
இப்பொழுதும் அவை அப்படியே இருக்கிறதெனவும்
முன்பை விட நீ நிறைய விரதமிருக்கிறதாயும்
தர்சினி சொல்லி இருந்தாள்...

என்னிடமும் ஒரே ஒரு வேண்டுதல் இருந்தது
எல்லா பிரார்த்தனைகளையும் கடவுள் கேட்கிறாரா என்ன?!
கடவுள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு
உன்னை மட்டும் என்னிடமிருந்து கேட்டுக்கொண்டார்.

இப்பொழுதும் என்னிடமொரு பிரார்த்தனை இருக்கிறது
அது கடவுளுக்கு அல்ல.

Tuesday, November 2, 2010

போர் தின்ற சனங்களின் கதை - ஒரு பகிர்வு.






"மரணம் தன் சார்பாக எதையாவது விட்டுச்செல்லவே விரும்புகிறது. துயரம்,அழுகை, நினைவுகள் இப்படி எதையாவது தொடர்ச்சியாக நம்மிடையே விட்டுச் சென்றுவிடுகிறது. "சாட்டில்லாமல் சாவுகிடையாது" என்ற பழமொழி மாதிரி ஒன்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லோரும் வாழ்ந்துவிடவே துடிக்கிறோம். இந்த உலகத்தின் அத்தனை சுவைகளையும் நுகர்ந்து முடித்துவிட்ட பின்னரும் ஜப்பான் நாட்டுக்காரன் மாதிரி நூறுகளைத்தாண்டிய கனவுகள் நம்மிடையே எழுந்து கொண்டுதானிருக்கின்றன.

மரணமும் அது குறித்தான பயமும் அறியப்படாத ஒரு ரகசியச்சுவை போல நம்மிடையே கலந்திருக்கிறது.யாரும் தாண்டி விட விரும்பாத சுவரைப்போலவும்
."


ஒரு புத்தகத்தைப்பற்றி எழுதுவதென்பது எனக்கு வராத ஒரு விசயம் அந்த அளவுக்கு எனக்கு எழுதத்தெரியாது அல்லது வாசிக்கத்தெரியாது அதனாலேயே வாசித்த புத்தகங்கள் எதைக்குறித்தும் எழுதத்தலைப்படுவதில்லை. ஒரு புத்தகத்தை அதை எழுதியவரிடமிருந்தே அதுவும் மனதுக்கு மிக நெருக்கமான கதைசொல்லி ஒருவரிடமிருந்து அவரெழுதிய புத்தகமொன்றை பெற்றுக்கொள்கிற பொழுதில் பள்ளிக்கூட மேடையில் பரிசு வாங்குகிற ஒரு சிறுவனாகவே இருந்தேன்.ஆனால் அந்தக் கதைசொல்லியோடு குடிக்கிற அளவுக்கான நெருக்கம் இருந்தது.(சும்மா ஒரு புழுகம்தான்)

இந்த இணையம் தந்த அனுபவங்களில் என்னுடைய ரசனைகள் மாறியிருப்பது மட்டும்தான் உண்மை. மற்றும்படி அரசியல் தத்துவ இலக்கிய நிலைப்பாடுகளில் நான் ஒரு வெறுங்குடம் சும்மா கனக்கத்தெரியும் என்பதாக காட்டிக்கொள்கிற ஒரு சராசரி மாணவன் மட்டுமே.

முதல் பதிப்பிலிருந்தே கிடைக்காமல் நழுவிக்கொண்டிருந்த மரணத்தின் வாசனையை அதன் மூன்றாம்பதிப்பின் புத்தகமொன்றை ஒரு பெருநகர மழைப்பொழுதின் மதிய உணவு நேரத்தில் அகிலனிடமிருந்து வாங்கிக்கொண்ட தருணத்தில் என் தளத்திலிருக்கிற அகிலனின் பக்கத்துக்கான சுட்டியும்,அகிலனோடு உரையாடிய சில பொழுதுகளும், ஏற்கனவே வாசித்திருந்த சில கதைகளும்நினைவுக்கு வந்து போயின. நான் ஒரு தவிப்போடு அந்த புத்தகத்தை வாங்கிக்கொண்டேன். புத்தகத்தை குறித்து பகிரவேண்டும் என சில கதைகளை அகிலனதும் சயந்தனதும் தளங்களில் படித்த பொழுதே நினைத்திருந்தேன். இருந்தாலும் புத்தகமாய் கையில் வைத்து வாசித்த பிறகே பகிர வேண்டும் என்கிற ஒரு ஆசையோடு அந்தக்கதைகளைக் குறித்து எதையும் பகிரவில்லை.

இப்பொழுதும் இந்தப்புத்தகம் குறித்து பகிர எனக்குத்தெரியவில்லை ஆனால் அந்தக்கதைகள் எனக்கு நெருக்கமாயிருந்தன அந்த மொழி எனக்குரியதாய் இருந்தது. ஈழத்தின் நிச்சயமற்ற நாட்களையும் நிரந்தரமற்ற வசிப்பிடங்களையும் கொண்ட ஒரு சூழலில் வாழ்கிற ஒரு பெடியனுக்குள்ளே இவ்வளவு உயிர்ப்பான நினைவுகள் இருக்கிறதென்பது அவனுடைய வாழ்வு குறித்த இயல்பான நெகிழ்தலை காட்டுகிற முக்கியமான விசயமாகத்தான் தெரிகிறது. சினிமாத்தனமான நட்புகளும் உண்மைத்தன்மையே இல்லலாத வெறும் நாட்களையும் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த இளைய சமுதாயத்திற்கு இவ்வளவு நினைவுகளை சுமந்தலைகிற,அவற்றை கோர்வையாக சொல்லத்தெரிகிற ஒரு கதை சொல்லி கிடைப்பது எவ்வளவு பெரிய விசயம். இதே போலவொரு உணர்வை ஷோபாசக்தியும் கொடுத்திருந்தார் அனால் ஆனால் அது கொஞ்சம் மாறு பட்டதாய் இருந்தது அது குறித்து பின்னர் பேசலாம்.


ஒரு கதைக்குள்ளாகவே என் காலம் முழுவதையும் மீட்டுக்கொண்டு வந்து தந்திருந்தார் அகிலன்.அந்தக்கதை "நீ போய்விட்ட பிறகு".(இது காயத்திரி நீ போய்விட்ட பிறகு என்று சயந்தனின் தளத்தில் வாசித்த கதை). புத்தகத்தை வாசிக்கையில் ஏதோ ஒரு கதையில் அல்லது சில கதைகளில் இந்த அனுபவம் பலருக்கும் கிடைத்திருக்கலாம். ஆனால் என்ன இத்தனை உயிர்ப்பான அந்த மொழி ஒரு சாவைக்குறித்துச் சொல்லுகிற கதையில் இருக்கிறதென்பதுதான் வலிக்கிற உண்மை. உண்மை எப்பொழுதும் ஏதோ ஒரு வகையில் நெருடுவதாகவே இருக்கிறது அது விருப்பத்துக்குரியதாயிருந்தாலும்.

"காயத்திரி நான் இழந்து போன எல்லாவற்றையும் ஈடு செய்யக்கூடிய ஒரு தேவதையாய் உன்னைக்கண்டேன்"
யுத்தம் அவனிடமிருந்து பறித்த அனையும் மறக்கச்செய்கிறதாக இந்த காதல் அவனுக்குள் இருக்கிறது.தயக்கங்களோடு பகிரப்படாமல் வைத்த காதல் ஒன்றிற்குரிய தேவதையின் சாவு வெறும் நாலே வரிகளில் மின்னஞ்சலாக கிடைக்கிற துயரம் எவ்வளவு அழுத்தமானதாய் இருக்கக்கூடும் அந்த காயத்ரி குறித்த நினைவுகள் எனக்குள் செய்து போன சலனம் அடங்காமல் இருக்கிறது இவ்வளவு அணுக்கமாக இதை எழுதியிருக்க வேண்டாம் அகிலன். காலம்தான் எவ்வளவு கொடியது அதனிலும் இந்த யுத்தம்தான் எவ்வளவு கொடியது எங்களின் காலத்தை தின்று சாவை மட்டுமே தந்திருக்கிறது. போர் எங்களுக்கு வாழ்வைத்தவிர மற்றெல்லாவற்றினதும் துயரங்களை மட்டுமே விட்டுச்சென்றிருக்கிறது.


அப்பாவை சித்தியை நண்பனை தெரிந்தவரை தேவதையை கோவிலை செல்ல நாய்க்குட்டியை ஆசை மிளகாய்கண்டுகளை என யாரையும் எதையும் விட்டுவைக்காத இந்த மரணம் அவர்களிடத்தில் திணிக்கப்பட்டதாய் இருந்தது சாவு தவிர்க்க முடியாததுதான் என்றாலும் அவற்றை ஏற்றுக்கொள்கிற மனோநிலை அனேகம் இயல்பான மரணங்களுக்கே கிடைப்பதில்லை சுடவும் உயிரைப்பறிக்கவும் மட்டுமே தெரிந்த துப்பாக்கிகளும் குண்டுகளும் தீர்மானிக்கிற அவர்களின் மரணங்களை எப்படி ஏற்றுக்கொள்ளும் இந்த மனது.


கதைமனிதர்களின் வாழ்விடமும் பழக்க வழக்கங்களும் என்னைச் சார்ந்தவையாயிருந்தாலும் அகிலன் சம்பவங்களை சொல்கிற மொழியும் அவற்றை கோர்வையாக்குகிற லாவகமும் இயல்பான பக்கத்திலிருந்து கதைக்கிறது மாதிரியான வெகு இலகுவான நடையும் அந்தக்கதைகளுள் நுழையவும் அந்த மனிதர்களோடு ஒன்றிவிடவும் செய்கிறது. நம்மையும் அந்த மனிதர்களுள் ஒருவனாக உணரக்கூடியதாக அந்த கதைகள் இருந்தன. உண்மைதான் அகிலனோடு இருந்து கதைத்த அந்த சில மணி நேரங்களில் அகிலனுடைய மொழிக்கும் பேச்சுக்கும் பெரிதான வித்தியாசங்களை என்னால் உணர முடியவில்லை. உண்மையில் அந்த சில மணித்தியாலங்கள் எனக்கு போதவே போதாமல் இருந்தது. மிக நெருக்கமான நண்பனொருவனை சில காலத்துக்கு பின்னர் ஒரு பயண இடைவெளியில் சந்தித்தது போலத்தான் உணர்ந்தேன் பேசவும் பகிரவும் நிறைய இருந்தும் மச்சான் சந்திப்பம் என்றுவிட்டு வந்த ஒரு தவறவிட்ட பொழுதாகவே உணர்ந்தேன். இந்த நிர்ப்பந்திக்கப்பட்ட நாட்கள்தான் எத்தனை கசப்பானவை உண்மையில் அது ஒரு பயணத்துக்குரிய நாளாகவே இருந்தது நான் விடுமுறையிலிருந்து திரும்புகிற அந்த கடைசி நாளின் மதிய வேளையில் கொழும்பில் அகிலனை சந்தித்திருந்தேன்.

பலருக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் அந்தக்கதைகள் பேசுகிற விசயங்கள் இலங்கையின் அரசியல் குறித்தும் யுத்தம் குறித்தும் முன்வைக்கிற கேள்விக்குறிகள் எல்லாம் மரணங்களுக்கிடையில் வாழ்ந்த அனேகம்பேரிடம் ஒரு முறையாவது உள் மனதிலிருந்து வந்திருக்க கூடியவை என்பதே உண்மை. அகிலன் என்கிற ஒருவனிடமே இத்தனை கதைகள் இருக்கையில் சொல்லப்பட்ட சொல்லப்படுகின்ற அல்லது சொல்லப்படாமலே இருக்கிற போர் தின்ற சனங்களின் கதைகள் இன்னும் எவ்வளவு இருக்கலாம்.

முப்பதாண்டு கால, உண்மையில் முப்பதாண்டு காலம்தானா? இந்த வரலாறு,இந்த அரசியல், இந்த யுத்தம் தந்த சாவுகள் எல்லாம் அது சம்பந்தப்பட்ட எல்லா மனிதர்களிடமும் பல விதமான கேள்விகளை விட்டுப்போயிருக்கலாம் ஆனால் அவை எல்லாவற்றுக்கும் விடைகள் ஓரிடத்திலேயே இருந்தும் இன்னமும் கிடைக்காமலே இருக்கின்றன.


"இந்த இரவில்
திகிலுடன் தொடங்குமிந்த
துயர்க்கனவின் வேர்கள்..
ஒரு பதுங்குகுழியில் இருந்து முளைத்தது.
சல்லடை போடப்பட்ட
ஒரு சாப்பாட்டுப் பீங்கானில்
இன்னும் மீதமிருக்கிறது..
உலர்ந்து போன பருக்கையொன்று..
இன்றைக்குப் புதிய திசைகள்
புதியகாடுகள்..
புதிய பட்டினங்கள்
ஆனாலும் துயரங்கள் பழையவைதான்..

துப்பாக்கிகள் எல்லாக்கைகளிலும்
ஓரே வேலையைத் தான் செய்கின்றன..
துப்பாக்கிகள் தீர்மானிப்பதில்லை
கரங்கள்தான்..

எங்களுக்குச் செய்யவும் சொல்லவும்
ஏதுமில்லை
எங்களை வைத்து
அதிகாரங்கள் செய்ய
அடிமைசெய்ய
அரசியல் செய்ய
முடிந்தால் பிச்சையெடுக்கவும்
ஆட்களிருக்கிறார்கள்..
ஆனால்
எங்களுக்குத்தான் செய்யவும் சொல்லவும்
ஏதுமில்லை"


- அகிலனின் கனவுகளின் தொலைவு தளத்திலிருந்து.



இங்கே சொல்ல முடியாத இன்னொரு கதை -
புத்தகத்தின் முதல் பதிப்பின்பொழுது தன்னுடைய மகிழ்தலை பகிர்ந்து கொண்ட அகிலனின் தம்பி அன்பழகனுக்கு சமர்ப்பணமாகியிருக்கிறது இந்த மூன்றாம் பதிப்பு.அந்த தம்பியையும் அதே துப்பாக்கிகள்தான காவு கொண்டிருக்கிறது .