Thursday, January 5, 2012

2011- போன காலம்.

இரண்டாயிரத்து பதினொன்று விரைவாக முடிந்து விட்டதென இப்பொழுது தோன்றுகிறது. காலம் அதன் பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறது. பெரிய மாற்றங்களை எதிர்பார்த்திருந்த கடந்த வருடம் சில விசயங்களை நடத்தியிருக்கிறது. இருந்தும் காலத்தின் போக்கில் அவை பெரிதாக தெரியவில்லை! என்னைப்பொறுத்தவரையில் முக்கியமானதொரு மாற்றமுள்ள ஒரு முடிவை கடந்த வருடத்தின் இறுதியில் எடுத்திருக்கிறேன். அந்த முடிவை தொடர்ந்தும் செயல்படுத்துதல் எவ்வளவுக்கு சாத்தியம் என்பதை காலத்திடம் கொடுத்துவிடலாம், இப்போதைக்கு இலகுவாயிருக்க முடிந்தால் அது பெரும்கொடை.


புது மருமகள்.



போன நத்தாருக்கு கிடைத்த பரிசு இது இந்த வருடத்துக்கான முதல் சந்தோசங்களை இவள் கொண்டு வந்திருக்கிறாள்.எனக்கு நல்ல நட்பாக இவள் வரக்கூடும்.


நான் வாசிக்கிறது கடும் ஸ்லோ என்று எனக்குத்தெரிந்தாலும் சமயங்களில் எனக்கே அரியண்டம்பிடிக்கிற அளவுக்கு இருக்கிறது வாசிப்பு. ஒரு புத்தகத்தை ஒரு மாதம் வாசிச்சால் எப்படி விளங்கும். இரவுக்கு முன்பு வருவது மாலை இப்பொழுதுதான் படித்துக்கொண்டிருக்கிறேன். ஆதவனை வாசிக்கிற பொழுதுகளில் பாலச்சந்தர் படங்கள் நினைவுக்கு வராமல் விடுவதில்லை. ஆதவன் எழுதிப்பார்த்த மனிதர்களிலும் சிக்கலான மனிதர்கள்தான் இன்றைக்கிருக்கிற உலகமயமாகிய இந்திய மேல்நடுத்தர வர்க்கத்தில் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.





06.12.1944 - 17.11.2011

போன வருசம் எனக்கு கொடுத்திருந்த தீராத சாபம் இது. கிட்டத்தட்ட 67 வருசம் இருந்த அப்பரோடு கடைசி நேரங்களில் இருக்க முடியாத ஒற்றை மகனாக நானிருந்தேன்.

அப்பாவைக்குறித்து என்னால் எழுத முடியாதவைகளை எழுத முயன்றுகொண்டிருக்கிறேன் ஒரு மாதத்திற்குள் எழுதிவிடு என்றெல்லாம் என் மனதுக்கு சொல்ல முடியவில்லை. ஏறக்குறைய அறுபத்தேழு வருசம் இருந்த அப்பாவை ஏதோ எழுதிக்கொடு என்று எழுதுவதற்கு இது வெறும் குறிப்பில்லையே,நான் எழுதிப்பார்க்க வேண்டிய ஒரு உண்மையாய் இது இருக்கிறது, உண்மைகளை அவ்வளவு சாதாரணமாக எழுதிவிடவும்முடிவதில்லை.

இதை இங்கே எழுதவே கூடாதென்றிருந்தேன் ஆனால் 2011 இல் என்ன நடந்தது என்று மீட்டுப்பார்க்கையில் என்னை அழுத்துகிற ஒரே விசயம் இதுவாகத்தான் இருக்கிறது. இந்தப்பாரத்தை இனி எப்பொழுதும் தவிர்க்கவும் முடியாது.


இன்னுமொரு சம்பவம்.

நினைத்ததை விட வேகமாக போயிருந்த இரண்டாயிரத்து பதினொன்றின் முற்பகுதியில் ஒரு சின்னப்றவை குறுக்கிட்டிருந்தது. அதற்கான இளைப்பாறுதலின் கிளை என்னிடமிருப்பதாகவும் என்னுடைய கிளைகள் எப்பொழுதும் இலகுவாக இருப்பதாகவும் அந்தப்பறவை சொல்லிப்போயிற்று. கூடவே நான் இளைப்பாறுதலுக்கான கிளைதானே ஒழிய தங்குதலுக்கான கூடாக முடியாதென்கிற துயரக்குறிப்பை எனக்கு விட்டுப்போன அந்தப்பறவை சொந்த வானத்திலிருந்தும் பிரிந்து வேறொரு வானத்தில் அந்நிய நிலத்தின் பறவையாக வாழ்ந்து கொண்டிருந்தது.

பறவைகளின் மீது இயல்பாகவே எனக்கிருந்த நெகிழ்வு இந்தப்பறவையை துரத்தவோ இருக்கச்சொல்லவோ இடம்தரவில்லை. பறவைகள் வருவதும் போவதும் கானகத்து மரங்களுக்கு வழமைதானே; இடையில் வந்து போகிற பறவைகளுக்கு நாம் என்ன சொல்ல முடியும். அத்தோடு எனது காத்திருப்பெல்லாம் வேரை அசைக்கும் புயலுக்கான வருகைதானே.



நான் பார்த்த தமிழ் படங்களில் எனக்கு சொல்லிக்கொள்ளக்கூடியவை என்றால் ஹிந்திப்படங்களை பிறகு சொல்கிறேன்.

ஆடுகளம்
மௌனகுரு
எங்கேயும் எப்போதும்
மைதானம்
அவன் இவன்
வர்ணம்.





இப்போதைக்கு இவ்வளவுதான் நினைவிருக்கு. 2011 இல் தமிழ்படங்கள் பார்த்தது குறைவுதான். மற்றும்படி ஜெப்பானிய படங்களின் மீதான பிடிப்பை அதிகரித்திருக்கிறது Departures. என்னவொரு திரைமொழி அவர்களுடையது. வேலையே செய்யாமல் சுளையாக சம்பளத்தை எதிர்பார்க்கிற சவுதிகள் ஜெப்பானியர்களை இயந்திரங்கள் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். ஜெப்பானியர்களைப்போல நமக்கு எல்லாக்கணங்களையும் வாழ்ந்துவிடத்தெரிவதில்லை என்று தோன்றுவதுண்டு, எல்லாவற்றையும் நேர்த்தியாகச் செய்கிற பக்குவம் அவர்களிடம் இருக்கிறது. உணர்வுகளை மட்டுமல்ல சாவைக்கூட பக்குவமாக எதிர்கொள்ள அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.





தமிழ் வலையுலகைப்பொறுத்த வரையில் facebook க்குக்கான வருடம் என்று சொல்லலாம் google buzz ஸில் இருந்ததிலும் நிறையப்பகிர்வுகள் ஃபேஸ்புக்கில் இருந்ததென நினைக்கிறேன், பஸ் குறிப்பிட்ட சில வட்டத்துக்குள் முடிந்துவிடுவதாகத்தான் இருந்தது. பஸ்ஸைக்காட்டிலும் ரிவிட்டர் மற்றும் பேஸ்புக் கணிசமான இயக்கத்தை கொண்டிருந்தன.

எல்லாப்பரப்பிலும் பரபரப்பாய் இயங்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்பது தமிழ் இணையச்சூழலுக்கு கிடைத்திருக்கிற அடுத்தகட்டம்தான் என்றாலும் இவை எவ்வளவு தூரத்துக்கு சாதகமான சாத்தியங்களை கொண்டிருக்கின்றன என்பது கேள்விக்குறிதான். பொழுது போக்காக இணையத்தில் இயங்குகிறவர்களிலும் தங்களுக்கென்று அடையாளங்களை வைத்திருக்கிறவர்களே அவரவர் தன்முனைப்புகளை தக்கவைப்பதில் மினக்கெடுவதுதான் சோகம். அவரவருக்கான புத்திசாலித்தனங்களை நிரூபிப்பதில் மூர்க்கமாக இயங்குகிறார்கள், தங்களை புத்திசீவிகளாக நம்பிக்கொண்டிருப்பவர்கள். இணையத்தில் இந்த வருடம் பெரிதும் அடிபட்டது ஷோபாசக்தியும் மாமல்லனும்தான். எம்.டி.எம் போன்றவர்களின் தொடாச்சியான இணைய இயங்குதல் இணைய வாசகர்களுக்கான புதிய வாய்ப்புகள். இந்த வருடம் இணையத்தில் அதிகம் சர்ச்சைக்குள்ளாகிய பெயர் ஷோபாசக்தி என்றும் சொல்லாம் ஷோபாவிடம் இருக்கிற மொழி லாவகம் புனைவுக்கான அசாதாரண சாத்தியங்களை கொண்டவை ஆனால் ஷோபா தக்கவைத்துக்கொள்ள விரும்புகிற பிம்பமும் சறுக்கல்களாக அங்கங்கே விட்டுவிடுகிற அறிக்கைகளும் அவருக்கு நிறைய எதிரிகளை கொண்டு வந்துவிடுகிறது.



இதை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது பார்த்த படம் My Friend Pinto. அவருடைய அம்மாவின் முகச்சாயல்களில் இருக்கிற Prateik மற்றும் பலர் நடித்திருக்கிற இந்தப்படம் இன்னும் திருத்தமாக வந்திருக்கக்கூடியது. எல்லோருக்கும் சந்தோசங்களை கொண்டு வரக்கூடிய ஒருவனாக இருப்பது எவ்வளவு சிரமம்.மனிதர்களை நம்புவது தனித்துவமான அசாதாரணமான இயல்பாகிவிட்டிருக்கிற உலகம்தான் யதார்த்தத்தில் இருக்கிறது.அப்படி ஒருவனை காண்பது எல்லோருக்கும் அதிசயம்தான் நடைமுறைகள் என்கிற மாயைக்குள் சுழல்கிற மனிதர்களுக்கு.


என்னிடம் சில சிக்கல்கள் இருக்கலாம். நிலைகொள்ளாதிருத்தல் பெரிய அசௌகரியங்களை தருவதாய் இருக்கிறது. நானொரு ஒரு பயணம் போகலாம் என்பது மட்டும்தான் என்னிடமிருக்கிற அடுத்த கட்டம். பயணத்துக்கு காத்திருக்கும் இந்த நாட்களை பிடித்திருக்கிறது. இலங்கையில் இதுவரை அறியாத தெருக்களில் நடக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கிறேன்.முகமறியாத மனிதனொருவனின் நடைபாதை தூக்கங்களுக்கு சாத்தியமான இலங்கை இருக்குமென்பது கொஞ்சம் கூடுதலான நம்பிக்கைதான் இருந்தாலும் இந்தப்பயணத்தை தவிர்க்கவே முடியாது.புதிய சாலைகளின் சுவாரஸ்யம் வாழ்வின் உன்னதமான தருணங்களாய் இருக்கக்கூடும்.


இதை எழுதத்தொடங்கி மூன்று நாட்களாயிற்று எழுதி முடிக்கவே இயலவில்லை. தொந்தரவு செய்கிற வேலையும் ஒன்றாத மனமும் என இந்த சுயபுலம்பல்களை எழுதி முடிக்க இயலவில்லை இதை இன்னும் விரிவாக எழுதி அதை ஏன் இணையத்தில் வைக்கவேண்டும் என்பதில் நான் இப்படியே பகிர்ந்து விடுகிறேன்.