Saturday, January 31, 2009

ஜோன்...

அவனுக்கு யோகேஸ்வரன் என்று பெயர் அவனுக்கு யோகங்கள் இருக்கிறதாலேயே அவனுக்கு அப்படி பெயர்வைத்தார்களோ அல்லது பெயர் அதுவாயிருந்ததில் அவன் யோகக்ககாரனாய் இருக்கிறானோ எதுவாய் இருந்தாலும் அவன் யோகமுள்ளவனாய் இருக்கிறான்...

ஜோன் என்று நான் அழைக்கிற யோகேஸ்வரனுக்கு மாலினி என்கிறழைக்கப்படுகிற பிரேமமாலினி என்கிற இன்னொரு யோகம் கூடிவருகிற தருணம் நாளைக்கு (01-02-2009)நிகழவிருக்கிறது...

என்ன செய்வது ஜோன் உன்னுடைய கல்யாணத்துக்கு மின்னஞ்சலும் ஆகக்கூடியதாய் ஒரு தொலைபேசி உரையாடல் வழியான வாழ்த்தும் இன்னொருவரால் ஆயத்தம் செய்யப்பட்ட பரிசுப்பொருளையும் தர முடியும் என்னால் வேறென்ன செய்ய? ஊரின்,நண்பர்பகளின் எத்தனையோ கல்யாணங்களில் கூடிச்செய்கிற கும்மாளங்கள், நண்பர்கள் மொத்தமாய் சேர்ந்திருக்கிற சந்தோசங்களின் பொழுதுகளிலெல்லாம் தோன்றுவதே இல்லை நம்முடைய கல்யாணங்களில் சேந்திருப்போமா என்கிற எண்ணம்; இப்பொழுது பார்த்தாயா வாழ்க்கை எப்படி மாறிப்போயிருக்கிறது ...



உண்மைதான் காலம் சில விசயங்களை தீர்மானிக்கிறது.

உனக்கு வாழ்த்தெழுத வந்தவனை நினைவுகளும் நிகழ்காலமும் திசை திருப்பிக்கொண்டிருக்கிறது ஜோன்; ஊரின் கல்யாணக்கதைகளை வேறொரு பதிவில் எழுதலாம் இப்பொழுது.

எப்படி வாழ்த்துவதென்று தெரியவில்லை ஜோன், என்ன சொல்ல? நல்லா இரு மச்சான்!
மிக இனிமையானதொரு வாழக்கை உங்களுக்கு வசமாகட்டும்...
சந்தோசங்கள் சூழ்கிற காதல் நிறைந்ததொரு வாழ்க்கை இரண்டு நெஞ்சங்களின் நெருக்கத்தில் நிகழட்டும்.


ஜோன் நீ புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன் இறுக்கமான சூழலில் நிகழ்கிற உன் திருமணத்துக்கு என்னால் எதையும் செய்ய முடியவில்லை மனம் நிறைவான வாழ்த்துக்களை தவிர.





31/01/2009
11.20pm.
k.S.A.


ஜோனுக்கு தெரியக்கூடாத குறிப்பொன்று:

கடந்த இரண்டு நாட்களாக இணையத்துக்கு வந்தாலும் என்னுடைய வலைப்பக்கமே வராமலிருந்திருக்கிறேன். உள்ளே நிரம்புகிற அதிகரித்த வலிகள் நிரம்பிய சொற்களின குமுறல்கள் அடக்க முடியாமல் இருக்கிறது, அவை என் தேசத்தின் தெருக்களில் கேட்கிற சபிக்கப்பட்டவர்களின் இறுதிக்குரல்களாய் இருக்கலாம்!

குமுறுகிற சொற்களை அமுக்கி வைத்திருக்கிறேன் அவை வெளியெ விழுந்து செத்துவிடக்கூடாதென்பதில்.

அவை இருக்கட்டும் ஜோன்...

Sunday, January 25, 2009

பட்டாம்பூச்சியும் பதிவும்...

சமீபநாட்களாய் ஏனோ தெரியவில்லை பகிர்(எழுது)வதற்கு வரவே இல்லை வலுக்கட்டாயமாக சிலருக்கு பின்னூட்டங்கள் எழுதியிருந்தேன்.யதார்த்தம் கசப்பானதாகத்தான் இருக்ககுமோ என்னவோ இருக்கலாம் புரிதல் இன்னமும் அவசியமாக தேவைப்பபடுகிறது போலும்.

இலங்கையில் நிகழ்கிற கற்பனைக்கப்பால் விரிகிற மனிதமற்ற செயல்களும் புரிதல் என்பதே கிஞ்சித்தும் இல்லாத மனிதர்களும் சே!! விரக்தி என்பதை விட வெறுப்பைத்தான் அதிகமாய் தருகிறார்கள். என்ன செய்கிறது இந்த இளைய சமுதாயம்! யாருமே நாட்டின் வரலாறு தெரியாதவர்களா அல்லது...

அன்பென்கிற ஒன்றையே கடவுளாய் நம்புகிறவன் நான், உலகம் கொண்டாட்டங்களால் நிறைந்திருக்கிறது கொண்டாடத்தெரிந்தவன் சந்தோசமாய் வாழ்கிறான் இந்த வார்த்தைகள் மட்டுமே போதும் வேறெதுவும் நீட்டி முழக்கத்தேவையில்லை என்பது என் எண்ணம்...

_______________________________________






சில வாரங்களாக பட்டாம்பூச்சி என்கிற ஒரு விருதை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் வலையில் எனக்கும் இரண்டு அன்பு நெஞ்சங்கள் தோழி திவ்யா , 'பப்புபேரவை'சந்தனமுல்லை கொடுத்திருக்கிறார்கள், நன்றி தோழிகளே தாமதத்துக்கு மன்னிக்கவும். பட்டாம்பூச்சிகளை பறக்கவிடுதலே முறை ஆயினும் இந்த விருதை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது விருதின் விதியாக இருப்பதில் ரொம்ப நாளா டிமிக்கி கொடுத்துக்கொண்டிருக்கிற பதிவர்களை அழைக்கலாம் என்று இருக்கிறேன்(நம்மகிட்டயா வந்தே ஆகணும்ல).




குமிழ் : இந்த தோழி ஆங்கிலத்தில் எழுதுகிற தமிழ் பதிவர் பல நாட்களாக காணவில்லை ஏதோ பரீட்சைங்கிற மாதிரி கேள்விப்பட்டேன்..நிறைய வாசியுங்க நிறைய எழுதுங்க குமிழ்..

ரசிகன்: வலைச்சரத்தோட முதல் வாரங்களில் ஆசிரியரா இருந்த இவரை அதுக்கு அப்புறமா வந்த யாருமே கவனிக்கலைங்கறது என்னுடைய மனவருத்தம் கலக்கலான பதிவர் பின்னூட்டங்கள்ளையும் செமையா கலாய்க்கிறவர் அண்ணே எங்க போயிட்டிங்க கட்டார்லருந்து போனதுக்கப்புறம் எழுதறதேல்லைன்னு முடிவா?! நாட்டாமை தீர்ப்பை மாத்து!



மங்களூர்சிவா: சிவா மாம்ஸ் கல்யாணத்துகப்புறம் நம்ம பதிவுப்பக்கம் வாறதையே விட்டுட்டாரு பல நாட்களுக்கு பிறகு இன்னைக்குத்தான் எங்கேயோ பாத்தேன் மாம்ஸ் மரியாதையா வந்து பின்னூட்டம் போடுங்க...:)



நளாயினி : நான் வலைக்கு வாறதுக்கு ஒரு விதத்துல காரணமா இருந்தவங்க இப்பல்லாம் ஆளையே காணோம் பூக்கள் இன்னும் பேசலாமே தோழி...




பின்குறிப்பு:

\\
விருதை சில பேருக்குத்தான் பகிரலாம் என்பதில் இத்தனை பேரை மட்டுமே அழைத்திருக்கிறேன் மற்றபடி வலையில் பறக்கிற எல்லோருமே பட்டாம்பூச்சிகள்தான் என்பதை முக்கிய குறிப்பாக வைக்கிறேன்...

\\
விருதுக்கு அழைத்திருக்கிற நண்பர்கள் கட்டாயமாய் எனக்கு வந்து பின்னூட்டம் எழுத வேண்டும் அதைவிட முக்கியம் அடிக்கடி பதிவு எழுத வேண்டும் இது அன்புக்கட்டளை அல்லது எச்சரிக்கை. :)

\\
எழுதாமல் அல்லது பகிராமல் இருப்பதில்தான் பாரம் அதிகமாகி விடுகிறது என்பதுதான் உண்மை,ஆனால் எதை எழுத எதை எழுதாமல் விட!

Thursday, January 15, 2009

தேவதைகள் கொண்டாடுகிற தினம்...!




நீங்கள் யாராவது தேவதைகள் தூங்கும் பொழுது பார்த்திருக்கறீர்களா!கைவிரல்களை கூட சரியாக விரிக்காத குழந்தை ஒன்று பசியாறித்தூங்குகிற தருணங்களை ரசித்ததுண்டா? அது வெறும் தூக்கம் என்று என்னால் சொல்ல முடிவதில்லை மனிதன் வாழ்கிற கணங்கள் அங்கே ஆரம்பிக்ககிறது என்பது என் எண்ணம்.

அப்படி தன்னை மறந்து தூங்குகிற தேவதைகளை பார்த்திருக்ககிறீர்களா, ரசித்திருக்கிறீர்களா? இல்லை எனில் உங்கள் வாழ்வின் மிக அற்புதமான தருணங்களில் சிலவற்றை இழந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம் இன்னொரு விதமாய் சொல்லப்போனால் அந்த அற்புதம் உங்களை இதுவரை கடந்து போகவில்லை எனலாம் இன்னொரு விதமாய் சொல்லப்போனால் உங்களை கடந்த ஒரு தேவதையை நீங்கள் கவனிக்கவில்லை என்பது சோகம் இருக்கிற உண்மை.

அவளுடைய தூக்கம் அப்படித்தான் இருக்கும் ஒரு குழந்தையைப்போலத்தான் அவள் தூங்குவாள் என்பதை விட ஒரு குழந்தை அவளுடைய சாயல்களில் தூங்கும் எனத்தான் எனக்கு படுகிறது;இது நிஜமோ இல்லையோ நிச்சயமாய் தேவதைகள் அவளைப்போலத்தான் நித்திரை கொள்ளக்கூடும். தேவதைகள் தூங்குவதில்லையா?! யார் சொன்னது நிச்சயமாய் தேவதைகள் உறங்குகின்றன அதுவும் மிக இனிமையான கனவுகளுடன்...

அவளை சின்ன வயதிலிருந்து எனக்கு தெரிந்திருந்தது அதிகம் பேசமாட்டாள் என்றாலும் மிக அழகான புன்னனைகளை சேமித்து வைத்திருந்தாள்.எனக்கென்று தனியாய் அவளிடம் இருந்தது எல்லையில்லாத அன்பும், உயிரறிகிற உணர்வுகளும், அற்புதமான புன்னகைகளும் மட்டுமே.

தனியான சிரமங்கள் ஏதுமில்லாமல் அவள் மிக இயல்பாய் அஃதின் எனக்கே எனக்காய் மாத்திரமான அடையாளங்களோடு செலவு செய்கிற புன்னகைகள் போல இதுவரை என் கனவுகளில் வந்த, நான் கேள்வியுற்ற எந்த தேவதைகளும் சிரித்திருக்கவில்லை என்பது அவளுக்கு மட்டுமேயான தனித்துவமாய் இருந்தது; இங்கே நான் முன்னர் சொன்ன தேவதைகள் அவள் சாயலில் இருக்க கூடும் என்கிற கூற்று உறுதியாயிற்று.

அவளுக்கு பேசத்தெரிந்திருந்தது மௌனங்களையும்! அவள் வீட்டின் சமையலறையின் பின்புறத்திண்ணையில் அம்மிக்கல்லில் சாய்ந்தவாறு நெல்லி இலைகளினூடே விழுகிற நிலவொளியின் வெளிச்சத்தில் எதிரேயிருக்கிற அவளது மௌனங்களை எந்த வித குறுக்கிடல்களும் இல்லாமல் விடிவிடிய வாசித்துக்கொண்டிருந்த நாட்களை நான் முன்னம் செய்த தவங்களின் வரங்களென சில கடிதங்களில் சிலாகித்திருக்கிறேன் அவை என் நாட்குறிப்புகளிலும் எழுதப்பட்டிருக்கின்றன!

குறிப்பு:
அந்த அம்மிக்கல்லு மஞ்சள்,மருதாணி மற்றும் அவளது என மயக்கம் தருகிற வாசனையோடிருக்கும்.அந்த மருதாணி அரைத்தல் பற்றியதும் வாசனைகள் பற்றியதுமான கதைகளை சொல்லப்போனால் இந்தப்பதிவின நோக்கம் திசை திரும்பி விடக்கூடும். பிறிதொரு சந்தர்ப்பத்தில் கனவில் நுழைகிற அந்த மயக்கங்களின் வாசனைகளை பற்றி பேசலாம்.


இதையே அவளும் சொல்லி இருக்கிறாள் நீ கண் மூடி என் மடிசாய்ந்திருக்ககையில் தாய்மையின் நிறைவை உணர்வதாக அவள் தன் மனதையெல்லாம் சொல்கிறேன் என்று உயிரை மொத்தமாய் தன் பிரியங்களையெல்லாம் கூட்டி எழுதியவொரு கடித்தில் சொல்லியிருந்தாள்...இங்கே நான் சொல்ல வேண்டிய இன்னொரு விசயம் இருக்கிறது அவள் மடிமீது சாய்திருக்கையில் அனேகமான தருணங்களில் நான் என்னையறியாமல் உறங்கி விடுவேன்,நான் வழைமையாய் தூங்குகிற படுக்கையை தவிர்த்து என்னை மறந்து உறங்கியது அம்மாவின் மடிக்கு பிறகு அவளது அன்பில்தான்...

அவளுக்கு அன்பைத்தவிர வேறொன்றும் தெரியாமல் இருந்தது அவள் செய்த தவறல்ல தேவதைகளின் இயல்பு அதுவாகிற்று...ஆனால் என்ன தவங்கள் தடைப்பட்டுப்போனாலும் தேவதைகள் ஒரு போதும் தோற்பதில்லையே நான் இன்னமும் தவம் செய்திருக்க வேண்டும் என்பது காலம் சொல்லி இருக்கிற சாபவிமோசனம்.தவங்களின் பலன்கள் வரமாய் அல்லது விமோசனமாய் கிடைக்கலாம் அன்றில் ஒரு தேவதையோடு வாழக்கிடைப்பது தேவதைகளின் கரிசனமே அன்றி அவை தவங்களின் வலிமையன்று.

அம்மாவின் சாயல்களை அவள் இயல்புகளெங்கும் சேகரித்து வைத்திருந்த அவளுக்கும் அம்மாவிற்கும் இருந்த ஆகக்கூடிய வித்தியாசமாய் இருந்தது அவள் கறுப்பாயும் அம்மா வெள்ளையாயும் இருந்ததுதான்...நான் தேவதை என்கிற சொல்லை அதிகமாய் எழுத ஆரம்பித்தது அவள் வருகைக்கு பின்பென்கிற தகவலைநான் எழுதிய சில கவிதைகளும் தொடர்ச்சியாய் இல்லாமல் நான் எழுதிய நாட்குறிப்புகளும் நிரூபிக்கின்றன்...


தேவதைகளுக்கு பிறந்த நாள் இருப்பது உங்களுக்கு புதிதாய் இருக்கலாம் ஆனால் அவள் பிறந்த திகதி ஜனவரி பதினைந்தாய் இருந்தது.அவள் பிறந்து விட்டாளே ஒழிய இனி மறையப்போவதில்லை என்பதற்கு கூகுள் ஒரு வேளை சாட்சியாகலாம் அல்லது கொஞ்சம் போதையுடனும் நிறைய நினைவுகளுடனும் இதனை எழுதிக்கொண்டிருக்கிற ஆசிரியனும் அவன் நாட்குறிப்புகளும் காரணமாகலாம்.

இன்றவளுக்கு பிறந்த நாள் என்பதில் அவள் கொண்டாடிக்கொண்டிருப்பது அவள் நாட்களில் ஒன்றென்றாலும் நான் கொண்டாடிக்கொண்டிருப்பது தேவதையைத்தானே!அத்தோடு தேதைகளிடம் வரம் மட்டுமே கேட்பது எப்போதும் முறையானதல்ல அவளுக்கென்றும் சில விதி முறைகள் இருக்கலாம்,அவை தவிர்க்கமுடியாதவைகளாய் இருக்கலாம் அல்லது தவம் செய்பவனுடைய வல்லமைகள் திடங்கள் கலைந்து போயிருக்கலாம் ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு அவள் சிறகுகளை இழக்க வேண்டியிருந்திருக்கலாம் இங்கே அவள் இழந்தது சிறகுகளைத்தானே ஒழிய நினைவுகளை அல்ல என்பது அந்த தவம் பற்றிய குறிப்பகளை எழுதிச்செல்கிற நிஜத்தை தந்திருக்கிறது! ஒருக்கால் இழந்து போன சிறகுகளை திரும்பவும் அவள் பெறக்கூடும் அதுவரையான அவன் தவம் கலைக்கப்படாமலிருக்கட்டும் என்பதற்காயும் அல்லது அவளுக்கு சிரமங்களை கொடுக்கிற சிறகுகள் மீண்டும் கிடைக்கப்பெறாமல் இருப்பதற்குமாய்...

வரம் தருகிற தேவதையொருத்தியை வாழ்த்திக்கொள்வதில் உயிர் கிண்ணங்களில் சந்தோசம் நிறைகிறது!



பின் குறிப்புகள்:

//
பதிவின் நோக்கம் ஒரு தேவதையை வாழ்த்துவது மட்டுமே பதிவிற்கான சுவாரஸ்யத்திற்காய் சில வரிகள் கோர்வையாககப்பட்டிருக்கிறது...

//
எனக்கு தெரிந்த பெண்ணொருத்திக்கு இன்று பிறந்த நாள் அவளுடைய உண்மை வயதென்ன என்பது தடைசெய்யப்பட்ட கேள்விகளுள் ஒன்று.

//
இது நிஜம் தழுவி எழுதப்பட்ட புனைவு.

Sunday, January 11, 2009

சைக்கிள் நினைவுகளும் தேவதைகளும்!




பள்ளிக்கூட வாழ்ககை என்பது வாழ்வின் அனுபவங்களில் பசுமைகள் நிரம்பிய காலம் கல்லுரி வாழ்க்கை வேறு சுகம் என்றால் பள்ளிக்கூட வாழ்க்கை தனி அற்புதம்!

பெயர் தெரியாத வெள்ளைநிறப்பறவைகள் கூட்டமாய் பறந்து செல்கிறதை பார்த்திருக்கிறீர்களா அவை பச்சைவெளிகளில் தரையிறங்கி வெகு நிதானமாய் நடைபோடுகிற அழகை ரசித்திருக்கிறீர்களா எங்களூர் பள்ளிக்கூட சீருடைகள் வெள்ளை சட்டைகள்தான் பள்ளிக்கு பள்ளி டை மட்டும் மாறுபடும்.வெள்ளை நித்துப்பறவைகளாய் சில கோடி அழகுளின் சாயல்களில் நிறம் நிறமாய் பெண்கள்!(இப்பொழுதெல்லாம் கூட்டமாய் பறக்கிற பறவைகளை காணமுடிவதில்லை.இருக்கிற இடம் அப்படியோ என்னவோ)நான் கலவன் பாடசாலையில் படிக்காதது நான் செய்த துர்ரதிஷ்டம்!அடுக்கடுக்காய் அவள்கள் சைக்கிளிலும் நடந்தும் வருவது - இப்பொழுது நினைக்கையில் ஊவ்ஹ்ஹ்ஹ்...
(இந்த நேரத்தில் சமீராவைப்பார்த்த சூர்யாவை கற்பனை பண்ணிக்கொள்ளவும்) அதுபோல சில மோனரிஸங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் நெஞசில் மெதுவாக தட்டிக்கொள்ளுதலும் தலையை இடது பக்கமாய் திருப்பி இல்லாத காற்றை வெளிவிடுகிறதுமாகிய நிகழ்வு எனக்குள்ளும் நிகழந்திருக்கிறது! அப்படியொரு நிகழ்வு சமீப காலங்களில் நிகழவில்லை என்பது ஏக்கத்துக்குரிய உபரிக்குறிப்பு.


மனது விட்டுச்சொல்லப்போனால் என் பள்ளிக்கூடத் தெருக்களில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நடக்கலாம்...அடச்சே! என்ன வாழ்க்கையிது இப்பொழுது! ஏன் கடந்து போகின்றன நாட்கள் பால்யங்கள் தொலையக்கூடாது தொலைந்தால் ஊரை விட்டுப்போகக்கூடாது!



நான் படித்த பள்ளிக்கூடத்துக்கு சகோதர பாடசாலையாக ஒரு பள்ளிக்கூடம் இருந்தது... வடமராட்சியின் பெயர் பெற்ற மகளிர் கல்லுரிகளில் ஒன்று! வடமராட்சி முழுவதிலும் இருந்து படித்த பெண்களை பார்க முடியும். ஒரே எல்லைக்குள் இருந்தாலும் நடுவில் வீதியும் சில கட்டிடங்களும் மட்டுமே பிரித்து வைத்திருந்தது ஆனால் போக்கு வரத்து ஒரே பாதைகளில்தான் நடக்கும் வாழ்வின் மிக அழகிய தெருக்களில் அவை முதலிடத்தில் இருக்கின்றன...





காலையில் ஏழரையிலிருந்து எட்டுமணிவரையும் மத்தியானம் இரண்டு மணியிலிருந்து இரண்டரை வரையும் அந்த தெருக்களின் முக்கியமான வளைவுகள் சில எங்களுடைய சிந்தனைத்தளங்களாய் அமைந்திருக்கும்.

காலையில் அழுத்தி அயர்ன் பண்ணிய வெள்ளைச்சட்டைகளும் இறுக்கிப்பின்னிய இரட்டைஜடைகளுமாய் வரிசை வரிசையாய் பெண்கள்!கோசலா மெத்தைக்கடை சந்தியை கடக்கையில் மணி ஏழு நாற்பத்தொன்றாய் இருக்கும், பிருந்தாவும் சிந்துவும் ஓடக்கரையையும் கொலிஜ் றோட்டையும் இணைக்கிற சந்திக்கு வருகையில் மணி ஏழு முப்பத்தொன்றாய் இருக்கும், நெல்லியடி பிரியாவும் சுகந்தியும் பள்ளிக்கூட வளைவை நெருங்குகையில் மணி ஏழு நாற்பத்தொன்பதாய் இருக்கும் இப்படி அவளவளுக்கென்று தனித்தனியான நேரத்தை வைத்திருந்து நாள் தவறாமல் குறித்த நேரத்துக்கு வருவதில் பெண்களை மிஞ்ச முடியாது.


எனக்கொரு பழக்கம் இப்பொழுதும் இருக்கிறது பெண்களின் முகத்தை கவனமாய் பார்க்கிறேனோ இல்லையோ அவர்கள் பாதங்களை பார்த்து விடுவேன் எனக்கென்னமோ தெரியவில்லை முகம் பார்த்தாலும் திரும்ப அவள் பாதங்களை பார்ப்பது பழக்கமாகியிருந்தது அதுபோல எல்லா கால்களுமே வெள்ளை காலுறைகளில் செதுக்கிவைத்தாற்போல இருந்தாலும்(இந்த சீருடை என்பது எவ்வளவு அழகான விசயம் அதுவும் வெள்ளை நித்தில் சீருடை என்பது ரசனைகளின் உயரிய விசயங்களில் ஒன்று வெள்ளை நிற சீருடைகளுக்கு வேறென்ன காரணங்கள் இருப்பினும் எனக்கென்னவோ இப்படித்தான் தோன்றியது)
அந்த வகையில் பழக்க தோசங்களின் விதிப்படி கால்களை வைத்தே கால்களுக்கு சொந்தக்காரி யாரென்பதை சொல்லிவிடக்கூடிய திறமையை வளர்திருந்தேன்:)


பள்ளிக்கூட நாட்களில் காலைகளில் பெண்களளை கவனிப்பது அல்லது பார்ப்பது ஒரு விதமான உற்சாகம் தருகிகற நிகழ்வு! வழக்கமாய் பார்க்கிற சில முகங்களை பார்க்க முடுடியாமல் போனால் அன்றய பாடங்கள் எதுவும் கவனத்துக்கு வருவதில்லை....
அதுவே அந்த இரண்டிலிருந்து இரண்டரை வரையிலான வெயில் நேரத்து பகல்களின் பசி நேரத்தில் அவள்களை கவனித்தால் அது ஒரு சுவாரஸ்யமான அழகியல் பெண்களை புரிந்து கொள்வதற்கு நான் முயன்ற முதல் படிகள் இந்த நாட்களில் இருந்து ஆரம்பித்திருக்கலாம் என்பது என் எண்ணம்...

காலையில் சொல்லப்படுகிற கதைகளுக்கும் கேட்கப்படுகிற கேள்விகளுக்கும் மதியங்களில் பதில் கிடைக்கலாம் இங்கே பதில் என்பது திட்டுக்களாகவும் அட்வைஸ்களாகவும் வெகு அரிதாய் பதில்களகவும் இருக்கலாம்.அப்படி பதில் சொல்கிறவள்களில் ஒருத்தியாக குந்தவை இருந்தது என்னுடைய ஆச்சரியம் அவள் திமிர் பிடித்தவளென்பதும் மண்டல் கள்ளி என்பதும் பெடியளின் ஒருமித்த வாக்கு மூலமாய் இருந்தது.எனக்கென்னவோ அவள் அமைதியானவளாக இருந்தாள் என்றுதான் உள் மனது சொல்லிக்கொண்டிருந்தது.அவள் மிக ஆர்ப்பாட்டமானவள் என்பதும் அடுத்தவர்களை புரிந்து கொள்வதில் அதிக அக்கறை கொண்டவள் என்பதும் அவளொடு நிகழ்ந்த மிகச்சொற்பமான உரையாடல்களில் இருந்து நான் தெரிந்து கொண்டது...



குந்தவையோடு சமீபமாய் சைக்கிளோடுவது புரிதல் நிறைந்த நண்பனொருவனோடு கால் நனைக்கிற அலைகளின் கரையில் நடந்து கொண்டே மனது விட்டுப்பேசுகிற நிகழ்வைப்போன்றது...


பத்தாமாண்டு படித்த துர்க்காவோடு பேசிக்கொண்டு வருவது ரசனைக்குரிய விசயம் அவ்வளவு அழகாய் நாங்கள் இரண்டு பேரும் மட்டுமேயான தெருக்களில் நடப்பதைப்போல அபிநயங்களோடு பேசுவாள்...


ராதா மிக அழகாய் இருக்கிற அவள்...
வெகு சாதரணமாய் சைக்கிளை கையாள்கிறவள்! மிகப்பழகிய குதிரை ஒன்றின் சொந்தக்காரியைப்போல லாவகமான அலட்சியங்களோடு சைக்கிளோடுபவள்.இவளோடு பேசிக்கொண்டு வருகையில் எச்சரிக்கை கட்டாயம் அவசியமாய் இருக்கும் அதற்கு சாலை வளைவுகளை விட அவளுடைய வளைவுகள் காரணமாயிருந்திருக்கலாம்...


இன்னொருத்தி மாதுளா...
சற்றே குண்டாயிருந்தாலும் கவர்ச்சியான தோற்றம் என்பதோடு கிறங்கடிக்கும் விழிகளை விசேடமாக கொண்டிருந்தாள்.அந்த விழிகளுக்காகவே அவளோடு மிகக்கஸ்டப்பட்டு சினேகம் ஏற்படுத்திக்கொண்டேன். இப்பொழுதும் தூக்கம் கலைக்கிற கனவுகளில் அந்த விழிகளுக்கும் பங்கிருக்கிறது. உற்சாகமாய் இருப்பவள் இவளோடு சண்டை எல்லாம் போட்டிருக்கிறேன் சைக்கிளோடுகையில். சைக்கிள் சீற்றை கொஞ்சம் உயர்த்தி வைத்துக்கொண்டு அதிர்வுகளோடு சைக்கிளோடுகிற இவள் அதனால் தடுமாறுகிற பெடியளைப்பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை,அடிக்கடி எழுந்து அமர்வதில் அதிர்வுகளை ஏற்படுத்திப்போகிறவள். யாருமற்ற காலைப்பொழுதொன்றில் மிக வேகமாய் விளையாட்டு பயிற்சிக்கு போய்க்கொண்டிருந்தவளை வழிமறித்து நிப்பாட்டினேன் சைக்கிளின் இரண்டு பக்கமும் கால்களை வைத்து நின்றவளை கொஞ்சமும் எதிர்பார்க்கமால் சட்டென்று இழுத்தணத்தேன்...உதடுகள் விடுபடுகிற தருணத்தில் அவள் காதுகளுக்கருகில் மிக மெதுவாய் சொன்னேன் இனிமேல் இப்படி சைக்கிளோடாதே!


பள்ளிக்கூடத்தின் இறுதி நாட்களில் நான் கூடவே சைக்கிளோடி வந்த இன்னொரு பெண்ணையும் மறக்க முடியாது! மதிவதனா என்பது அவளுடைய பெயர். அவளை அவள் என்று எழுதுவது கொஞ்சம்அதிகம்தானென்றாலும் அவள் அதனைத்தான் விரும்பினாள் என்னை விட நாலு வயதென்றாலும் அவளுக்கு கூட இருக்கலாம் ஆனால் அவளோடு நான் கருத்துக்களின் அடிப்படையில் மிக நெருக்கமாய் இருந்தேன்!எங்கள் ஊரின் பள்ளியொன்றில் கணிதம் படிப்பிக்கிறவளாக இருந்தாள்.

கொஞ்சம் சிரமப்பட்டு சைக்கிளோடுவது போலத்தான் 'சாறி'கட்டியிருப்பாள் ஆனால் வெகு நளினமாய் விளம்பரங்களில் வருகிற பெண்களை போல இருக்கும் அவள் சைக்கிளை கையாள்கிற விதம். ஆளை அடிக்கிற வாசனையோடு வருகிற இவளோடு நிகழ்ந்த கதைகளை இங்கே சொல்லப்போனால் எனக்கு பின்னூட்டங்களில் வசவுகள் வரக்கூடும்!



பின் குறிப்புகள் அல்லது பதிவுக்கான காரணங்கள்:

//
சைக்கிள்களையும் பெண்களையும் மறக்க முடியாத ஒரு ஊர் எங்களுடையது யாழ்ப்பாணம் சைக்கிள்களின் நகரம் என்று அங்கு வந்து போன வெளியிடத்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

//
எழுத்திற்குள் கொண்டு வரத்தெரியாத பல நினைவுகள் இருப்பினும் வசப்படுகிற பொழுதுகளில் எழுதி விட வேண்டும.மிக முக்கியமான நினைவுகள் இன்னமும் எழுதப்படவில்லை...


//
பள்ளிக்கூட சட்டையிலிருந்த
உன்னைப்போலிருந்தாள்
நெடு நாட்களுக்கு பிறகு
நேற்றய கனவில் வந்த
ஆதிக்கனவுகளின் தேவதை...!


//

தொடரும்...