Wednesday, December 24, 2008

என் முதல் தோழிக்கு பிறந்த நாள்...

அவளுக்கு வெள்ளந்தி மனது அவள் நிறத்தைப்போலவே மூன்றாவது வருடமாக அவள் பிறந்த நாளுக்கு அவளோடு இல்லாமல் இருக்கிறேன் காலையிலேயே அழைத்துப்பேசி இருந்தாலும் அவளை கட்டிக்கொண்டு உச்சி முகர்ந்து வாழ்த்துசொல்லவும் அவளிடமிருந்து ஆசீர்வாதங்களும்,பரிசும், இனிப்புகளும் பெற முடியாமலும் போனது வலிக்கத்தான் செய்கிறது, காலம் போய்கொண்டிருக்கிறது...இன்னும் எத்தனை பிறந்த நாட்கள் இப்படி பிரிந்திருக்க வேண்டுமோ என்ன செய்வது:(

வா உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது என்பது அவள் இப்பொழுதெல்லாம் சொல்கிற முதல் வார்த்தையாய் இருக்கிறது, வந்து என்னை கண்டு கொள் பின்னர் யோசிக்கலாம் நீ யாழ்ப்பாணத்தை விட்டு போவதையும் அங்கு ஜீவிக்க விரும்பாதையும் என்று தன் அன்பின் ஆயிரங்களில் ஒரு பங்கை எனக்கு காட்டிக்கொள்வாள்...

"நீதானே ஒரு கடிதம் போடாத ஆள்" என்று நான் ஆயிரம் முறை தொலைபேசியில் அழைத்தாலும் சொல்கிறவள், கடிதங்கள மீதான என் காதலுக்கு இவளும் ஒரு காரணம்! அவள் கிறுக்கலான கையெழுத்துக்களில் நெருக்கமான மனதினை அழகாய் தருகிறவள்..."ஒரு படம் அனுப்பு பார்க்கலாம் என்றாலு நடப்பு காட்டுகிறாய்" என்பதும் நான் புகைப்படங்கள் எடுப்பதில்லை என்கிற என் வாதங்களை மீறிய அவள் குற்றச்சாட்டு!

நான் அவளோடு இருந்த நாட்களில் எல்லாம் என் எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் என் பக்கமே வாதாடுகிற அவள் அன்புக்கு தெரிவதில்லை அடுத்த கோணங்கள் 'அவன் அப்படிச்செய்கிற ஆள் இல்லை' அல்லது 'அவன் அப்படியானவன் அல்ல' என்பது அவள் வாதமாக இருக்கும் அந்த பிரச்சனைகளை ஒரு தீர்வுக்கு கொண்டு வந்த பிறகுதான் அது பற்றி என்னிடம் விவாதம் செய்வதும் என்னை கேள்வி கேட்பதும் அவளுக்குத்தான் என்னைப்பற்றி அங்குலம் அங்குலமாய் தெரிந்திருக்கிறதே பிறகென்ன :)

'இனிமேல் உனக்காக கதைக்கமாட்டேன் எக்கேடு என்றாலும் கெட்டுப்போ' என்று சொல்லிக்கொண்டாலும் அதற்கு நான் காட்டுகிற பொய்க்கோப முறுக்குகளுக்கே குழைந்து போய்விடுகிற லேசான மனதுக்காரி..எதுவும் பேசாமல் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியேறுகிற என்னை "தேத்தண்ணியை குடிச்சுட்டு போ" என்கிற முகம் பாராமல் சொல்கிற வார்த்தைகளிலேயே கட்டிப்போட்டு விடுகிறவள்! அவள் கையால் தேநீர் குடிக்கிற நிகழ்வும் என் சமீபத்திய கனவுகளில் அடிக்கடி நிகழ்கிறது...


வெகுவிரைவில் அவளை சந்திக்க வேண்டும் என்றிருக்கிறேன், அவள் என்னிடம் கேட்டிருப்பது தான் இந்தியா போய் பார்க்க வேண்டும் என்பது; நானும் சொல்லி இருக்கிறேன் நான் ஊருக்கு வருகையில் அழைத்துப்போகிறேன் என்று. 2009 ஏப்பரல் மாதம் அநேகமாய் அது நிகழக்கூடும்...

அவளையும் ஊரையும் பார்ப்பதற்காகவாவது ஊருக்கு போயாக வேண்டும் அதற்கான விருப்பங்களும் சூழ்நிலைகளும் இல்லாமல் போனாலும்...


சரி..! சரி..! சொல்ல வந்த விசயத்தை மறந்து அவளைப்பற்றி சிலாகிப்பதே வேலையாகி விடுகிறது எனக்கு! அவள் சார்ந்து என்ன விடயம் பேச ஆரம்பித்தாலும்.


1951-12-24 இல் பிறந்த அவளுக்கு இன்று பிந்தநாள், நான் கொண்டாடுகிற நாள், இந்த முறை அவள் பிறந்த நாளுக்கு உங்களையும் அழைத்திருக்கிறேன் சரியா?(இந்த அழைபை ஏற்றுக்கொள்வீர்கள்தானே ஏனெனில் இனி இன்னும் சில இப்படியான அழைப்புகள் வரக்கூடும்...)

மிக மெல்லிய மனதுக்காரியான நல்லவள் ஒருத்திக்கு நான் வாழ்த்து சொல்கிற தருணத்தில் நீங்களும் வாழ்த்த வேண்டாமா...பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா...


இந்த பிறந்த நாளிலும்...
நான்தான் உன்னிடம் கேட்கிறேன்
இன்னும் நிறையப் பிறந்தநாட்களை
நீ என்னருகில்
இருந்து கொண்டாட வேண்டும்
நான் கேட்கும் வரை
நீ பிறந்தநாள் கொண்டாட வேண்டும்...

வரம் தருவது
உனக்கொன்றும் புதிதல்லவே
இந்த வரத்தையும் எனக்கு
தந்து விடு!


//
அம்மாவின் பிறந்த நாளுக்கு பதிவெழுத வேண்டும் என்பதை விட அவளுக்கான் என் வாழ்த்துக்களை என் மனதார சொல்ல வேண்டும் என்கிற எண்ணமே நிறைய இருந்தது என்னவெணன்று எழுதி பதிவு போடுவது என்று தெரியாமல்தான் இணையத்துக்கு வந்தேன்...(இந்த நாட்களில் இணையம் கிடைப்பதும் பெரும் கஷ்டமாய் இருக்கிறது இப்பொழுதுதான் சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது)அலுவலக வேலையின் குறுக்கிடல்களுக்கு மத்தியில் சட்டென்று தோன்றிய உணர்வுகளில் இருந்து இவ்வளைவையும்தான் கோர்வையாக்க முடிந்திருக்கிறது.

//
திரும்பவும் உன் சந்தோசத்திற்கும் நிறைவிற்கும் மனதார்ந்த வாழ்த்துக்கள் அம்மா தெய்வங்கள் நீ தொழுகிற தெய்வங்கள் எப்பொழுதும் உன் கூட இருக்கும்...

//
என் குடும்பத்தார்,நண்பர்கள், நீங்கள் எல்லோர் சார்பாகவும் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடுவதிலும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதிலும் புதியதொரு சந்தோசம் கிடைத்திருக்கிறது.


24-12-2008
07.07pm
KSA.

20 comments:

ஆயில்யன் said...

//சரி..! சரி..! சொல்ல வந்த விசயத்தை மறந்து அவளைப்பற்றி சிலாகிப்பதே வேலையாகி விடுகிறது எனக்கு! அவள் சார்ந்து என்ன விடயம் பேச ஆரம்பித்தாலும்.//

உண்மைதானே!

அம்மாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க!

இந்திய பயணத்துக்கும் முன்கூட்டிய வாழ்த்துக்கள் :)

ஆயில்யன் said...

//1951-12-24 இல் பிறந்த அவளுக்கு இன்று பிந்தநாள், நான் கொண்டாடுகிற நாள், இந்த முறை அவள் பிறந்த நாளுக்கு உங்களையும் அழைத்திருக்கிறேன் சரியா?(இந்த அழைபை ஏற்றுக்கொள்வீர்கள்தானே ஏனெனில் இனி இன்னும் சில இப்படியான அழைப்புகள் வரக்கூடும்...)///

கண்டிப்பாக அழைப்புகளை ஏற்றுக்கொள்கிறோம் எங்களின் வாழ்த்துக்களையும் எடுத்துச்செல்லுங்கள் - சொல்லுங்கள்

ஆசிர்வாதங்களையும் கொடுத்தனுப்புங்கள் :)))

ஆயில்யன் said...

//சட்டென்று தோன்றிய உணர்வுகளில் இருந்து இவ்வளைவையும்தான் கோர்வையாக்க முடிந்திருக்கிறது. //


உங்களால் கோர்வையாக்கி பதிவாக்கி விட முடிந்த விசயம் எனக்குள் இன்னும் மனதுக்குள்ளேயே இருக்கிறது!

என் அம்மாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல ஆயிரம் முறை பயிற்சி எடுத்துக்கொண்டாலும் கூட,எப்படிடா இருக்க என்ற குரலில் எல்லாமே மாயமாகிப்போகின்ற காரணத்தில்...!

PoornimaSaran said...

வாழ்த்துக்கள்

ஹேமா said...

தமிழன்,உங்கள் அன்புத்தோழிக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இப்படி ஒரு அம்மாவா....அந்த அம்மாவுக்கு இப்படி ஒரு அன்பு மகனா என்பது போல இருக்கு.கண்ணூறு படப் போகுது.சுத்திப் போடுங்கோ தமிழன். கெதியா போய் பாத்திட்டு வாங்கோ.

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

சந்தனமுல்லை said...

மிகவும் நெகிழ்ச்சியாயிருந்தது வாசிக்க! வாசித்து முடித்டஹ்பின் இரண்டு சொட்டு கண்ணீர்...இதுதான் உங்கள் பதிவின் வெற்றி என்று நினைக்கிறேன்! தங்கள் அம்மா என்ற அந்த தேவதைக்கு எங்களின் சார்பாக வாழ்த்துகள்...வணக்கங்கள்! உங்கள் வேண்டுதல்கள் பலிக்க பிரார்த்தனைகள்!

சந்தனமுல்லை said...

//எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் என் பக்கமே வாதாடுகிற அவள் அன்புக்கு தெரிவதில்லை அடுத்த கோணங்கள் 'அவன் அப்படிச்செய்கிற ஆள் இல்லை' அல்லது 'அவன் அப்படியானவன் அல்ல' என்பது அவள் வாதமாக இருக்கும் //

மிகவும் பிடித்தது இவ்வரிகள்!//பொய்க்கோப முறுக்குகளுக்கே குழைந்து போய்விடுகிற லேசான மனதுக்காரி//

எல்லாவரிகளையுமே ரசித்தேன்..ஒரு அழகிய கவிதை படித்த உணர்வு!!

ஹேமா said...

தமிழன் கால் சுகமாயிடிச்சா?

Saravana Kumar MSK said...

அம்மாவுக்கு வாழ்த்துக்கள் தமிழன்..

Saravana Kumar MSK said...

தமிழன் கால் சுகமாயிடிச்சா??????

Anonymous said...

//அவள் கிறுக்கலான கையெழுத்துக்களில் நெருக்கமான மனதினை அழகாய் தருகிறவள்..."//
அம்மாவுக்கு என் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்கோ.......
சித்திரை மாதம் ஊருக்கு கிளம்பபோகிறியளா? வாழ்த்துக்கள்

Anonymous said...

உடம்பு எப்படி?

தமிழன்-கறுப்பி... said...

அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே...

தமிழன்-கறுப்பி... said...

@
ஹேமா...
@
MSK
@
கவின்

கால் பரவால்லை கட்டெல்லாம் அவிழ்த்துவிட்டேன் பணிக்கு வந்து போய்கொண்டிருக்கிறேன் அன்புக்கும் அக்கறைகளுக்கும் மறுபடி நன்றி நண்பர்களே...

தங்கராசா ஜீவராஜ் said...

அம்மாவுக்கு வாழ்த்துக்கள் தமிழன்

////வெகுவிரைவில் அவளை சந்திக்க வேண்டும் என்றிருக்கிறேன்////

என்னனுடைய பிராத்தனைகள்....

அன்புடன் அருணா said...

மனம் நெகிழ்ந்தது படித்ததும்....அடுத்த பிறந்த நாளுக்காவது அருகில் இருந்து வாழ்த்துச் சொல்லுங்கப்பா....
அன்புடன் அருணா

Anonymous said...

முதல் தோழி என்றதுமே அம்மாவாகத்தான் இருக்கும் என நினைத்தேன்... :)

உங்க அம்மாக்கு எங்களோட அன்பான வாழ்த்துகளும்

தாமிரா said...

வாழ்த்துகள் இருவருக்கும்.!

பராசக்தி said...

பெண்மையிடம் தோற்றவன் நிட்சயம் இன்னொரு பெண்ணின் மனதில் ஓங்கி உயர்ந்து வளர்வான், எமது சமுகத்தில் அருகிக் காணப்படும் ஒரு குணமான - அன்பை உடனுக்குடன் தெரியபடுத்தும், அதாவது அன்பு வெள்ளமாய் மனதினில் ஓடும் வார்த்தைகளில் வராது - இது உமது இந்தப் பதிவில் அதிகமாய் தெரிகிறது. வாழ்த்தும் உள்ளமும் வாழவைக்கும் பரிவும் ஒன்றாக சேரட்டும். வாழ்த்துக்கள்