Friday, December 26, 2008

அலை செய்த துரோகம்...

கொஞ்சம் பொறு அலையே -உன்னோடு
கொஞ்சம் பேசவேண்டியிருக்கிறது!
என் சிறுவயதிலிருந்து
என்னை நீ பார்த்திருக்கிறாய்
அம்மாவுடையதோ அல்லது அப்பாவுடையதோ
கைகளைப்பற்றிக்கொண்டு...
உன் பெரியதும் சிறியதுமான அலைகளுக்கு
நான் பயந்து பயந்து நடந்த நாட்களில் இருந்து
என்னை உனக்கு தெரியும்!
ஒருவேளை அதற்கு முன்னர் இருந்தே
உனக்கு என்னை தெரிந்திருக்கலாம் - ஆனால்
எனக்கு உன்னை அப்பொழுதிலிருந்துதான்
அடையாளம் கண்டு கொள்ள முடிந்திருக்கிறது...
அந்த நாட்களில் இருந்து இப்போது
அவளோடு நடந்த நாட்கள் வரைக்கும்
உனக்கு என்னை நன்றாகவே தெரியும்!
இதுவரையும் உன்னிடமிருந்து நான்
எதையும் மறைத்ததில்லையே!
என்னுடைய பள்ளி நாட்களின்
உறவுகளும் பிரிவுகளும்
என்னுடைய சிறுபராயத்தில்
நீ கொடுத்த சிப்பி சோகிகளும்
நான் வளர்த்த மீன்களின் தொட்டிக்கு
நீ கொடுத்த பூக்கற்களும் சங்குகளும்
பழைய புத்தகங்களின் பக்கங்களில்
நான் செய்து விட்ட கப்பல்களும்
என் பெயரெழுதி போத்தலில் அடைத்து
என்னால் முடிந்தவரை தூரத்தில்...
உனக்குள் அதனை எறிந்ததும் என சிறுவயதில்
நம் கொடுக்கல் வாங்கல்கள்
நம் நட்பின் பரிமாற்றங்களாகத்தானே இருந்தது...

உந்தன் காற்றோடு நான் பட்டமேற்றி விளையாடியதும்
உன்னோடு சேர்ந்து நான் நீச்சல் பழகியதும்
அதன் பிறகு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம்
உந்தன் அலைகளில் நான் மிதந்திருந்ததும்
நம் நட்பின் நெருக்கத்தை அதிகரித்திருந்ததே...

வருடம் ஒரு மறை வரும் நம்மூர் கோவிலின்
தீர்த்ததிருவிழாவில் ஊரையே மொத்தமாய்
பார்த்த சந்தோசத்தில் நீ துள்ளி விளையாடுவதும்
சில வருடங்களுக்கொரு முறை வரும்
ஏதோ ஒரு தினத்தில் நம்மூர் கோவில்
தெய்வங்கள் எல்லோரும் உன்னை
தேடிவந்து நீராடிச்சென்றதும் என
ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்
எனக்கும் உனக்குமான நெருக்கம்
அதிகமாகத்தானே ஆகியிருக்கிறது....

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
என் நண்பன் ஒருவனை நீ பறித்துக்கொண்ட பொழுதில்
அவனை உன் கரையிலேயே நெருப்பாக்கி
அவன் சாம்பலையும் உனக்குள்ளேயெ கரைத்ததற்காய்
உன்னோடு நான் கோபித்துக்கொண்ட அந்த நாட்களுக்கு பிறகு...
அந்த சோகத்தை மறப்பதற்கு கூட
உந்தன் கரையில் இருந்துதானே அழுதேன்
அப்பொழுதும் நீதானே வந்து தேற்றினாய்
அதன் பிறகு நான்
உன்னோடு பேசுவதைக்குறைத்திருந்தேன்
பார்க்க வருவதை தவிர்த்திருந்தேன்
பின்பொரு சந்தர்ப்பத்தில் நெடுநாட்களின் பின்னர்
அவளை முதன் முதலில் சந்தித்த நாளில் கூட...

உன்னைப்பபார்க்க வந்து
நெருக்கமான நண்பர்களைப்போல
தழுவிக்கொண்டோமே நினைவில்லையா?!
அதன் பிறகு அவளும் நானும்
நீயும் நிலாவும் மட்டுமேயான நாட்களில்
நேரம் போவதே தெரியாமல்
பேசிக்கொண்டிருக்கிற எங்களுக்கு
ஈரம் சேர்த்த காற்றை அனுப்பி
நேரத்தை நினைவுபடுத்துவாயே மறந்து விட்டாயா?

எனக்கும் அவளுக்கும் இடையிலான
நெருக்கமான தருணங்கள் கூட
உன் கரையில்தானே நிகழ்ந்திருக்கிறது
இவ்வளவு ஏன்
என் முதல் முத்தம் கூட
உன் பார்வையில்தானே நிகழ்ந்திருக்கிறது
இப்படி என்னுடைய
சந்தோசம்,சோகம்,சுகம் என
யாவும் உனக்கு தெரியாமல்
நான் மறைத்ததில்லையே

இப்படியிருக்க...

நீ மட்டும் எப்படி!
நெஞ்சைத்தொட்டுச்சொல்!!
நீ செய்தது துரோகம்தானே!
போ அலையே போய்விடு !
நீ செய்தததை மறக்க முடியவில்லை!!
மன்னிக்கவும் முடியவில்லை!!

இருந்தாலும்...
இப்பொழுதும் கூடப்பார்
உன்னிடம்தான் அழுதுகொண்டிருக்கிறேன்
இனியாவது...
எனக்கு தெரிந்தொ தெரியாமலோ...
இப்படியான காரியங்களை செய்யாதே.




\\
நினைத்துபாராத விசயமாய் நிகழந்த சுனாமி நினைத்துப்பார்க்க முடியாத மறக்கவும் முடியாத நிகழ்வுகளை தந்து போய் நான்கு வருடங்களாகிற்று ...சொல்ல முடியாத, வெளியே தெரியாத பல கதைகள் இன்னமும் இருக்கிறது அதன் வடுக்களின் சுவடாக...


\\
சுனாமிக்கு பின்பான நாளொன்றில் எங்களுர் கடற்கரையில் நடந்து கொள்கையில் மனதுக்குள் வந்த பல நினைவுகளை கையிலிருந்த பழைய குறிப்பேடொன்றில் தொடர்பே இல்லாமல் கிறுக்கியிருந்தேன் அப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாய் எழுதிய கடல் குறிப்புகளில் இருந்து சில வரிகளை சேநர்த்தெழுதியிருக்கிறேன்...(22/01/05)

நேற்றே தட்டச்சி முடித்திருந்தேன் பதிவாக்குவதற்கான நேரம் கிடைக்கவில்லை இன்றைக்கு வந்தவுடன் பதிவாக்கி இருக்கிறேன்.

26/12/2008
4.35pm
K.S.A


\\

சுனாமிக்கு பின்னர் கடற்கரை பிரதேசத்திலேயே வேலை செய்திருந்தாலும் கடலுடனான நெருக்கம் குறைந்துதான் இருக்கிறது...கடற்கரையிலேயே வேலை செய்திருந்தாலும் ஊரைவிட்டு வரும்பொழுதே திருகோணமலை கடலின் அலைகளினுடே கண்ணுக்கெட்டிய துரம் வரை நடந்து திரும்பினேன்.

அதே போலத்தான் எங்களுர் கடற்கரையிலும் கால் நனைக்காமல் இருந்த என்னை இரண்டு சந்தர்ப்பங்களில் கடலே அழைத்திருந்தது.

4 comments:

Muhammad Ismail .H, PHD., said...

// இருந்தாலும்... இப்பொழுதும் கூடப்பார் உன்னிடம்தான் அழுதுகொண்டிருக்கிறேன் இனியாவது... எனக்கு தெரிந்தொ தெரியாமலோ...
இப்படியான காரியங்களை செய்யாதே.//


அன்பின் தமிழன்-கறுப்பி..,


படிக்கும் போதே வலிக்கும் வார்த்தைகள். மறுபடியும் கடலானது இப்படிப்பட்ட காரியத்தை செய்யாது என்பதற்க்கு எந்த உத்திரவாதமும் இல்லை. நாம் தான் நமது அறிவினை பயன்படுத்தி நமது சகோதர, சகோதரிகளின் உயிர், உடமைகளை காக்க வேண்டும். மேலும் விபரம் விளங்க கீழே படித்துணரவும். உங்களால் முடிந்தால் உதவவும்.


ஆழிப்பேரலை(சுனாமி)உருவாக சில நியதிகள் உண்டு. அவை கடலுக்கடியில் 7.5 அளவிற்க்கு மேலான நிலநடுக்கம்(பூமி அதிர்ச்சி), குறிப்பு- (மனிதர்கள் வாழும் நிலத்தில் எவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டலும் அது ஆழிப்பேரலையை உருவாக்க இயலாது) அல்லது விண்ணிலிருந்து பெரிய அளவில் உள்ள விண்பொருட்கள் கடலில் மோதுகை, ஆழ்கடலில் மிகப்பெரிய மண்சரிவுகள் அல்லது கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடிப்பு போன்றவை ஆழிப்பேரலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.

ஆழிப்பேரலை தாக்குதலுக்கு முன் கடலானது கடற்கரையிலிருந்து பின் வாங்கி சென்றுவிடும்.மேலும் ஆழிப்பேரலை குறித்து யாரும் பெரும் கிலி கொள்ள தேவையில்லை. அதனால் கடற்கரையின் இருபுறமும் அதிகபட்சமாக 2 கி.மீ வரை தான் சேதத்தினை ஏற்ப்படுத்திட இயலும்.நாம் ஆழிப்பேரலையை முன்கூட்டியே கணித்து அதைப்பற்றிய விவரத்தை சரியான நேரத்தில், சரியான நபர்களிடத்தே கொண்டு சேர்த்து விட்டால் ஏகப்பட்ட உயிர்களை காப்பற்றிவிடலாம். மேலும் இலங்கை, இந்திய மீனவர்களிடம் இதை சேர்த்துவிட்டால் அவர்கள் தங்களுடைய மீன்பிடி படகுகளை இயக்கி ஆழிப்பேரலை வருவதற்க்குமுன் கடலுக்குள் சென்றுவிடலாம்.கடலில் அவர்கள் 2கி.மீ தூரம் தாண்டிவிட்டால் பயமில்லை.இதனால் பெருமளவில் உயிர் மற்றும் பொருள் சேதத்தினை தவிர்த்திடலாம். இந்த விஷயம் நிறைய பேர்களுக்கு தெரியாது. காரணம் இந்தேனேஷியாவில் பாரிய பூகம்பம் ஏற்ப்பட்டு ஏறத்தாழ 2 மணி நேரம் கழித்தே ஆழிப்பேரலை இலங்கை மற்றும் இந்திய கடற்கரைகளை தாக்கியது. சரியான நேரத்தில் தகவல்கள் பகிரப்பட்டு இருந்தால் சேத அளவு கணிசமாக குறைந்து இருக்கும். இனிவரும் காலங்களில் இதை நாமனைவரும் செயல் படுத்துவோம்.


இதற்காகதான் நாங்கள் "ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" யை இது வரை நடத்தி வருகின்றோம். இதில் கொடுமை என்னவென்றால் சுனாமி பற்றி 26 December 2004 -க்கு முன் இங்கு உள்ள நிறைய பேருக்கு தெரியாது. ஆதலால் யாரையும் எச்சரிக்கை செய்தி அனுப்பி உயிர், உடமைகளை காக்க முடியாமல் போனது.போதுமான கால அவகாசம் இருந்தும் இதை செய்ய இயலாமல் போனது. இதில் எங்களுக்கு அதிக குற்ற உணர்ச்சி உண்டு. இப்ப நிலைமை அப்படியில்லை. செல்லிட பேசி (Cell Phone) வழியாக குறுந்தகவல் (SMS) அனுப்பி நமது இந்திய மற்றும் உலகின் கடற்கரை அருகே வசிக்கும் மக்களை காக்க நாங்கள் இந்த ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை - Integrated Tsunami Watcher Service யை இந்த சுனாமி தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து இலவசமாக நடத்திக் கொண்டு வருகின்றோம். உண்மையில் உயிர் என்பதுதான் விலை மதிக்க முடியாத ஒன்று. மற்றவைகளுக்கு விலை உண்டு. அதன் இணைய முகவரி http://www.ina.in/itws/


குறிப்பு : இந்த பதிவில் http://gnuismail.blogspot.com/2008/10/blog-post.html இலங்கையை சேர்ந்தவர்களிடம் உதவி கேட்டிருந்தேன். இதுவரை கிட்டவில்லை. மேலும் இலங்கையை சுனாமி இன்னொரு முறை தாக்கினால் அங்கு வாழும் தமிழர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். காரணம் இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வசிப்பிடம் கடலை ஒட்டியே இருக்கின்றது. என்னிடம் இலங்கையை சார்ந்த செல்லிட பேசி எண்கள் தற்போது வெறும் 10 (பத்து) தான் உள்ளது. உங்களால் முடிந்தால் அவர்களின் செல்லிட பேசி (Cell Phone) எண்களை சேகரித்து எனக்கு gnuismail at gmail dot com என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தால் அதை list - ல் சேர்த்து விடுவேன். மிக்க நன்றி.


with care and love,

Muhammad Ismail .H, PHD,

தமிழ் மதுரம் said...

நினைவின் பதிவுகள்.. யதார்த்தம்...உறுதி கலந்த சிந்தனை வடிவம் .... தொடருங்கள்

geevanathy said...

////சொல்ல முடியாத, வெளியே தெரியாத பல கதைகள் இன்னமும் இருக்கிறது அதன் வடுக்களின் சுவடாக...///

வலிநிறைந்த வாழ்க்கை அனுபவங்கள் அவை...

பல ஞாபகங்களை கிளறி விட்டிருக்கிறது உங்கள் பதிவு..
தொடர்ந்தெழுதுங்கள்...

Anonymous said...

//அகநாழிகை சொன்னது…
புது வருடம் மன அமைதியும், சந்தோசத்தையும் வழங்க என்னோட நல் வாழ்த்துக்கள்.//

என்னேடை வாழ்த்துகளும்