Friday, April 17, 2009

தலைப்புகளற்ற குறிப்புகள் - 17-04-2009

\\
படபடப்பாய் இருக்கிறது நாட்கள் இதுக்கு என்ன தீர்வென்று அய்யனாரைத்தான் கேட்கவேண்டும்.அவரே சந்தோஷின் குறுந்தகவலைப்பற்றி இனிமேல்தான் யோசிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் ஆனால் எனக்கென்னமோ அய்யனார் எழுதுவது மயக்கம் தருவதாய்தான் இருக்கிறது. அய்னாரோடு சேர்ந்து தண்ணி அடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது சந்தர்ப்பம் கிடைகுமென்று நினைக்கிறேன்(கிடைக்குமா?) அந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமான மொட்டை மாடி அமைவதுதான் நிச்சயமில்லாத விசயம். தல நாவல் எழுத ஆரம்பிச்சிட்டதா சொல்லியிருக்கு சீக்கிரமே பதிவுலகை புரட்டிப்போடப்போகிற நான் திரும்பத்திரும்ப வாசிக்கப்போகிற நாவலை எதிர்பார்க்கலாம். சீக்கிரம் எழுதுங்க அய்யனார். தாமதமான பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துக்களையும் இங்கே சொல்லிக்கொள்வது மகிழ்சிக்குரிய விசயம்.

\\
பதிவுலகம் பேசப்போகிற இன்னுமொரு நாவலும் விரைவில் வரும் போலத்தெரிகிறது அது கவித்துவ மொழிதலுக்கு சொந்தக்காரியான தோழி தமிழ்நதியிடமிருந்து.உணர்வுகளை அதிக பட்சம் கடத்துகிற மொழியும், மொழி வசப்படுகிற எழுதுதலும் இருக்கிற ஒரு கவிஞரிடமிருந்து வருகிற தன்னைத்தான் எழுதிச்செல்கிற நாவல் மாதிரியான ஒன்று சுவாரஸ்யங்கள் நிரம்பியதாய் இருக்கும் என்பதில் ஐயப்பாடுகள் இருக்க வாய்புக்ககளே இல்லை.

இரண்டு நாவல்களுக்குமான முன்கூட்டிய வாழ்த்துக்களை இப்பொழுதே பகிர்ந்து கொண்டு நாவலை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை மிக அழுத்தமாக பதிவு செய்கிறேன்.


\\
கடந்த பதிவில் எழுதியவரிகளை நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டீர்களோ எனக்கு தெரியவில்லை. என்னைப்பொறுத்த வரையில் அவை பெரியதொரு புலம்பலில் சிதறிக்கிடந்த சில சொற்கள் தான் இந்தப் புலம்பலை அல்லது சொற்களை கட்டுக்குள் கொண்டு வருவது கொஞ்சம் சிரமமானதாய்தான் இருக்கிறது. புலம்புதலை நிறுத்தினால் சிதறிவிடக்கூடும் கபாலம்.வாழ்வதற்ககு இன்னும் நிறைய இருக்கிறது அதனால் சொற்களை எழுதுதல் என்கிற புலம்பல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இது அடுத்த பதிவுக்கான பின்குறிப்பாகவும் இருக்கலாம்.


\\

கையில கிடைச்சது செல்போன்தான்... :)


*
காணும்,
காணும்... வைக்கிறேன்
எனக்கிற சிணுங்கல்களுடன்
என்னுடைய சம்மதங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிற
மௌனங்களின் பொழுதுகளில் கேட்கிற
மூச்சுவிடும் ஓசைககளில் இருக்கிற
கனம் நிரம்பிய காதலை
சுமக்க முடியாமல் தவிக்கிறதென் தொலைபேசி

*
உரையாடல்கள் நின்றுபோன
உறவொன்றின் அழைப்புக்காய்
ஏங்கிக் கொண்டிருக்கிறதென்
தொலைபேசியும்
மாலைப்பொழுதுகளும்.


*
எழுத்துகள் அழிந்து போன
விசைப்பலகையோடு இருக்கிற
தொலைபேசி திணறிக்கொண்டிருக்கிறது
நிரம்பிப்போயிருக்கிற பிரியங்களோடு வழிகிற
உன் குறுந்தகவல் விசாரிப்புகளில்...

*
அழைப்புகள் தீர்ந்து போன பிறகும்
அழிக்கப்படாமலிருக்கிற
உன் இலக்கமும் குறுந்தகவல்களும்
தனித்திருக்கிற இரவுகளின்
சில கவிதைகளுக்கு வழி செய்கிறது அல்லது
தனிமைக்கு துணையிருக்கிருக்கிறது

*
நாள் முழுவதும் தொடர்கிற
குறுந்தகவல் பரிமாற்றங்களில்
சேர்ந்திருந்த பொழுதுகளை
ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது
பிரிவுக்கு பின்னரும் அழிக்கப்டாமலிருக்கிற உன்
பிரியம் நிறைந்த சொற்கள்..

*
உயிர் நிரப்புகிற உரையாடல்களை
என்னோடு சுமந்தலைகிற
என் தொலைபேசிக்கு தெரியாது
அவள் பிரிவறித்த செய்தி
கடிதமொன்றில் வந்திருக்கிறதென.

*கிட்டத்தட்ட இரண்டரை வருடமாய் என்னோடிருக்கிற செல்போனுக்கு சமர்ப்பணம் இவ்வரிகள்.



\\
அரபு நாடுகளின் வெள்ளிக்கிழமை என்பது அனுபவிக்க விரும்புகிற வியாழக்கிழமை இரவுகளுக்கடுத்த தூக்கம் நிரம்பிய பகல்களாகத்தான் அனேகம் பேருக்கு இருக்கும் எனக்கு அவை தூக்கமற்ற வியாழக் கிழமைகளுக்கு பின்பான பணி நேரப் பகல் பொழுதுகளை தந்துகொண்டிருக்கிறது ஏதாவது எழுதலாம் என்கிற நினைப்பில்லதான் பணிக்கே வருவேன் எதை எழுதுவது முட்டி மோதுகிற சொற்களை எப்படி கோர்வையாக்குவது என்பது தெரியாமல் வாசிக்க கிடைக்கிற பதிவுகளுடன் முடிந்து போய்விடுகின்றன் அவை.

2 comments:

யாத்ரா said...

செல்போன் கவிதைகள் மிகவும் பிடித்திருக்கிறது.

Ajanth said...

கவிதைகள் மிகவும் பிடித்திருக்கிறது.