Friday, April 10, 2009

குந்தியிருக்கிற சனமும் சில குறிப்புகளும்...

குந்தியிருக்கிற இரவுகள்...

பனை மரங்கள் சரசரக்கிற காற்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது
நினைவிழந்த தெருக்களுக்கான ஊரடங்கு சட்டம்,
முலை தவறிய குழந்தைகள் அழுகிற குரல்களில் கிளிகிறது
விழித்திருக்கிற இரவின் திணிக்கப்பட்ட நிசப்தம்,
தூரத்து நாய்களின் குரைத்தல்களில் கலக்கிறது
அத்து மீறுகிற சப்பாத்துகளின் காலடிச்சத்தங்கள்,
திட்டமிடப்பட்ட தேடுதல்களின் பின்னர்
கலைந்து போயிருந்தது இரவு,
குரைத்து களைத்த நாய்கள் அடங்கிப்போக
துயரத்தின் நிறங்களில் பரவுகிறது விடியலின் வெளிச்சம்,
அடைக்கப்பட குரல் வளைகளில் இருந்து வெளியேறுகிறது
காணாமல் போனவர்கள் பற்றிய கதறல்கள்,

பனங்கூடல் பிரிகிற பறவைகள் காவிச்செல்கின்றன
ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்து அடிமைகள் பற்றிய செய்திகளை
ஆளில்லாத வெளிகளில் பகிர்வதற்கு,

இப்பொழுது...

இரவுகளில் குந்திக்கொண்டிருக்கிறது மீதமிருக்கிற இனம்,
உரிமைகள் மறுக்கப்பட்ட சனங்களை பதிவு செய்திருந்தன
உண்மைகள் மறைக்கப்பட்ட அரசாங்கத்து கோப்புகள்!

_________________________________________________________________________

இந்த வரிகளை எழுதிவிட்டு சில குறிப்புகள் எழுதலாம் என்றிருந்தேன் எந்த குறிப்பையும் என்னால் நிறைவு செய்ய முடியாமல் இருந்தது விடைதெரியாத கேள்விகளை குறிப்புகளாக்குதல் என்பது சிரம்தான் அவற்றை கேள்விகளாவே விட்டுவிடலாம்போல. ஏறக்குறைய என் வயதுடைய ஈழம் என்கிற ஆயுதப்போராட்டம் என்பது எங்கே நிற்கிறது என் சனத்தின் வாழ்க்கை எந்தப்புள்ளியில் தேங்கியிருக்கிறது.

என்ன நடந்துகொண்டிருக்கிறது, இது எப்படி முடியப்போகிறது, எதை இழந்திருக்கிறோம், எதை அடைந்திருக்கிறோம்? இழந்துபோனவைகளின் மீள்நிரப்புகைகள் என்ன, அவை எப்படி சமன்செய்யும்? எவ்வளவு வாழ்ந்திருக்கிறோம்? இந்த குழந்தைகள் என்ன செய்யும், இந்த குமர் என்ன செய்வாள்,இந்த காதல் மனைவி தன் நினைவுகளை எங்கே புதைப்பாள், இந்த தாய் என்ன செய்வாள், இந்த கிழவர் என்ன செய்வார், பதினொரு பேர் கொண்ட குடும்பத்தில் மீதமிருக்கிற இருவர் என்ன செய்வர், இனியொரு வாழ்க்கை அவர்களுக்கு எங்கே இருக்கும், இந்தக் குழந்தைகள் இனி என்ன செய்யும், எதனை தம் வரலாற்றில் எழுதுவார்கள், எங்கிருந்து அவர்கள் வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள்.

என் தேசம் பற்றிய கேள்விகள் தீராததாய் இருக்கிறது.


அந்த குறிப்புகளை எழுதி முடிக்கையில் பதிந்துவிடுகிறேன் சில வேளை அது பதியப்படாமலே போகலாம், இந்த சில வரிகள் மீதமிருக்கிற சனத்தின் கேள்விக்குறிகளை ஆகக்குறைந்தளவாவது உங்களுக்கு சொல்லக்கூடும். யுத்தம் திணிக்கப்பட்ட ஒன்று, இலங்கையின் சனங்கள் சபிக்கப்பட்டவர்கள் ஏனெனில் அவர்களிடம்தான் புரிதல்கள் என்பதே கிடையாதே.

சமபந்தமேயில்லாத சுயநலவாதிகள் விதைத்துப்போன தப்பான புரிதல்கள் இன்னமும் சம்பந்தப்பட்ட சுயநலங்களுக்காவே முன்னெடுக்கப்படுகிறது.அதனை புரிந்தகொள்ளவும், தடுத்து நிறுத்தவும் என் நாட்டு மக்களுக்கும் இலங்கைக்கென்று பெயர் இருப்பதாக கூறிக்கொள்ளும் இளைய தலைமுறைக்கும் (இவர்கள் படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள்)முடியவே இல்லை.நாம் எதை கற்றுக்கொண்டோம்,எது எம்முடைய நாகரிகம்.

அடிப்படை உங்களுடைய புரிதல்களில் இருக்கிறதென்று தோன்றும் சில நேரங்களில் பல நேரங்களில் அதுதான் உண்மையும் என்ன செய்து கொண்டிருக்கிறோம். தவிர்க்கப்பட வேண்டிய வரலாற்றைப் பேசிப்பேசியே இரண்டு தலைமுறைகளின் வரலாற்றை இல்லாமல் செய்துவிட்டார்கள் இனி மீதமிருக்கிற காலம் எப்படி இருக்கும்.

யுத்தம் தின்றுகொண்டிருக்கிற மனிதர்களை உங்களால் எப்படி எண்ணிக்கொண்டிருக்க முடிகிறது. நாடும், பொருளாதாரமும், சட்ட ஒழுங்கும் மிகக்கேவலமான நிலமைக்கு மாறிக்கொண்டிருப்பதை சகித்துக்கொண்டு எப்படி பல்கலைக்கழகங்களில் படிக்கிறீர்கள்,படித்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்.

வலியோடு இருக்கிற மற்றுமொருவன் புறப்படும்வரை சுயநலங்கள் ஆடிக்கொண்டேதான் இருக்கும் தவிர்த்துக்கொள்ளலாம், உங்களுக்கு சுயமான சிந்தனை வளர்ச்சியும் புரிதல்களும் இருக்கிறவர்கள் எனில். அவசியமேயில்லாத யுத்தம் ஒன்று எப்படி நீண்டு கொண்டிருக்கிறது இதற்கேன் உங்களால் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள், என்ன இழவை படிக்கிறீர்கள் உங்களுக்கென்று என்ன பெருமை இருக்கிறது?

ஒன்று மட்டும் சொல்கிறேன் தயவு செய்து மாறிவிடுங்கள்! இனியெப்போதும் நீங்கள் முன்றேப்போவதில்லை என்று முடிவுகட்டியிருக்கிற உலகம் சிந்தனை வளர்ச்சியும் புரிதல்களும் இல்லாத சமூகம் ஒன்றின் தோல்வியென உங்கள் வரலாற்றை எழுதிவிடக்கூடாது.

இதை நான் உலக நாடுகளிடம் கேட்கவில்லை இலங்கையில் இருக்கிற மக்களிடம் கேட்டிருக்கிறேன் முக்கியமாய் பள்ளிக்கூட, பல்கலைக்கழக மாணவர்களிடம்.

4 comments:

தமிழ் மதுரம் said...

என் தேசம் பற்றிய கேள்விகள் தீராததாய் இருக்கிறது//


உங்களின் உள்ளத்தை உறைக்கின்ற கேள்விகளும் உணர்வில் தெறித்து விழுந்துள்ள கவிதையும் மனதைச் சுடுகிறது. என செய்வோம்?? இனி யாரிடம் சொல்லி அழுவோம்??

ஹேமா said...

தமிழன்,உங்களின் ஆதங்கமே அத்தனை ஈழத்தமிழனின் நெஞ்சிலும்.பதில் கிடைக்காத கேள்விகள்.இழப்புக்களுக்கு ஈடே இல்லை.இந்த நிமிடங்களில்கூட எம் இழப்பு எங்கோ ஒரு மூலையில், பனங்கூடலுக்கு அடியில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

யாழினி said...

//இரவுகளில் குந்திக்கொண்டிருக்கிறது மீதமிருக்கிற இனம்,
உரிமைகள் மறுக்கப்பட்ட சனங்களை பதிவு செய்திருந்தன
உண்மைகள் மறைக்கப்பட்ட அரசாங்கத்து கோப்புகள்//

அற்புதமான வரிகள். உண்மை...உண்மை...உண்மை...

Tech Shankar said...

எப்படிங்க இப்படி. நிறைய எழுதுறீங்க. நிறைய படிப்பீங்களோ.

நல்லதுங்க