Monday, October 29, 2007

பனைமரமும் தமிழரும்…

கடந்த வியாழக்கிழமை (25-10-07) கலைஞர் தொலைக்காட்சியின் காலை நிகழச்சியில் ஒன்றே சொல் நன்றே சொல் பகுதியில் அந்த முனைவர்(அவருடைய பெயர் ஞாபகம் வரவில்லை பிறகு எழுதுகிறேன்) சொன்ன நல்ல விசயம் பனைமரம் பற்றியது. அவர் கூறிய கருத்துக்களில் பனைமரத்தின் எல்லாப்பகுதிபளுமே மக்களுக்கு பயன்படுபவை என்கிற அடிப்படை கருத்திலிருந்து பனை மரங்கள் தமிழரின் அடையாளங்கள் என எல்லாமே என் மனதைத்தொட்டதோடு கூடவே ஊர் ஞாபகங்களையும் சேர்த்தே கொண்டுவந்தது.

அவர் கூறுகையில் நிறைய விசயங்களை ஈழத்திலிருந்தே எடுத்துக் காட்டினார் அதிலும் தமிழ் தமிழ் மணம் மாறாமல் பேசப்படுவது அங்கேதானென்பதையும் யாழ்ப்பாணத்தின் அடிப்படையே பனை மரங்களென்பதையும் அது தமிழர் வாழ்வில் எவ்வாறு பின்னிப்பிணைந்திருக்கிறது என்பதையும் கூறுகையில்
அதனால்தான் ஈழத்துக்கவிஞர் காசிஆனந்தன் ஊர் நினைவுகளைப்பற்றி எழுதுகையில-

‘அழகான அந்த பனை மரம்
அடிக்கடி என் நினைவில் வரும்’

என்று எழுதுகிறார் என அந்த அழகான பாடல் வரிகளை எடுத்துக்காட்டியதோடு அதனை கேட்கும்பொழுதில் ஈழத்து தமிழர்களின் உணர்வுகளை உணர முடிவதாகவும் அதிலிருந்தே பனை மரங்கள் தமிழர் வாழ்வில் எவ்வளவு தூரம் இணைந்தருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும் என்றார் இப்படி அவர் சொன்ன பல விடயங்கள் யாழ்ப்பாணம் சார்ந்தே இருந்தது. அது உண்மைதான் பனைமரங்கள் பற்றி எழுத நினைத்தால் எம் வாழ்க்கையின் அனேக இடங்களில் அது சம்பத்தப்பட்டிருக்கிறது (இந்த இடத்தில் பனங்காய் பணியாரம் நினைவுக்கு வந்து ஊருக்கும் எனக்குமான தூரத்தை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்தியிருக்கிறது முன்பெல்லாம் ஊரில் இருக்கையில் ஒவ்வொரு பனங்காய் காலத்திலும் வீட்டுக்காரரை கரைச்சல் படுத்தி தேவையான அளவுக்கு சுட்டு சாப்பிட்டு விடுவேன் அதிலும் எனக்காகவே விசேசமாக ஆக்கி கூப்பிட்டனுப்பி சாப்பிடக்கொடுக்கும் அந்த உறவின் நெருக்கமான தருணங்களும் அந்தக்கைகளின் சுவையும் அந்த அழகான நினைவுகளும் ம்ம்ம்ம்… இப்பொழுதும் நெஞ்சை நனைப்பது உண்மைதான். பிறகு வேலை நிமித்தம் வெளி மாவட்டங்களுக்கு வந்த பிறகும் அதற்காகவே விடுமுறையெடுத்து ஊருக்கு போய் வந்ததுமுண்டு. சரி அந்த நினைவுகளையம் அதன் அழகுகளையும் எழுத ஆரம்பித்தால் இப்பொழுது முடிக்க மாட்டேன் போதும்…)

இந்தப்பாடல் வரிகள் ஈழத்து பாடல்களில் தேனிசை செல்லப்பாவின் குரலில் வெளிவந்த பாடல் என்று நினைக்கிறேன் ஆகவே ஈழத்துப்பாடல்கள் தமிழ் நாட்டில் கேட்கப்படுகிறது அது பற்றி கருத்துக்களும் கூறப்படுகிறது அது இந்தியத்தமிழர்களிடமும் போய்ச்சேர்கிறது என்பது நம்பிக்கைக்குரிய நல்ல விடயம்தானே?

பனைமரங்கள் பற்றிய வேறொரு பதிவில் அந்த நினைவுகளை பகிர்ந்துகொள்கிறேன்… ;.

4 comments:

காரூரன் said...

பனை மரம் யாழ்ப்பாணத்தாருக்கு ஒரு கற்பக தரு. பனையை பற்றி எழுதிய படியால் ஒரு தொடர் மாதிரி ஏன் நீங்கள் எழுதக் கூடாது?
உதாரணமாக ‍_ பனை ஓலை ‍
வேலி, கூரை, பெட்டகம், சாப்பிட தட்டு, மாட்டிற்கு தீனி, மட்டை, நார். ஆபத்துக்கு கருக்கல்லுடன் கூடிய ஆயுதம். கிரிக்கட் விளையாட மட்டை, கைவினை பொருட்கள், விசிறி என்று அடிக்கிக் கொண்டு போகலாம்.

இப்படி எழுத முனைகின்ற போது உங்களை அறியாமல் பல விடயங்களை உங்களால் வெளிக்கொண்டு வரலாம். நகைச்சுவையான படங்களை இதனுடன் சேர்க்கும் போது சற்று சுவாரசியம் அதிகரிக்கும்.

எனக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் சொன்னேன். உங்களை ஊக்குவிற்பதற்காகத் தான் இதை எழுதினேன். தவறாக எண்ணி விட வேண்டாம்.

இவ்வலையில் எல்லோரும் கருத்து தருவார்கள் என்று எண்ணமுடியாது. அவர்களுக்கு என்று ஒரு சிறிய வட்டம் வைத்திருப்பார்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

தமிழன்-கறுப்பி... said...

நன்றி அண்ணன்,பதிவதற்கு முயற்சிசெய்கிறேன்…

Anonymous said...

நல்ல பதிவு..
எங்கள் பெயர் சொல்வதில் பனைமரத்திற்கு பெரிய பங்கு உண்டல்லவா..
எனது தந்தையார் அடிக்கடி இந்த பாடலை பாடுவார்...

"அழகான அந்த பனை மரம், அடிக்கடி நினைவில் வரும்"

வந்தியத்தேவன் said...

அந்த நிகழ்ச்சியை நடத்துபவர் தமிழீழ ஆதரவாளர் சுப வீரபாண்டியன் அவர்கள்.