Saturday, January 15, 2011

எழுதப்படாத நாட்குறிப்புகளின் தவிர்க்க முடியாத குறிப்பு...

15.01. 2011.

எவ்வளவு முயன்றும் என்னனால் முடியவில்லை என்பதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டியிருக்கிறது. என் தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன்.

கடந்த மூன்று வருடங்களில் பேசுவதுதான் இல்லையென்றாலும் ஒரு குறுந்தகவலை அனுப்புகிற அளவுக்கான மனோநிலை இருந்தது என்னிடம்.அது உன்னிடமும். எந்த தயக்கங்களும் இல்லாமல் உனக்கான வாழ்த்தை சில வார்த்தைகளில்தானும் உன்னிடம் சேர்ப்பிக்கிற மனோநிலை இருந்திருக்கிறது.இந்த முறை புதிய தயக்கத்தை நீ எனக்கு கொடுத்திருக்கிறாய். எவ்வளவோ காதல் கதைகளை கண்ட கோயில் குருமணல் வீதியல் நிகழ்ந்த அந்தப்பொழுதுகள் நடந்திருக்க வேண்டாமோ என்றிருக்கிறது எனக்கு.

எவ்வளவு தயக்கம் இருந்தும் என்ன கடைசி நிமிடங்களில் அதனை செய்ய வைத்திருக்கிறது இன்னமும் மீதமிருக்கிற உன் பிரியங்களின் வாசனை. இப்பொழுது உன்னிடம் இருக்கிறது உனக்காக நான் அனுப்பிய ஆகக்குறைந்த சொற்களிலான குறுந்தகவலொன்று.

இதோ இப்பொழுதும் நாள் முடியப்போகிற இந்த கடைசி நிமிடங்களில் எழுத முடியாத சொள்களை ஒரு மாதிரியாக தவிக்க வைக்கிற அமுக்கத்தை இங்கே எழுத முயன்று கொண்டிருப்பதும் நீ கொடுத்தவைதான். உன்னோடிருந்த நாட்களின் உயிர்திருத்தலின் மீதம்தான். அதன் சாயல்களில் இனி ஒரு பொழுதும் நான் இல்லாமல் போகலாம். இனி உன்னை சந்திக்காமலிருப்பதற்கம் அதுவே காரணமாயிருக்கலாம்.இதை இரண்டு வரிகளில் சொல்கிற கொடுமையை என்னாலேயெ பொறுக்க முடியவில்லை.எத்தனை அற்புதமான பொழுதுகள் அவை அதி உச்ச நெகிழ்தலும் பரவசமும் எந்த உணர்வாயிருந்தாலும் அதன் உச்ச விளைதலை கொண்டிருந்த அந்த நாட்களை இரண்டு வரிகளில் எழுதவைக்கிற இந்த நாட்கள் எவ்வளவு சோபையானவையாக இருக்க்கூடும். போஓஓஓஓஓ... என் நினைவுகளிலிருந்தும் போய்விடு.

எப்பொழுதும் இந்த SMS களிலும் மின்னஞ்சல்களிலும் அனுப்புகிற துண்டுச்சொற்களில் விருப்பமில்லாதவன் நான். நேரே பேசுவதைப்போல ஒரு நாளும் இருப்பதில்லை. இந்த வெட்டி ஒட்டுகிறது போலான குறுந்தகவல்கள் என்பது என் எண்ணமாயிருந்திருக்கிறது. அது உனக்கும் தெரிந்திருக்கலாம். அதனாலேயே இந்த கடல்கடந்த நாட்களில் ஒரு நாளைக்கு இருபதிலும் குறையாத சின்னச்சின்ன கடிதங்கள் போல எழுதி அனுப்பிய குறுந்தகவல்கள் எம்மிடமிருந்தன. மணிக்கணக்கில் தொலைபேசிய நாட்கள் இருந்தன. ஏழு பக்கங்களுக்கு குறையாத கடிதங்கள் நம்மிடமிருந்தன.எல்லாமிருந்தும் என்ன இன்று எழுத முடிந்தது வெறும் நாலே சொற்கள்தானே.

Happy Birthday Thamil.

ஒப்புக்கொள்கிறேன் உன்னிடம் நான் தோற்றுப்போயிருக்கிறேன் மற்றொரு முறையாகவும். எப்பொழுதும் போல இந்த முறையும் அது எனக்கு பிடித்தமானதாகவே இருக்கிறது. உன்னிடம் தோற்பதில் ஒரேயொரு சிக்கல் இருக்கிறது அதை நிரப்புவதற்கு அடுத்த முறை உன்னிடம் தோற்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. இப்பொழுதெல்லாம் அது நீளமான இடைவெளிகளை கொண்டிருக்கிறது.


யாரையும் நம்புவதில்லை
எதற்கும் அழுவதில்லை
குற்றவுணர்வுகளை போதை சமநிலையில் வைக்கிறது
துணைக்கு புத்தகங்களும்
விதிகளை மீறுவதற்கு நவினமனங்களும் சாதகமாயிருக்கிறது
இருந்தும் எவ்வளவு செய்தும்
நினைவுகள் என்றொன்று இன்னமும் இருக்கிறது அது
உன்னை எப்பொழுதும் அழைத்து வருகிறது
எப்போதும் இருக்கிற இந்த வெயிலைப்போல
எப்பொழுதாவது வருகிற இந்த மழையும் கூட...

தவிர்க்க முடியாத உன்னை ஒப்புக்கொள்ளாத மனம்
இருக்கட்டுமென சொல்லிக்கொண்டிருக்கிறது
இன்னும் வாழ்வதற்கு நாட்களிருக்கிறது,உன் நினைவுகளும்!

_______________________________________________________________________

நிறைய பின் குறிப்புகளும் இன்னும் நீளமான வசனங்களும் இருக்கிற இந்த புனைவின் மிகுதியை எழுதவிடாத இந்த பொழுதுகளுக்கு நன்றி. இதை வாசிக்கிற நேரம் மனதார ஒரு தேவதையை வாழ்த்தும்படி நீங்கள் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள்.

எங்க சொல்லுங்கோ பாப்பம்.

Happy Birthday To You..
Happy Birthday To You....
Happy Birthday Dear Karuppy...!

3 comments:

ஆயில்யன் said...

//எங்க சொல்லுங்கோ பாப்பம்.
//

ஹாப்பி பர்த்டே 2 யூ
ஹாப்பி பர்த்டே 2 யூ
ஹாப்பி பர்த்டே கறுப்பி!

அண்ணே சாக்குலேட்டு!!!!!!!!!

எவனோ ஒருவன் said...

தங்கள் பதிவுகளைப் படிக்கும் போதெல்லாம் என் மனதிலும் இருக்கும் வலியைத் தாங்கள் வார்த்தைகளாக செதுக்கி இருப்பதாகவே உணர்கிறேன்.

தங்கள் தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

vizhii said...

மிகவும் அருமையான இனங்கள் தங்களுக்கு ... உங்களின் எழுத்து பாவனைகள் அற்புதம் .. மனம் ஓவரு வரிகளிலும் ஒன்றுகிறது ....