Monday, January 3, 2011

பழைய நாட்களை அசை போடுதல்

பழைய நாட்களை அசை போடுதல் - ஒரு தாமதமான குறிப்பு.

வருடக்கடைசி என்பது வருடத்தொடக்கங்களை விட கொஞ்சம் சிக்கலானதாக இருக்கலாம். எனக்கென்னவோ இந்த வருடம் அப்படித்தான் இருக்கிறதாக உணர்கிறேன். கடக்க முடியாத பல விசயங்கள் இருக்கிறது அவை வரப்போகிற புதிய நாட்களையும் தொடர்ந்து பீடிக்காதிருக்கும்படியாக இதை வாசிக்கிற இந்த நேரத்தில் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.(வருடக்கடைசிகள் சிக்கலானவையாக இருப்பதற்கு மீதமிருக்கிற இந்த பிரச்சனைகள் குறித்த மனோநிலை காரணமாக இருக்கலாம்.) உங்களுக்கும் அப்படியே ஆகட்டும்.


இந்த வருடத்தில் எனக்கு கிடைத்த பெரும்பொழுதுகள் ஊரிலிருந்த அந்த விடுமுறை நாட்கள்தான். எவ்வளவு விசயங்களை இந்த நாலு வருடங்கள் கடந்து போயிருக்கிறது ஹீஹ்... காலம் யாருக்காகவும் காத்திருக்காமல் போய்க்கொண்டே இருப்பது இயற்கையின் குரூரமானதும் வாழ்வின் பெரும் கொடையானதுமான உண்மையாக இருக்கலாம். காலம் காவுகிற நதி நம் வாழ்வு.அது நிக்காமல் இருத்தல் அதன் இயல்பாயிருக்கிறது. ஆழம் அறிதலும் தெளிதலும் நாம் அன்றாடமறியாத, அறிய விரும்பாதவைகளாக இருக்கலாம். மேலோட்டமான சலசலப்புகளையும் வளைவுகளையும் கண்டிருப்பதே பெரும்பாடென மாய்ந்து போவது நமக்கு போதுமென்றிருக்கிறது. வாழ்வின் சுகம், அதன் தேடல் அடியில் இருக்கிறதென்பதை கவனிக்காமலே கழிந்து விடுகிறது நம் காலம்.
குறிப்பிடத்தக்கதொரு நீண்ட பிரிவுக்கு பிறகு பிறந்து, வளர்ந்து, கெட்டு, அழிந்து, காதலித்து, கரையேறி, கைவிடப்பட்ட ஊரைப் பார்க்கப்போயிருந்த அந்த நாட்கள் தந்த அனுபவம் சுவாரஸ்யம். இந்த இடைவெளியில் என்னிடம் ஏற்பட்டிருந்த மாற்றங்கனோடு ஊரைப்பார்க்கையில் எனக்கு பெரிதாகத் தோன்றாவிட்டாலும் பெரும்பாலான விசயங்களில் நான் தள்ளி நின்று பார்க்கவே சாத்தியமாய் இருந்தது. அதையே நானும் விரும்பினேன்.

இந்த நேரத்தில் இங்கே சொல்ல வேண்டிய இன்னுமொன்று. முகம் அறிந்திராத ஒரு நண்பருக்கு அவருக்கு தெரிந்த ஒருவருக்கான உதவி ஒன்று செய்யலாம் என்று சொல்லியிருந்தேன் ஆனால் அதை செய்யத்தகுந்த நிலமை என்னிடம் இருக்கவில்லை என்பதுதான் உண்மை அதை அவரிடம் சொல்லாமல் இருந்ததும் அவரை சந்திக்காமல் விட்டதும் உறுத்தலாகவே இருக்கிறது.

சொந்த ஊரில நடப்பதாய் இருந்தாலும் பிறந்து வளர்ந்த ஊரில் படலை திறப்பதாய் இருந்தாலும் எப்பொழுதும் போல என்னோடு கூட இருக்காத பணம் கட்டாயமான விசயம். பணம் என்கிற ஒரே விசயத்தில் அனேகம் உண்மையானவர்களாய் இருக்கிறார்கள்.வாழ்வு பணத்தை துரத்துவதிலிருந்து பணம் வாழ்வைத்துரத்துவதாய் இருக்கிறது ஊர். நேரம் யாருக்கும் கிடைப்பதில்லை, தனியே நடக்கிற மனிதனை ஊருக்குப்பிடிப்பதில்லை.அன்றாட வாழ்வின் யதார்த்தம் கண்ணுக்குத்தெரிந்தும் வடக்கின் அல்லது யாழ்ப்பாணத்தின் ஆதிமனோபாவம் இருக்கவே செய்கிறது.


கறுப்பியின் சாயல்களில் ஒரு தேவதையை கண்டு கொண்டது இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து எதிர்பார்த்திருந்த விசயம். அளவிட முடியாத அழகும் எழுதிவிட முடியாத இயல்புகளும் அவளிடம் இருந்தன எல்லையற்ற அன்பும் பெருங்கருணையும் மேலதிகமாய் பேசத்தெரிந்த அழகிய கண்களும் இருந்தன. மிகச்சொற்பமான நாட்கள்தான் என்றாலும் அவளது நெருக்கம் இனியெப்பொழுதும் அறிய முடியாத என் உயிர்திருப்பாய் இருக்கலாம். கருணையும் எழுதி வைத்த விதிகளும் தேவதைகளின் சாபம்தானோ? அவளது கருணையின் முழு வடிவத்தையும் யாராலும் உணர்ந்துவிட முடியாத படிக்கே இந்த உலகம் அவளை விதித்திருக்கிறது. உன்னை இனி ஒரு போதும் சந்திக்காமல் இருக்க நான் விரும்பாவிட்டாலும் சந்திக்காமலே இருப்போமாக.


இயைணயமும் கைக்கு கிடைத்த புத்தகங்களும் என இந்த வருடம் வாசிப்பின் தேவை கூடியிருந்தது.கை நிறையப்புத்தகங்களையும் மனம் நிறைய அன்பையும் தருகிற புதிய உறவொன்று கிடைத்தது. ஒரு பயணப்பை முழுவதும் கொள்ளுகிற அளவுக்கு புத்தகங்களை தந்தனுப்பிய அன்புக்கு நான் எதையுமே தரவில்லை.போதாததற்கு குறைவேறு சொல்லியிருந்தேன்.பயணத்தின் கடைசி நேரம் வரைக்கும் கூட இருந்த அந்த கருணைக்கும் புத்தகங்களுக்கும் தேய்ந்து போன இந்த நன்றியை நான் எத்தனை முறை எழுதுவேன். சட்டென நெருக்கமான இந்த உறவோடு பகிர்ந்த பொழுதுகள் இரண்டாயிரத்துப்பத்தின் ரசனைக்குரிய குறிப்புகளைக்கொண்ட நாட்கள். எப்பொழுதும் உற்சாகமாய் இருக்கிற இவளுக்கு சிரிக்கத்தெரிந்த கண்கள் இருக்கிறது கூடவே கன்னங்களும். இவளைக்குறித்து பின்பொரு முறை பேசலாம். (உன்னை கேட்காமல் நடக்காது)

மனதுக்கு நெருக்கமான ஒரு பயணி அகிலன் கனவுகளும் அதன் தொலைவும் என்கிற பெயர் எனக்கு நெருக்கமானதாய் இருந்தது அது கொண்டிருக்கிற மொழியும் அதனைக்கொண்டிருக்கிற அகிலனும். பல முறைகள் பேசியிருந்தாலும் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்றிருந்த அகிலனை சந்தித்த அந்த பகல் நேர மழைப்பொழுது மறக்க முடியாதது. வெள்ளவத்தையில் அன்றைக்கு நடந்தது போலவொரு உரையாடலை இதுவரைக்கும் அந்தக்கடை கேட்டிருக்குமோ தெரியாது. அது கலவையான சந்தர்ப்பம். தலைவா இந்தியாவுல சந்திக்கலாம்.புதிய நாட்களின் ஆரம்பத்தில் என்ன எழுதி இருந்தேன் என்று நினைவில்லை. ஆனால் அதை இவ்வளவு சீக்கிரம் பழைய நாட்களின் வரிசையில் சேர்க்கவேண்டி வரும் என்று நினைக்கவில்லை. huhh...நாட்கள் இத்தனை வேகமாகக்கடக்கிறது ஆயுள் எத்தனை விரைவாக குறைகிறது. பார்க்கப்போனால் இந்த வருடமும் எதையுமே எழுதிக் கிழிக்கவில்லை. இது ஒரு வகையில் நல்லதும் கூட. எல்லா வருடங்களையும் போலவே இந்த வருடமும் தொடர்ச்சியாய் டயரி எழுத வேண்டும் என்கிற தீர்மானம் தொடக்கத்திலேயே உடைந்து போயிற்று. இப்பொழுதும் அந்த நினைப்பு இருக்கிறது டயரி என்ன, சேமிக்க வேண்டும் என்று நினைக்கிற சில ஞாபகங்களை கூட மறந்து விடுகிறேன். ஞாபக சக்தி என்பது குறைந்து கொண்டே வருகிறது அல்லது நினைவிலிருப்பவை எல்லாம் அழிந்து கொண்டு வருவதைப்போல நம்ப ஆரம்பித்திருக்கிறேன். இது ஒரு சுகமும் பெரும் இழப்புமான ஒரு விடயமாகத்தான் இருக்கமுடியும்.

எந்த வரைமுறைகளும் இல்லாமல் எழுத நினைக்கிறதை எழுதிவிடுவது என்னுடைய ஆரோக்கியத்துக்கு மிக உதவுவதாய் இருக்கக்கூடும்(இங்கே குப்பை என்கிற சொல்லாடல் குறித்து நினைவுக்கு வருகிறது)அதற்காகவே எப்பொழுதும் டயரி எழுத வேண்டும் என்பதாய் நினைத்துக்கொள்வேன். ஆனால் அதுவும் செய்ய முடிவதில்லை. கணக்கற்ற சொற்களை எழுதக்கிடைத்தும் எழுதாமல் இருப்பதற்கு கீழ் வருவனவற்றை காரணங்களாகச் சொல்லலாம். நீங்கள் சாருவையோ ஜெயமோகனையோ இந்த நேரத்தில் நீங்கள் நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல.

1) காதலிப்பதற்கு யாருமில்லாதது.
2) சோம்பல்
3) சூழ்நிலை
4) உருவாக்கி வைத்திருக்கிற என்னைக்குறித்த பிம்பம்.
5) அது உண்மையிலேயே எனக்கு இயைபற்ற ஒரு காரியமாக இருக்கலாம்.
6) நான் எழுத நினைப்பதை எல்லாம் எழுதி விடுகிறார்கள்.
7) சரியாக வாசிக்கத்தெரியாமல் எழுதி என்ன ஆகப்போகிறது?
8) நான் எழுதாமல் இருப்பதால் நட்டம் எனக்குத்தான்.
9) இலக்கியமும் இணையமும் விசரைக்கிளப்புவதாய் இருக்கிறது.
10) கூடவே இன்னும் சில காரணங்கள் இருக்கலாம்.


இந்த அலம்பலை வாசித்து போரடிக்கத் தொடங்கியிருந்தால். the most awaited item song of the year

2010ல் முடிந்தவரை புரிதலோடு இருப்பதற்கு முயற்சித்திருக்கிறேன். எந்த சூழலுக்கும் பொருந்தவும் கோபத்தை தணிக்கவும் இது அவசியமாய் இருக்கிறது. இருந்தும் தவிர்க்க வேண்டிய சந்தர்ப்பங்களில் வந்துவிடுகிற இந்த கோபத்தையும் விட மனமில்லை. இது வரைக்கும் கொண்டாட்டத்துக்கான மனோநிலைகள் இல்லாவிட்டாலும் நிறைய குடிப்பதற்கான மனோநிலை இருக்கிறது. எல்லாம் மறந்த ஒரு இலேசான மனோநிலையோடு இந்த 2011ஐ தொடங்க முடிந்தால் அவ்வளவும் போதுமானது.காலம் வாழ்வினைக் காவிச்செல்லட்டும்.


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2011


Happy New Year - 2011.பிந்திய காரணக்குறிப்புகள்:

//
2010 இன் கடைசி இரண்டு நாட்களையும் இணையம் இல்லாமல் கடத்தி இருக்கிறேன் எவ்வளவு பெரிய செயல்! எல்லா பற்றுகளில் இருந்தும் விடுபடுதலுக்கு முதலில் இணையத்தை விட்டுவிட வேண்டும்.

//
எழுதி முடித்து சரியான நேரத்துக்கு பகிரமுடியாமல் போனாலும் இந்தக்குறிப்பை மாற்ற மனம் வரவில்லை.


//
குடிக்க தெரிந்துகொண்டதன் பிறகு போதை இல்லாமல் பிறந்த புது வருடம் இது என்பதில் எனக்கு மாற்றமோ பெருமகிழ்ச்சியோ எதுவும் தெரியவில்லை.

5 comments:

ஹேமா said...

உங்கள் கோர்வையான எழுத்து ஒரு வரம்தான்.எல்லோருக்குமே இனிதாய் தொடங்கியிருக்கிறது 2011 என்று நம்புவோம்.நல்லதையே நினைப்போம்.
முடிந்தளவு செய்வோம்.

ஜெ.ஜெ said...

உன்னை இனி ஒரு போதும் சந்திக்காமல் இருக்க நான் விரும்பாவிட்டாலும் சந்திக்காமலே இருப்போமாக.//////

வலி கொண்ட வார்த்தைகள்... :(

Philosophy Prabhakaran said...

ஓவியா படம் எதற்கு...? இன்ட்லியில் ஏன் இணைக்கவில்லை...?

தமிழன்-கறுப்பி... said...

நம்புவோம் , நன்றி ஹேமா மறக்காத வருகைக்கு..

நன்றி ஜெ.ஜெ

@ Philosophy Prabhakaran
நீங்க இப்படி கேட்கணும்கிறதுக்குத்தான் :)


அடுத்த கேள்விக்கு பதில் -

வேணாம்...விட்டுரலாம் :)

vizhii said...

என் நினைவுகளை நினைவு படுத்துகிறது தங்களின் எழுத்து ....