Thursday, January 15, 2009
தேவதைகள் கொண்டாடுகிற தினம்...!
நீங்கள் யாராவது தேவதைகள் தூங்கும் பொழுது பார்த்திருக்கறீர்களா!கைவிரல்களை கூட சரியாக விரிக்காத குழந்தை ஒன்று பசியாறித்தூங்குகிற தருணங்களை ரசித்ததுண்டா? அது வெறும் தூக்கம் என்று என்னால் சொல்ல முடிவதில்லை மனிதன் வாழ்கிற கணங்கள் அங்கே ஆரம்பிக்ககிறது என்பது என் எண்ணம்.
அப்படி தன்னை மறந்து தூங்குகிற தேவதைகளை பார்த்திருக்ககிறீர்களா, ரசித்திருக்கிறீர்களா? இல்லை எனில் உங்கள் வாழ்வின் மிக அற்புதமான தருணங்களில் சிலவற்றை இழந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம் இன்னொரு விதமாய் சொல்லப்போனால் அந்த அற்புதம் உங்களை இதுவரை கடந்து போகவில்லை எனலாம் இன்னொரு விதமாய் சொல்லப்போனால் உங்களை கடந்த ஒரு தேவதையை நீங்கள் கவனிக்கவில்லை என்பது சோகம் இருக்கிற உண்மை.
அவளுடைய தூக்கம் அப்படித்தான் இருக்கும் ஒரு குழந்தையைப்போலத்தான் அவள் தூங்குவாள் என்பதை விட ஒரு குழந்தை அவளுடைய சாயல்களில் தூங்கும் எனத்தான் எனக்கு படுகிறது;இது நிஜமோ இல்லையோ நிச்சயமாய் தேவதைகள் அவளைப்போலத்தான் நித்திரை கொள்ளக்கூடும். தேவதைகள் தூங்குவதில்லையா?! யார் சொன்னது நிச்சயமாய் தேவதைகள் உறங்குகின்றன அதுவும் மிக இனிமையான கனவுகளுடன்...
அவளை சின்ன வயதிலிருந்து எனக்கு தெரிந்திருந்தது அதிகம் பேசமாட்டாள் என்றாலும் மிக அழகான புன்னனைகளை சேமித்து வைத்திருந்தாள்.எனக்கென்று தனியாய் அவளிடம் இருந்தது எல்லையில்லாத அன்பும், உயிரறிகிற உணர்வுகளும், அற்புதமான புன்னகைகளும் மட்டுமே.
தனியான சிரமங்கள் ஏதுமில்லாமல் அவள் மிக இயல்பாய் அஃதின் எனக்கே எனக்காய் மாத்திரமான அடையாளங்களோடு செலவு செய்கிற புன்னகைகள் போல இதுவரை என் கனவுகளில் வந்த, நான் கேள்வியுற்ற எந்த தேவதைகளும் சிரித்திருக்கவில்லை என்பது அவளுக்கு மட்டுமேயான தனித்துவமாய் இருந்தது; இங்கே நான் முன்னர் சொன்ன தேவதைகள் அவள் சாயலில் இருக்க கூடும் என்கிற கூற்று உறுதியாயிற்று.
அவளுக்கு பேசத்தெரிந்திருந்தது மௌனங்களையும்! அவள் வீட்டின் சமையலறையின் பின்புறத்திண்ணையில் அம்மிக்கல்லில் சாய்ந்தவாறு நெல்லி இலைகளினூடே விழுகிற நிலவொளியின் வெளிச்சத்தில் எதிரேயிருக்கிற அவளது மௌனங்களை எந்த வித குறுக்கிடல்களும் இல்லாமல் விடிவிடிய வாசித்துக்கொண்டிருந்த நாட்களை நான் முன்னம் செய்த தவங்களின் வரங்களென சில கடிதங்களில் சிலாகித்திருக்கிறேன் அவை என் நாட்குறிப்புகளிலும் எழுதப்பட்டிருக்கின்றன!
குறிப்பு:
அந்த அம்மிக்கல்லு மஞ்சள்,மருதாணி மற்றும் அவளது என மயக்கம் தருகிற வாசனையோடிருக்கும்.அந்த மருதாணி அரைத்தல் பற்றியதும் வாசனைகள் பற்றியதுமான கதைகளை சொல்லப்போனால் இந்தப்பதிவின நோக்கம் திசை திரும்பி விடக்கூடும். பிறிதொரு சந்தர்ப்பத்தில் கனவில் நுழைகிற அந்த மயக்கங்களின் வாசனைகளை பற்றி பேசலாம்.
இதையே அவளும் சொல்லி இருக்கிறாள் நீ கண் மூடி என் மடிசாய்ந்திருக்ககையில் தாய்மையின் நிறைவை உணர்வதாக அவள் தன் மனதையெல்லாம் சொல்கிறேன் என்று உயிரை மொத்தமாய் தன் பிரியங்களையெல்லாம் கூட்டி எழுதியவொரு கடித்தில் சொல்லியிருந்தாள்...இங்கே நான் சொல்ல வேண்டிய இன்னொரு விசயம் இருக்கிறது அவள் மடிமீது சாய்திருக்கையில் அனேகமான தருணங்களில் நான் என்னையறியாமல் உறங்கி விடுவேன்,நான் வழைமையாய் தூங்குகிற படுக்கையை தவிர்த்து என்னை மறந்து உறங்கியது அம்மாவின் மடிக்கு பிறகு அவளது அன்பில்தான்...
அவளுக்கு அன்பைத்தவிர வேறொன்றும் தெரியாமல் இருந்தது அவள் செய்த தவறல்ல தேவதைகளின் இயல்பு அதுவாகிற்று...ஆனால் என்ன தவங்கள் தடைப்பட்டுப்போனாலும் தேவதைகள் ஒரு போதும் தோற்பதில்லையே நான் இன்னமும் தவம் செய்திருக்க வேண்டும் என்பது காலம் சொல்லி இருக்கிற சாபவிமோசனம்.தவங்களின் பலன்கள் வரமாய் அல்லது விமோசனமாய் கிடைக்கலாம் அன்றில் ஒரு தேவதையோடு வாழக்கிடைப்பது தேவதைகளின் கரிசனமே அன்றி அவை தவங்களின் வலிமையன்று.
அம்மாவின் சாயல்களை அவள் இயல்புகளெங்கும் சேகரித்து வைத்திருந்த அவளுக்கும் அம்மாவிற்கும் இருந்த ஆகக்கூடிய வித்தியாசமாய் இருந்தது அவள் கறுப்பாயும் அம்மா வெள்ளையாயும் இருந்ததுதான்...நான் தேவதை என்கிற சொல்லை அதிகமாய் எழுத ஆரம்பித்தது அவள் வருகைக்கு பின்பென்கிற தகவலைநான் எழுதிய சில கவிதைகளும் தொடர்ச்சியாய் இல்லாமல் நான் எழுதிய நாட்குறிப்புகளும் நிரூபிக்கின்றன்...
தேவதைகளுக்கு பிறந்த நாள் இருப்பது உங்களுக்கு புதிதாய் இருக்கலாம் ஆனால் அவள் பிறந்த திகதி ஜனவரி பதினைந்தாய் இருந்தது.அவள் பிறந்து விட்டாளே ஒழிய இனி மறையப்போவதில்லை என்பதற்கு கூகுள் ஒரு வேளை சாட்சியாகலாம் அல்லது கொஞ்சம் போதையுடனும் நிறைய நினைவுகளுடனும் இதனை எழுதிக்கொண்டிருக்கிற ஆசிரியனும் அவன் நாட்குறிப்புகளும் காரணமாகலாம்.
இன்றவளுக்கு பிறந்த நாள் என்பதில் அவள் கொண்டாடிக்கொண்டிருப்பது அவள் நாட்களில் ஒன்றென்றாலும் நான் கொண்டாடிக்கொண்டிருப்பது தேவதையைத்தானே!அத்தோடு தேதைகளிடம் வரம் மட்டுமே கேட்பது எப்போதும் முறையானதல்ல அவளுக்கென்றும் சில விதி முறைகள் இருக்கலாம்,அவை தவிர்க்கமுடியாதவைகளாய் இருக்கலாம் அல்லது தவம் செய்பவனுடைய வல்லமைகள் திடங்கள் கலைந்து போயிருக்கலாம் ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு அவள் சிறகுகளை இழக்க வேண்டியிருந்திருக்கலாம் இங்கே அவள் இழந்தது சிறகுகளைத்தானே ஒழிய நினைவுகளை அல்ல என்பது அந்த தவம் பற்றிய குறிப்பகளை எழுதிச்செல்கிற நிஜத்தை தந்திருக்கிறது! ஒருக்கால் இழந்து போன சிறகுகளை திரும்பவும் அவள் பெறக்கூடும் அதுவரையான அவன் தவம் கலைக்கப்படாமலிருக்கட்டும் என்பதற்காயும் அல்லது அவளுக்கு சிரமங்களை கொடுக்கிற சிறகுகள் மீண்டும் கிடைக்கப்பெறாமல் இருப்பதற்குமாய்...
வரம் தருகிற தேவதையொருத்தியை வாழ்த்திக்கொள்வதில் உயிர் கிண்ணங்களில் சந்தோசம் நிறைகிறது!
பின் குறிப்புகள்:
//
பதிவின் நோக்கம் ஒரு தேவதையை வாழ்த்துவது மட்டுமே பதிவிற்கான சுவாரஸ்யத்திற்காய் சில வரிகள் கோர்வையாககப்பட்டிருக்கிறது...
//
எனக்கு தெரிந்த பெண்ணொருத்திக்கு இன்று பிறந்த நாள் அவளுடைய உண்மை வயதென்ன என்பது தடைசெய்யப்பட்ட கேள்விகளுள் ஒன்று.
//
இது நிஜம் தழுவி எழுதப்பட்ட புனைவு.
Labels:
தேவதையின் தருணங்கள்...,
வாழ்த்துக்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
உனக்கான தேவதைகள் எப்பொழுதும் உன்னுடனே இருக்கட்டும் அவைகள் உன்னை சந்தோசங்களால் நிரப்பட்டும்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கறுப்பி...
வாசனை மிகுந்த பல வண்ண
மலர்களை சிரத்தையோடு
கோர்த்தது போல் இருக்கிறது பதிவு...
என்னுடை வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் தமிழன்...
எல்லாருடைய வாழ்விலும் தேவதைகள் இருக்கின்றார்கள். அந்த தேவதைகள் மற்றவர்களின் தேவதைகளைவிட கண்டிப்பாக அழகாகத்தான் இருப்பார்கள்.......
அருமையான, உணர்வு பூர்வமான ப்திவு
தமிழா என்ன ஒரே தேவதை மயம்? பதிவு அருமை,,.. தொடருங்கோ..... யாரப்பா அந்த அதிஸ்டக்காரி?? இந்தளவு பில்டப்புக்கள் ஒரு தேவதைக்கு ... இது கொஞ்சம் ஓவர்!
naanum inda blogl inaya, en karuthukalai tamilil solla enna seyavendum?
என்னுடைய வாழ்த்துக்களும் :)
இவ்வளவு அழகான வாழ்த்தை இதற்குமுன் கண்டதில்லை நான்.... தமிழனின் வாழ்த்து தேவதை பெற்ற வரம் ... :)))
//அவளுக்கு பேசத்தெரிந்திருந்தது மௌனங்களையும்! அவள் வீட்டின் சமையலறையின் பின்புறத்திண்ணையில் அம்மிக்கல்லில் சாய்ந்தவாறு நெல்லி இலைகளினூடே விழுகிற நிலவொளியின் வெளிச்சத்தில் எதிரேயிருக்கிற அவளது மௌனங்களை எந்த வித குறுக்கிடல்களும் இல்லாமல் விடிவிடிய வாசித்துக்கொண்டிருந்த நாட்களை //
தமிழன் எழுதவில்லை...செதுக்கியிருக்கிறீர்கள்... நேர்த்தியாகச் செதுக்கப் பட்ட பொன்சிலைபோல் மிக அழகாக மின்னுகின்றது இருக்கின்றது இந்தப் பதிவு...!!!!
என்னுடைய வாழ்த்துகளையும் சேர்த்துவிடுங்கள் கறுப்பியிடம்... !! :)
நானும் வாழ்த்து சொல்லிக்கிறேன்
சற்றே பெரிய பதிவென்றாலும் சலிக்கவேயில்லை இறுதிவரை...செதுக்கித்தான் இருக்கிறீர்கள்.
அன்புடன் அருணா
படமும் கருத்தும் அருமை!
கறுப்பிக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் சேத்துடுங்க...
உங்கள் 'தேவதை'க்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
அழகழகான வார்த்தை பிரயோகங்களை படித்து......ஒரு நிமிடம் பிரமித்துப்போனேன் தமிழன்!!
மிக மிக அழகாக உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளை கையாண்டிருக்கிறீர்கள்,
சபாஷ் தமிழன்!!
சூப்பர்ப்!!!
அசர வைத்தது உங்கள் அசத்தல் பதிவு, வாழ்த்துக்கள் தமிழன்!!!
தேவதைக்கு எமது வாழ்த்துக்கள் உரித்தாக்கட்டும். நல்ல வார்த்தைப் பிரயோகம்.
//எனக்கு தெரிந்த பெண்ணொருத்திக்கு இன்று பிறந்த நாள் அவளுடைய உண்மை வயதென்ன என்பது தடைசெய்யப்பட்ட கேளவிகளுள் ஒன்று.//
ok kedkavillai ;)
என்னுடை வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
இது நிஜம் தழுவி எழுதப்பட்ட புனைவு.
நிஜம்போலத்தான் இருக்கிறது
தேவதைக்கு வாழ்த்துக்கள்
மிகவும் அழகான வார்ப்பு
தேவதை தேவதை அவள் ஒரு தேவதை.... நன்றி உங்களுக்கு
தமிழன் பாருங்கோ வாக்கு மாறிப்போச்சுது.நேற்று இந்தக் கதைக்கு பின்னூட்டம் போடுறன் எண்டு இதுக்கு முந்தின பதிவுக்குள்ள பின்னூட்டம் போட்டு வைச்சிருக்கிறன்.பரவாயில்லைதானே!
தேவதைகளுக்கு பிறந்த நாள் இருப்பது உங்களுக்கு புதிதாய் இருக்கலாம் ஆனால் அவள் பிறந்த திகதி ஜனவரி பதினைந்தாய் இருந்தது.
என் தேவதைக்கும் தான்!
:))
நானும் தேவதையாய் பிறந்து இருக்கக் கூடாது
அட்டகாசம் தமிழன்.. என்னுடைய வாழ்த்துக்களும்..
எப்படித்தான் உங்களுக்கு இப்படி ஒரு மொழி வளமையோ.. பின்றீங்க..
இப்படி ஒரு வாழ்த்து பெற முடிந்தவள் (ஒருமைக்கு மன்னிக்கவும்) நிச்சயம் தேவதையாகத்தான் இருக்க முடியும்..
நன்றி புதியவன்..
நன்றி அருண்மொழி அண்ணன்..
@கமல்..
அட இது ஒரு கற்பனைத்தேவதைன்னு வச்சுக்கோங்க கமல்...:)
@umapaty
உமாபதி இது சுலபமான விசயம் மடல் அனுப்புங்க பதில் எழுதறேன்...
@Mathu
நன்றி மது...
@ நவீன் பிரகாஷ்
நன்றி அண்ணன்...
எல்லாம் அவள் கொடுத்த வரம் :)
@ நசரேயன்..
நன்றி அண்ணன்..
@அருணா...
நன்றி அருணா...
@divyapriya
நன்றி திவ்யப்பிரியா...
@Divya
நன்றி திவ்யா மாஸ்டர்...
@கரூரன்..
நன்றி அண்ணன்...
@க.பிரபா...
நன்றி பிரபாண்ணன்...
கேட்ககூடாதுன்னு சொன்னதுக்கப்புறமும் கேள்வியா :)
@அமிர்தவர்ஷனி அம்மா..
நன்றி...
@TamilBloggersUnit..
நன்றி...
@ ஹேமா...
நன்றி,ஹேமா மீள் வருகைக்கு நானும் பார்த்தேன் வயது போனால் வாக்கு மாறுவது வழமைதானே..:)
@விக்னேஷ்...
அப்படியா விக்னேஷ் உங்கள் தேவதைக்கும் வாழ்த்துக்கள்..
@சஞ்சய்...
என்ன சரிப்பு மாம்ஸ் நன்றி...
@kajan's
நன்றி...
@ MSK..
நன்றி MSK...
அவள் தேவதைதான் அதில் சந்தேகமே இல்லை...
நன்றி நண்பர்களே...!
தமிழன்......!!!
உங்களுக்காக ஒர் விருது காத்திருக்கிறது என் வலைதளத்தில்....
http://manasukulmaththaapu.blogspot.com/2009/01/blog-post.html
பின்புறத்திண்ணையில் அம்மிக்கல்லில் சாய்ந்தவாறு நெல்லி இலைகளினூடே விழுகிற நிலவொளியின் வெளிச்சத்தில் எதிரேயிருக்கிற அவளது மௌனங்களை எந்த வித குறுக்கிடல்களும் இல்லாமல் விடிவிடிய வாசித்துக்கொண்டிருந்த நாட்களை //
மிக
நன்றாக
எழுதியுள்ளீர்
தேவா...
Arumai
அருமையான மொழிநடை.... வாசிக்க சுவார்சயமாக இருக்கிரது... அந்த தேவதைக்கு என்னுடைய பிறதநாள் வாழ்த்துக்களும்..
தமிழா எப்படிச் சுகம்?? எப்ப வேற தேவதைகள் வருவீனம்??
Post a Comment