Wednesday, August 8, 2018

💗திரும்புதல் அல்லது நினைவுகளை புதுப்பித்தல்.💗



உயர்தரத்து பரீட்சைக்கு 
ஒரு தவம் போல படித்துக்கொண்டிருப்பாய் - நீ
மேசையில் உறங்கிப்போகும் உன்னை தவம் போல பார்த்துக்கொண்டிருப்பேன் - நான்.

நாடு முழுவதும் கபொத உயர்தரம் பரீட்சை நெருங்கிக்கொண்டிருக்கு. இந்த ஏலெவல் காலத்திலயே இதுதான் பரவசமான காலமா இருக்கும் எண்டு நினைக்கிறன் கடைசி மாதங்களில் கவனிப்புகள் அப்படி இருக்கும்! வீட்டுக்காரர், சொந்தக்காரர், நண்பர்கள், அயலவர்கள் என்று எல்லோரும் அக்கறையும் அன்பும் உற்சாகமும் நம்பிக்கையும் தருகிற நாட்கள் இவை. இதுல இன்னுமொரு சிக்கல் என்னண்டு சொன்னால் ஒரு திணிப்பு மாதிரி  இருக்கும் இல்லாத டென்சனை ஏத்துற வேலையா  சோதினை எழுதப்போறவனை சோதினைக்குள்ளாக்கிற வேலையை கடமை மாதிரி செய்து கொண்டிருக்கும் யாழப்பாணத்து சனம்.  சும்மா இருக்கிறவனை ஏதோ  இதைவிட்டால்  அவ்வளவுதான் எண்ட மாதிரி கதைச்சே பயப்படுத்தி எழுதுறவனையும் ஒழுங்கா எழுதாமல் பண்ணுற சனங்களின்ரை அறியாமையை இங்க கதைக்க வேண்டாம் அதுக்கு வேறை ஏரியாக்கள் இருக்கு.

____________________________________________

இங்க நான் சொல்ல வந்தது வேறை கதைகள்; இதுல பல கதைகள் இருக்கு

//
அவனும் அவளும் ஏலெவல் எடுக்கிற ஆக்களா இருக்கலாம்..  ரெண்டு பேரும் ஒரே வயதா இருக்கலாம் அல்லது அவனுக்கு இது ரெண்டாவது தரமா கூட இருக்கலாம் மாறியும் சில கதைகள் நடந்திருக்கலாம் ஆனால் எனக்கு இப்ப ஞாபகம் இல்லை.
//
அவள் ஏலெவல் எடுக்கிறவளா இருக்கலாம். -
//
அவன் ஏலெவல் எடுக்கிறவனா இருக்லாம்

முதல்ல சொன்னதை விட பிறகு சொன்ன ரெண்டும்தான் சுவாரஸ்யம் கூட. காதலை பொங்கி பிரவகிக்கிற நாட்களாக இவை இருக்கும். அப்ப "மொபைல்" எல்லாம் கிடையாது இப்பத்தையை மாதிரி கோல் பண்ணி எழுப்பிவிட கதைச்சு தூக்கத்தை கலைக்க படிக்கிறதுக்காக முத்தம் வாங்க  என்றெல்லாம் நடக்கிற சீனுகள் இப்ப இருக்கும் . அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும் அலாம் வச்சு எழும்பி உற்சாகம் குடுக்கிறது இப்ப விரும்பினால் இலகுவா இருக்கும் ஆனால் அப்ப அது ஒரு காலமப்பா... 😞காதலின் அசட்டுத்தனமும் தைரியமும் இப்ப நினைச்சால் சிரிப்பாயிருந்தாலும் ஒரு பரவசம் இருக்கத்தானே செய்யுது.💓💓

➽விடிய வெள்ளன எழும்பி அவளின்ரை வீடு வரைக்கும் போட்டு வாறது. அவள் படிக்கிற யன்னலுக்கு போய் பாத்துக்கொண்டு நிக்கிறது (ரெண்டு பேருமே ஒகே எண்டால் ஜன்னலுக்க நிண்டு அன்பை பரிமாறின ஆக்களும் இருக்கு ) சைக்கிளிலை போய் சத்தம்; போட்டுக்கொண்டு போறது.  எண்டு திரிவானுகள் இதுல  செட்டாகின ஆகாத ரெண்டு வகைக்குமே சில முத்திப்போன காலகட்டமா இது இருக்கும் காதலின் கிறுக்குத்தனங்களும்  ஏலெவலின் அதிகப்படியா மிகைப்படுத்தலின் பைத்தியக்கார தனங்களை ஒரு கலந்து கட்டின விதத்துல செய்து கொண்டு திரியுங்கள் பிள்ளையள் எல்லாம்.

➽வீட்டு மதிலுக்கு போய் அவளை பாத்து பரவசப்படுவதும் அவள் லைற்றை போட்டு நிப்பாட்டி சிக்னல் குடுகிறது பிறகு மத்தியானம் அல்லது இடையில சந்திக்கேக்ககிள்ளை ஏனப்பா வந்தனியள் எண்டு கொஞ்சுறது எண்டு அவளுகள் பெடியளை பஞ்சாக்கி வச்சிருப்பாளுகள்.

➽இது பொம்பிளைப்பிள்ளையள் உண்மைலையே கஸ்ரப்படுங்கள்; அவனுக்கு நோட்ஸ் எழுதிக்குடுக்கிறது உடுப்புத்தோய்க்கிறது, தேத்தண்ணி போட்டு குடுக்கிறதெண்டு ஒரு அம்மா மாதிரி இருப்பாளவை!  இப்ப படுங்கோ விடிய எழுப்பிவிடுறன் எண்டுறதும், படிப்புக்கிடையில அவனனை சந்திக்கிற நேரத்துல சாப்பிடுங்கோ, பகல்ல கொஞ்சம் நித்திர கொள்ளுங்கோ எண்டு கொஞ்சுறதும் பிஸ்கற் மிக்சர் நொறுக்குத்தீனியை கிலோக்கணக்கில வாங்கி குடுக்கிறதும் அவளுகள் கவனிக்கிற விதமே தனி..😍


➽ஆளைப்பார் எப்படி இருக்கெண்டு அம்மா சொல்லுற மாதிரியே  சொல்லி அவள் தருகிற சில முத்தங்களுக்காகவே வருசம் முழுக்க படிக்கலாம் போல இருக்கும். அதேபோல தேவயில்லாமல் எங்கயாவது நிண்டால், கிரவ்ண்டால போக லேட்டாப்போனது தெரிஞ்சால் விழுகிற திட்டும் அப்படித்தான் இருக்கும்.

____________________________________

இந்த துண்டு துண்டான குறிப்பகளை திரட்டி எழுதுகிற அளவுக்கு இந்த இரவு எனக்கு ஒத்துழைக்கவில்லை; இருந்தாலும் நான் எழுதிப்பழகிற இடத்தை தூசுதட்டுறதுக்கும் சொல்லக்கிடக்கிற கதைகளை எழுதிப்பாக்குறக்கும்  அழுதங்களின் விடுபடுதலுக்குமாகவும் இந்த ஞாபக குறிப்புகள்.



💓
என்னை கவனிக்காத போல படித்துக்கொண்டிருப்பாய் நீ
மேசை விளிம்பை முட்டுமுனது ஏக்கங்களை எனக்குத்தெரியாதா
போதுமடி எல்லாம்
புத்தகத்துக்குள் நிலை கொள்ளாத - உன்
பெரு விழிகள் சொல்லாததையா - உனது
பாவனைகள் எனக்கு சொல்லப்போகிறது.

💓
இருக்கிற அழகையெல்லாம்
பருத்திச்சட்டையொன்றுக்குள் மறைத்தபடி படித்துக்கொண்டிருப்பாய் - நீ பின்னிரவின்  வெளிச்சத்தில் பொன் மஞ்சள்  நிறமாய் நீயிருக்க வேறெதையும் யோசிக்க முடியாத படி மிகுதி  இரவை எரித்துகிகொண்டிருப்பேன் நான்.


💓
நித்திரை கொண்டிருவன் இடையில எழுப்பிவிடுங்கோ என்ற குறுந்தகவலோடு கதிரையிலேயே  உறங்கியிருப்பாய் நீ இயல்பின் பேரழகையெல்லாம் மறைக்க திணறுமுன் இரவுடையில்  ஒரு சிறுமியைப்போல உறங்குமுனது தூகத்தை சேமித்தபடி விழித்திருக்கும் மீதமிருக்குமெனது இரவு.

💓💓💓

இனி இடத்துக்கு வருவம்:

குட்டி மச்சாள்!

எனக்கு நெருக்கமானவளாக நீங்கள் நம்புகிற ஒருத்திக்கும் நாளைக்குத்தான் ஏலெவல் காதல் ததும்புமந்த   படிச்சு படிச்சு களைச்சு போயிருருக்கிற அந்த கண்களை பாத்து வாழ்த்துச்சொல்ல சந்தர்ப்பம் தராத இந்த காலத்தை என்ன சொல்வது!

கொஞ்ச நாட்களாக என்னை பார்க்காமலே இருக்கிற  அவளுக்கு இந்த நாட்களில் என்னைக்குறித்த எந்த கனவுகளும் வாரதபடிக்கும் எல்லா பாடங்களிலும் அவளுக்கு திருப்பதியாக எழுதும் படிக்கும் கூடஇருக்குமாறு அவள் நம்புகிற கடவுளர்களை கேட்டுக்கொள்கிறேன்.

படிச்சு படிச்சு மெலிஞ்சு போன மாதிரிதான் இருக்கிறாள் குட்டி மச்சாள் ஆனால்;என்ன கன நாளைக்கு பிறகு காணுறதுல கலக்கமா கிடக்கு சாகடிக்கிறாள் பாவி நிகழப்போகும் வன்முறையை நான் முத்தம் என்று சொன்னால் காமத்தை கொண்டாட சொன்ன ஓஷோ கூட மன்னிக்கமாட்டார் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளடியம்மா இந்த முறை மட்டும்தான்.

"போடா காவாலி இதுக்கு என்ன  பெயரடா?"

" பின்ன சும்மாவே  கிட்டத்தட்ட மூண்டு மாதமடி.."


_________________________________________



கிட்டத்தட்ட  ஐந்து வருடங்களுக்கு முன்னர் எழுதிய இந்த  சொற்களை இப்பொழுது மீட்டுக்கொண்டு வந்திருக்கிற இந்த நாளுக்கு நன்றி😍


-இப்ப ஏலெவல் ஏழுதிக்கொண்டிருக்கிற எல்லா  பிள்ளையளுக்கும் -

2 comments:

பராசக்தி said...
This comment has been removed by the author.
பராசக்தி said...

பழைய நினைவை மீட்டும் இந்தக் காதல் அலை, நடமாடும் தொலைபேசி இல்லாத காலத்திலயும் பேரலையாக எழுந்து சுனாமியாக கொந்தளித்து அடங்கியது என்றால் நம்ப முடியுமா? குறும் சேதிகளெல்லாம் இல்லாமலே என்ன அலைகள் குறுக்கும் மறுக்குமாக அலைந்ததை குறும் படம் போடமுடியுமே! என்னத்தை சொன்னாலும் யாழ் பேச்சு வழக்கு எப்பவும் எதுக்கும் நிகரில்லா பலாச்சுளை தான்.