Friday, November 12, 2010

எப்பொழுதுமிருக்கிறவளின் பிரார்த்தனைகள்.

நினைவுக்குறிப்புகள்.


மொத்தமாய் நினைவிலிருக்கிற விரத நாட்களின் நினைவுகளில் இருந்து இப்போதைக்கு எழுத நினைத்த இந்த முகப்புத்தகத்தின் தன்னிலைவசனம் கொஞ்சம் நீண்டு போயிருப்பதால் ஒரு குறிப்பாக எழுதப்பட்டிருக்கிறது. விரத நாட்களில் இருக்கிற அந்த சூழலை பார்த்து பலகாலமாயிற்று என்றாலும் அந்தப்பொழுதுகளின் வாசனை இன்னமும் ஈரம்மாறாமல். இருக்கிறது நாசியில்.



கந்த சஷ்டி கவசம்.

முன்னைப்பொழுதினை அதன் வாசனைகள் மாறாமல் கொண்டு வருகிற தன்மை இசைக்கு இருக்கிறதென்பது உண்மதான். சந்தன, குங்கும,சாம்பிராணி வாசனைகளோடு, கூட்டிக்கழுவி மஞ்சள் தெளித்த வீட்டு சாமி அறை, கோவில் மண்டம், கோவில் கிணத்தடி வீட்டிலிருக்கிற விரதநாட்களின் சூழல், இந்த நாட்களில் விரதமிருக்கிற பெண்கள், நண்பர்களோடு வேணுமெண்டு தனகுறது, கோவிலுக்கான உதவிகள், விதம்விதமாய் கோவிலுக்குப்போகிற பெண்கள், விரதச்சாப்பாட்டின் விருப்பும் வெறுப்பும், சூரன்போருக்கான ஆயத்தங்கள், சூரன்போர் நாளின் உற்சாகம், விரத நாட்களிலும் எந்தன் ஆக்கினைகளை பொறுத்துக்கொள்கிற அவள் எனக்காக அவள் நேரஞ்செண்டு சாப்பிட்ட பாறணைச்சோறு இப்படி இன்னும்பலதையும் எத்தனையோ வருடங்களுக்கு பிறகு கேட்டுக்கொண்டிருக்கிற இந்த கந்தசஷ்டி கவசத்துக்கு இப்பொழுதும் நினைவுக்கொண்டுவர முடிகிறது.


_________________________________________________________



நீ இருக்கிற எல்லா விரதங்களுக்குமான
என்னைக்குறித்த உன் வேண்டுதல்களை
நீ என்னிடம் ஒருபோதும் சொல்வதில்லை
ஒரு நேரம்,வெறுங்கோப்பி என்று நீயிருக்கிற
கடும் விரதங்களை நான் கண்டுகொள்வதுமில்லை
ஆறுநாளும் முழுகி,ஏழு நாளும் கோவிலுக்குப்போய்
என நீ படும் பாடுகளை நான்
எள்ளலோடு சீண்டியிருக்கவும் கூடும்
வேண்டுமென்றே உன்னை கோபமூட்டியிருக்கிறேன்
அது நினைவிலுமிருக்கிறது அதுவும்
அந்த கிளிச்சொண்டு மாங்காயும் உப்புந்தூளும்
போதாதற்கு உப்பை அரைச்சு தரச்சொல்லி இருந்தேன்,
நினைவிருக்கிறதா...?
எப்பொழுதும் போலவே நீ ஒற்றைப்புருவத்தால் கோபித்துக்கொண்டு
என் ஆக்கினைகளை பொறுத்துக்கொள்வாய்
உன்னிடமிருந்த எல்லா பிரார்ர்ததனைகளும்
என் நன்மைகள் குறித்தே இருந்தன
இப்பொழுதும் அவை அப்படியே இருக்கிறதெனவும்
முன்பை விட நீ நிறைய விரதமிருக்கிறதாயும்
தர்சினி சொல்லி இருந்தாள்...

என்னிடமும் ஒரே ஒரு வேண்டுதல் இருந்தது
எல்லா பிரார்த்தனைகளையும் கடவுள் கேட்கிறாரா என்ன?!
கடவுள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு
உன்னை மட்டும் என்னிடமிருந்து கேட்டுக்கொண்டார்.

இப்பொழுதும் என்னிடமொரு பிரார்த்தனை இருக்கிறது
அது கடவுளுக்கு அல்ல.

8 comments:

பனையூரான் said...

//உன்னிடமிருந்த எல்லா பிரார்ர்ததனைகளும்
என் நன்மைகள் குறித்தே இருந்தன
இப்பொழுதும் அவை அப்படியே இருக்கிறதெனவும்
முன்பை விட நீ நிறைய விரதமிருக்கிறதாயும்
தர்சினி சொல்லி இருந்தாள்...//

அப்பிடிஎன்றால் நல்லது ,
கோடை வைச்சு ரோடு போடாமல் நீ வாழ்ந்தாலும் எழுத்தில் நீ வித்தியாசம் மச்சி.

பனையூரான் said...

//எல்லா பிரார்த்தனைகளையும் கடவுள் கேட்கிறாரா என்ன?!//

கேட்பார் கேட்காமல் விடமாட்டார்
:) : )

பனையூரான் said...

//இப்பொழுதும் என்னிடமொரு பிரார்த்தனை இருக்கிறது
அது கடவுளுக்கு அல்ல//

அப்ப ?????????????

பனையூரான் said...

பிரார்த்தனை என்றால் என்ன சரியான விளக்கம் தேவை .....................

தமிழன்-கறுப்பி... said...

//அப்பிடிஎன்றால் நல்லது ,
கோடை வைச்சு ரோடு போடாமல் நீ வாழ்ந்தாலும் எழுத்தில் நீ வித்தியாசம் மச்சி.//

மச்சி புனைவுக்கெல்லாம் கதை சொல்லக்கூடாது..

//கேட்பார் கேட்காமல் விடமாட்டார்
:) : )//


கடவுள்?! கேட்பாரா...

//அப்ப ?????????????//

சீச்சீ பயப்பட வேண்டாம் அப்படி ஒண்டும் நடக்காது :)

//பிரார்த்தனை என்றால் என்ன சரியான விளக்கம் தேவை .....................//


வேண்டுதல்கள்தான். :)

ஹேமா said...

கறுப்பி....சுகம்தானே.
நிறைய நாள் ஆச்சு.

கடவுள் எல்லாத்தையும் கேட்டுக்கொண்டும் பார்த்துக்கொண்டும் சும்மா இருப்பார்.அவரை விடுங்கோ !

பனையூரான் said...

//மச்சி புனைவுக்கெல்லாம் கதை சொல்லக்கூடாது.. //

புனைவு என்று ஒரு lable வைச்சிருக்கிறீங்கள்தானே இந்தப் பதிவில அப்பிடி புனைவில நீங்கள் போடல்லையே ஏன்???

தமிழன்-கறுப்பி... said...

ம்ம் ஹேமா..கன நாள்தான்.

பனையூரான் ஏன் ஏன்.. :)