Friday, June 26, 2009

மலைகளில் காணாமல்போன தேவதைகள்...



மலைகளில் நிகழ்கிற ரகசியங்களை நதிகள் கொண்டு செல்கின்றன வாழ்க்கையில் நிகழ்கிற ரகசியங்களை காலம் காவிக்கொண்டு நகர்கிறது.அருவிகள் விழுகிற ஓசைகள் மலைகளில் பகிர்கிற கதைகளின் கிசுகிசுப்புகளாகவே எனக்கு கேட்கிறது.எவ்வளவு மனிதர்கள்,எவ்வளவு கதைகள், எவ்வளவு ரகசியங்களை கொண்டிருக்கும் இந்த மலைகள். பறவைகள் பகிரங்கமாய் கூடுகிற மலைகளை ஏறுகையில் மனிதன் ஆதிகாலத்துக்கு போய்விடுகிறான். ஒரு சுதந்திர உணர்வை அடைகிறான். மலையின் உச்சியில் இருக்கும் பொழுதுகளில் உற்சாக மனோநிலை இருப்பது இந்த சுதந்திர உணர்வுகளின் வெளிப்பாடாய் இருக்கலாம்.பாரங்கள்,நிர்ப்பந்தங்கள், கவலைகள் எல்லாம் கீழே நகர வாழ்க்கையின் உயரத்துக்கு வந்து விட்டதைப்போலொரு உணர்வு மலைகளின் உச்சிகளில் கிடைக்கிறது.கைகளை அகல விரித்து தலைக்கு மேலே போகிற முகில்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டு பறக்கவாரம்பித்துவிட்டதாக பாவனை செய்து கொள்கிற ஆனந்தம் மலைகளில் நிகழ்கிறது.

___________________________________________________





பால்ய காலத்தில் அறிமுகமான தேவதைகள் மலைகளில் வசிப்பதாகத்தான் அறிந்திருக்கிறேன். முன்பொரு நாளில் வேதைகள் மலைகளில் வாழ்ந்ததார்களாம், மழை நின்ற இரவுப்பொழுதுகளில் அவர்கள் நதிகளில் மிதந்து வருவார்களாம், நதிகள் வற்றுகிற காலங்களில் காற்றில் மிதந்து வருவார்களாம்.எனக்கு நம்பிக்கை இருந்தது,நான் மலைகளில் இருக்கிற தேவதைகளை தேடத்தொடங்கியிருந்தேன்.



"இப்பொழுது தேவதைகள் இல்லையா" என்றேன்.

"இருக்கிறார்கள் ஆனால் மலைகளில் வசிப்பதில்லை"

என்று அலட்சியமாய் சொன்ன மிருணாளினி ஆளை அடிக்கிற அழகி! கொஞ்சம் மாநிறம் என்று சொல்லக்கூடிய நிறைய கறுப்பு நிறமவள்.கால்களை நீட்டி சாய்ந்தமர்ந்து,மிருதுவாய் மூடிய கண்களோடு உதடுகள் நனையாமல் மதுவருந்துகிற அவளைப்பார்க்கையில் தேவதைகள் மதுபான விடுதிகளுக்கு வருவார்கள் என்பதாகத்தான் தோன்றியது.

அறுபத்தொரு நாட்களுக்கு முன்னர் அப்படியவள் சொல்லிய இரவில் நாங்கள் ஆடைகளின்றி உறங்கியிருந்தோம். அதற்கு பிறகு அவளை பீதுருதாலகால(Pidurutalagala)மலையில் தொலைத்துவிட்டேன்.

______________________________________________________________




பெண்களைப்போலவே வளைவுகளும் அழகுகளும் ரகசியங்களும் என பொதிந்து கிடக்கிறது மலை, அந்த மலையை அதிசயங்கள் நிரம்பிய பெண்ணொருத்தியோடு ஏறுவதென்பது அற்புதமான அனுபவமாகத்தான் இருக்க முடியும்.

இப்பொழுது நான் சொல்ல வந்தது ஒரு காலத்தில் ராசதானியாக அல்லது கோட்டையாக விளங்கிய சிகிரியா(Sigiriya Rock)மலையைப்பற்றியது அல்ல அந்த மலையில் நடந்த சில கதைகள்தான். மலை என்று சொல்வதை விட அந்தப்புரம் என்பது அழகு,இந்த மலையின் உச்சி வரை மூன்று தடைவைகள் போய் வந்திருக்கிறேன்.

முதல்தடவையின் பொழுது ஒரு அரசாங்க வேலை செய்கிற குழுவினரோடு சென்றிருந்தேன் எங்கள் ஊரிலிருந்து ஆரம்பித்த இலங்கை முழுவதுக்குமான பயணம் அது. அதிலும் ஒரு தோழி கிடைத்திருந்தாள். நான் தான் அந்த "செட்டிலேயே" வயது குறைந்தவனாயிருந்தேன் அவள் என்னோடு நெருக்கமாயிருந்தது அந்த குழுவில் வந்திருந்த அவளோடு வேலை செய்கிற அனேகமானவர்களுக்கு ஆச்சரியமாயும் எரிச்சலாயும் இருந்திருக்கலாம்!அவள் அடிக்கடி என்னை தேடிக்கொண்டதும், அந்த பயணம் முழுவதும் அக்கறையோடென்னை கவனித்துக்கொண்டதும், தான் ஏதாவது வாங்கினால் எனக்கும் சேர்த்து வாங்கியதும், என்னோடு இருந்து பயணம் செய்ததும்,என் கைகளைப்பிடித்துக்கொண்டு கதைகள் பேசியதும், நிச்சயமாய் மற்றவர்களுக்கு ஆச்சரிமாய்தான் இருந்திருக்கும்.

அவளுக்கும் எனக்கும் இடையில் அப்படியொரு ஈடுபாடிருந்தது, என்னை விட அவள் என்னோடு அதிகமாய் நெருங்கியிருந்தாள்.சொல்லப்போனால் நான் அந்த சுற்றுலாவில் இணைந்து கொள்வதற்கும்,இலங்கை முழுவதும் போய் வருவதற்கும் அவள்தான் காரணமாயிருந்தாள்! வேறொரு நண்பர் மூலம் அந்த சுற்றுலாவுக்கான அழைப்பு வந்திருந்தாலும் அவளது ஆர்வத்துக்கும் அன்புக்குமாகவே பயணத்துக்கு வருவைத உறுதி செய்துகொண்டேன். அவள் மனம் முழுவதும் ஏதோ ஒரு நெருக்கம் வைத்திருந்தாள் என்னோடு.

பல முறை நிகழ்ந்திருந்தாலும் நுவரெலியாவில் தங்கியிருந்த பின்னிரவில் உறங்கப்போவதற்கு முன்பாக நிகழ்ந்த அந்த தருணம் எந்த வைகயானதென்கிற முடிவுக்கு வர முதலே விலகிக்கொண்டோம். இப்பொழுதும் அவள் ரகசியமாய் சிரிக்கிறவளாகவே இருக்கிறாள்.

யாருமற்ற நடுமத்தியான வெயிலில் சிகிரிய புல்வெளியொன்றில் என்னோடு அவள் வெளிர்பச்சை நிற துப்படாவில் இளமஞ்சள் நிறமாய் படுத்திருந்தாள்.


பிந்திய குறிப்பு : அவள் கல்யாணமானவளென்பது எனக்கு தெரிந்திருந்தது.



***

இரண்டாவது முறை அது ஒரு கலகலவென்கிற அனுபவம். கிட்டத்தட்ட ஒரே வயதுக்கார சில யாழப்பாணத்து அழகிகள், பல பெடியள் மற்றும் அலுவலக அங்கத்தவர்களென ஒரு கலந்து கட்டிய குழு என்னுடைய ஹொட்டேல் முகாமைத்துவ பள்ளியில் இருந்து புறப்பட்டோம்.பாட்டும் கூத்தும் கும்மாளமும் என களைகட்டிய பயணம்.சென்றமுறையும் பாடினேன் என்றாலும் இந்தமுறை பாடி-கொண்டாடினோம். சிகிரியாவை திருகோண மலையிலிருந்து ஹபரண போய் அங்கிருந்து சென்றடைந்தோம்.அந்த மலையேறிய நிகழ்வில் கொஞ்சம் ஒடிசலாய் இருந்த அவள் ஒரு கத்தோலிக்க தேவதையாய் இருந்தாள் ஆன்(Anne) என்பது அவளுடைய பெயர்! நெற்றியில் விழுகிற முடிகளை அடிக்கொரு தடவை எடுத்து விட்டவாறே லேசாய் மூச்சுவாங்கி கன்னங்கள் வியர்க்க அவள் ஏறிவந்த மலை இன்னமும் அழகாயிருந்தது. Anne எங்கே இருக்கிறாய் இப்பொழுது, கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை பாடலை இப்பொழுதும் நினைவில் வைத்து பாடுகிறாயா? பியிரடிக்காமலே போதையேற்றுகிற விழிகளோடிருந்த இன்னொருத்தி அணைகிற தருணங்களுக்கு அடிக்கடி நெருங்கினாலும் பிடிகொடுக்காமலே இருந்தாள். இவளுக்காகவே "நாட்டுச்சரக்கு நச்சுன்னுதான் இருக்கு" என்கிற பாடல்போன்ற ஒன்றை பயணத்தின்போது ஏழு தடவைகள் பாடியிருப்பேன்.

மலையேறாமல் பள்ளி அதிபரோடு அடிவாரத்திலேயே இருந்துவிட்ட குந்தவி பயணத்தின் ஆரம்பம் முதலே என்னை அதிகம் தொந்தரவு செய்து கொண்டிருந்தாள். அமைதியான புன்னகையோடு சகலதிலும் கலந்து கொண்ட அவள் மனதளவில் நெருங்கியிருந்தாள். வட்ட முகம், பளிச்சென்ற கண்கள், கவிதையான மொழி என மனதுக்குள் நிறைய இடம் பிடித்தது இவள்தான்...பயணத்தின் முடிவில் சில வரிகள் எழுதி கையொப்பமிட்டுக்கொடுத்த அந்த குறிப்பபேடு காணாமல் போன நாட்களில் நிறையவே கவலைப்பட்டேன்.

***

திருகோணமலை Club Oceanic ஹொட்டலின் நீச்சல் குளத்துக்கருகில் வட்டமாய் உயர இருக்கைகளில் அமர்ந்தவாறே பியர் அருந்திக்கொண்டிருந்தோம்.மெதுவாக பாடுவதற்கு அனுமதி கொடுத்திருந்தது விடுதி முகாமைத்துவம்.

"வாவென்று சொலல்லாமல் வருவதில்லையா-காதல்
தாவென்று சொல்லலாமல் தருவதில்லையா"

என்கிற வரிகளில் ஆரம்பித்து முழுவதுமாய் அந்த பாடலை பாடி முடிக்கையில் உற்சாக கை தட்டல்களுக்கு நடுவிலும் எதிரேயிருந்த ஆனினது கண்கள் தாழ்ந்து சிரித்ததை நான் தவறவிடவில்லை. போத்தலில் மீதமிருந்த முழுவதையும் அவளைப்பார்த்துக்கொண்டே ஒரே மூச்சில் குடித்து முடிதேன் இப்பொழுது அவள் என்னை கவனிக்கத்தவறவில்லை என்பதை கண்களிலேயே காட்டினாள். அப்பொழுது அவள் பாட ஆரம்பித்திருந்தாள்-

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை-என்
கண்களை பறித்துக்கொண்டும் ஏனின்னும் தூங்கவில்லை...

எல்லோரும் உறங்கிய அந்த இரவில் என்னோடு விழித்திருந்த Anne தங்க நிற உடலில் மஞ்சள் நிற மணலை அணிந்திருந்தாள்.





***
இதையெல்லாம் மறந்து விடுவோம்!
மூன்றாவது முறையாயும் திருகோணமலையில் வேலை செய்து கொண்டிருந்த நாட்களில், திருகோணமலையில் இருந்த உறவுகளோடு கனடாவிலிருந்து விடுமுறையில் வந்திருந்த குடும்பம் ஒன்றும் அவளது குடும்பமும் சேர்ந்து கொள்ள எங்கேயாவது போவதென்று- சிகிரியாவென்று முடிவாயிற்று அதுவும்.

இந்தப்பயணம் முற்றிலும் வித்தியாசமானதாய்,எனக்கு நெருக்கமாயில்லாத என்னுடைய அப்பாவழி உறவினர்கள் பழக்கம் குறைந்த சூழல் என கொஞ்சம் இறுக்கமாயிருந்து.கடக்க வேண்டிய சில சோதனைச்சாவடிகளை தாண்டிய பிறகு சூழல் கொஞ்சம் உற்சாகமாய் மாறியது. மொத்தம் பத்து பேர் மட்டும் இருந்த அந்த பயணத்தில் அவள் மட்டுமே எனக்கு நெருக்கமானவளாயிருந்தாள்.

சூழல் கொஞ்சம் இயல்புக்கு மாறிவிட கலகலப்பாய் இருந்தது, அப்பொழுது யாரவாது பாடலாமே என்கையில் அவள் என்னை நோக்கி விழிகளை உயர்த்தினாள்,எனக்கு மட்டும் புரிகிற மொழியில் பாடென்றாள். விழிகளில் பாடமுடியுமென்பதை அவள் அப்பொழுதிலிருந்து அந்த நாட்கள் முழுவதும் அடிக்கடி உணர்த்திக்கொண்டிருந்தாள்.

"கண்பேசும் வார்ததைகள் புரிவதில்லை" என்று தொடங்கிய அந்தப்பாடல் அவளது கண்கள் பேசிய மொழிகளுக்கான எந்தன் குறிப்புகளாய் இருந்தது.அவள் கன்னங்களுக்கு உள்ளேயும் வெளியே கண்களாலும் சிரித்துக்கொண்டாள்.

அங்கே கொஞ்சம் அடங்க மறுத்தவர்களாய் நாங்கள் இருந்தோம். மலையை அடையும் வரை இரு கரையும் மரங்கள் அணிவகுத்திருந்த சிவப்பு மண் பாதையில் கைகோர்த்தது போல் தோள்கள் உரச நடந்த அனுபவம் தனி. இப்பொழுதும் முதுகுக்கு பின்னால் குறைசொல்லுதலும் குறுகுறுத்த பார்வைகளும் இருந்துதானிருக்கிறது.அது கடைசியாய் என் காதுக்கும் அவள் மூலமாய் வந்து சேர்ந்தது. இதனை சொல்கையில் அவள் விழிகள் துளிர்த்து விடும்போல ஈரமாகியிருந்தன.கடினப்பட்டு தவிர்த்துக்கொண்டாள்.

மலையில் மூன்றில் ஒரு பங்கை எல்லோருமாக ஏறினோம் அதற்கு பிறகு முடியவில்லை என மற்றவர்கள் பின்தங்கிவிட நானும் அவளும் வேகமாய் முன்னேறினோம். குண்டும் இல்லாமல் ஒல்லியும் இல்லாமல் அளவாய் தெரிந்த அவள் நெருக்கமான அழகுகளில் இருந்தாள். தழைவாக கறுப்பு நிற நூல்வளையம் போட்டிருந்த அவள் கூந்தல் காற்றில் அலைந்து கன்னங்களில் கோடுகள் போட்டிருந்தது கொஞ்சம் மிகையான உரோமங்களோடிருந்த அவளது பின்களுத்தில் துளிர்த்திருந்த வியர்வைத்துளிகள் வெயில் பட்டு மின்னியது.சிரித்து சிரித்து மூச்சுவாங்கி மலையேறிய அவளோடு நான் மிதந்து கொண்டிருந்தேன்.

ஓவியங்கள் இருக்கிற சுவர்ப்பகுதிக்கு வந்து சேர்ந்தோம் நிதானமாய் ஒவ்வொரு ஓவியமாய் கவனித்தாள். ஓவியங்களை தொடக்கூடாது என்கிற உத்தரவை காவலுக்கு நின்றவர் அடிக்கடி சொல்லிக்கிக்கொண்டிருந்ததில் ஓவியங்களுக்கு பதில் நான் அவளது கைகளை அழுத்தமாய் வருடிப்பற்றினேன்.

பாதி ஏறி முடித்து சிங்கத்தின் கால்கள் போல அமைக்கப்பட்ட பகுதிக்கு வந்து சேர்ந்தோம் அங்கே கொஞ்சம் இளைப்பாறினாள்.மலையின் மறுபக்கத்திற்கு போய் காடாக இருந்த இடத்தைப்பார்த்தோம் அந்த ஓடை மாதிரியான சுவரோரம் இருந்த இளம் சிங்கள காதல் ஜோடியை கவனித்தவள் என்னை நோக்கி கண்களில் எதையோ சொன்னாள்,அவள் என்ன சொன்னாள் அல்லது நினைத்தாள் என்பது உங்களுக்கு தேவையில்லாதது.

முகட்டுக்கு செல்கிற ஏணிப்படிகளில் ஏறி முடிக்கும் வரை கவனம் என்கிற வார்ததைகளைத்தவிர வேறெதும் சொல்லாமல் வந்தவள் ஏறி முடிந்ததும் அங்கும் இங்கும் என ஓடி கொண்டாடினாள். ஏற்கனவே இரண்டு முறை பார்த்திருந்ததில் அவளுடைய சந்தோசங்களை கவனித்துக்கொண்டிருந்தேன் நான்...

காதல்,காதல்,காதல் என்று...
எனக்குள் இருக்கிற காதலை நான் என்னால் முடிந்தவரை சத்தமாக அந்த மலை முகட்டின் வெளியில் மொழிந்தேன்,அவள் என்னோடு கைகோர்த்துக்கொண்டாள்.காசியப்ப மன்னனின் நீர்தடாகத்தில் கை நனைத்துக்கொண்டோம்,அந்தக்கணங்களில் அந்தப்புரத்து தடாகத்தில் எங்கள் உயிர்கள் நனைந்திருந்தது.

அந்த மலையின் உச்சியில் புகைக்க வேண்டும் போலிருந்தது அதற்கு அவள் காரணமாயிருக்கலாம் அல்லது இனியந்த மலைக்கு வருகிற சந்தர்ப்பம் எனக்கு இருக்குமோ என்பது காரணமாயிருக்கலாம்.நான் புகைப்பேன் என்பது மற்றவார்களுக்கு தெரியாததாய் அல்லது பிடிக்காததாய் இருந்தது. நான் ஒரு சிகரெட்டை இழுத்து முடிக்கும் வரை அருகிலேயே நின்றாள். மற்றவர்கள் ஏறி வரவும் எல்லோருமாய் புகைப்படங்கள எடுத்துக்கொண்டோம். இறங்கும் பொழுதும் கடைசியாகவே இறங்கினோம்.இறங்குவதற்கு முன்பொரு சிகரெட் வேண்டுமென கேட்டதில் பறித்து வைத்திருந்த பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை அனுமதித்தாள் இழுத்து முடிக்கும்வரை எதிரே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

இறங்கி முடிக்கையில் இன்னும் நெருங்கியிருந்தோம்.

மதிய உணவை சிகிரிய உணவகத்தில் எடுத்தோம்.அழகிய பெண்ணொருத்தி பரிமாறிய மதிய உணவும் பொழுதும் ரசனைக்குரியதாயிருந்தது.அவள் பேனையைக்கொழுவியிருந்த இடத்தை காட்டி இப்பொழுதெனக்கொரு பேனையாயிருப்பது பிடித்திருக்கிறதென்று அருகிலிருந்தவளிடம் கிசுகிசுத்தேன் யாருக்கும் தெரியமால் நறுக்கென்று கிள்ளினாள்.

அந்த இரவு முழுவதும் என்னோடு விழித்திருந்த அவள் பனி விழுகிற மல்லிகைப்பந்தலின் அடியில் நிலவொளியினை அணிந்திருந்தாள்.




மலைப்பயணங்கள் போவது சுவாரஸ்யமானது அதுவும் தோழிகளோடு போவது அழகிய சுவாரஸ்யம்.
___________________________________


இந்தக்தைகளை கேட்டுக்கொண்டிருந்தவள்,

"நீ சின்னப்பெடியன் எண்டெல்லோ நினைச்சன்" என்றாள்.
இப்பொழுதும் என்னை அப்படித்தான் நினைப்பதாக அவளது உதடுகள் காட்டிக்கொடுத்தன.

நான் சின்னப்பெடியனாய் இருப்பது என்னுடைய பலம், எல்லாத்தேவதைகளோடும் பழக முடிகிறது இந்த தோற்றத்தில்தான்.

"நீ..கூட என்னை அப்படி நம்பித்தானே வந்தாய்" என்கிற அவளது உண்மையை வெளிப்படுத்தினேன்.

இப்பவும் அப்படித்தான் நினைக்கிறேன் அனால் உனக்கு முத்தங்களைப்பற்றி தெரிந்திருக்கிறதென்பதை முதல்நாள் இரவே அறிந்துகொண்டேன்.

"கலங்கடிக்கிறாய்" என்றாள் கிறக்கமாக.

"இப்பொழுது என்னை ஒரு முத்தத்துக்கு அனுமதி"

"அவசரப்படுகிறாய் டியர்" என்றவள் கொங்கைகள் அதிர சிரித்தாள்.

இரண்டாவது குவளையில் ஐஸ் கட்டிகளை போட்டுக்கொண்டு அணிந்திருந்த குளிர்ச்சட்டையை களற்றி கதிரையில் போட்டாள் அது ஒரு தேவதை தன் சிறகுகளை களைவதை ஒத்திருந்தது.மெழுகுதிரி வெளிச்சத்தில் சிவப்பு நிற மதுரச குவளைகளின் பின்னணியில் தெரிந்த அவளது வெளிர் நீல நிற ஆடைகள் மறைத்த மார்புகளின் தொடக்கம், இருக்கிற போதையை என்னவோ செய்தது.

"இப்ப தர்றியா இல்லையா" என்றேன் மறுபடியும்,

"என்னடா சத்தம்போடுறாய்"

'இப்ப இல்லையெண்டால் இண்டைக்கிரவு உன்னை கொன்டிருவன்"

"நீ செய்யுறதும் செய்யாமலிருக்கிறதும் கொல்லுறது மாதிரித்தான்டா இருக்கு,கடும் ஆளடா நீ.."

என்றாள் ஐஸ்கட்டிகளும் மார்புகளும் தழும்ப!

நான் நிதானமாய் சிரித்துக்கொண்டே பாதி சிகரெட்டை அவளிடம் கொடுத்தேன்...

சிகரெட்டை வாங்குவதற்கு முன்னே குனிந்தவள்
"உனக்கொன்று தெரியுமா..நான் எந்தவொரு ஆம்பிளைட்டையும் சிகரெட் வாயங்கியது கிடையாது நீதான் முதல் ஆள்"என்று உதடுகளைக்குவித்து சிரித்தாள்,சிரிக்கும்பொழுதில் அதிர்கிற அவளை கவனிக்காமல் இருக்க முடிவதில்லை.

நானும் யாருக்கும் சிகரெட்டை கொடுத்தில்லை உனக்குத்தான் கொடுத்திருக்கிறேன் என்றேன்.

"இந்தப்பொய்யை என்னட்டை சொல்லலாதை கள்ளா, நீ ஆரெண்டு எனக்கு தெரியும்"

சரி நான் யாரென்பது அவளுக்கு தெரியும் உங்களுக்கு தெரியுமா...

சில இரவுகளை என்னோடு கொண்டாடிய அவளுக்கே என்னை முழுவதும் தெரியாதெனும்பொழுது உங்களுக்கெப்படி தெரியும்?

அவளுக்கு என்னைப்பற்றி தெரியாது.

அவளைப்பற்றி எனக்கு தெரியும்.

பெயர்:பிரிஜ்ஜெட் கிருபாநந்தினி (Bridget Kirubananthini)

இடம்:திருகோணமலை..

வயது:என்னை விட ஏழுவயது அதிகம்

தொழில்: அழகான தொழில்.

கொஞ்சம் திரண்ட தேகம், திணறடிக்கிற அழகு, குறைந்த பட்ச போலித்தனம்,எதுவும் செய்கிற தைரியம், இயல்பாய் நிகழ்த்துகிற காமம் எனக்கே கற்றுக்கொடுப்பாள் என்பதாக முயங்குவாள்.கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன் என்றால் போடா சின்னப்பெடியா என்று சிரிப்பாள்.

நினைவில் நிக்கிற அழகி
கனவில் வருகிற கண்கள்
கருஞ்சந்தன தேகநிறம்
மனோவசியம் செய்கிற வாசனை
என எனது மொழியில் தேவதையாயிருந்தாள்.

இவ்வளவும் போதுமானதாயிருக்கிறது இவளைப்பற்றி!

இப்பொழுது இரண்டாவது போத்தலின் முடிவுக்கு முன்னேறிக்கொண்டிருக்கிற இவளும் நானும் இருப்பது St.Andrews Hotel- Nuwara Eliya,Sri Lanka.இந்த விடுதி எனக்கு மிக பிடித்தமானதாய் இருந்தது, மிருணாளினி என்கிற முதல் தேவதையையும் இங்கே வந்துதான் அவளது மலைக்கு அனுப்பி வைத்திருந்தேன்.இது பிரிட்டிஷ் காலத்து பங்களாக்களில் ஒன்று, ஜெட்விங்(Jetwing)நிறுவனம் இதனை விடுதியாக்கி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது. ஆவி பறக்க தருகிற கறுப்புத்தேநீரும்(Black Tea), உலகத்து வைன் வகையெல்லாம் கிடைக்கிற வசதியும் இந்த விடுதியில் என்னைக்கவர்ந்தவை.

Bridget போதையில் என்னை கிறங்கடிக்கத்தொடங்கினாள்...போதும் என்பதாய் தோன்றியது-தேவதைகள் அதிகம் குடிக்கக்கூடாது.

லேசான ஆட்டத்தோடு அழகுகள் வழிய நின்றவளை கைத்தாங்கலாய் அணைத்துக்கொண்டேன்.
மெதுமெதுவென்கிற தேகம் தளைய " ஹே சின்னப்பெடியா என்னைக்கொண்டு போடா" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள்.

நான் பீதுருதாலகாலவில் ஏறத்தொடங்கினேன்.

"ஏய் என்னைக்கொண்டு போடா" சிணுங்கினாள்...

வெளிச்சமே விழாத மரங்களில் மறைவிலிருந்த பாறையில் அவளை அமரவைத்தேன்

அப்படியே படுத்தவள் "ஒன்றா ரெண்டா ஆசைகள்..." என ராகமாய் முணுமுணுத்தாள். இந்தப்பாடல் தனக்கு பிடிக்கும் என்பதாய் பதினொரு நாட்களில் எழுபத்தொன்பது முறை சொல்லியிருந்தாள்.

பாறையில் அவளொரு தேவதையாய் கிடந்தாள்!

எனக்கு மழை விட்ட இரவில் நதியில் மிதக்கிற தேவதைகள் நினவுக்கு வந்து போயினர்.

நான் நுழைந்து வெளியேறுகிற கலையில் அவள் மீது பரவ ஆரம்பித்தேன்...

விடிகையில் Bridget காணாமல் போயிருந்தாள்.

அவள் விட்டுப்போன அவளது மார்புகளுக்கு நடுவில் ஆடிய நீல நிறக்கண்கள் இப்பொழுது என் கழுத்திலிருக்கிறது.நான் பீதுருதாலகாலவிலிருந்து இறங்கத்தொடங்கினேன்.




உரையாடல் அமைப்பின் சிறுகதைப்போட்டிக்காக இணைக்கப்டுள்ளது.

37 comments:

ஆயில்யன் said...

ஒ இதுதான் மேஜிக்கல் ரியலிசமா ரைட்டு !:)

ஆயில்யன் said...

//பெண்களைப்போலவே வளைவுகளும் அழகுகளும் ரகசியங்களும் என பொதிந்து கிடக்கிறது மலை, அந்த மலையை அதிசயங்கள் நிரம்பிய பெண்ணொருத்தியோடு ஏறுவதென்பது அற்புதமான அனுபவமாகத்தான் இருக்க முடியும்/

ரசிகனய்யா நீர்! அருமையான வர்ணிப்பு & பீலிங்க் :)

ஆயில்யன் said...

//பிந்திய குறிப்பு : அவள் கல்யாணமானவளென்பது எனக்கு தெரிந்திருந்தது./

அப்பொழுதும் அது பிந்திய குறிப்பாக இருந்ததா அல்லது முந்திய குறிப்பா கவிஞரே....?

ஆயில்யன் said...

//இவளுக்காகவே நாட்டுச்சரக்கு நச்சுன்னுதான் இருக்கு என்கிற பாடல்போன்ற ஒன்றை பயணத்தின்போது ஏழு தடவைகள் பாடியிருப்பேன்//
ரசித்தேன்! பாடலை அல்ல அதை பாடி கரீக்ட் பண்ண நினைச்ச உம் திறமையினை...!

ஆயில்யன் said...

//இதையெல்லாம் மறந்து விடுவோம் //

சரி!

ஆயில்யன் said...

//சூழல் கொஞ்சம் இயல்புக்கு மாறிவிட கலகலப்பாய் இருந்தது அப்பொழுது யாரவாது பாடலாமே என்கையில் அவள் என்னை நோக்கி விழிகளை உயர்த்தினாள் எனக்கு மட்டும் புரிகிற மொழியில் பாடென்றாள். வழிகளில் பாடமுடியுமென்பதை அவள் அப்பொழுதிலிருந்து அந்த நாட்கள் முழுவதும் அடிக்கடி உணர்த்திக்கொண்டிருந்தாள்./


இதையெல்லாம் உங்க அப்பா உணர்ந்துக்கொண்டிருந்தாரா தம்பி...?

ஆயில்யன் said...

//என்னை நோக்கி கண்களில் எதையோ சொன்னாள் அவள் என்ன சொன்னாள் அல்லது நினைத்தாள் என்பது உங்களுக்கு தேவையில்லாதது.//

ஒ.கே ஒ.கே கான்பிடென்ஷியல் விசயங்களில் எங்களுக்கு கவனம் போக தேவையில்ல் யூ கண்டினியூ!

ஆயில்யன் said...

//அந்த இரவு முழுவதும் என்னோடு விளித்திருந்த அவள் பனி விழுகிற மல்லிகைப்பந்தலின் அடியில் நிலவொளியினை அணிந்திருந்தாள்.//
விழித்திருந்த மாற்றினால் வியக்கவைக்கும் வர்ணிப்பு வாவ்!

தமிழன்-கறுப்பி... said...

எழுத ஆரம்பிக்கும் பொழுது கவிதை போல சில சொற்கள் மட்டுமே என்னிடம் இருந்தது ஒரே இரவில் இவ்வளவு நீளமாய் மாறும் என நான் எதிர்பார்க்கவில்லை...

நீளமான கொடுமைக்கு கோச்சுக்காதிங்க...

;)

Thamiz Priyan said...

கலக்கிட்ட தம்பி! ஆனா இந்த சின்ன வ்யசுல இம்புட்டு அனுபவம் இருக்கக் கூடாது.. ;-))

Thamiz Priyan said...

ரசணைக்காரனய்யா.. நீ.. வர்ணனைகள் அபாரம்.

பனையூரான் said...

டேய்.....டேய்.....டேய்.................

தமிழன்-கறுப்பி... said...

இதை மெயிக்கல் ரியலிஸம் என்றுதான் முன்னர் வகைப்படுத்தியிருந்தேன்.எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி!
இன்னமும் மலையிலிருந்து இறங்காமல் இருக்கிறது மனோநிலை ஆகவேஆறுதலாக பதில் சொல்கிறேன்.

சென்ஷி said...

:-)

வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா!

மங்களூர் சிவா said...

அசத்தல்!
:)

நிஜமா நல்லவன் said...

கலக்கிட்ட தம்பி! ஆனா இந்த சின்ன வ்யசுல இம்புட்டு அனுபவம் இருக்கக் கூடாது.. ;-))

☼ வெயிலான் said...

எங்களையும் மலைக்கு கூட்டிச் சென்று விட்டீர்கள்.

thamizhparavai said...

படிச்சேன்.. போதைதான் ஏறுது...
மிருணாளினி பிடிச்சிருந்தது...
இந்தக் கதை வகை (மாய யதார்த்தம்..?!) எனக்குப் புதிது...
வார்த்தை விவரிப்புகள் அழகு...
இன்னொரு முறை படிச்சிட்டு வந்து சொல்றேன்..
இப்போதைக்கு வாழ்த்துக்கள்...

சந்தனமுல்லை said...

நல்லா இருந்தது உங்கள் விவரிப்புகளும் படங்களும்! மிக அழகான தமிழ் - எழுத்து நடை! ரசித்தேன்!

சந்தனமுல்லை said...

// ஆயில்யன் said...

//பிந்திய குறிப்பு : அவள் கல்யாணமானவளென்பது எனக்கு தெரிந்திருந்தது./

அப்பொழுதும் அது பிந்திய குறிப்பாக இருந்ததா அல்லது முந்திய குறிப்பா கவிஞரே....?//

LOL!

சந்தனமுல்லை said...

// ஆயில்யன் said...

//சூழல் கொஞ்சம் இயல்புக்கு மாறிவிட கலகலப்பாய் இருந்தது அப்பொழுது யாரவாது பாடலாமே என்கையில் அவள் என்னை நோக்கி விழிகளை உயர்த்தினாள் எனக்கு மட்டும் புரிகிற மொழியில் பாடென்றாள். வழிகளில் பாடமுடியுமென்பதை அவள் அப்பொழுதிலிருந்து அந்த நாட்கள் முழுவதும் அடிக்கடி உணர்த்திக்கொண்டிருந்தாள்./


இதையெல்லாம் உங்க அப்பா உணர்ந்துக்கொண்டிருந்தாரா தம்பி...?//

:-))))

சந்தனமுல்லை said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

Thamiz Priyan said...

தம்பீஈஈஈஈஈஈஈஈஈஈ.. ஜெயிச்சுட்டய்யா.. நம்ம குரூப்பு மானத்தைக் காப்பாத்த வந்த தங்கமே! நீ வாழ்க! நின் தமிழ் வாழ்க!

உரையாடல் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

(மொத்தம் 8 பேர் இருக்கோம். பார்ட்டி வைக்கனும். 5000 ரூபாய் எடுத்து ரெடியா வைய்யி)

வெண்பூ said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் தமிழன்‍ கறுப்பி..

முபாரக் said...

வெற்றி பெற்றுவிட்டீர்கள். வாழ்த்துகள்

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள்.

ரெஜோ said...

வாழ்த்துகள் நண்பரே ! :-)

thamizhparavai said...

வாழ்த்துக்கள் நண்பரே...

RV said...

உரையாடல் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

ஜமாலன் said...

கதையை படிக்கவில்லை. வெற்றிபெற்றதற்க வாழ்த்துக்கள். படித்துவிட்டு கதைப்பற்றி பிறகு.

ரௌத்ரன் said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தமிழன் :)

தமிழன்-கறுப்பி... said...

நன்றி நண்பர்களே வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும்.

யாத்ரா said...

ரொம்ப நல்ல கதை தமிழ், வாழ்த்துகள்.

Beski said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
---
பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லை எனக்கு.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்! சரளமான எழுத்து நடை பிடித்திருக்கிறது.

-ப்ரியமுடன்
சேரல்

அருண்மொழிவர்மன் said...

அற்புதம் தமிழன் கறுப்பி,
இன்று தான் இதை வாசித்தேன்... ஒவொரு சொல்லும் காதலுரசம் நிரம்பி வழிகின்றது.

இவ்வளவு ரசனை பூர்வமாக...... கொடுத்து வச்சிருக்கணும்

"உழவன்" "Uzhavan" said...

பரிசு பெற்றமைக்கு என் இனிய வாழ்த்துக்கள் :-)