Sunday, June 15, 2008

தந்தையர் தின வாழ்த்துக்கள்...

அப்பா...

பொதுவாக அப்பாக்களைப்பற்றி சொல்லக்கூடிய அளவுக்கு கூட நான் என்னுடைய அப்பாவைப்பபற்றி சொல்ல முடியாத நிலைதான் எனக்கிருக்கிறது என்பது என்னவோ கசப்பான உண்மையாகிவிட்டது.
ம்ம்ம்... வேறென்ன சொல்ல நான் பிறந்து ஒரு வருடத்துக்குள் வேலை நிமித்தம் வெளிநாடு போய் விட்ட அப்பா எனக்கு பத்து வயதாகி இருக்கும் பொழுது நாடு திரும்பினார் உயர் ரத்த அழுத்தம் காரணமாக பாரிசவாதம் ஏற்பட்டு முற்று முழுதாக என் அப்பாவைப்பற்றிய எனக்குத்தெரிந்த தோற்றத்துக்கும் நான் உருவகித்திருந்த கற்பனை வடிவுக்கும் முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தோடு!


அங்கிருந்து ஆரம்பமாகியது எனக்கும் அப்பாவுக்குமான இடைவெளியின் தூரம். விபரம் தெரிந்து பேசத்தொடங்குகிற நாட்களில் விடுமுறையில் மட்டும் வந்து போன அப்பாவோடு என்னால் விடுமுறையின் கொண்டாட்டங்களை மட்டுமே காணமுடிந்திருந்தது....

இப்படி இருக்க பத்து வயதில் நானாக சில விடயங்களை பேசுவதற்கும் செயற்படுவதற்கும் சிந்தனைகள் மாறும் நேரத்தில் வந்திறங்கிய அப்பாவோடு பேசுவதே முடியாத காரியமாக இருந்தது பேச முடியாத, நடக்க முடியாத, மந்தமான நிதானமுள்ள நிலையில்தான் அப்பா வந்திறங்கினார் ஒரு பின்னிரவில்...அதற்கு பிறகு அப்பாவுக்கான தொடர் வைத்திய சிகிச்சைகளும் அப்பாவின் இயலாமையும் என்னை அவரிடத்தில் சேர்க்காமலே இருந்தது எனக்கும் அவருக்குமான தருணங்களை குறைத்துக்கொண்டே இருந்தது.

என் வயதின் நிமித்தம்,சின்னவன் என்கிற செல்லமும் அம்மாவிடம் நிறையவே இருந்தது அத்தோடு முன்பு நான் சொன்னது போல பிறந்ததிலிருந்து எனக்கு நல்ல நட்பாகவே அம்மா இருந்ததால் அவரோடு மட்டுமே என்பொழுதுகள் போயிற்று...

அந்த வயதில் நாம் அன்றாட வாழ்க்கைக்கு பாடு படுகிறோம் என்பதையோ அல்லது அப்பா செயலிழந்து வந்திருக்கிறார் என்பதையோ என்னை பாதிக்க கூடாது என்று நினைத்தார்களோ என்னவோ எனக்கும் அது பெரிதாக தெரியவில்லை அப்பாவோடும் நெருக்கம் இருக்கவில்லை...




அப்பொழுதில் புதிய பாடசாலை மாற்றங்கள் புதிய நண்பர்கள், புதிய போட்டியாளர்கள், புதிய மாலை நேர வகுப்புகள், புதிய வேகம் என என் நாட்கள் நகர்ந்து கொண்டேயிருந்தது,அத்தோடு நாங்கள் கொஞ்சம் பெரிய குடும்பம் என்பதாலும் சில வசதிகள் கருதியும் எங்கள் வீட்டுக்கு எதிரே இருந்த வீட்டையும் வாடகைக்கு எடுத்து பாவித்துக்கொண்டிருந்தோம்; நான் அந்த வீட்டில்தான் இருந்தேன் சாப்பாடு, மற்றும் சில தேவைகளுக்காவும் மட்டுமே எங்கள் வீட்டுக்கு போய் வருவேன். அதுவும் நான் அப்பாவோடு அதிகம் நெருங்காமல் இருப்பதற்கு ஒரு காரணமாகலாமோ தெரியாது ஆனால் சின்ன வயதிலிருந்தே அவரோடு அதிகம் பரிச்சயம் இல்லாதததும் சிறு வயதில் அவருடைய கண்டிப்புகளும் (எனக்கல்ல அக்காக்களுக்கு எல்லோருக்கும் பயம் ஒருத்தரை கூப்பிட்டால் எல்லோரும் வந்து வரிசையாக நிப்போம் ஆனால் எனக்கென்னவோ பயம் என்பதை விட கோபம் தான் இருந்தது என நினைக்கிறேன் அதற்கு நான் ஒரே ஒரு ஆம்பிளைப்பிள்ளை என்கிற ஒரு சலுகையும் கடைக்குட்டி என்கிற செல்லமும் காரணமாயிருக்கலாம்...) இயல்பாகவே எனக்கிருந்த இலகுவான தன்மையும் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாத குணமும் (ஆனால் என்னவோ தெரியவில்லை நான் சில விடயங்களில் பலவீனமானவனாகவே இருக்கிறேன் இன்னமும்) அந்த நாட்களின் கடினத்தை உணர்ந்திருந்தும் அவை எனக்குள் பதியவில்லை அதுவும் ஒரு வகையில் நன்மைக்கே. வாழ்ககையின் வலிகள் வயதின் தன்மையில் காணாமல் போயிற்று.அதைப்போலவே அந்த நேரத்தில் அப்பாவை பற்றிய, அவரின் நாளாந்தம் பற்றிய நினைவுகள் என்னிடம் இல்லாமலே போயிற்று எனலாம்...
அப்படி நகர்ந்து விட்ட நாட்களில் சட சட வென்று வருடங்கள் ஓடி விட்டிருந்தது, பதின்ம வயதுகளின் புது வேகத்தோடு நாட்கள் நகர ஆரம்பித்திருந்தது இதற்கிடையில் அப்பா வந்த ஒரு வருடத்திலேயே தொடர்சிகிச்சை மூலம் தன்னுடைய காரியங்களை தானாக நிறைவேற்றுவதற்கு தயாராகியிருந்தார் அது வரையும் அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார்.
வாழ்க்கை கொஞ்சம் கஷ்டங்களில் இருந்து தெளியத்தொடங்கி எங்கள் வீட்டின் நாட்கள் சீராக அசையத்தொடங்கி இருந்தது. இதற்கு முந்தைய நாட்களின் வலிகள் இந்த நேரத்தில் உங்களுக்கு தேவையில்லை என்பதனால் தவிர்த்திருக்கிறேன்,அப்படியே நகர்கின்ற நாட்களோடு என்னுடைய நாட்களும் நகர்திருந்தது அப்பாவுக்கும் எனக்குமான தருணங்கள் இல்லாமலே;
ஒரே வீட்டில் இருந்தாலும் அவருக்கும் எனக்குமான பேச்சு வார்த்தை என்பது வழிப்போக்கன் ஒருவனை நேரம் கேட்பது போலத்தான் இருந்திருக்கிறதென நினைக்கிறேன்.
இருந்தாலும் ஏதோ ஒரு புரிதல் - மரியாதை அவரிடத்தில் எனக்கிருந்தது என்பது; எனக்கும் வீட்டுக்காரருக்குமான பிரச்சனையொன்றின் பொழுதில் தெரிந்தது அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் அது எனக்கு தோன்றியிரக்கிறது அதன் பிறகுதான் நான் வீட்டுக்கு பிரச்சனைக்கு உரியவனாகிப்போனேனே! வாழ்க்கை திசைகெட்டிருந்தது பதினமங்களின் இறுதியில் அப்பொழுதும் அப்பாவோடான எனக்குரிய நேரமும் நெருக்கமும் இல்லாமலே இருந்தது...நாட்கள் போய்க்கொண்டிருக்க எனக்கே என்னை வெறுத்துப்போக தொடங்கியிருந்த நாட்களில் ஒருவாறு தட்டுத்தடுமாறி ஒரு தேவதையின் சாபத்தோடு வேலை செய்ய ஆரம்பித்திருந்தேன்...

அதன் பிறகு விடுமுறைக்கு ஊருக்கு போகும் நாட்களில் அப்பாவோடு கொஞ்சம் நெருக்மானதாகத்தான் நினைக்கிறேன். அந்த நாட்களில் நான் அப்பாவோடு பேச ஆரம்பித்திருந்தேன் அல்லது அப்பா என்னோடு கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தார்... அப்பாவைப்பற்றி அம்மா மற்றும சிலர் சொல்லி பல விடயங்கள் தெரிந்திருந்தாலும் அப்பாவைப்பற்றியம் அவருடைய கடந்தகாலம் பற்றியும் அவரிடமே நிறையப்பேச வேண்டும் என்ற நினைத்திருந்தேன், அனால் இன்றுவரை அது நிகழவில்லை, அதற்கான சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை...


அப்பாவோடு உட்கார்ந்து பேசமுடியும் என்கிற பக்குவம் எனக்கு வந்திருக்கையில் அப்பாவை விட்டு நிறைய தூரத்திற்கு வந்து விட்டேன்...அறுபத்தொரு வருடங்கள் வாழ்ந்து விட்ட அவருக்கு என்னுடைய இந்த இருபத்தாறு வருடங்களில் எத்தனை முறை பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருப்பேன் என நினைக்கையில் வெட்கப்படுகிறேன் இதுவரையும் மொத்தமாக எத்தனை வார்த்தைகள் பேசியிருப்பேன் என்பதை எண்ணி விட முடியும் என நினைக்கையில் குற்றவுணர்ச்சி தண்டனை இல்லாமல் தண்டிக்கிறது...இப்பொழுதும் அவரோடு பேச முடியாத சூழ்நிலைதான் என்கிருக்கிறது மறுபடியும் அப்பா தன்னுடைய காரியங்களை கவனிக்க முடியாதவராகி சில மாதங்களாகிறது...திருத்தமாக வார்த்தைகளை உச்சரிக்க முடியாத நிலமையில் இருக்கிறார் என்பதும் நான் செய்த தவறுகளுக்கான எனக்குரிய தண்டனை என்றே நினைக்கிறேன்.ஏதோ ஒரு ஏக்கம் எனக்கு நிரந்தரமாகவே இருக்கப்போவதைப்போல தவிப்பொன்று இருந்து கொண்டே இருக்கிறது என்னிடம்.


அப்பா...!
இனியொரு ஜென்மம் என்பதில்
எனக்கில்லை நம்பிக்கை
உங்களுக்கிருந்தால்...
நீங்கள் எனக்கு மகனாக
பிறந்து விடுங்கள் இல்லையேல்;
நான் இன்னும் கொஞ்சம்
வாழவேண்டும் உங்களோடு...


அவருக்கு முதல் தந்தையர் தின வாழ்த்துச்சொல்லுகிற இந்த நாளில் உலகத்தின் அப்பாக்கள் எல்லோருக்கும் என்னுடைய தந்தையர் தின வாழ்த்துக்கள்...

24 comments:

Anonymous said...

Excellent post. I lost my appa less than 2 years ago. I wish I talked with him more too. Please contact him soon and talk with him freely.Don't miss the opportunity like I did.Take care.

Ravi.

Divya said...

அப்பாவின் நினைவை அதிகப்படுத்தியது தங்களின் பதிவு.

தந்தையர் தின வாழ்த்துக்கள்!

Divya said...

அன்னையர் தின சிறப்பு பதிவிட்டிரூந்தீர்கள்.......தந்தையர் தினத்திற்கும் பதிவிட்டிருப்பீங்களா என ஆவலுன உங்கள் வலைதளம் வந்தேன்....ஏமாற்றமால் பதிவிட்டதிற்கு நன்றி தமிழன்!!

Divya said...

\அப்பா...!இனியொரு ஜென்மம் என்பதில் எனக்கில்லை நம்பிக்கை உங்களுக்கிருந்தால்... நீங்கள் எனக்கு மகனாக பிறந்து விடுங்கள் இல்லையேல்;நான் இன்னும் கொஞ்சம் வாழவேண்டும் உங்களோடு... \\

நான் இன்னும் கொஞ்சம் வாழவேண்டும் உங்களோடு......என்ற ஒரே வரியில் மனதினை திறந்து காட்டிவிட்டீர்கள்.

நெகிழ்ந்துப்போனேன் இவ்வரிகளை படிக்கையில்!

தமிழன்-கறுப்பி... said...

ரவி சொன்னது...

///Excellent post. I lost my appa less than 2 years ago. I wish I talked with him more too. Please contact him soon and talk with him freely.Don't miss the opportunity like I did.Take care.

Ravi.///

வருகைக்கம் உணர்வுகளுக்கும் நன்றி ரவி நிச்சயமாக....
அப்பாவோடு அனேகமான மகன்மாருக்கு இருக்கிற இந்த இடைவெளிகள் பின்நாளில் ஒரு பாரமாகி விடுகிறது...

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா சொன்னது...

///அப்பாவின் நினைவை அதிகப்படுத்தியது தங்களின் பதிவு.

தந்தையர் தின வாழ்த்துக்கள்///

அப்பாவின் நினைவுகள் கொஞ்சம் கனமானவைதான் இல்லையா நன்றி...

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா சொன்னது...

///அன்னையர் தின சிறப்பு பதிவிட்டிரூந்தீர்கள்.......தந்தையர் தினத்திற்கும் பதிவிட்டிருப்பீங்களா என ஆவலுன உங்கள் வலைதளம் வந்தேன்....ஏமாற்றமால் பதிவிட்டதிற்கு நன்றி தமிழன்!!///

சிறப்பு பதிவெல்லாம் இல்லை திவ்யா இணையத்துக்கு வந்து உட்கார்ந்தபோதுதான் பார்த்தேன் இன்றைக்கு தந்தையர் தினம் வாழத்துப்பதிவொன்று போடலாம் என்று நினைத்து அப்பாஎன்று தட்டச்சி மூன்று புள்ளிகளும் வைத்து விட்டு என்ன எழுதவென்று யோசித்துக்கொண்டே மனதில் வந்ததெல்லாம் அப்படியே தட்டச்சி முடித்து விட்டு படங்கள் தேடி எடுத்தேன் ..

பதிவாக போடுவதற்கு முன்னர் ஒரு முறைவாசித்தேன் பதிவாக போட்ட பிறகு தான் பார்த்தேன் கிட்டத்தட்ட 41 எழுத்துப்பிழைகள் அந்த அளவுக்கு அப்பாவைப்பற்றி நிறைய யோசித்தேன் போல இருக்கிறது... இன்னும் இருக்கலாம் பார்த்து சொல்லுங்கள்...

நன்றி திவ்யா உங்கள் தொடர் வருகைக்கும் பகிர்வுகளுக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

திவ்யா சொன்னது...

///அப்பா...!இனியொரு ஜென்மம் என்பதில் எனக்கில்லை நம்பிக்கை உங்களுக்கிருந்தால்... நீங்கள் எனக்கு மகனாக பிறந்து விடுங்கள் இல்லையேல்;நான் இன்னும் கொஞ்சம் வாழவேண்டும் உங்களோடு... \\

நான் இன்னும் கொஞ்சம் வாழவேண்டும் உங்களோடு......என்ற ஒரே வரியில் மனதினை திறந்து காட்டிவிட்டீர்கள்.

நெகிழ்ந்துப்போனேன் இவ்வரிகளை படிக்கையில்!///

ம்ம்ம்...

நேசிக்கிற உறவுகளின் நினைவுகள் நம்மை நெகிழச்செய்வதில் ஆச்சரியம் ஏதுமில்லையே நட்பே...!

நன்றி தோழி...

ஆயில்யன் said...

//அறுபத்தொரு வருடங்கள் வாழ்ந்து விட்ட அவருக்கு என்னுடைய இந்த இருபத்தாறு வருடங்களில் எத்தனை முறை பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருப்பேன் என நினைக்கையில் வெட்கப்படுகிறேன் //

:(( என் மனதிலும் குறுகுறுக்க வைக்கும் எண்ணங்களில் இதுவும் உண்டு!

தந்தையர் தின வாழ்த்துக்களோடு...!

தமிழ் said...

/அப்பா...!
இனியொரு ஜென்மம் என்பதில்
எனக்கில்லை நம்பிக்கை
உங்களுக்கிருந்தால்...
நீங்கள் எனக்கு மகனாக
பிறந்து விடுங்கள் இல்லையேல்;
நான் இன்னும் கொஞ்சம்
வாழவேண்டும் உங்களோடு... /

அழகான வரிகள்


தந்தையர் தின வாழ்த்துக்கள்

Shwetha Robert said...

Hai Tamilan,
felt really sad to read that you have missed the oppurtunity of having a blessed time with your Dad:(

the final peom touched my heart.

புகழன் said...

பதிவு ரெம்பவே பெருசா இருக்கு. இன்னொரு நாள் படித்து விட்டு சொல்கிறேன்.

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் சொன்னது...

\\\//அறுபத்தொரு வருடங்கள் வாழ்ந்து விட்ட அவருக்கு என்னுடைய இந்த இருபத்தாறு வருடங்களில் எத்தனை முறை பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருப்பேன் என நினைக்கையில் வெட்கப்படுகிறேன் //

:(( என் மனதிலும் குறுகுறுக்க வைக்கும் எண்ணங்களில் இதுவும் உண்டு!

தந்தையர் தின வாழ்த்துக்களோடு...!///

என்ன செய்ய ஆயில்யன் அந்த நேரங்களில் அது தெரிவதில்லை..

நன்றி வருகைக்கும் பகிர்வுக்கும்...
வாழ்த்துக்களுக்கு நன்றி

தமிழன்-கறுப்பி... said...

திகழ்மிளிர் சொன்னது...

\\\/அப்பா...!
இனியொரு ஜென்மம் என்பதில்
எனக்கில்லை நம்பிக்கை
உங்களுக்கிருந்தால்...
நீங்கள் எனக்கு மகனாக
பிறந்து விடுங்கள் இல்லையேல்;
நான் இன்னும் கொஞ்சம்
வாழவேண்டும் உங்களோடு... /

அழகான வரிகள்
தந்தையர் தின வாழ்த்துக்கள்///

வருக திகழ்மிளிர்!
நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்...

தமிழன்-கறுப்பி... said...

ஷ்வேதா சொன்னது...

///Hai Tamilan,
felt really sad to read that you have missed the oppurtunity of having a blessed time with your Dad:(

the final peom touched my heart.///

ம்ம்ம்....
நாம் நேசிக்கிறவர்களின் நினைவுகள் நெஞ்சைத்தொடுபவைதானே ஷ்வேதா...

நன்றி...

தமிழன்-கறுப்பி... said...

புகழன் சொன்னது...

///பதிவு ரெம்பவே பெருசா இருக்கு. இன்னொரு நாள் படித்து விட்டு சொல்கிறேன்///

???

வாங்க புகழன்.. பரவாயில்லை ஆறுதலா படிச்சு சொல்லுங்க...
பதிவெல்லாம் பெரிசு கிடையாது படங்கள் போட்டதாலதான் பெரிசா தெரியுதுன்னு நினைக்கிறேன்...

Kumiththa said...

The last poem was really touching...

கோவை விஜய் said...

தமிழ் வலைப் பதிவுலக

சான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்

என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.

புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய

டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.

எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட

அன்புகளுமிய அன்பர்கள்

திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்

அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி

என்றும் உங்கள்
விஜய்
கோவை.

http://pugaippezhai.blogspot.com

தமிழன்-கறுப்பி... said...

///The last poem was really touching...///

நன்றி குமித்தா ...

தமிழன்-கறுப்பி... said...

///அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி

என்றும் உங்கள்
விஜய்
கோவை.

http://pugaippezhai.blogspot.com///

நன்றி விஜய் தொடர்ந்து எழுதுங்க அடிக்கடி வாங்க...

ஹேமா said...

உங்கள் மனம் இப்போதான் பக்குவப் பட்டிருக்கிறது.நிச்சயம் அப்பாவை ஒரு தரம் போய் பார்த்து வாருங்கள்.மனசு அமைதியாகும்.எம் முன் நித்தமும் நடமாடும் தெய்வங்கள் அப்பாவும் அம்மாவும்.

தமிழன்-கறுப்பி... said...

///உங்கள் மனம் இப்போதான் பக்குவப் பட்டிருக்கிறது.நிச்சயம் அப்பாவை ஒரு தரம் போய் பார்த்து வாருங்கள்.மனசு அமைதியாகும்.எம் முன் நித்தமும் நடமாடும் தெய்வங்கள் அப்பாவும் அம்மாவும்///

கண்டிப்பாக ஹேமா நன்றி உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்...

ராமலக்ஷ்மி said...

//அப்பாவோடு உட்கார்ந்து பேசமுடியும் என்கிற பக்குவம் எனக்கு வந்திருக்கையில் அப்பாவை விட்டு நிறைய தூரத்திற்கு வந்து விட்டேன்...//

இந்த புரிதலும் உணந்தலுமான பக்குவம் இருபத்தாறிலாவது வந்து விட்டதே. பலர் இந்தப் பக்குவத்தை காலம் கடந்தே உணர்வதைக் கண்டிருக்கிறேன். நிறைய தூரத்துக்கு வந்து விட்டேன் என வருந்தாதீர்கள் தமிழன். மனதால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெருங்கி விடுங்கள். இன்னொரு ஜன்மத்தில் என்பதெல்லாம் கவிதைக்கே அழகு. வாழ்க்கைக்கு அழகு தவறென உணர்வதை உடனே சீர் செய்து வாழ்ந்து விடுவதுதான்.

தமிழன்-கறுப்பி... said...

ராமலக்ஷ்மி சொன்னது...

\\\//அப்பாவோடு உட்கார்ந்து பேசமுடியும் என்கிற பக்குவம் எனக்கு வந்திருக்கையில் அப்பாவை விட்டு நிறைய தூரத்திற்கு வந்து விட்டேன்...//

இந்த புரிதலும் உணந்தலுமான பக்குவம் இருபத்தாறிலாவது வந்து விட்டதே. பலர் இந்தப் பக்குவத்தை காலம் கடந்தே உணர்வதைக் கண்டிருக்கிறேன். நிறைய தூரத்துக்கு வந்து விட்டேன் என வருந்தாதீர்கள் தமிழன். மனதால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெருங்கி விடுங்கள். இன்னொரு ஜன்மத்தில் என்பதெல்லாம் கவிதைக்கே அழகு. வாழ்க்கைக்கு அழகு தவறென உணர்வதை உடனே சீர் செய்து வாழ்ந்து விடுவதுதான்.///

நிச்சயமாங்க, நன்றி உங்க வருகைக்கும் ஆதரவான அறிவுரைக்கும்...