
பூச்சி...
மல்லாந்து கிடக்கிற கரப்பான் பூச்சியின்
காற்றில் அலைகிற கால்களைப்போல
நூலிழைப்பிரியத்திற்காய் காத்திருக்கிறதெனது காலம்,
பழக்கமில்லாத தெருவில் உறுமுகிற நாயொன்றின்-
சாயலோடு என்னை பார்த்துக்கொண்டிருக்கிறது
சுவர் மீது விழித்திருக்கிற பல்லி,
அது அசையாமல் வைத்திருக்கிற வாலின் இலக்கு
எதிரேயிருக்கிற பூச்சியை குறி வைத்திருக்கிறது
விலகுதலுக்கு காத்திருக்கிறது பூச்சி,
வினாடிகளை சப்திக்கிற கடிகாரம்
பரலோகத்திலிருக்கிற பிதாக்களை எழுப்பிக்கொண்டிருக்கிறது
பல்லி பூச்சியை கவ்வுகிற வினாடியில்...
என்னை கடந்து போகிறது காலம்!
பின் குறிப்புகள்:
பல்லியும், பூச்சியும், கரப்பான்களும் பலவகைப் படிமங்களுக்கு அடிகோல்கிற விசயங்கள். மீதமிருக்கிற போதையோடு உறங்கப்போகையில் பல்லிகள் பற்றி எழுகிற சொற்களை எழுதி வைக்கத்தவறிவிடுகிறது எனது சோம்பல் அல்லது அலட்சியம்.
பல்லி முட்டைகள், கறுப்பு எச்சங்கள், அடிக்கடி பேசிச்செல்கிற பல்லிச்சத்தங்கள் என இருக்கும் என்னுடைய அறை. அப்பொழுதெல்லாம் பல்லிகளை கவனிப்பதற்கே நேரம் இருப்பதில்லை இப்பொழுது பல்லிகள் கனவில் வேறு வருகிறது ஆனால் பல்லிகளை காண்பதுதான் அரிதாயிருக்கிறது.மேசையிலிருக்கிற கொப்பிகளின் மேல் புணர்கிற பல்லிகளைக்கூட கவனித்ததில்லை என்னுடைய இரவுகள்.அந்த அளவுக்கு இரவுகளை களவாடியிருந்ததவள் நினைவுகள்.
கடந்த இரவில் குடித்துவைத்த தேத்தண்ணிக்கிளாசை சரிக்கிற சாம்பல் நிறப்பல்லி ஒவ்வொரு காலையிலும் என் கண்களில் படும். பல நாட்களை நான் கொஞ்சம் பெரிய அளவில் பயமுறுத்துவது போல் பார்க்கிற அந்த பல்லிக்கான புன்முறுவல் அல்லது வசையோடு தொடங்கியிருக்கிறேன்.ஆனால் ஒரு போதும் அதனை தாக்க முயன்றதில்லை.
இந்த சொற்களை எழுதிக்கொண்டிருக்கையில் கூட காதல், பெண்மை, காமம், குற்றவுணர்வு பயம், என நிறைய விசயங்கள் வந்து போயிற்று. இந்தசொற்களுனுக்கான புரிதல்களை உங்களிடமே விட்டுவிடுகிறேன்!
பல்லிகள் எப்பொழுதும் பேசுவவதில்லை.எப்பொழுதாவது பேசுகின்றன அப்பொழுது அவை பயமுறுத்தவும் செய்கின்றன.
தொடர்ந்து பல்லிகள் பேசுவதை கேட்கலாம்.
picture:
http://www.redbubble.com/