Thursday, February 14, 2019

குடியுரிமைக் கோப்பைகளுக்கான நிரம்புதல்...


இது ஒரு கதையெண்டு வையுங்கோவன். ஏன் நான் கதை எழுதக்கூடாதோ! உந்த நக்கல் சிரிப்புத்தானே வேண்டாம் எண்டுறது. நானும் ஒரு கதையை எழுதிப்பாக்கலாம் எண்டால் உப்பிடி ஏதாவது செய்தே என்னை முடக்கிறியள் ஆனால் இனியும் உதெல்லாம் சரிவராது நான் இந்தக்கதையை எழுதுறதெண்டே முடிவு பண்ணிட்டன்.



உண்மைல கதையில வாறவருக்கு; வராத ஒரு மொழிநடைதான் இந்த ஒரிஜினல் தமிழ் எண்டு நீங்கள் நம்புற ஒரு ரியுன். நான் இந்த ரியுன்ல இதைச்சொல்லுறதுக்கும் ஒரு 'கடியான' காரணமிருக்கு. உவருக்கு இப்ப நித்திரையைக் குழப்பிக்கொண்டிருக்கிற குட்டிக்கு உவர் கதைக்கிற பாஷை விளங்கிறது பெரும்பாடு, உவரும் இது தமிழ்தான், தமிழ்தான் எண்டு சொன்னாலும் அவள் உப்பிடி "லூசு மாதிரி கதைக்காதையுங்கோ" எண்டு உவரை கன தரம் கடுப்பாக்கிப்போட்டாள் ஆரம்பத்தில் அவள் இதை நீங்கள் கதைக்கிற தமிழ் கஷ்டமாயிருக்கெண்டு 'நைஸா' சொல்லிப்பாத்தாள்; அவர் அதை கவனிக்காமல் அலம்பியிருக்கிறார் அதுதான் அவள் விசயத்தை போட்டு உடைச்சுப்போட்டாள்.



சரி அதை விடுங்கோ இப்ப கதைக்கு வருவம்...

__________________________________________________





"அன்பின் ஆகக்குறைந்த நுழைவிடமாயிருந்தேன்

உன் விசுவரூபத்தோடு என்னில் நுழைகிறாய்

உன் முழுவதையும் தாங்கமுடியாதபடிக்கு

திணறிக்கொண்டிருக்கிறதெனது உயிர்..

எப்பொழுதென்னை கூடடைத்துக்கொண்டு போவாய்."



எதையுமே எழுதப்பிடிக்காமல் யாரோடும் பேசக்கிடைக்காமல் இருந்த இந்த நாட்களை எனக்கு நேரெதிரில் இருக்கிற ஒருத்தி குறுக்கிட்டிருக்கிறாள். எல்லா அன்பையும் போலவல்லாத ஒன்று அவளிடம் இருக்கிறது என்றாலும் யாழப்பாணத்தின் அத்தனை புலம்பெயர் கேள்விகளையும் சுமந்து கொண்டிருக்கிற பழைய புதிர்கள் நிறைந்த அவளிடம் எனக்கான பரவசங்கள் இருக்கிறது. அது மிகப்புதியதாய் இருக்கிறதில்தான் இதை எழுத வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. "புலம்பெயர் தமிழ் சமுதாயம் இன்னமும் 1990 களிலேயே இருக்கிறது" - "ஐரோப்பிய நடை முறைகளுடனும் பழைய யாழ்ப்பாணத்து திணித்தல்களுடனும் வளர்க்கப்படுகிற பிள்ளைகளின் மன முரண்கள்." - "தமிழ்சினிமாத் தனமான மனோநிலையில் இருக்கிற இளைய சமுகம்." என்கிற பழைய வசனங்களை எல்லாம் நானே திரும்பவும் நானே பேச வேண்டியிருக்கும் என்று நான் எதிர்பார்க்காத ஒரு சந்தர்ப்பத்தில் இந்த உறவுக்கான தொடக்கப்புள்ளியை இணைய உரையாடல் தளமொன்று ஏற்படுத்தித்தந்திருக்கிறது.


எப்பொழுதும் அன்பாயிருத்தல் தொடர்ச்சியாய் உருகுதல் என்பதெல்லாம் வெறும் வேசங்கள் ஆபாசங்கள் என்பதாய் சலம்பிக்கொண்டிருந்தவனை இடைவெளிகளுக்கு பிறகு குறுக்கிட்டிருக்கிற இந்த உறவு கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. அடிப்படையில் நான் அன்பை யாசிக்கிறவனாகவே இருந்திருக்கலாம். பற்றுதலுக்கான அலைதலே இந்த இருபத்தொன்பது வருடங்களாகவும் இருந்திருக்கலாம் காதல் குறித்த அதகளமான அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்த எனக்கு உன்னை சமாளிக்கத்தெரியவில்லை என்பதுதான் உண்மையாயிருக்கிறது.



உன்னைப்பற்றிய குறிப்புகளை என்னால் இன்னமும் ஒழுங்கமைக்க முடியவில்லை; நீ ஆதிக்கனவுகளின் சாயல்களில் இருக்கிறாய் என்றாலும் எனக்கு மற்றொரு திசையில் இருக்கிறாய் என்பதே உண்மையாயிருக்கிறது. என்னை நானாகவே ஏற்றுக்கொண்டு கையாளுகிற நிதானம் உனக்கு இல்லாமல் போனாலும் என்னை கைப்பற்றுகிற அழுத்தம் உனக்கிருப்பதாய் நம்புகிறேன். நான் எப்பொழுதும் இலகுவானவனாகவே இருந்திருக்கிறேன் என்பது உன் குறுக்கீடுகளின் மூலம் மற்றொரு முறை உறுதியாயிருக்கிறது. அன்பை நிராகரிப்பதன் மூலம் அழுத்தமாகி விடலாம் என்கிற என் நடைமுறை மாறியிருக்கிறது.



நான் உன்னை கடந்து விடுவேன் என்று நம்பினாலும் உன் கவலைகள் என்னை கோபமூட்டுகிறது. ஆகக்குறைந்தளவு உண்மைகளைத்தானும் உன்னால் அடையாளம் காணமுடியாமலிருக்கிறது. உன்னை சுற்றிலும் இருப்பது உண்மைகளுக்கு புறம்பானதொரு கூட்டம் என்பதை நீ கண்டுகொள்ளவே இல்லையா, அல்லது அவர்களின் வட்டத்துக்குள்ளேதான் உலகம் இருக்கிறது என்று நம்புகிறாயா. உன்னை அவர்கள் ஒரு கண்ணுக்குத் தெரியாத வலைக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை நான் உனக்கு எத்தனை முறை சொல்ல முடியும். உன்னைக்குறித்த கவலைகள் என்னிடமிருப்பதை நீ நம்புவாயோ என்ன்வோ இப்போதைக்கு இதை நான் அன்பென்றோ, காதல் என்றோ சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன்.



உன்னை காதலிக்கிறேன் என்கிற ஒற்றை நாடகத்தை என்னால் மிகத்துல்லியமாக நெறியாள முடியும்.உனக்கு அது போதுமானதாயிருக்கலாம் நீ நம்ப விரும்பாத உனக்கு பழக்கமில்லாத

ஒரே ஒரு விசயம் என்னிடமிருப்பதில் உன்னை விலக முடியாமிலிருக்கிறது.உண்மைக்கு நெருக்கமான வாழ்வென்று ஒன்றுண்டு.நான் வாழ்கிறவன்.

________________________________________________________





உனக்கு நான் என்னத்தை சொல்ல இருக்கு..



நீ எதிர்பாக்கிறதை விட ஒரு வாழ்க்கையை உனக்கு தர முடியும் என்று நான் நம்பினேன் ஆனால்.நான் அறிந்த வரைக்கும் உனக்கு உண்மையை ஏற்றுக்கொள்ளவே முடியாது அல்லது அதை அறிந்து கொள்ளத்தெரியாது. உன்னுடைய எல்லா பயங்களிலிருந்தும் வெளியில் வந்து விடு. உன்னுடைய வாழ்க்கையை நீ வாழ்வது என்கிற விசயத்தில நம்பிக்கை வை.


நான் உண்மையின் விளிம்பிலிருந்துகொண்டு நீ எதிர்பார்க்கிறதை விட நல்ல ஒரு வாழ்ககையை உனக்கு தரமுடியும் என நம்பியிருந்தேன். உன் ஒற்றைக் குடியுரிமையையும், இற்றுப்போன யாழ்ப்பாணக் கதைகளையும் வைத்துக்கொண்டு என்னை திருமபத்திரும்ப கேள்விகள் கேட்கிறாய் அன்பை அறவே நிராகரிக்கிறவனாகத்தான் நானிருந்தேன் உன் குறுக்கீடுகள் என்னை எழுதவெல்லாம் வைக்கும் என்று நான் நம்பவில்லை.



நான் நினைத்து வைத்த வாழ்வில் நீ எனக்கு நேரெதிர் திசையில் இருக்கிறாய் என்னை இயல்பாய் இருக்கவிடு உன்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்துப்போகிறேன். அன்பு எந்த விதிமுறைகளோடும் வருவதில்லை அது தானாக நடப்பது என்றுனக்கு சொல்லியிருக்கிறேன்.

அது நீ எதிர்பார்த்ததிலும் நிச்சயம் சுதந்திரமானதாய் ஆசுவாசமானதாய் இருக்கும. நிர்ப்பந்தங்கள் அங்கே இருக்கவே போவதில்லை.புரிதலும் பகிர்தலும் சின்னச்சின்ன தயார் நிலைகளுமே அங்கே தேவைப்படலாம்.



நீ கடக்கவும் நுழையவும் நிறை விசயங்கள் இருந்கிறது முதலில் வெளியே வர முயற்சி செய் மிகுதியை புரிதலும்,காலமும் தகவமைக்கும்.


__________________________________


பெடியன்ரை புலம்பல்களில் இருந்தொரு சாம்பிள் சுருக்கம்.


நீங்கள் நினைக்கிற மாதிரி நீ மட்டும் போதும் என்கிற, அக்கா-தங்கச்சி,குடும்ப பொறுப்பு என்கிற எந்த பேச்சுகளுமே இல்லாமல் அன்பை அள்ளித்தருவதற்காக மட்டும் ஒருவனை வீட்டுக்காரார் பாத்து தருவினம் முன்னப்பின்ன தெரியாத அவன் உங்களை வச்சு பூசை செய்வான் கட்டிக்கொண்டு சாம்பிராணியைப்போடுங்கோ நாங்கள் உண்மையா இரண்டு வசனம் பேசினால் உங்கடை அலட்டலை காதல் வியாபாரங்களை ஆரம்பியுங்கோ. வெறும் உறுதி மொழிகளை மட்டுமே தந்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை என்பதை எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன்.



என்ன கதை விளங்குதோ உண்மைல இது ஒரு பெரிய சிக்கலான கேஸ்தான் சும்மா சிவனே எண்டு ஒரு தினுசா அனுபவிச்சுக்கொண்டிருந்த பெடியனை ஒரு பெட்டை குறுக்கிட்டிருக்கிறாள்; குறுக்கிடுறது எண்டால் "விழுத்துறது" எண்டு வையுங்கோவன் உண்மைல இவர் மயங்கினதெண்டு சொல்லலாம். ஆனால் வெறு மயக்கம் எண்டு மட்டும் சொல்லேலாது ஏனெண்டால் பெடியன் எல்லா உறவுகளும் நிர்ப்பந்தங்களின் மீது நீடிக்கிறதுதான் எண்டும் அன்பை புதுப்பிக்காத அல்லது புரிதல் இல்லாத எந்த உறவும் ஏதோ ஒரு கட்டத்தில தெறிக்கிறதுதான் எண்டும் சொல்லி சத்தியம் பண்ணியிருக்கிற ஆள். இலக்கியம்,ஓஷோ, சுயம் எண்டு, கடுங் கூட்டங்களோடை பழகி விளங்காத புத்தகங்கள் எல்லாம் வாசிச்சு பெடியன் ஒரு மாதிரி கடும் போக்கெண்டு வையுங்கோவன். ஆனால் என்ன பெடியனுக்கு சின்னல்ல இருந்தே இளகின மனசு.அண்டஸ்ராண்டிங்கான பெடியன்.





பெட்டை என்னண்டால் தனக்கு காதல்ல நம்பிக்கையே இல்லை எண்டு சொல்லிக்கொண்டு என்காக சிகரெட்டை விடு, இனி குடிக்கவே கூடாது, என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும் என்னை வேலைக்கு போகச்சொல்லுவியா, எண்டெல்லாம் கேள்வி கேக்கிற ரைப். இது போதாது எண்டு உவர் அவளை விரும்புறதுக்கு காரணம் அவளின்ரை சிட்டிசன்ஷிப் தான் எண்டு அவளின்ரை அறப்படிச்ச சொந்தம் ஒண்டு சொல்லியிருக்குது போல(சொந்தம் எண்டவுடன பெரிய கனக்க வயதெண்டு நினையாதையுங்கோ நாலைஞ்சு வருசத்துக்குள்ளதான் படாத பாடெல்லாம் பட்டு அங்க போய் சேர்ந்த ஒரு 20 வயது இருக்கக்கூடிய பெட்டை) அவளும், இவனை சுத்தி சுத்தி கேள்விகேட்டு கண்டிஷன் போட்டு காதலிச்சுக் கொண்டிருந்தாள்.

அனேகமா ஒரு நாளைக்கு நாலைஞ்சு மணித்தியாலம் கதைச்சாலும் ஒரு நாளைக்கு ஒரு தரம் எண்டாலும் லைனை கட்பண்ணி போட்டு போறதும் திரும்பி வாறதும் எண்டுஇருந்திச்சு பெட்டை. பெடியன் அவளைப்புரிஞ்சு வச்சிருந்தாலும் அவளுக்கு இவனிட்ட இருக்கிற குணங்கள் பிடிக்கேல்லை அல்லது அவளுக்கு என்ன வேணும் எண்டது கூட தெரியேல்லை. உண்மைல இது அங்க இருக்கிற முந்தின தலைமுறை ஆக்களின்ரை நடைமுறைகளாலதான் எண்டு நினைக்கிறன். (எங்கடை பெட்டையளே உப்பிடித்தானே ஒண்டில் தேவையில்லாததையெல்லாம் யோசிப்பாளுகள் இல்லையெண்டால் ஒரு ஒண்டையும் யோசிக்காமல் சிக்கல் படுவாளுகள்) ஒருக்கால் உப்பிடித்தான் அவளின்ரை அறப்படிச்ச சொந்தம் இவன்ரை சாதி என்ன எண்டமாதிரி கதைக்கிறது கேக்க உவன் தனக்கு தெரியாதெண்டு சொல்லிப்போட்டான்.

கொஞ்ச நேர கதைக்கு பிறகு உப்பிடி ஒரு வசனத்தையும் சொன்னான்.


"செய்யுற தொழிலை வச்சுத்தான் சாதி எண்டு சொன்னால் யுரோப்பில இருக்கிற பெரிய சாதி எண்டு படம் காட்டுற அனேகமான வெள்ளாளர் எல்லாம் முக்காடுதான் போடோணும் ஆனால் எனக்கு தெரிஞ்சவரைக்கும் நான் ஒரு மோசமான வெள்ளாளன்" எண்டு சொன்னான். அவள் லைனை கட்பண்ணிக்கொண்டு போட்டு, கொஞ்ச நேரத்துல ரைப்ப பண்ணி கதைக்க தொடங்கினாள்.



அவள்:

Kandee

vendam

pls



enakkum unakkum sari varathu.

enkada veeddula sathi pappinam



vendam pls..



இவன்:



சரி



அவள்:

kovama..


எண்டு கேட்டுட்டு கோல் பண்ணி,ஒரு கிஸ் குடுக்கிற ஸ்மைலியும் அனுப்பினாள்.

அவள் மட்டுமில்லை இவனும்தான் கோபப்பட்டு திட்டுறதும் பிறகு கொஞ்சுறதும் எண்டு அவளை கட்டுறதெண்ட முடிவில இருக்கிறான். நான் இந்தக்கதையை கேட்டு அறிஞ்ச மட்டுல பெட்டை கஷ்டப்பட்டு உழைக்கிற ஒருத்தி ஆனால் அவளின்ரை சொந்தக்காரர்களின்ரை கதைகளும் பழைய அனுபவங்களும் அவளை குழப்பம் பண்ணிக்கொண்டே இருக்குது எண்டுதான் நினைக்கிறன்.


________________________________________


"உன்னை தவிர்க்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்

என்னை காதலிப்பதை இன்னொரு முறை சொல்லு
."

உண்மையில இந்த வசனத்தை யார் எழுதி இருப்பினம் எண்டு நீஙக்ள் கண்டுபிடிச்சா உங்களுக்கு இந்த கதை விளங்கிட்டுது எண்டு அர்த்தம். இன்னொரு விசயம் உண்மைல இதை எழுத வேண்டிய ஆள் இதை எழுதேல்லை.


இந்தக்கதைக்கு ஏன் இப்படி தலைப்பு எண்டுற கேள்வியோடை, கதை இன்னும் முடியல்லை எண்டுற மாதிரி இருந்தாலும் இது கல்யாணத்துல முடியுற கதைதான்.


__________________________________________________

பகிர்வுக்கான குறிப்பு.

முன்பொரு முறை எழுதி வைத்த சில சொற்கள் இவை கிடப்பிலேயே இருந்தது இதை இனி என்னால் தொடர்ந்து எப்பொழுது எழுத முடியும் என்று தெரியவில்லை இதை தொடர்ந்து எழுதக்கூடிய மனோநிலை வரும்பொழுது திரும்பவும் திருத்தமான வடிவத்தில் எழுதிப்பார்க்க முயல்கிறேன் இப்போதைக்கு இதை வாசித்துக்கொள் குட்டி .


//
இரண்டாயிரத்து பதினொன்றுகளின் இறுதிப்பகுதியில் எழுதிப்பபார்த்ததென்று நினைக்கிறேன் இ இப்பொழுதுதான் பகிர்ந்திருக்கிறேன் ஏதாவது செய் செய் என்று அந்தரப்படுத்திக்கொண்டிருக்கும் மூளைக்குள்ளிருக்கும் சொற்களுக்கு.


//
ஒரு...
இலை தொடும் தூரத்தில்தான் உன்னுடைய உதடுகளிருக்கிறது
இருந்தும் இந்த மிதக்கும் தன்மையை அவ்வளவு 
இலகுவாய் கடக்க மனம் வரவில்லை 
இந்த முத்தத்தை நாம் 
இன்னும் கொஞ்ச நேரம் நாம் வைத்திருக்கலாம். //


-காதலிக்கிற காதலிக்கப்படப்போகிற எல்லோருக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்- 

Wednesday, August 8, 2018

💗திரும்புதல் அல்லது நினைவுகளை புதுப்பித்தல்.💗



உயர்தரத்து பரீட்சைக்கு 
ஒரு தவம் போல படித்துக்கொண்டிருப்பாய் - நீ
மேசையில் உறங்கிப்போகும் உன்னை தவம் போல பார்த்துக்கொண்டிருப்பேன் - நான்.

நாடு முழுவதும் கபொத உயர்தரம் பரீட்சை நெருங்கிக்கொண்டிருக்கு. இந்த ஏலெவல் காலத்திலயே இதுதான் பரவசமான காலமா இருக்கும் எண்டு நினைக்கிறன் கடைசி மாதங்களில் கவனிப்புகள் அப்படி இருக்கும்! வீட்டுக்காரர், சொந்தக்காரர், நண்பர்கள், அயலவர்கள் என்று எல்லோரும் அக்கறையும் அன்பும் உற்சாகமும் நம்பிக்கையும் தருகிற நாட்கள் இவை. இதுல இன்னுமொரு சிக்கல் என்னண்டு சொன்னால் ஒரு திணிப்பு மாதிரி  இருக்கும் இல்லாத டென்சனை ஏத்துற வேலையா  சோதினை எழுதப்போறவனை சோதினைக்குள்ளாக்கிற வேலையை கடமை மாதிரி செய்து கொண்டிருக்கும் யாழப்பாணத்து சனம்.  சும்மா இருக்கிறவனை ஏதோ  இதைவிட்டால்  அவ்வளவுதான் எண்ட மாதிரி கதைச்சே பயப்படுத்தி எழுதுறவனையும் ஒழுங்கா எழுதாமல் பண்ணுற சனங்களின்ரை அறியாமையை இங்க கதைக்க வேண்டாம் அதுக்கு வேறை ஏரியாக்கள் இருக்கு.

____________________________________________

இங்க நான் சொல்ல வந்தது வேறை கதைகள்; இதுல பல கதைகள் இருக்கு

//
அவனும் அவளும் ஏலெவல் எடுக்கிற ஆக்களா இருக்கலாம்..  ரெண்டு பேரும் ஒரே வயதா இருக்கலாம் அல்லது அவனுக்கு இது ரெண்டாவது தரமா கூட இருக்கலாம் மாறியும் சில கதைகள் நடந்திருக்கலாம் ஆனால் எனக்கு இப்ப ஞாபகம் இல்லை.
//
அவள் ஏலெவல் எடுக்கிறவளா இருக்கலாம். -
//
அவன் ஏலெவல் எடுக்கிறவனா இருக்லாம்

முதல்ல சொன்னதை விட பிறகு சொன்ன ரெண்டும்தான் சுவாரஸ்யம் கூட. காதலை பொங்கி பிரவகிக்கிற நாட்களாக இவை இருக்கும். அப்ப "மொபைல்" எல்லாம் கிடையாது இப்பத்தையை மாதிரி கோல் பண்ணி எழுப்பிவிட கதைச்சு தூக்கத்தை கலைக்க படிக்கிறதுக்காக முத்தம் வாங்க  என்றெல்லாம் நடக்கிற சீனுகள் இப்ப இருக்கும் . அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும் அலாம் வச்சு எழும்பி உற்சாகம் குடுக்கிறது இப்ப விரும்பினால் இலகுவா இருக்கும் ஆனால் அப்ப அது ஒரு காலமப்பா... 😞காதலின் அசட்டுத்தனமும் தைரியமும் இப்ப நினைச்சால் சிரிப்பாயிருந்தாலும் ஒரு பரவசம் இருக்கத்தானே செய்யுது.💓💓

➽விடிய வெள்ளன எழும்பி அவளின்ரை வீடு வரைக்கும் போட்டு வாறது. அவள் படிக்கிற யன்னலுக்கு போய் பாத்துக்கொண்டு நிக்கிறது (ரெண்டு பேருமே ஒகே எண்டால் ஜன்னலுக்க நிண்டு அன்பை பரிமாறின ஆக்களும் இருக்கு ) சைக்கிளிலை போய் சத்தம்; போட்டுக்கொண்டு போறது.  எண்டு திரிவானுகள் இதுல  செட்டாகின ஆகாத ரெண்டு வகைக்குமே சில முத்திப்போன காலகட்டமா இது இருக்கும் காதலின் கிறுக்குத்தனங்களும்  ஏலெவலின் அதிகப்படியா மிகைப்படுத்தலின் பைத்தியக்கார தனங்களை ஒரு கலந்து கட்டின விதத்துல செய்து கொண்டு திரியுங்கள் பிள்ளையள் எல்லாம்.

➽வீட்டு மதிலுக்கு போய் அவளை பாத்து பரவசப்படுவதும் அவள் லைற்றை போட்டு நிப்பாட்டி சிக்னல் குடுகிறது பிறகு மத்தியானம் அல்லது இடையில சந்திக்கேக்ககிள்ளை ஏனப்பா வந்தனியள் எண்டு கொஞ்சுறது எண்டு அவளுகள் பெடியளை பஞ்சாக்கி வச்சிருப்பாளுகள்.

➽இது பொம்பிளைப்பிள்ளையள் உண்மைலையே கஸ்ரப்படுங்கள்; அவனுக்கு நோட்ஸ் எழுதிக்குடுக்கிறது உடுப்புத்தோய்க்கிறது, தேத்தண்ணி போட்டு குடுக்கிறதெண்டு ஒரு அம்மா மாதிரி இருப்பாளவை!  இப்ப படுங்கோ விடிய எழுப்பிவிடுறன் எண்டுறதும், படிப்புக்கிடையில அவனனை சந்திக்கிற நேரத்துல சாப்பிடுங்கோ, பகல்ல கொஞ்சம் நித்திர கொள்ளுங்கோ எண்டு கொஞ்சுறதும் பிஸ்கற் மிக்சர் நொறுக்குத்தீனியை கிலோக்கணக்கில வாங்கி குடுக்கிறதும் அவளுகள் கவனிக்கிற விதமே தனி..😍


➽ஆளைப்பார் எப்படி இருக்கெண்டு அம்மா சொல்லுற மாதிரியே  சொல்லி அவள் தருகிற சில முத்தங்களுக்காகவே வருசம் முழுக்க படிக்கலாம் போல இருக்கும். அதேபோல தேவயில்லாமல் எங்கயாவது நிண்டால், கிரவ்ண்டால போக லேட்டாப்போனது தெரிஞ்சால் விழுகிற திட்டும் அப்படித்தான் இருக்கும்.

____________________________________

இந்த துண்டு துண்டான குறிப்பகளை திரட்டி எழுதுகிற அளவுக்கு இந்த இரவு எனக்கு ஒத்துழைக்கவில்லை; இருந்தாலும் நான் எழுதிப்பழகிற இடத்தை தூசுதட்டுறதுக்கும் சொல்லக்கிடக்கிற கதைகளை எழுதிப்பாக்குறக்கும்  அழுதங்களின் விடுபடுதலுக்குமாகவும் இந்த ஞாபக குறிப்புகள்.



💓
என்னை கவனிக்காத போல படித்துக்கொண்டிருப்பாய் நீ
மேசை விளிம்பை முட்டுமுனது ஏக்கங்களை எனக்குத்தெரியாதா
போதுமடி எல்லாம்
புத்தகத்துக்குள் நிலை கொள்ளாத - உன்
பெரு விழிகள் சொல்லாததையா - உனது
பாவனைகள் எனக்கு சொல்லப்போகிறது.

💓
இருக்கிற அழகையெல்லாம்
பருத்திச்சட்டையொன்றுக்குள் மறைத்தபடி படித்துக்கொண்டிருப்பாய் - நீ பின்னிரவின்  வெளிச்சத்தில் பொன் மஞ்சள்  நிறமாய் நீயிருக்க வேறெதையும் யோசிக்க முடியாத படி மிகுதி  இரவை எரித்துகிகொண்டிருப்பேன் நான்.


💓
நித்திரை கொண்டிருவன் இடையில எழுப்பிவிடுங்கோ என்ற குறுந்தகவலோடு கதிரையிலேயே  உறங்கியிருப்பாய் நீ இயல்பின் பேரழகையெல்லாம் மறைக்க திணறுமுன் இரவுடையில்  ஒரு சிறுமியைப்போல உறங்குமுனது தூகத்தை சேமித்தபடி விழித்திருக்கும் மீதமிருக்குமெனது இரவு.

💓💓💓

இனி இடத்துக்கு வருவம்:

குட்டி மச்சாள்!

எனக்கு நெருக்கமானவளாக நீங்கள் நம்புகிற ஒருத்திக்கும் நாளைக்குத்தான் ஏலெவல் காதல் ததும்புமந்த   படிச்சு படிச்சு களைச்சு போயிருருக்கிற அந்த கண்களை பாத்து வாழ்த்துச்சொல்ல சந்தர்ப்பம் தராத இந்த காலத்தை என்ன சொல்வது!

கொஞ்ச நாட்களாக என்னை பார்க்காமலே இருக்கிற  அவளுக்கு இந்த நாட்களில் என்னைக்குறித்த எந்த கனவுகளும் வாரதபடிக்கும் எல்லா பாடங்களிலும் அவளுக்கு திருப்பதியாக எழுதும் படிக்கும் கூடஇருக்குமாறு அவள் நம்புகிற கடவுளர்களை கேட்டுக்கொள்கிறேன்.

படிச்சு படிச்சு மெலிஞ்சு போன மாதிரிதான் இருக்கிறாள் குட்டி மச்சாள் ஆனால்;என்ன கன நாளைக்கு பிறகு காணுறதுல கலக்கமா கிடக்கு சாகடிக்கிறாள் பாவி நிகழப்போகும் வன்முறையை நான் முத்தம் என்று சொன்னால் காமத்தை கொண்டாட சொன்ன ஓஷோ கூட மன்னிக்கமாட்டார் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளடியம்மா இந்த முறை மட்டும்தான்.

"போடா காவாலி இதுக்கு என்ன  பெயரடா?"

" பின்ன சும்மாவே  கிட்டத்தட்ட மூண்டு மாதமடி.."


_________________________________________



கிட்டத்தட்ட  ஐந்து வருடங்களுக்கு முன்னர் எழுதிய இந்த  சொற்களை இப்பொழுது மீட்டுக்கொண்டு வந்திருக்கிற இந்த நாளுக்கு நன்றி😍


-இப்ப ஏலெவல் ஏழுதிக்கொண்டிருக்கிற எல்லா  பிள்ளையளுக்கும் -

Friday, February 14, 2014

தனித்த பகலொன்றின் மீதமிருக்கும் சொற்கள்.




இப்ப எல்லாம் நான் முந்தின மாதிரி இல்லை, எனக்கு கடும் கோவம் வருது, பொறுமை விட்டுப்போச்சு உண்மையைச்சொன்னால் என்ன உனக்குத்தானே? குடிச்சா டக்கெண்டு ஏத்தீடுது; மனசுல ஒரு போதை இல்லாமப்போச்சு! உண்மைக்கு நெருக்கமா ஒரு கதையும் என்னட்டை இல்லையெண்ட மாதிரி இருக்கு.  நீ சொல்லு மாயா எங்கே  இருக்கிறாய் நீ?!

அன்பை நிராகரிக்கும் இந்த துயர நிலைமைக்கு நான் எப்படி வந்தேன். இன்னும் என்னை வெகுதுாரம் கூட்டிக்கொண்டு போ.  நிலையில்லாமல் தவிக்கும் இந்த பாழும் மனதின் கடிவாளங்களை கைப்பற்று.  எனது பயணங்கள் தோறும் கூட வருமொரு உள்ளுணா்வை பத்திரப்படுத்து. எனது தளம்பல்களின் எல்லைகளில் எச்சரிக்கை உணா்வைத்தருமுனது  கரிசனங்களை தீராமல் வைத்திரு. நான் பேசவும் பேசாமலிருக்கவும் எப்பொழுதுக்குமான எனது சங்கதிகளாக நீ இருந்து விடு.

நான் உடலிலிருந்தும் தனித்தலையுமிந்த  துயர நாட்களை தீா்த்து விடு. ஒருபோதும் நீங்கி விடாத எல்லையற்ற உனது கருணையின் மரா்புகளில் அழவிடு, பின்னனா் ஏந்தி இந்தப்பிரபஞ்சத்தின் ஆதி முத்தங்களின் சாயலில் இறங்கும் உனது  உதடுகளின் மீது எனது வடிவமற்ற பிரியங்களை பதிய விடு. உன்மத்தம் நிரம்பிய எனது வேட்கையின் முடிவில் உனது பெருந்தனங்களில் உறங்குகிற இரவுகளை காலம் எனக்கு தரும்படிக்கு கூட இரு. உனது பிரியத்தின் எல்லா வடிவிலும் எனது பைத்தியங்களிலிருந்தும், குரூரங்களிலிருந்தும் என்னை மீட்டுக்கொள். எனது பாடுகள் எல்லாவற்றிலிமிருந்து என்னை பொறுப்பெடுத்துக்கொள்.

ஒரே முறை ஒரேயொரு முறை என்னைப்பொறுப்பெடுத்துக்கொள் நானெப்பொழுதும் மீளாதபடிக்கு காலம் என்னை உனது பிரியத்தின் எல்லைக்குள் காவல் வைக்கட்டும்.


காதல் குறித்து எழுதிப்பார்க்கும் மனோநிலை எனக்கு இதனை தொடங்கும் வரைக்கும் இருக்கவேயில்லை இருந்தும் ஏதேவொரு தருணத்தில் தட்டச்சத்தொடங்கிய இந்தச்சொற்கள் இவ்வளவு நீளத்துக்கு வரும் என்பதை நான் அறியவில்லை்  அப்படித்தானே காதல் கணங்களில் நிகழுமொரு அற்புதம்தானே! புலம்பலின் மற்றொரு வடிவமாக வந்திருக்கும் இந்தச்சொற்கள் ஒரு தனித்த பகல் பொழுதின் மீதமாய் இருக்கலாம்.

காதல் எப்பொழுதும் புதிய விசயம்தான் மக்கள் பிரியத்தின் நீட்டிப்பு என்பது உங்களது அன்பின் புதுப்பித்தல்களைச்சார்ந்தது.புதுப்பிக்காத அன்பில் இடைவெளி அதிகமாவிருக்கிறது.


பகிர்வின் மறுபக்கத்துக்கு.

மாயா  சுவாரஸ்யங்களை கூட வைத்திருப்பவள், எப்போதும் உற்சாகம் நிரம்பிய அவளது குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இரவெல்லாம் கூட வரும். கண்கள் சிரிக்கிற அவளது வட்டமுகத்துக்கு பெரிய கண்களும் சின்ன உதடுகளுமாய் இருப்பாள் கொஞ்சம் குண்டாக , நிறைய அழகாக இருக்கிற அவளை நான் காதலிக்கும்படி எனது ஒழுங்கின்மைகளின் துணையோடு மன்றாடிக்கொண்டிருந்தேன். அவளும் நானும் வெளியே அன்பை மறுதலிக்கிறவா்களாகவே இருந்தோம். ஆனாலும்  முத்தமிடத்தோன்றுகிற எனது உணா்வினை நான் காதல் என்கிற வடிவத்துக்கு மாற்றிக்கொண்டிருந்தேன்.  எப்பொழுதும் நம்பிக்கைகளை கொணா்ந்து தருகிற ஆத்மார்த்தமான  சொற்கள் அவளுடையது, அதையும் துணைக்கு வைத்துக்கொண்டேன். ஒரு மழை பெய்து கொண்டிருந்த மத்தியான நேரத்தில் பெரு நகரமொன்றின் வீதியில் நனைந்தபடி அவளை அணைப்பதற்கு அனுமதி கேட்டேன்; வெகுவியல்பாய் மாட்டேன் என்றவள் திரும்பி நடக்கத்தொடங்கினாள்.

மனதுக்குள் சிரித்தபடி போய்கொண்டிருக்கும் அவளை ஒரு ஒழுங்கைக்குள்ளிருந்து இழுத்து உதடுகளை காயப்படுத்தினேன். போடா  உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றபடி  லேசாய் வியா்த்திருந்தே வாசனையோடு அவள் பெரிய மார்புகளை நெஞ்சில் அழுத்தினாள். நான் சிவந்திருந்த அவள் உதடுகளை பேச விடாமல் எடுத்துக்கொண்டேன் அப்பொழுதும் அவள் கணகள் ஈரமாக சிரித்துக்கொண்டிருந்தது.

பின்னா் நாங்கள் ஒரு குட்டி மாயாவைப்பெற்றுக்கொண்டு தாலி கட்டிக்கொண்டோம்.

________________

காதலை சந்தித்திருக்கிற சந்திக்கப்போகிற எல்லோருக்கும் காதலா் தின வாழ்த்துக்கள்.


நன்றி யும் அனுதாபங்களும் காதலிகள் யாருமில்லாத எனது சக நண்பா்களுக்கு.

Friday, February 7, 2014

பாடல் 1 - புனைவை சாத்தியப்படுத்தும் உனது எல்லையில்லா கருணைக்கு.





எல்லோரும் முடிந்து போனதாய் நம்பிய 
ஒரு துயரத்தின் பாடலை மற்றொரு முடிவிலிருந்து
தொடங்கி வைத்திருக்கிறாய்  நீ...
தவிர்க்க முடியாத எனது முன்னைய காலங்களை
நினைவினடுக்குகளிலிருந்து கிளறி எடுத்து
கோப்பைகளில் நிரப்பிக்கொண்டிருக்கிறேன்  
மதுவும் போதையும் தீராததாகவே இருக்கிறது
உனது நினைவுகளைப்போல .

திரும்புதலுக்கான பாடல்கள் குறித்த குறிப்புகள் :
 ( திருத்தியும், விரிவாகவும் மீள எழுதப்படக்கூடிவை) 

போன மாதத்தின் கடைசி வாரத்தில் போதை கலையுமொரு பின்னிரவில் எழுதிப்பார்த்த இந்தச்சொற்களை இன்றைக்கு பகிர்ந்திருக்கிறேன்.பாடலின் எல்லாக்காரணங்களும் இந்தப்பக்கங்களில்  எழுதப்பட்டிருக்கும் பெரும்பாலான சொற்களை தனதாக வைத்திருக்கும் அவள் மட்டும்தான். 

பாடலுக்கான படம்; முன்பொரு முறை கொண்டாடிய சோகம் பற்றிய பதிவிலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி - Google.


நீ எப்பொழுதும்  அற்பதங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறாய் உனது இந்தச்சொற்களை நீ இருக்கும் ஒரு பொழுதில் இந்தக்கடையிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.


பாடல்கள்;
மீண்டும் இந்த புலம்பல்களின் பக்கங்களை தூசு தட்டிக்கொடுத்திருக்கும் அதே எந்த மொழிதலிலும் சமன் செய்து விட முடியாத எனது கறுப்பியின் காதலுக்கு.

Thursday, August 2, 2012

கைவிடப்பட்ட உடல்கள் - ஒரு மாதிரிக்குறிப்பின் திருத்தமற்ற வடிவம்.




இதை வாசிக்கப்போகும் அனேகம்  ஆண்களுக்கான பொதுவான அனுபவங்களில் ஒன்றாக நீலப்படங்கள் இருக்கக்கூடும்.  அந்த நீலப்பட நடிகைள், நடிகர்களைப் பற்றி உரையாடல் ஒன்றுக்கான தொடக்கம் இந்த  மாதிரிக்குறிப்பு.  தனியே நடிகைகளை மட்டும் பேசிவிட்டு கடந்து போய்விட முடியாத நீலப்பட சந்தையும் சூழலுமே இப்பொழுது இருக்கிறது  எனக்குத்தெரிந்த வகையில்  எந்தவித  தேடுதலும்  இல்லாமல்  தொடங்கிய ஒருசிறு குறிப்பு இந்த பகிர்வு.



சமீபத்தில்  நீலப்பட நடிகையொருத்திக்கு ரசிகனாய் இருப்பதைக்குறித்த உரையாடல்  ஒன்றை ஆரம்பித்த தோழருக்கு நன்றி.


வயதான நீலப்பட நடிகைகளைசந்திக்க வேண்டும் என்கிற  ஆர்வம் 2009 கடைசிகளில்  எனக்கும் இருந்தது, பின்னர்  மாலனின் "கலாச்சார கண்ணாடியில் கல்லெறியும் நீலப்படங்கள்" கட்டுரையை வாசித்த பிறகு அந்த நடிகைகளின் வாழ்வு குறித்த ஆவணப்படங்களை தேடியிருக்கிறேன். யாராவது சில நடிக நடிகைகளை சந்தித்து உரையாட நினைத்திருக்கிறேன். ஒரு முன்னாள் மல்யுத்த வீரனுக்கே இவ்வளவு கதைகள் இருக்கும் பொழுது ஒரு நீலப்பட நடிகைக்கு காலம் என்ன மாதிரியான அனுபவங்களை தரக்கூடும்?! - சாதாரண தமிழகத்து நடிகைகளுக்கே நமது மனங்கள் மோசமான அனுபவங்களை கொடுத்திருக்கையில் ஒரு தொழில் முறை நீலப்பட நடிகையின் வாய்ப்புகள் அற்றுப்போகையில் என்ன மாதிரியான  சமூக,பொருளாதார,உளவியல் பிரச்சனைகளை மீதமிருக்கிற அவளது காலம் அவளுக்கு தரக்கூடும்?!

பெண்களிடம் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பாத ஆண் மனங்களின்  பயம், விகாரம், குரூரம் எல்லாவற்றினதும்  திருப்திக்கான சந்தைப்படுத்தல்களாகவே  அனேகமான  நீலப்படங்கள் இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் பெண் உடலின் மீதான வன்முறையே பெரும்பாலான மூன்றாந்தர நீலப்படங்களில் இருக்கிறது. ந்திய பாலியல் அடிமையே, வெள்ளை நிற விபச்சாரியே என்றெல்லாம் பேசுப்படுகிற வார்த்தைகளின் அரசியல் வேறொரு வகையானவை.

எனக்கு பிடித்தமான நீலப்பட நடிகைகள் குறித்து பேசுமளவிற்கு அவ்வளவு அதிகம் படங்களை நான் பார்த்ததில்லை தோழர் ஆனாலும் சில படங்களையும் நடிகைகளையும் எனக்கும் நினைவிலிருக்கிறது- அதில் ஒரு  நடிகையின் புதிய படங்கள் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை, அவரது தற்போதைய வாழ்வு பற்றிய தகவலை கூகுளில் கூட காணவில்லை .


பகிர்வுக்கு சம்பந்நதப்பட்ட மற்றொன்று:

எனக்குத்தெரிந்த நீல நடிகைகளில் இவரை சொல்லாமல் விட முடியாது துருதுருவென்றிருக்கிற இவருடைய பூர்வீகம் பஞ்சாப்; பஞ்சாபி பெண்களிடம் இருக்கிற இயல்பும் அலட்சியமும் இவரிடமும் அதிரடியாகவே இருக்கிறது. கனேடிய இந்தியரான இவருடைய அழகில் அமெரிக்காவை கலக்கிய பின்லேடனே அசந்து போயிருந்தார் என்று செய்திகளும் இருக்கிறது. அமெரிக்க, கனேடிய ஆண்மனங்களின் தூக்கத்தையும் பெண்மனங்களின் பொறாமையும் சம்பாதித்துக்-கொண்டிருந்த இவர் "பிக்பாஸ்" நிகழ்ச்சி மூலம்  ந்தி திரையுலகுக்குள் நுழைந்திருக்கிறார். இவருடைய முதல்  இந்திப்படம் Jism-2 நாளைக்கு ( 03.08.2012) வெளியாகிறது. இவர் திரையில் காட்டுவதற்கு எதுவுமே இல்லை என்று சொல்பவர்களுக்கு  மறைக்கபட்ட அழகில்தான் அதிகம் கவர்ச்சி இருக்கிறதென்று பதில் சொல்லியிருக்கும் இவருடைய இந்தப்படத்தின் காட்சிகள்  அதனை நிரூபிக்கிறதாய் நான் நம்புகிறேன். நிர்வாணத்தை தாங்க முடியாதவைதானே ஆண்மனங்கள். துருத்தலான விகாரங்களுக்கு பழக்கப்பட்டவைதானே தமிழ் மனங்கள்.. 
இந்தப்படத்தில் கூட நடிக்கிற Randeep Hoda ஒரு நல்ல நடிகர் எந்த  காட்சியையும் இயக்குனருக்கும் காட்சிக்கும்  திருப்பதியாகச்செய்யக்கூடிய கலைஞன், அது  என்ன் காட்சியாயிருந்தாலும்  Once upon time in Mumbai  படம் அதற்கு ஒரு சாட்சி.




உண்மையாகச் சொல்லப்போனால் SunnyLeone நடித்த எந்த நீலப்படத்தையும் நான் இதுவரை பார்த்ததில்லை.


Friday, July 6, 2012

சுணைக்கிது...


பேசவிரும்பாத கதைகள் பற்றிய குறிப்பு.



முகவுரை, பதிப்புரை, அந்தவுரை, இந்தவுரை என்கிற எந்த கந்தாயங்களுமில்லாமல் பிரித்ததுமே கதைக்குள் நழைந்துவிடுகிற புத்தகத்தின் வடிவமைப்பைப்போலவே நிரூபாவின் கதைகளும் சட்டென்று சொல்லவந்த மையத்துக்குள் நுழைந்து ஒரு ஊரையே நமக்கு அறிமுகம் செய்து அவா்களோடு நெருங்க வைத்துவிடுகிறது. ஊருக்குள் பேசத்தயங்குகிற கதைகளை ஊரில் பேசும் அதே மொழியில் எழுதியிருப்தே அதன் பலமும் பலவீனமும் என்று நினைக்கிறேன். ஈழத்தின் வடக்கில் இருக்கிறவா்களுக்கு புரிந்துகொள்ள முடிந்தாலும் எல்லோராலும் சட்டென உள்வாங்க முடியாத இந்த பேச்சுவழக்கில் எழுதப்பட்டிருப்து இதன் பரவலான அறிமுகத்திற்கான தடையாக இருக்கலாம்.

பன்னிரண்டு கதைகளைக்கொண்ட இந்தத்தொகுப்பு ஒரு நாவலின் முழுமையற்ற வடிவமாகவும் இருக்கிறது ஒரு ஊரில் நிகழும் அனுபவங்களை எந்த பாசாங்குகளும் அரசியல்துருத்தல்களுமில்லாமல் ஒரு பெண்மனதின் ( சிறுமியிலிருந்து பதின்மங்கள் வரைக்கும்) இயல்பான வெளிப்பாட்டோடு சொல்லியிருக்கிற இந்தத்தொகுப்பினைப்பற்றி போதுமான அளவில் பேசப்படவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.


மற்றும்படி சுணைக்கிது ஈழத்தின் சிறுகதை குறித்த கதையாடல்களில் கட்டாயம் இடம்பெறவேண்டிய ஒரு தொகுப்பு.
_____________________________________________________________________ 











"ஆனால்
ஒரு விடியலில்
கிண்டப்பட் புதைகுழிக்குள்
பாழ் கிணறொன்றில்
கண்டெடுக்கப்படும் ஒன்றைாய்
அழுகிய நாறிய அழிந்த ஒன்றாய்
என் தாய்க்கிழவியின்
ஒப்பாரி ஓலங்கிளைடையே
மேலே இழுக்கப்படுவதற்காய்
காலுகளே
என்னை விட்டுச்செல்லாதீர்கள்
கைகளே
என்னை கைவிட்டு விடாதீர்கள்"



ஒலிக்காத இளவேனில் தொகுப்பில் கற்பகம் யசோதர எழுதிய,இறுதி வார்த்தைகள் என்கிற கவிதையிலிருந்து எழுதப்பட்ட இந்த வரிகள் வசந்தங்கள், உதயங்கள் எல்லாம் வந்து ரட்சிக்கப்பட்ட பிறகும் நிகழும் தற்கொலைகள்  இனந்தெரியாதோரால் நிகழ்த்தப்படும் கொலைகள் மற்றும் இடம்மாற்றப்படும், அழிக்கப்படும் சவங்களுக்காக எழுதப்படுகிறது.

வடலியின் வெளியீடாக வெளிவந்திருக்கிற இந்தத்தொகுப்பு இலங்கைப்பெண்களது கவிதைகள் என்ற அடிப்படையில்  வந்திருக்கும் மற்றொரு முக்கியமான தொகுப்பு.அவா் ஒரு வரி எழுதினார் இவா் இப்படி எழுதினார் என்று ஒற்றை வரியை பிடித்துக்கொண்டு நக்கீரா் தனம் காட்டும் இணையவீரா்கள் யாரும் இந்தத்தொகுப்பை பற்றி பேசியதாய் நானறியவில்லை.  இவா்கள் பேசாமல் இருக்கிறதே இந்த தொகுப்பினது வெற்றியும் என்று நான் நினைக்கிறேன். ஒடுக்கப்பட்ட மனங்களிலிருந்து எழுதப்படுகிற வார்த்தைகள் உங்களை பேச இயலாமல் பண்ணின என்பதாக திருடப்பட்ட நிலத்திலிருந்து இதனை தொகுத்தவா்கள் எழுதி வைத்துக்கொள்ளலாம்.பேசவும் விமா்சிக்கவும் நிறைய விசயங்கள் இருக்கிறதாக முகத்திலறையும் இந்த கவிதைகள் சொல்வதாய் நான் நம்புகிறேன்.

பிரசுர வெளிக்கு புதிய பலரது கவிதைகளையும் நன்கறிந்த பலரது கவிதைகளையும் தொகுத்து வந்திருக்கிற இந்த கவிதைகள் தொகுப்பாளா்கள் சொன்னது போல அவரவா் உலகங்களை தமதான் நம்பிக்கைகளுடன் வெளிப்படுத்தியிருக்கின்றன.  அவரவா் உண்மைகளை பேசும் இந்தக்குரல்களை குறித்து பேசாதிருக்கிற மற்றவா்களை நினைந்து நான் வியந்து கொள்கிறேன். 


Friday, May 18, 2012

துயரம்...



மற்றுமொரு வரலாற்றுத் துயரம் நிரம்பிய நாளின்
மீதமிருக்கிற பொழுதில்
அன்றே கொல்லும் உன் அரசா்களையும்
கைவிட்டுப்போன கடவுளா்களையும் 
சபிப்பதில் ஆறிவிடுவதில்லை மனம்
கைவிடப்பட்டவா்களின் புலம்பலை கேட்பதற்கு 
காலம் ஒரு நாளும் நிற்பதில்லை
குவளை மதுவை கவிழ்த்து விழுங்கியபடி
கேவலமான வார்த்தைகளால் ஆயுதங்களை காறி உமிழ்வேன்
அகாலமொன்றில் இனங்தெரியாதவா்களை அனுப்பும்
உங்கள் ரட்சிப்பின் துவக்குகளை என் குறி மீது வையுங்கள்
அடுத்த வார்த்தையை நான் எழுதாமல் விடுகிறேன்
கொடுத்த கூலிக்கு சுட வரும் உங்கள் முகத்தில் உமிழ்வதற்காக.
_____________________________ .

நுாற்றாண்டுகளின் துயரத்துக்கு...
தேவநம்பிய திஸ்ஸனை குறைசொல்லி
திரும்ப நடக்கப்போவது எதுவுமில்லை.