Thursday, November 17, 2011

கடிதங்கள் - சரியாய் எழுதப்படாத உண்மைகள்.

உயிர் நிரப்புகிற கூடுகள்.

இடைவெளிகளோடானா சில வருடங்களுக்கு பிறகும்
இருள் வழிகிற பாலை வனத்து வானத்தில்
அடர் மேகமென படர்கிறதுன் உருவம்...
நட்சத்திரங்கள் மிதக்கிற செங்கடலின் கூரையில்
பெரு நிழலென தொடர்கிற குளிர்காற்றில்
அமிழ்ந்து போயிருக்கிறது மௌனம்
பொழுதுகள் நீள்கிற பெருவெளியில் இருக்கிற
உயிரை நிரப்புவதற்கு கடல் கடந்து வரக்கூடும்
ஆகக்குறைந்தது நீ அழாமல் இருக்கிறாய் என்றோ
ஆகக்கூடியதாய் உன் பிரிவறிவிக்கிறதாகவோ...
செய்திகள் சுமந்த கடிதக்கூடுகள்...!


முன்னெப்பொழுதோ எழுதிய இந்த வரிகளை படித்தபொழுது எழுதிய,திருத்தி மாற்றப்படக்கூடிய பகிர்வு.

___________________________________________________

எனக்கு எப்பொழுதும் கடிதங்களின் மீது அதிகமான பிடிப்பிருக்கிறது.

இப்பொழுதும் கடிதங்கள் அவை யாருடையதாய் இருந்தாலும் அவற்றை சேர்த்து வைத்திருக்கிறேன். கடிதங்கள் அழிய விடக்கூடாதவை என்பது என் நெடுநாளைய எண்ணப்பாடு. கடிதங்களின் அருமை மறந்து போய்விட்டிருக்கிற மனங்கள்தான் பெரும்பாலும் இப்பொழுது இருக்கிறது. நான் அறிய கடிதங்களுக்காக காத்திருந்தவர்கள் கூட அவற்றை கணக்கெடுக்காமல் விட்டிருக்கிற தன்மையை கண்டிருக்கிறேன்.இந்த கொடும்பாலையின் கடுந்துயரங்களில் இதுவும் ஒன்று. முன்பெல்லாம் சவுதி கடிதங்களுக்காக காவலிருந்து வாசிக்கிற அஜிநபிகளை கொண்டிருந்தது. 'பக்கம் பக்கமாக எழுதித்தள்ளி இருக்கிறோம்' என்று பல வருடங்களாக இருக்கிற பழையவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் பெரும்பாலானவர்களிடம் அதில் ஒரு கடிதம் கூட மீதமில்லை என்பதுதான் சோகம். நான் இங்கே வந்த பொழுது கடிதம் என்பது ஊருக்கு போகிறவர்களிடம் மட்டும் கொடுத்துவிடும் ஒரு தேவையற்ற அவசரமற்ற விசயமாகவே மாறியிருந்தது. எனக்கு மாதம் நாலைந்து கடிதம் வருவதையும் நான் எப்பொழுதும் கடிதங்களுக்காக காத்திருப்பதையும் விசித்திரமாக பார்த்தவர்களும் இருக்கிறார்கள், பிறகு எனக்கும் கடிதங்கள் வராமல் போயிற்று என்றாலும் கடிதங்கள் மீதான நம்புதல் எனக்கு மாறவேயில்லை, கடிதங்களை நான் எழுதாமல் விட்டதுமில்லை.அவை பெரும் ஆசுவாசமாயிருக்கின்றன என்பதில் எந்த மாற்றமும் என்னிடமில்லை.

கடிதங்கள் போகவும் வரவும் அதிக காலம் எடுத்தக்கொண்டிருந்த ஆரம்ப காலங்களில் எவ்வளவு எதிர்பார்ப்புகளோடு இருந்திருப்பார்கள் இந்த மக்கள்; மிக மோசமான சம்பளமும் தொலைபேசி வசதிகள் கிடையாத அமைவிடங்களும் என கடிதங்கள் மீதான பற்றுதல் அதிகமாயிருந்த காலம் அது! இரவிரவாக கடிதம் எழுதி அதை வெகு கவனமாக அனுப்பி என இருந்த மனிதர்களை கடந்து வந்திருக்கிறோம். பிறகு கடிதப்போக்குவரத்து விரைவாகிப்போக எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதித்தள்ளி தொடர்ச்சியான தொடர்பிலிருந்த உறவுகள் நிறையவே இருக்கிறது. கடிதங்கள் மூலம் நெருங்கியிருந்த மனங்களைப்போல இப்பொழுது மலிந்திருக்கும் இணையமும் கைத்தொலைபேசிகளும் தருவதில்லை. அவை புரிதலை, நிதானத்தை கணிசமாக குறைத்திருக்கிறதென்றே நம்பத்தோன்றுகிறது.

பிரிவின் துயரை, தனிமையின் வெறுமையை சீரற்ற நாளாந்தங்களை சுகமற்ற சூழலை நாட்களை எழுதியே கடந்த, உணர்ந்த பல உறவுகள் இருக்கிறது சொல்ல முடியாதவற்றைக்கூட கடிதங்கள் மூலமாக சொல்ல முடிந்திருக்கலாம். அறிமுகம் மட்டுமே இருக்கிற பலரது நெருக்கத்துக்கு கடிதங்கள் உதவியிருக்கிறது. சந்திக்கிற தூரத்தில் இருக்கிற ஆட்கள் கூட கடிதங்கள் மூலமே நெருங்கியிருக்கிற கதைகளெல்லாம் இருக்கிறது. நானும் இப்படியான சில கடிதங்களை எழுதியிருக்கிறேன், ஒவ்வொரு நாளும் பார்க்கக்கூடியவர்தான் என்றாலும் கடிதங்கள் எழுதியிருக்கிறோம். அது ஒருவகையில் சுவாரஸ்யமும் நெருக்கமுமானதாய் இருந்தது. இன்னமும் அப்படியான கடிதங்கள் பலரிடம் இருக்கவும் கூடலாம்.


இந்த சந்தர்ப்பத்தில ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகிறது 'அப்பா கதைத்தது' என்று பெயரெழுதப்பட்ட கசட் ( Cassette ) ஒன்று எங்கள் வீட்டில் பல காலமாக இருந்தது.

அப்பருக்கு சரியான குரல்! அவர் கதைக்கிறது ஒரு தனி நடையோட இருக்கும், அனுபவிச்சு கதைக்கிற ஆள் அவர். கதைச்சது என்ன என்பது அவ்வளவாக நினைவில்லாவிட்டாலும் அந்த குரலில் இருந்த உற்சாகம் சந்தோசம் தனிமை சோகம் என இயல்பாக வெளிப்படையாக இருந்த அதன் உணர்வுகள்,பாவங்கள் எல்லாம் எனக்கு அந்த முகத்தை மனதுக்குள் கொண்டு வரக்கூடிய அளவுக்கு இப்பொழுதும் நினைவிருக்கிறது. கம்பீரமான அந்தக்குரல் அறுந்து,உடைந்து சவுதியிலிருந்து அப்பர் வந்தபொழுது எனக்கு பத்து வயதுதான் இருக்கும். அதற்கு பிறகு அப்பரோடு நான் பேசியதே மிகக்குறைவு கடந்த முறை ஊருக்கு போயிருந்த பொழுது பழைய கதைகளை விடுபட்ட குரலில் சொல்லச்சொல்ல கேட்டுக் கொண்டிருந்தேன்


அது ஒரு பின்மதிய நேரம் எனக்கு குடிக்க வேண்டும் போலிருந்தது,அப்பாவிடம் கேட்டேன் தனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்(அப்பா முன்பெல்லாம் குடியை அனுபவிக்கத்தெரிந்த ஆள்). உண்மையில் நான் இதை இவ்வளவு தாமதமாக கேட்டிருக்க கூடாது. நான் பெரும்பாலும் அப்பரை குரல் வழியாகவே நினைவில் வைத்திருக்கிறேன் என்பது இப்பொழுது தோன்றுகிறது.நான் செய்யாததும் நிறைய இருக்கிறது.

இப்படி கசட்டுகளில் கதைத்து பதிந்து அவற்றை அனுப்பிய காலமும் இருக்கிறது இது பெரும்பாலும் மத்திய கிழக்கில் இருந்தவர்களுக்கான அனுபவமாகத்தான் இருக்க முடியும் மிக மட்டமான சம்பளத்தொகையும் தொலைபேசி கட்டணங்களின் அளவும் அதுக்கான முக்கிய காரணங்களாக இருக்கலாம்.என்னைப்பொறுத்த வரையில் கடிதங்களுக்கு வடிவம் அவசியமற்றது அவை துண்டு துண்டாகவோ சின்னக்குறிப்புகளாகவோ எழுத்துப்பிழைகளுடனோ கசங்கியோ கிழிந்தோ எப்படியும் இருக்கலாம். எதையும் எழுதாமல் கூட அனுப்பப்பட்ட கடிதங்களும் இருக்கிறது. "என்ன செய்யப்போறியள்" என்று மட்டும் எழுதி கையொப்பமிட்டிருந்த கறுப்பியின் கடிதம் எனக்குள் நிரப்பிய சொற்களை அதன் சுமையை என்னால் இதுவரையும் எழுதிவிட முடியாத அந்த கடிதத்தின் முழுமைய எவ்வளவு முயன்றும் எனக்கு திருப்தியான பதிலை எழுதிவிட முடியாத (உறங்க விடாத இரவுகளை கொடுத்த மோசமான போதையில் இருந்த இருபத்தொரு நாட்கள் அவை) அந்த கடிதத்தின் சாயலை இதுவரை வேறெந்த கடிதமும் அடையவில்லை. இது வரையுமான என் வாழ்வின் ஆகச்சிறந்த கடிதங்களை அவள்தான் எழுதியிருக்கிறாள்.

பகிர்தலுக்கான அத்தனை சாத்தியங்களும் கொண்டிருந்த, கொண்டிருக்கிற சாதனம் கைப்பட எழுதிய கடிதங்களாகத்தான் இருக்க முடியும் குரல் வழி சொல்ல முடியாத பலதும் கூட, எழுதிவிட தெரிந்த குணமும் அவற்றை புரிந்து கொள்கிற மனமும் முன்பிருந்தது. அவரவருக்கென்று ஒரு மொழி எல்லோரிடமும் இருந்தது. இப்பொழுது எவ்வளவுதான் பேச முடிந்தாலும் அளந்தே பேசுகிறதும் எச்சரிக்கை உணர்வுகளோடுட கதைக்கப்பழகி விட்டிருக்கிறதுமான மிகச்சுருங்கிய மனங்களே இருக்கிறதாய் இணையமெங்கும் பரவிக்கிடக்கிற அனுபவங்களில் காணக்கிடைக்கிற மனிதர்கள் சாட்சியாகிறார்கள்.


கடிதங்கள் எப்பொழுதும் அணுக்கமானவை.அவை நமக்கு தேவையான உறவுகளில் பொருந்தும் தன்மையுடையவை நண்பனாக, அம்மாவாக, காதலியாக,எதிரியாக, முகம் தெரியாத யாரோவாக, கடவுளாக, வன்மத்தை தீர்க்கிற அடிமையாக, முன்பொரு முறை கலந்திருந்த பெண்ணொருத்தியாக என அத்தனை பரிமாணங்களிலும் பொருந்தக்கூடியவை. கடிதங்கள் கட்டாயம் அனுப்பட்டே ஆகவேண்டும் என்பதுமல்ல,பதில் வந்தே ஆகவேண்டும் என்பதும் இல்லை ஆனால் எழுதப்படவேண்டியவை பாதுகாக்கப்பட வேண்டியவை.


இன்றைக்கும் ஒரு அன்பை கடிதத்தில் பகிர்வதில் இருக்கிற அலாதியும் உணர்வும் தருகிற அனுபவம் தனி. அதுவும் வாழ்வின் முதல் காதல் கடிதங்கள் தருகிற அனுபவம் இன்றைக்கு பலர் இழந்து போகிற ஒன்றாகியிருக்கிறது.என்னுடைய முதல் காதல் கடிதம் என்று நான் சொல்லக்கூடிய ஒன்றும் இப்பொழுது என்னிடமில்லை இந்த விசயத்தில் கறுப்பிக்கும் எனக்கும் ஒரு வழக்கிருக்கிறது.கறுப்பிக்கு கடிதம் எழுதுவது இயல்பாக வரும் ஒரு கலை வெந்தயத்தை அடுக்கி வைத்தது போல கொஞ்சம் சரிவான சின்னச்சின்ன எழுத்துக்கள் அவளுடையது.எழுதுகிற அவளை எழுதுகிற சூழலை நிகழாக கொண்டு வந்துவிடுகிற நடை அது. கடிதத்துக்குள்ளே அங்கங்கே குறுக்கிடுகிற குணம் அவளிடமிருந்துதான் எனக்கு வந்திருக்கலாம்.

வாசித்துக்கொண்டு போகையில் "கொஞ்சம் பொறுங்கோ கை வேர்க்குது" என்றெழுதியிருப்பாள் ஊன்றிவைத்திருக்கிற இடதுகையும்,பின்னிவிட்டிருக்கிற கூந்தல் சரியும் நெஞ்சும், குவிந்திருக்கிற வலது கை-விரல்களும் கொஞ்சமாய் வியர்திருக்கிற அவளும் என கிறங்கிப்போகிற அந்த அறையின் வாசனையை கடிதத்துக்குள் கொண்டு வர ஒரே வசனம் போதுமாயிருக்கும்.சில நேரங்களில் ஒரு கையை ஊன்றி சின்னப்பிள்ளைகள் போல குழுமாடு பிடிச்சுக்கொண்டு அவள் எழுதுகிற விதமே நாள் முழுக்க பார்க்ககூடிய நளினமாயிருக்கும்


"கடிதம் இப்பதான் அரைவாசி ஒரு தேத்தண்ணியை போட்டுக்கொண்டு வாங்கோ சேர்ந்திருந்து வாசிக்கலாம்" என்றெழுதியிருப்பாள்: என்னை வேண்டுமென்றே சீண்டுகிற தருணங்களில் ஒரு மாதிரியாகச் சுழிக்கிற உதடுகளும் சிரிக்கிற கன்னங்களும் எழுதமுடியாத அழகில் அசைகிற புருவங்களும் நினைவுக்கு வர... "போடி கறுப்பியென" வாய்விட்டே சொல்லிவிடுவேன்.


"அந்த நைட்டிதான் போட்டிருக்கிறன், மேசையிலை சாஞ்சிருந்து எழுதிக்கொண்டிருக்கிறன்" என்றெழுதி என்னை திணறடிக்கிற வேலையை வெகு சாதாரணமாக எழுதிவிட்டு, ம்ம்... போதும் போதும் கனக்க கற்பனை பண்ண வேண்டாமென அடுத்த வரியிலேயே என்னை திரும்ப கடிதத்துக்கு கொண்டுவரும் வேலையையும் செய்திருப்பாள்.

ஒவ்வொரு கடிதத்திலும் என்னை தனக்கு இன்னும், இன்னும் நெருக்கமாக உணாத்துகிற கடிதங்கள் அவளுடையது.நான் உரிமையுள்ளவன் என்றவள் எழுதாமல் எழுதுகிற கடிதங்கள் அவை. அவளுடைய எல்லா தேவைகளும் என்னைக்குறித்தே இருந்தன அதுவே அவள் இனியெப்பொழுதும் கடிதங்கள் எழுதாதவளாக அகிப்போகவும் காரணமாயிருந்தது.கடந்து வந்த கடிதங்கள் காலத்தின் பதிவுகள்தான் அவை பாடல்களைப்போல புகைப்படங்களைப்போல ஒரு பெரிய நிகழை அதன் காலத்தை வாழ்வின் உயிர்ப்பான தருணங்களை அனுபவிக்கத்தவறிய கணங்களை உணரத்தவறிய விசயங்களை கொண்டு வந்து தருகிற சாட்சிகளாயிருக்கின்றன. அது யார் யாருக்கெழுதிய கடிதங்கள் என்றாலும் கடிதங்கள் காவாந்து பண்ணவேண்டியவை கைவிடப்பட்ட கடிதங்களின் துயரம் பெரியது. யாருக்கும் அவசியமற்ற கடிதம் என்ற ஒன்றை யாராலும் எழுதிவிட முடியாது யாராலும் எழுதிவிட முடியாது தேவையற்றவை என தவிர்க்கப்படுகிற கடிதங்கள் கூட தொலைக்கப்பட வேண்டியவை அல்ல. தீர்ந்து போன காலத்தின் தீராத சாட்சியங்களாய் கடிதங்கள் இருக்கின்றன.


#
என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு லெட்டர்,
கடிதம் எழுத தேவையானதெல்லாம் ஒரு பெயர்மட்டும்தான் - கற்றது தமிழ்.


#
எழுதிய ஒரே கடிதத்திலும் உன்னை நினைக்கிற நேரங்கள் அந்தரங்கம் நிரம்பியவை என்றெழுதிய பேரின்ப நாயகியின் கலைத்துப்போட்ட எழுத்துக்களால் ஆன கடிதமொன்று இன்னமும் இருக்கிறது.இதை அவள் வேறொரு விதமாக எழுதியிருந்தாள் அது ரகசியம்.


#
எல்லாவிதத்திலும் உங்களுக்கு பிடித்தவளாகவே இருக்க வேண்டும் என்பது என் ஆசை கண்ணா, இதை ஆசை என்பதா தேவை என்பதா anyone. உன்னை முழுவதுமாக நான் நிரம்பவேண்டும், எந்த தடைகளுமில்லாமல் சுதந்திரமாய் உன் ஆக்கினைகளை அனுபவிக்க வேண்டும் - திருகோணமலையில் இருக்கும்பொழுது கறுப்பி எழுதிய கடிதத்திலிருந்து.


#
தம்பி உனக்கு வயது காணும் நீ சின்னப்பிள்ளை இல்லை - அம்மா.


_______________________________________________________________


என்னுடைய வாசனை வருகிற உன் கடிதங்களை வாங்கி வைத்திருந்த
உன்பச்சை நிற பெட்டியை என்ன செய்தாய்
எரித்து விட்டதாக சொன்ன எல்லா கடிதங்களையம் நினைவுக்குள் வைத்திருக்கிறாயா
சாம்பலாகிய கடிதங்கள் ஒரு போதும் நினைவுகளை கரைத்து விடுவதில்லை

நமக்கிடையே உரையாடல் இல்லாதிருக்கலாம்
எனக்கும் உனக்கும் இடையில் எல்லாச் சொற்களும் தீர்ந்து போயிருக்கலாம்

இருந்தும்...

வேறுபக்கம் திரும்புகிற உனது பார்வைகளை சரிசெய்யவோ
எதிர்ப்படுகிற உன் அருகாமையை இலகுவாக்கவோ
இருவருக்குமான அந்தரத்தை தவிர்க்கவோ
இடைவெளியின் நிச்சயத்தை உறுதிப்படுத்தவோ
கடைசிக் கடிதமென்றொன்றை எழுதிவிடு.

இதுவே கடைசிக்கடிதமென்றொரு கதையை
இதுவே கடைசி சந்திப்பென்றொரு நிகழ்வை
நமக்குள் நிகழ்த்த காலத்தை அனுமதி

கடிதங்களை கைவிடுதலும் பிரியங்களை கடந்து போதலும்
செய்து பார்க்க்கூடியவை என்பதில் ஒரு மாற்றுமில்லை அவை
கைவிடுபவர்களை விட்டு நீங்குவதில்லை
என்பதிலும் ஒரு மாற்றமுமில்லை.
___________________________________________


சம்பந்தப்பட்ட குறிப்பு:

எண்பதுகளில் பிறந்தவர்கள் வரைக்குமே கடிதங்களும் கசட்டுகளும் ( Cassette ) உச்ச பாவனையில் இருந்திருக்கிறது. இப்படி நாமே மறந்து போன பழைய விசயங்கள், நான் சேமித்து வைத்திருந்த இவைகள் எல்லாம் பலதும் கைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. என்னுடைய வாழ்வியலிலிருந்தும் என்னை தூர வைத்திருக்கிற காலத்தை சபிப்பதில் என்ன நடந்துவிடப்போகிறது இந்த மிகமோசமான நடைமுறை வாழ்வென்கிற சமூக அமைப்பில்.

______________________________________________

இதனை பகிர்வதற்கான எந்த முகாந்திரமும் சமீபத்தில் நிகழவில்லை என்றாலும் பல நாட்களாக கிடப்பிலிருந்த இதனை பகிர்வதற்கு கீழே இருக்கிற குறிப்பு காரணமாயிருக்கலாம்.

*
சரிசெய்யப்படாமல் கிடந்த மீயுருவை மாற்றிப்பார்த்திருக்கிறேன் ஒழுங்கற்றவைகளின் மீதான ஆர்வம் ஒருபோதும் குறைவதில்லை நமக்கு, இருந்தாலும் தளத்தை சரியாக திறக்க முடியாமல் இருந்த சிரமத்திற்காக இப்படி மாற்றியிருக்கிறேன்.

*
இதை மாற்றித்தரும்படி குண்டம்மாவை கேட்டிருந்தேன் தனக்கு தெரியேல்லை எண்டு சிணுங்கினாள். அது என்னுடைய கடவுச்சொல்லை பயன்படுத்துவதன் அசௌகரியத்தை தவிர்த்தல் என்பது எனக்குத்தெரிந்தாலும் அவளிடம் தனகுவதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தானே செயகிறது- அப்ப பாருங்களன்.