Saturday, October 17, 2009

இடைவெளி...image: lariza.com

எதை எழுதுவது... எழுதாமல் இருப்பதில் கனம் கூடிக்கொண்டேயிருக்கிறதா மூளை? இல்லையா... பிறகேன் இப்படி அலைக்கழிகிறது மனம். நிறைவடையாமல் இருக்கிறது நாட்கள்!

பைத்தியக்காரத்தனங்களோடிருக்கிறது இயல்பு... எனக்கிருக்கிற மனநிலை பாதிப்புக்கு என்ன பெயர்... தீபாவளிக்கு என்ன விஷேசம்... அவள் இந்த முறை வாழ்த்தனுப்பாவாளா? தமிழ்மணம்...வலைப்பதிவுகள்... கட்டுடைப்புகளின் சாத்தியமின்மை. உன்னைப்போல் ஒருவனும் வெடிகுண்டு முருகேசனும். ஒன்லைனுக்கு வராத அய்யனார்... அகப்படாமல் இருக்கிற சன்னாசி. சாருநிவேதிதா... இணையத்தேடு பொறிகள். எழுதாமல் கடந்து போன ஒரு மாதம்... இந்த பக்கதின் இரண்டாவது வருட நிறைவு.

கதைக்காமல் இருக்கிற காதல்... யாழ்ப்பாணத்து பொம்பிளைகளும் சமுதாய கட்டமைப்புகளும். எனக்கு நடக்கப்போகிற கல்யாணம்...வரப்போகிற மனைவி. சொல்லிக்கொண்டு பிரிந்த அவள்...நவீனத்துவங்களின் பிரதி...பழக்கப்படாத எழுத்து...வாசித்து முடிக்காத நவீனன் டைரி...சுசீலா...ஆதர்சங்ககளின் நாயகி.

ராஜபக்க்ஷேயும் தமிழக அரசியலும்...பிரபாகரனும் பிம்பத்தகர்ப்புகளும். மார்க்கசியமும் புதிய தோழர்களும்...காத்திருப்பின் இடைத்தங்கல் முகாம்கள்...மக்கள் மயமாக்கப்பட்ட வன்முறைகள். முனகிக்கொண்டிருக்கிற மாற்றுக்கருத்தியல்...அதிகாரங்களின் தீர்வு.பயமுறுத்திக்கொண்டிருக்கிற பணம்...விருப்பமில்லாத சராசரி வாழ்க்கை. திசைகளை தீர்மானிக்காத பயணம்... குறைந்தளவு போலித்தனங்களோடிருக்கிற இரவு...குறிகள் சொல்கிற கதைகள்... கடைமைக்கு நிகழ்கிற புணர்வுகள்...நிர்பந்தம் சுமக்கிற உறவுகள்.

இன்னும் படிக்கலாம் என்கிற யோசனை.சிறப்புத்தேர்ச்சி அடைய நினைக்கிற சமையல் கலை. சமையல், சமைதல்,சமைத்தல் என்பவை பற்றிய ரசனைகள்.எதிர்காலம் என்கிற திணிப்புகளும் தயார்படுத்தல்களும். ஏற்றுக்கொள்கிற பக்குவமில்லாத மனது... அம்மணமாயிருக்கிற உண்மை... திரவ வடிவிலான ஒழுக்கம். போலிகள் வரைகிற விதிகள்... உடல் மீதான புலன்களின் ஆதிக்கம்.

முன்றாந்தரத்து நீலப்படங்கள்...உடல் மீது நிகழ்கிற வன்முறை... சத்தம் நிறுத்திவைத்து அவற்றைப்பார்க்கிற ஒருவனின் சப்பைக்கட்டுகள்... கடவுள் அமைத்து வைத்த மேடை... கடவுளை உணர்கிற சாராயக்கடை. யாரென்றே தெரியாத ஒருத்தியின் உள்ளாடைகள் பற்றிய ஆராய்ச்சி... தொலைபேசியினூடான வெளியேற்றங்கள்.

எழுதுவதென்கிற நமைச்சல்...அசௌகரியம் தருகிற சூழல்...திணிக்கப்பட்ட வாழ்வு. எழுதாமல் இருக்கிறதன் பாதிப்பும் விளைவும். தோழிகள் இல்லாத அரபு தேசம்... மறைவில் கழுவுகிற அழுக்கு... புனிதங்களின் மீதான அவநம்பிக்கை...பாவம் புண்ணியம் பணியாரம்!
தன்முனைப்புகளின் மீதிருக்கிற அக்கறையும் பிடித்தமும்.முகங்களை மறைக்கிற குறிகள் தனிமைப்படுத்தலின் விளைவு. பலவீனர்களின் பிரசங்கம்...குற்றவுணர்வுகள் இணையச்சாமியார்களின் வளர்ச்சி. கடவுளை தேடுகிற கூகுள்,இணையக்குழுமங்களில் கடவுளின் பங்களிப்பு...மின்னஞ்சலில் வருகிற பக்தி.

இடைக்காலப்பாடல்களின் வாசனை... இரவில் அணிகிற ஆடை.பருத்தித்துறை ஊராம் பளக்கொடி பேராம்.ஊரிலிருக்கிற குடும்பம்...அப்பாவோடு பேச நியை இருக்கிறது... அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய நம்பிக்கை. தீர்க்கவேண்டிய கடன்...பொறுப்புகள் அல்லது நிர்ப்பந்தங்கள். எதிர்காலம்...திட்டமிடல்... கோடு போட்டு வைத்திருக்கிற வாழ்கை. சும்மா இருத்தல்... கணங்களில் வாழ்தல்!

வாசித்தல்... எழுதுதல்...எழுதாமலிருத்தல்...எழுதவேண்டும் என்கிற இருக்கப்படாத குணம். எழுதுதல்...எழுதி எழுதி எழுத்தாகுதல். நானெழுதுகிற நாவல்... எழுத நினைக்கிற ஊரின் கதை... ஊரின் மறைவாய் கதைக்கப்படுகிற பெண்கள். அவள் எனக்கு சொன்ன கதை... பிரதியை எழுதுகிற ஆசிரியன்... ஆசிரியன் இறந்து போன பிரதி... வாசகனுக்கும் எழுத்துக்குமான இடைவெளி-வாசிக்கிறவன் எழுதாமலிருக்கிற சொற்களை கண்டடைதலுக்கான பிரதியிலிருக்கிற சாத்தியங்கள்.


தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லியே ஆகவேண்டுமா...?நீ கற்பனை செய்கிற எனக்கான பிம்பங்களில்
பொருந்த முடியாமைக்கு வருந்துகிறேன் தோழி..
நீ அறியாத ஆதிக்கணமொன்றில் நிகழ்திருக்கலாம்
நெருக்கத்திற்கான முதல் துளி...
நீள் வளையப்பாதையில் இயங்குகிற பூமி
எந்தக்கணத்திலும் நின்று போகலாம்...
தன் முனைப்புகள் இல்லாத ஈர்ப்பின் மீது
நீடித்திருக்கிறது காதல்
இடவெளிகள் மாறுகிற கணங்களில் நிகழக்கூடும்
இயங்க மறுக்கிற பூமியும்
நெருக்கத்திற்கான கடைசித்துளியும்.புனைவுகளையும் கனவுகளையும் சாத்தியப்படுத்துகிற உனக்கு...