Thursday, March 27, 2008

தாவணி கட்டிய தேவதை...


உன் தாவணிகள்


ஏன் இவ்வளவு அழகாயிருக்கிறது தெரியுமா


நீ எந்த வண்ணத்தில் உடுத்திருந்தாலும்


நீ பூசுகிற வெட்கத்தின் வண்ணத்தை


அணிந்து கொள்கின்றன


உன் தாவணிகள்...


என்னது உனக்கு சேலை கட்டத்தெரியாதா


சரி நீ கஷ்டப்பட வேண்டாம்
ஏதாவது ஒரு சேலையை


எடுத்து உன்னை சுற்றிக்கொள்


அதுவாகவே உன்னை கட்டிக்கொள்ளும்...


இறுகக் கட்டியிருக்கிறாய் என்பதால் மடடுமல்ல


உன்னை கட்டியிருக்கிறோம்


என்கிற கர்வத்தில்


அழகாயிருக்கிறது தாவணி...

பாவாடை தாவணியில் வெளியே வரும்பொழுதில்


அவிழ்ந்து விடுமோ என்று பயப்படுகிறாயா


கவலையை விடு


உன்னை தழுவுகிற சுகத்தை விட்டு


அவை நழுவி விடமாட்டா...


உன் தோட்டத்து மல்லிகைப் பூக்களிடமிருந்து

எனக்கொரு முறைப்பாடு

நீ புடைவை கட்டினால் மட்டும்தான்

தங்களைக் கண்டுகொள்கிறாயாம் அதனால்

உன்னை இனி ஒவ்வொரு நாளும்

புடைவை கட்டும்படிக்கு சொல்ல வேண்டுமாம் நான்..

உன் புடைவைகளும் இதைத்தான் சொல்கின்றன எனக்கு...
உன்னைத் தீண்ட முடியாத கோபத்தில்


காற்று தாவணியோடு மல்லுக்கட்டுவதைப்பார்த்து


புன்னகைக்கிறது உன் கூந்தல் பூக்கள்


அவையிரண்டையும் பார்க்கையில்


தவிக்கும் என்னைப்பார்த்து


குறும்பாக சிரிக்கிறது


என் காதல்...காற்றில் அசைகின்ற தாவணிக்கு


அப்படி என்ன மயக்கமோ


ஒரு வேளை உன்னை தழுவிக்கொண்ட


மயக்கம் தருகிற போதையோ


இப்படி தழைகிறது...


மாமாவின் மனசுல தொடர் புகழ் திவ்யா(பாவனா தொடர்)
http://manasukulmaththaapu.blogspot.com/2008/03/4.html
நளினமான காதல் உரையாடல்கள் மூலம் வலையுலக இளம் நெஞசங்களை கொள்ளை கொண்டிருக்கும் திவ்யா விடம் பாவனா படங்கள் கேட்டிருந்தேன் அவர் இதுக்கு மிஞ்சி என்னால தொடரை இழுக்க முடியாது நான் என்ன நெடுந்தொடரா எழுதுகிறேன், கூகிளில் தேடினால் கிடைக்கும் என்றார் அவருக்காக சில பாவனா படங்கள், படம் மட்டும் போட்டால் நல்லாயிருக்காது என்பதால் சில வார்த்தைகளும் எழுதியிருக்கிறேன்...
படங்கள் எல்லாம் திவ்யாவுக்கு
வார்த்தைகள் எல்லாம் தேவதைக்கு...

Wednesday, March 26, 2008

கொலுசுகளின் சில்மிஷம்...

கழற்றி வைத்த கொலுசுகள்
தலையணைக்கடியில் சப்தமிட...
கொலுசுகளை பிரிந்த கால்கள்
நடு இரவில் தூக்கம் கலைக்க
எப்படித் தூங்குவேன்
நீ கொடுத்த கொலுசுகள் இல்லாமல்

என்ன குறும்பு பார்;
சப்தமிட்ட கொலுகளை எடுத்து
முத்தமிட்டு பார்த்ததும்
சப்தமில்லாமல் நழுவி
மார்பில் விழுந்தது
விழுந்த கொலுசுகளை
எடுக்க மறந்து தூங்கிப்போனேன்
என்னோடு நீயிருக்கிறாய்
என்கிற நினைவில்

தூக்கம் கலைகிற அதிகாலைப்பொழுதில்
கழுத்தோரம் பரவிய மீசை முடியின் குறுகுறுப்பில்
சிலிர்த்துப்போய் விழித்தேன்

அட! கொலுசுகள்தான்

போடா...

உன்னைப்போலவே இருக்கிறது
நீ கொடுத்த கொலுசுகளும்!

Tuesday, March 25, 2008

இப்பொழுதெல்லாம்...

இப்பொழுதெல்லாம் அடிக்கடி

கோபப்படுவதாய் சொல்கிறாய்
கோபப் படவும் செய்கிறாய் -இந்த
கோபத்தையெல்லாம் இவ்வளவு தூரம்
வர முன்பு காட்டினாயா

அருகிலிருந்தே அனுபவித்திருப்பேனே
அழகான கோபங்களை

கொஞ்சிக்கொஞ்சியே
கெஞ்சியிருப்பேனே

இப்படியான இன்னுமொரு ஏக்கத்தை
எப்படிக் கொடுக்க முடிகிறது உன்னால்

திருப்பி வைத்த முகத்தின்
இடது கன்னத்து தழும்பில்
அடக்கி வைத்த சிரிப்பின் வரிகள்

கீழ் காதோர மச்சத்தில்
துளிர்க்கின்ற வியர்வை

உம்மென்று உதடு சுழித்து
உர்ரென்று விழித்து
தாழ்கின்ற கண்கள்

வியர்வையோடு பரபரக்கும் கைகளுக்குள் நானாக
சுகமாக கசங்கிப்போகும் கைக்குட்டை

உன் பொய்க்கோபம் தாளாமல்
மேவித்தணிகின்ற மோகனங்கள்

சிரித்து விடத்தயாராய் இருக்கும் கண்களை
கட்டுப்படுத்த போராடும்பொழுது
கூடுகின்ற உன் அழகு

அதற்கு துணையாய் உதடுகளை
கடித்து வைத்திருக்கும் குறும்பு

எத்தனை அழகு உன்னிடம்
நீ கோபப்படுகையில்

போடி...
அழகாகத்தான் கோபப்படுகிறாய் நீ!

Saturday, March 8, 2008

மகளிர்தின வாழ்த்துக்கள்...

*
பூமிக்கு
தேவதை என்கிற
அழகான வார்த்தையை தந்தது
பெண்மை...

*
பூமி
இன்னமும் பூக்கள்
தருவதற்கு காரணம்
பெண்மை...

*
ஒரு புள்ளியில்
பிரபஞ்சமாய்
பிரபஞ்சம்
ஒரு புள்ளியாய்
பெண்மை...


பெண்மையைப்பற்றி நான் என்ன சொல்வது, பெண்மையை பேசுகிற அளவுக்கு நான் இன்னமும் அதனை முழுதாய் உணரவில்லை என்பதோடு அது மிகப்பரந்த அர்த்தமும் சக்தியும் கொண்டது என்பதால் வாழ்த்துக்கள் மட்டுமே என்னால் தர முடியும்

உலகத்தில் உள்ள அனைத்து பெண்மைக்கும் என்னுடைய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்...

Wednesday, March 5, 2008

அலைகள் ஓய்வதில்லை...

"மேரி போலாமா..."
ம்...
" விச்சு போலாமா..."
ம்..
" மேரி போலாமா..."
ம்...
"விச்சு போலாமா..."
ம்...
என்ன பார்க்கிறீர்கள் அலைகள் ஓய்வதில்லை படம் பர்த்ததிலிருந்து மனதில் இருக்கிற காட்சிகளில் இதுவும் ஒன்று படம் முழுவதுமே மனதில் இருந்தாலும் சில காட்சிள் அழகான கவிதைகளாக அடிக்கடி நினைவில் வருபவை... ராதா (மேரி) ஒரு தேவதை போல இயல்பான காதலியின் உருவமாக மனதில் பதிந்துவிட கார்த்திக் (விச்சு) அதே இயல்பில் காதலானக காட்டப்பட்டிருப்பதும் படம் பார்ப்பவர்களுக்கு தங்கள் காதலை திரையில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவது என்னவோ உண்மைதான். இது என்ன எங்கள் ஊரில் இந்தப்படம் முலம் சேர்ந்த காதலும் கூட இருக்கிறது,நான் பிறப்பதற்கு முதலே படம் வந்திருந்தாலும் முதல் தடைவை பார்க்கும் பொழுதே பிடித்துப்போன, மனதில் பதிந்து விட்ட படங்களில் இதுவும் ஒன்று அது ஏனோ தெரியவில்லை அலைகள் ஓய்வதில்லை படம் எனக்குள் ஏற்படுத்திய உணர்வும் எனக்கு புரியவில்லை...
இப்படி படம் 1981 ல் வந்திருந்தாலும் அதன்பிறகு வந்த எல்லா தலைமுறை இளைஞர்களுக்கும் இந்தப்படம் படித்திருந்தது என்பது மறுப்பதற்கல்ல ஆகவே எனக்கும் பிடித்துப்போனதில் வியப்பேதும் இல்லையே படம் பார்ப்பதற்கு முதலே பாடல்கள் பல முறை கேட்டிருந்ததாலும், அவை பிடித்த பாடல்களின் வரிசையில் முதல் இடஞ்களில் இருந்ததாலும், படம் பார்க்கையிலேயே பாடல் காட்சிகள் அழகாக மனதில் பதிந்துவிடுகிறது...
பாரதிராஜா காதலை அற்புதமாக காடசிப்படுத்துவார் என்றால் மணிவண்ணன் கதையை ஒரு கவிதையாகவே எழுதிருப்பார் இது போதாதென்று வைரமுத்து பொங்கி பிரவகித்திருப்பார் இவர்கள் மட்டும்தானா காதலை கொண்டாடுவார்கள் எனக்கென்ன காதல் தெரியாதா என்பது போல (அவருடைய தயாரிப்பில வந்த படம்வேறு) படம்முழுவதும் காதலை இசையாகஇழையவிட்டிருப்பார் இளையராஜா...
மொத்தத்தில் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு முறையேனும் அவரவர் கடந்த காலத்தையோ அல்லது நிகழ் காலத்தையோ ஞாபகப்படுத்தியிருக்கும் என்பது உண்மை. அத்தோடு காதல் என்பது எப்போதும் ஒரே மாதிரியே இருக்கிறது என்பதற்கு அலைகள் ஓய்வதில்லை படம் எல்லோருக்கும் பிடித்துப்போனதும் அது இத்தனை வருடங்களுக்கு பிறகும் ரசிக்கப்படுகிறது என்பதுமே நல்ல சாடசியாகிவிடுகிறது.
மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு இந்தப்படம் நிறையப்பிடிக்கும. இந்தப்படம் எனக்கு பார்க்கக் கிடைத்தது நான் 11ம் ஆண்டு படிக்கும்பொழுது என்று நினைக்கிறேன் கிடைத்ததும் ஒரு முழுமையான தரமான "Videocassette" அதனால் இருந்த இடத்தை விட்டு நகராமல் பார்த்து முடித்துதான் நகர்ந்தேன் படம்முடிந்த பிறகும் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன் படம் பார்த்தது பக்கத்து வீட்டில் என்றபடியால் அவர்களுடைய பல விதமான கிண்டல்களும்கேட்க வேண்டியிருந்தது
"ஆஆ... வயசுதானே அதுதான் அசையாமல் இருந்து பார்க்கிறான்..."
"யாரடா அது எங்களுக்கும் சொல்லன்..."
"என்னடா மயங்கி விட்டாய் போல இருக்கு"
"அதெல்லாம் சரி வரும் ஒண்டையும் யோசிக்காதை..."
என பல விதமான கதைகளை பக்கத்து வீட்டு "அன்ரி" சொன்னாலும் நான் எதற்கும் பதில் சொல்லவில்லை ஆனால் அவரும் படத்தை முழுவதுமாய் ரசித்து பார்த்தார் என்பது வேறுவிசயம்...
அது சரி இப்ப ஏன் இதைப்பற்றி சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா அது ஒன்றுமில்லை திங்கட்கிழமை கலைஞர் தொலைக்காட்சியில் போட்டதால திரும்பவும் ஒருமுறை இந்தப்படத்தை பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது அதனால்தான்.
காதல் அதன் அலைகள் ஓய்வதில்லைதானே...

Tuesday, March 4, 2008

சுஜாதா...
தோற்றம்- 03-05-1935.

மறைவு - 27-02-2008.


நான் ஒரு முறையாவது நேரில் சந்தித்து விட வேண்டும் என்று நினைத்திருந்த மனிதர்களுள் சுஜாதாவும் ஒருவர் நான் வாசிக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து என் கைகளுக்கு வந்து போயிருக்கிறது சுஜாதாவுடைய எழுத்துகள் ஆரம்பத்தில் அட நல்லாயிருக்கே என்று படித்தாலும் போகப்போக தேடித்தேடி வாசிக்கும் அளவுக்கு ரசிகனாகிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்...

எப்படித்தான் இந்த மனுஷன் இப்படியெல்லாம் எழுதுகிறாரோ என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன் எத்தனை வயது இந்த ஆளுக்கு இப்படி இவ்வளவு விசயங்களை படிக்கவும் எழுதவும் எப்படிமுடிகிறது என்று ஒரு விதமாய் பெருமையும் வியப்புமாய் அவரை ரசித்திருக்கிறேன்...

அவர் மறைந்துவிட்டார் என்கிற தகவலை நான் அறிந்ததே அது நடந்து முந்று நாட்களின் பினர்தான் ஆனாலும் உடனடியாக நான் பதிவொன்றும் எழுதவில்லை ஏனோ தெரியவில்லை அவருடைய எழுத்தை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை என்றாலும் அவற்றைப்பற்றி பதிவெழுத எவ்வளவோ இருந்தும் இப்படி சுஜாதா சார்ந்த என் முதல் பதிவே அவருடைய மறைவு பற்றியதாக அமைந்துவிட்டதே என்கிற வருத்தமும் இன்றுவரை எதுவும் எழுதவில்லை ஆனாலும் அவரின் மறைவு குறித்த நினைவு என் குறிப்புகளில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பதிவு...

சுஜாதா நம்மை விட்டு மறைந்திருக்கலாம் ஆனால் அவருடைய பெயரும் எழுத்தும் தமிழின் வரலாற்றில் காலத்தால் மறைக்க முடியாதது...