Friday, June 26, 2009

மலைகளில் காணாமல்போன தேவதைகள்...மலைகளில் நிகழ்கிற ரகசியங்களை நதிகள் கொண்டு செல்கின்றன வாழ்க்கையில் நிகழ்கிற ரகசியங்களை காலம் காவிக்கொண்டு நகர்கிறது.அருவிகள் விழுகிற ஓசைகள் மலைகளில் பகிர்கிற கதைகளின் கிசுகிசுப்புகளாகவே எனக்கு கேட்கிறது.எவ்வளவு மனிதர்கள்,எவ்வளவு கதைகள், எவ்வளவு ரகசியங்களை கொண்டிருக்கும் இந்த மலைகள். பறவைகள் பகிரங்கமாய் கூடுகிற மலைகளை ஏறுகையில் மனிதன் ஆதிகாலத்துக்கு போய்விடுகிறான். ஒரு சுதந்திர உணர்வை அடைகிறான். மலையின் உச்சியில் இருக்கும் பொழுதுகளில் உற்சாக மனோநிலை இருப்பது இந்த சுதந்திர உணர்வுகளின் வெளிப்பாடாய் இருக்கலாம்.பாரங்கள்,நிர்ப்பந்தங்கள், கவலைகள் எல்லாம் கீழே நகர வாழ்க்கையின் உயரத்துக்கு வந்து விட்டதைப்போலொரு உணர்வு மலைகளின் உச்சிகளில் கிடைக்கிறது.கைகளை அகல விரித்து தலைக்கு மேலே போகிற முகில்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டு பறக்கவாரம்பித்துவிட்டதாக பாவனை செய்து கொள்கிற ஆனந்தம் மலைகளில் நிகழ்கிறது.

___________________________________________________

பால்ய காலத்தில் அறிமுகமான தேவதைகள் மலைகளில் வசிப்பதாகத்தான் அறிந்திருக்கிறேன். முன்பொரு நாளில் வேதைகள் மலைகளில் வாழ்ந்ததார்களாம், மழை நின்ற இரவுப்பொழுதுகளில் அவர்கள் நதிகளில் மிதந்து வருவார்களாம், நதிகள் வற்றுகிற காலங்களில் காற்றில் மிதந்து வருவார்களாம்.எனக்கு நம்பிக்கை இருந்தது,நான் மலைகளில் இருக்கிற தேவதைகளை தேடத்தொடங்கியிருந்தேன்."இப்பொழுது தேவதைகள் இல்லையா" என்றேன்.

"இருக்கிறார்கள் ஆனால் மலைகளில் வசிப்பதில்லை"

என்று அலட்சியமாய் சொன்ன மிருணாளினி ஆளை அடிக்கிற அழகி! கொஞ்சம் மாநிறம் என்று சொல்லக்கூடிய நிறைய கறுப்பு நிறமவள்.கால்களை நீட்டி சாய்ந்தமர்ந்து,மிருதுவாய் மூடிய கண்களோடு உதடுகள் நனையாமல் மதுவருந்துகிற அவளைப்பார்க்கையில் தேவதைகள் மதுபான விடுதிகளுக்கு வருவார்கள் என்பதாகத்தான் தோன்றியது.

அறுபத்தொரு நாட்களுக்கு முன்னர் அப்படியவள் சொல்லிய இரவில் நாங்கள் ஆடைகளின்றி உறங்கியிருந்தோம். அதற்கு பிறகு அவளை பீதுருதாலகால(Pidurutalagala)மலையில் தொலைத்துவிட்டேன்.

______________________________________________________________
பெண்களைப்போலவே வளைவுகளும் அழகுகளும் ரகசியங்களும் என பொதிந்து கிடக்கிறது மலை, அந்த மலையை அதிசயங்கள் நிரம்பிய பெண்ணொருத்தியோடு ஏறுவதென்பது அற்புதமான அனுபவமாகத்தான் இருக்க முடியும்.

இப்பொழுது நான் சொல்ல வந்தது ஒரு காலத்தில் ராசதானியாக அல்லது கோட்டையாக விளங்கிய சிகிரியா(Sigiriya Rock)மலையைப்பற்றியது அல்ல அந்த மலையில் நடந்த சில கதைகள்தான். மலை என்று சொல்வதை விட அந்தப்புரம் என்பது அழகு,இந்த மலையின் உச்சி வரை மூன்று தடைவைகள் போய் வந்திருக்கிறேன்.

முதல்தடவையின் பொழுது ஒரு அரசாங்க வேலை செய்கிற குழுவினரோடு சென்றிருந்தேன் எங்கள் ஊரிலிருந்து ஆரம்பித்த இலங்கை முழுவதுக்குமான பயணம் அது. அதிலும் ஒரு தோழி கிடைத்திருந்தாள். நான் தான் அந்த "செட்டிலேயே" வயது குறைந்தவனாயிருந்தேன் அவள் என்னோடு நெருக்கமாயிருந்தது அந்த குழுவில் வந்திருந்த அவளோடு வேலை செய்கிற அனேகமானவர்களுக்கு ஆச்சரியமாயும் எரிச்சலாயும் இருந்திருக்கலாம்!அவள் அடிக்கடி என்னை தேடிக்கொண்டதும், அந்த பயணம் முழுவதும் அக்கறையோடென்னை கவனித்துக்கொண்டதும், தான் ஏதாவது வாங்கினால் எனக்கும் சேர்த்து வாங்கியதும், என்னோடு இருந்து பயணம் செய்ததும்,என் கைகளைப்பிடித்துக்கொண்டு கதைகள் பேசியதும், நிச்சயமாய் மற்றவர்களுக்கு ஆச்சரிமாய்தான் இருந்திருக்கும்.

அவளுக்கும் எனக்கும் இடையில் அப்படியொரு ஈடுபாடிருந்தது, என்னை விட அவள் என்னோடு அதிகமாய் நெருங்கியிருந்தாள்.சொல்லப்போனால் நான் அந்த சுற்றுலாவில் இணைந்து கொள்வதற்கும்,இலங்கை முழுவதும் போய் வருவதற்கும் அவள்தான் காரணமாயிருந்தாள்! வேறொரு நண்பர் மூலம் அந்த சுற்றுலாவுக்கான அழைப்பு வந்திருந்தாலும் அவளது ஆர்வத்துக்கும் அன்புக்குமாகவே பயணத்துக்கு வருவைத உறுதி செய்துகொண்டேன். அவள் மனம் முழுவதும் ஏதோ ஒரு நெருக்கம் வைத்திருந்தாள் என்னோடு.

பல முறை நிகழ்ந்திருந்தாலும் நுவரெலியாவில் தங்கியிருந்த பின்னிரவில் உறங்கப்போவதற்கு முன்பாக நிகழ்ந்த அந்த தருணம் எந்த வைகயானதென்கிற முடிவுக்கு வர முதலே விலகிக்கொண்டோம். இப்பொழுதும் அவள் ரகசியமாய் சிரிக்கிறவளாகவே இருக்கிறாள்.

யாருமற்ற நடுமத்தியான வெயிலில் சிகிரிய புல்வெளியொன்றில் என்னோடு அவள் வெளிர்பச்சை நிற துப்படாவில் இளமஞ்சள் நிறமாய் படுத்திருந்தாள்.


பிந்திய குறிப்பு : அவள் கல்யாணமானவளென்பது எனக்கு தெரிந்திருந்தது.***

இரண்டாவது முறை அது ஒரு கலகலவென்கிற அனுபவம். கிட்டத்தட்ட ஒரே வயதுக்கார சில யாழப்பாணத்து அழகிகள், பல பெடியள் மற்றும் அலுவலக அங்கத்தவர்களென ஒரு கலந்து கட்டிய குழு என்னுடைய ஹொட்டேல் முகாமைத்துவ பள்ளியில் இருந்து புறப்பட்டோம்.பாட்டும் கூத்தும் கும்மாளமும் என களைகட்டிய பயணம்.சென்றமுறையும் பாடினேன் என்றாலும் இந்தமுறை பாடி-கொண்டாடினோம். சிகிரியாவை திருகோண மலையிலிருந்து ஹபரண போய் அங்கிருந்து சென்றடைந்தோம்.அந்த மலையேறிய நிகழ்வில் கொஞ்சம் ஒடிசலாய் இருந்த அவள் ஒரு கத்தோலிக்க தேவதையாய் இருந்தாள் ஆன்(Anne) என்பது அவளுடைய பெயர்! நெற்றியில் விழுகிற முடிகளை அடிக்கொரு தடவை எடுத்து விட்டவாறே லேசாய் மூச்சுவாங்கி கன்னங்கள் வியர்க்க அவள் ஏறிவந்த மலை இன்னமும் அழகாயிருந்தது. Anne எங்கே இருக்கிறாய் இப்பொழுது, கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை பாடலை இப்பொழுதும் நினைவில் வைத்து பாடுகிறாயா? பியிரடிக்காமலே போதையேற்றுகிற விழிகளோடிருந்த இன்னொருத்தி அணைகிற தருணங்களுக்கு அடிக்கடி நெருங்கினாலும் பிடிகொடுக்காமலே இருந்தாள். இவளுக்காகவே "நாட்டுச்சரக்கு நச்சுன்னுதான் இருக்கு" என்கிற பாடல்போன்ற ஒன்றை பயணத்தின்போது ஏழு தடவைகள் பாடியிருப்பேன்.

மலையேறாமல் பள்ளி அதிபரோடு அடிவாரத்திலேயே இருந்துவிட்ட குந்தவி பயணத்தின் ஆரம்பம் முதலே என்னை அதிகம் தொந்தரவு செய்து கொண்டிருந்தாள். அமைதியான புன்னகையோடு சகலதிலும் கலந்து கொண்ட அவள் மனதளவில் நெருங்கியிருந்தாள். வட்ட முகம், பளிச்சென்ற கண்கள், கவிதையான மொழி என மனதுக்குள் நிறைய இடம் பிடித்தது இவள்தான்...பயணத்தின் முடிவில் சில வரிகள் எழுதி கையொப்பமிட்டுக்கொடுத்த அந்த குறிப்பபேடு காணாமல் போன நாட்களில் நிறையவே கவலைப்பட்டேன்.

***

திருகோணமலை Club Oceanic ஹொட்டலின் நீச்சல் குளத்துக்கருகில் வட்டமாய் உயர இருக்கைகளில் அமர்ந்தவாறே பியர் அருந்திக்கொண்டிருந்தோம்.மெதுவாக பாடுவதற்கு அனுமதி கொடுத்திருந்தது விடுதி முகாமைத்துவம்.

"வாவென்று சொலல்லாமல் வருவதில்லையா-காதல்
தாவென்று சொல்லலாமல் தருவதில்லையா"

என்கிற வரிகளில் ஆரம்பித்து முழுவதுமாய் அந்த பாடலை பாடி முடிக்கையில் உற்சாக கை தட்டல்களுக்கு நடுவிலும் எதிரேயிருந்த ஆனினது கண்கள் தாழ்ந்து சிரித்ததை நான் தவறவிடவில்லை. போத்தலில் மீதமிருந்த முழுவதையும் அவளைப்பார்த்துக்கொண்டே ஒரே மூச்சில் குடித்து முடிதேன் இப்பொழுது அவள் என்னை கவனிக்கத்தவறவில்லை என்பதை கண்களிலேயே காட்டினாள். அப்பொழுது அவள் பாட ஆரம்பித்திருந்தாள்-

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை-என்
கண்களை பறித்துக்கொண்டும் ஏனின்னும் தூங்கவில்லை...

எல்லோரும் உறங்கிய அந்த இரவில் என்னோடு விழித்திருந்த Anne தங்க நிற உடலில் மஞ்சள் நிற மணலை அணிந்திருந்தாள்.

***
இதையெல்லாம் மறந்து விடுவோம்!
மூன்றாவது முறையாயும் திருகோணமலையில் வேலை செய்து கொண்டிருந்த நாட்களில், திருகோணமலையில் இருந்த உறவுகளோடு கனடாவிலிருந்து விடுமுறையில் வந்திருந்த குடும்பம் ஒன்றும் அவளது குடும்பமும் சேர்ந்து கொள்ள எங்கேயாவது போவதென்று- சிகிரியாவென்று முடிவாயிற்று அதுவும்.

இந்தப்பயணம் முற்றிலும் வித்தியாசமானதாய்,எனக்கு நெருக்கமாயில்லாத என்னுடைய அப்பாவழி உறவினர்கள் பழக்கம் குறைந்த சூழல் என கொஞ்சம் இறுக்கமாயிருந்து.கடக்க வேண்டிய சில சோதனைச்சாவடிகளை தாண்டிய பிறகு சூழல் கொஞ்சம் உற்சாகமாய் மாறியது. மொத்தம் பத்து பேர் மட்டும் இருந்த அந்த பயணத்தில் அவள் மட்டுமே எனக்கு நெருக்கமானவளாயிருந்தாள்.

சூழல் கொஞ்சம் இயல்புக்கு மாறிவிட கலகலப்பாய் இருந்தது, அப்பொழுது யாரவாது பாடலாமே என்கையில் அவள் என்னை நோக்கி விழிகளை உயர்த்தினாள்,எனக்கு மட்டும் புரிகிற மொழியில் பாடென்றாள். விழிகளில் பாடமுடியுமென்பதை அவள் அப்பொழுதிலிருந்து அந்த நாட்கள் முழுவதும் அடிக்கடி உணர்த்திக்கொண்டிருந்தாள்.

"கண்பேசும் வார்ததைகள் புரிவதில்லை" என்று தொடங்கிய அந்தப்பாடல் அவளது கண்கள் பேசிய மொழிகளுக்கான எந்தன் குறிப்புகளாய் இருந்தது.அவள் கன்னங்களுக்கு உள்ளேயும் வெளியே கண்களாலும் சிரித்துக்கொண்டாள்.

அங்கே கொஞ்சம் அடங்க மறுத்தவர்களாய் நாங்கள் இருந்தோம். மலையை அடையும் வரை இரு கரையும் மரங்கள் அணிவகுத்திருந்த சிவப்பு மண் பாதையில் கைகோர்த்தது போல் தோள்கள் உரச நடந்த அனுபவம் தனி. இப்பொழுதும் முதுகுக்கு பின்னால் குறைசொல்லுதலும் குறுகுறுத்த பார்வைகளும் இருந்துதானிருக்கிறது.அது கடைசியாய் என் காதுக்கும் அவள் மூலமாய் வந்து சேர்ந்தது. இதனை சொல்கையில் அவள் விழிகள் துளிர்த்து விடும்போல ஈரமாகியிருந்தன.கடினப்பட்டு தவிர்த்துக்கொண்டாள்.

மலையில் மூன்றில் ஒரு பங்கை எல்லோருமாக ஏறினோம் அதற்கு பிறகு முடியவில்லை என மற்றவர்கள் பின்தங்கிவிட நானும் அவளும் வேகமாய் முன்னேறினோம். குண்டும் இல்லாமல் ஒல்லியும் இல்லாமல் அளவாய் தெரிந்த அவள் நெருக்கமான அழகுகளில் இருந்தாள். தழைவாக கறுப்பு நிற நூல்வளையம் போட்டிருந்த அவள் கூந்தல் காற்றில் அலைந்து கன்னங்களில் கோடுகள் போட்டிருந்தது கொஞ்சம் மிகையான உரோமங்களோடிருந்த அவளது பின்களுத்தில் துளிர்த்திருந்த வியர்வைத்துளிகள் வெயில் பட்டு மின்னியது.சிரித்து சிரித்து மூச்சுவாங்கி மலையேறிய அவளோடு நான் மிதந்து கொண்டிருந்தேன்.

ஓவியங்கள் இருக்கிற சுவர்ப்பகுதிக்கு வந்து சேர்ந்தோம் நிதானமாய் ஒவ்வொரு ஓவியமாய் கவனித்தாள். ஓவியங்களை தொடக்கூடாது என்கிற உத்தரவை காவலுக்கு நின்றவர் அடிக்கடி சொல்லிக்கிக்கொண்டிருந்ததில் ஓவியங்களுக்கு பதில் நான் அவளது கைகளை அழுத்தமாய் வருடிப்பற்றினேன்.

பாதி ஏறி முடித்து சிங்கத்தின் கால்கள் போல அமைக்கப்பட்ட பகுதிக்கு வந்து சேர்ந்தோம் அங்கே கொஞ்சம் இளைப்பாறினாள்.மலையின் மறுபக்கத்திற்கு போய் காடாக இருந்த இடத்தைப்பார்த்தோம் அந்த ஓடை மாதிரியான சுவரோரம் இருந்த இளம் சிங்கள காதல் ஜோடியை கவனித்தவள் என்னை நோக்கி கண்களில் எதையோ சொன்னாள்,அவள் என்ன சொன்னாள் அல்லது நினைத்தாள் என்பது உங்களுக்கு தேவையில்லாதது.

முகட்டுக்கு செல்கிற ஏணிப்படிகளில் ஏறி முடிக்கும் வரை கவனம் என்கிற வார்ததைகளைத்தவிர வேறெதும் சொல்லாமல் வந்தவள் ஏறி முடிந்ததும் அங்கும் இங்கும் என ஓடி கொண்டாடினாள். ஏற்கனவே இரண்டு முறை பார்த்திருந்ததில் அவளுடைய சந்தோசங்களை கவனித்துக்கொண்டிருந்தேன் நான்...

காதல்,காதல்,காதல் என்று...
எனக்குள் இருக்கிற காதலை நான் என்னால் முடிந்தவரை சத்தமாக அந்த மலை முகட்டின் வெளியில் மொழிந்தேன்,அவள் என்னோடு கைகோர்த்துக்கொண்டாள்.காசியப்ப மன்னனின் நீர்தடாகத்தில் கை நனைத்துக்கொண்டோம்,அந்தக்கணங்களில் அந்தப்புரத்து தடாகத்தில் எங்கள் உயிர்கள் நனைந்திருந்தது.

அந்த மலையின் உச்சியில் புகைக்க வேண்டும் போலிருந்தது அதற்கு அவள் காரணமாயிருக்கலாம் அல்லது இனியந்த மலைக்கு வருகிற சந்தர்ப்பம் எனக்கு இருக்குமோ என்பது காரணமாயிருக்கலாம்.நான் புகைப்பேன் என்பது மற்றவார்களுக்கு தெரியாததாய் அல்லது பிடிக்காததாய் இருந்தது. நான் ஒரு சிகரெட்டை இழுத்து முடிக்கும் வரை அருகிலேயே நின்றாள். மற்றவர்கள் ஏறி வரவும் எல்லோருமாய் புகைப்படங்கள எடுத்துக்கொண்டோம். இறங்கும் பொழுதும் கடைசியாகவே இறங்கினோம்.இறங்குவதற்கு முன்பொரு சிகரெட் வேண்டுமென கேட்டதில் பறித்து வைத்திருந்த பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை அனுமதித்தாள் இழுத்து முடிக்கும்வரை எதிரே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

இறங்கி முடிக்கையில் இன்னும் நெருங்கியிருந்தோம்.

மதிய உணவை சிகிரிய உணவகத்தில் எடுத்தோம்.அழகிய பெண்ணொருத்தி பரிமாறிய மதிய உணவும் பொழுதும் ரசனைக்குரியதாயிருந்தது.அவள் பேனையைக்கொழுவியிருந்த இடத்தை காட்டி இப்பொழுதெனக்கொரு பேனையாயிருப்பது பிடித்திருக்கிறதென்று அருகிலிருந்தவளிடம் கிசுகிசுத்தேன் யாருக்கும் தெரியமால் நறுக்கென்று கிள்ளினாள்.

அந்த இரவு முழுவதும் என்னோடு விழித்திருந்த அவள் பனி விழுகிற மல்லிகைப்பந்தலின் அடியில் நிலவொளியினை அணிந்திருந்தாள்.
மலைப்பயணங்கள் போவது சுவாரஸ்யமானது அதுவும் தோழிகளோடு போவது அழகிய சுவாரஸ்யம்.
___________________________________


இந்தக்தைகளை கேட்டுக்கொண்டிருந்தவள்,

"நீ சின்னப்பெடியன் எண்டெல்லோ நினைச்சன்" என்றாள்.
இப்பொழுதும் என்னை அப்படித்தான் நினைப்பதாக அவளது உதடுகள் காட்டிக்கொடுத்தன.

நான் சின்னப்பெடியனாய் இருப்பது என்னுடைய பலம், எல்லாத்தேவதைகளோடும் பழக முடிகிறது இந்த தோற்றத்தில்தான்.

"நீ..கூட என்னை அப்படி நம்பித்தானே வந்தாய்" என்கிற அவளது உண்மையை வெளிப்படுத்தினேன்.

இப்பவும் அப்படித்தான் நினைக்கிறேன் அனால் உனக்கு முத்தங்களைப்பற்றி தெரிந்திருக்கிறதென்பதை முதல்நாள் இரவே அறிந்துகொண்டேன்.

"கலங்கடிக்கிறாய்" என்றாள் கிறக்கமாக.

"இப்பொழுது என்னை ஒரு முத்தத்துக்கு அனுமதி"

"அவசரப்படுகிறாய் டியர்" என்றவள் கொங்கைகள் அதிர சிரித்தாள்.

இரண்டாவது குவளையில் ஐஸ் கட்டிகளை போட்டுக்கொண்டு அணிந்திருந்த குளிர்ச்சட்டையை களற்றி கதிரையில் போட்டாள் அது ஒரு தேவதை தன் சிறகுகளை களைவதை ஒத்திருந்தது.மெழுகுதிரி வெளிச்சத்தில் சிவப்பு நிற மதுரச குவளைகளின் பின்னணியில் தெரிந்த அவளது வெளிர் நீல நிற ஆடைகள் மறைத்த மார்புகளின் தொடக்கம், இருக்கிற போதையை என்னவோ செய்தது.

"இப்ப தர்றியா இல்லையா" என்றேன் மறுபடியும்,

"என்னடா சத்தம்போடுறாய்"

'இப்ப இல்லையெண்டால் இண்டைக்கிரவு உன்னை கொன்டிருவன்"

"நீ செய்யுறதும் செய்யாமலிருக்கிறதும் கொல்லுறது மாதிரித்தான்டா இருக்கு,கடும் ஆளடா நீ.."

என்றாள் ஐஸ்கட்டிகளும் மார்புகளும் தழும்ப!

நான் நிதானமாய் சிரித்துக்கொண்டே பாதி சிகரெட்டை அவளிடம் கொடுத்தேன்...

சிகரெட்டை வாங்குவதற்கு முன்னே குனிந்தவள்
"உனக்கொன்று தெரியுமா..நான் எந்தவொரு ஆம்பிளைட்டையும் சிகரெட் வாயங்கியது கிடையாது நீதான் முதல் ஆள்"என்று உதடுகளைக்குவித்து சிரித்தாள்,சிரிக்கும்பொழுதில் அதிர்கிற அவளை கவனிக்காமல் இருக்க முடிவதில்லை.

நானும் யாருக்கும் சிகரெட்டை கொடுத்தில்லை உனக்குத்தான் கொடுத்திருக்கிறேன் என்றேன்.

"இந்தப்பொய்யை என்னட்டை சொல்லலாதை கள்ளா, நீ ஆரெண்டு எனக்கு தெரியும்"

சரி நான் யாரென்பது அவளுக்கு தெரியும் உங்களுக்கு தெரியுமா...

சில இரவுகளை என்னோடு கொண்டாடிய அவளுக்கே என்னை முழுவதும் தெரியாதெனும்பொழுது உங்களுக்கெப்படி தெரியும்?

அவளுக்கு என்னைப்பற்றி தெரியாது.

அவளைப்பற்றி எனக்கு தெரியும்.

பெயர்:பிரிஜ்ஜெட் கிருபாநந்தினி (Bridget Kirubananthini)

இடம்:திருகோணமலை..

வயது:என்னை விட ஏழுவயது அதிகம்

தொழில்: அழகான தொழில்.

கொஞ்சம் திரண்ட தேகம், திணறடிக்கிற அழகு, குறைந்த பட்ச போலித்தனம்,எதுவும் செய்கிற தைரியம், இயல்பாய் நிகழ்த்துகிற காமம் எனக்கே கற்றுக்கொடுப்பாள் என்பதாக முயங்குவாள்.கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன் என்றால் போடா சின்னப்பெடியா என்று சிரிப்பாள்.

நினைவில் நிக்கிற அழகி
கனவில் வருகிற கண்கள்
கருஞ்சந்தன தேகநிறம்
மனோவசியம் செய்கிற வாசனை
என எனது மொழியில் தேவதையாயிருந்தாள்.

இவ்வளவும் போதுமானதாயிருக்கிறது இவளைப்பற்றி!

இப்பொழுது இரண்டாவது போத்தலின் முடிவுக்கு முன்னேறிக்கொண்டிருக்கிற இவளும் நானும் இருப்பது St.Andrews Hotel- Nuwara Eliya,Sri Lanka.இந்த விடுதி எனக்கு மிக பிடித்தமானதாய் இருந்தது, மிருணாளினி என்கிற முதல் தேவதையையும் இங்கே வந்துதான் அவளது மலைக்கு அனுப்பி வைத்திருந்தேன்.இது பிரிட்டிஷ் காலத்து பங்களாக்களில் ஒன்று, ஜெட்விங்(Jetwing)நிறுவனம் இதனை விடுதியாக்கி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது. ஆவி பறக்க தருகிற கறுப்புத்தேநீரும்(Black Tea), உலகத்து வைன் வகையெல்லாம் கிடைக்கிற வசதியும் இந்த விடுதியில் என்னைக்கவர்ந்தவை.

Bridget போதையில் என்னை கிறங்கடிக்கத்தொடங்கினாள்...போதும் என்பதாய் தோன்றியது-தேவதைகள் அதிகம் குடிக்கக்கூடாது.

லேசான ஆட்டத்தோடு அழகுகள் வழிய நின்றவளை கைத்தாங்கலாய் அணைத்துக்கொண்டேன்.
மெதுமெதுவென்கிற தேகம் தளைய " ஹே சின்னப்பெடியா என்னைக்கொண்டு போடா" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள்.

நான் பீதுருதாலகாலவில் ஏறத்தொடங்கினேன்.

"ஏய் என்னைக்கொண்டு போடா" சிணுங்கினாள்...

வெளிச்சமே விழாத மரங்களில் மறைவிலிருந்த பாறையில் அவளை அமரவைத்தேன்

அப்படியே படுத்தவள் "ஒன்றா ரெண்டா ஆசைகள்..." என ராகமாய் முணுமுணுத்தாள். இந்தப்பாடல் தனக்கு பிடிக்கும் என்பதாய் பதினொரு நாட்களில் எழுபத்தொன்பது முறை சொல்லியிருந்தாள்.

பாறையில் அவளொரு தேவதையாய் கிடந்தாள்!

எனக்கு மழை விட்ட இரவில் நதியில் மிதக்கிற தேவதைகள் நினவுக்கு வந்து போயினர்.

நான் நுழைந்து வெளியேறுகிற கலையில் அவள் மீது பரவ ஆரம்பித்தேன்...

விடிகையில் Bridget காணாமல் போயிருந்தாள்.

அவள் விட்டுப்போன அவளது மார்புகளுக்கு நடுவில் ஆடிய நீல நிறக்கண்கள் இப்பொழுது என் கழுத்திலிருக்கிறது.நான் பீதுருதாலகாலவிலிருந்து இறங்கத்தொடங்கினேன்.
உரையாடல் அமைப்பின் சிறுகதைப்போட்டிக்காக இணைக்கப்டுள்ளது.

Friday, June 12, 2009

32 பதில்கள்- எனக்கு பதில் சொல்லத்தெரியாது!எழுத மறந்த குறிப்பு:
உண்மையில் எனக்கு பதில் சொல்லத்தெரியாது,எனக்குள்ளே இருக்கிற கேள்விகள் போதாதென்று 32 கேள்விகைள அனுப்பி என்னையும் இந்த கேள்விக்கடலில் தத்தளிக்கவைத்த தல தமிழ்பிரியனுக்கு நன்றிகள்.01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
புனை பெயர் என்பதையும் தாண்டி சின்ன வயதிலிருந்து நெடுநாட்களாய் என்னோடு இருக்கிற பெயர்தான் தமிழ், எனக்குள் இருக்கிற இன்னொரு பரிமாணத்தை அதனோடு சேர்த்திருக்கிறேன் தமிழுக்கும் கறுப்பிக்கும் நெருக்கமான தொடர்பிருக்கிறது.எனக்கு பிடித்தமான பெயர்தான்.

தேவதைகள் கறுப்பு நிறத்தில்தான் இருப்பார்கள் அல்லது நீல நிறத்தில் இருக்கலாம் வெள்ளை நிறத்தில் ஆடைகள்தான் அணிந்திருப்பார்கள்.

கறுப்பி - என்னை ஆக்கிரமித்திருக்கிற தேவதை அல்லது மிக நெருக்கமானதொரு புனைவு இணயத்தில் ஏற்கனவே இன்னொரு கறுப்பி இருப்பதில் தமிழன் என்ற பெயரில் உள்ளே நுழைந்து கொண்டேன் எனக்கு பிடித்த அல்லது எனக்குள் இருக்கிற பெண்மைய(கறுப்பியை) இப்பொழுது பிரகடனப்படுத்தியிருக்கிறேன் நீங்கள் என்னை கறுப்பி என்றே அழைக்கலாம்.


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அழுதது என்று எதைக்கேட்கிறீர்கள் மனம் விட்டு சத்தமாகவா? அல்லது எனையறியாது கண்களில் ஈரம்துளிர்த்து விழுவதையா? வாய்விட்டு அழுததென்றால் சில மாதங்களுக்கு முன்பொரு மிதமான போதையின் இரவில்.

மற்றயது என்றால் அது கடந்த புதன்கிழமை நிகழ்ந்த ஒரு வாசிப்பனுபவம்.அதே புதன்கிழமை இந்த எழுத்தாளரைப்பற்றி சுபவீர பாண்டியன் கூட ஒன்றேசொல் நன்றே சொல் நிகழ்ச்சியில் சொல்லியிருப்பார் அது த.அகிலனைப்பற்றியது! இதைப்பற்றி பின்னர் எழுதுகிறேன்..

அகிலனின் மரணத்தின் வாசனை புத்தகத்தை மூன்றாவுது முறையாக இன்னுமொரு சென்னைவாசியிடம் சொல்லியனுப்பியிருக்கிறேன் இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

அம்மப்பாவின் கையெழுத்தைப்போலிருக்கிற என்னுடைய கையெழுத்து எனக்கு பிடிக்கும் ஆனால் இப்பொழுது பேனை பிடித்து தமிழில் எழுதுகிற சந்தர்ப்பங்கள் குறைவென்பதால் பழைய வடிவத்தை பெறுவது சிரமமானதாகத்தான் இருக்கிறது.

ஆங்கிலம் எழுதத்தெரிந்தால்தானே பிடிக்கும் பிடிக்காதென்பதெல்லாம். :)


4).பிடித்த மதிய உணவு என்ன?

பலது இருக்கு..
மீன் குழம்பும், நெத்தலிப்பொரியலும் கூடவே றால் பொரியலோடும கொஞ்சம் தடிப்பா வச்ச சொதியும் வெள்ளை அல்லது சம்பா அரிசி சோறும் இருந்தால் போதும் ஒரு பிடி பிடிச்சுட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளிக்கிடலாம்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நான் வேறுயாரேனுமாக இருந்து இப்பொழுது இருக்கிற என்னோடு நட்புவைத்துக் கொள்வேனா என்கிற கருத்துப்படத்தான் இந்தக்கேள்வி ஆரம்பத்தில் இருந்திருக்கிறது ஆக; நிச்சயமாய் எனக்கு என்னை விட்டால் வேறு யார் நல்ல நட்பாக இருக்க முடியும் சொல்லுங்க.


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அனுபவிக்க என்றால் கடலோடு கொஞ்சம் பயம் இருக்கிறது அருவியில் குளித்த அனுபவம் அவ்வளவாக இல்லை மழை நிறையப்பிடிக்கும்.குளிப்பதற்கு என்றால் எனக்கு நெருக்கமான குளியலைறதான்; இங்கே நான் பாடுவேன்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அப்படியெல்லாம் கவனிக்கிற ஆள் கிடையாது, முதலில் பார்க்கும் பொழுது தோற்றம்தான் கண்ணுக்கு தெரிந்தாலும் அவர் எப்படி பேசுகிறார் என்பதைத்தான் நான் கவனிப்பதாக இப்பொழுது தோன்றுகிறது.பெண்களாக இருந்தால் பாதங்களை அழுத்தமாக பார்த்து பின்னர் கண்களை ஊடறுப்பேன்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

முதல் பகுதிக்கு- நானொரு போலி என்கிற தெளிவு எனக்கிருக்கு இருப்பது
இரண்டாம் பகுதிக்கு- பதில் சொல்லத்தெரியவில்லை அலட்சியமான வாழ்க்கை,கனவுகள்,பலவீனங்கள், தேவைகள்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

என்ன கேள்வி இது?
அவளை எனக்கு முழுவதுமாகப்பிடிக்கும் - என்ன செய்தாலும் அவளோடு வாழ்வது பிடித்திருக்கிறது.நிர்ப்பந்தங்களுக்காக அவள் போடுகிற நாடகத்தனம் பிடிக்காதது.

குறிப்பு: எனக்கு இன்னமும் கல்யாணமாகவில்லை.


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

இப்போதைக்கு - புரிதல்கள் நிரம்பிய கறுப்பு நிற தேவதை ஒருத்தி.
புரிதல்களும் சமாதானமும்- ஊரில் இல்லாமல் போனதற்காக.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

இது கேள்வி என்கிறீர்களா..?கறுப்பு நிற நீளக்காற்சட்டையும் மஞ்சள் நீல நிற கோடுகளோடான நீளக்கை சட்டையும் அலுவலகத்தில் இருக்கிறேன்.
கொலைவெறி- ஆடைகள் இல்லாமல் உலகின் அதிசிறந்த மதுரசத்தை (வைன்) பருகிக்கொண்டு ஒரு புனைவெழுதவேண்டும் என்பது கனவில் வந்த பூனைகள் கொடுத்த பல நாள் ஆசை.


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

உனக்குள் நானே உருகும் இரவில் - வேறெங்கோ அழைத்துப்போகிற தன்மை கொண்டது இந்தப்பாடல்.இன்றைக்கு இந்தப்பாடல்தான் ஏழாவது முறையாக கேட்டும் பார்த்தும் கொண்டிருக்கிறேன்.(ஜோதிகா இன்னும் கொஞ்ச நாள் நடித்திருக்கலாம் )
சமீபத்தில் ஒலிக்க விட்ட பாடல்கள் என்றால்

அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
மூக்குத்திப்பூமேலே காத்து
பனித்துளி பனித்தளி பனித்துளி
மேற்கே மேற்கே மேற்கேதான்
சின்னப்பொண்ணு சேலை
பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
எங்கெங்கே எங்கெங்கே
மானம் ஒன்றே வாழ்வெனக்கூறி - ஈழத்து எழுச்சி கீதம்
இன்னும் சில இடைக்காலப்பாடல்கள்!


13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

இதெல்லாம் கேள்வி- பல நேரங்களில் எது பிடித்த நிறம் என்று முடிவெடுக்கமுடியாமலிருக்கும்.பொதுவாக கறுப்பு,கறுப்பு-வெள்ளை,மனதை கொள்ளை கொள்கிற விசயங்களில் இருக்கிற எந்த நிறமென்றாலும்.கறுப்பு நிறத்தில் எழுதுகிற பேனைகளைத்தான் விரும்பி உபயோகித்திருக்கிறேன்.

14.பிடித்த மணம்?

நிறைய இருக்கிறது- தனி பதிவாக எழுத முயற்சிக்கிறேன்.இப்பொழுது குறிப்புகளாக.

அம்மாவின் வாசனை.
கடவுள் இருக்கிறாரோ இல்லையோ கோவிலில் வருகிற வாசனை
புதுப்புடைவை
அவள் - அவளது- அவளுடைய அருகாமை.
புது,பழைய புத்தகத்தின் வாசனை.
சில பூக்கள்-
தேவதைகள் சூடிய பூக்களும், பூக்கள் சூடிய கூந்தலும்.
என்னுடைய படுக்கையில் இருப்பது(எனக்கிது வாசனைதான்)
அவளுடைய அறை
என்னுடைய வீடு, ஊர்- இது ஊரைப்பிரிந்திருப்பதற்காக மட்டுமல்ல.
பனங்காய் பணியாரம் சுடுகிற வாசனை.
வைன்.

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
நான் அழைக்க விரும்பியருக்கிற இவருக்கு இந்த கேள்விகள் சினத்தை வரவழைக்ககூடும் என்றாலும் அவரை அழைக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன் தொந்தரவுக்கு மன்னிப்பாராக.முடிவற்ற அன்பின் தேடல் எழுதுகிற முபாரக் அண்னதான். இவருடைய கவிதைகளை வாசித்துப்பாருங்கள்.

அடுத்தது தமிழ்நதி ஏற்கனவே அழைத்திருக்கிற அய்யனார்தான் - இவரை மறுபடியும் அழைக்கிறேன் கிறங்கடிக்கிற எழுத்துக்கு சொந்தக்காரன். மகன் பிறந்திருக்கிற சந்தோசத்தில் இருக்கிற இவரிடம் இருந்து கட்டுடைக்கிற பதில்களை எதிர்பார்க்கலாம்.வாழ்த்துக்கள் அய்யானர் மற்றும் குடும்பத்தினருக்கு.

அடுத்தது நிறைய வாசிக்கிற அருண்மொழிவர்மன் நானும் கனடாக்கு வரலாமெண்டு இருக்கிறன் அண்ணன். இவருடைய நினைவுப்பகிர்வுகளும் சில எதிர்வினைகளும் முன்வைத்தல்களும் கவர்கிறது.நல்ல கவனித்தல் இருக்கிற இவர் வீச்சுள்ள எழுத்துகளில் முன்னேறிக்கொண்டிருப்வர்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
சிறுகதை மற்றும் புகழ் பெற்ற மொக்கைகள்- இவர் பதிவுகளை விட இவரைப்பிடிக்கும் ('தல'க்கு மெல்லிய மனசென்று அவரே சொல்லுகிற இவரது தாடிக்குள் இருப்பது மெய்யாலுமே குழந்தை மனசுதான் நம்பிடுங்க :)


17. பிடித்த விளையாட்டு?
ஊரில் அதிகம் விளையாடியது கிரிக்கெட்தான் என்றாலும் வொலிபோல்தான் பிடித்த விளையாட்டு
நெட்போல் - இது அவளுக்காக.
Tennis, foot ball (பார்ப்பதற்கு)
பேணிப்பந்து - ஒரு காலத்தில் கலக்கினோம்.

18.கண்ணாடி அணிபவரா?
போற போக்கைப்பார்த்தல் கெதியில போடவேண்டி வரும்போலகிடக்கு...

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
எனக்கிருக்கிற மனோ நிலையைப்பொறுத்து அமையும் நான் பார்க்கிற திரைப்படங்கள். பெரும்பாலும் உண்மைத்தன்மைக்கு நெருக்கமாக உணர்வோடு எடுக்கப்பட்ட படங்கள்.

*எந்த மனோ நிலையிலும் விஜயகாந்து படம் பார்க்கப்பிடிப்பதில்லை நரசிம்மா என்கிற ஒன்றை பார்த்தபிறகு.

20.கடைசியாகப் பார்த்த படம்?

Perfume- The story of a murderer.
படம் கலைவடிவம்- பழக்காரியின் மார்புக்குள் பதுங்கிக்கொண்டது அந்த இரவு.
கேட்டுக்கொண்டதை ஏற்று மறக்காமல் வாங்கி வந்து கொடுத்த போல்(paul) என்கிற இங்கிலாந்து நண்பருக்கு நன்றி.


21.பிடித்த பருவ காலம் எது?
கோடையும் கோடைகாலத்து அடைமழை நாட்களும், வெளியே செய்வதற்கு எந்த வேலையுமில்லாதிருந்தால் மழைகாலமும். வசப்படுகிற தருணங்கள் இருந்தால் எந்தக்காலமும் பிடித்துப்போய்விடலாம்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

இணையக்கோப்பாக - கொரில்லா மற்றுமொரு முறையாக படிக்கிறேன்.

புத்தகமாக -

தெற்கு பார்த்த வீடு - ஜி.சரவணன் சிறுகதைத்தொகுப்பு.

உலகமயமாக்கலும் மார்க்சியமும்-
கோச்சடையும் க.செ பாலசுப்பிரமணியனும் தொகுத்த கட்டுரைத்தொகுப்பு.(சின்ன புத்தகம்தான் ஆனா ரொம்ப நோகடிக்கிறாங்க படித்து முடிக்காமல் விடுவதில்லை)

நன்றி-எழுத்தாளர் ஜமாலன் புத்தகங்கள் பகிர்தலுக்கு.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
இதெல்லாம் ஒரு கேள்வி வேறை வேலை இல்லையாப்பா உங்களுக்கு!! ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிப்பேன் என்றாவது கேட்டிருக்கலாம்.
நாள் கணக்கெல்லாம் கிடையாது அனால் தோன்றும் பொழுது மாற்றுவேன்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்- எதை சொல்ல எதை தவிர்க்க
கொலுச்சத்தம், பெண்களின்சிணுங்ககல்கள் , ரகசியக்குரல்களும் பின்னிரவு கிசுகிசுப்புகளும், நரம்புகளை அதிரவைக்கிற பறை,இரவின் நிசப்தம்(இதுவும் ஒரு வகை சத்தம்தான் இரவுகளில்) இங்கே சொல்ல விரும்பாத சிலவை,இன்னும் இருக்கிறது.

பிடிக்காதது - தரையில் கிரீச்சிடுகிற ஓசைகள் இயந்திரங்களின் இரைச்சல்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சவுதி அரேபியா

26.உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

தெரியவில்லை.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

புரிதல் இல்லாத மற்றவர்களை மட்டுமே பார்க்கிற சமுதாயம்.இந்தக்கேள்வியும் அதற்கு பதில் சொல்கிற நானும்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சட்டென்று உணர்ச்சி வசப்படுகிற மனது, கட்டுக்கடங்காத உடல், கோபம் இது பெரும்பாலும் நெருக்கமானவர்களிடமே வெளிப்படுகிறது.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

என்னுடைய ஊர்(யாழ்ப்பாணம்),அவளுடைய ஊர்.
நயாகரா(கனடா),இந்தியா,எகிப்து,ரோம்,மாலைதீவுகள்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

என்னை திருப்தி செய்கிற நானாக.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

இதெல்லாம் ஒரு கேள்வி?!!
அவளை தொந்தரவு செய்கிற என்னுடைய வேலைகள் அனைத்தும்.முடிந்தால் நான் செய்யக்கூடிய அவளுடைய வேலைகள்.

அவளுக்கு பிடிக்காத எனக்கு தெரிந்த பெண்களுடன் பேசுவது- :))

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

உலகம் போதுமானதாயிருக்கிறது.


உதிரிப்பதில்கள்:

அட போங்கப்பா வயித்தெரிச்லை கிளப்பிக்கிட்டு!!

நல்லா இருங்கப்பா!

Saturday, June 6, 2009

பூனைகளுக்கு இல்லாத நிர்பந்தம்...
மின்சாரம் தடைப்பட்ட இரவுப்பொழுதில்
உன்னுடைய நினைவுகள் வருவதற்கு,
ஞாயிற்றுக்கிழமையின் மத்தியானமொன்றில் பெருக்கெடுத்த
வியவர்வையோடு முயங்கிய பொழுதுகள் காரணமாயிருக்கலாம்,
கதவுக்கு வெளியில் ஆயத்தமாகிற பூனைகளை சபிப்பதில்
என்ன நியாயம் இருக்கமுடியும் சொல்
சொல்லிக்கொண்டு பிரிந்து போனபிறகு,

வேகமாய் இயங்கிய சாம்பல் நிறப்பூனை புதியதாய் இருந்தது
இந்த சிகரெட் முடியும்வரை பூனைகள் இயங்கக்கூடும்,
அடுத்த கோடைக்கு இந்தப்பூனைகள் எங்கேயிருக்கக்கூடும்,
பூனைகள் இயங்குதலை நிறுத்தி நீளமாய் சப்பதமிட்டன...
இவள் எழுந்து வெளியே வருவதற்குள் போய்விடவேண்டும்

நான் அறிந்து கொள்ள விரும்பாவிட்டாலும்
அவளுக்கும் பூனைகளை தெரிந்திருக்கலாம்,
கோடையின் கசகசப்புகள்...
வெறுமனே வெளிப்புழுக்கம் மட்டுமல்ல.

picture:gattinapaintings

Thursday, June 4, 2009

ஆறாவது உலகம்...

ஒரு பேனை அதன்மூடியை காணவில்லை,
சிகரெட்டுகளின் பெட்டி அதைப்பற்றவைக்கிற சாதனம்,
தலைமாட்டில் இருக்கிற புத்தகங்கள்,
வரிசை மாறியிருக்கிற சிறுகதையொன்றின் பிரதிகள்,
எழுதி குறையிலிருக்கிற கடிதத்தின் தாள்கள்,
கழுவ வேண்டிய நிலையில் எப்பொழுதும் இருக்கிற தலையணை உறையில்
எழுதியிருப்பது இல்லாத அவளுடைய பெயராய் இருக்கலாம்,
கிறுக்கல்களோடு இருக்கிற படுக்கை விரிப்பு
கலைந்து கிடக்கிற போர்வை,
கழற்றிப்போட்ட இரவு உடை,
மூட்டைப்பூச்சிகள் குடியிருக்கிற மெத்தையின் இடுக்குகள்,
மெத்தைக்கடியில் பரவியிருக்கிற...
கோபிகிருஷ்ணன் பேட்டி,
டிசேயின் பின்நவீனம்,
அய்யனாரின் உரையாடிலினி,
எஸ்ராவின் துயர்மிகு பொழுது,
ஷேபாசக்கதியன் தமிழ்,
ஓஷோ சில குறிப்புகள்,
தமிழ்நதியின் அழைத்துக்கொண்டிருக்கிறது வெளி,
அகிலனின் வீடெனப்படுவது யாதெனில்,
எழுதியவர் பெயர் மறந்து போன
ஈழத்தமிழர்களும் இலக்கியப்புடுங்கிகளும்,
அனுப்பப்படாத சில கடிதங்கள்...

கனவில் வருகிற பூனைகள்,
நடு இரவில் அழைக்கிற அரேபியப்பெண்கள்,
படுத்ததும் உறங்கிவிடுகிற நெருக்கம்,
பழக்கப்பட்ட வாசனை என...
ஐந்து பேர் கொண்ட அறைக்குள் இருக்கிற
ஆறாவது உலகம் அது எனக்கானது.