Showing posts with label சோகங்களை கொண்டாடுதல்.... Show all posts
Showing posts with label சோகங்களை கொண்டாடுதல்.... Show all posts

Friday, January 15, 2010

மிதக்கும் தன்மைகளோடு கடந்து போன இரவில் அறையில் நிரம்பிய நினைவுகள்.

முன்குறிப்பு : பெரு நினைவுகள் எழுதுகிற சிறு குறிப்புகள் - 1.





மூன்றாம் சாமத்து பொழுதுகளில் தன்
முழுபலத்தையும் பிரயோகித்திருந்தது
கொண்டாடத்தொடங்கியிருந்த காதல்,

அடர்த்தியான வேப்பமிலைகளினூடு
நிலவொளி விழுகிற குருமணலின் மீது
மொழிதலில் சமன் செய்ய முடியாத அழகுகளில்
பனி விழுகிற நதியென விழி முடியிருந்தவள்

எழுதப்பழகுகிற குழந்தையின்
கிறுக்கல்களை சிலாகிக்கிறதைப்போலவென்
அத்து மீறல்களை அனுமதித்துக்கிடந்தாள்

ஆடைகள் அவிழப்போகிற தருணங்களில்
மிக மெதுவாய் சொன்ன "வேண்டாமப்பா"வில்
விளங்கப்படுத்தினாள்.

விலகி உள்ளங்கைகள்
வியர்க்க அமர்ந்திருந்த என்னை
மடிசாய்த்து முடிகோதினாள்
மிகத்தவிப்பான மௌனக்கணங்களின்
முடிவில் என் நெற்றியில் விழுந்த
சுடுவிழி நீரில் நிரம்பியிருந்தது
முழுவதுமான அவள் காதல்.

_________________________________________________





ஆயுள் முழுவதும் தொடர்கிற பெரு நினைவுகளை தந்து போனவளின் பரவசங்களை அசைபோட்டுக்கொண்டிருக்கிறது மனது.இனியெப்பொழுதும் நிகழ முடியாத அற்புதங்களை செய்து போன உன் நினைவுகள் என்னை திரும்ப முடியாத திசைகளில் தொலைத்து விட்டு சந்தோசமாய் திரும்பிக்கொண்டிருக்கிறது. அழைத்துப்போக யாருமில்லாத வெளிகளில் உனது நிழலை எதிர்பார்த்துகாத்திருக்கிறது பிரியங்களைய தாங்கியிருக்கிற பலவீனப்படவனின் உயிர். வந்தென்னை அழைத்துப்போக நீ வரவேண்டாம் கல்நுழைகிற வேர்களின் லாவகத்திலிருக்கிற என் பிரியங்கள் கொடுங்கனவுகளாய் இருக்கக்கூடும். துயர் மிகு பொழுதுகளை தவிர்த்து விடு நானிப்படியே பிழைத்துப்போகிறேன் இனியொரு பிரிவையென்னால் பொறுக்க முடியாது.முன்பே எழுதப்பட்டதுதான் என்றாலும் இனியெப்பொழுதும் சந்தித்துவிடாமலிருப்போம்.


மிதக்கிற தன்மைகளோடு கடந்து போன போதைநிரம்பிய இரவிலும் அறை முழுவதும் நிரம்பியிருந்து உன் நினைவுகள். எவ்வளவுதான் எழுதினாலும் தீர்ந்து போவதில்லை காதல்! இங்கே எழுதவராத சொற்களால் நிரப்ப முடியாத உன்னைப்போலவே.



தேவதைக்கான குறிப்பு :
இந்த முறையும்
எச்சில்பட முத்தமிட்டு வாங்கிக்கொண்ட
ஏதோ ஒரு குழந்தையிடம் கொடுத்திருக்கிறேன்
உன் பிறந்த நாளுக்கான பூச்செண்டை.

15.01.2010



எந்த மொழிதலிலும் சமன் செய்துவிட முடியாத என் கறுப்பியின் காதலுக்கு.

Tuesday, November 4, 2008

சோகங்களை கொண்டாடுதல்...

சோகங்களை கொண்டாடுதல்...2

முடிந்துபோன ஆவணி மாதத்து மூன்றாவது வாரத்தின் இரண்டாவது நாளில் உன் கனவுகள் வருகிற அதிகாலையில் அழைத்திருந்தாய் அவசரமாக...உன்னுடைய கனவுகளை நீயே கலைத்திருந்தாய் அதுவே நிஜமும் ஆயிற்று! உன்னைப்பற்றிய உனக்கும் எனக்கும் மட்டுமேயான தருணங்களால் நிரம்பிய என் எதிர்காலத்தின் கனவுகளை அதுதான் கடைசி அழைப்பென்று அறிவித்து வெகுசாதரணமாய் விலகிக்கொண்டாய் நீ கொஞ்சம் பொறு!

ம்ம்ம்...


திசைகளற்று அலைந்து கொண்டிருந்த என்னை நேர்ததிசைகளின் புள்ளியில் நகர்த்தியவள் நீ!

இப்பொழுது எப்படி என் கண்களை பறிக்கிற வக்கிரம் உண்டாயிற்று! உன் இயல்புகளில் என் வாழ்நாள் முழுவதற்குமான வெளிச்சம் உன் கண்களில் நிறைந்திருக்கிறது என்கிற என் நம்பிக்கைகளின் மீது உன் சாபங்கள் நிரம்பிய பார்வையை எப்படி தர முடிகிறது உனக்கு... தேவதைகள் சாபம் தருவதில்லை என்பது என் ஆதிகால நம்பிக்ககைளில் ஒன்று...என் ஆதிகாலம் உன் தரிசனத்திலிருந்து தொடங்கிற்று! உன் பிரியங்கள் நிரம்பிய சொற்களில் நகர்கிற என் நாட்களை ஒரு அத்துவானக்காட்டின் இருள் நிரம்பிய ஏதோவொரு புள்ளியில் விட்டு என் கண்களையும் பறித்துப்போகிறாய் நீ...

'என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக'
என்கிற வரிகளை உன் கடிதங்கள் தோறும் எழுதிய நீயா! என் ஜென்மங்கள் முழுதும் தீராத சோகத்தை தந்து போகிறாய் உனக்கு இது சாத்தியமில்லாத ஒன்று என்பதை நீ உணரவில்லையா?! தேவதைகள் பொய் சொல்வதில்லை அவை அவற்றின் இயல்புளை இழப்பதில்லை என்பது உலகம் தோன்றியது முதல் இருக்கிற உண்மை காதலும் உலகம் தோன்றியதிலிருந்து இருக்கிறதுதானே...?

நீ எப்படி நடிக்கப்பழகினாய் நீயாக சொல்லி விட்டாய் என்கிற உன் தன்முனைப்புகளின் மீதான பிடிப்புகளில் ஒரு வைராக்கியத்தோடு இதுவரையான என் நூற்றுக்கணகான அழைப்புகளுக்கு பதில் தராமல் உன்னை நீயே வருத்திக்கொண்டிருக்கிறாய். ஒரு தேவதையிடம் யாசிக்கிறவன் ஒரு நாளும் தன்முனைப்புகளில் இருக்கமாட்டான் இயல்பாய் நிகழ்கிற பிரியங்களில் எந்த தன்முனைப்புகளும் 'நான்'களும் இருப்பதில்லை...

உன்னை எனக்குத்தெரியும் நீ இயல்பாய் நிகழ்கிறவள்!

நான் உயிர் பிரியும் தருணங்களிலும் சாய்ந்து கொள்ள விரும்புகிற உன் நெஞ்சைத்தொட்டுச்சொல் நீ எனக்களித்த பரியங்கள் எல்லாம் ஒரு விருந்துக்கு வந்து போனவளின் வார்த்தைகளைப்போலவா...ஒரு இறப்புக்கு வந்து போன பழைய ஊரின் மூன்றாம் நபரின் மனோ நிலையிலா! பகிர்ந்து கொண்டாய் என்னோடு; உன் பரியங்களை,சுகங்களை,பிரச்சனைகளை சோகங்களை...இல்லையில்லை!!! நான்தான் பிரச்சனைகள் சோகங்களை பகிதர்ந்திருக்கிறேன் நீ சுகங்களை மட்டுமே எனக்கு தந்தவள் பிரச்சனைகளை என்னிடம் வராதபடிக்கு பார்ப்பது உன் இயல்புகளாய் இருந்தது தேவதைகளின் இயல்புகளில் இதுவும் ஒன்றோ! என் சுகங்களுக்காக மட்டுமே நம்பிக்கைகள் நிரம்பிய உன் பிரியங்களை பகிர்ந்தவள் நீ...


ஏதோ ஒரு வருடத்தின் சித்திரைப்பொங்கலன்று குடித்திருந்த நான்;அந்த நிலைதடுமாறுகிற போதையிலும் "நீ என்னை இந்த கோலத்தில் பார்த்தால் நான் செத்து விடுவேன்" என்று சொல்லியதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை...அதற்கடுத்த நாளின் சந்திப்பில் கூட நீ உங்களுக்கு ஏலாதென்றால் ஏன் குடிக்கிறீர்கள் என்னோடு வந்த பிறகு குடியுங்கோ அப்ப கவனிக்கிறதுக்கு நானிருக்கிறேன் என்கிற உன் பிரியங்களைக்கொட்டி கோபங்களாக வெளிக்காட்டினாய்... இப்பொழுதும் குடித்துக்கொண்டுதான் இருக்கிறேன் அதுமட்டுமல்ல பல புது முகங்களுக்கு நடுவில் கண்ணீர் விட்டு புலம்பிக்கொண்டிருக்கிறேன் இதுவரையும் அம்மாவுக்கு பிறகு நான் கண்ணீர் விட்டழுத முதல் உறவு நீ மட்டும்தான்...மற்றவர்களுக்கு மத்தியில் கண்ணீர் என்ன கவலைப்படுவதையே விரும்பாதவன் நான் என்பது உனக்கு தெரியாததல்ல இப்பபொழுது முகமே தெரியாத நண்பர்களிடம் எல்லாம் புலம்புகிறேன் குடல் வெளியில் வருகிறதைப்போல வாந்தி எடுக்கிறேன்...குற்றவாளி ஒருவனை தண்டிக்கிற ராஜகுமாரி ஒருத்தியின் அழகிய திமிரோடு ஏளனமாய் பார்க்கிறாய் நீ...

எத்தனை கோப்பகைளை நிரப்பியும் உன்னை மறக்க முடியவில்லை நீ...நீ மட்டும்தான்!!! என்னை நிரப்புகிறவள் என்கிற உன்னுடைய இயல்பாய் நிகழ்கிற அன்பின் தருணங்கள்தான் இப்பொழுதும் நினைவுக்கு வருகிறது...நான் இதனை திரும்பத்திரும்ப எழுதிய ஒரு கடிதத்தின் பதிலாக பிரியங்களை சொற்களாக்கி உயிர் முழுவதும் நிறைத்திருந்தாய் நீ அந்த உன் பிரியங்கள் நிரம்பிய சொற்களை திரும்பத்திரும்ப புலம்புகிறேன் நான்...இத்தனை கோப்பைகளுக்கு பிறகும் "அவள் ஒரு தேவதை மச்சான்" என்கிற என் புலம்பல்கள்...உன் பிரியங்களாலும் நினைவுகளாலும் நிரம்பிய என்னை கேலி செய்கின்றன...சாம்பல் நிறத்தின் சிகரெட்புகைகளின் நடுவில் தேவதையென நீ வந்து சிரிக்கிறாய் உன் அடிமையொருவனின் அவஸ்தைகளை பார்த்து...


எவ்வளவு குடித்திருந்தாலும் ஒரு தேவதையை குறைசொல்ல முடிவதில்லை!
இப்பொழுதும் உன் கரிசனங்களைத்தான் அசைபோடுகிறது மனது...
உன் பிரியங்களைத்தான் பேசுகிறது நீ கொடுத்த காதல்...

உன் நினைவுகளையும் எடுத்துப்போயிருக்கலாம் உன் பிரியங்களை கொண்டு போன நீ...!




பின் குறிப்பு:

//
எப்பொழுதோ ஒரு போதை தெளிகிற பின்னிரவொன்றில் எழுதிய (புலம்பிய) வார்த்தைகளை பதிவாக்குகிற முயற்சியில் தணிக்கைகளுக்கு பிறகு மூலப்பிரதியிலிருந்து மாறுபட்டிருக்கிறது பதிவு...

//
சோகங்களும் அனுபவிக்கப்பட வேண்டியவையே காலம் கடந்து விடுகிற அல்லது புதைதந்து போகப்பண்ணுகிற சோகங்கள் எல்லாம் கொண்டாடப்பட்டவையாகவே இருக்கின்றன கொண்டாடப்படாத சோகங்கள் நாட்களை நகர விடுவதில்லை காலம் அங்கே தடுமாறி விடுகிறது என்பது போதையில் கிடைக்கிற தெளிவு...

//
இப்பொழுதெல்லாம் குடிக்காமல் இருக்க முடியவில்லை குடித்தால் அழாமல் இருக்க முடியவில்லை...

Monday, September 29, 2008

ஒரு பிறந்த நாளும் சில குறிப்புகளும் ஐம்பதாவது பதிவும்...

இந்த பூமிக்கு நான் வந்த நாளை கொண்டாடுகிற இந்த நாளில் சில குறிப்புகளை சொல்லிப்போகிற மனோநிலையும் இல்லாமல் இருக்கிறது! இருந்தும் எனக்குள் முட்டிக்கொண்டிருக்கிற நினைவின் சொற்களை குறிப்புகளாக எழுதியே பழக்கப்பட்டு விட்ட எனக்கு (அநேகம் காற்றில்தான் எழுதியிருக்கிறேன்) இன்றைக்கும் எழுதுவதற்கான மனோநிலை வாய்க்காமல் இருந்தாலும் இணையம் அரிதாகக்கிடைக்கிற இந்த நேரத்தில் கட்டாயமாய் சிலதை எழுதி விட வேண்டும் என்கிற கடமையில் எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல், எப்பொழுதும் முன்னேற்பாடுகள் செய்வது என் இயல்பாய் இருந்ததில்லை...உனக்கான கடிதங்களையும் நான் அப்படியே எழுதி இருக்கிறேன்...!


*
என் அம்மாவின் பிறந்த நாளை
எனக்கு ஞாபகப்படுத்திய உனக்கு
என் பிறந்நாள் மறந்து போயிற்று...!

*
தவம் தடைப்பட்டுப் போனாலும்
தேவதைகள் தோற்பதில்லையே
நீ தேவதைதானே...!


*
உயிர் முழுக்க வலி
உன் பிரிவறித்த தோழி வாழ்த்தனுப்பியிருந்தாள்
இந்த பிறந்தநாளுக்கு...!


*
என்ன தரவேண்டும் உனக்கு
இந்த பிறந்தநாளுக்கு
எதை விரும்பினாலும் கேள்
உன் பரியங்களையும் நினைவுகளையும் தவிர...!


*
மூடிவைத்திருக்கிற உன் தொலைபேசியை
நெருங்க முடியாமல் இருக்கலாம் எனக்கு
உன்னை மூடி வைக்கிற முயற்சியின்..
தோல்வியை நீ தாங்க மாட்டாய் தமிழ்
அதற்காகவேனும்
உன் பிரியங்களின் சாயல்களில்
ஒரு வாழ்த்தை அனுப்பிவிடு...!


*இதுவரை எண்பத்தொன்பது அழைப்புகளுக்கு
பதில் தரவில்லை நீ இன்று மட்டும்,
எனக்கு நம்பிக்கை இருக்கிறது
நாள் இன்னமும் மீதமிருக்கிறது
நாள் முடிகிற கடைசித்தருணங்களிலும்
அநாமதேயமாய் வரக்கூடும் ஒரு வாழ்த்து...!


*
எனிந்த மௌனம்
உன் நினைவுள் அழுகிற சத்தம்
உன்னை தூங்கவிடாது தமிழ்
ஒரு வாழ்த்தை அனுப்பிடு!
மற்றொரு பிறந்த நாளைக்குள் நிகழலாம்
சில அழைப்புகளும் பதில்களும்...!


*
உனக்கென்றுதானே பிறந்திருக்கிறேன்
உன் நினைவுகளோடு
வாழ்ந்துவிடுகிறேன்...!


பின் குறிப்பு:

1)இது என்னுடைய ஐம்பதாவது பதிவு எதிர்பார்த்துக்கொண்டிருந்த சில நிகழ்வுகள் நிகழாமையில் புலம்பலை கோர்வையாக்குகிற அளவுக்கு நிதானம் இல்லாமல் இருக்கிறது...அதனால் குறிப்புகளாக மட்டும்...

2)ஒரு புகைப்படம் மற்றும் ஒரு பாடலோடு பதிவாகி இருக்க வேண்டியது நேரமும் கணினியும் செய்கிற சதியில் முடியாமல் போயிற்று


3)சந்தோசத்துக்காக...

A LOT OF
BIRTHDAY WISHES
WITH LOVE & AFFECTION
ONLY & JUST FOR YOU...

on
29.09.2005