Thursday, February 14, 2019

குடியுரிமைக் கோப்பைகளுக்கான நிரம்புதல்...


இது ஒரு கதையெண்டு வையுங்கோவன். ஏன் நான் கதை எழுதக்கூடாதோ! உந்த நக்கல் சிரிப்புத்தானே வேண்டாம் எண்டுறது. நானும் ஒரு கதையை எழுதிப்பாக்கலாம் எண்டால் உப்பிடி ஏதாவது செய்தே என்னை முடக்கிறியள் ஆனால் இனியும் உதெல்லாம் சரிவராது நான் இந்தக்கதையை எழுதுறதெண்டே முடிவு பண்ணிட்டன்.உண்மைல கதையில வாறவருக்கு; வராத ஒரு மொழிநடைதான் இந்த ஒரிஜினல் தமிழ் எண்டு நீங்கள் நம்புற ஒரு ரியுன். நான் இந்த ரியுன்ல இதைச்சொல்லுறதுக்கும் ஒரு 'கடியான' காரணமிருக்கு. உவருக்கு இப்ப நித்திரையைக் குழப்பிக்கொண்டிருக்கிற குட்டிக்கு உவர் கதைக்கிற பாஷை விளங்கிறது பெரும்பாடு, உவரும் இது தமிழ்தான், தமிழ்தான் எண்டு சொன்னாலும் அவள் உப்பிடி "லூசு மாதிரி கதைக்காதையுங்கோ" எண்டு உவரை கன தரம் கடுப்பாக்கிப்போட்டாள் ஆரம்பத்தில் அவள் இதை நீங்கள் கதைக்கிற தமிழ் கஷ்டமாயிருக்கெண்டு 'நைஸா' சொல்லிப்பாத்தாள்; அவர் அதை கவனிக்காமல் அலம்பியிருக்கிறார் அதுதான் அவள் விசயத்தை போட்டு உடைச்சுப்போட்டாள்.சரி அதை விடுங்கோ இப்ப கதைக்கு வருவம்...

__________________________________________________

"அன்பின் ஆகக்குறைந்த நுழைவிடமாயிருந்தேன்

உன் விசுவரூபத்தோடு என்னில் நுழைகிறாய்

உன் முழுவதையும் தாங்கமுடியாதபடிக்கு

திணறிக்கொண்டிருக்கிறதெனது உயிர்..

எப்பொழுதென்னை கூடடைத்துக்கொண்டு போவாய்."எதையுமே எழுதப்பிடிக்காமல் யாரோடும் பேசக்கிடைக்காமல் இருந்த இந்த நாட்களை எனக்கு நேரெதிரில் இருக்கிற ஒருத்தி குறுக்கிட்டிருக்கிறாள். எல்லா அன்பையும் போலவல்லாத ஒன்று அவளிடம் இருக்கிறது என்றாலும் யாழப்பாணத்தின் அத்தனை புலம்பெயர் கேள்விகளையும் சுமந்து கொண்டிருக்கிற பழைய புதிர்கள் நிறைந்த அவளிடம் எனக்கான பரவசங்கள் இருக்கிறது. அது மிகப்புதியதாய் இருக்கிறதில்தான் இதை எழுத வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. "புலம்பெயர் தமிழ் சமுதாயம் இன்னமும் 1990 களிலேயே இருக்கிறது" - "ஐரோப்பிய நடை முறைகளுடனும் பழைய யாழ்ப்பாணத்து திணித்தல்களுடனும் வளர்க்கப்படுகிற பிள்ளைகளின் மன முரண்கள்." - "தமிழ்சினிமாத் தனமான மனோநிலையில் இருக்கிற இளைய சமுகம்." என்கிற பழைய வசனங்களை எல்லாம் நானே திரும்பவும் நானே பேச வேண்டியிருக்கும் என்று நான் எதிர்பார்க்காத ஒரு சந்தர்ப்பத்தில் இந்த உறவுக்கான தொடக்கப்புள்ளியை இணைய உரையாடல் தளமொன்று ஏற்படுத்தித்தந்திருக்கிறது.


எப்பொழுதும் அன்பாயிருத்தல் தொடர்ச்சியாய் உருகுதல் என்பதெல்லாம் வெறும் வேசங்கள் ஆபாசங்கள் என்பதாய் சலம்பிக்கொண்டிருந்தவனை இடைவெளிகளுக்கு பிறகு குறுக்கிட்டிருக்கிற இந்த உறவு கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. அடிப்படையில் நான் அன்பை யாசிக்கிறவனாகவே இருந்திருக்கலாம். பற்றுதலுக்கான அலைதலே இந்த இருபத்தொன்பது வருடங்களாகவும் இருந்திருக்கலாம் காதல் குறித்த அதகளமான அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்த எனக்கு உன்னை சமாளிக்கத்தெரியவில்லை என்பதுதான் உண்மையாயிருக்கிறது.உன்னைப்பற்றிய குறிப்புகளை என்னால் இன்னமும் ஒழுங்கமைக்க முடியவில்லை; நீ ஆதிக்கனவுகளின் சாயல்களில் இருக்கிறாய் என்றாலும் எனக்கு மற்றொரு திசையில் இருக்கிறாய் என்பதே உண்மையாயிருக்கிறது. என்னை நானாகவே ஏற்றுக்கொண்டு கையாளுகிற நிதானம் உனக்கு இல்லாமல் போனாலும் என்னை கைப்பற்றுகிற அழுத்தம் உனக்கிருப்பதாய் நம்புகிறேன். நான் எப்பொழுதும் இலகுவானவனாகவே இருந்திருக்கிறேன் என்பது உன் குறுக்கீடுகளின் மூலம் மற்றொரு முறை உறுதியாயிருக்கிறது. அன்பை நிராகரிப்பதன் மூலம் அழுத்தமாகி விடலாம் என்கிற என் நடைமுறை மாறியிருக்கிறது.நான் உன்னை கடந்து விடுவேன் என்று நம்பினாலும் உன் கவலைகள் என்னை கோபமூட்டுகிறது. ஆகக்குறைந்தளவு உண்மைகளைத்தானும் உன்னால் அடையாளம் காணமுடியாமலிருக்கிறது. உன்னை சுற்றிலும் இருப்பது உண்மைகளுக்கு புறம்பானதொரு கூட்டம் என்பதை நீ கண்டுகொள்ளவே இல்லையா, அல்லது அவர்களின் வட்டத்துக்குள்ளேதான் உலகம் இருக்கிறது என்று நம்புகிறாயா. உன்னை அவர்கள் ஒரு கண்ணுக்குத் தெரியாத வலைக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை நான் உனக்கு எத்தனை முறை சொல்ல முடியும். உன்னைக்குறித்த கவலைகள் என்னிடமிருப்பதை நீ நம்புவாயோ என்ன்வோ இப்போதைக்கு இதை நான் அன்பென்றோ, காதல் என்றோ சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன்.உன்னை காதலிக்கிறேன் என்கிற ஒற்றை நாடகத்தை என்னால் மிகத்துல்லியமாக நெறியாள முடியும்.உனக்கு அது போதுமானதாயிருக்கலாம் நீ நம்ப விரும்பாத உனக்கு பழக்கமில்லாத

ஒரே ஒரு விசயம் என்னிடமிருப்பதில் உன்னை விலக முடியாமிலிருக்கிறது.உண்மைக்கு நெருக்கமான வாழ்வென்று ஒன்றுண்டு.நான் வாழ்கிறவன்.

________________________________________________________

உனக்கு நான் என்னத்தை சொல்ல இருக்கு..நீ எதிர்பாக்கிறதை விட ஒரு வாழ்க்கையை உனக்கு தர முடியும் என்று நான் நம்பினேன் ஆனால்.நான் அறிந்த வரைக்கும் உனக்கு உண்மையை ஏற்றுக்கொள்ளவே முடியாது அல்லது அதை அறிந்து கொள்ளத்தெரியாது. உன்னுடைய எல்லா பயங்களிலிருந்தும் வெளியில் வந்து விடு. உன்னுடைய வாழ்க்கையை நீ வாழ்வது என்கிற விசயத்தில நம்பிக்கை வை.


நான் உண்மையின் விளிம்பிலிருந்துகொண்டு நீ எதிர்பார்க்கிறதை விட நல்ல ஒரு வாழ்ககையை உனக்கு தரமுடியும் என நம்பியிருந்தேன். உன் ஒற்றைக் குடியுரிமையையும், இற்றுப்போன யாழ்ப்பாணக் கதைகளையும் வைத்துக்கொண்டு என்னை திருமபத்திரும்ப கேள்விகள் கேட்கிறாய் அன்பை அறவே நிராகரிக்கிறவனாகத்தான் நானிருந்தேன் உன் குறுக்கீடுகள் என்னை எழுதவெல்லாம் வைக்கும் என்று நான் நம்பவில்லை.நான் நினைத்து வைத்த வாழ்வில் நீ எனக்கு நேரெதிர் திசையில் இருக்கிறாய் என்னை இயல்பாய் இருக்கவிடு உன்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்துப்போகிறேன். அன்பு எந்த விதிமுறைகளோடும் வருவதில்லை அது தானாக நடப்பது என்றுனக்கு சொல்லியிருக்கிறேன்.

அது நீ எதிர்பார்த்ததிலும் நிச்சயம் சுதந்திரமானதாய் ஆசுவாசமானதாய் இருக்கும. நிர்ப்பந்தங்கள் அங்கே இருக்கவே போவதில்லை.புரிதலும் பகிர்தலும் சின்னச்சின்ன தயார் நிலைகளுமே அங்கே தேவைப்படலாம்.நீ கடக்கவும் நுழையவும் நிறை விசயங்கள் இருந்கிறது முதலில் வெளியே வர முயற்சி செய் மிகுதியை புரிதலும்,காலமும் தகவமைக்கும்.


__________________________________


பெடியன்ரை புலம்பல்களில் இருந்தொரு சாம்பிள் சுருக்கம்.


நீங்கள் நினைக்கிற மாதிரி நீ மட்டும் போதும் என்கிற, அக்கா-தங்கச்சி,குடும்ப பொறுப்பு என்கிற எந்த பேச்சுகளுமே இல்லாமல் அன்பை அள்ளித்தருவதற்காக மட்டும் ஒருவனை வீட்டுக்காரார் பாத்து தருவினம் முன்னப்பின்ன தெரியாத அவன் உங்களை வச்சு பூசை செய்வான் கட்டிக்கொண்டு சாம்பிராணியைப்போடுங்கோ நாங்கள் உண்மையா இரண்டு வசனம் பேசினால் உங்கடை அலட்டலை காதல் வியாபாரங்களை ஆரம்பியுங்கோ. வெறும் உறுதி மொழிகளை மட்டுமே தந்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை என்பதை எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன்.என்ன கதை விளங்குதோ உண்மைல இது ஒரு பெரிய சிக்கலான கேஸ்தான் சும்மா சிவனே எண்டு ஒரு தினுசா அனுபவிச்சுக்கொண்டிருந்த பெடியனை ஒரு பெட்டை குறுக்கிட்டிருக்கிறாள்; குறுக்கிடுறது எண்டால் "விழுத்துறது" எண்டு வையுங்கோவன் உண்மைல இவர் மயங்கினதெண்டு சொல்லலாம். ஆனால் வெறு மயக்கம் எண்டு மட்டும் சொல்லேலாது ஏனெண்டால் பெடியன் எல்லா உறவுகளும் நிர்ப்பந்தங்களின் மீது நீடிக்கிறதுதான் எண்டும் அன்பை புதுப்பிக்காத அல்லது புரிதல் இல்லாத எந்த உறவும் ஏதோ ஒரு கட்டத்தில தெறிக்கிறதுதான் எண்டும் சொல்லி சத்தியம் பண்ணியிருக்கிற ஆள். இலக்கியம்,ஓஷோ, சுயம் எண்டு, கடுங் கூட்டங்களோடை பழகி விளங்காத புத்தகங்கள் எல்லாம் வாசிச்சு பெடியன் ஒரு மாதிரி கடும் போக்கெண்டு வையுங்கோவன். ஆனால் என்ன பெடியனுக்கு சின்னல்ல இருந்தே இளகின மனசு.அண்டஸ்ராண்டிங்கான பெடியன்.

பெட்டை என்னண்டால் தனக்கு காதல்ல நம்பிக்கையே இல்லை எண்டு சொல்லிக்கொண்டு என்காக சிகரெட்டை விடு, இனி குடிக்கவே கூடாது, என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும் என்னை வேலைக்கு போகச்சொல்லுவியா, எண்டெல்லாம் கேள்வி கேக்கிற ரைப். இது போதாது எண்டு உவர் அவளை விரும்புறதுக்கு காரணம் அவளின்ரை சிட்டிசன்ஷிப் தான் எண்டு அவளின்ரை அறப்படிச்ச சொந்தம் ஒண்டு சொல்லியிருக்குது போல(சொந்தம் எண்டவுடன பெரிய கனக்க வயதெண்டு நினையாதையுங்கோ நாலைஞ்சு வருசத்துக்குள்ளதான் படாத பாடெல்லாம் பட்டு அங்க போய் சேர்ந்த ஒரு 20 வயது இருக்கக்கூடிய பெட்டை) அவளும், இவனை சுத்தி சுத்தி கேள்விகேட்டு கண்டிஷன் போட்டு காதலிச்சுக் கொண்டிருந்தாள்.

அனேகமா ஒரு நாளைக்கு நாலைஞ்சு மணித்தியாலம் கதைச்சாலும் ஒரு நாளைக்கு ஒரு தரம் எண்டாலும் லைனை கட்பண்ணி போட்டு போறதும் திரும்பி வாறதும் எண்டுஇருந்திச்சு பெட்டை. பெடியன் அவளைப்புரிஞ்சு வச்சிருந்தாலும் அவளுக்கு இவனிட்ட இருக்கிற குணங்கள் பிடிக்கேல்லை அல்லது அவளுக்கு என்ன வேணும் எண்டது கூட தெரியேல்லை. உண்மைல இது அங்க இருக்கிற முந்தின தலைமுறை ஆக்களின்ரை நடைமுறைகளாலதான் எண்டு நினைக்கிறன். (எங்கடை பெட்டையளே உப்பிடித்தானே ஒண்டில் தேவையில்லாததையெல்லாம் யோசிப்பாளுகள் இல்லையெண்டால் ஒரு ஒண்டையும் யோசிக்காமல் சிக்கல் படுவாளுகள்) ஒருக்கால் உப்பிடித்தான் அவளின்ரை அறப்படிச்ச சொந்தம் இவன்ரை சாதி என்ன எண்டமாதிரி கதைக்கிறது கேக்க உவன் தனக்கு தெரியாதெண்டு சொல்லிப்போட்டான்.

கொஞ்ச நேர கதைக்கு பிறகு உப்பிடி ஒரு வசனத்தையும் சொன்னான்.


"செய்யுற தொழிலை வச்சுத்தான் சாதி எண்டு சொன்னால் யுரோப்பில இருக்கிற பெரிய சாதி எண்டு படம் காட்டுற அனேகமான வெள்ளாளர் எல்லாம் முக்காடுதான் போடோணும் ஆனால் எனக்கு தெரிஞ்சவரைக்கும் நான் ஒரு மோசமான வெள்ளாளன்" எண்டு சொன்னான். அவள் லைனை கட்பண்ணிக்கொண்டு போட்டு, கொஞ்ச நேரத்துல ரைப்ப பண்ணி கதைக்க தொடங்கினாள்.அவள்:

Kandee

vendam

plsenakkum unakkum sari varathu.

enkada veeddula sathi pappinamvendam pls..இவன்:சரிஅவள்:

kovama..


எண்டு கேட்டுட்டு கோல் பண்ணி,ஒரு கிஸ் குடுக்கிற ஸ்மைலியும் அனுப்பினாள்.

அவள் மட்டுமில்லை இவனும்தான் கோபப்பட்டு திட்டுறதும் பிறகு கொஞ்சுறதும் எண்டு அவளை கட்டுறதெண்ட முடிவில இருக்கிறான். நான் இந்தக்கதையை கேட்டு அறிஞ்ச மட்டுல பெட்டை கஷ்டப்பட்டு உழைக்கிற ஒருத்தி ஆனால் அவளின்ரை சொந்தக்காரர்களின்ரை கதைகளும் பழைய அனுபவங்களும் அவளை குழப்பம் பண்ணிக்கொண்டே இருக்குது எண்டுதான் நினைக்கிறன்.


________________________________________


"உன்னை தவிர்க்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்

என்னை காதலிப்பதை இன்னொரு முறை சொல்லு
."

உண்மையில இந்த வசனத்தை யார் எழுதி இருப்பினம் எண்டு நீஙக்ள் கண்டுபிடிச்சா உங்களுக்கு இந்த கதை விளங்கிட்டுது எண்டு அர்த்தம். இன்னொரு விசயம் உண்மைல இதை எழுத வேண்டிய ஆள் இதை எழுதேல்லை.


இந்தக்கதைக்கு ஏன் இப்படி தலைப்பு எண்டுற கேள்வியோடை, கதை இன்னும் முடியல்லை எண்டுற மாதிரி இருந்தாலும் இது கல்யாணத்துல முடியுற கதைதான்.


__________________________________________________

பகிர்வுக்கான குறிப்பு.

முன்பொரு முறை எழுதி வைத்த சில சொற்கள் இவை கிடப்பிலேயே இருந்தது இதை இனி என்னால் தொடர்ந்து எப்பொழுது எழுத முடியும் என்று தெரியவில்லை இதை தொடர்ந்து எழுதக்கூடிய மனோநிலை வரும்பொழுது திரும்பவும் திருத்தமான வடிவத்தில் எழுதிப்பார்க்க முயல்கிறேன் இப்போதைக்கு இதை வாசித்துக்கொள் குட்டி .


//
இரண்டாயிரத்து பதினொன்றுகளின் இறுதிப்பகுதியில் எழுதிப்பபார்த்ததென்று நினைக்கிறேன் இ இப்பொழுதுதான் பகிர்ந்திருக்கிறேன் ஏதாவது செய் செய் என்று அந்தரப்படுத்திக்கொண்டிருக்கும் மூளைக்குள்ளிருக்கும் சொற்களுக்கு.


//
ஒரு...
இலை தொடும் தூரத்தில்தான் உன்னுடைய உதடுகளிருக்கிறது
இருந்தும் இந்த மிதக்கும் தன்மையை அவ்வளவு 
இலகுவாய் கடக்க மனம் வரவில்லை 
இந்த முத்தத்தை நாம் 
இன்னும் கொஞ்ச நேரம் நாம் வைத்திருக்கலாம். //


-காதலிக்கிற காதலிக்கப்படப்போகிற எல்லோருக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்- 

No comments: