Friday, June 27, 2008

பிரிவும் சந்திப்பும்...

கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு ஐந்து நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தேன் நான்.

நானும் நீயும் தொலைபேசியில் கூட சரிவரப் பேசிக்கொள்ள முடியாத நிலைமையில் இருந்தது உன் வீட்டு நிலவரம், இந்த நிலமையில் மூன்று நாட்கள் பகல் பொழுதுகடந்தும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் போனது இருவருக்கும். மூன்றாம் நாள் இரவில் எப்படியும் உன்னை பார்த்துவிடுவது என்ற முடிவில் பத்து மணி இருக்கையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு உன் வீடுவரை வந்தேன். முதல் முறை உன் வீட்டைக் கடக்கையில் உன்னுடைய அறையின் ஜன்னல்கள் மூடியிருந்தது தெரு முனைவரை சென்று திரும்புகையில் ஜன்னலை திறந்து வைத்திருந்தாய் நீ, எப்படித்தெரிந்து கொண்டாயோ என் வருகையை இன்றுவரையம் இருவருக்கும் தெரியவில்லை ஒருவேளை காதலுக்கு தெரிந்திருக்கலாம்!. மறுபடி திரும்பவும் சைக்கிள் "கரியரில்" சத்தம் செய்து கொண்டே தெருமுனைவரை சென்று திரும்புகையில் ஜன்னலோரம் நின்று அந்த இரவின் வெளிச்சத்தில் காதலை கண்களில் சொன்னாய் நீ...!

நான் வந்ததை நீ தெரிந்து கொண்டாய் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு உன் வீட்டுக்கு அடுத்திருந்த கலட்டி அம்மன் கோவில் கிணற்றடியில் சைக்கிளை விட்டு விட்டு நடந்து கடந்தேன் உன்னுடைய ஜன்னலை, நேர இடை வெளி விட்டடு மூன்றாம் முறை கடக்கையில் மறுபடியும் ஜன்னலில் தோன்றி மறைந்தாய் நீ, நேரம்... பதினொரு மணியை கடந்திருக்க ஊர் மொத்தமும் உறங்கியிருந்தது உன் வீட்டை தவிர! நடந்து களைத்துப்போனேன் நான்; கலட்டி அம்மன் கோவிலுக்கும் தெரு முனைக்குமாக, நீயோ சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஜன்னலில் வந்து என்னை திரும்பி போகும் படி உன் அசைவுகளிலேயெ சொல்லிக்கொண்டிருந்தாய்...

நேரம் பதினொன்றரையை நெருங்கியிருந்தது உன் வீட்டின் மற்றய விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட உன்னுடைய அறை விளக்கு மட்டும் உயிரோடிருந்தது. இன்னமும் சில நிமிடங்களில் உன் அம்மாவின் குரல் கேட்க அதனைத்தொடர்ந்து உன் அறை வெளிச்சமும் இல்லாமல் போயிற்று விளக்கை அணைத்து சில வினாடிகளில் மறுபடியும் ஒரு முறை விளக்கை போட்டு அணைத்தாய் நீ...!

இரவின் நிமிடங்கள் யுகமாய் நகர்ந்து கொண்டிருந்தது நம் இருவருக்கும்.
ஊர் முழுதும் அடங்கி விட்ட அந்த வளர் பிறைக்ககாலத்து நிலவின் வெளிச்சத்தில் கலட்டி அம்மன் கோவிலுக்காக உன் வீட்டு மதிலோரம் குவித்திருந்த குரு மணலில் கைகளை தலைக்கு கொடுத்தவாறு படுத்திருந்தேன் நான் இருபது நிமிடங்கள் யுகங்களாய் கழிகையில் உறக்கம் தழுவிக்கொண்டிருந்த என்னை எழுப்பியது உன் கொலுசுச்சத்தம்.


எதுவும் பேசாமல் வந்த நீ நெருங்கி அமர்ந்து மதிலோடு சாய்ந்து கொண்டாய் நீளமாக மூச்சு விட்ட நீ-

ஏனப்பா... என்றாய் உனக்கு மட்டும் கேட்கிற குரலில்

நான் - ம்ம்ம்...

நீ- ஏனப்பா இவ்வளவு நேரம் நித்திரையை குழப்பி கொண்டு...

நான் - நீ ஏன் என்னை பாக்க வரல்லை....

நீ- வர ஏலும் எண்டால் வந்திருப்பன் தானே....

நீ - நாளைக்கும் வேலை இருக்கல்லோ வீட்டில...

நான் - ம்ம்ம்...

நீ - அப்ப எத்தனை மணிக்கு வவுனியா போறியள்...

இந்த கேள்வியியின் முடிவில் நீ, நீளமாய் வெளிவிட்ட மூச்சு என் நெற்றியில் சுட்டது.

நான் - ம்ம்ம்..

எனக்கு நான்கு நாட்கள் அலுப்பிலும் பகல் முழுவதுமான அலைச்சலிலும் என்னை மறந்த நித்திரை கண்களை சொருகியது.

எதுவும் பேசாமல் இன்னும் நெருங்கி என் தலையை எடுத்து மடியில் வைத்து நெற்றி முடியில் விரல் நுளைத்தாய் நீ,

உந்தன் மடி மீதான நிம்மதியில் எப்பொழுது உறங்கினேன் எனத்தெரியவில்லை சட்டென்று விழிப்பு வருகையில் உன்னைப்பார்த்தேன் கண்கள் மூடிய உறக்கத்திலும் உன் விரல்கள் என் நெற்றி வருடிக்கொண்டிருந்தது இந்த கரிசனத்துக்காகதானேடி! நான் உன்னை தேவதை என்பதும் இவ்வளவு நேரம் காத்துக்கிடந்ததும்.
உன் தூக்கம் கலைக்க விரும்பாத நான் அப்படியே உன்னை பார்த்துக்கொண்டிருந்தேன் நான் விழித்துக்கொண்டதை அறிந்து கொண்ட நீ...

என்னப்பா நேரம் போகுது வீட்டுக்கு போங்கோ

நான் - ம்ம்ம்...போகலாம்

குனிந்து என் நெற்றியில முத்தமிட்டு என்ன... என்றாய்

ம்ம்ம் என்ன...

உன்கைளை எடுத்து மார்போடு வைத்துக்கொண்டேன் நான்
மறுகையை எடுத்து என் கையோடு சேர்த்து மூடிக்கொண்டாய் நீ அங்கே ஒரு கவிதை அரங்கேறியது...

நான் - ம்ம்ம்...

நீ - ம்ம்ம்...

எழுந்து மதிலுக்கு சாய்ந்து அமர்நது கொண்டேன் நானும்...

நான்- சொல்லு...

நீ - ம்...

அதுவரையும் அசைக்காமல் நீட்டியருந்ததில விறைத்து போன கால்களின் வலியை எனக்கு தெரியாமல் மறைக்க முயன்ற நீ உன்னையறியாமல் என் கைகளை இறுகப்பற்றினாய்...

ஏனடா சொல்லியிருக்கலாம் தானே என்று உன்னை அணைத்துமார்போடு சாய்த்துக்கொண்டேன் நான்

நீ- ம்ம்ம்...

ஒரு குழந்தையைப்போல ஒட்டிக்கொண்டு சாய்ந்தாய் நீ என் மார்போடு; அந்த தருணத்தில் மீண்டும் ஒரு முறை என் பிறவிப்பெருமையை உணர்த்தினாய் நீ எனக்கு...

என் கைகளை எடுத்து ஆதரவாய் பின்னிக்கொண்டேன் உன்னைச் சுற்றி...

அப்படியே எவ்வளவும் இருந்தோம் என்று தெரியவில்லை உலகத்தில் வேறெந்த நிகழ்வும் இல்லாததைப்போல எம்மை மறந்திருந்தோம். மதில் மூலையில் இருந்த பூவரச மரத்து சேவல் தொடர்ச்சியாக கூவியதில் நிகழ்காலத்துக்கு வந்தோம் இருவரும். நேரம் பார்த்தேன் மணி நாலு பத்து
கண்களை திறக்காமலே என் மார்புக்குள் நீ கேட்டாய்

நேரமென்னப்பா...

நான் - நாலு பத்து...

நான் - தமிழ்...

நீ - ம்...

நான் - தமிழ்...

நீ - ம்ம்ம்...

நான் - எழும்படா...

நீ - ம்...

நான் - விடியப்போகுது...

நீ - ம்ம்ம்...

நீ - அப்பா...

நான் - ம்...

நீ -அப்பா...

நான் - ம்ம்ம்...

என் மார்பில் முத்தமிட்டு இருவருக்குமான விடியலை ஆரம்பித்து வைத்தாய் நீ...!

அதுவரை உன்னை சுற்றியிருந்த கைகளை எடுத்து உன் முகம் நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டேன் நான்...

கண்கள் மூடி என் மார்பில் மீண்டும் ஒரு முறை சாய்ந்த உன் கன்னங்களில் இதழ் ஒற்றி எடுத்தேன்...

உன் கண்கள் மூடியிருக்க ஒரு கை என்னை சுற்றியிருக்க மறுகைவிரல்கள் என் மார்பில் என் பெயரை எழுதிக்கொண்டிருந்தது... நான் கண்கள் மூடி சாய்ந்திருக்க என் காதல் அதனை உன் பெயராக வாசித்துக் கொண்டிருந்தது என் உயிரில்...

மறுபடி ஒரு முறை சேவல் கூவ நிலமை உணர்ந்து கண்களைத்திறந்தோம் இருவரும்.

மணலை விட்டு எழுந்து கொண்டோம் இருவரும் மணல் முழுவதும் காதல் குவிந்திருந்துது...

நீ கிணற்றடி வரைக்கும் வந்தாய் என் தோள்களில் சாய்ந்தவாறே...
சைக்கிளை எடுத்துக்கொண்டு விடைபெறும் வேளைவரை நம் வலது கைகைளில் பத்து விரல்களாய் இருந்தது.

விடைபெறும் தருணத்தில் மாறி மாறி ஒட்டிக்கொண்ட கன்னங்கள் நான்கும் நனைந்திருந்தன...

அந்த இரவில் கிடைத்திருந்தது அந்த விடுமுறைக்கான திருப்தியம் அடுத்த நான்கு மாதங்கள் பிரிவுக்கான பிரியாவிடையும்.

நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!

Thursday, June 19, 2008

யாரும் எழுதாத கவிதை...*
நான் எப்படி எழுத முயன்றாலும் அதில்

யாரோ எழுதிப்போனதன் சாயல் தெரிகிறது- இருக்கட்டும்

காதல் உலகப்பொது மறைதானே- ஆனால்

யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம்

அது உன் பெயரெழுதிய என் காதல்...!


*
நான் உன்னைப்பற்றி

என் நாட்குறிப்புகளில் எழுதியதெல்லாம்

காதல் கவிதைகளாக புத்தகங்களில்

காதல் உன்னைத்தான் எழுதுகிறதோ என்னவோ?

அதன் பக்கங்களில்...


*
விரல் வழியே

என் உயிரை வரைகிறது காதல்...

உனக்கான கடிதங்களை எழுதும் பொழுது

பேனா முனையின் வழியே

மையெனக்கசிகிறது என் உயிர்

உன் பெயரை எழுதும் பொழுது...


Sunday, June 15, 2008

தந்தையர் தின வாழ்த்துக்கள்...

அப்பா...

பொதுவாக அப்பாக்களைப்பற்றி சொல்லக்கூடிய அளவுக்கு கூட நான் என்னுடைய அப்பாவைப்பபற்றி சொல்ல முடியாத நிலைதான் எனக்கிருக்கிறது என்பது என்னவோ கசப்பான உண்மையாகிவிட்டது.
ம்ம்ம்... வேறென்ன சொல்ல நான் பிறந்து ஒரு வருடத்துக்குள் வேலை நிமித்தம் வெளிநாடு போய் விட்ட அப்பா எனக்கு பத்து வயதாகி இருக்கும் பொழுது நாடு திரும்பினார் உயர் ரத்த அழுத்தம் காரணமாக பாரிசவாதம் ஏற்பட்டு முற்று முழுதாக என் அப்பாவைப்பற்றிய எனக்குத்தெரிந்த தோற்றத்துக்கும் நான் உருவகித்திருந்த கற்பனை வடிவுக்கும் முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தோடு!


அங்கிருந்து ஆரம்பமாகியது எனக்கும் அப்பாவுக்குமான இடைவெளியின் தூரம். விபரம் தெரிந்து பேசத்தொடங்குகிற நாட்களில் விடுமுறையில் மட்டும் வந்து போன அப்பாவோடு என்னால் விடுமுறையின் கொண்டாட்டங்களை மட்டுமே காணமுடிந்திருந்தது....

இப்படி இருக்க பத்து வயதில் நானாக சில விடயங்களை பேசுவதற்கும் செயற்படுவதற்கும் சிந்தனைகள் மாறும் நேரத்தில் வந்திறங்கிய அப்பாவோடு பேசுவதே முடியாத காரியமாக இருந்தது பேச முடியாத, நடக்க முடியாத, மந்தமான நிதானமுள்ள நிலையில்தான் அப்பா வந்திறங்கினார் ஒரு பின்னிரவில்...அதற்கு பிறகு அப்பாவுக்கான தொடர் வைத்திய சிகிச்சைகளும் அப்பாவின் இயலாமையும் என்னை அவரிடத்தில் சேர்க்காமலே இருந்தது எனக்கும் அவருக்குமான தருணங்களை குறைத்துக்கொண்டே இருந்தது.

என் வயதின் நிமித்தம்,சின்னவன் என்கிற செல்லமும் அம்மாவிடம் நிறையவே இருந்தது அத்தோடு முன்பு நான் சொன்னது போல பிறந்ததிலிருந்து எனக்கு நல்ல நட்பாகவே அம்மா இருந்ததால் அவரோடு மட்டுமே என்பொழுதுகள் போயிற்று...

அந்த வயதில் நாம் அன்றாட வாழ்க்கைக்கு பாடு படுகிறோம் என்பதையோ அல்லது அப்பா செயலிழந்து வந்திருக்கிறார் என்பதையோ என்னை பாதிக்க கூடாது என்று நினைத்தார்களோ என்னவோ எனக்கும் அது பெரிதாக தெரியவில்லை அப்பாவோடும் நெருக்கம் இருக்கவில்லை...
அப்பொழுதில் புதிய பாடசாலை மாற்றங்கள் புதிய நண்பர்கள், புதிய போட்டியாளர்கள், புதிய மாலை நேர வகுப்புகள், புதிய வேகம் என என் நாட்கள் நகர்ந்து கொண்டேயிருந்தது,அத்தோடு நாங்கள் கொஞ்சம் பெரிய குடும்பம் என்பதாலும் சில வசதிகள் கருதியும் எங்கள் வீட்டுக்கு எதிரே இருந்த வீட்டையும் வாடகைக்கு எடுத்து பாவித்துக்கொண்டிருந்தோம்; நான் அந்த வீட்டில்தான் இருந்தேன் சாப்பாடு, மற்றும் சில தேவைகளுக்காவும் மட்டுமே எங்கள் வீட்டுக்கு போய் வருவேன். அதுவும் நான் அப்பாவோடு அதிகம் நெருங்காமல் இருப்பதற்கு ஒரு காரணமாகலாமோ தெரியாது ஆனால் சின்ன வயதிலிருந்தே அவரோடு அதிகம் பரிச்சயம் இல்லாதததும் சிறு வயதில் அவருடைய கண்டிப்புகளும் (எனக்கல்ல அக்காக்களுக்கு எல்லோருக்கும் பயம் ஒருத்தரை கூப்பிட்டால் எல்லோரும் வந்து வரிசையாக நிப்போம் ஆனால் எனக்கென்னவோ பயம் என்பதை விட கோபம் தான் இருந்தது என நினைக்கிறேன் அதற்கு நான் ஒரே ஒரு ஆம்பிளைப்பிள்ளை என்கிற ஒரு சலுகையும் கடைக்குட்டி என்கிற செல்லமும் காரணமாயிருக்கலாம்...) இயல்பாகவே எனக்கிருந்த இலகுவான தன்மையும் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாத குணமும் (ஆனால் என்னவோ தெரியவில்லை நான் சில விடயங்களில் பலவீனமானவனாகவே இருக்கிறேன் இன்னமும்) அந்த நாட்களின் கடினத்தை உணர்ந்திருந்தும் அவை எனக்குள் பதியவில்லை அதுவும் ஒரு வகையில் நன்மைக்கே. வாழ்ககையின் வலிகள் வயதின் தன்மையில் காணாமல் போயிற்று.அதைப்போலவே அந்த நேரத்தில் அப்பாவை பற்றிய, அவரின் நாளாந்தம் பற்றிய நினைவுகள் என்னிடம் இல்லாமலே போயிற்று எனலாம்...
அப்படி நகர்ந்து விட்ட நாட்களில் சட சட வென்று வருடங்கள் ஓடி விட்டிருந்தது, பதின்ம வயதுகளின் புது வேகத்தோடு நாட்கள் நகர ஆரம்பித்திருந்தது இதற்கிடையில் அப்பா வந்த ஒரு வருடத்திலேயே தொடர்சிகிச்சை மூலம் தன்னுடைய காரியங்களை தானாக நிறைவேற்றுவதற்கு தயாராகியிருந்தார் அது வரையும் அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார்.
வாழ்க்கை கொஞ்சம் கஷ்டங்களில் இருந்து தெளியத்தொடங்கி எங்கள் வீட்டின் நாட்கள் சீராக அசையத்தொடங்கி இருந்தது. இதற்கு முந்தைய நாட்களின் வலிகள் இந்த நேரத்தில் உங்களுக்கு தேவையில்லை என்பதனால் தவிர்த்திருக்கிறேன்,அப்படியே நகர்கின்ற நாட்களோடு என்னுடைய நாட்களும் நகர்திருந்தது அப்பாவுக்கும் எனக்குமான தருணங்கள் இல்லாமலே;
ஒரே வீட்டில் இருந்தாலும் அவருக்கும் எனக்குமான பேச்சு வார்த்தை என்பது வழிப்போக்கன் ஒருவனை நேரம் கேட்பது போலத்தான் இருந்திருக்கிறதென நினைக்கிறேன்.
இருந்தாலும் ஏதோ ஒரு புரிதல் - மரியாதை அவரிடத்தில் எனக்கிருந்தது என்பது; எனக்கும் வீட்டுக்காரருக்குமான பிரச்சனையொன்றின் பொழுதில் தெரிந்தது அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் அது எனக்கு தோன்றியிரக்கிறது அதன் பிறகுதான் நான் வீட்டுக்கு பிரச்சனைக்கு உரியவனாகிப்போனேனே! வாழ்க்கை திசைகெட்டிருந்தது பதினமங்களின் இறுதியில் அப்பொழுதும் அப்பாவோடான எனக்குரிய நேரமும் நெருக்கமும் இல்லாமலே இருந்தது...நாட்கள் போய்க்கொண்டிருக்க எனக்கே என்னை வெறுத்துப்போக தொடங்கியிருந்த நாட்களில் ஒருவாறு தட்டுத்தடுமாறி ஒரு தேவதையின் சாபத்தோடு வேலை செய்ய ஆரம்பித்திருந்தேன்...

அதன் பிறகு விடுமுறைக்கு ஊருக்கு போகும் நாட்களில் அப்பாவோடு கொஞ்சம் நெருக்மானதாகத்தான் நினைக்கிறேன். அந்த நாட்களில் நான் அப்பாவோடு பேச ஆரம்பித்திருந்தேன் அல்லது அப்பா என்னோடு கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தார்... அப்பாவைப்பற்றி அம்மா மற்றும சிலர் சொல்லி பல விடயங்கள் தெரிந்திருந்தாலும் அப்பாவைப்பற்றியம் அவருடைய கடந்தகாலம் பற்றியும் அவரிடமே நிறையப்பேச வேண்டும் என்ற நினைத்திருந்தேன், அனால் இன்றுவரை அது நிகழவில்லை, அதற்கான சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை...


அப்பாவோடு உட்கார்ந்து பேசமுடியும் என்கிற பக்குவம் எனக்கு வந்திருக்கையில் அப்பாவை விட்டு நிறைய தூரத்திற்கு வந்து விட்டேன்...அறுபத்தொரு வருடங்கள் வாழ்ந்து விட்ட அவருக்கு என்னுடைய இந்த இருபத்தாறு வருடங்களில் எத்தனை முறை பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருப்பேன் என நினைக்கையில் வெட்கப்படுகிறேன் இதுவரையும் மொத்தமாக எத்தனை வார்த்தைகள் பேசியிருப்பேன் என்பதை எண்ணி விட முடியும் என நினைக்கையில் குற்றவுணர்ச்சி தண்டனை இல்லாமல் தண்டிக்கிறது...இப்பொழுதும் அவரோடு பேச முடியாத சூழ்நிலைதான் என்கிருக்கிறது மறுபடியும் அப்பா தன்னுடைய காரியங்களை கவனிக்க முடியாதவராகி சில மாதங்களாகிறது...திருத்தமாக வார்த்தைகளை உச்சரிக்க முடியாத நிலமையில் இருக்கிறார் என்பதும் நான் செய்த தவறுகளுக்கான எனக்குரிய தண்டனை என்றே நினைக்கிறேன்.ஏதோ ஒரு ஏக்கம் எனக்கு நிரந்தரமாகவே இருக்கப்போவதைப்போல தவிப்பொன்று இருந்து கொண்டே இருக்கிறது என்னிடம்.


அப்பா...!
இனியொரு ஜென்மம் என்பதில்
எனக்கில்லை நம்பிக்கை
உங்களுக்கிருந்தால்...
நீங்கள் எனக்கு மகனாக
பிறந்து விடுங்கள் இல்லையேல்;
நான் இன்னும் கொஞ்சம்
வாழவேண்டும் உங்களோடு...


அவருக்கு முதல் தந்தையர் தின வாழ்த்துச்சொல்லுகிற இந்த நாளில் உலகத்தின் அப்பாக்கள் எல்லோருக்கும் என்னுடைய தந்தையர் தின வாழ்த்துக்கள்...

Tuesday, June 10, 2008

சிவாஜி வாயிலே ஜிலேபியும் நானும்...

"சிவாஜி வாயிலே ஜிலேபி..."

இந்த தொடர் விளையாட்டுல என்னையும் சேர்த்துக்கிட்ட நண்பருக்கு எம்மேல அப்படி என்ன கொலைவெறின்னு தெரியலை சின்னப்பையனான என்னைப்போய் இந்தமாதிரி பெரிய விளையாட்டுக்கெல்லாம கோர்த்துவிட்டு வேடிக்கைபாக்கிறாரு நல்லாயிருங்கண்ணே! நல்லாயிருங்க!

இருந்தாலும் என்னையும் பதிவெழுதுறவனா மதிச்சு! முதன் முதலா ஒரு விளையாட்டுக்கு அழைச்சிருக்கிறதால கட்டாயமா ஏதாவது எழுதியே ஆக வேண்டுமென்கிற நிலமை எனக்கு ஆனா இத படிக்கிற உங்க நிலமைதான் என்னாகுமோ தெரியல...

ஏதாவது எழுதறதுன்னு முடிவபண்ணியாச்சு ஆனா என்ன எழுதுறதன்னுதான் தெரியலை ஏன்னா நான் இது வரைக்கும் இந்த மாதிரி மொக்கைப்பதிவுகள் எல்லாம் எழுதினது கிடையாது (நம்புங்கப்பா! அப்ப இதுவரைக்கும் எழுதினது என்னான்னெல்லாம் கேக்கப்படாது...) அந்த அளவுக்கு அனுபவமும் கிடையாது அதனால...

சமாதானம் பகைத்துக்கொண்ட
தேசத்தோடு பகைத்துக்கொண்டு
கடல் கடந்து வந்து சேர்ந்த
அரபு தேசத்தில்
கிடைக்காமல் போனது
புத்தகவாசம்
அந்த நேரத்தில் கிடைத்தது
வலை சகவாசம்
எனக்கோ
வாசிக்கத்தொடங்கிய நாட்களில் இருந்து
எதையாவது
வாசிக்காமல் வந்ததில்லை உறக்கம்...
வேறெந்த திருப்தியும் இல்லாத
நாடகளுக்கு
விமோசனம் தந்தது
தமிழ் பதிவுகள்..
வாசிக்க கிடைத்ததில்
உறக்கமும் கிடைத்தது
நேசிக்கத் தெரிந்த
உறவுகளும் கிடைத்தது
எழுதப்படாத நாட்குறிப்புகளுக்காய்
எழுதப்பட்டது என் வலைப்பூவும்...
பிரிவின் வலிகளுக்கும்
தனிமையின் வெறுமைக்கும்
மனதிற்கு தேனாய் கிடைத்தது
தமிழ் மணம் என்கிற ஜிலேபி
அதனால் எழுத வேண்டிப்போனது
"சிவாஜி வாயில் ஜிலேபி"...

இனி ...
வலையுலகத்துக்கு
நானொரு யுகேஜி...
தமிழ் பதிவுகளுக்கு
நானொரு எல்கேஜி...
உங்களுக்கு நடுவில
நானொரு ஜீஜீபி...
நானெப்படி எழுத
'சிவாஜி வாயிலே ஜிலேபி'...

இது போதும்னு நினைக்கிறேன் இதுக்கு மேல யோசிச்சா எனக்கே அது நியாயமா தோணலை அதனால உங்களை எல்லாம் பிளைச்சுப்போகும்படி விட்டுடறேன் இது நான் பங்கு கொண்ட முதல் விளையாட்டுங்கறதால நான் யாரையுமே கோத்து விடாம விட்டுடறேன்...

எனக்கே, நான் இதை ஒப்பேத்தறதுக்குள்ள மூச்சு வாங்கி, முழி பிதுங்கி, நாக்கு தள்ளிடுச்சு... என்ன ஒரு வில்லத்தனம் இந்த தமிழ் பிரியனுக்கு (நன்றிண்ணே மனசார சொல்லிக்கறேன் )அண்ணே நேற்று கொஞ்சம் பிஸியாயிட்டேன் அதோட எல்லோரும் இந்த தலைப்புல பதிவுபோட்டுகிட்டிருந்தாங்களா அதுகளை படிச்சுப்பாக்கவே நேரம் போதலை அனேகமா எல்லோருக்கும் பின்னூட்டம் போட்டிருகன்னு நினைக்கிறேன்..

அதனால இன்னைக்கு வேலைக்கு வந்து சேர்ந்ததும் என்ன எழுதலாம்னு யோசிச்சு ஒரு மாதிரி ஒப்பேத்திட்டேன்...ஸ்ஸ்ஸ்ஷ்ஷ்ஸப்பாடா...

இதை இவ்வளவு நேரம் பொறுமையா படிச்ச உங்களுக்கு நன்றிங்கோ, என்னைய இந்த விளையாட்டுல சேர்த்த தமிழ் பிரியன் அண்ணனுக்கு மறுபடியும் நன்றிங்கோ....

Monday, June 2, 2008

காதல் கோலங்கள்...

*
கோலம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே

வந்துவிடுகின்றன எறும்புகள் என்று

சலித்துக்கொள்கிறாய் நீ

அவற்றுக்குத்தானே தெரியும்

அவை வெறும் கோல மாவு அல்ல

ஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது...


*
நீ போட்டு முடித்த கோலத்தில்

கோலம் போட்டிருந்தன உன்

நெற்றியோரத்திலிருந்து விழுந்த

வியர்வைப்பொட்டுகள்...


*
மார்கழியின் அதிகாலைகளில்

நீ போடுகிற கோலத்தையும்

கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு

யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்

ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது

சூரியன்...