Tuesday, February 19, 2008

காதல் வாரம்...
*

எனக்கும் உனக்கும் இடையில்

எதுவுமே இல்லை

காதலைத்தவிர...

*

காதல் என்னை

கடந்தும் உள்ளேயும் இருக்கிறது

ஆதலால் அது

கடவுள் ஆகியது...


*

காதல் வாரம் பதிவுக்கு

கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்

திரும்பத்திரும்ப உன்பெயரைத்தவிர

வேறெதுவும் எழுத முடியவில்லை

இரவு முழுவதும்...


காதல் வாழ்க...காதல் வாழ்க...காதல் வாழ்க...


* இந்த ஏழு நாட்களும் தனியே புலம்பியதில் (புலம்புவது இந்த ஏழு நாட்கள் மடடும்தான் என்றில்லை ஒவ்வொரு நாளும்தான்...) இருந்து சின்னச்சின்னதாய் சிலதை இங்கே உங்களுக்கு புலம்பியிருக்கிறேன் கோபப்படாமல் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் - இல்லை நாங்கள் பொறுக்க மாடடோம் என்கிற அன்புள்ளங்கள் வந்து கும்மிவிட்டுப் போகலாம் எவ்வளவோ தாங்கிட்டோம் இதை தாங்க மாட்டமா என்ன...Monday, February 18, 2008

காதல் வாரம்...
*

நான் தூங்காத இரவுகளில்

தூக்கம் தருவதும்

நான் தூங்கும் இரவுகளில்

தூக்கம் பறிப்பதும

ஒரே விசயம்தான்

அது நீதான்...

*

நான் தனியாக நடக்கிறேன்

எனக்கு இரண்டு நிழல்கள்

நாம் சேர்ந்து நடக்கிறோம்

நம் இருவருக்கும் ஒரே நிழல்...

*

நான் உன்னை அழைத்துப்போகிறேன் என்றால்

நீ வரும்வரை அழைத்துப்போகிறேன்- பின்னர்

உன் நினைவுகளோடு போவேன்

நான் உன்னோடு வருகிறேன் என்றால்

நீ சொல்லும்வரை வருகிறேன்- பின்னர்

உன் சுவடுகளில் நடப்பேன்

நாம் சேர்ந்தே போகலாம் என்றால்

வா முடிவிலி வரைக்கும் போவோம்...

Sunday, February 17, 2008

காதல் வாரம்...
*உன்னுடைய
உடைகள் காய்கிற
கொடியைச்சுற்றி
பட்டாம்பூச்சிகளுக்கு என்ன வேலை...

*உனக்கு
ஓட்டம் காட்டுகிற
ஆட்டுக்குட்டியை ரசிக்கிறாய் நீ
ஆட்டுக்குட்டியை விரட்டும்
மான்குட்டியை ரசிக்கிறேன் நான்

*நீ
முத்தம் கொடுத்துப்போன
சோளக்கொல்லை பொம்மையை
காவல் காக்கிறேன்நான்...

*எதை பார்க்கையில்
உன் ஞாபகம் வருமென்கிறாய்
எதுவுமே உன்னைப்போல இல்லை
என் காதலைத்தவிர...

*உன்னைப்பார்க்கும்வரையில்
நான் உயிரோடிருந்தேன்
இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
காதல் வாரம்...
*உன்
கூந்தல் கலைத்த
காற்றை
சிறையெடுக்கிறது
என் சுவாசம்...

*உன்
துப்பட்டாவை பிடித்து நடந்த
குழைந்தையிடம்
கெஞ்சுகிறது(கொஞ்சுகிறது)
என் காதல்


*உன்
கன்னம் நனைத்த
மழைத்துளிகளில்
பொறாமைப்படுகிறது
என் முத்தங்கள்...


*உன்
கைகளில் ஊர்ந்த
எறும்பை
கைது செய்கின்றன
என் காதலின் விரல்கள்

*உன்
கொலுசுகள் நனைத்த
கடலலைகளை
குடித்துவிட தவிக்கிறது
என் தாகம்...


(இது நேற்று போட வேண்டிய பதிவு இணைய வசதி கிடைக்காததால் இன்று- என்னிடம் கோபம் இல்லையே காதலர்களே...)

Friday, February 15, 2008

காதல் நாள்...
உன்
பார்வை பட்டதும் கரைகிறேனே
ஸ்பரிசம் பட்டதும் காற்றாகிறேனே
இதுற்கு பெயர்தான்
காதல் ரசாயனமோ...

என்னைப்பார்க்க வரும்பொழுது
உன் கண்களுக்கு சொல்லிவை
எதுவும் பேசக்கூடாதென்று - அவை
உன்னைப்பேச விடுவதேயில்லை...


உன்னைப்பார்க்க வரும்பொழுது
நான் எவ்வளவு சொன்னாலும்
கேட்பதில்லை என் உதடுகள் - அவை
என்னை பேச விடுவதேயில்லை...

எத்தனை முறைதான் சொல்வீர்கள்
இன்னும் கொஞ்ச நேரம் என்று - நீயும்தான்
எத்தனை முறை சொல்லிவிட்டாய்
நான் போகவேண்டும் நேரமாகிறது என்று...

வந்ததிலிருந்து இது
எத்தனையாவது முத்தம் என்று
சினுங்கலாக மறுக்கிறாய்
நான் முத்தம் கேட்பதே
இந்த சினுங்கல் கேட்கத்தானே...

எவ்வளவு காதலித்துவிட்டோம்
இந்த கொஞ்ச நாட்களில்
கொஞ்சம் மெதுவாக காதலிக்கலாம் என்கிறாய்
அது சரி நீ சொல்வது
அடுத்த பிறவியில்தானே...
(சரியான நேரத்திற்குள் இந்தப் பதிவை போட முடியவில்லை காதல் எப்பொழுதும் என்னோடு இப்படித்தான் இருக்கிறது இருந்தாலும் காதல் கொண்ட எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்...)

Thursday, February 14, 2008

காதல் வாரம்...
நீ
மாலைகட்ட தொடங்கியதிலிருந்து
முற்றத்து மல்லிகையில்
வெள்ளிக்கிழமைகளில்
மட்டும் பூப்பது
என் காதல்...


நீ
ஊஞ்சலாடிவிட்டுப்போன
என் வீட்டு மாமரத்தில்
காய்திதிருக்கிறது
என் காதல்...


நீ
கசக்கிப்போட்ட
பழைய பேப்பர்களில்
கவிதை வாசிக்கிறது
என் காதல்...

நீ
அமர்ந்துபோன திண்ணையின்
அடையாளங்களில்
இருந்து பார்க்கிறது
என் காதல்...

நீ
உறங்கிய படுக்கையில்
விழித்திருந்து
கனவு காண்கிறது
என் காதல்...
Wednesday, February 13, 2008

காதல் வாரம்...
 • என்னை தேடிக்கொணடிருக்கையில்
  உன்னை கண்டு கொண்டேன்- இப்பொழுது நான்
  என்னை தேடுவதில்லை...


 • சில நாட்களாய்
  என் தனிமையை காணவில்லை
  என்னைச் சற்றியும் யாரும் இல்லை
  உன் நினைவுகளைத்தவிர...


 • தேவதையே
  வரம் தரவேண்டாம்
  விமோசனம் கொடு - உன் நினைவுகளுடனேயே
  வாழக்கடவது என்று... • நான் வாசிக்கிற கவிதைகள்
  உன்னை ஞாபகப்படுத்துகிறது
  நான் எழுதுகிற கவிதைகள்
  உன்னைச் சார்ந்திருக்கிறது
  நான் எழுதப்போகும் கவிதைகள்
  உனக்காக காத்திருக்கிறது
  வார்த்தைகளை எப்பொழுது தருவாய்...

Saturday, February 2, 2008

கடிதங்களுக்குப்பதிலாக...2

வந்திருந்தவை...2

* ஒரு ரயில் நிலையத்தில்
சரியான நேரத்திற்கு வந்திறங்கிய
ஆகாய விமானத்தைப்போல
எத்தனை பெரிய சேதத்தை
ஏற்படுத்திவிட்டாய் என்னுள்ளே!
எப்பொழுதுசீர் செய்யப்போகிறாய்...?

*என்ன ராஜா...
இந்த நேரத்தில்...
இப்பொழுது கோவிலுக்கு
மாலை கட்டிக்கொண்டிருக்கிறேன்
நான் கோர்த்துக்கொண்டிருப்பது பூக்களல்ல
உன் ஞாபகங்கள்தான்...

* ஒரு உயிர்
இன்னொரு உயிருக்காக போராடுவது
காதல் அல்லது பிரசவம்...
உன்னைப்பெற்ற பொழுது
உன் அன்னை கொண்ட வேதனையை
இப்பொழுது நீயெனக்கு
தந்து கொண்டிருக்கிறாய்...


( இது ஒரு தனி நபர் விசயம் என்பதால் இடையிடையே சில தகவல்களை தராமல் விட்டிருக்கிறேன் அவை தகவல்கள் அல்ல இரு காதல் நெஞ்சங்கள் பரிமாறிக்கொண்ட உணர்வுகள்... அவர்களது பிரிவின் வேதனையை அங்கே எழுதியிருந்தார்கள் இல்லையில்லை அழுதிருந்தார்கள்... அதனால் அவற்றை தவிர்த்து விட்டேன்...)

கடிதங்களுக்குப்பதிலாக...2

அனுப்பியிருந்தவை...2

*உன்னோடு கதைக்காமல் இருக்க முடியாதா
என்று கேட்கிறாய்
ஏனிப்படி சுற்றி வளைக்கிறாய்
சுவாசிக்காதே என்று
நேரடியாகவே சொல்லு...

*அடடா...
இதெல்லாம் கேட்டு வாங்க வேண்டியிருக்கிறது
எங்கே மறைத்து வைத்திருந்தாய்
இத்தனை காதலையும்
இன்னும் எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறாய்
என்னை கொடுமை கெய்ய
காதலில் கொடுமை
காதல் தானே...

*நீ என் தோள்களில் சாய்கிறாய் என்றால்
என் ஆயுள் முழுவதும் தாங்குகிறேன்
நீ என் மார்போடு தூங்குகிறாய் என்றால்
என் இரவுகள் முழுவதும் தருகிறேன்
உன்னோடு வருவதானால் இந்த
உலகத்தை விட்டும் வருகிறேன்...


* எந்த கடவுளுக்கு மாலை கட்டினாய்
உன் மாலைகளுக்காகவே
கடவுளும் காதலிக்கக்கூடும்
சொல்லி வை
நீ மாலையிடுவதும்
உன் தோள்களில் மாலையிடுவதும்
நான் மட்டும்தான் என்று...

* வாரந்தோறும் நீ கட்டும்
மாலைழுக்காகவே
காத்திருக்கின்றன தெய்வங்கள்
அது சரி...
எனக்கு எப்பொழுது மாலையிடுகிறாய்...
காத்திருப்பது
நானும்தான்...