Friday, July 18, 2008

அவளும் அவள் சார்ந்த நினைவுகளும்...!சில மாதங்களுக்குப் பிறகு கிடைத்த ஒரு விடுமுறை நாளின் அறையில் யாருமற்றதாகிய தனிமையில் தூக்கம் கலைந்து விழிக்கையில் கண்களுக்கெதிரே அறையின் வலது பக்க மென் பலகைச் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த வினாடிகளின் முள்ளற்ற கடிகாரம் பத்து மணியை கடந்து இருபத்தாறாவது நிமிடத்தின் புள்ளியை எட்டியிருந்தது. எழுந்து உட்கார்ந்து உள்ளங்கைகளை உரசி அந்த மெல்லிய வெப்பத்தோடு கண்களை கசக்கி பார்வைய சரிசெய்து கொண்டேன். மீதமிருந்த தூக்கத்தை விரட்டுவதற்கு எனக்கு பிடித்தமான கறுப்புத் தேநீர் கட்டாயமாகப்பட்டது!அது இல்லாமல் என்னுடைய நாட்கள் தொடங்கியதுமில்லை முடிந்ததுமில்லை!இதைப்பற்றி அம்மா பதினோராவது முறையாக பேசியிருக்கிற பெண் என்ன நினைப்பாள்...!? படிப்பதற்கு எதுவும் இல்லாமல் எனக்கு தூக்கம் வராததும், படுக்கைக்கு போவற்கு முன்னரும் ஒரு தேநீர் பருகுவது என் வழக்கம் என்பதையும், படுக்கையில் உட்கார்ந்து நாளின் கடைசி சிகரெட்டோடு ஏதாவது வாசிப்பதும் என் நெடுநாளைய பழக்கம் என்பதையும் தெளிவு படுத்த வேண்டிய அவசியம் இருப்பது இந்த நேரத்தில் தோன்றியது....

இது தோன்றிய நேரத்தில் தமிழின் நினைவுகள் என் உறக்கம் கலையாத காலைப்பொழுதின் மூளை நரம்புகளுக்கும் வந்து போனதில் எந்தவித அசாதாரணமும் கிடையாது! ஏனெனில் அவள் என் செல்களில் எல்லாம் நிறைந்து போனவள் அவளுக்காக இல்லையில்லை அவள் என்னில் ஆக்கிரமிக்காத இடம் கிடையாது என் அந்தரங்கத்தோடு சேர்த்து. அப்படியிருக்க அவள் நினைவுகளுக்கு நேரமமென்ன! இடமென்ன! அவை எனக்கு வருவதும் போவதும் வெகுசாதாரணமான நிகழ்வுகள். இருந்தும் யாருமில்லாத தனிமையல் அதன் வலிகள் மிக வன்மையான ரணங்கள்!


காலம் அவளது பிரிவுவையும் நினைவுகளையும் தாங்குகிற சக்தியை கொடுத்திருந்தாலும் இந்த ஆறாவது வருடத்தில் மற்றய பொழுதுகளில் தெரியாத பிரிவின் வலி நான் தனித்திருக்கும் பொழுதுகளில் தனக்கான விசுவரூபத்தை முடிந்த வரை எனக்கு காட்டுவதும், எனக்குள் அதற்கிருந்த உரிமையை, தனது இன்னமுமான இருப்பை சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம் உறுதிப்படுத்திக்கொண்டிருப்பதும் நிகழத்தான் செய்கிறது, இப்பொழுதும் அப்படித்தான் ஆரம்பமாகியிருக்கிறது!

தமிழ்! அவளைப்பற்றி எனக்கு தெரிந்திருந்தாலும் அவள் சார்ந்த தெரியாதது பல இருக்கலாம் அவள் என்னை மனதார விரும்பினாள் என்கிறதோடு அவளுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை என்கிற ஒன்றைத்தவிர.


அது அவளது இயல்பு அவளைப்பற்றி அவள் அதிகம் என்னோடு பகிர்ந்து கொண்டது கிடையாது எண்ணிக்ககைளற்ற முத்தங்களை தவிர அனேகமான தருணங்களில் நாம் பேசுகிற வார்தைகளே வேற, சொல்லு, ம்ம்ம்... என்பவையாகத்தான் இருக்கும். மற்றபடி கடைசியாக பார்த்த, மற்றும் சில திரைப்படங்கள், முணுமுணுக்கிற பாடல், படித்துக்கொண்டிருக்கிற புத்தகம் இப்படியாகத்தன் இருந்திருக்கிறது; தவிர அவள் தன்னுடைய நாட்கள், அதன் நகர்வுகள், அவளது சூழல் மற்றும் அதன் பிரச்சனைகள் இவற்றையெல்லாம் என்னோடு பகிர்ந்து கொண்டது அரிது அல்லது அவள் அதனை தவிர்த்து வந்தாள். உனக்கிருக்கிற பொறுப்புக்களும் கஷ்டங்களும் போதுமானதாயிருக்கிறது நான் உனக்கிருப்பது உன்னுடைய சந்தோசத்துக்காகவே எனக்கான சந்தோசங்கள் உன்னிடம் இருப்பதும் நான் உன்னிடத்தில் நிறைவடைகிறேன் என்பதும் போல நீயும் இருக்கிறாய்!
நீ அழைக்கிற தருணங்களுக்காக காத்திருக்கிற ஒருத்தியன்றி என் சார்ந்த நம் எதிர்காலத்தின் வலிகளை நாம் சேர்ந்திருக்கிறதாகிய நிகழ்காலத்தில் எதற்காக அனுபவிக்க வேண்டும் இப்பொழுது இருக்கிற கணங்கள்தானே வாழ்க்கை என்கிற நான் அடிக்கடி அவளுக்கு சொல்கிற ஆறுதல் வர்த்தையையே நம் பிவரிவுக்கான ஆயத்தங்கள் தன்னைச் சுற்றி நிகழ்வதை அறிந்து கொள்ளாமல் இருந்ததற்கும் காரணமாக்கியிருந்தாள்!
தவிர்க்க முடியாமல் அந்த பிரிவும் நிகழ்துவிட்டிருந்தது.
நாம் பிரிக்கப்பட்டிருக்கிறோம் என்று நமக்கு தெரிய வருகையில் அதுவரையில் இரண்டரை மணித்தியால நேர இடைவெளியிலும், சில அயிரம் கிலோமீற்றர்களையும், ஒரு கடலையும் தாண்டி மட்டுமே பிரிந்திருந்த நாம் நிரந்தரமானதொரு பிரிவின் எல்லைக்குள் தள்ளப்பட்டு அதன் காவல்கள் தீவிரமாக்கப்பட்டிருந்தது...!

சரி... இந்த நேரத்தில் பிரிவின் கதையை நிறுத்தி அவளது நினைவின் ஆரம்பத்துக்கு வரலாம் எனக்கு பற்பசை நுரை கீழுதடுகளிற்கு வெளியே வராமல் பல்துலக்கத் தெரியாது என்பதிலிருந்து நான் லுங்கி கட்டும் பொழுது அதன் முடிச்சை எப்படி போட்டிருப்பேன் என்பதும், நான் செய்கிற வேலையை பற்றியும் அதில் எனக்கு மறந்து போகிற சில விடயங்களை அவளிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவுக்கு தெரிந்து வைத்திருந்தாள் என்பதோடு என்னுடைய நாளின் ஆரம்பம் முதல் கடைசி வினாடி வரை அவளுக்கு கிழமை வாரியாக அத்துப்படியாயிருந்தது! அது எனக்கு ஆச்சரியமானதும் கூட ! என் இரண்டாவது அக்காவின் முன்றாவது குழந்தையின் பிறந்த நாளைக்கூட நினைவு வைத்திருந்தாள்,கடைசியாக நான் எப்பொழுது ஏற்பூசி போட்டுக்கொண்டேன் என்பதையும் எந்த வித குறிப்புகளும் இல்லாமல் சட்டென்று சொன்னதும், அம்மாவின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அவள் தெரிந்து வைத்திருந்ததும் அவற்றுக்கான தனியான சான்றுகள்.என் குடும்பம் மற்றும் அது சார்பாக நான் மறந்தாலும் சில விசயங்களை அவளாக நினைவூட்டுகிற சந்தர்ப்பங்கள் பல நடந்திருக்கிறது.

அவளை நான் இழந்திருக்கிறேனா? அல்லது அவள் என்னை இழந்திருக்கிறாளா? என்றால் அதற்கான விளக்கம் எனக்கு தர முடியவில்லை! அப்படி ஒரு எதிர்பார்ப்புகளின் மத்தியில் அவளுக்கும் எனக்குமான உறவு முறை இருந்ததுமில்லை எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் எதிர் பாராத பொழுதொன்றில் வண்ணத்தப்பூச்சி காவிய பூக்களின் சூல்களினால் நிகழ்து விடுகிற மகரந்த சேர்க்கை போல! அது நமக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது.

எனக்கு ஏதோ தேவைப்படுகிறது; அவளுடனான உரையாடலோ அல்லது அவள் கறுத்த உதடுகளின் ஈர முத்தங்களோ இன்னும் அவள் வலது கையின் சுட்டு விரல் நகங்களின் சுகமான கீறல்கள் பட என் இடது மார்பு ஆசைப்படுகிறது என்றோ (அவள் அனேகமாய் என் வலது பக்கத்து நெஞசில் கன்னங்களை வைத்து சாய்ந்து கொண்டு மருதாணி பூசிய நகங்களின் முனைகளில் தனக்கு தோன்றுகிற இடங்களில் எல்லாம் தன் பெயரையும் என் பெயரையும் எழுதுவது அவள் என்னைப் பார்க்க வருகிற நாட்களில் நிச்சயமாய் நிகழ்கிற நிகழ்வு! அது அவளுக்கு விருப்பமான ஒன்றாக இருந்தது என்பதும் அந்த தருணத்தில் தான் தானாக இருப்பதாகவும் அவள் பின்பொரு முறை சொல்லியிருக்கிறாள்.) என்று அவள் உணர்வதும் எனக்கான தேவையை அவளாகவே அழைத்து நிறைவு செய்வதும்

அல்லது

அவள் என்னோடு ஒரு தேநீர் பருக ஆசைப்படுகிறாள் என்றோ ஸபரிஸங்களுக்கு அவள் காத்திருக்கிறாள் என்றோ இன்னும் அவள் ஆடை மறைக்கிற பிரதேசத்தில் என் விரல்களுக்காய் இளஞ்சந்தன நிறத்திலான அவள் பூனை முடிகள் காத்திருக்கின்றன என்றோ நான் அறிந்து கொள்வதும் ஒரு நெடந்துர பயணத்துக்கான வேளையில துணையாக அவள் கேட்காமலே அவளோடு கலந்துகொள்வதும்

ஆகியவைகளால் ஆன

எதுவும் யாவும் இயல்பாக நடந்தேறுகிற மிகத்தெளிவான தன்முனைப்பற்ற இரு உயிர்களின் இருத்தலாக இருந்தது அவளையும் என்னையும் மட்டுமே சார்ந்த பொழுதுகள்...

அல்லது

தங்கியிருத்தல்கள் அற்ற ஒரு ஆணும் பெண்ணுமாகிய இரு உயிர்களின் நிகழ்வு அதற்கான தருணம் வருகையில் நிகழ்கிறதென்பதைப்போன்றோ நிகழ்ந்திருந்தது அவை...


அதனாலேயோ என்னவோ அந்த பிரிவும் நிகழ்துவிட்டிருந்தது அதற்கான சந்தர்ப்பத்தில்!

இப்பொழுது அவள் எங்கிருக்கிறாள் என்பது எனக்கு தெரியாமல் இருக்கலாம் முன்போல நான் எங்கே எப்படி இருக்கிறேன் என்பது அவளுக்கு தெரிந்திருக்கலாம் ஏன் எனக்கு பெண்பார்த்திருப்பதும் அது என்கைமீறி நிகழ்ந்திருப்பதும் கூட தெரிந்திருக்கலாம்...


ஆகையின்;
உயிரில் நிகழ்கிறதாகிய அந்த நிகழ்வு இன்றய பின்னிரவிலோ அல்லது கல்யாணத்துக்கு நான்கு நாட்கள் முன்னதாக வரும் ஞாயிற்றுக்கிழைமையின் நண்பகலுக்கு பின்னர் நான் தேநீர் பருகும் தருணத்திலோ அவளது அழைப்பொன்றின் மூலம் மீண்டும் ஒரு முறை நிகழலாம்.


இனி தொடர்வதற்காக மட்டும்!