Wednesday, November 18, 2009

ஊதா நிறப்பூவைச்சூடியவளும் வேற்றுகிரகத்தின் இளவரசனும்...

போலி எல்லைக்கோடுகள் போடாத தோழிகள் கிடைப்பது வரம் என்பது மிகையல்ல. கொஞ்சம் இலக்கியம் கொஞ்சம் திமிர் நிறைய தைரியம் என அமைகிற தோழிகள் நான் நம்பாத என் முன்வினைகளின் பயன் - புனைவின் சாத்தியக்கூறு.

பல முறையான என் அழைப்புகளுக்கு பதில் சொல்லாமல் இருந்த தோழி ஒருத்தியின் பெரியதொரு ஊடலுக்கு பிறகு பேசக்கிடைத்த; எனக்கு பின்னிரவைப்போன்ற காலைப்பொழுதொன்றில்.

என்னடா பிறழ்வு கிறழ்வெண்டு விளங்காத மாதிரி எழுதியிருக்கிறாய்..

நானே விளங்காமத்தான் இருக்கிறன் அதான் உப்பிடி.. :)

நீ சும்மா கனக்க யோசிக்காத அதென்ன படம் into the wild.

அந்தமாரி படம் முடிஞ்சா பார், எனக்கு நெருக்கமான ஒரு மனிசன் கிரிஸ்!உள்ளுக்க இருந்த ஆசைகளை தூண்டி விட்டிருக்கிறான். படம் பாத்த அண்டைக்கு குடிக்கோணும் போலயே இருந்திச்சு.

நீ சொல்லுற படங்கள் எல்லாம் பாத்தா நித்திரை கொள்ளேலாது பாப்பம் try பண்ணுறன்.


உண்மைல என்னடி வாழ்க்கை இது போலித்தனமா செஞ்சு வச்சமாதிரி கொஞ்சம் கூட உண்மை இல்லாத மனிசர்களோடை சீ...

கனக்க யோசிக்கிறா போல இருக்கு ஊருக்கு போயிட்டுவா...

ச்சா அப்படியெண்டில்லை ம்ம்.. ஓமடி ஊருக்கு போனா நல்லதுதான்.. wanna get a break.

ம்ம் போட்டு வா..

போறதுக்கு காசில்லை நீ தந்தா போயிடுவன்..

என்ன செய்யுற காசையெல்லாம்?!

என்னைப்பற்றி தெரியும்தானே காசை சேமிக்கிறதெண்டுறது எனக்கு தெரியாத விசயம்...நாளைக்கெண்டெல்லாம் நான் நினைக்கிறதே கிடையாது.

என்னால முடிஞ்சதை தருவன் கவனமா போட்டு வா.

ம்ம் தேவைப்பட்டா சொல்லுறன் ஏப்ரல்ல போகலாம் எண்டிருக்கிறன்..

போகேக்க சொல்லு.

மம்ம்...நேரமென்னடி கதைக்கிறது பிரச்சனை இல்லையோ?

சாமத்துல கதைக்கிறது பிரச்சினை இல்லாம? சரி சொல்லு!

நீ ஏன் உப்பிடி எழுதுற காதல் கவிதையெல்லாம் எழுத மாட்டியளோ?


எழுதுறதோ? நான் புலம்புறதை "எழுதுற" எண்டு சொல்லி எழுதுறவங்களை கேவலப்படுத்தாத

அச்ச்சச்சோ... தாங்கேலாதாம்...அடக்கம் இருக்கத்தான் வேணும், அதுக்காக உப்பிடியோ...அவனவன் செய்யுற அலம்பல்களைவிட நீ எழுதுறது நல்லாத்தான் இருக்கு.

thanks thanks.. thanks...

சரி சரி...காதல்,கறுப்பி எண்டு ஒண்டையும் காணேல்லை காதல் கவிதை ஒண்டு சொல்லு பாப்பம்..

ஹாஹஹஹாஹாஹ :))

ஏன்டா சிரிக்கிற...

நீ காதல் கவிதை கேக்குற?

ஏன் நான் காதல் கவிதை கேக்கக்கூடாதெண்டு எழுதியிருக்கோ...

காதல்கவிதையை நினைச்சா எனக்கு இயலாச்சமன்தான் ஞாபகத்துக்கு வருது. :)

ஒரே ஆக்கள்தானே நீங்கள்...உங்களை திருத்தேலாது!


காதல் கவிதைகளெல்லாம் தாண்டி கன நாளாயிட்டுது காதல் கவிதைகளை படிச்சா சிரிப்புத்தான் வருது...அதாலதான் பெரு நினைவுகள் எழுதுகிற சிறு குறிப்புகளை அப்பிடியே விட்டுட்டன்.

சரி நீ எழுத வேண்டாம் எனக்கு சொல்லு

ம்ம் காதல்,கவிதை..கவிதையாவே வேணுமோ?

பரவால்ல எப்பிடியெண்டாலும் சொல்லு நீ அடிக்குரல்ல சொல்லுறதே ஒரு மாதிரிதான் இருக்கும்..


என்னத்தையடி சொல்லுறது

ஏதாவது சொல்லு கெதியில குட்நைட் சொல்லுறதுக்கு...நேரம் ஒண்டரை.


சரி நீ என்ன செய்து கொண்டிருக்கிற,என்ன கலர் உடுப்பு போட்டிருக்கிற?

டேய் என்னத்துக்கு கேக்குற

சொல்லடி...

"light purple color blouse and white pijama"

என்ன குடும்பி கட்டியிருக்கிறாயோ, அல்லது..?

உதைவிழும் கவிதையும் வேண்டாம் நீயும் வேண்டாம் போடா..

சொல்லெண்டுறன்... எடுத்தவுடன கவிதை சொல்லுறக்கு நானொண்டும் மெட்டுக்கெழுதுற ஆள் இல்லை.


சரி சரி ரெண்டு "hair clip" மட்டும் போட்டிருக்கிறன் சிக்குப்படாம இருக்க..

ம்ம்ம்....

ம்ம்...

என்ன சொல்ல...

ஹாஆ...கதை சொல்லு!


கதையோ...?

உன்னைக்கேட்டன் பார்!!

ஒரு..பாட்டுப்பாடு.

உனக்கென்னத்துக்கடா இந்த றிஸ்க்கெல்லாம்?


சரி பிடிச்ச பாட்டென்ன?

நீ கவிதை சொல்லெண்டா பாட்டுக்கேக்கிற?
பிடிச்ச பாட்டுத்தான் பச்சைக்கிளி முத்துச்சரம் அதுவும் நீ சொன்ன பாட்டுத்தான் போய்கொண்டிருக்கு இந்தா கேள்...

செம பாட்டு என...?

இதை ஏன் இப்ப போட்டன் எண்டிருக்கு

ஏ..னடி?

தாமரை என்னமாதிரி எழுதியிருக்கிறாள்,பாம்பே ஜெயஸ்ரீ என்ன குரலடா அவளுக்கு...

என்ன இருந்தாலும் பெண்மை காதல் சொல்கிற விதமே தனி! தமிழ் சினிமான்ரை சாபவிமோசனங்கள்ள தாமரையும் ஒராள்.

ம்ம்..


உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா...
மருகும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திக்கைப் பார்த்திடவா...
சிறுகச் சிறுக..உன்னில்... என்னை
தொலைத்த மொழி சொல்லவா..
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா.
ரணமும் தேன் அல்லவா..
ரணமும் தேன் அல்லவா...


ம்ம்...

என்னடா...

ம்ம்...

நான் கட் பண்ணுறன் ok...

கொஞ்சம் பொறடி..!

ம்ம்...

.....

சொல்லு...

ம்ம்....

சட்டென்று வருகிற மழையைப்போல
எந்த விதமான ஆயத்தங்களுமில்லாமல்
இயல்பாய் எதிர்ப்படுகிறாய் நீ
ஒதுங்க இடமில்லாத நெடுஞ்சாலையில்
தனியே அகப்பட்டவனைப்போல
திணறிப்போகிறேன் நான்.


அட! முந்தின கவிதைகள் போல இருக்கு,நல்ல சிம்பிளா..பண்டிதத்தனம் இல்லாம.

அப்ப இப்ப பண்டிதர் மாதிரி எழுதறனோ..

அப்பிடியெண்டில்லை சிலபேர் வேணுமெண்டே திணிக்கிறது வித்தியாசமான சொல்லுகளை..அது ஒட்டுறதே இல்லை..அதான்.

அதான் நானிப்ப புளொக் பக்கமே போறல்லை.

அதுவும் நல்லதுக்குத்தான் ஹா..ஹா..ஹ. ;)

போடி குண்டம்மா!
சரி இன்னொண்டிருக்கு கேக்கிறியோ.. ;)

சொல்லு...


மெல்லிய ஊதா நிற மேலாடையில்
வாசல்களே இல்லை என்றாள்
திறக்க முடியாத மேலாடையின் உள்ளே மிகுந்திருந்து
எனக்கான அவளது ரகசியங்களும் பிரியங்களும்
.


உதை விழும் நாயே...!
கவிதை சொல்லெண்டா நக்கல் என உனக்கு..

சரி சரி முடிஞ்சா குட் நைட் சொல்லிட்டு படு...

ஏன் பின்ன உங்களோட உருகி வழிவம் எண்டு நினைச்சியளோ?!

நீங்கள் உருகோணும் எண்டெல்லாம் நாங்கள் கவிதை சொல்லுறேல்லை...சரியோ!!!

சரி சரி கோவிக்காதை...நான் நாளைக்கு எடுக்கிறன்..இப்ப குட்நைட்.

ஓ.கே குட்நைட்.

Thursday, November 5, 2009

திரும்புகிற பிறழ்வு...
எழுதுவம் எண்டு வெளிக்கிட்டாத்தான் விசர்க்குணங்களும் வரும்போல நம்பிக்கையின்மைகளும் பயமும் சேர்ந்து சாகடிக்கிறது.கெதியில ஒரு வைத்திய ஆலோசனை எடுக்க வேண்டி வரும்போல, சரி அதை விடுவம்... பிறழ்வையும் அனுபவிக்கத்தானே வேணும். நிறைய புத்தகங்கள், நிறைய திரைப்படங்கள் கிடைத்திருக்கிறது.இப்போதைக்கு எழுதாமல் இருக்க அல்லது எழுத விடாமல் செய்வதற்கு அவையே போதுமானவையாயிருக்கிறது.

___________________________________________________________

'யாமம்' படித்து முடித்திருக்கிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் எழுதப்பட்ட மொழி என்பது நெருக்கமான குரலொன்றின் சுதியோடு பழக்கபட்ட பாதையில் அழைத்துப்போகிற வசீகரம் உடையது அவரது இணையம் தவிர்த்து நான் வாசிக்கிற இரண்டாவது புத்தகம் அல்லது முதல் நாவல்.இதற்கு முன்னர் வாசித்தது அயல் சினிமா என்கிற கட்டுரைதொகுப்பு.யாமம் வாசிக்கத்தொடங்கி பல நாட்களாகியும் முதல் சில பக்கங்களை கடப்பதற்கே சந்தர்ப்பம் வாய்க்காமல் இருந்தது. எப்படியும் வாசிப்பதென்ற முடிவில்; அறையில் எல்லோரும் உறங்கிய பிறகு மிக மங்கலான வெளிச்சத்தில் மூன்றாம் யாமம் ஒன்றின் ஆரம்பத்தில் படித்து முடித்திருந்தேன்.இரவு ஆகக்குறைந்த போலித்தனங்களோடிருக்கிறதென்று நம்பிக்கொண்டிருந்தேன்; அது ஆகக்கூடிய ரகசியங்களையும் வைத்திருக்கிறது.

____________________________________________________

(இடைக்காலப்)பாடல்களில் பைத்தியமாயிருக்கிற நண்பனொருவனுக்காக பாடல்களை தரவிறக்கிக்கொண்டிருக்கிறேன் வீடியோ பாடல்கள் முடிந்து டிசம்பருக்குள் அறுநூறு பாடல்கள் mp3 ஆக வேண்டும் என்று கேட்டிருக்கிறான். அவனுடைய தெரிவுகளும் நச்சரிப்புகளும் சலிப்பாக இருந்தாலும், சில நேரங்களில் மனதுக்கு இணக்கமாகவும் இருக்கிறது இந்த - பாடல் தேடுகிற வேலை அவனுக்கான பாடலை தேடுகையில் எனக்கான நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்து விடுகிற சில பாடல்களில் தங்கி விடுகிறது மனம். மனதுக்கு நெருக்கமான பாடல்கள் கொண்டு வருகிற வாசனையும் மயக்கமும் ஒரு பரவசமாகவே இருக்கிறது. நினைவுகள் மீட்டலும், கிளர்வுகளும் என காலத்தை கடத்திக்கொண்டு போய்விடுகிறது. தலை முறைகள் மாறியும் மாறிப்போகாத அந்த ரசனைகளையும் சிந்தனைகளையும் வைத்திருக்கிற சனம்தான் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது வடக்கிலும் கிழக்கிலும்.

(மதி உன்ரை தொல்லை தாங்கேலாதாம்)

__________________________________________________


இணையமும் வலையிலெழுதுதலும் எனக்கு கொடுத்திருப்பது இன்னமும் பிறழந்து போகாதிருக்கிற என்னைத்தான் அல்லது பிறழ்வுகளிலருந்து வெளிவருகிற லாவகங்களைத்தான். பிறழ்வும் திரும்புதலுமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது நாட்கள். வாழ்வின் மீதான திருப்தியினை,காட்டாறென ஓடிக்கொண்டேயிருக்கிற வாழ்வினை நேசிக்கிறது மனது. இந்த செய்து வைத்த விதிகளில் வாழ்தலை சபித்துக்கொண்டிருக்கிற என்னை இன்னமும் தீவிரப்படுத்தியிருக்கிறது கடந்த வாரத்தில் பார்த்த in to the wild திரைப்படம். வெளிக்கிடு இந்த இடத்தை விட்டு என்று பதறிக்கொண்டிருக்கிறது மனம், நிர்ப்பந்தங்களால் வடிவமாக்கப்பட்டிருக்கிற இந்த பிறவியும், முடிவுகளின் பால் இருக்கிற தளர்வுகளும், போதாமையும் இன்னமும் விமானச்சீட்டை வாங்க விடாமல் பண்ணியிருக்கிறது.

______________________________________________________செத்துப்போடா நாயே என்பது போல விடிய விடிய குடிப்பதற்கான மனோநிலையோடிருக்கிறது இப்போதைய நாட்கள்.சில நேரங்களில் போதை மிகச்சினேகமாய் இருக்கிறது புத்தகங்களைப்போலவே. பகிர்ந்து கொள்ள யாருமில்லாத எல்லாவற்றையும் எனக்குள்ளே வைத்தபடி எப்படி இருப்பேன்? இந்த இரவுக்கான தோழியை கூட என்னால் கண்டுகொள்ள முடியவில்லை!! என்ன உலகம் இது! ஆகக்குறைந்து குடிப்பதற்கான சுதந்திரமோ,சத்தமாய் புலம்புவதற்கான சுதந்திரமோ இல்லாத இந்த '...நாட்டுக்குள்ள' இருந்து கொண்டு இப்படி ஏதாவது எழுத மட்டும்தான் முடிகிறது.


நம்பிக்கைகளின் மீதிருக்கிற பயங்கள்
எப்பொழுதும் தீராமல் இருக்கிறது,
ஏறக்குறைய முழுவதுமாய்
பிறழ்ந்திருக்கிறது மனம்,
திறந்திருக்கிற இயல்புவெளி
ஆடைகளால் மூடப்பட்டிருக்கிறது,
வெறுமனே பேசுகிற வார்த்தைகள்
பிளைத்துக்கொள்ள போதுமானவையாயிருக்கிறது,
பிரிந்துவிட முடியாததில்
அறுந்து விடாமலிருக்கின்றன இல்லாத பிரியங்கள்,
இறந்து போகையில் மீதமிருக்கக்கூடும்
இன்னமும் ஆரம்பிக்கப்படாத வாழ்க்கை!


போங்கோடா... நீங்களும் உங்கடை ஒழுக்கப்பூழலும்!