Wednesday, October 31, 2007

காதல் - ஒரேவரியில்…


காதல்
- ஒற்றை வரியில் சொல்ல முடியாத விளக்கம்.
காதல் - விளக்கம் சொல்ல முடியாத விடயம.;
காதல் - ஒரு பெயருக்குள் இரண்டு உயிர்கள்.
காதல் - ஒரே உறவுக்குள் உலகத்தை உணர்தல்.
காதல் - பூமிக்கு கிடைத்த வரம.
காதல் - பூக்கள் தருகின்ற சுகம்.
காதல் - ஹோமோசேபியனின் முதல் கவிதை.
காதல் - கூர்ப்பின் முதல் இலக்கியம்.
காதல் - இருக்கிற உயிரிலேயே இன்னுமொரு முறை பிறத்தல்.
காதல் - இன்னொருவரால் உணரவும் நிறைவுசெய்யவும் முடியாத உறவு
காதல் - கேள்விகளுக்காய் காத்திருக்கும் பதில்.
காதல் - இன்னும் இன்னும் என்கிற இரண்டு உயிர்களின் ஒரு புள்ளியிலான தேடல்.
காதல் - எவ்வளவு சொன்னாலும் இன்னமும் சொல்லவும் கேட்கவும் விரும்புகிற உணர்வு…

காதல் என்றால் என்ன என்று தூயா கேட்ட கேள்வி பற்றிய பதிவுக்கு பின்னூட்டம் எழுதலாம் என்று யோசிக்கையில் சடசடவென்று மழையாக மனதில் வந்தவற்றை நானே ஒரு பதிவாக்கி விட்டேன்

(ஒரு பதிவுக்கு வழி செய்த தூயாவுக்கு நன்றி)

Monday, October 29, 2007

பனைமரமும் தமிழரும்…

கடந்த வியாழக்கிழமை (25-10-07) கலைஞர் தொலைக்காட்சியின் காலை நிகழச்சியில் ஒன்றே சொல் நன்றே சொல் பகுதியில் அந்த முனைவர்(அவருடைய பெயர் ஞாபகம் வரவில்லை பிறகு எழுதுகிறேன்) சொன்ன நல்ல விசயம் பனைமரம் பற்றியது. அவர் கூறிய கருத்துக்களில் பனைமரத்தின் எல்லாப்பகுதிபளுமே மக்களுக்கு பயன்படுபவை என்கிற அடிப்படை கருத்திலிருந்து பனை மரங்கள் தமிழரின் அடையாளங்கள் என எல்லாமே என் மனதைத்தொட்டதோடு கூடவே ஊர் ஞாபகங்களையும் சேர்த்தே கொண்டுவந்தது.

அவர் கூறுகையில் நிறைய விசயங்களை ஈழத்திலிருந்தே எடுத்துக் காட்டினார் அதிலும் தமிழ் தமிழ் மணம் மாறாமல் பேசப்படுவது அங்கேதானென்பதையும் யாழ்ப்பாணத்தின் அடிப்படையே பனை மரங்களென்பதையும் அது தமிழர் வாழ்வில் எவ்வாறு பின்னிப்பிணைந்திருக்கிறது என்பதையும் கூறுகையில்
அதனால்தான் ஈழத்துக்கவிஞர் காசிஆனந்தன் ஊர் நினைவுகளைப்பற்றி எழுதுகையில-

‘அழகான அந்த பனை மரம்
அடிக்கடி என் நினைவில் வரும்’

என்று எழுதுகிறார் என அந்த அழகான பாடல் வரிகளை எடுத்துக்காட்டியதோடு அதனை கேட்கும்பொழுதில் ஈழத்து தமிழர்களின் உணர்வுகளை உணர முடிவதாகவும் அதிலிருந்தே பனை மரங்கள் தமிழர் வாழ்வில் எவ்வளவு தூரம் இணைந்தருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும் என்றார் இப்படி அவர் சொன்ன பல விடயங்கள் யாழ்ப்பாணம் சார்ந்தே இருந்தது. அது உண்மைதான் பனைமரங்கள் பற்றி எழுத நினைத்தால் எம் வாழ்க்கையின் அனேக இடங்களில் அது சம்பத்தப்பட்டிருக்கிறது (இந்த இடத்தில் பனங்காய் பணியாரம் நினைவுக்கு வந்து ஊருக்கும் எனக்குமான தூரத்தை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்தியிருக்கிறது முன்பெல்லாம் ஊரில் இருக்கையில் ஒவ்வொரு பனங்காய் காலத்திலும் வீட்டுக்காரரை கரைச்சல் படுத்தி தேவையான அளவுக்கு சுட்டு சாப்பிட்டு விடுவேன் அதிலும் எனக்காகவே விசேசமாக ஆக்கி கூப்பிட்டனுப்பி சாப்பிடக்கொடுக்கும் அந்த உறவின் நெருக்கமான தருணங்களும் அந்தக்கைகளின் சுவையும் அந்த அழகான நினைவுகளும் ம்ம்ம்ம்… இப்பொழுதும் நெஞ்சை நனைப்பது உண்மைதான். பிறகு வேலை நிமித்தம் வெளி மாவட்டங்களுக்கு வந்த பிறகும் அதற்காகவே விடுமுறையெடுத்து ஊருக்கு போய் வந்ததுமுண்டு. சரி அந்த நினைவுகளையம் அதன் அழகுகளையும் எழுத ஆரம்பித்தால் இப்பொழுது முடிக்க மாட்டேன் போதும்…)

இந்தப்பாடல் வரிகள் ஈழத்து பாடல்களில் தேனிசை செல்லப்பாவின் குரலில் வெளிவந்த பாடல் என்று நினைக்கிறேன் ஆகவே ஈழத்துப்பாடல்கள் தமிழ் நாட்டில் கேட்கப்படுகிறது அது பற்றி கருத்துக்களும் கூறப்படுகிறது அது இந்தியத்தமிழர்களிடமும் போய்ச்சேர்கிறது என்பது நம்பிக்கைக்குரிய நல்ல விடயம்தானே?

பனைமரங்கள் பற்றிய வேறொரு பதிவில் அந்த நினைவுகளை பகிர்ந்துகொள்கிறேன்… ;.

Saturday, October 20, 2007

நான் கவிதைகளை ரசிக்க ஆரமபித்ததற்கு கவிப்பேரரசு வைரமுத்துவும் ஒரு காரணம் நான் முதலில் வாசித்த அல்லது உணர்ந்த வைரமுத்துவின் புத்தகம் அல்லது உணர்வுகள் “ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்” என்பதுதான் அதுவும் அது என் கைக்கு கிடைத்ததே ஒரு விசேசமான கையிலிருந்துதான் அதனாலோ என்னவோ அன்றிலிருந்து இன்று வரைக்குள்ளும் பல முறை அதனை வாசித்து உணர்ந்து முடித்துவிட்டேன் அதன் அத்தியாயங்களை வரிவரியாக சொல்லக்கூடிய, எந்த பக்கத்தில் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக்கூடிய அளவுக்கு அந்த புத்தகதை வாசித்துவிட்டாலும் ஆண்டுகள் சில கடந்துவிட்டாலும் அதனை நான் முதலில் வாசித்தபொழுது கேட்ட கேள்விக்கு மட்டும் இன்னமும் பதில் கிடைக்கவில்லை…

அந்த புத்தகத்தின் பின் அட்டையில் இருக்கிற வசனம்

ஒவ்வொரு நட்சத்திரமும் சூரியனைவிடப்பெரியது
காதலுக்காக சிந்தப்படும் ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் நட்சத்திரங்களைவிடப்பெரியது…

இதுவரையில் எத்தனை நட்சத்திரங்கள் நான் தூங்காத இரவுகள் முழுவதும் உருண்டிருக்கும் என் கன்னங்களில்…

Friday, October 19, 2007

நவராத்திரி

எழுத ஆரம்பித்த காலப்பகுதி நவராத்திரி காலம் என்பதால் அதுக்கேற்றமாதிரி ஒரு பதிவை எழுதலாமென்று நினைக்கிறேன்

1) நீ பாவாடை தாவணியிலிருந்து
பட்டுப்புடைவைக்கு மாறிய அந்த
வாணிவிழாவின் நாளில் கட்டிய
மயில் நீல நிற புடைவையின் வாசம்
இன்னும் என் நாசிக்குள் நிறைகிறது…

2) நான் பார்க்கவேண்டும் என்றோ- அல்லது

என்னை பார்க்கவேண்டும் என்றோ
நீ முதன்முதலாய் கட்டிய பட்டுப்புடைவையோடு
என் வீடுவரை வந்துவிட்டுப்போன
நவராத்திரி விழாவிற்குப்பின்னர்
புடைவைகளையும் படித்துப்போயிற்று
உன்னைப்போலவே…

3) நவராத்திரி என்றால்அம்மனே வந்து
தனக்கு மாலை கட்டுவாளா என்ன?
நீ குளித்த ஈரம் காயாமல்
பூக்கள் பட்டு விரல்கள் வலிக்க
மாலை கட்டிக்கொண்டிருக்கையில்
வேறென்ன சொல்வது?

4) ஆயுத பூஜை என்றால்

அவரவர் தங்கள் கருவிகளை பூஜையில்வைக்கவேண்டும்
ஆனால் நீ உன் அழகின்
அத்தனை போர்க்கருவிகளையும்
உந்தன் பட்டுப்புடைவை சகிதம்
என் மீதல்லவா பிரயோகிக்கிறாய்.

நவராத்திரி சம்பந்தமாக பதிவெழுதுகிறேன் என்றுவிட்டு இது என்ன உளறல்களை எழுதியிருக்கிறீர் என்று கோபப்பட வேண்டாம், இன்னும் பல பக்திக்குறிப்புகள் இருக்கு ஆனால் பதியத்தான் நேரமில்லை…அடுத்த பதிவில் எழுதுகிறேன்…

Wednesday, October 17, 2007

வணக்கம்…

வயதுபோய்கொணடிருக்கு இதுவரையும் இந்த உலகத்துக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்ற ஏக்கத்தில் ஏதாவது எனக்கு தெரிந்ததை எழுதலாமெண்டு (ஒருத்தரும் படிக்காட்டாலும் பரவாயில்லை) வந்திருக்கிறன் அன்பு நெஞ்சங்களே…உள்ள வரலாம்தானே…?