Saturday, March 26, 2011

பேசப்படாத சொற்கள்...

எப்பொழுதும் பிடித்தமான சொற்களை பேச முடிவதில்லை
எனக்கும் அவளுக்கும் இடையில் கூட நிகழ்வதில்லை
எப்போதும் அணுக்கமான சொற்களை எழுதவும் முடிவதில்லை எனக்கு
எல்லோருக்கும் அணுக்கமான சொற்களையும் கூட...

பொதுவாக எவ்வளவு பேசினாலும் தீராதவை
பல நேரங்களில் தீர்ந்த பிறகும் திருப்தி தராதவை
எப்பொழுதாவது ஒற்றைச்சொல்லில் நிரம்பிவிடுகிறது மனம்
சில நேரங்களில் சொல்ல முடியாதவையும் கூட
தேவையான நேரங்களில் தாமதமாகி விடுகிறவைகளின் விலைகள்
கொடுக்க முடியாததாகவே இருக்கிறது

எனதும் உனதும் மனங்களைப்போல அவை
ஒரு போதும் கெட்டுப்போவதில்லை

இன்னும்...இன்னும்
வெகு அரிதாகவே அவை தேவைப்படாமலிருந்தாலும்
வெளியில் சொற்கள் சொற்களாகவே இருக்கின்றன.


_____________________________________________________


பேசிவிட முடியாத எல்லாச்சொற்களையும் போலவே சரியாக எழுதப்படாத இந்த சொற்கள் குறித்த சொற்களும்.

பெரும்பாலும் மனிதர்கள் சொற்களால் நிரம்பி இருந்தாலும் எல்லோருக்கும் அவற்றையெல்லாம் பேசக்கிடைப்பதில்லை.

சொற்கள் குறித்து பேச நிறைய இருந்தாலும் இப்போதைக்கு இவ்வளவும்.

Friday, March 4, 2011

அன்பை மறுதலித்தல் அல்லது மன்றாடுதல்.

"
ஒன்றினுக்காய் உருகுவது
ஒன்றினுக்காய் இன்னொன்றினை
விட்டுக்கொடுப்பது
சதா அதே நினைப்பாய் இருப்பது
எங்கு சென்றாலும் பின் தொடர்வது
கேர் கேரிங்
வித் லவ்
பிரியங்களுடன்
முத்தங்களுடன்

இதையெல்லாம் விட ஆபாசமான சொற்கள்
வேறெதுவும் இருக்க முடியாது... "
- அய்யனார்.


நீ எனக்கு ஏதோ ஒரு நினைவில்லாத நாளில் அறிமுகமாகியிருந்தாய் ஆனால் உன் அறிமுகம் எனக்கு நினைவிருக்கிறது.'நீ யார்' என்கிற கேள்விகளோடு நம் உரையாடல் தொடங்கியிருந்தது,கூடவேஅந்த புகைப்படத்தை எனக்கு அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

தமிழ் சினிமாவின் தாக்கம் அதிகமாய் உள்ள உரையாடல் உன்னிடமிருந்தது. நீயும் உன் தோழிகளும் எப்பொழுதும் அப்படித்தான் என்றாலும் உன்னிடம் குறைந்த பட்டசமெனினும் உண்மைகள் இருந்தன அது இந்த உண்மையற்ற உலகின் அதிகபட்சமாய் இருந்தது. அது எனக்கு பிடித்திருக்கிறது இப்பொழுதும் நீ உண்மைத்தன்மைகளோடு இருக்கிறாய் என நம்புகிறேன். முழுவதுமாய் உண்மையாய் யாராலும் இருக்க முடிவதில்லை. யாராலும் என பொதுமைப்படுத்துவதில் எனக்கு உடன் பாடில்லை எனக்கு முடிவதில்லை.ஆனால் முடிந்தவரை உண்மையாய் இருக்கிறேன் என நம்புகிறேன் இல்லையெனில் என்னால் குடிக்காமல் இத்தனை நாட்கள் இருக்க முடியாது. உண்மைகளை பேசுதலும், உண்மையாய் இருத்தலும் ஒருவகையில் போதையானது. உண்மை விரைவில் சலிக்கும் என்றாலும் அதன் நகர்வுகள் அதிசாத்தியமானவை.

ஒரு உண்மை முடியத்தொடங்கும்பொழுதே அது அடுத்த நகர்வை தந்து விடுகிறது.குற்றவுணர்வுகளின் வஞ்சனைகள் எதுவுமில்லாமல் விலகிவிட உண்மைகளுக்கு சாத்தியம் அதிகமாய் இருக்கிறது. உடல் தனக்கான பசியை எப்பொழுதும் தக்க வைத்திருக்கிறது. ஒரே உடல்தான் பாவம் என்று நீ நம்புகிறவைகளையும் புனிதம் என நீ நம்புகிறவைகளையும் செய்கிறது.பாவமும் புனிதமும் உடல் சார்ந்தே கட்டமைக்கப்படுகிற உனக்கும் எனக்கும் தெரிந்த இந்த சூழல் போலிகளின் குரூரபிம்பங்களை மறைப்பதற்கான மேடையாகவிருக்கிறது உள்ளேயிருக்கிற குப்பைகளை தெளிவாக தவிர்த்து ஒழுக்கம் பேசுகிற சூழல்தானே நம்முடையது. மூடிவைத்தாலும் பாவம் பாவம்தான்.

உனக்கு முன்பொரு முறை சொல்லியிருப்பதைப்போல உன் குரல்களை என்னிடம் அனுப்பு உண்வுகளோடு உயாடப்பழகு குரல்களால் ஒரு கட்டத்துக்கு பிறகு பொய் பேச முடிவதில்லை. தன்முனைப்புகள் அறுந்து போக அவை தம் உடல்களை பேச தொடங்கிவிடுகிறன்றன நிர்வாணமான சொற்கள் உன்மத்தமாய் இருக்கக்கூடும் அவை பொய் பேசுவதில்லை என்பதாலேயே அது சலித்துப்போக்கூடும். மற்றுமொரு தருணம் வரும் வரைக்கும் உண்மைகள் காத்திருக்கின்றன எந்த குற்றவுணர்வும் உண்மைகளுக்கு இருப்பதில்லை பிரிவுகளுக்கு பிறகும் அவைகளால் நிகழுக்கு பொருந்த நெருங்க முடியும்.


இந்த உரையாடலுக்கு சற்றும் சம்பந்தமில்லாதவை என்று நான் நம்புகிற சில விசயங்களை இங்கே தட்டச்ச வேண்டியிருக்கிறது.முன் பின் அறியாத முகம் தெரியாத இரு உடல்களின் தொலைபேசி வழியான புணர்வுகளின் பரவல் குறித்து நீ அறிந்திருப்பாய், அந்த குரல்கள் உண்மையாய் இருக்கக்கூடும். அவை வெறுமனே பேசப்படுகிற வார்த்தைகளை அலங்காரம் செய்யப்பட்ட வெறும் சொற்களை உடல்கள் கண்டு கொண்ட பிறகு அவை தமக்கான பசியை தீர்த்துக்கொள்வதில் தீவிரமாய் இயங்க ஆரம்பிக்கின்றன. அவை மூடி வைக்கப்பட்டிருக்கற உனக்கும் எனக்கும் தெரிந்த இந்த சூழலின் போலித்தனங்களின் தடைகளை தமக்குத்தெரிந்த வழிகளினல் மீறுகின்றன. அவை ஆபத்தானவையாய் இருப்பினும் கூட திடீரென கிடைக்கிற உண்மையின் கிளர்வு மற்றும் உடலின் வேட்கைக்கான தற்காலிக தீர்வும் அசந்தர்ப்பங்களாக கசப்பான இந்த விசயங்களை நடத்தி விடுகின்றன.திறந்து விடப்பட்ட யாழப்பாணத்தின் இந்தப்பூனைகளா என்கிறதைப் போலானவர்களின் அந்தரங்கங்கள் குறித்து இவை பேசினாலும் உண்மை மிக மோசமான நிலையில் இருக்கிறது.

இந்த வெறும் விளக்கமற்ற குரல்களிலும் எனக்கு கோபமிருப்பதனால் இதை பின்பொரு விரிவான தளத்தில் உரையாடுவதற்காக விட்டுவிடலாம்.

________________________________________

காதல் குறித்த உன் அத்தனை கேள்விகளும் என்னிடமும் இருக்கிறது ஆனால் குறைந்த பட்டசமேனும் உண்மையான பதில்கள் என்னிடம் இருக்கிறது அவை உன்னிடம் இல்லாமல் போகலாம்.

தனக்கான ஒரு பொருந்தலை, உடலை, மொழியை ஒரு உயிர் கண்டு கொள்கிற கணங்கள் காதல் என்பதாய் இருக்கக்கூடும். உடலை தவிர்த்து மொழி தனியேயும் மொழியை தவிர்த்து உடல் தனியேயும் இயங்குவது நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு உறவாக இருக்கலாம்.மொழி என்பது சத்தங்களால் ஆனது மட்டுமல்ல பேசாதிருத்தலும் ஒரு வகையில் பேசுதலே.

உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்பதற்கான முழுமையை நீ கண்டு கொள்வதற்கு நீயும் நானும் இன்னும் பேச வேண்டியிருக்கலாம். அதை சொல்வதன் தயக்கம் உன் உண்மைத்தன்மைகளின் மீதான கேள்விளை எழுப்புகிறது. உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்பது ஒற்றைத்தன்மையுடையதாய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தனியே என்னைச்சார்ந்து மட்டும் இருக்க முடியாது.

அடிப்படையில் நீடித்த அன்பென்ற எதுவும் இருக்க முடியாது என்பதை நீ ஏற்றுக்கொள்கிறாய்தானே. எப்பொழுதும் காதல் நிரம்பிய வார்த்தைகளை என்னால் பேச முடியாது. எல்லா சமயங்களிலும் நம்பிக்கை தருகிற சொற்களை பேசுவது மிக மோசமான முகமூடிகளில் ஒன்றாய் இக்கலாம். வெறுமனே காத்திருப்புகளும் புனிதக்கதைகளும் கொண்டு காதல் பேச முடியாது. பசித்த உடல்கள் தோற்றுப்போய்விடுகின்றன; இதற்கு எனக்குதெரிந்து பத்து வருடங்கள் காதலித்த சயந்தனையும் சுனிதாவையும் குறித்த கதைகளை உதாரணமாக கொள்ளலாம் (எழுதப்படாத நாவல் ஒன்றில் நீளமான காதல் கதையிலிருந்து சில பகுதிகள் என்கிற கதையிலிருக்கிறது) சந்திக்க முடியாத தூரங்களில் இருக்கும் உறவில் (long distance relationship) எனக்கு பிடிப்பிருப்பதில்லை. அது வெறும் நிர்ப்பந்தங்களின் திணிப்பு, ஒரு வகையில் தன்னைத்தானே ஏமாற்றுதல். ஏற்கனவே இருந்த காதலையும் அன்பையும் கூட காத்திருப்பின் நிகழ் கலைத்துப்போட்டுவிடுகிறது என்பதே உண்மையாயக இருக்கலாம். காதல் தனித்திருக்கிற இரண்டு உடல்களின் மொழி, புரிதலின் வெளிப்பாடு. புனிதங்களும் ஒப்பனை செய்யப்பட்ட கதைகளும் அவற்றின் போதாமையை விரைவிலேயே நிரூபிக்கின்றன. அவை நம் சாதிய, மற்றும் கலாச்சார சமுதாய கட்டமைப்பின் சுதந்திரமற்ற தன்மையினால் வெளியே தெரியாமல் மூடப்படுகின்றன. அன்பு எப்பொழுதும் விறைத்த குறிகளைப்போல துருத்திக்கொண்டிருப்பதில்லை அது இயல்பாக வெளிப்படுகிற ஒன்று அதன் தருணங்களை கண்டடைதலும் நீட்டித்திருப்பதிலுமே பெரும்பாலான உறவுகள் வெற்றியடையக்கூடும் அவளை அவளாகவும் அவனை அவனாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது பொருந்துகிற உயிர்கள் ஒன்றை ஒன்று அதனதன் இயல்பு மாறாமல் ஏற்றக்கொள்தலே சிக்கலற்ற உறவு முறைக்கு சாத்தியமாயிருக்கலாம்.

காதல் எதிர்பார்ப்புகளின்பால் உருவாகிறது என்றாலும் திணித்தல் அதன் ஆயுளை குறைக்கிறது. புரிதல் என்கிற ஒன்றை குறித்து பேசாமல் எந்த உறவும் இருக்கவே முடியாது.
பரஸ்பரம் பயன் படுகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிற எந்த உறவும் தெரிந்தே சொல்கிற நேர்முக நிகழ்வுகளின் பொய்களைப்போலானவை, வெறும் மேடைகளுக்கானவை திரைக்குப்பின்னால் அவை ரகசிய விசாரணை அறைகளின் மூலையில் இருக்கிற இருளைப்போல அழுத்தமாய் உணரக்கூடியவை.

போதும் மாயா... சோர்வாயிருக்கிறது இப்போதிருக்கிற மனோநிலையில் அன்பை எவ்வளவு மறுதலித்தாலும் அது தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை.
இதை நான் உன்னோடு பேசவேண்டும் என நினைத்திருக்கவில்லை.ஆனால் யாருடனாவது பேசினால் தீரும் என்றிருந்திருக்கிறேன் வழக்கம்போல 'வேற பிராக்கில்லை' என்றே இதையும் சகித்துக்கொள்வாயாக.
உனக்கு பிடிக்காத சொற்களை
நான் எழுதாமலிருந்திருக்கலாம்
எனக்கு பிடித்தமான சொற்களை
நீ பேசாமலிருந்திருக்கலாம்


என்னை நீ அறிவாய் என்பதில்
எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது மாயா
உனது நெருக்கம்
எனக்கு நம்பிக்கை தருவதாய் இருக்கிறது
ஒப்பனை செய்யப்பட்ட வார்த்தைகளை
இனிமலும் உன்னோடு பேசப்போவதில்லை

நேரடியான சொற்களைக்கொண்டு இந்த
கசப்பான உரையாடலை மறந்து விடுவோம்

என்னை சகிக்கிற உன் திமிரை
மதுக்கோப்பைகளில் வழிய விட்டபடி
முத்தங்களுக்கான இடைவெளிகளில் அமர்ந்தபடி
இரவு முழுவதும் பேசலாம்.

ஏதோ ஒரு கணத்திலேனும்
காதல் நிகழும் படிக்கு நானும்
நிகழாதிருக்கும் படிக்கு நீயும்
பிடித்தமான பூனைக்குட்டிகளாய் மாறிவிடலாம்.


____________________________________________


பின் குறிப்பு:

//
இந்த பகிர்வை சாத்தியப்படுத்துகிற மாயா- 'ரகசியங்கள் உலாவுகிற அறையில் உறங்குபவள் பற்றிய குறிப்புகளுக்கு' சொந்தக்காரி இவளைக்குறித்து பின்னர் பேசலாம். இதுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் என்னை சகிக்கிற அவளுடைய கோபங்களுக்கு நன்றி.

//
அய்யனாரை துணைக்களைத்தபடி நிலைதகவல்களில் உரையாடுதல் என்பது இந்த குழம்பலின் தொடக்கப்புள்ளி, நன்றி அய்யனார்.