Showing posts with label புனைவு.... Show all posts
Showing posts with label புனைவு.... Show all posts

Thursday, February 14, 2019

குடியுரிமைக் கோப்பைகளுக்கான நிரம்புதல்...


இது ஒரு கதையெண்டு வையுங்கோவன். ஏன் நான் கதை எழுதக்கூடாதோ! உந்த நக்கல் சிரிப்புத்தானே வேண்டாம் எண்டுறது. நானும் ஒரு கதையை எழுதிப்பாக்கலாம் எண்டால் உப்பிடி ஏதாவது செய்தே என்னை முடக்கிறியள் ஆனால் இனியும் உதெல்லாம் சரிவராது நான் இந்தக்கதையை எழுதுறதெண்டே முடிவு பண்ணிட்டன்.



உண்மைல கதையில வாறவருக்கு; வராத ஒரு மொழிநடைதான் இந்த ஒரிஜினல் தமிழ் எண்டு நீங்கள் நம்புற ஒரு ரியுன். நான் இந்த ரியுன்ல இதைச்சொல்லுறதுக்கும் ஒரு 'கடியான' காரணமிருக்கு. உவருக்கு இப்ப நித்திரையைக் குழப்பிக்கொண்டிருக்கிற குட்டிக்கு உவர் கதைக்கிற பாஷை விளங்கிறது பெரும்பாடு, உவரும் இது தமிழ்தான், தமிழ்தான் எண்டு சொன்னாலும் அவள் உப்பிடி "லூசு மாதிரி கதைக்காதையுங்கோ" எண்டு உவரை கன தரம் கடுப்பாக்கிப்போட்டாள் ஆரம்பத்தில் அவள் இதை நீங்கள் கதைக்கிற தமிழ் கஷ்டமாயிருக்கெண்டு 'நைஸா' சொல்லிப்பாத்தாள்; அவர் அதை கவனிக்காமல் அலம்பியிருக்கிறார் அதுதான் அவள் விசயத்தை போட்டு உடைச்சுப்போட்டாள்.



சரி அதை விடுங்கோ இப்ப கதைக்கு வருவம்...

__________________________________________________





"அன்பின் ஆகக்குறைந்த நுழைவிடமாயிருந்தேன்

உன் விசுவரூபத்தோடு என்னில் நுழைகிறாய்

உன் முழுவதையும் தாங்கமுடியாதபடிக்கு

திணறிக்கொண்டிருக்கிறதெனது உயிர்..

எப்பொழுதென்னை கூடடைத்துக்கொண்டு போவாய்."



எதையுமே எழுதப்பிடிக்காமல் யாரோடும் பேசக்கிடைக்காமல் இருந்த இந்த நாட்களை எனக்கு நேரெதிரில் இருக்கிற ஒருத்தி குறுக்கிட்டிருக்கிறாள். எல்லா அன்பையும் போலவல்லாத ஒன்று அவளிடம் இருக்கிறது என்றாலும் யாழப்பாணத்தின் அத்தனை புலம்பெயர் கேள்விகளையும் சுமந்து கொண்டிருக்கிற பழைய புதிர்கள் நிறைந்த அவளிடம் எனக்கான பரவசங்கள் இருக்கிறது. அது மிகப்புதியதாய் இருக்கிறதில்தான் இதை எழுத வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. "புலம்பெயர் தமிழ் சமுதாயம் இன்னமும் 1990 களிலேயே இருக்கிறது" - "ஐரோப்பிய நடை முறைகளுடனும் பழைய யாழ்ப்பாணத்து திணித்தல்களுடனும் வளர்க்கப்படுகிற பிள்ளைகளின் மன முரண்கள்." - "தமிழ்சினிமாத் தனமான மனோநிலையில் இருக்கிற இளைய சமுகம்." என்கிற பழைய வசனங்களை எல்லாம் நானே திரும்பவும் நானே பேச வேண்டியிருக்கும் என்று நான் எதிர்பார்க்காத ஒரு சந்தர்ப்பத்தில் இந்த உறவுக்கான தொடக்கப்புள்ளியை இணைய உரையாடல் தளமொன்று ஏற்படுத்தித்தந்திருக்கிறது.


எப்பொழுதும் அன்பாயிருத்தல் தொடர்ச்சியாய் உருகுதல் என்பதெல்லாம் வெறும் வேசங்கள் ஆபாசங்கள் என்பதாய் சலம்பிக்கொண்டிருந்தவனை இடைவெளிகளுக்கு பிறகு குறுக்கிட்டிருக்கிற இந்த உறவு கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. அடிப்படையில் நான் அன்பை யாசிக்கிறவனாகவே இருந்திருக்கலாம். பற்றுதலுக்கான அலைதலே இந்த இருபத்தொன்பது வருடங்களாகவும் இருந்திருக்கலாம் காதல் குறித்த அதகளமான அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்த எனக்கு உன்னை சமாளிக்கத்தெரியவில்லை என்பதுதான் உண்மையாயிருக்கிறது.



உன்னைப்பற்றிய குறிப்புகளை என்னால் இன்னமும் ஒழுங்கமைக்க முடியவில்லை; நீ ஆதிக்கனவுகளின் சாயல்களில் இருக்கிறாய் என்றாலும் எனக்கு மற்றொரு திசையில் இருக்கிறாய் என்பதே உண்மையாயிருக்கிறது. என்னை நானாகவே ஏற்றுக்கொண்டு கையாளுகிற நிதானம் உனக்கு இல்லாமல் போனாலும் என்னை கைப்பற்றுகிற அழுத்தம் உனக்கிருப்பதாய் நம்புகிறேன். நான் எப்பொழுதும் இலகுவானவனாகவே இருந்திருக்கிறேன் என்பது உன் குறுக்கீடுகளின் மூலம் மற்றொரு முறை உறுதியாயிருக்கிறது. அன்பை நிராகரிப்பதன் மூலம் அழுத்தமாகி விடலாம் என்கிற என் நடைமுறை மாறியிருக்கிறது.



நான் உன்னை கடந்து விடுவேன் என்று நம்பினாலும் உன் கவலைகள் என்னை கோபமூட்டுகிறது. ஆகக்குறைந்தளவு உண்மைகளைத்தானும் உன்னால் அடையாளம் காணமுடியாமலிருக்கிறது. உன்னை சுற்றிலும் இருப்பது உண்மைகளுக்கு புறம்பானதொரு கூட்டம் என்பதை நீ கண்டுகொள்ளவே இல்லையா, அல்லது அவர்களின் வட்டத்துக்குள்ளேதான் உலகம் இருக்கிறது என்று நம்புகிறாயா. உன்னை அவர்கள் ஒரு கண்ணுக்குத் தெரியாத வலைக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை நான் உனக்கு எத்தனை முறை சொல்ல முடியும். உன்னைக்குறித்த கவலைகள் என்னிடமிருப்பதை நீ நம்புவாயோ என்ன்வோ இப்போதைக்கு இதை நான் அன்பென்றோ, காதல் என்றோ சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன்.



உன்னை காதலிக்கிறேன் என்கிற ஒற்றை நாடகத்தை என்னால் மிகத்துல்லியமாக நெறியாள முடியும்.உனக்கு அது போதுமானதாயிருக்கலாம் நீ நம்ப விரும்பாத உனக்கு பழக்கமில்லாத

ஒரே ஒரு விசயம் என்னிடமிருப்பதில் உன்னை விலக முடியாமிலிருக்கிறது.உண்மைக்கு நெருக்கமான வாழ்வென்று ஒன்றுண்டு.நான் வாழ்கிறவன்.

________________________________________________________





உனக்கு நான் என்னத்தை சொல்ல இருக்கு..



நீ எதிர்பாக்கிறதை விட ஒரு வாழ்க்கையை உனக்கு தர முடியும் என்று நான் நம்பினேன் ஆனால்.நான் அறிந்த வரைக்கும் உனக்கு உண்மையை ஏற்றுக்கொள்ளவே முடியாது அல்லது அதை அறிந்து கொள்ளத்தெரியாது. உன்னுடைய எல்லா பயங்களிலிருந்தும் வெளியில் வந்து விடு. உன்னுடைய வாழ்க்கையை நீ வாழ்வது என்கிற விசயத்தில நம்பிக்கை வை.


நான் உண்மையின் விளிம்பிலிருந்துகொண்டு நீ எதிர்பார்க்கிறதை விட நல்ல ஒரு வாழ்ககையை உனக்கு தரமுடியும் என நம்பியிருந்தேன். உன் ஒற்றைக் குடியுரிமையையும், இற்றுப்போன யாழ்ப்பாணக் கதைகளையும் வைத்துக்கொண்டு என்னை திருமபத்திரும்ப கேள்விகள் கேட்கிறாய் அன்பை அறவே நிராகரிக்கிறவனாகத்தான் நானிருந்தேன் உன் குறுக்கீடுகள் என்னை எழுதவெல்லாம் வைக்கும் என்று நான் நம்பவில்லை.



நான் நினைத்து வைத்த வாழ்வில் நீ எனக்கு நேரெதிர் திசையில் இருக்கிறாய் என்னை இயல்பாய் இருக்கவிடு உன்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்துப்போகிறேன். அன்பு எந்த விதிமுறைகளோடும் வருவதில்லை அது தானாக நடப்பது என்றுனக்கு சொல்லியிருக்கிறேன்.

அது நீ எதிர்பார்த்ததிலும் நிச்சயம் சுதந்திரமானதாய் ஆசுவாசமானதாய் இருக்கும. நிர்ப்பந்தங்கள் அங்கே இருக்கவே போவதில்லை.புரிதலும் பகிர்தலும் சின்னச்சின்ன தயார் நிலைகளுமே அங்கே தேவைப்படலாம்.



நீ கடக்கவும் நுழையவும் நிறை விசயங்கள் இருந்கிறது முதலில் வெளியே வர முயற்சி செய் மிகுதியை புரிதலும்,காலமும் தகவமைக்கும்.


__________________________________


பெடியன்ரை புலம்பல்களில் இருந்தொரு சாம்பிள் சுருக்கம்.


நீங்கள் நினைக்கிற மாதிரி நீ மட்டும் போதும் என்கிற, அக்கா-தங்கச்சி,குடும்ப பொறுப்பு என்கிற எந்த பேச்சுகளுமே இல்லாமல் அன்பை அள்ளித்தருவதற்காக மட்டும் ஒருவனை வீட்டுக்காரார் பாத்து தருவினம் முன்னப்பின்ன தெரியாத அவன் உங்களை வச்சு பூசை செய்வான் கட்டிக்கொண்டு சாம்பிராணியைப்போடுங்கோ நாங்கள் உண்மையா இரண்டு வசனம் பேசினால் உங்கடை அலட்டலை காதல் வியாபாரங்களை ஆரம்பியுங்கோ. வெறும் உறுதி மொழிகளை மட்டுமே தந்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை என்பதை எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன்.



என்ன கதை விளங்குதோ உண்மைல இது ஒரு பெரிய சிக்கலான கேஸ்தான் சும்மா சிவனே எண்டு ஒரு தினுசா அனுபவிச்சுக்கொண்டிருந்த பெடியனை ஒரு பெட்டை குறுக்கிட்டிருக்கிறாள்; குறுக்கிடுறது எண்டால் "விழுத்துறது" எண்டு வையுங்கோவன் உண்மைல இவர் மயங்கினதெண்டு சொல்லலாம். ஆனால் வெறு மயக்கம் எண்டு மட்டும் சொல்லேலாது ஏனெண்டால் பெடியன் எல்லா உறவுகளும் நிர்ப்பந்தங்களின் மீது நீடிக்கிறதுதான் எண்டும் அன்பை புதுப்பிக்காத அல்லது புரிதல் இல்லாத எந்த உறவும் ஏதோ ஒரு கட்டத்தில தெறிக்கிறதுதான் எண்டும் சொல்லி சத்தியம் பண்ணியிருக்கிற ஆள். இலக்கியம்,ஓஷோ, சுயம் எண்டு, கடுங் கூட்டங்களோடை பழகி விளங்காத புத்தகங்கள் எல்லாம் வாசிச்சு பெடியன் ஒரு மாதிரி கடும் போக்கெண்டு வையுங்கோவன். ஆனால் என்ன பெடியனுக்கு சின்னல்ல இருந்தே இளகின மனசு.அண்டஸ்ராண்டிங்கான பெடியன்.





பெட்டை என்னண்டால் தனக்கு காதல்ல நம்பிக்கையே இல்லை எண்டு சொல்லிக்கொண்டு என்காக சிகரெட்டை விடு, இனி குடிக்கவே கூடாது, என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும் என்னை வேலைக்கு போகச்சொல்லுவியா, எண்டெல்லாம் கேள்வி கேக்கிற ரைப். இது போதாது எண்டு உவர் அவளை விரும்புறதுக்கு காரணம் அவளின்ரை சிட்டிசன்ஷிப் தான் எண்டு அவளின்ரை அறப்படிச்ச சொந்தம் ஒண்டு சொல்லியிருக்குது போல(சொந்தம் எண்டவுடன பெரிய கனக்க வயதெண்டு நினையாதையுங்கோ நாலைஞ்சு வருசத்துக்குள்ளதான் படாத பாடெல்லாம் பட்டு அங்க போய் சேர்ந்த ஒரு 20 வயது இருக்கக்கூடிய பெட்டை) அவளும், இவனை சுத்தி சுத்தி கேள்விகேட்டு கண்டிஷன் போட்டு காதலிச்சுக் கொண்டிருந்தாள்.

அனேகமா ஒரு நாளைக்கு நாலைஞ்சு மணித்தியாலம் கதைச்சாலும் ஒரு நாளைக்கு ஒரு தரம் எண்டாலும் லைனை கட்பண்ணி போட்டு போறதும் திரும்பி வாறதும் எண்டுஇருந்திச்சு பெட்டை. பெடியன் அவளைப்புரிஞ்சு வச்சிருந்தாலும் அவளுக்கு இவனிட்ட இருக்கிற குணங்கள் பிடிக்கேல்லை அல்லது அவளுக்கு என்ன வேணும் எண்டது கூட தெரியேல்லை. உண்மைல இது அங்க இருக்கிற முந்தின தலைமுறை ஆக்களின்ரை நடைமுறைகளாலதான் எண்டு நினைக்கிறன். (எங்கடை பெட்டையளே உப்பிடித்தானே ஒண்டில் தேவையில்லாததையெல்லாம் யோசிப்பாளுகள் இல்லையெண்டால் ஒரு ஒண்டையும் யோசிக்காமல் சிக்கல் படுவாளுகள்) ஒருக்கால் உப்பிடித்தான் அவளின்ரை அறப்படிச்ச சொந்தம் இவன்ரை சாதி என்ன எண்டமாதிரி கதைக்கிறது கேக்க உவன் தனக்கு தெரியாதெண்டு சொல்லிப்போட்டான்.

கொஞ்ச நேர கதைக்கு பிறகு உப்பிடி ஒரு வசனத்தையும் சொன்னான்.


"செய்யுற தொழிலை வச்சுத்தான் சாதி எண்டு சொன்னால் யுரோப்பில இருக்கிற பெரிய சாதி எண்டு படம் காட்டுற அனேகமான வெள்ளாளர் எல்லாம் முக்காடுதான் போடோணும் ஆனால் எனக்கு தெரிஞ்சவரைக்கும் நான் ஒரு மோசமான வெள்ளாளன்" எண்டு சொன்னான். அவள் லைனை கட்பண்ணிக்கொண்டு போட்டு, கொஞ்ச நேரத்துல ரைப்ப பண்ணி கதைக்க தொடங்கினாள்.



அவள்:

Kandee

vendam

pls



enakkum unakkum sari varathu.

enkada veeddula sathi pappinam



vendam pls..



இவன்:



சரி



அவள்:

kovama..


எண்டு கேட்டுட்டு கோல் பண்ணி,ஒரு கிஸ் குடுக்கிற ஸ்மைலியும் அனுப்பினாள்.

அவள் மட்டுமில்லை இவனும்தான் கோபப்பட்டு திட்டுறதும் பிறகு கொஞ்சுறதும் எண்டு அவளை கட்டுறதெண்ட முடிவில இருக்கிறான். நான் இந்தக்கதையை கேட்டு அறிஞ்ச மட்டுல பெட்டை கஷ்டப்பட்டு உழைக்கிற ஒருத்தி ஆனால் அவளின்ரை சொந்தக்காரர்களின்ரை கதைகளும் பழைய அனுபவங்களும் அவளை குழப்பம் பண்ணிக்கொண்டே இருக்குது எண்டுதான் நினைக்கிறன்.


________________________________________


"உன்னை தவிர்க்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்

என்னை காதலிப்பதை இன்னொரு முறை சொல்லு
."

உண்மையில இந்த வசனத்தை யார் எழுதி இருப்பினம் எண்டு நீஙக்ள் கண்டுபிடிச்சா உங்களுக்கு இந்த கதை விளங்கிட்டுது எண்டு அர்த்தம். இன்னொரு விசயம் உண்மைல இதை எழுத வேண்டிய ஆள் இதை எழுதேல்லை.


இந்தக்கதைக்கு ஏன் இப்படி தலைப்பு எண்டுற கேள்வியோடை, கதை இன்னும் முடியல்லை எண்டுற மாதிரி இருந்தாலும் இது கல்யாணத்துல முடியுற கதைதான்.


__________________________________________________

பகிர்வுக்கான குறிப்பு.

முன்பொரு முறை எழுதி வைத்த சில சொற்கள் இவை கிடப்பிலேயே இருந்தது இதை இனி என்னால் தொடர்ந்து எப்பொழுது எழுத முடியும் என்று தெரியவில்லை இதை தொடர்ந்து எழுதக்கூடிய மனோநிலை வரும்பொழுது திரும்பவும் திருத்தமான வடிவத்தில் எழுதிப்பார்க்க முயல்கிறேன் இப்போதைக்கு இதை வாசித்துக்கொள் குட்டி .


//
இரண்டாயிரத்து பதினொன்றுகளின் இறுதிப்பகுதியில் எழுதிப்பபார்த்ததென்று நினைக்கிறேன் இ இப்பொழுதுதான் பகிர்ந்திருக்கிறேன் ஏதாவது செய் செய் என்று அந்தரப்படுத்திக்கொண்டிருக்கும் மூளைக்குள்ளிருக்கும் சொற்களுக்கு.


//
ஒரு...
இலை தொடும் தூரத்தில்தான் உன்னுடைய உதடுகளிருக்கிறது
இருந்தும் இந்த மிதக்கும் தன்மையை அவ்வளவு 
இலகுவாய் கடக்க மனம் வரவில்லை 
இந்த முத்தத்தை நாம் 
இன்னும் கொஞ்ச நேரம் நாம் வைத்திருக்கலாம். //


-காதலிக்கிற காதலிக்கப்படப்போகிற எல்லோருக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்- 

Monday, October 3, 2011

ஊதாநிற பூவைச்சூடியவளின் விலகுதலின் மீது.

சாத்தியமற்ற ஒரு புள்ளியில் இருந்து
நாம் உரையாடிக்கொண்டிருநதோம் என்
எதுவுமற்றவைகளின் மீது நின்றபடி நீ
எல்லாவற்றையும் வசப்படுத்திகொண்டிருந்தாய்
அன்பை நிராகரிக்கிற என் அவநம்பிக்கைளின் மீது
உன் கரிசனங்களை நிரப்பிக்கொண்டிருந்தாய்

எப்பொழுதும் அருகிருப்பதாய்
உன் அன்பிருந்தது
கூட வருகிற துணையாக உன்குரல்
கேட்டுக் கொண்டேயிருந்தது
யாருமற்ற நாட்களில் எல்லோரும்
என்னுடனிருக்கிறதாய் நம்பிக்கொண்டிருந்தேன்

ஏனென்றறியாத கசகசப்பான பின்னிரவொன்றில்
நானறியாத உன தன்முனைப்புகளின் மீதொரு
காரணத்தை வைத்துக்கொண்டு
என்னை விலகத்தொடங்குகிறாய் நீ

விலகுதலிலும் துன்பம்
விலகுதலுக்கான காரணங்கள் இல்லாமலோ தெரியாமலோ இருப்பது.

பெரும் குற்றவுணர்வுக்குள் இருக்கிறது காலம்
பனி விழுகிற உன் நகரத்தின் தெருக்களில்
அலைகிறதெனது வாழ்வு.

_____________________________________________

உண்மையில் நான் உனக்கு என்ன துன்பம் செய்தேன் என்பது எனக்கு நினைவில் இல்லை,தெரிந்தே நான் எதையும் செய்திருக்க மாட்டேன் என்றே இன்னமும் நான் நம்புகிறேன்.என்னிடமிருந்த சிக்கல்களை நான் உன்மீது பிரயோகித்திருக்கக்கூடும் அதை நீ இவ்வளவு தூரத்துக்கு நினைவில் வைத்திருக்கத்தேவையில்லை. எனக்கே நினைவில் இல்லாத அதை நீ நினைவில் வைத்துக்கொண்டு எதற்கு இவ்வளவு துன்பத்தை நமக்குள் வைத்திருக்கிறாய். உன்னைக்குறித்த என் தேவதை பிம்பம் ஒரு நாளும் உடையப் போவதில்லை; நீ எப்பொழுதும் தேவதையாகத்தான் இருக்கிறாய்.

நான் எப்பொழுதும் அன்பை 'செய்யத்தெரியாதவனாகவே' இருந்திருக்கிறேன்.ஏன் எனக்கதை புரிந்து கொள்ளவும் தெரிந்திருக்கவில்லை என்று ஒப்புக்கொள்கிறேன்.எல்லா துன்பங்களுக்கும் நானே காரணமாயிருக்கிறேன், என் எல்லா நன்மைகளுக்கும் நீ வாசல்களாயிருக்கிறாய். நீ என்னை கண்டுகொள்ளாதிருப்பதும் விலகுவதும் என்னை துன்புறுத்துவதாய் இருக்கிறது.மனதளவில் பெரும் குற்றவுணர்வுக்குள் இருக்கிறேன்.

உன்னுடைய அன்பின் சாத்தியங்கள் என்னை மீளவும் கொண்டு வரும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது உன்னால் முடியும். எனக்கும் உனக்குமான நெருக்கத்தின் இடைவெளி உண்மையெனில் என் மீதான கோபம் உனக்கு இன்னமும் மீதமிருக்கிறதெனில் நாம் பேசலாம். உன்னுடைய அழைப்புக்காக காத்திருக்கிறது எனது நாட்கள்.

____________________________________________

இந்த உரையாடலில் வருகிற இவளுக்கு இன்றைக்கு பிறந்தநாள்.நான் குடிக்கிறது இவளுக்கு பிரச்சனையாயிருப்பதனால் இன்றைக்கு முதல் குடிப்பதில்லை என்று எழுதி வைக்கிறேன்.


Happy Birthday ____________ .

Sunday, March 7, 2010

ஈஷாவும் சாம்பல் நிறக்கதையும்.

இலங்கையில் பிறந்து இப்பொழுது நான்கு வருடங்களாக சவுதிஅரேபியாவில் இருக்கிற என்பெயர் வல்லவன் ஈழமைந்தன்.என்னை பேஸ்புக்கில் (facebook) இப்படித்தான் உங்களுக்கு தெரியும்.

பெருங்குழப்பங்களும் சிக்கல்களும் நிறைந்த இந்த சமுதாயத்தின் கட்டமைப்புகளில் அழுந்தி உழன்று கொண்டிருக்கிற இந்த முகநூல் பக்கத்தின் பெயரை சுமந்தலைகிற நான் அகம் புறம் என்கிற இருவெளிகளிலும் தளம்பல் நிலையிலிருக்கிற அழுக்குகளை தாங்கியிருக்கிற ஒரு விலங்காக என்னை உணர்ந்து கொள்கிறேன். இனியெப்பொழுதும் என்னை சிபாரிசு செய்யாதீர்கள் தோழர்களே நானுங்கள் நண்பர்கள் பட்டியலில் இருப்பது எனக்கு குற்றவுணர்வைத்தருகிறது.

இந்த குறிப்பை எழுதும்கணங்கள் வரையிலும் என் பிறவிமீது படிந்திருக்கிற அழுக்கை எந்த மீட்பர்களும் இதுவரை நீக்க விரும்பவில்லை. நான் இது வரை போகாத பெண்களிடமிருந்தும் இந்தப்பெயரின் உடலுக்கான முழுமையை கண்டடைய முடியவில்லை. ஆதியிலே மாமிசம் இருந்ததாகவும் அது நிர்வாணமாய அலைந்ததாகவும் தேவதூதர்கள் சொல்லிய புனித நூல்களிலே கண்டிருக்கிறேன். எனக்கான மாமிசத்தை சுமந்தலைகிற அந்து தேவதூதர்கள் இந்த உடலின் முழுமைக்கான மாற்றுடலை எப்பொழுது தரக்கூடும்.

அதிகாரத்தின் மீது பிரியமுள்ள என் சனங்களே நானிந்தப்பெயரை வெறுக்கிறேன் என் உடலினிருந்தும் வெளியேறிவிடத்தீர்மானித்திருக்கிறேன் சகல ஜீவராசிகளையும் ஜலப்பிரளயத்திலிருந்து தப்புவித்த நோவா நைல் நதியின் கரையோரங்களில் பிரசன்னம் இறங்குவதற்கான பிரார்த்தனைகளில் இருப்பதாக கடைசியாய் என்னோடு இரவைப்பகிர்ந்த லெபனானில் இருந்து வந்திருந்த ஈஷா சொல்லியிருந்தாள். உண்மையில் இவளுடைய பெயரை என்னால் சரியாய் சொல்ல முடியாமல் இருக்கவே இவளுக்கு ஈஷா என்று பெயர் வைத்திருந்தேன்.

லெபானான் பெண்கள் எப்படியிருப்பார்க்ள் என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் உங்களை நான்ஸியின் மீது ஆணையாக நானே கொலை செய்து விடுவேன். இவள் சவுதிய அரேபியாவின் அடைக்கப்படட கலாச்சாரத்தின் போலிகளையும் அதன் உடைபடுதல்களையும் மற்றொரு முறையாக பகிர்வதற்கு அமைக்கப்பட்டிருக்கிற (இது சவுதி அரேபியா உலகுக்கு காட்டியிருக்கிற தங்களின் கலாச்சார அளவீடுகளின் தளர்வுத்தன்மை எனவும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்) பல்கலைக்கழகத்தில் (KAUST) படித்துக் கொண்டிருக்கிறவள். எனக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக அறிமுகமாகியிருந்தாள். அறிமுகமான முதல் நாளிலேயே "you are short but your work is sooo... good" என்று கறுப்பாடைகளால் மறைக்படாத பெருந்தனங்கள் குலுங்க சிரித்தபடி "i'm Iesha" என கையை நீட்டினாள் (இதே வசனத்தை அவள் இன்னொரு சந்தர்ப்பத்திலும் சொல்லி இருந்தாள்)பல மாதங்களுக்கு மேலாக எந்தப்பெண்களது கையும் தீண்டப்படாமலிருந்த கையை நடுக்கத்தோடு நீட்டினேன்.



ஈஷா உண்மையில் அநேகம் லெபனியப்பெண்களைப்போல அழகாகவும், கொஞ்சம் யாழ்ப்பாணப் பெண்களைப்போல திமிரோடும் இருந்தாள் (யாழ்ப்பாணப் பெண்கள் அழகில்லையா என்கிற குறுக்கால போற கேள்வி இங்கே தேவையற்றது).இவள் என்னிடம் பேசத்தொடங்கியதற்கு நான் சமைத்துக்கொடுத்திருந்த “Grilled Shrimp Scampi" காரணமாயிருந்தது. இத்தனை வருட இந்த அனுபவங்களில் ஒரு லெபனான் அழகியை கவிழ்க்க முடிந்த சமையல் காரனாயிருப்பதில் பெருமகிழ்வு என்று எழுதுவது என் கட்டமைப்பு பிம்பங்களுக்கு மாறானதாக இருக்கக்கூடும் என்பதால் "any how cooking is not only my job it's an art and i love it" என்று என் வழக்கமானதும் உண்மையானதுமான பதிலை சொல்லி வைத்தேன். ohhh nice.. என்று நன்றி கூறி விடைபெற்றவள் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் நெருக்கமாகியிருந்தாள்.சின்னச்சின்னதாய் ஏதேதோ பேசிக்கொண்டோம்.
பேசிக்கொண்டே ஓடிப்போன இரண்டரை மாதங்களில் காண்கிற தருணங்களில் எந்த இடமாயிருந்தாலும் கட்டியணைத்து கன்னங்களால் முத்தமிடுவளவுக்கு நெருக்கமாகியிருந்தாள்.

எல்லோருக்கும் வயித்தெரிச்சலை கிளப்பிக்கொண்டிருந்த எனக்கும் ஈஷாவுக்குமான நெருக்கத்தை எனக்கு மேற்பார்வை பொறுப்பிலிருக்கிற அலோசியஸ் சபித்துக் கொண்டேயிருந்தார்,இவரும் அதே இலங்கையின் தென்பகுதியில் இருந்து வந்தவர்தான்.

இவளோ யாரையும் கண்டு கொள்ளாமல் என் சங்கடமான நிலையும் மீறி "ஹபீபி" என அழைக்த்தொடங்கியிருந்தாள். அவள் அப்படி அழைப்பதற்கு காரணம் நானேதான் எனக்கு அரேபியப்பெண்கள் ஹபீபி என்றழைக்கிற விதம் நிறையப்பிடிக்குமென்பதாய் அவளிடம் அவளோடு யாருமற்ற வராந்தாவில் நிகழ்ந்த இரண்டரை நிமிட நீள முத்தத்திற்கு பிறகு சொல்லியிருந்தேன்.

கடந்த சனிக்கிழமை வந்தவள் இந்த வார விடுமுறையை தன்னோடு கழிக்கும்படியும் மறக்காமல் ஆயத்தங்களோடு வந்துவிடு என்றும் சொல்லிப்போனாள். என்ன ஆயத்தம் செய்யவேண்டியிருக்கிறது ஒரு இரவு தங்குவற்கு என்கிற என்ன அலட்சியத்தை தலையணைகளை இறுக்கியபடி அவள் கொண்டு வந்தாயா என்ற பின்னரே புரிந்து கொண்டேன். இல்லையென்றால் தன்னுடைய கைப்பையில் இருக்குமென்றவளை உனக்கும் எனக்கும் இடையில் அது தேவைப்படாதென கூறி அவள் உதடுகளை பேசவிடாமல் முத்தமிட ஆரம்பித்தேன்.

ஏவாளின் சாயல்களோடும் எனக்குப்பிடித்தமான சாயாவோடும் என்னை என்னை எழுப்பிய வெள்ளிக்கிழமையின் காலைப்பொழுதில் நான் அது வரை அறிந்திராத உணர்வுகளை கொடுத்தபடியிருந்தாள் சாயாவை பருகி முடிக்கும் வரை எதுவுமே பேசாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தவள் ஹபீபி இனி நமக்கான சந்தர்ப்பங்கள் அமையப்போவதில்லை என சலனமற்ற கண்களோடு கூறினாள்.

இந்தக்கதை இத்தோடு முடியவில்லை ஆனால் இதற்கு மேல் என்னால் சொல்லவும் முடியாது.

வளைவான கண்ணாடிக்குவளைகளில் நீந்துகிற
தங்க மீன்களென இருக்கிறது உன் கண்கள்
நான் எப்பொழுதும் எழுதி விட முடியாத மொழிகளை
அவை என்னோடு பேசுகின்றன
உனக்கான தயார்படுத்தல்களில்
எப்பொழுதும் தோற்றுப்போகிறவனாகவே நானிருக்கிறேன்
ஏழுகடல் மலைகள் தாண்டிய குகையின் பேழைக்குள் அடைப்பட்ட
அற்புதமென என்னை அலைக்கழிக்கிறது உனது பிம்பம்
என் நிறைதலுக்கான தருணம் உன்னோடே நிகழக்கூடுமென்பதாய்
நம்புகிறது பற்றுதலுக்கு காத்திருக்கிற என் வாழ்நாட்கள்.


_______________________________________



“எங்க விட்டனான் சரி...
உன்னத இசையும் மங்கள வெளிச்சமும் நிறைந்ததாய் என்னுடைய தெருக்கள் இருந்தன இருப்பதையே நானும் விரும்பகிறேன். கிடைத்திருக்கிற இந்த நாட்களின் மீது எனக்கு தீராத அவா இருக்கிறது. எப்படி பார்த்தாலும் அவை போதாதவையாகவே இருக்கின்றன. நான் அவற்றை நிதானமாக கடந்து போக ஆசைப்படுகிறேன்.

என் தெருவில் உங்களை வரவேற்கிறதற்கு நான் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறேன் நீங்கள் உங்களளுடைய திணிக்கப்படாத பெயர்களோடு வாருங்கள். உண்மை முகங்களை கொண்டு வாருங்கள் அவை குரூரமானதாய் இருந்தாலும் உங்களை இயல்பாய் அணுக முடியம் என்னால்.

இந்த உடலை எனக்கு பிடிக்கவில்லை எனக்கான வாழ்விலிருந்து நான் விலகுவதைப்போல எப்பொழுதும் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கப்பண்ணுகிற இந்த புறச்சூழலும் அதற்குண்டான நிறங்களும் பெயர்களும் குணங்களும் என்னை இயல்பிலிருந்தும் சம நிலையிலிருந்தும் தள்ளி விழுத்துகின்றன. நீங்கள் உங்களுடைய கதைகளைப்பேசலாம் அதிலொன்றும் தவறில்லை நானும் பேசலாம் என்பதை ஏன் மறுக்கிறீர்கள்.

குற்றங்கள் பழகிப்போன ஒரு விலங்காய் நானிருக்கிறேன் நேர்மையாகச்சொல்வதானால் நானொரு கீழ்ப்படிய மறுத்த தேவதூதன் எதையுமே நம்பாதவன் என்னைக்கூட. பயம் எப்பொழுதும் என் முதுகில் குந்தியிருந்து என்னை தள்ளிக்கொண்டிருக்கிறது. சாத்தான்கள் என் அறையில் விருப்பத்தோடு குடியேறுகின்றன நானில்லாத என்னுடைய அறையில் அவை பெருங்குரலெடுத்து பாடுவதாயும், புகையும் மதுவின் வாடையும் திறக்கப்படாத ஜன்னல்கள் வழியே வருவதாகவும் ஸ்தியாக்கு சொல்லியிருக்கிறான்.அவனிடம் ஒரு பூனையும் நீளமான தாடியும் இருந்தது.

___________________________________________________

உங்களுக்கு பெயர் சொல்ல விரும்பாத- சில இரவுகளையும் நிறையக்கதைகளையும், எண்ணிவிடக்கூடிய பகல் நேர முத்தங்களையும் என்னோடு பகிர்ந்த சிங்கள தோழியொருத்திக்கு -

(அவளுடைய பெயரை நான் தான் சொல்ல விரும்பவில்லை)


என்னுடைய அப்பப்பா எனக்கு ஒரு கதை சொல்லுவார்; தான் ராசாதானியொன்றில் விருந்தாளியாய் இருந்து வந்ததாகவும், அந்த மன்னனிடம் வியாபார உறவுகளை வைத்திருந்ததாயும், கடலுணவுகளையும் புகையிலையும் பெற்றுக்கொள்கிற மன்னன் ரத்தினங்களும் பணமும் தருவதாகவும் சொல்லியிருக்கிறார். பரிசாக இவருக்கு கொடுக்கப்பட்ட வயலொன்று அந்த மன்னனின் ஆட்களை வைத்தே விளைவிக்கப்பட்டு விளைச்சல் வீடு வரைக்கும்வந்து சேர்ந்ததாய் சொல்லியிருக்கிறார்.

பழைய கதைகளை எதற்கு பேசவேண்டும் நமக்கென்று ஒரு கதை இருக்க வேண்டும் என நீ நினைக்கிறாய்தானே நாம் ஒரு புதிய கதையை எழுதுவோம்; இங்கேதான் பழைய கதைகள் நமக்கு தேவைப்படுகிறது. பழைய கதைகளை நாம் அறிந்திராவிட்டால் புதிய கதைகளை நம்மால் எப்படி முழுமையாய் சொல்ல முடியும். ஆகவே நீ உன் சனங்களை பழக்கப்படுத்து சாம்பல் நிறத்தில் எழுதப்பட்ட அந்தக்கதைகளில் வேறெந்த மூலக்கூறுகளும் திணிக்கப்படாமல் இருந்ததென்கிற உண்மையை கூறு. நானும் என் மக்களுக்கு கதை சொல்ல முயல்கிறேன் என்னைப்பொறுத்த வரையில் எனக்கு இது ஒன்றும் வானைப்பிளக்கிற செயலாக தெரியவில்லை. நீயும் அறிந்திருப்பாய் தானே அது என்னுடைய சனத்தின் தனித்துவமான இயல்பு.

___________________________________________

இனிய நோவாவே...

சந்ததிகள் பிறந்து கொண்டேயிருக்கிறது அவைகள் இறந்து கொண்டும் இருக்கின்றன பிரசன்னம் மட்டும் இன்னமும் இறங்காமலே இருக்கிறது. கதைகளும் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.


என் இப்போதைய நாட்களைப்போலவே குழப்பமாயும் திருப்தியில்லாமலும் வெறுமையாயும் வெறுப்பாயும் இருக்கிற எனக்கு எழுத்தெரியாத இந்தக்கதை. இந்த வெறும் நாட்களின் விட முடியாத விசயமென என்னோடு தங்கிவிட்டிருக்கிற இணையத்தில் ஒரு போதையைப்போல பயன்படுத்தத் தொடங்கியிருக்கிற முகநூலின் போலிகளின் மீதான கோபங்களுக்கு.


pictures :
Thought Patternes
deviantart

Saturday, October 17, 2009

இடைவெளி...



image: lariza.com

எதை எழுதுவது... எழுதாமல் இருப்பதில் கனம் கூடிக்கொண்டேயிருக்கிறதா மூளை? இல்லையா... பிறகேன் இப்படி அலைக்கழிகிறது மனம். நிறைவடையாமல் இருக்கிறது நாட்கள்!

பைத்தியக்காரத்தனங்களோடிருக்கிறது இயல்பு... எனக்கிருக்கிற மனநிலை பாதிப்புக்கு என்ன பெயர்... தீபாவளிக்கு என்ன விஷேசம்... அவள் இந்த முறை வாழ்த்தனுப்பாவாளா? தமிழ்மணம்...வலைப்பதிவுகள்... கட்டுடைப்புகளின் சாத்தியமின்மை. உன்னைப்போல் ஒருவனும் வெடிகுண்டு முருகேசனும். ஒன்லைனுக்கு வராத அய்யனார்... அகப்படாமல் இருக்கிற சன்னாசி. சாருநிவேதிதா... இணையத்தேடு பொறிகள். எழுதாமல் கடந்து போன ஒரு மாதம்... இந்த பக்கதின் இரண்டாவது வருட நிறைவு.

கதைக்காமல் இருக்கிற காதல்... யாழ்ப்பாணத்து பொம்பிளைகளும் சமுதாய கட்டமைப்புகளும். எனக்கு நடக்கப்போகிற கல்யாணம்...வரப்போகிற மனைவி. சொல்லிக்கொண்டு பிரிந்த அவள்...நவீனத்துவங்களின் பிரதி...பழக்கப்படாத எழுத்து...வாசித்து முடிக்காத நவீனன் டைரி...சுசீலா...ஆதர்சங்ககளின் நாயகி.

ராஜபக்க்ஷேயும் தமிழக அரசியலும்...பிரபாகரனும் பிம்பத்தகர்ப்புகளும். மார்க்கசியமும் புதிய தோழர்களும்...காத்திருப்பின் இடைத்தங்கல் முகாம்கள்...மக்கள் மயமாக்கப்பட்ட வன்முறைகள். முனகிக்கொண்டிருக்கிற மாற்றுக்கருத்தியல்...அதிகாரங்களின் தீர்வு.பயமுறுத்திக்கொண்டிருக்கிற பணம்...விருப்பமில்லாத சராசரி வாழ்க்கை. திசைகளை தீர்மானிக்காத பயணம்... குறைந்தளவு போலித்தனங்களோடிருக்கிற இரவு...குறிகள் சொல்கிற கதைகள்... கடைமைக்கு நிகழ்கிற புணர்வுகள்...நிர்பந்தம் சுமக்கிற உறவுகள்.

இன்னும் படிக்கலாம் என்கிற யோசனை.சிறப்புத்தேர்ச்சி அடைய நினைக்கிற சமையல் கலை. சமையல், சமைதல்,சமைத்தல் என்பவை பற்றிய ரசனைகள்.எதிர்காலம் என்கிற திணிப்புகளும் தயார்படுத்தல்களும். ஏற்றுக்கொள்கிற பக்குவமில்லாத மனது... அம்மணமாயிருக்கிற உண்மை... திரவ வடிவிலான ஒழுக்கம். போலிகள் வரைகிற விதிகள்... உடல் மீதான புலன்களின் ஆதிக்கம்.

முன்றாந்தரத்து நீலப்படங்கள்...உடல் மீது நிகழ்கிற வன்முறை... சத்தம் நிறுத்திவைத்து அவற்றைப்பார்க்கிற ஒருவனின் சப்பைக்கட்டுகள்... கடவுள் அமைத்து வைத்த மேடை... கடவுளை உணர்கிற சாராயக்கடை. யாரென்றே தெரியாத ஒருத்தியின் உள்ளாடைகள் பற்றிய ஆராய்ச்சி... தொலைபேசியினூடான வெளியேற்றங்கள்.

எழுதுவதென்கிற நமைச்சல்...அசௌகரியம் தருகிற சூழல்...திணிக்கப்பட்ட வாழ்வு. எழுதாமல் இருக்கிறதன் பாதிப்பும் விளைவும். தோழிகள் இல்லாத அரபு தேசம்... மறைவில் கழுவுகிற அழுக்கு... புனிதங்களின் மீதான அவநம்பிக்கை...பாவம் புண்ணியம் பணியாரம்!
தன்முனைப்புகளின் மீதிருக்கிற அக்கறையும் பிடித்தமும்.முகங்களை மறைக்கிற குறிகள் தனிமைப்படுத்தலின் விளைவு. பலவீனர்களின் பிரசங்கம்...குற்றவுணர்வுகள் இணையச்சாமியார்களின் வளர்ச்சி. கடவுளை தேடுகிற கூகுள்,இணையக்குழுமங்களில் கடவுளின் பங்களிப்பு...மின்னஞ்சலில் வருகிற பக்தி.

இடைக்காலப்பாடல்களின் வாசனை... இரவில் அணிகிற ஆடை.பருத்தித்துறை ஊராம் பளக்கொடி பேராம்.ஊரிலிருக்கிற குடும்பம்...அப்பாவோடு பேச நியை இருக்கிறது... அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய நம்பிக்கை. தீர்க்கவேண்டிய கடன்...பொறுப்புகள் அல்லது நிர்ப்பந்தங்கள். எதிர்காலம்...திட்டமிடல்... கோடு போட்டு வைத்திருக்கிற வாழ்கை. சும்மா இருத்தல்... கணங்களில் வாழ்தல்!

வாசித்தல்... எழுதுதல்...எழுதாமலிருத்தல்...எழுதவேண்டும் என்கிற இருக்கப்படாத குணம். எழுதுதல்...எழுதி எழுதி எழுத்தாகுதல். நானெழுதுகிற நாவல்... எழுத நினைக்கிற ஊரின் கதை... ஊரின் மறைவாய் கதைக்கப்படுகிற பெண்கள். அவள் எனக்கு சொன்ன கதை... பிரதியை எழுதுகிற ஆசிரியன்... ஆசிரியன் இறந்து போன பிரதி... வாசகனுக்கும் எழுத்துக்குமான இடைவெளி-



வாசிக்கிறவன் எழுதாமலிருக்கிற சொற்களை கண்டடைதலுக்கான பிரதியிலிருக்கிற சாத்தியங்கள்.


தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லியே ஆகவேண்டுமா...?



நீ கற்பனை செய்கிற எனக்கான பிம்பங்களில்
பொருந்த முடியாமைக்கு வருந்துகிறேன் தோழி..
நீ அறியாத ஆதிக்கணமொன்றில் நிகழ்திருக்கலாம்
நெருக்கத்திற்கான முதல் துளி...
நீள் வளையப்பாதையில் இயங்குகிற பூமி
எந்தக்கணத்திலும் நின்று போகலாம்...
தன் முனைப்புகள் இல்லாத ஈர்ப்பின் மீது
நீடித்திருக்கிறது காதல்
இடவெளிகள் மாறுகிற கணங்களில் நிகழக்கூடும்
இயங்க மறுக்கிற பூமியும்
நெருக்கத்திற்கான கடைசித்துளியும்.



புனைவுகளையும் கனவுகளையும் சாத்தியப்படுத்துகிற உனக்கு...

Friday, August 7, 2009

பெரு நினைவுகள் எழுதுகிற சிறு குறிப்புகள் - 01





தேகம் திமிர் பிடித்தலைந்து கொண்டிருக்கிற காலமிது
பிடிமானமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது மனது
கட்டிப்போடுகிற பிரியங்கள் கொண்டென்னை இறுகப்பற்றிக்கொள்
உனக்கான யதார்த்தங்களை சுமந்தலைகிறதெனது உயிர்
என்னை கையாள்கிற நிதானங்கள் உனக்கிருக்கிறதாய்
உனது பற்றுதலுக்கு காத்திருக்கிறதெனது கணங்கள்
காலம் இனிய பதிலொன்றை சொல்லக்கூடும்
நீ என்னை காதலிக்காமல் இருந்து விடாதே.

____________________________________________________

பார்க்கிற பெண்களோடெல்லாம் தனகிக்கொண்டு திரிந்த என்னோடு தனகுகிறவளாக வந்த ராட்சஸி, மயக்கம் தருகிற கறுப்பு நிறமென காலத்தை கடத்திக்கொண்டு போகிற அழகுகளோடு எனக்குள் வரையப்பட்டிருந்த பெண்மைய உருவெடுத்து நடமாடினாள்.

காலம் நானறிய என் வாழ்வை கொண்டாடத்தொடங்கிய நாட்களின் தொடக்கமிது பரவசங்களை புதிது புதிதாய் அறிமுகம் செய்து கொண்டே இருந்தாள் அவள். இது வரை எழுதப்பட்ட என் வாழ்வின் வாசனை மிகுந்த நாட்குறிப்புகளுக்கு சொந்தக்காரியாய் அவளிருக்கிறாள்.

ஞாபகங்கள் தின்று கொண்டிருக்கிற எனக்குள் இருந்து பெருகிக்கொண்டிருக்கிற சொற்களை எழுதத் தொடங்கியிருக்கிறேன் இது இத்தோடு முடிந்து விடுகிற விசயம் போல் தெரியவில்லை இதன் முடிவில் அல்லது ஏதோவொரு பகுதியல் உங்களுக்கு கறுப்பியை அறிமுகப்படுத்துவேன்.


picture:photographersdirect.com

Tuesday, March 31, 2009

பூனைகள் பற்றிய...



கவிழ்ந்திருக்கிற இரவு விளக்கின் வெளிச்சத்தில்
கலைந்திருருக்கிற அழகுகளோடு உறங்குகிற
அவளுக்கு தெரியது இரவுகளில் பூனையாகுகிற என்னை,
வெளவால்கள் வழித்திருக்கிற இரவுகளில்
வெளிச்சமற்ற திசைகளில் இருந்து
இரை தேடிப்பாய்கிற பூனைகளின் லாவகம்
பகல் முழுதும் பரவசமூட்டுகிற பறவைகளுக்கு
தெரிவதில் நியாயங்கள் இருப்தாய் தெரியவில்லை,
இடை வெளிகளுக்கு அவசியமில்லாத
இரவுகள் வரும் வரையும்,
பகல்களில் நானாக இருக்கிற பூனையை
அறிந்து கொள்ளாமல் இருப்பதுதான் முறை
அவளும் அவளை அறிந்த நீங்களும்,
யாருமற்ற பகல்களில் நான் பூனையாகுவது குறித்து
இப்பொழுதே எழுதி விடுகிறேன்,
பூனைகளின் உலகம் என்னை ஏற்றுக்கொள்கையில்
என்னை ஒரு பூனையாகவே ஏற்றுக்கொள்ளகூடும்...
அவளும் நீங்களும்!

__________________________________________


புதிர் நிறைந்த பழைய பூனைகள்
அங்கீகாரங்களற்று மாண்டு போக,
ஆளுமைகள் கொண்ட பூனைகள்
அடையாளமிழக்கத் தொடங்கியிருக்கிறது,
சிக்கல்கள் நிறைந்ததாய் இருக்கிற பூனைகளின் உலகில்
வீரியமுள்ளவைகளாய் அறிமுகமாகியிருக்கின்றன
சில புதிய பூனைகள்,
அவைகளோடு பழகுதல்
அற்புதமான அனுபவமாய் இருக்கிறது,

இன்னொன்று...

உலகின் மிக அழகான பூனைகளின் சாயல்களில் இருக்கிற
அவளை பிரிந்ததிலிருந்து,
நானொரு பூனையாகிக் கொண்டிருப்பதாய் நான் சொல்வதை
நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்றாலும்
நானொரு பூனையாகுவதென்கிற முடிவில் இருக்கிறேன்,
ஏனெனில் பூனைகளின் ஊலகம் விசித்திரங்களால்
ஆனதென்றாலும் புரிதல்கள் நிறைந்தது,
பூனையாகுதல் ஒரு வரம்
பூனைகளை அறிதல் ஒரு தவம்!



பின்குறிப்பு:

\\
பூனைகள் பற்றி குறிப்புகள் எழுதப்போனால் இது நீங்கள் படிக்க முடியாத அளவுக்கு நீளமான பதிவாகக்கூடிய பிரச்சனை இருப்பதால்,அவற்றை இயன்றவரை சுருக்கி எழுதக்கூடியதாய் என் மனோநிலை இருக்கையில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

\\
தொடரும்...

Saturday, March 28, 2009

காதல் சுமந்த தெரு...

அதிகம் பயன் படுத்தியிராத அந்த தெருவுக்கு வருகையில்
புதியதாயிருந்தது அந்த தெருவும் எல்லை வேலிகளும்

நெருக்கமானதும் சீரானதுமான
கிளிசறியாக் கதியால்கள்...
வளவுக்குள்ளேயே மரமிருந்தால்
இவை கிடைப்பது கொஞ்சம் இலகு,
அங்கங்கே பூவரசங்கதியால்கள்...
இவை சீரானதாய் கிடைப்பது அரிதென்றாலும்
வேலிக்கு பலம் இவைகள்தான்,
இடைக்கு இடை வாதநாராணி வைத்து
அடுக்கி மட்டை வரியப்பட்ட வேலி
இதை தாங்கிக்கொண்டிருந்தது...
பழைய நுணாவொன்றும் பூவரசுகள இரண்டும்,
எதிரேயயிருந்தது சாயம்போன சுண்ணாம்பும்
காய்ந்து போன பாசித்திட்டுகளுமாய் முழுநீளச் சுவர்!


விரல் விட்டு எண்ணிவிடத்தக்க
எண்ணிக்கையில் பார்வைகள்,
மிக அரிதான மென் முறுவல்கள்,
மிக அவசரமாக மாறுகிற முகபவாங்களோடு
என்னைக்கடக்கிற தருணங்கள்,
இத்தனையோடும் நம்மிருவரையும்
சுமந்து கொண்டிருந்தது காதல்,
வேடிக்கை பார்த்தபடி
வளர்ந்து கொண்டிருந்தன கதியால்கள்,

மிக நெருக்கமான வாசனைகளோடிருந்தது
பழகிப்போன கலட்டி ஒழுங்கை!

சில வார்த்தைகள்,
சில நிமிட சந்திப்புகளுக்கான
சில மணிநேர காத்திருப்புகள்,
சில கடிதங்கள்,
ஒருவர் மற்றவருக்கென்றேயான புன்னகைகள்,
பழைய பூவரச மரங்களின் இருளில்
பொழுது படுகிற வேளையில் நிகழந்த
பரிமாறத்தெரியாத முத்தங்கள்,
மிகப்பிடித்தமான பூவரசம் பூக்கள்,
பகல் நேரத்து பறவைகள்,
நுணா மரத்து குயில்கள்,
காதல் தீராத....
..........
தீராத...?


இவைகளை இப்படியே விட்டுவிட்டு
எங்கே போனான் எழுதியவன் ?!

பச்சை நிறங்களில்
மேகங்களோடு கதை பேசுகிற
மரங்கள் காட்டுகிற ஜன்னல் கொண்டு
அறைகள் செய்த நுவரெலியா

இலங்கையின்
அழகான கடற்கரைகளும்
பழைய வரலாறுகளும்
அமைந்த திருகோணமலை..

அல்லது கடல் கடந்தானோ
ஒட்டகங்கள் கனவில் வருகிறதுதும்
மோசே நடக்க வழிவிட்டதுமான செங்கடலின்
அலைகளின் கரையில் இருக்கிற அரேபிய தேசம்


அவன் எங்கேயேனும் இருக்கட்டும்
அவன் இருக்கிறான் அது போதும்!

காலம் சில பருவ மாற்றங்களை கடந்திருக்கிறது
இப்பொழுது நாமந்த வீதிக்குள் நுழையலாம்...

பழைய நுணாவும் பூவரசும் அப்படியே இருக்க
அவற்றை உள்ளே வைத்து மறைத்திருந்தது
புதுசாய் கட்டி பூசப்படாமலிருந்த மதில்,

பூவரச மரங்களுக்கு என்ன தெரியும்
மரங்கொள்ளாமல் பூத்திருந்தன
வழக்கம்போல நுணா
குருவிச்சையாகிக்கொண்டிருந்தது...!


\\
இந்தக்கவிதை(கவிதைகள் இப்படியா இருக்கும்) நீளமாக இருப்பதனால் ஒரு கதையாகவும் இருக்கலாம்.

\\
ஒற்றைப் பூவரசம் பூவைச்சூடியவள் என்கிற கதையைப்பற்றி ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்கக்கூடும் அந்தப்பெருங்கதையின் சிறுகுறிப்பாய் இது இருக்கலாம் அல்லது ஒரு பெருங்கதைக்கான மிகச்சுருங்கிய வடிவமாய் இது இருக்கலாம்.

\\
மூன்றாவது குறிப்பை எப்படி எழுதுவதென தெரியவில்லை.

Tuesday, March 17, 2009

நேரிலும் வரக்கூடும் தேவதைகள்...

திசைதெரியாத பயணமொன்றில்...
தனியாய் நடந்து கொண்டிருந்தேன்,
வாழ்க்கை கடினமானது என்கிற...
மாயை அலைக்கழித்த நாட்களில்,
வானம் பொழிவதற்கு தீர்மானித்த முன்பகலொன்றில்
வாசனைகளோடு நுழைந்தவள்,
பிரியங்கள் நிறைந்த சொற்களில் என்னை ஆக்கிரமித்தாள்!

மிக வெப்பமான பிற்பகல் ஒன்றில்...
என்னவென்று புரியாத சில காரணங்களை
சொன்னவள் என்னைவிட்டு வெளியேறினாள்,
வெளியேறிய தருணங்களில் அவள்...
வாழ்க்கை வசப்படுகிற அற்புதங்களை நிகழ்த்தியவள்!
இன்னொரு வகையாய் அழைக்கையில் தேவதை!


இதை இங்கே முடிக்கலாம் அல்லது,


கொண்டாடுவதற்கு எதுவுமேயில்லாத நாளொன்றின் கடைசியில்
செம்மஞ்சள் நிறத்தின் வானத்தை
மிகக்கசப்பான வெளிநாட்டு மதுவொன்றின்
துணையோடு சபித்துக்கொண்டிருந்தேன்,
இரவுக்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கையில்
அதே வாசனைகளோடு நுழைந்தவள்...
மறைக்கப்பட்ட மார்புகளின் மத்தியில் இருந்தொரு
மலரை பரிசு செய்தாள்!
எனக்கும் பிரியம் செய்யத்தெரியுமென உணர்த்துவதற்கு
விரல்களை துணைக்ழைக்வேண்டிய அவசியம்
அவளைப்போல பேசத்தெரியாததில் உண்டாகிற்று
ஆக்கிரமிப்பு செய்கிற விரல்களை சிறையெடுத்தவள்
மிக நீளமான முத்தங்களை பரிமாறுகிற
உன்னதங்களை செயலாற்றினாள்...

அற்புதமான இரவின் முடிவில் விழிக்கையில்
போர்வைகளை அணிந்திருந்தோம்!

இப்பொழுது அவளுடைய பெயர் கறுப்பி!





பின்குறிப்பு:

\\
இது நிச்சயமாய் புனைவுவென்று நான் சொல்வதை நம்புவதற்கு நீங்கள் என்னை தெரியாதவர்களாய் இருக்கவேண்டும்.

\\
இதனை அவள் வாசிக்கக்கூடாதென்பது தேவதைகளிடம் நான் வாங்கியிருக்கும் சாபம் ஏன் வரமாயும் இருக்கலாம்.

\\
இந்தக்கவிதையை படத்தோடு பதிவு செய்யாததற்கு காரணம் கறுப்பியின் புகைப்படங்கள் எதுவும் என்னிடமில்லை என்பதும் தேவதைகள் புகைப்படம் எடுத்துக்கொள்வதுமில்லை அவை அதற்குள் அகப்படுவதுமில்லை என்பதுமே.

Monday, March 9, 2009

பேரின்ப நாயகியும் போலியும்...




சந்தர்ப்பம் கிடைத்தும் தவிர்த்துக்கொண்ட
பறங்கிப்பெண்ணைப்பற்றிய கனவுகள்
தூக்கம் கலைக்கிறது
சொற்படி கேளாத உடலை
சுய பலாத்காரம் செய்வதில்
தவறேதும் இல்லையே!


இதற்கு முன்னொன்று,

வெளிர் நீல நிற ஆடையில்
ஈரத்திட்டுக்களோடு கதவுதிறந்தவள்
கச்சைகளணியாத மார்புகள் அதிர
ஆச்சரியங்களோடு புன்னகைத்து...
எதிர்பாராத வருகையை கொண்டாடினாள்
மிக மெல்லிய இடைவெளியில்
கூந்தலின் ஈரம் கன்னங்களில் தெறிக்க
கன்னம் உரசி வரவேற்றவள்
மோகனம் நிறைந்த குரலில் கிசுகிசுத்தாள்

“என்ன அப்படிப்பார்க்கிறாய்”

பதில் சொல்லத்தெரியாமல்
மிக வெப்பமான மூச்சை வெளிவிட்டதில்
கிளுக்கென்று சிரித்து சொன்னாள்

“இப்பொழுதுதான் குளித்திருக்கிறேன்...”

எதிரெதிரே அமர்ந்து பேசிய
மத்தியான வேளை ரணம்
மிக நீளம்...

விடபெறுகையில்
தெரு முனை வரை வந்தவள்
புறப்படும் தருணத்தில் நிகழ்ந்த
சம்பிரதாய? தழுவலில் சொன்னாள்
“அப்படியொரு சந்தர்ப்பம் இருந்தால்
உனக்கு மட்டும்தான்...”


வேறொன்று,

புனிதப்பிம்பங்களின்...
போலியாயிருந்த நாளொன்றில்,
பின்பொரு நாளில் அவளை இழந்துவிட்டோமே
என்கிற தாபம் வரக்கூடாது என்பதாகிய
நண்பனின் கூற்றையேனும் பொய்யாக்கிவிடலாம்...


இந்தக்கவிதை ஒரு உண்மை
நான் ஒரு hypocrite!


பின் குறிப்புகள்:

\\
பேரின்ப நாயகி என்கிற பெயர் காப்புரிமை எடுக்கப்பட்டிருக்கிறது அத்தோடு அவளைப்பற்றிய பிம்பங்களை கற்பனை செய்வதும் உங்கள் உயிருக்கு ஆபத்தை கொண்டுவரக்கூடும் என்பது உறுதிப்படுத்தப்பட தகவலாய் இருக்கிறது.

\\
ஏறக்குறைய பதினோராயிரத்து முன்னூற்று முப்பத்து மூன்று சொற்களில் இவ்வளவும் மட்டுமே இப்போதைக்கு வாசிக்க கிடைத்திருக்கிற எனக்கு நான்கு நாட்கள் தூக்கம் காணாமல் போயிருப்பதில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.

\\

இரண்டு முடிவிடங்களை கொண்ட இந்தக்கவிதைக்கு ஆரம்பத்தில் எழுதப்பட்டிருந்த தலைப்பு நான் ஒரு hypocrite!

Sunday, January 11, 2009

சைக்கிள் நினைவுகளும் தேவதைகளும்!




பள்ளிக்கூட வாழ்ககை என்பது வாழ்வின் அனுபவங்களில் பசுமைகள் நிரம்பிய காலம் கல்லுரி வாழ்க்கை வேறு சுகம் என்றால் பள்ளிக்கூட வாழ்க்கை தனி அற்புதம்!

பெயர் தெரியாத வெள்ளைநிறப்பறவைகள் கூட்டமாய் பறந்து செல்கிறதை பார்த்திருக்கிறீர்களா அவை பச்சைவெளிகளில் தரையிறங்கி வெகு நிதானமாய் நடைபோடுகிற அழகை ரசித்திருக்கிறீர்களா எங்களூர் பள்ளிக்கூட சீருடைகள் வெள்ளை சட்டைகள்தான் பள்ளிக்கு பள்ளி டை மட்டும் மாறுபடும்.வெள்ளை நித்துப்பறவைகளாய் சில கோடி அழகுளின் சாயல்களில் நிறம் நிறமாய் பெண்கள்!(இப்பொழுதெல்லாம் கூட்டமாய் பறக்கிற பறவைகளை காணமுடிவதில்லை.இருக்கிற இடம் அப்படியோ என்னவோ)நான் கலவன் பாடசாலையில் படிக்காதது நான் செய்த துர்ரதிஷ்டம்!அடுக்கடுக்காய் அவள்கள் சைக்கிளிலும் நடந்தும் வருவது - இப்பொழுது நினைக்கையில் ஊவ்ஹ்ஹ்ஹ்...
(இந்த நேரத்தில் சமீராவைப்பார்த்த சூர்யாவை கற்பனை பண்ணிக்கொள்ளவும்) அதுபோல சில மோனரிஸங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் நெஞசில் மெதுவாக தட்டிக்கொள்ளுதலும் தலையை இடது பக்கமாய் திருப்பி இல்லாத காற்றை வெளிவிடுகிறதுமாகிய நிகழ்வு எனக்குள்ளும் நிகழந்திருக்கிறது! அப்படியொரு நிகழ்வு சமீப காலங்களில் நிகழவில்லை என்பது ஏக்கத்துக்குரிய உபரிக்குறிப்பு.


மனது விட்டுச்சொல்லப்போனால் என் பள்ளிக்கூடத் தெருக்களில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நடக்கலாம்...அடச்சே! என்ன வாழ்க்கையிது இப்பொழுது! ஏன் கடந்து போகின்றன நாட்கள் பால்யங்கள் தொலையக்கூடாது தொலைந்தால் ஊரை விட்டுப்போகக்கூடாது!



நான் படித்த பள்ளிக்கூடத்துக்கு சகோதர பாடசாலையாக ஒரு பள்ளிக்கூடம் இருந்தது... வடமராட்சியின் பெயர் பெற்ற மகளிர் கல்லுரிகளில் ஒன்று! வடமராட்சி முழுவதிலும் இருந்து படித்த பெண்களை பார்க முடியும். ஒரே எல்லைக்குள் இருந்தாலும் நடுவில் வீதியும் சில கட்டிடங்களும் மட்டுமே பிரித்து வைத்திருந்தது ஆனால் போக்கு வரத்து ஒரே பாதைகளில்தான் நடக்கும் வாழ்வின் மிக அழகிய தெருக்களில் அவை முதலிடத்தில் இருக்கின்றன...





காலையில் ஏழரையிலிருந்து எட்டுமணிவரையும் மத்தியானம் இரண்டு மணியிலிருந்து இரண்டரை வரையும் அந்த தெருக்களின் முக்கியமான வளைவுகள் சில எங்களுடைய சிந்தனைத்தளங்களாய் அமைந்திருக்கும்.

காலையில் அழுத்தி அயர்ன் பண்ணிய வெள்ளைச்சட்டைகளும் இறுக்கிப்பின்னிய இரட்டைஜடைகளுமாய் வரிசை வரிசையாய் பெண்கள்!கோசலா மெத்தைக்கடை சந்தியை கடக்கையில் மணி ஏழு நாற்பத்தொன்றாய் இருக்கும், பிருந்தாவும் சிந்துவும் ஓடக்கரையையும் கொலிஜ் றோட்டையும் இணைக்கிற சந்திக்கு வருகையில் மணி ஏழு முப்பத்தொன்றாய் இருக்கும், நெல்லியடி பிரியாவும் சுகந்தியும் பள்ளிக்கூட வளைவை நெருங்குகையில் மணி ஏழு நாற்பத்தொன்பதாய் இருக்கும் இப்படி அவளவளுக்கென்று தனித்தனியான நேரத்தை வைத்திருந்து நாள் தவறாமல் குறித்த நேரத்துக்கு வருவதில் பெண்களை மிஞ்ச முடியாது.


எனக்கொரு பழக்கம் இப்பொழுதும் இருக்கிறது பெண்களின் முகத்தை கவனமாய் பார்க்கிறேனோ இல்லையோ அவர்கள் பாதங்களை பார்த்து விடுவேன் எனக்கென்னமோ தெரியவில்லை முகம் பார்த்தாலும் திரும்ப அவள் பாதங்களை பார்ப்பது பழக்கமாகியிருந்தது அதுபோல எல்லா கால்களுமே வெள்ளை காலுறைகளில் செதுக்கிவைத்தாற்போல இருந்தாலும்(இந்த சீருடை என்பது எவ்வளவு அழகான விசயம் அதுவும் வெள்ளை நித்தில் சீருடை என்பது ரசனைகளின் உயரிய விசயங்களில் ஒன்று வெள்ளை நிற சீருடைகளுக்கு வேறென்ன காரணங்கள் இருப்பினும் எனக்கென்னவோ இப்படித்தான் தோன்றியது)
அந்த வகையில் பழக்க தோசங்களின் விதிப்படி கால்களை வைத்தே கால்களுக்கு சொந்தக்காரி யாரென்பதை சொல்லிவிடக்கூடிய திறமையை வளர்திருந்தேன்:)


பள்ளிக்கூட நாட்களில் காலைகளில் பெண்களளை கவனிப்பது அல்லது பார்ப்பது ஒரு விதமான உற்சாகம் தருகிகற நிகழ்வு! வழக்கமாய் பார்க்கிற சில முகங்களை பார்க்க முடுடியாமல் போனால் அன்றய பாடங்கள் எதுவும் கவனத்துக்கு வருவதில்லை....
அதுவே அந்த இரண்டிலிருந்து இரண்டரை வரையிலான வெயில் நேரத்து பகல்களின் பசி நேரத்தில் அவள்களை கவனித்தால் அது ஒரு சுவாரஸ்யமான அழகியல் பெண்களை புரிந்து கொள்வதற்கு நான் முயன்ற முதல் படிகள் இந்த நாட்களில் இருந்து ஆரம்பித்திருக்கலாம் என்பது என் எண்ணம்...

காலையில் சொல்லப்படுகிற கதைகளுக்கும் கேட்கப்படுகிற கேள்விகளுக்கும் மதியங்களில் பதில் கிடைக்கலாம் இங்கே பதில் என்பது திட்டுக்களாகவும் அட்வைஸ்களாகவும் வெகு அரிதாய் பதில்களகவும் இருக்கலாம்.அப்படி பதில் சொல்கிறவள்களில் ஒருத்தியாக குந்தவை இருந்தது என்னுடைய ஆச்சரியம் அவள் திமிர் பிடித்தவளென்பதும் மண்டல் கள்ளி என்பதும் பெடியளின் ஒருமித்த வாக்கு மூலமாய் இருந்தது.எனக்கென்னவோ அவள் அமைதியானவளாக இருந்தாள் என்றுதான் உள் மனது சொல்லிக்கொண்டிருந்தது.அவள் மிக ஆர்ப்பாட்டமானவள் என்பதும் அடுத்தவர்களை புரிந்து கொள்வதில் அதிக அக்கறை கொண்டவள் என்பதும் அவளொடு நிகழ்ந்த மிகச்சொற்பமான உரையாடல்களில் இருந்து நான் தெரிந்து கொண்டது...



குந்தவையோடு சமீபமாய் சைக்கிளோடுவது புரிதல் நிறைந்த நண்பனொருவனோடு கால் நனைக்கிற அலைகளின் கரையில் நடந்து கொண்டே மனது விட்டுப்பேசுகிற நிகழ்வைப்போன்றது...


பத்தாமாண்டு படித்த துர்க்காவோடு பேசிக்கொண்டு வருவது ரசனைக்குரிய விசயம் அவ்வளவு அழகாய் நாங்கள் இரண்டு பேரும் மட்டுமேயான தெருக்களில் நடப்பதைப்போல அபிநயங்களோடு பேசுவாள்...


ராதா மிக அழகாய் இருக்கிற அவள்...
வெகு சாதரணமாய் சைக்கிளை கையாள்கிறவள்! மிகப்பழகிய குதிரை ஒன்றின் சொந்தக்காரியைப்போல லாவகமான அலட்சியங்களோடு சைக்கிளோடுபவள்.இவளோடு பேசிக்கொண்டு வருகையில் எச்சரிக்கை கட்டாயம் அவசியமாய் இருக்கும் அதற்கு சாலை வளைவுகளை விட அவளுடைய வளைவுகள் காரணமாயிருந்திருக்கலாம்...


இன்னொருத்தி மாதுளா...
சற்றே குண்டாயிருந்தாலும் கவர்ச்சியான தோற்றம் என்பதோடு கிறங்கடிக்கும் விழிகளை விசேடமாக கொண்டிருந்தாள்.அந்த விழிகளுக்காகவே அவளோடு மிகக்கஸ்டப்பட்டு சினேகம் ஏற்படுத்திக்கொண்டேன். இப்பொழுதும் தூக்கம் கலைக்கிற கனவுகளில் அந்த விழிகளுக்கும் பங்கிருக்கிறது. உற்சாகமாய் இருப்பவள் இவளோடு சண்டை எல்லாம் போட்டிருக்கிறேன் சைக்கிளோடுகையில். சைக்கிள் சீற்றை கொஞ்சம் உயர்த்தி வைத்துக்கொண்டு அதிர்வுகளோடு சைக்கிளோடுகிற இவள் அதனால் தடுமாறுகிற பெடியளைப்பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை,அடிக்கடி எழுந்து அமர்வதில் அதிர்வுகளை ஏற்படுத்திப்போகிறவள். யாருமற்ற காலைப்பொழுதொன்றில் மிக வேகமாய் விளையாட்டு பயிற்சிக்கு போய்க்கொண்டிருந்தவளை வழிமறித்து நிப்பாட்டினேன் சைக்கிளின் இரண்டு பக்கமும் கால்களை வைத்து நின்றவளை கொஞ்சமும் எதிர்பார்க்கமால் சட்டென்று இழுத்தணத்தேன்...உதடுகள் விடுபடுகிற தருணத்தில் அவள் காதுகளுக்கருகில் மிக மெதுவாய் சொன்னேன் இனிமேல் இப்படி சைக்கிளோடாதே!


பள்ளிக்கூடத்தின் இறுதி நாட்களில் நான் கூடவே சைக்கிளோடி வந்த இன்னொரு பெண்ணையும் மறக்க முடியாது! மதிவதனா என்பது அவளுடைய பெயர். அவளை அவள் என்று எழுதுவது கொஞ்சம்அதிகம்தானென்றாலும் அவள் அதனைத்தான் விரும்பினாள் என்னை விட நாலு வயதென்றாலும் அவளுக்கு கூட இருக்கலாம் ஆனால் அவளோடு நான் கருத்துக்களின் அடிப்படையில் மிக நெருக்கமாய் இருந்தேன்!எங்கள் ஊரின் பள்ளியொன்றில் கணிதம் படிப்பிக்கிறவளாக இருந்தாள்.

கொஞ்சம் சிரமப்பட்டு சைக்கிளோடுவது போலத்தான் 'சாறி'கட்டியிருப்பாள் ஆனால் வெகு நளினமாய் விளம்பரங்களில் வருகிற பெண்களை போல இருக்கும் அவள் சைக்கிளை கையாள்கிற விதம். ஆளை அடிக்கிற வாசனையோடு வருகிற இவளோடு நிகழ்ந்த கதைகளை இங்கே சொல்லப்போனால் எனக்கு பின்னூட்டங்களில் வசவுகள் வரக்கூடும்!



பின் குறிப்புகள் அல்லது பதிவுக்கான காரணங்கள்:

//
சைக்கிள்களையும் பெண்களையும் மறக்க முடியாத ஒரு ஊர் எங்களுடையது யாழ்ப்பாணம் சைக்கிள்களின் நகரம் என்று அங்கு வந்து போன வெளியிடத்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

//
எழுத்திற்குள் கொண்டு வரத்தெரியாத பல நினைவுகள் இருப்பினும் வசப்படுகிற பொழுதுகளில் எழுதி விட வேண்டும.மிக முக்கியமான நினைவுகள் இன்னமும் எழுதப்படவில்லை...


//
பள்ளிக்கூட சட்டையிலிருந்த
உன்னைப்போலிருந்தாள்
நெடு நாட்களுக்கு பிறகு
நேற்றய கனவில் வந்த
ஆதிக்கனவுகளின் தேவதை...!


//

தொடரும்...