Tuesday, May 27, 2008

பாணும் யாழ்ப்பாணமும்...


நான் பொதுவாக இலங்கை செய்திகளை படிக்கிறதே கிடையாது வேற என்னத்தை சொல்லுறது எல்லாம் அதே செய்திகள் மனதை ரணமாக்குகிறதும் விரக்தியை அதிகரிப்பதுமான வன்முறை செய்திகள்தான் எந்த பக்கங்களை புரட்டினாலும் அதனாலேயே அதனை தவிர்த்துக்கொண்டிருக்கிறேன் மற்றபடி நானொன்றும் நாட்டுக்கெதிரான அள்கிடையாது சரி அந்த அரசியலை விட்டுட்டு நான் சொல்ல வந்த விசயத்துக்கு வாறன் பல நாட்களுக்கு முன்னர் படித்த செய்தியும் கேள்விப்பட்ட நேரத்தில் என்னை பாதித்ததுமான ஒரு விசயம் பாணின்ரை விலை (price of a bread) உதென்ன பாணின்ரை விலை மட்டும்தான் உம்மை பாதிச்சுதோ என்று வடிவேலுவை பார்த்திபன் கேக்குற மாதிரி குண்டக்க மண்டக்க கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது அப்புறம் நான் அழுதிடுவேன்...

இருந்தாலும் பாணொன்றும் அவ்வளவு சாதாரணமான விசயமில்லை பாதிக்காமல் விடுகிற அளவுக்கு அது யாழ்பாணத்திலை இருந்த அனேகமான ஆட்களுக்கு நல்லா தெரியும்.பாண் (Bread) என்றாலே யாழ்பபாணத்தில் இருந்தவர்களுக்கும் இருக்கிறவர்களுக்கும் மிக நெருக்கமான விசயம் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு விடயம் அவர்களின் நினைவலைகளில் அது அவர்களுடைய அன்றாட உணவு என்பதை கடந்து பல நினைவுகளை ஏற்படுத்தக்கூடும் அப்படித்தான் எனக்கும் அந்த நேரத்தில் பல ஞாபகங்கள் என்நினைவின் வெளியில் ஒன்றுக்கொன்று கோர்வையில்லாமல் வந்து பல நிமிடங்களை விழுங்கிப்போயிருந்தது நான் அடுத்த வேலைக்கு தயாராகும் நிமிடம் வரையில்...

நானறிய பாண் பத்து ரூபாவுக்கும் வாங்கியிருக்கிறேன் அதற்கு குறைவாகவும் வாங்கியிருக்கலாம் ஆனால் அது நினைவில் இல்லை இப்ப நான் இதுக்காக வீட்டுக்கு Call பண்ணி கேட்டால் அதுக்கொரு தனி மங்களம் விழும் எண்ட படியாலை (நான் இப்படி எல்லாம் எழுதி உங்களை கொடுமைப்படுத்துறது அவையளுக்கு தெரியாது) அது வேண்டாம் பத்து ரூபாவிலிருந்து நான் கடைசியா யாழ்ப்பாணத்தில பாண் வாங்கேக்க ஒரு றாத்தல் பாணின்ரை விலை இருபத்திரண்டு ரூபா ஆனா அது இப்ப விக்கிற விலை வேண்டாம் அதை கேட்டா மனம் தாங்காது ( உங்களுக்கும் தெரியும்தானே)

பள்ளிக்கூடம் போகும் நாட்களில் ஒவ்வொரு நாளும் காலமை கடைக்கு பாண் வாங்கப்போறது எனக்கிருக்கிற முக்கிமான வேலைகளில் ஒன்று எனக்கு மட்டுமில்லை அனேகமான மாணவர்களுக்கு அல்லது அவர்களுடைய வீட்டுக்காரரில் ஒருவருக்கு நாளாந்த கடைமைகளில் ஒன்று இந்த பாண்வாங்குகிற வேலை காலமை மட்டுமில்லை பள்ளிக்கூட மதிய இடைவேளையிலும் பணிஸ்தான் சாப்பாடு பள்ளிக்கூடம் போற ஆக்களுக்க மட்டுமில்லை யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான குடும்பங்களுக்கு பாண்தான் ஒரு நாளின் காலை அல்லது இரவு உணவாக இருந்தது என்றால் அது மிகையல்லவே...

என்ன கொடுமையடா இது ஒவ்வொருநாளும் பாண்தான் சாப்பாடு என்று சலித்தாலும் தப்பித்தவறி இரண்டு மூன்று நாட்களுக்கு பாண் சாப்பிட முடியாமல் போனால் ஒரு மாதிரி சாப்பாட்டில ஏதோ குறையிற போல நான் மட்டுமில்லை பலர் உணர்ந்து கூற கேள்விப்பட்டிருக்கிறன் என்தான் இருந்தாலும் சிற்றி பேக்கரி பாணும் சுட வச்ச பழைய மீன்கறிறும் சாப்பிட்டாலே அது அந்த நாள் முழுக்கப் போதும் போல இருக்கும் அப்பத்தான் ஏதோ சாப்பிட்ட மாதிரி நாக்கு சரியா வந்திருக்கெண்டு சொல்லுகிற நடுத்தர வயது குடும்பஸ்தர்கள் சொல்ல கேட்டும் அதை பல பெரிசுகள் ஆமோதிக்கவும் பார்ததிருக்கிறேன்.
எனக்கும் அப்படித்தான் வேலை நிமித்தம் வெளி ஊருக்கு வந்து விடுமுறையில் ஊருக்கு போகும் பொழுது நாளில் ஒரு முறையேனும் பாண் சாப்பிட வேண்டியிருக்கும் ஆனாலும் அது பிடித்திருக்கும் சுடச்சுட பாணும் பழைய மீன்கறியும் அது ஒரு தனி ருசி.பாண் ஒரு இலகுவான உணவும் கூட காலை நேர பரபரப்புக்கும் நேரமின்மைக்கும் வெகு சுலபமான உணவு அதற்கு முக்கிய காரணம் பாணுக்குரிய பக்க உணவுதான் வாழைப்பழம், முட்டைப்பொரியல், சம்பல், வெந்தயக்குழம்பு, சோயாமீற்கறி, பருப்புக்கறி, சாம்பார், கத்தரிக்காய்+வெங்காயம் கலந்து பொரியல், ஜாம்+பட்டர், பழையகறி ஏன் சொதியோட கூட சாப்பிட்டுட்டு போயிடலாம் அந்தமாதிரி பாணுக்குரிய "கொம்பினேசனுக்கு" கனக்க மினக்கடத்தேவையில்லை, அது மட்டுமில்லை பாணிலையே விதம் விதமா ருசியோட செய்யுற அளவுக்கு எங்கடை ஊர் பொம்பிளைகளுக்கு தெரிஞசிருந்தது வகை வகையான பக்க உணவுகளோட பாண் ஒவ்வொரு வீட்டுக்கு ஒவ்வொருமாதிரரி உறவாடியிருக்கிறது...

இது இப்படி இருக்க முறையான போக்கு வரத்தும் உணவுப்பொருட்களின் வருகையும் இல்லாத நாட்களில் பாணுக்கு பெரும் கிராக்கி வந்திடம் காலமை ஆறரைக்கு முன்னம் போகாவிட்டால் பாண்கிடைக்காது அதுவும் முதல் நாளே சொல்லி வச்சாத்தான் கடைக்காரர் வச்சிருப்பார் அப்படி இல்லையென்றால் அலைஞ்சு திரிய வேணும்அப்படியான நாட்களில் பாண் வாங்கத்தெரிந்தாலே ஒரு கெட்டித்தனமான ஆள்தான் இந்த நிலை கொஞ்சம் சாதாரணமான நாட்களில்தான் இன்னும் கொஞ்சம் இறுக்கமான நாட்களில் பாணுக்கு வரிசையில் நிற்கவேண்டியிருந்திருக்கிறது...

இடப்பெயர்வு காலங்களில் ஒவ்வொரு முகாமுக்கும் பேக்கரிகளிலிருந்து பாண் கொடுப்பார்கள் அது கிராம சேவகர்கள் மமூலமாக நடந்தது. சில கடைக்காரர்கள் தங்கள் செலவில் இன்னநாளைக்கு இன்ன முகாமுக்கு நாங்கள் தருகிறோம் என்றும் பணமும் மனமும் உள்ள நல்லவாகள் நாங்கள் இன்று தருகிறோம் என்று காலை உணவாக பாண் வாங்கி கொடுத்ததையும் நான் அறிவேன் அது மட்டுமில்லை முகாம்களில் இருந்தவர்களுக்கு பாண்தான் பல நாட்கள் கைகொடுத்திருக்கிறது. பாணும் பருப்புக்கறியும் அவர்கள் நிரந்தரமான காலை உணவாக இருந்த முகாம்களும் இருந்திருக்கிறது...

யாழ்ப்பாண இடப்பெயர்வு மற்றும் அதன் பின்னான சாவகச்சேரி இடப்பெயர்வு காலங்களில் இன்னும் ஒரு படிமேல போய் பாணுக்கு மணத்தியாலங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலமையும் இருந்திருக்கிறது ஆனாலும் பாண் வாங்கக்கூடிய விலையில்தான் இருந்தது இப்ப அதை வாங்குறதிலும் சாப்பிடாம இருக்கலாம் எண்டுற மாதிரி இருக்கு விலை...

அந்த யுத்த காலங்களிலும் இறுக்கமான நாட்களிலும் குறிப்பிட்ட தனியார் பேக்கரிகளிலும் கூட்டுறவுச்சங்க பேக்ரிகளிலும் மாத்திரம் பாண்விற்கப்படும் அதுவும் ஒரு ஆளுக்கு இரண்டு றாத்தல் நிலமையைப்பொறுத்து ஒரு றாத்தல் என்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலதான் கிடைக்கும் அது கிடைக்கிறதுக்கும் விடியக்காலமை நாலரை அஞ்சு மணிக்கெல்லாம் போய் வரிசையில நிக்க வேணும் ஒரு வீட்டில இருந்து குறைஞ்சது இரண்டு பேர் இருப்பினை அந்த லைனில அனேகமா எல்லா வயதுக்காறரையும் அந்த வரிசையில் பார்க்கமுடியும் அவையவையின்ர வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு நண்பர்கள் வீட்டுக்கு வரமுடியாதவர்களின் வீட்டுக்கு சில பெடியளின்ரை அவா மாற்றை மச்சாள் மாற்றை வீட்டுக்கு என்று பெரிய லைன்ல நிண்டு பாண் வாங்கிறதுக்கு குடுத்து வைக்க வேணும் சில நேரங்களில் லைன் கிட்ட வாறநேரத்தில பாண் இல்லை எண்டு போடுவினை பேக்கரிக்காரர் ஏனெண்டா அவையளும் தங்களுக்கெண்டு கொஞ்ச கோட்டா ஒதுக்கியிருப்பினை அப்ப சண்டைக்கு போற ஆக்களும் இருக்கு...

அந்த நாட்களில் பள்ளிக்கூடமும் கிடையாது முறையான படிப்பும் கிடையாது அதாலை பாண்வாங்குறதுக்கும் நாங்கள் பெடியள் கூட்டாகித்தன் போறது ஒரு படையே இருப்போம் அந்த நேரத்திலும் அரட்டைக்கும் கூத்துகளுக்கும் குறைவிருக்காது...வலிகளை யதார்த்தத்தில் தொலைத்திருப்போம்.அதுவே ஒரு சந்தோசம்தான் பாணுக்கு வரிசையில நிக்கிறம் எண்டுற வேதனை இருந்தாலும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்ததும் அந்த நாட்களில்தான் என்பதாலும் வயது அப்படி என்பதாலும் கஸ்டங்களை கடக்கப்பழகியிருந்ததோ மனது தெரியவில்லை (அப்ப வலிகளுக்கு பழக்கப்பட்டிருந்தது மனது எண்டும் சொல்லலாம்) பெடியள் போய் நிண்டு கதைக்கிறதும் லைனை குழப்புறதும் வாறபோற ஆக்களை வம்புக்கிழுக்கிறதும் தங்களுக்கு பிடிச்ச ஆக்கள் வந்தால் அவைக்காக லைன்ல நிக்கிறதும் (அவை லைன்ல நிக்கிறதிலயும் நித்திரையை குழப்பி எழும்பி வாறதிலயும் எங்கட பெடியள் நொந்து போடுவாங்கள்) எண்டு ஒவ்வொரு நாளும் அந்த லைனுக்கு போய் சில பெரிசுகளுட்டை பேச்சும் கேக்குறது நடக்கும் "உதுகளுக்கு படிப்பும் இல்லை பாணுக்கு வந்து நிக்கிறதிலை பகிடி வேண்டிக்கிடக்கெண்டு" திட்டும் வாங்கியிருக்கிறோம்...
இப்பொழுது நினைக்கையில் கடந்த காலங்கள் மீட்கப்படுகையில் ஒரு கலவையான உணர்வும் லேசான சிரிப்பும் வரத்தான் செய்கிறது கன்னங்களில் இலேசான ஈரத்தோடு அதுவும் பிறந்த ஊரின் நினைவுகள் அவை எப்படி இருந்தாலும் சுகமாகத்தான் இருக்கிறது நிகழ்காலம் திரும்புகிற புள்ளியில்...

இது பல நாட்களாக மனதிலிருக்கிற விசயம் எழுதலாம் எழுதலாம் எண்டால் ஒரு பத்து வரி எழுதுறதுக்கே நேரம் காணாதாம், வார்த்தைகளும் வராதாம் நினைவுப்பதிவு எண்டுற விசயம் எனக்கு எப்படி எழுதுறதெண்டே தெரியது (ஆனா ஆராவது மாட்டினா விடிய விடிய முழிப்புத்தான்) கானாபிரபா அண்ணனிட்டை கொஞ்சம் வகுப்பெடுக்கவேணும் இருந்தாலும் இதை எப்படியாவது எழுதி முடிக்கிறதெண்டுற கொலை வெறியில அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் எண்டு பின் நவீனத்துவ கட்டுரை மாதி எழுதிப்போட்டன் இருந்தாலும் என்னுடைய பதிவுகளின்ரை சராசரி நீளத்தையும் விட இதுவே கூடவா இருக்கிறதால முடிவுரை அடுத்த பகுதியில கிடைக்கும்.
( என்ன அடுத்த பகுதியோ ஆளை விர்றா சாமி எஸ்கேஏஏஏஏஏப்....)

Sunday, May 25, 2008

தர மறுத்த முத்தங்கள்...

*
நேற்றும்
இப்படித்தான் சிணுங்கினாய்
இப்பொழுதும்
அப்படித்தான் வெட்கப்படுகிறாய்
இன்னொருமுறை கேட்டால்
"என்ன இப்ப" என்று முறைக்கிறாய்
இருந்தாலும்
இன்னுமொரு முறை கேட்டகலாம்
என்றுதான் தோன்றுகிறது
நீ தர மறுக்கும் முத்தங்களை...


*
எப்பொழுது அழைத்தாலும்
ஒவ்வொரு முறை
உரையாடி முடிக்கையிலும்
உன்னிடம் முத்தம் கேட்பது
ஏன்தெரியுமா...
முதல் முறை கேட்கையில்
நீ சட்டென்று மௌனமாகி விடுவாய்
திரும்பவும் கேட்கையில்
நீ "ம்ஹீம்ம்" என்று சிணுங்குவாய்
மறு முறை கேட்கையில்
உன் சுவாசம் மட்டுமே கேட்கும் எனக்கு
சற்றுப்பொறுத்து நான் என்னவென்கையில்
"நீங்க வையுங்கோ phoneஐ" என்பாய்
"என்னடி நீ" என்றால்
"நான் வைக்கிறேன்"
என்றென்னை அதட்டுவாயே
அந்த நளினம்
உனக்கு மட்டும் உரியது...
ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும்
இன்னொரு முறை கேட்கலாம் போல
அதை கேட்டுக்கொண்டே இருக்லாமடி
எப்படி முடிகிறது உனக்கு
இப்படி இன்பமாய் என்னை...
தவணை முறையில் கொல்வதற்கு!

Saturday, May 17, 2008

காதல் தலையணைகள்...1

*
உன் பெயரெழுதி
நீ தைத்துக்கொடுத்த தலையணைக்கும்
நீ வந்து போகிற என் கனவுகளுக்கும்
இடையிலான
என்னை தூங்க வைப்பது
யாரென்கிற சண்டையில்
தொலைந்து போகிறது என் தூக்கம்
ஒவ்வொரு நாளும்....

*
நேற்றிரவு
என் கனவில் நீ
என் தலையணை முழுவதும்
பூவாசம்...


*
சென்ற வருடம்
ஏதோவொரு விடுமுறைநாளில்
எங்கள் வீட்டுக்கு வந்திருந்த நீ
என் படுக்கையில் உறங்கிச்சென்றிருந்தாய்
போகும் பொழுது
என் உறக்கத்தையும்
ஏன் கொண்டுபோனாய்...


*
நீயில்லாத நாட்களில்
உன்னைப்போலவே
தூக்கம் கலைகிற அதிகாலையில்
என் மார்பில் உறங்கிக்கொண்டிருக்கிறது
உன் தலையணை...*
உண்மையைச்சொல் நேற்றிரவு
என் தலையணையில் தானே துங்கினாய்
இரவு முழுவதும்
உன் தலையணையின் விசும்பல்
என் கனவுகளில் கேட்டதே...


*
எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்
நாம் பிரிந்திருக்கும் நாட்களில்
என் தலையணைகளை பாவிக்காதே என்று
இரவு முழுவதும் என்னையிங்கே
தூங்க விடவில்லை
உன் பூவாசம்...

Sunday, May 11, 2008

அன்னையர் தின வாழ்த்துக்கள்...

அம்மா...

அம்மாவைப்பற்றி யாரும் சொல்லாததை நான் ஒன்றும் புதிதாக சொல்லப்போவதில்லை...இருந்தாலும் அம்மா என்று கதைக்க ஆரம்பித்தாலே நான் ஏதோ தனிமைப்பட்டுவிட்டதாகிய ஒரு உணர்வுதான் எனக்கு தோன்றுகிறது. நாளாந்தம் பார்த்த, வருடக்கணக்கில் பழகிய நண்பர்களிடம் இருந்து சட்டென்று பிரிந்து விட்ட நாளொன்றின் இரவைப்போலாகிவிடுகிறது; அம்மாவின் நினைவுகள் மீள்கின்ற இரவுகள்...

அம்மா என்கிற ஒரு புள்ளியில் இருந்து கொண்டு தேவைப்படும் தருணங்களிலெல்லாம் ஒரு தோழியைப்போல் பங்கெடுத்துக்கொள்ளும் அந்த வெள்ளை முகத்தை இரண்டு வருடங்களாக பிரிந்திருக்கிறேன் இலங்கையின் பொருளாதார, அரசியல், சூழ்நிலைகளின் நிமித்தம்.

அம்மா என்கிற தானத்தை அதற்குரிய நேரங்களில் உணர்த்தினாலும் ஒரு நெருக்கமான நட்பைப்போல நாளாந்தம் நடக்கிற எல்லா விடயங்களையும் பகிர்ந்து கொள்ளும அம்மாவை பெயர் சொல்லி அழைத்து பழகியிருக்கிறேன் பலம், பலவீனம், சோகம், துக்கம், சந்தோசம், நண்பர்கள், நண்பிகள், படிப்பு, விளையாட்டு , வேலை, பிடித்தது, பிடிக்காத, சினிமா, பாடல், அரசியல், காதல், கல்யாணம் என்று எல்லாம் பேசியிருக்கிறேன் அம்மாவோடு...

நான்தான் காரணமாக இருந்தாலும் எந்த ஒரு சந்தர்பபத்திலும் என்னை மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்காத அன்பே என்னை ஓரளவேனும் கட்டுக்குள் வைத்திருந்ததெனலாம் (நாங்கள்ளாம் அடங்கவே மாட்டம்ல முன்ன) . நான் செய்கிற ஏடாகூடமான காரியங்களைக்கூட "என்ன வருத்துறக்கெண்டு வந்திருக்கிறான்" என்று சொல்லிக்கொண்டாலும் "நீ ஏன்டா உதுகளுக்க போறாய் பேசாம இரு எண்ணடால் கேட்கமாட்டான்" என்று சொன்னாலும் அடுத்த கணமே "தேத்தண்ணி வேணுமோ" (நான் ஓரு நாளைக்கு குறைந்தத பத்து தேநீர் குடிப்பேன் அதுவும் Black Tea) என்று என் மனமறிந்து கேட்கிற அந்த அன்பும் நெருக்கமும் அம்மாவிடம் நான் செல்லப்பிள்ளையாக இருந்ததுக்கு சான்று. அப்படியெல்லாம் சொல்வதே "நீ அவனுக்கு செல்லம் குடுக்கிறதுலதான் அவன் இப்பிடி ஊர் சுத்திக்கொண்டு திரியிறான்" என்று அம்மாவை குற்றம் சொல்லுகிற காரணம்தான் ....

நான் வேலை செய்தது வெளி ஊரில்தான் இருந்தாலும் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்துவிடுவேன் வந்து ஊரில் நிற்கிற அத்தனை நாட்களும் வீட்டிலேயே இருப்பதில்லை அப்பபொழுதும் அதே பழைய குணம்தான் வீட்டுக்கு வரும்பொழுது எல்லோரும் பாதி தூக்கத்திலிருப்பார்கள் வந்து அம்மாவை கூப்பிடுகிற சத்தத்தில பக்கத்து வீட்டடுக்கார ஆக்களே எழும்பியிருவாங்க ... இதுல கடைசி அக்கா வேற (எனக்கு நேர் முதல் அக்கா) எழும்பி நீ திருந்த மாட்டாய் இந்த கொடுமையிலும் நீ வீட்டுக்கு வராமலே இருக்கலாம் என்று ஒரு குட்டி பிரசங்கம் நடத்தி விட்டு அதற்காகத்தான் நித்திரையை குழப்பி எழும்பி வந்தது போல மறுபடியும் போய் படுத்தக்கொள்வாள்...

இரவு நேரம் கழிந்து வீட்டுக்கு வந்தாலும் படுக்கைக்கு போவதற்கு முன்னால் ஒரு தேநீர் குடிப்பது வழக்கம் எவ்வளவுதான் திட்டினாலும் கடைசியாக Flask இல Tea இருக்கு குடி என்று சொல்லி நான் போட்டு குடிக்கும் வரை விழித்திருந்து சாப்பிடுகிறேனா என்று பாத்து தேத்தண்ணியும் போட்டுத்தந்து அதன் பிறகுதான் படுக்கப்போகும் அந்த அன்பு தோழியின் பாசத்தை என்னவென்று சொல்ல...

வாழ்க்கையை வாழ்வதற்கு அதன் போக்கில் அதனை ஜெயிப்பதற்கு அம்மாவை பார்த்துதான் பழகிக்கொண்டேன் எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி ஆனால் தனக்கு கிடைக்க வேண்டியதை அடைந்து கொண்டு மிக சந்தோசமாக வாழ்கிற ஒரு மனம் அந்த மனுஷிக்கு எப்படி வாய்த்ததோ எனக்கு தெரியவில்லை...

பிறந்ததிலிருந்து பழகிய மிக நெருங்கிய நட்பொன்றை பிரிந்து இரண்டு வருடமாக இருக்கிறேன் பார்க்கலாம்; இலங்கை எப்பொழுது இலங்கை ஆகிறதோ அப்பொழுது சொந்தங்களோடு சந்தோசமாக வாழ்வோம்.

கடைசியாக ஒன்று எனக்கு கிடைத்த முதல் நல்ல நட்பு பரமேஸ்வரிதான் அதாங்க அம்மாவோட பெயர்... மனுஷிக்கு தெரியும் நான் இப்பிடி ஏதாவது எழுதுவன் எண்டு ஏனெண்டா நான் முதல் எழுதின காதல் கவிதையை முதல்ல வாசிச்சதே அம்மாதானே...(வேற யார் வாசிக்கப்பேறாங்க எண்டு சொல்லுறது கேட்குது) இப்பவும் அம்மாவுக்கு தெரியாத விடயம் என்று என்னிடம் எதுவுமே இல்லை...

"அம்மா என்னணை எப்படி இருக்கிறாய் உன்னை பார்க்க வேண்டும்போல இருக்கணை... ஆனால் நீதான் இப்போதைக்கு வர வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டாயே..."

( குறை நினைக்காதிங்க மக்கள் அம்மாவை விட்டு பிரிஞ்சிருக்கிறதால அம்மாவுடன் நேரம் செலவழிக்க முடியலை அதனால அன்னையர் தினத்துக்கு ஏதாவது பதிவு போடலாம்னு பாத்தா எனக்கு எதுவுமே வரமாட்டேங்குது அதனால என்னோட நினைவுகள்ள இருந்து கொஞ்சூண்டு எடுத்து உங்களுக்கு தந்திருக்கேன்...)நான் என்ன சொல்லி
உன்னை வாழ்த்த அம்மா...
என் ஆசை தீர உன்னை அம்மா
என்றழைப்பதைத் தவிர...
தன் பிள்ளை நிலைபெற்று விட்டான்
என்கிற திருப்பதியை
உனக்கு கொடுப்பதை தவிர...எனக்கு கிடைத்த
நெருக்கமான முதல் நட்பு நீ
உனக்காக ஒருதினம்தான்
கொண்டாடுகிறது இந்த உலகம்
என் நாட்கள் எல்லாமே
கொண்டாடுகிறது உன்னை...நான் என் பிள்ளைகளின் மனதில்
எப்படியிருப்பேனோ தெரியாது- ஆனால்
நான் உன்னைப்போல் ஒரு
அன்னையாக இருக்கவே முயற்சிக்கிறேன்
நீ என்னை இன்னமும்
குழந்தையாகத்தானே பாவிக்கிறாய்அம்மா...
நான் உன்னை வாழ்த்துவதா
அது என்னால் முடியுமா
என் வாழ்நாள் போதாது அதற்கு
விரும்பினால் உன்னை
ஒரு வரம் கேட்கிறேன்
மறுபடியும் நான் உனக்கே
மகனாக வேண்டும்...
உலகத்தின் அம்மாக்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்...