Friday, February 5, 2010

மஞ்சள்வெயில் மற்றும் சில சொற்கள்..."நான் என்ன செய்வேன் ஜீவிதா...உங்கள் மெலிந்த உருவமும் வட்டச்சிறு முகமும், வராண்டாவில் நடக்கும்போதான புடவைச்சரசரப்பு, அசைவுகள், புன்னகை, பார்வைகள், வார்த்தைகள் எல்லாம் நெடும்புதர்களாகச் செழித்துக்கிடக்க நான் அதன் ஊடேதான் குழந்தையைப்போலவும் ஞானியைப்போலவும் நடந்தேன். இந்த சந்தோஷ நேரத்திற்கு, எனக்கு நான் மிகப்பெரியவனாகத் தோற்றமளிக்கிற இந்த தருணத்திற்கு, அன்பு சுரந்து ததும்புகிற இந்தப்பிரகாச நிலைக்கு, எல்லையற்று விரிந்து விகாசங்கொள்ளும் மனநிலைக்கு, பாடுகள் அத்தனையலிருந்தும் விலக்கிவைத்த பேருன்னத ஏந்துதலுக்கு என்றைக்குமாக உங்களுக்கு நன்றி."

தனிமையின் அலட்சியமான வாழ்நாட்களோடு அலைகிற கவித்துவமும் கழிவிரக்கமும் கலந்திருக்கிற மெல்லிய மனதுக்காரன் ஒருவனின் காதல் பெண்ணொருத்தியை பற்றிய சிலாகிப்பு யூமாவாசுகியின் மஞ்சள் வெயில்.

காதல்தான், காதல் பெண்மைகள்தான் வாழ்வின் அத்தனை பரவசங்களையும் திறந்து விடுகின்றன என்பதுதான் எத்தனை உண்மை! அதே நேரம் காதலின் மற்றய பக்கங்கள் தருகிற விளைவென்பது மிக இருளடர்ந்திருப்பதை சொல்லாமல் விடவும் முடியாது. அதீதமான வெளிப்பாடுகள்,வேற்று மனோநிலைகள் அனைத்தும் இயங்குகிற-இயங்காமல் போகிற போன்றதான தருணங்கள் என காதல் பெண்மை தருகிற அனுபவங்கள் அனுபவிக்கப்பட வேண்டியவை.பிறழ்வு நிலைக்கு இட்டுப்போகிற காதலின் சுகத்தையும், தவிப்பையும்,வலியையும் பேசுகிற தோற்றுப்போனதொரு காதலை; கவிஞன் ஒருவனது மொழியில் எழுதிய ஞாபகங்களின் தொகுப்பென பெருங்கடிதமாய் விரிகிற மஞ்சள்வெயிலை பின்னிரவு தாண்டி ஒரே மூச்சில் படித்து முடிக்கையில் குடிக்கவேண்டும் போலிருந்தது.


கதையில் வருகிற அத்தனை மனிதர்களும் தூக்கம் வராத அந்த மிகுதி இரவில் திரும்பத்திரும்ப வந்து போனார்கள். படித்து முடித்த சில நாட்களுக்கு பிறகொரு காலையிலும் ஜீவிதாவும் நாய்க்காரச்சீமாட்டியும் கனவில் வந்து போனார்கள் விழிக்கையில் கதிரவனின் படுக்கைக்கு மேலே தொங்கிய ஒற்றைச்செருப்பு கண்களுக்கெதிரே தொங்குவதாய் உணர்ந்தேன்.

இப்போதிலிருக்கிற மனோநிலைக்கும் காதல் குறித்தான கருத்துகளுக்கும் கொஞ்சம் அதிகப்படியானதாய் எனக்கு தோன்றினாலும்; அதே பைத்தியக்காரத்தனங்களோடு அலைந்த நாட்களை நினைவு படுத்துவதும், உணர்வைக்கடத்துகிற மொழி மனதைப்பிசைவதும் புத்தகத்தை படிக்க போதுமானவையாயிருக்கிறது. யூமாவின் மொழி பிடித்துப்போகவும இதுவே. கல்யாணமானவர்கள், ஆகாதவர்கள், இன்னும் காதலை ஒரு முறையேனும் உணராதவர்கள் என்று எல்லோரும் படிக்கலாம் பழைய பரவசங்களுக்கும் உள்ளே இருக்கிற மனதின் தடுமாற்றங்களுக்கும் நிச்சயமாய் ஒரு வரியேனும் இருக்கிறது புத்தகத்தில். எத்தனை காலம் கடந்து போனாலும் ஜீவிதாக்களும் கதிரவன்களும் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.

பகிராலம் என்று புத்தகத்தின் படத்துக்கான தேடுதலில் கிடைத்த மஞ்சள் வெயில் பற்றிய தமிழ்நதியின் பதிவு.சில நாட்களுக்கு முன்பான இரவு நேரப்பணிநாளொன்றில் எழுதிப்பார்த்த சொற்கள்.

ஒரு காதல் குறித்து-

காலம்,
காற்றிடம் கிடைத்த குறிஞ்சா பஞ்சென
என்னை கைப்பறியிருந்தது,
பனி விழுகிற நாளொன்றின்
பின் மதியத்தில் சிறகுகளோடு அறையில் நுழைந்த நீ
நான் முன்னெப்பொழுதும் அறிந்திராத ஒரு உலகத்துக்கு
என்னை அழைத்துப்போனாய் - அஃது
உன்னைப்போலவே மிக அணுக்கமானதொரு
அற்புதமானதாய் இருந்தது,
வெளிச்சமற்ற சில பகல்களுக்குப்பிறகு
நட்சத்திரங்களற்ற ஒரு இரவில்
காத்திருப்புகள் பற்றிய ஒரு கதையை சொல்லிக்கொண்டிருந்தாய் நீ
அந்த இரவிலிருந்து ,
நான் பெயரறிந்திராத மலை ஒன்றில் வசிக்கப்போவதாய்
பதினேழு முறைகள் சொல்லியிருந்தாய்,
நீயொரு பரம்பரைகளின் பெயர் சுமந்தலைகிற நதியென ஓடிக்கொண்டிருப்பதாய்
பருவ மாற்றங்களின் பிறகு பறக்கிற சிட்டுக்குருவிகள் சொல்லிப்போயின
நீ விட்டுப்போன உன் சிறகுகள் மட்டும்
எப்போதைக்குமான மிகுதிகளாய் என்னிடமிருக்கிறது.

பாடல்கள் குறித்து

எப்பொழுதாவது கிட்டுகிற மனோநிலையில் கேட்கிற
இணையப்பண்பலை ஒலிபரப்புகள்
காத்திருப்புகள் பற்றிய கேள்விகளை மட்டுமே மீதம் வைக்கிறது,
காலம் கேட்கிற சில கேள்விகளுக்கு
காலம் மட்டுமே பதில்களையும் சுமந்தலைகிறது,
எப்பொழுது வரைக்கும் இருக்கலாம்
அந்நிய நிலங்கள் தருகிற நாட்களும்
அவை தர மறந்து போகிற வாழ்வும்
முன்பே சொல்லியிருந்தாலும்,
பாடல்கள் காலத்தை மறக்கச்செய்வனவையேதான்!


புத்தகத்தை படிக்கக்கொடுத்த கடுமிலக்கியவாதி தோழர் ரௌத்ரனுக்கு...