Friday, February 14, 2014

தனித்த பகலொன்றின் மீதமிருக்கும் சொற்கள்.
இப்ப எல்லாம் நான் முந்தின மாதிரி இல்லை, எனக்கு கடும் கோவம் வருது, பொறுமை விட்டுப்போச்சு உண்மையைச்சொன்னால் என்ன உனக்குத்தானே? குடிச்சா டக்கெண்டு ஏத்தீடுது; மனசுல ஒரு போதை இல்லாமப்போச்சு! உண்மைக்கு நெருக்கமா ஒரு கதையும் என்னட்டை இல்லையெண்ட மாதிரி இருக்கு.  நீ சொல்லு மாயா எங்கே  இருக்கிறாய் நீ?!

அன்பை நிராகரிக்கும் இந்த துயர நிலைமைக்கு நான் எப்படி வந்தேன். இன்னும் என்னை வெகுதுாரம் கூட்டிக்கொண்டு போ.  நிலையில்லாமல் தவிக்கும் இந்த பாழும் மனதின் கடிவாளங்களை கைப்பற்று.  எனது பயணங்கள் தோறும் கூட வருமொரு உள்ளுணா்வை பத்திரப்படுத்து. எனது தளம்பல்களின் எல்லைகளில் எச்சரிக்கை உணா்வைத்தருமுனது  கரிசனங்களை தீராமல் வைத்திரு. நான் பேசவும் பேசாமலிருக்கவும் எப்பொழுதுக்குமான எனது சங்கதிகளாக நீ இருந்து விடு.

நான் உடலிலிருந்தும் தனித்தலையுமிந்த  துயர நாட்களை தீா்த்து விடு. ஒருபோதும் நீங்கி விடாத எல்லையற்ற உனது கருணையின் மரா்புகளில் அழவிடு, பின்னனா் ஏந்தி இந்தப்பிரபஞ்சத்தின் ஆதி முத்தங்களின் சாயலில் இறங்கும் உனது  உதடுகளின் மீது எனது வடிவமற்ற பிரியங்களை பதிய விடு. உன்மத்தம் நிரம்பிய எனது வேட்கையின் முடிவில் உனது பெருந்தனங்களில் உறங்குகிற இரவுகளை காலம் எனக்கு தரும்படிக்கு கூட இரு. உனது பிரியத்தின் எல்லா வடிவிலும் எனது பைத்தியங்களிலிருந்தும், குரூரங்களிலிருந்தும் என்னை மீட்டுக்கொள். எனது பாடுகள் எல்லாவற்றிலிமிருந்து என்னை பொறுப்பெடுத்துக்கொள்.

ஒரே முறை ஒரேயொரு முறை என்னைப்பொறுப்பெடுத்துக்கொள் நானெப்பொழுதும் மீளாதபடிக்கு காலம் என்னை உனது பிரியத்தின் எல்லைக்குள் காவல் வைக்கட்டும்.


காதல் குறித்து எழுதிப்பார்க்கும் மனோநிலை எனக்கு இதனை தொடங்கும் வரைக்கும் இருக்கவேயில்லை இருந்தும் ஏதேவொரு தருணத்தில் தட்டச்சத்தொடங்கிய இந்தச்சொற்கள் இவ்வளவு நீளத்துக்கு வரும் என்பதை நான் அறியவில்லை்  அப்படித்தானே காதல் கணங்களில் நிகழுமொரு அற்புதம்தானே! புலம்பலின் மற்றொரு வடிவமாக வந்திருக்கும் இந்தச்சொற்கள் ஒரு தனித்த பகல் பொழுதின் மீதமாய் இருக்கலாம்.

காதல் எப்பொழுதும் புதிய விசயம்தான் மக்கள் பிரியத்தின் நீட்டிப்பு என்பது உங்களது அன்பின் புதுப்பித்தல்களைச்சார்ந்தது.புதுப்பிக்காத அன்பில் இடைவெளி அதிகமாவிருக்கிறது.


பகிர்வின் மறுபக்கத்துக்கு.

மாயா  சுவாரஸ்யங்களை கூட வைத்திருப்பவள், எப்போதும் உற்சாகம் நிரம்பிய அவளது குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இரவெல்லாம் கூட வரும். கண்கள் சிரிக்கிற அவளது வட்டமுகத்துக்கு பெரிய கண்களும் சின்ன உதடுகளுமாய் இருப்பாள் கொஞ்சம் குண்டாக , நிறைய அழகாக இருக்கிற அவளை நான் காதலிக்கும்படி எனது ஒழுங்கின்மைகளின் துணையோடு மன்றாடிக்கொண்டிருந்தேன். அவளும் நானும் வெளியே அன்பை மறுதலிக்கிறவா்களாகவே இருந்தோம். ஆனாலும்  முத்தமிடத்தோன்றுகிற எனது உணா்வினை நான் காதல் என்கிற வடிவத்துக்கு மாற்றிக்கொண்டிருந்தேன்.  எப்பொழுதும் நம்பிக்கைகளை கொணா்ந்து தருகிற ஆத்மார்த்தமான  சொற்கள் அவளுடையது, அதையும் துணைக்கு வைத்துக்கொண்டேன். ஒரு மழை பெய்து கொண்டிருந்த மத்தியான நேரத்தில் பெரு நகரமொன்றின் வீதியில் நனைந்தபடி அவளை அணைப்பதற்கு அனுமதி கேட்டேன்; வெகுவியல்பாய் மாட்டேன் என்றவள் திரும்பி நடக்கத்தொடங்கினாள்.

மனதுக்குள் சிரித்தபடி போய்கொண்டிருக்கும் அவளை ஒரு ஒழுங்கைக்குள்ளிருந்து இழுத்து உதடுகளை காயப்படுத்தினேன். போடா  உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றபடி  லேசாய் வியா்த்திருந்தே வாசனையோடு அவள் பெரிய மார்புகளை நெஞ்சில் அழுத்தினாள். நான் சிவந்திருந்த அவள் உதடுகளை பேச விடாமல் எடுத்துக்கொண்டேன் அப்பொழுதும் அவள் கணகள் ஈரமாக சிரித்துக்கொண்டிருந்தது.

பின்னா் நாங்கள் ஒரு குட்டி மாயாவைப்பெற்றுக்கொண்டு தாலி கட்டிக்கொண்டோம்.

________________

காதலை சந்தித்திருக்கிற சந்திக்கப்போகிற எல்லோருக்கும் காதலா் தின வாழ்த்துக்கள்.


நன்றி யும் அனுதாபங்களும் காதலிகள் யாருமில்லாத எனது சக நண்பா்களுக்கு.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அன்பு தினம் - என்றும் வேண்டும்...
தினம் என்றும் - அன்பாக வேண்டும்...

அன்பு தின வாழ்த்துக்கள்...

Unknown said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News