Friday, May 15, 2009

மழைக்கு எழுதிய சொற்கள்...





இங்கே எழுதிய சொற்களை இவ்விடத்திலும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அந்த வார்த்தைகளை எழுதுவதற்கு அழைத்த சென்ஷிக்கும், பேசும் கவிதைகளுக்கான ஏற்பாடுகள் செய்கிற நண்பர்களுக்கும் நன்றி.

\\
நேற்று பெய்த மழையில்
இன்னமும் நனைந்து கொண்டிருக்கிறது உயிர்
சொட்டுச்சொட்டாய்
உன் நினைவுகள்...


\\
மூன்று வருடங்களுக்கு பிறகு
நினைவு படுத்தியிருக்கிறது இந்தமழை,
நீ பிரிவறிவித்த மழை நாளின் இரவையும் கூடவே
உன்னோடு கழிந்த விடு முறை நாட்களின்
மழை நேரப் பின்மதியங்களையும்...
மழை எப்பொழுதும்
மழையாகவே இருக்கிறது!


\\
எப்பொழுதாவது ரசிக்கக்கிடைக்கிற
தாழ்வாரத் தூவானங்களில்
தெறித்தலைகிறது
உன் முகம்,
யாருமற்ற பகல்களில்
வருகிற மழையை
நீயும் ரசிக்கிறாயா?


\\
வாசனைகளோடு வந்து
ஜன்னல் நனைக்கிற சாரல்களுக்கு தெரிவதில்லை
நீ இப்பொழுதெல்லாம் அறைக்கு வருவதில்லை என்பதும்
மழைக்கும் உனக்குமான சினேகம்
மறக்கப்பட்டு விட்டதையும்..


\\
வாசனைகளோடு வருகிற மழைக்கு தெரிவதில்லை
நீயற்ற இரவுகளின் நீளம்,
தனியே அருந்துகிற தேநீருக்கு தெரிவதில்லை
முத்தங்களுக்கு பின்னரான தேநீரைப்பற்றி,
அணைத்துக்கொள்கிற உன் தலையணகைள்
தூக்கம் கலைகிற இரவுகளில் கிசுகிசுப்பாய் பேசுவதில்லை,
நீ ஊருக்கு போன நேரத்தில் வருகிற மழைக்கு தெரியாது
போர்வையை சரிசெய்ய நீயில்லாத இரவுகள் பற்றி,

வந்து விடு அல்லது
மழையை கூட்டிப்போய்விடு!

\\
நனைந்து கொண்டே
பேசி வந்த புதன் கிழமை,
ஈரம் காயும்வரை இருந்துவிட்டுப்போன
ஞானசம்பந்தர் நூல்நிலையம்,
நூல் நிலையத்து விகடனில்
வாசித்த மழைக்கவிதை,
தகரக்கூரையில் விழுகிற
துளிச் சப்தங்கங்கள்,
விடைபெறும்வரை பிரியாமலிருந்த
இடது கைகளின் வெப்பம்,
விடைபெறும் தருணத்தில்
நிகழ்ந்த குளிர்விட்ட முத்தம்,

இங்கே எப்பொழுதாவது வருகிற மழை
இவ்வளவும் கொண்டு வருகிறது
உன் கடிதங்களை தவிர!

Friday, May 8, 2009

தீராத சொற்களும் நினைவுகளும்...

பெருமெண்ணிக்கையில் புறப்பட்டலைகிற சொற்களும், உள்ளேயிருந்து தெறித்து அலைகிற சொற்களின் திமிறல்களுமென திணறிக்கொண்டிருக்கிறது மூளை. புதிய சொற்களின் அழுத்தம் பெரும் பாடாய் படுத்துகிறது.சொல்லிப் புலம்புவதற்கு யாருமில்லாத பொழுதுகள் மிகக் கொடுமையானதாய் இருக்கிறது...

கலவையான சொற்களும் அதன் அமுக்கங்களும் குலுக்கிவைத்த பியர் போத்தலென பொங்கி நுரைத்துக் கொண்டிருக்க எதை எழுதுவேன்? சிதிறிக்கிடக்கிற சொற்களை அப்படியே எழுதிவிடலாம் என்றால் அவற்றை எங்கே இருந்து தொடங்குவது, எப்படி நிறைவு செய்வது என்று தெரியாமல் ஆக்கிரமிக்கிற சொற்களை அவற்றின் போக்கிலேயே விட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

எவ்வளவு தூரம் வாழ முடியுமோ அவ்வளவு தூரம் வாழ்ந்து விடவேண்டும் என்பது என் பிரயத்தனமாக இருக்கிறது பால்யம் முதலே. நான் ஆசைப்பட எதுவும் கிடைக்காது போகிற சோகம் அனுபவித்து பழகியதில் சுகமாய் தெரிகிறது. பழக்கப்பட்ட வலிகள் திடீரென்று இல்லாமல் போனாலும் எதையோ இழந்தது போலத்தான் தேன்றுகிறது இல்லையா? அவளிடம் கூட நான் அடிக்கடி சொல்லி இருப்பேன் சிறு வயது முதலே நான் மிக விரும்பிய விசயங்கள் எதுவும் எனக்கு கிடைப்பதில்லை எனவும் நீ எனக்கு கிடைத்திருக்கிறாய் உன்னை இழந்து போக மாடடேன் என்பதாயும் இழந்தால் என்ன நிகழும் என்பது சொல்ல முடியாதென்றும். இப்பொழுது அவள் என்னோடு இருக்கிறாளா இல்லையா என்பதை பின்பொரு நாளில் பேசிக்கொள்வோம்.

என்னை அடையாளம் காட்டத்தொடங்குகிற சொற்களை அரங்கேறறம் செய்வதில் இருக்கிற குழப்பம் என்னை பிரதிபலிக்கிற சொற்களை வாசிப்பதில் இருப்பதில்லை சொல்லப்போனால் அவற்றை திரும்பத்திரும்ப வாசித்துக்கொள்வேன். நீங்கள் என்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்கான உறுதி நிலைகள் தகர்ந்து கொண்டிருக்கிறது உள்ளேயிருக்கிற சொற்கள் செய்கிற ஆக்கினைகளில்,இந்தப் புலம்பல் என் சொற்களுக்கான திருப்திப் படுத்தலாய் கூட இருக்கலாம்.

படபடப்பாய் இருக்கிற பொழுதுகளை பகிர்வதற்கு வெகு நிதானமாய் தண்ணியடிக்க வேண்டுமென்பதாயும் அது ஒரு புரிதல் நிரம்பிய பெண்ணோடு நிகழ வேண்டும் ஏங்கிக்கொண்டிருக்கிறது. நாட்கள் சொல்லவும் கேட்கவும் மறுதலிக்கவும் விவாதிக்கவும் பின் முத்தங்கள் செய்யவும் என அவளோடு பொழுதுகள் கழியவேண்டும் என்பதாய் இந்த இடத்திலிருந்து வெளியேறி விடு என கதறிக்கொண்டிருக்கிறது மனம்.

மனம் விட்டுச்சொல்லி விடுகிறேன் நிறையப்பேசவும், முழுவதும் பகிரவும் மூச்சுத்திணறக் காதல் செய்வும் கறுப்பு நிற தேவதை ஒருத்தியை தேடிக்கொண்டிருக்கிறேன்



பின் குறிப்பு அல்லது எழுதிப்பார்த்த சொற்கள்:

மூளை என்கிற ஒன்றை
செயலிழக்கச்செய்கிற வேகத்தோடு
புறப்பட்டலைந்து கொண்டிருக்கின்ற சொற்களை
கொலை செய்து விடுவதென முடிவெடுத்து
ஒவ்வொன்றாய் அழிக்கத் தொடங்கினேன்
இரத்தமும் சதையுமாய் வெட்டுண்டு
புழுக்களென நெளியத்தொடங்கிற்று
நினைவுப்பெருவெளி
நினைவுகளை அழிக்க வேண்டிய
நிர்ப்பந்தம் வந்துவிட மூளையை
வெளியே எடுத்துவிடலாம் என முடிவெடுத்தேன்.

அறுக்கத்தொடங்குகிற தருவாயில்
சன்மாய் ஒலிக்கிறது குரல்
"நீங்கள் நல்லா இருக்கோணும்... நான் போறன்"

அறுத்துக்கொள்வதை சட்டென்று நிறுத்தி
ஒரே மூச்சில் குடித்து முடித்தேன்
இருபத்தேழாவது குவளையையும்

சுவரோடு சாய்ந்து
கால் மேல் கால் போட்படி
சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டேன்

இப்பொழுது...

கறுப்பு நிறத்தாள்களில்
இரத்த நிறச்சொற்கைள
எழுதிக்கொண்டிருக்கிறேன்!


\\
எழுதிக்கொண்டே இருப்பதற்கு போதுமானதாய் தீராமல் இருக்கின்றன சொற்கள் இருந்தும் எதை எழுத என்று தெரியாமல் திணறுகிறது மனம்.சொற்களை எழுதி விடுவது தான் நல்லது என்பதாய் கற்பிதம் உருவாக்கி வைத்து விட்டபிறகு அதனை மீறுவதென்பது முடியாத காரியமாய் இருக்கிறது.

\\
எல்லாமே அழிந்து போனதாய் இயங்க மறுத்துக்கொண்டிருக்கிறது மூளை இன்னமும் எங்கே இருக்கிறாய் நீ.என்னை எழுத விடு இல்லையேல் வந்து விடு.

Monday, April 20, 2009

இழந்து போன நாட்களும் ஈழமும்...





நானென்ன கவிதை எழுத வேண்டுமா அல்லது எனக்கு இல்லாத அறிவை இருப்பதாய் ஏதாவது எழுதிக்காட்ட வேண்டுமா, தேடிப்படித்தலும் வாசித்தலும் எனக்கு இயைபான சூழலில் மட்டுமே நிகழ்கிறது. கட்டாயமாய் சில பின்னூட்டங்கள் அதுவும் எனக்கு நேரமிருந்தால் மட்டுமே பதிவுகளென்று நானெழுதுகிற புலம்பல்கள்.

போங்கடா நீங்களும் உங்கடை வியாக்கியானங்களும்... என்னிடம் புரிதல் இருக்கிறது அது உங்களை விட சற்று அதிகமாயும் இருக்கலாம். இருந்தும் எனன செய்வது புலம்பல் இருந்து கொண்டுதான் இருக்கிறது இந்தக் கண்களையும் குழந்தைகளையும் படிம்பிடித்தவனுக்கு என்ன மனோ நிலை இருக்கிறதோ எனக்கு தெரியவில்லை..என்னை கடினப்படுத்துகிறதாய் இருக்கிறது நிஜங்கள் உங்களையும் உலகத்தையும் மிகக்கேவலமாகன வார்த்தைகளில் திட்டிக்கொள்வேன் சமயங்களில் பலமாக சிரிக்கவும் செய்கிறேன் நிச்சயம் அது உங்களுக்கு பிடிக்காத சிரிப்பாகத்தான் இருக்கும்.


ஏதோ அந்தக்கண்கள் என்னைத்தான் பார்ப்பது போலவும் அவை என்னிடம் பேச முயல்கிறதைப்போலவும் இன்னும் கொஞ்சம் போய் என்னை பல கேள்விகள் கேட்பதாயும் மிக தீர்மானமான குற்றச்சாட்டுகளை என்மீது சுமத்துவதாயும் உணர்கிறேன் அந்தக்கேள்விகள் என்னை தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாயும் எப்பொழுதும் என் காதுகளுக்குள் கேட்டக்கொண்டிருப்பதாயும் இருக்கிறது. எப்பொழுது இந்த புகைப்படங்களை பார்த்தேனோ அப்பொழுதிலிருந்து அடச்சே என்கிறமாதிரி இருக்கிறது பொழுதுகள்...

எழுதி அழித்து எழுதி அழித்து எழுதிக்கொண்டிருக்கிறேன் ஒரே வரிகளை... சமயங்களில் ஈழம் வேண்டாம் அவர்களை விட்டுவிடுங்கள் என்பதாய் தோன்றுகிறது எதையும் யோசிக்காமல் எதிர்படுகிறவர்களை கொலை செய்யத்தோன்றுகிறது சில நேரங்களில் திடீர் தீடீரென்று கேபமாய் வருகிறது மிகச்சத்தமாக கெட்டவார்தைகளில்(கெட்ட வார்த்தைகள் என்று இருக்கிறதா)) கத்துகிறேன் தமிழ் சிங்களம் ஆங்கிலம் என அது கலவையாய் இருக்கிறது எப்பொழுதும் என்னுடைய மொழி என் ஊருக்கான சாயல்களில் இருக்காது வட்டார இயல்புகளற்று கலவையானதாய் இருக்கும்.பின் அறை முழுவதும் அதிரும் படியாக கதறுவதுமாதரியாக பாடலை ஒலிக்கவிட்டு அதை மீறுகிற சத்தத்தோடு கத்துவேன் அல்லது பாடுவேன்.

what the hell is going on your country...fuckers...

உங்கள் காதுகளை பொத்திக்கொள்ளுங்கள் அல்லது நீங்களும் என்னைப்போலொரு போலி என்றால் கேட்டும் கேளாமல் விட்டுவிடலாம் உண்மை நான் திட்டுவது உங்களைத்தான் கூடவே இல்லாத கடவுளர்களையும்...


என்னுடைய நாட்டு மக்கள் மீதான வெறுப்புகளும் தேசம் பற்றிய சிந்தனைகளில் விரக்தியும் என்னை துன்புறுதுத்துவதாய் இருக்கிறது. இருந்தும் என்ன எல்லா வயிறும் பசிக்கத்தான் செய்கிறது, புணர்கிற இரவுகள் அதனையும் செய்து கொண்டுதான் இருக்கிறது.

தமிழர் வாழ்கிற இடங்களெங்கும் பரவியிருக்கிற எழுச்சியும், புலம் பெயர் நாடுகளில் நிகழ்கிற எழுச்சியும் தியாகங்களும் போராட்டங்களும் காலம் மிகப்பிந்தியதாய் இருந்தாலும் இந்தக் கண்கள் கொடுத்த சக்தி என்பதாய்யதான் எனக்குப்படுகிறது...

நல்லதொரு தீர்வு வந்து விடும்போல் தெரிகிறது நம்பிக்கைகள் முளைவிட்டிருக்கிறது அந்த நம்பிக்கையில் தானே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது .இயல்பு மாறிப்போன வாழ்வில் இருக்கிற கடைசி நம்பிக்கைகளில்தானே ஈழத்து மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இப்படி சொல்லிக்கொண்டாலும் உலகம் அதன் நிர்ப்பந்தங்களோடு சுழன்று கொண்டிருப்பதில் வாழ்நாட்கள் தீர்ந்து கொண்டிருக்கின்றது...

இந்த சித்திரை வருடப்பிறப்பென்பது வெறுமைகள் சூழ்ந்த நாளாகத்தான் இருந்தது மூக்கு முட்டக்குடித்துவிட்டு புலம்பவேண்டுபோலத்தான் இப்போதைய நாட்களின் மனோநிலை இருக்கிறது...


"we should do some thing for our land" என்கிற பால்ய காலத்து நண்பனொருவனின் வார்த்தைகளை சார்ந்து பல கேள்விகள் உழன்று கொண்டிருக்கிறது. என் மீதான குற்றவுணர்ச்சியும் சேர்ந்து கொள்கிறது. அந்தக்கேள்வியை ஒன்லைனுக்கு வரும் பொழுதெல்லாம் சொல்லும் அவனிடம் பெரும் கோபமும் வருகிறது . இத்தனைக்கும் பேரின்ப நாயகியில் வருகிற நண்பனொருவன் என்பது இவனைக் குறிக்கிற சொல்லாகத்தான் எழுதியிருந்தேன் இவனெப்பொழுது இப்படி மாறிப்போனான்.வாழ்க்கை சில இடங்களில் எதிர்பாராத திசைகளில் திரும்பி விடுகிறது.


நான் முற்றிலும் எதிர்பார்க்காத ஒருவன் உண்ணாவிரதத்தில் அமர்ந்திருக்கிறான் அவனை ஒரு கலைஞனாக எனக்கு தெரியும். ஆனால் ஈழம்சார்ந்த உணர்வாளனாய் அவனை நான் சமீப காலமாகத்தாக்ன அறிந்து கொண்டேன் தீடீரென அவனும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மேடையிலமர்ந்திருக்கிறான் என்பதாக அறிந்த புகைப்படங்கள் என்னை என்னவோ செய்கிறது.காலம் கொடுத்த மாற்றங்கள் அல்லது நான் இழந்தவைகள் என்னை சுயநலக்காரனாய் ஆக்கிவிட்டதோ, இது என்னுடைய வாழ்க்கை நான் வாழவேண்டும் என்பதாய் எப்பொழுது சிந்திக்க தொடங்கினேன்? இப்பொழுதேன் புலம்புகிறேன்?கட்டுகளை மீறிய இயல்புகளைக் கொண்ட நான் எதையும் கடந்து விடுபவன் என்று தம்பட்டம் அடித்த போலிதானோ...?

இல்லை நானொரு போலி இல்லை! என்னிடம் புரிதல்கள் இருக்கிறது சே...!! எவ்வளவு பார்த்திருக்கிறேன் ஐந்து வயதில் பசியைக்கடந்து பத்து வயதில் பிணங்களைக்கடந்தவன் நான். வாழ்க்கையை வாழவேணடும் வாழ்வதற்கு எவ்வளவோ இருக்கிறது என்பதாக கணந்தோறும் அனுபவிப்பவன்.உலகம் போதுமானதாய் இருக்கிறது மனிதர்கள்தான் திருப்பதிப்படுவதில்லை என்று உலக்ததை பளிக்கிற நான் எதற்கிப்பொழுது புலம்புகிறேன்.

நிப்பாட்டு என்ன சொல்ல வருகிறாய் நீ...?

முடியல்லை மச்சான் ஒரு மாதிரி உண்மையற்ற நாட்களாய் இருக்கிறது பெரும்பாலும் அப்படித்தான் என்றாலும் இப்போதைய நாட்கள் ஒரு விதமாய் தொடர்ந்து தொல்லைப்படுத்துகிறது.

இலங்கையில் எல்லோரும் புரிதல் என்கிற விசயத்தை மறந்து விட்டார்களா யாருக்குமே அந்த சிந்தனை வரவில்லையா பல்கலைக்கழகங்களும் படிக்கிற இளைய சமுதாயம் ஏனிப்படி இருக்கிறது அவர்களிடம் புரிதல்களே இல்லையா அல்லது அப்படியே சரி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் நாம் நம்முடையவேலைகளை பார்த்து விடுவோம் என்கிறது போல போய்கொண்டே இருக்கிறார்களா வலி என்பதை யாரும் உணர்வதே இல்லையா...


மக்கள் படுகிற வேதனைகள் பார்க்கையில் ஏனிப்படி நிகழ்கிறது மீதமிருக்கிற வாழ்நாட்களைத்தானும் உலகம் இனம், மொழி, மதங்களை கடந்து வாழ்ந்து விட முடியாதா அதில் உள்ள சுகமும் சுதந்திரமும் ஏனிவர்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது. அவர்களுடைய நிலம் அதனை கொடுத்து விடுங்கள். ஏனிப்படி அடித்துக்கொண்டு சாகிறார்கள் அவரவர் வாழ்வை கொண்டாடுவதில் எவ்வளவு சுகம் இருக்கிறது தெரியுமா? என்பது என் எண்ணப்பாடாக இருந்தாலும்...


இழந்து போன நாட்களும்,ஏற்பட்டிருக்கிற வடுக்களும்,வரலாற்றிலிருக்கிற பிழைகளும், இன்னமும் தெளிவு பெறாமல் இருக்கிற மூளைச்சலவை செய்யப்பட்ட சிங்கள சமுதாயமும், அரசியல் சுயநலவாதிகளும் என மொத்தமாகப் பார்க்கையில் ஈழம் கிடைத்தே ஆகவேண்டும் என்றுதான் முடிவாகிறது. இது வரை நிகழ்ந்த தியாகங்களும், போராட்டங்களும், இழப்புகளும் கூட ஆதிக்குடிகள் என்கிற இனத்திற்கு சுமுகமான தீர்வை பெற்றுத்தர முடியவில்லை எனில் ஈழம் என்கிற தேசம் அமைவது அவர்களுக்கான வாழ்க்கையை கொண்டாடுவதற்கு வழி செய்யக்கூடும். ஏன் சிங்களவர்களுக்கு கூட தேவையற்ற இழப்புகளையும் காழ்ப்பபுகளையும் சுமந்தலையத்தேவையில்லை இந்தப்பிரச்சனையை சொல்லியே பிழைப்பு நடத்துபவர்களை இனம் கண்டு கொள்ளவும், திரிக்கப்பட்ட மஹாவம்சத்தையும் அறிந்து கொள்ளவும் முடியும்.

கடந்த சில நாட்களில் மட்டும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயிர்களை காவுகொண்டிருக்கிறது குண்டுகள். எழுச்சிகள் தீவிரமாகிக்கொண்டிக்க தீர்வு நெருங்கி விட்டதாக பயம் கொள்ளுகிற அரசு, முடிந்தவரை அழித்து விட முயல்கிற குரூரம் தானே இது. இதனை அனுமதிக்கிற நீங்கள் புரிதல்களற்ற,நாகரிகவளர்ச்சி என்று கழிவுகளை சுமக்கிற மனிதர்கள்தானே.


திசைகள் தீர்மானிக்காமல் பயணங்கள் போகிற நாட்கள் எப்பொழுது கூடுகிறதோ அப்பொழுது உங்கள் தேசம் கொண்டாட்டங்கள் நிரம்பியதாய் இருக்கும். அப்பொழுது உங்கள் புற அடையாளங்கள் உங்களிலிருந்து வெளியேறி ஆனந்தம் உங்கள் ஆத்மாக்களில் நிரம்பியிருக்கும்.

உங்கள் தேசமும் அதற்குரிய அடையாளங்களை இழக்காது அதன் முக்கியத்துவங்களோடு மிளிர்ந்து கொண்டிருக்கும்.

சமாதானம் உங்களிலிருந்து தொடங்கட்டும்.


பின்குறிப்புகள்:

\\
தீராத சொற்களும் தொடர்ந்து செல்கிற உரையாடலும் என்று புலம்பிய பெருமெண்ணிக்கையான சொற்களில் இது ஒரு பகுதி மட்டுமே.

\\
எழுதி மூன்று நாட்களாகிறது என்றாலும் பதிவாக்க விருப்பமில்லாமல் அப்படியே வைத்திருந்தேன். இதனை இப்பொழுது பதிவாக்கி முடிக்கையில் இன்னும் பல மனிதர்களை குண்டுகள் காவுகொண்டிருக்கும்...

\\
கேள்விகள்! கேள்விகள்!! கேள்விகள்...

Friday, April 17, 2009

தலைப்புகளற்ற குறிப்புகள் - 17-04-2009

\\
படபடப்பாய் இருக்கிறது நாட்கள் இதுக்கு என்ன தீர்வென்று அய்யனாரைத்தான் கேட்கவேண்டும்.அவரே சந்தோஷின் குறுந்தகவலைப்பற்றி இனிமேல்தான் யோசிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் ஆனால் எனக்கென்னமோ அய்யனார் எழுதுவது மயக்கம் தருவதாய்தான் இருக்கிறது. அய்னாரோடு சேர்ந்து தண்ணி அடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது சந்தர்ப்பம் கிடைகுமென்று நினைக்கிறேன்(கிடைக்குமா?) அந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமான மொட்டை மாடி அமைவதுதான் நிச்சயமில்லாத விசயம். தல நாவல் எழுத ஆரம்பிச்சிட்டதா சொல்லியிருக்கு சீக்கிரமே பதிவுலகை புரட்டிப்போடப்போகிற நான் திரும்பத்திரும்ப வாசிக்கப்போகிற நாவலை எதிர்பார்க்கலாம். சீக்கிரம் எழுதுங்க அய்யனார். தாமதமான பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துக்களையும் இங்கே சொல்லிக்கொள்வது மகிழ்சிக்குரிய விசயம்.

\\
பதிவுலகம் பேசப்போகிற இன்னுமொரு நாவலும் விரைவில் வரும் போலத்தெரிகிறது அது கவித்துவ மொழிதலுக்கு சொந்தக்காரியான தோழி தமிழ்நதியிடமிருந்து.உணர்வுகளை அதிக பட்சம் கடத்துகிற மொழியும், மொழி வசப்படுகிற எழுதுதலும் இருக்கிற ஒரு கவிஞரிடமிருந்து வருகிற தன்னைத்தான் எழுதிச்செல்கிற நாவல் மாதிரியான ஒன்று சுவாரஸ்யங்கள் நிரம்பியதாய் இருக்கும் என்பதில் ஐயப்பாடுகள் இருக்க வாய்புக்ககளே இல்லை.

இரண்டு நாவல்களுக்குமான முன்கூட்டிய வாழ்த்துக்களை இப்பொழுதே பகிர்ந்து கொண்டு நாவலை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை மிக அழுத்தமாக பதிவு செய்கிறேன்.


\\
கடந்த பதிவில் எழுதியவரிகளை நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டீர்களோ எனக்கு தெரியவில்லை. என்னைப்பொறுத்த வரையில் அவை பெரியதொரு புலம்பலில் சிதறிக்கிடந்த சில சொற்கள் தான் இந்தப் புலம்பலை அல்லது சொற்களை கட்டுக்குள் கொண்டு வருவது கொஞ்சம் சிரமமானதாய்தான் இருக்கிறது. புலம்புதலை நிறுத்தினால் சிதறிவிடக்கூடும் கபாலம்.வாழ்வதற்ககு இன்னும் நிறைய இருக்கிறது அதனால் சொற்களை எழுதுதல் என்கிற புலம்பல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இது அடுத்த பதிவுக்கான பின்குறிப்பாகவும் இருக்கலாம்.


\\

கையில கிடைச்சது செல்போன்தான்... :)


*
காணும்,
காணும்... வைக்கிறேன்
எனக்கிற சிணுங்கல்களுடன்
என்னுடைய சம்மதங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிற
மௌனங்களின் பொழுதுகளில் கேட்கிற
மூச்சுவிடும் ஓசைககளில் இருக்கிற
கனம் நிரம்பிய காதலை
சுமக்க முடியாமல் தவிக்கிறதென் தொலைபேசி

*
உரையாடல்கள் நின்றுபோன
உறவொன்றின் அழைப்புக்காய்
ஏங்கிக் கொண்டிருக்கிறதென்
தொலைபேசியும்
மாலைப்பொழுதுகளும்.


*
எழுத்துகள் அழிந்து போன
விசைப்பலகையோடு இருக்கிற
தொலைபேசி திணறிக்கொண்டிருக்கிறது
நிரம்பிப்போயிருக்கிற பிரியங்களோடு வழிகிற
உன் குறுந்தகவல் விசாரிப்புகளில்...

*
அழைப்புகள் தீர்ந்து போன பிறகும்
அழிக்கப்படாமலிருக்கிற
உன் இலக்கமும் குறுந்தகவல்களும்
தனித்திருக்கிற இரவுகளின்
சில கவிதைகளுக்கு வழி செய்கிறது அல்லது
தனிமைக்கு துணையிருக்கிருக்கிறது

*
நாள் முழுவதும் தொடர்கிற
குறுந்தகவல் பரிமாற்றங்களில்
சேர்ந்திருந்த பொழுதுகளை
ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது
பிரிவுக்கு பின்னரும் அழிக்கப்டாமலிருக்கிற உன்
பிரியம் நிறைந்த சொற்கள்..

*
உயிர் நிரப்புகிற உரையாடல்களை
என்னோடு சுமந்தலைகிற
என் தொலைபேசிக்கு தெரியாது
அவள் பிரிவறித்த செய்தி
கடிதமொன்றில் வந்திருக்கிறதென.

*கிட்டத்தட்ட இரண்டரை வருடமாய் என்னோடிருக்கிற செல்போனுக்கு சமர்ப்பணம் இவ்வரிகள்.



\\
அரபு நாடுகளின் வெள்ளிக்கிழமை என்பது அனுபவிக்க விரும்புகிற வியாழக்கிழமை இரவுகளுக்கடுத்த தூக்கம் நிரம்பிய பகல்களாகத்தான் அனேகம் பேருக்கு இருக்கும் எனக்கு அவை தூக்கமற்ற வியாழக் கிழமைகளுக்கு பின்பான பணி நேரப் பகல் பொழுதுகளை தந்துகொண்டிருக்கிறது ஏதாவது எழுதலாம் என்கிற நினைப்பில்லதான் பணிக்கே வருவேன் எதை எழுதுவது முட்டி மோதுகிற சொற்களை எப்படி கோர்வையாக்குவது என்பது தெரியாமல் வாசிக்க கிடைக்கிற பதிவுகளுடன் முடிந்து போய்விடுகின்றன் அவை.

Thursday, April 16, 2009

சாபம்...!








வேறெதுவும் சொல்ல முடியாத வேளைகளில் புரிகிறது
வாழ்வு மீதான பிடிப்பென்பதும் இருத்தலென்பதும்

நானென்பது
எனக்கு இலக்கியமும் தெரியாது,
தத்துவமும் தெரியாது,

வாழ்தல் என்பதென் தப்பித்தல்களும்
இருத்தல் என்பதென் பிரயத்தனங்களும்
என் மறைவுக்கு பின்னர் எழுதப்படும்
எதுவுமில்லாத பின்குறிப்புகளும்.

நீங்கள்...
விதிக்கப்படாது தொடர்கிற சாபமென
தேடிப்படித்தெழுதுவீர்கள்
திரிக்கப்பட்ட வரலாறுகளையும்,
இன்ன பிறவைகளையும்.

இப்பொழுது எழுதிக்கொள்ளுங்கள்
ஆதிக்குடிகளின் அழிவும்
அரிதார(அதிகார) புருஷர்களின் வலியுறுத்தல்களும்
காணாமல் போன கடவுளர்களும் என்பதாக!



பின்குறிப்பு:

\\
நானொரு போலி,பின்குறிப்புகள் தேவைப்படுகிற நீங்களும்.

\\
மிகத்தாமதமானதொரு பிரதிபலிப்பும் சொல்ல விரும்பாத குறிப்புகளும்.

\\
காலம் நல்ல மாற்றங்களை கொண்டு வரும்போல் தெரிகிறது,இரண்டு தலைமுறைகளின் வாழ்நாட்கள் இப்படித்தான் தீர்ந்து போயிருக்கிறது.


*படங்கள் தமிழ்வின் இணையத்தளம்

Friday, April 10, 2009

குந்தியிருக்கிற சனமும் சில குறிப்புகளும்...

குந்தியிருக்கிற இரவுகள்...

பனை மரங்கள் சரசரக்கிற காற்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது
நினைவிழந்த தெருக்களுக்கான ஊரடங்கு சட்டம்,
முலை தவறிய குழந்தைகள் அழுகிற குரல்களில் கிளிகிறது
விழித்திருக்கிற இரவின் திணிக்கப்பட்ட நிசப்தம்,
தூரத்து நாய்களின் குரைத்தல்களில் கலக்கிறது
அத்து மீறுகிற சப்பாத்துகளின் காலடிச்சத்தங்கள்,
திட்டமிடப்பட்ட தேடுதல்களின் பின்னர்
கலைந்து போயிருந்தது இரவு,
குரைத்து களைத்த நாய்கள் அடங்கிப்போக
துயரத்தின் நிறங்களில் பரவுகிறது விடியலின் வெளிச்சம்,
அடைக்கப்பட குரல் வளைகளில் இருந்து வெளியேறுகிறது
காணாமல் போனவர்கள் பற்றிய கதறல்கள்,

பனங்கூடல் பிரிகிற பறவைகள் காவிச்செல்கின்றன
ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்து அடிமைகள் பற்றிய செய்திகளை
ஆளில்லாத வெளிகளில் பகிர்வதற்கு,

இப்பொழுது...

இரவுகளில் குந்திக்கொண்டிருக்கிறது மீதமிருக்கிற இனம்,
உரிமைகள் மறுக்கப்பட்ட சனங்களை பதிவு செய்திருந்தன
உண்மைகள் மறைக்கப்பட்ட அரசாங்கத்து கோப்புகள்!

_________________________________________________________________________

இந்த வரிகளை எழுதிவிட்டு சில குறிப்புகள் எழுதலாம் என்றிருந்தேன் எந்த குறிப்பையும் என்னால் நிறைவு செய்ய முடியாமல் இருந்தது விடைதெரியாத கேள்விகளை குறிப்புகளாக்குதல் என்பது சிரம்தான் அவற்றை கேள்விகளாவே விட்டுவிடலாம்போல. ஏறக்குறைய என் வயதுடைய ஈழம் என்கிற ஆயுதப்போராட்டம் என்பது எங்கே நிற்கிறது என் சனத்தின் வாழ்க்கை எந்தப்புள்ளியில் தேங்கியிருக்கிறது.

என்ன நடந்துகொண்டிருக்கிறது, இது எப்படி முடியப்போகிறது, எதை இழந்திருக்கிறோம், எதை அடைந்திருக்கிறோம்? இழந்துபோனவைகளின் மீள்நிரப்புகைகள் என்ன, அவை எப்படி சமன்செய்யும்? எவ்வளவு வாழ்ந்திருக்கிறோம்? இந்த குழந்தைகள் என்ன செய்யும், இந்த குமர் என்ன செய்வாள்,இந்த காதல் மனைவி தன் நினைவுகளை எங்கே புதைப்பாள், இந்த தாய் என்ன செய்வாள், இந்த கிழவர் என்ன செய்வார், பதினொரு பேர் கொண்ட குடும்பத்தில் மீதமிருக்கிற இருவர் என்ன செய்வர், இனியொரு வாழ்க்கை அவர்களுக்கு எங்கே இருக்கும், இந்தக் குழந்தைகள் இனி என்ன செய்யும், எதனை தம் வரலாற்றில் எழுதுவார்கள், எங்கிருந்து அவர்கள் வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள்.

என் தேசம் பற்றிய கேள்விகள் தீராததாய் இருக்கிறது.


அந்த குறிப்புகளை எழுதி முடிக்கையில் பதிந்துவிடுகிறேன் சில வேளை அது பதியப்படாமலே போகலாம், இந்த சில வரிகள் மீதமிருக்கிற சனத்தின் கேள்விக்குறிகளை ஆகக்குறைந்தளவாவது உங்களுக்கு சொல்லக்கூடும். யுத்தம் திணிக்கப்பட்ட ஒன்று, இலங்கையின் சனங்கள் சபிக்கப்பட்டவர்கள் ஏனெனில் அவர்களிடம்தான் புரிதல்கள் என்பதே கிடையாதே.

சமபந்தமேயில்லாத சுயநலவாதிகள் விதைத்துப்போன தப்பான புரிதல்கள் இன்னமும் சம்பந்தப்பட்ட சுயநலங்களுக்காவே முன்னெடுக்கப்படுகிறது.அதனை புரிந்தகொள்ளவும், தடுத்து நிறுத்தவும் என் நாட்டு மக்களுக்கும் இலங்கைக்கென்று பெயர் இருப்பதாக கூறிக்கொள்ளும் இளைய தலைமுறைக்கும் (இவர்கள் படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள்)முடியவே இல்லை.நாம் எதை கற்றுக்கொண்டோம்,எது எம்முடைய நாகரிகம்.

அடிப்படை உங்களுடைய புரிதல்களில் இருக்கிறதென்று தோன்றும் சில நேரங்களில் பல நேரங்களில் அதுதான் உண்மையும் என்ன செய்து கொண்டிருக்கிறோம். தவிர்க்கப்பட வேண்டிய வரலாற்றைப் பேசிப்பேசியே இரண்டு தலைமுறைகளின் வரலாற்றை இல்லாமல் செய்துவிட்டார்கள் இனி மீதமிருக்கிற காலம் எப்படி இருக்கும்.

யுத்தம் தின்றுகொண்டிருக்கிற மனிதர்களை உங்களால் எப்படி எண்ணிக்கொண்டிருக்க முடிகிறது. நாடும், பொருளாதாரமும், சட்ட ஒழுங்கும் மிகக்கேவலமான நிலமைக்கு மாறிக்கொண்டிருப்பதை சகித்துக்கொண்டு எப்படி பல்கலைக்கழகங்களில் படிக்கிறீர்கள்,படித்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்.

வலியோடு இருக்கிற மற்றுமொருவன் புறப்படும்வரை சுயநலங்கள் ஆடிக்கொண்டேதான் இருக்கும் தவிர்த்துக்கொள்ளலாம், உங்களுக்கு சுயமான சிந்தனை வளர்ச்சியும் புரிதல்களும் இருக்கிறவர்கள் எனில். அவசியமேயில்லாத யுத்தம் ஒன்று எப்படி நீண்டு கொண்டிருக்கிறது இதற்கேன் உங்களால் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள், என்ன இழவை படிக்கிறீர்கள் உங்களுக்கென்று என்ன பெருமை இருக்கிறது?

ஒன்று மட்டும் சொல்கிறேன் தயவு செய்து மாறிவிடுங்கள்! இனியெப்போதும் நீங்கள் முன்றேப்போவதில்லை என்று முடிவுகட்டியிருக்கிற உலகம் சிந்தனை வளர்ச்சியும் புரிதல்களும் இல்லாத சமூகம் ஒன்றின் தோல்வியென உங்கள் வரலாற்றை எழுதிவிடக்கூடாது.

இதை நான் உலக நாடுகளிடம் கேட்கவில்லை இலங்கையில் இருக்கிற மக்களிடம் கேட்டிருக்கிறேன் முக்கியமாய் பள்ளிக்கூட, பல்கலைக்கழக மாணவர்களிடம்.

Tuesday, March 31, 2009

பூனைகள் பற்றிய...



கவிழ்ந்திருக்கிற இரவு விளக்கின் வெளிச்சத்தில்
கலைந்திருருக்கிற அழகுகளோடு உறங்குகிற
அவளுக்கு தெரியது இரவுகளில் பூனையாகுகிற என்னை,
வெளவால்கள் வழித்திருக்கிற இரவுகளில்
வெளிச்சமற்ற திசைகளில் இருந்து
இரை தேடிப்பாய்கிற பூனைகளின் லாவகம்
பகல் முழுதும் பரவசமூட்டுகிற பறவைகளுக்கு
தெரிவதில் நியாயங்கள் இருப்தாய் தெரியவில்லை,
இடை வெளிகளுக்கு அவசியமில்லாத
இரவுகள் வரும் வரையும்,
பகல்களில் நானாக இருக்கிற பூனையை
அறிந்து கொள்ளாமல் இருப்பதுதான் முறை
அவளும் அவளை அறிந்த நீங்களும்,
யாருமற்ற பகல்களில் நான் பூனையாகுவது குறித்து
இப்பொழுதே எழுதி விடுகிறேன்,
பூனைகளின் உலகம் என்னை ஏற்றுக்கொள்கையில்
என்னை ஒரு பூனையாகவே ஏற்றுக்கொள்ளகூடும்...
அவளும் நீங்களும்!

__________________________________________


புதிர் நிறைந்த பழைய பூனைகள்
அங்கீகாரங்களற்று மாண்டு போக,
ஆளுமைகள் கொண்ட பூனைகள்
அடையாளமிழக்கத் தொடங்கியிருக்கிறது,
சிக்கல்கள் நிறைந்ததாய் இருக்கிற பூனைகளின் உலகில்
வீரியமுள்ளவைகளாய் அறிமுகமாகியிருக்கின்றன
சில புதிய பூனைகள்,
அவைகளோடு பழகுதல்
அற்புதமான அனுபவமாய் இருக்கிறது,

இன்னொன்று...

உலகின் மிக அழகான பூனைகளின் சாயல்களில் இருக்கிற
அவளை பிரிந்ததிலிருந்து,
நானொரு பூனையாகிக் கொண்டிருப்பதாய் நான் சொல்வதை
நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்றாலும்
நானொரு பூனையாகுவதென்கிற முடிவில் இருக்கிறேன்,
ஏனெனில் பூனைகளின் ஊலகம் விசித்திரங்களால்
ஆனதென்றாலும் புரிதல்கள் நிறைந்தது,
பூனையாகுதல் ஒரு வரம்
பூனைகளை அறிதல் ஒரு தவம்!



பின்குறிப்பு:

\\
பூனைகள் பற்றி குறிப்புகள் எழுதப்போனால் இது நீங்கள் படிக்க முடியாத அளவுக்கு நீளமான பதிவாகக்கூடிய பிரச்சனை இருப்பதால்,அவற்றை இயன்றவரை சுருக்கி எழுதக்கூடியதாய் என் மனோநிலை இருக்கையில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

\\
தொடரும்...