Thursday, January 5, 2012

2011- போன காலம்.

இரண்டாயிரத்து பதினொன்று விரைவாக முடிந்து விட்டதென இப்பொழுது தோன்றுகிறது. காலம் அதன் பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறது. பெரிய மாற்றங்களை எதிர்பார்த்திருந்த கடந்த வருடம் சில விசயங்களை நடத்தியிருக்கிறது. இருந்தும் காலத்தின் போக்கில் அவை பெரிதாக தெரியவில்லை! என்னைப்பொறுத்தவரையில் முக்கியமானதொரு மாற்றமுள்ள ஒரு முடிவை கடந்த வருடத்தின் இறுதியில் எடுத்திருக்கிறேன். அந்த முடிவை தொடர்ந்தும் செயல்படுத்துதல் எவ்வளவுக்கு சாத்தியம் என்பதை காலத்திடம் கொடுத்துவிடலாம், இப்போதைக்கு இலகுவாயிருக்க முடிந்தால் அது பெரும்கொடை.


புது மருமகள்.



போன நத்தாருக்கு கிடைத்த பரிசு இது இந்த வருடத்துக்கான முதல் சந்தோசங்களை இவள் கொண்டு வந்திருக்கிறாள்.எனக்கு நல்ல நட்பாக இவள் வரக்கூடும்.


நான் வாசிக்கிறது கடும் ஸ்லோ என்று எனக்குத்தெரிந்தாலும் சமயங்களில் எனக்கே அரியண்டம்பிடிக்கிற அளவுக்கு இருக்கிறது வாசிப்பு. ஒரு புத்தகத்தை ஒரு மாதம் வாசிச்சால் எப்படி விளங்கும். இரவுக்கு முன்பு வருவது மாலை இப்பொழுதுதான் படித்துக்கொண்டிருக்கிறேன். ஆதவனை வாசிக்கிற பொழுதுகளில் பாலச்சந்தர் படங்கள் நினைவுக்கு வராமல் விடுவதில்லை. ஆதவன் எழுதிப்பார்த்த மனிதர்களிலும் சிக்கலான மனிதர்கள்தான் இன்றைக்கிருக்கிற உலகமயமாகிய இந்திய மேல்நடுத்தர வர்க்கத்தில் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.





06.12.1944 - 17.11.2011

போன வருசம் எனக்கு கொடுத்திருந்த தீராத சாபம் இது. கிட்டத்தட்ட 67 வருசம் இருந்த அப்பரோடு கடைசி நேரங்களில் இருக்க முடியாத ஒற்றை மகனாக நானிருந்தேன்.

அப்பாவைக்குறித்து என்னால் எழுத முடியாதவைகளை எழுத முயன்றுகொண்டிருக்கிறேன் ஒரு மாதத்திற்குள் எழுதிவிடு என்றெல்லாம் என் மனதுக்கு சொல்ல முடியவில்லை. ஏறக்குறைய அறுபத்தேழு வருசம் இருந்த அப்பாவை ஏதோ எழுதிக்கொடு என்று எழுதுவதற்கு இது வெறும் குறிப்பில்லையே,நான் எழுதிப்பார்க்க வேண்டிய ஒரு உண்மையாய் இது இருக்கிறது, உண்மைகளை அவ்வளவு சாதாரணமாக எழுதிவிடவும்முடிவதில்லை.

இதை இங்கே எழுதவே கூடாதென்றிருந்தேன் ஆனால் 2011 இல் என்ன நடந்தது என்று மீட்டுப்பார்க்கையில் என்னை அழுத்துகிற ஒரே விசயம் இதுவாகத்தான் இருக்கிறது. இந்தப்பாரத்தை இனி எப்பொழுதும் தவிர்க்கவும் முடியாது.


இன்னுமொரு சம்பவம்.

நினைத்ததை விட வேகமாக போயிருந்த இரண்டாயிரத்து பதினொன்றின் முற்பகுதியில் ஒரு சின்னப்றவை குறுக்கிட்டிருந்தது. அதற்கான இளைப்பாறுதலின் கிளை என்னிடமிருப்பதாகவும் என்னுடைய கிளைகள் எப்பொழுதும் இலகுவாக இருப்பதாகவும் அந்தப்பறவை சொல்லிப்போயிற்று. கூடவே நான் இளைப்பாறுதலுக்கான கிளைதானே ஒழிய தங்குதலுக்கான கூடாக முடியாதென்கிற துயரக்குறிப்பை எனக்கு விட்டுப்போன அந்தப்பறவை சொந்த வானத்திலிருந்தும் பிரிந்து வேறொரு வானத்தில் அந்நிய நிலத்தின் பறவையாக வாழ்ந்து கொண்டிருந்தது.

பறவைகளின் மீது இயல்பாகவே எனக்கிருந்த நெகிழ்வு இந்தப்பறவையை துரத்தவோ இருக்கச்சொல்லவோ இடம்தரவில்லை. பறவைகள் வருவதும் போவதும் கானகத்து மரங்களுக்கு வழமைதானே; இடையில் வந்து போகிற பறவைகளுக்கு நாம் என்ன சொல்ல முடியும். அத்தோடு எனது காத்திருப்பெல்லாம் வேரை அசைக்கும் புயலுக்கான வருகைதானே.



நான் பார்த்த தமிழ் படங்களில் எனக்கு சொல்லிக்கொள்ளக்கூடியவை என்றால் ஹிந்திப்படங்களை பிறகு சொல்கிறேன்.

ஆடுகளம்
மௌனகுரு
எங்கேயும் எப்போதும்
மைதானம்
அவன் இவன்
வர்ணம்.





இப்போதைக்கு இவ்வளவுதான் நினைவிருக்கு. 2011 இல் தமிழ்படங்கள் பார்த்தது குறைவுதான். மற்றும்படி ஜெப்பானிய படங்களின் மீதான பிடிப்பை அதிகரித்திருக்கிறது Departures. என்னவொரு திரைமொழி அவர்களுடையது. வேலையே செய்யாமல் சுளையாக சம்பளத்தை எதிர்பார்க்கிற சவுதிகள் ஜெப்பானியர்களை இயந்திரங்கள் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். ஜெப்பானியர்களைப்போல நமக்கு எல்லாக்கணங்களையும் வாழ்ந்துவிடத்தெரிவதில்லை என்று தோன்றுவதுண்டு, எல்லாவற்றையும் நேர்த்தியாகச் செய்கிற பக்குவம் அவர்களிடம் இருக்கிறது. உணர்வுகளை மட்டுமல்ல சாவைக்கூட பக்குவமாக எதிர்கொள்ள அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.





தமிழ் வலையுலகைப்பொறுத்த வரையில் facebook க்குக்கான வருடம் என்று சொல்லலாம் google buzz ஸில் இருந்ததிலும் நிறையப்பகிர்வுகள் ஃபேஸ்புக்கில் இருந்ததென நினைக்கிறேன், பஸ் குறிப்பிட்ட சில வட்டத்துக்குள் முடிந்துவிடுவதாகத்தான் இருந்தது. பஸ்ஸைக்காட்டிலும் ரிவிட்டர் மற்றும் பேஸ்புக் கணிசமான இயக்கத்தை கொண்டிருந்தன.

எல்லாப்பரப்பிலும் பரபரப்பாய் இயங்குவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்பது தமிழ் இணையச்சூழலுக்கு கிடைத்திருக்கிற அடுத்தகட்டம்தான் என்றாலும் இவை எவ்வளவு தூரத்துக்கு சாதகமான சாத்தியங்களை கொண்டிருக்கின்றன என்பது கேள்விக்குறிதான். பொழுது போக்காக இணையத்தில் இயங்குகிறவர்களிலும் தங்களுக்கென்று அடையாளங்களை வைத்திருக்கிறவர்களே அவரவர் தன்முனைப்புகளை தக்கவைப்பதில் மினக்கெடுவதுதான் சோகம். அவரவருக்கான புத்திசாலித்தனங்களை நிரூபிப்பதில் மூர்க்கமாக இயங்குகிறார்கள், தங்களை புத்திசீவிகளாக நம்பிக்கொண்டிருப்பவர்கள். இணையத்தில் இந்த வருடம் பெரிதும் அடிபட்டது ஷோபாசக்தியும் மாமல்லனும்தான். எம்.டி.எம் போன்றவர்களின் தொடாச்சியான இணைய இயங்குதல் இணைய வாசகர்களுக்கான புதிய வாய்ப்புகள். இந்த வருடம் இணையத்தில் அதிகம் சர்ச்சைக்குள்ளாகிய பெயர் ஷோபாசக்தி என்றும் சொல்லாம் ஷோபாவிடம் இருக்கிற மொழி லாவகம் புனைவுக்கான அசாதாரண சாத்தியங்களை கொண்டவை ஆனால் ஷோபா தக்கவைத்துக்கொள்ள விரும்புகிற பிம்பமும் சறுக்கல்களாக அங்கங்கே விட்டுவிடுகிற அறிக்கைகளும் அவருக்கு நிறைய எதிரிகளை கொண்டு வந்துவிடுகிறது.



இதை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது பார்த்த படம் My Friend Pinto. அவருடைய அம்மாவின் முகச்சாயல்களில் இருக்கிற Prateik மற்றும் பலர் நடித்திருக்கிற இந்தப்படம் இன்னும் திருத்தமாக வந்திருக்கக்கூடியது. எல்லோருக்கும் சந்தோசங்களை கொண்டு வரக்கூடிய ஒருவனாக இருப்பது எவ்வளவு சிரமம்.மனிதர்களை நம்புவது தனித்துவமான அசாதாரணமான இயல்பாகிவிட்டிருக்கிற உலகம்தான் யதார்த்தத்தில் இருக்கிறது.அப்படி ஒருவனை காண்பது எல்லோருக்கும் அதிசயம்தான் நடைமுறைகள் என்கிற மாயைக்குள் சுழல்கிற மனிதர்களுக்கு.


என்னிடம் சில சிக்கல்கள் இருக்கலாம். நிலைகொள்ளாதிருத்தல் பெரிய அசௌகரியங்களை தருவதாய் இருக்கிறது. நானொரு ஒரு பயணம் போகலாம் என்பது மட்டும்தான் என்னிடமிருக்கிற அடுத்த கட்டம். பயணத்துக்கு காத்திருக்கும் இந்த நாட்களை பிடித்திருக்கிறது. இலங்கையில் இதுவரை அறியாத தெருக்களில் நடக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கிறேன்.முகமறியாத மனிதனொருவனின் நடைபாதை தூக்கங்களுக்கு சாத்தியமான இலங்கை இருக்குமென்பது கொஞ்சம் கூடுதலான நம்பிக்கைதான் இருந்தாலும் இந்தப்பயணத்தை தவிர்க்கவே முடியாது.புதிய சாலைகளின் சுவாரஸ்யம் வாழ்வின் உன்னதமான தருணங்களாய் இருக்கக்கூடும்.


இதை எழுதத்தொடங்கி மூன்று நாட்களாயிற்று எழுதி முடிக்கவே இயலவில்லை. தொந்தரவு செய்கிற வேலையும் ஒன்றாத மனமும் என இந்த சுயபுலம்பல்களை எழுதி முடிக்க இயலவில்லை இதை இன்னும் விரிவாக எழுதி அதை ஏன் இணையத்தில் வைக்கவேண்டும் என்பதில் நான் இப்படியே பகிர்ந்து விடுகிறேன்.

Friday, December 23, 2011

முடிவு.


எழுதிக்கொண்டிருத்தல் என்பது தேவையானதாக இருக்க முடியும் என்று இப்பொழுது தோன்றுகிறது. இதனை இப்பொழுதே இங்கே எழுதி வைப்பது திருப்தியாயிருக்கிறது. என்னுடைய தற்போதைய எதையாவது செய் என்பதாக இருக்கிற மனோநிலையின் காரணங்களுள் இதுவுமொன்றென நான் நம்புகிறேன். எழுதிக்கடக்க வேண்டிய சில விசயங்கள் இருக்கிறது, இது ஒருவகையில் ஒரு வியாதியைப்போலும்,அதேநேரம் சுய மோகத்தைபோலவும் இருக்கிறது.

இத்தனை வருடங்கள் இங்கே இருந்தேன் என்பதற்கு என்னிடம் ஏதோ இருப்பதாக நான் நம்பிக்கொண்டிருந்த எல்லா சேமிப்புகளும் எழுதிவைத்த எல்லா சொற்களும் இனி திரும்ப பெறமுடியாத படிக்கு அழிந்து போயிற்று. கிட்டத்தட்ட ஒரு நாவலைப்போல எழுதியிருந்த என்னுடைய தினக்குறிப்புகள் எல்லாம் போயிற்று. எவ்வளவு சொற்கள், எவ்வளவு புகைப்படங்கள், எவ்வளவு தகவல்கள, எவ்வளவு ஒலி ஒளிப்பதிவுகள்,எல்லாம் அந்தந்த பொழுதுகளில் இருந்த மனோநிலை,வாழ்நிலை,சூழல் என எல்லாவற்றையும் குறித்து வைத்திருந்தேன் கிட்டத்தட்ட இத்தனை வருட வாழ்வின் ஆதாரச்செய்திகள் இந்த தொகுப்புக்குள் இருந்திருக்கிறது.எல்லாவற்றையும் இழந்து போனேன். இதிலென்ன இருக்கிறது அவனவன் வாழ்வையே இழந்துவிட்டு வந்திருக்கிறான் உனக்கென்ன பிரச்சனை என்று மனம் சொன்னாலும் யுத்தமும் திணித்தலும் நம் சனங்களிடம் வரலாற்றை, அடையாளங்களை இழக்கப்பண்ணியிருக்கிறது அதன் வலி பெரியது கொடியது அதை இங்கே பொருத்தவே முடியாது. அடுத்தவர்களுக்கு அது அனுபவிக்காமல் தெரிவதில்லை.இது என்னுடைய கவனமின்மைதான் என்றாலும் இழப்பு இழப்புத்தானே.


மிகமுக்கியமான தருணமொன்றுக்கு கூட ஊரில் இருக்க முடியாதுபோன நிலையில் இருந்தேன், இதுவெனக்கு தீராத துயரொன்றாய் எப்பொழுதும் இருக்கலாம். மொத்தமாய் மிக மோசமான நிலையிலிருந்து திரும்பவும் பயணம் பண்ண தொடங்கியிருக்கிறேன். குறைந்த பட்ச திருப்தியைக்கூட தராத இந்தப் பாலைநிலத்தின கடைசிப்பொழுதுகள் இதுவாயிருக்கலாம்.

இனி எனக்கான முடிவுகளில் உங்களுடைய வாழ்வு தலையிட முடியாது என்பது இத்தால் அறியத்தரப்படுகிறது.

Thursday, November 17, 2011

கடிதங்கள் - சரியாய் எழுதப்படாத உண்மைகள்.

உயிர் நிரப்புகிற கூடுகள்.

இடைவெளிகளோடானா சில வருடங்களுக்கு பிறகும்
இருள் வழிகிற பாலை வனத்து வானத்தில்
அடர் மேகமென படர்கிறதுன் உருவம்...
நட்சத்திரங்கள் மிதக்கிற செங்கடலின் கூரையில்
பெரு நிழலென தொடர்கிற குளிர்காற்றில்
அமிழ்ந்து போயிருக்கிறது மௌனம்
பொழுதுகள் நீள்கிற பெருவெளியில் இருக்கிற
உயிரை நிரப்புவதற்கு கடல் கடந்து வரக்கூடும்
ஆகக்குறைந்தது நீ அழாமல் இருக்கிறாய் என்றோ
ஆகக்கூடியதாய் உன் பிரிவறிவிக்கிறதாகவோ...
செய்திகள் சுமந்த கடிதக்கூடுகள்...!


முன்னெப்பொழுதோ எழுதிய இந்த வரிகளை படித்தபொழுது எழுதிய,திருத்தி மாற்றப்படக்கூடிய பகிர்வு.

___________________________________________________

எனக்கு எப்பொழுதும் கடிதங்களின் மீது அதிகமான பிடிப்பிருக்கிறது.

இப்பொழுதும் கடிதங்கள் அவை யாருடையதாய் இருந்தாலும் அவற்றை சேர்த்து வைத்திருக்கிறேன். கடிதங்கள் அழிய விடக்கூடாதவை என்பது என் நெடுநாளைய எண்ணப்பாடு. கடிதங்களின் அருமை மறந்து போய்விட்டிருக்கிற மனங்கள்தான் பெரும்பாலும் இப்பொழுது இருக்கிறது. நான் அறிய கடிதங்களுக்காக காத்திருந்தவர்கள் கூட அவற்றை கணக்கெடுக்காமல் விட்டிருக்கிற தன்மையை கண்டிருக்கிறேன்.இந்த கொடும்பாலையின் கடுந்துயரங்களில் இதுவும் ஒன்று. முன்பெல்லாம் சவுதி கடிதங்களுக்காக காவலிருந்து வாசிக்கிற அஜிநபிகளை கொண்டிருந்தது. 'பக்கம் பக்கமாக எழுதித்தள்ளி இருக்கிறோம்' என்று பல வருடங்களாக இருக்கிற பழையவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் பெரும்பாலானவர்களிடம் அதில் ஒரு கடிதம் கூட மீதமில்லை என்பதுதான் சோகம். நான் இங்கே வந்த பொழுது கடிதம் என்பது ஊருக்கு போகிறவர்களிடம் மட்டும் கொடுத்துவிடும் ஒரு தேவையற்ற அவசரமற்ற விசயமாகவே மாறியிருந்தது. எனக்கு மாதம் நாலைந்து கடிதம் வருவதையும் நான் எப்பொழுதும் கடிதங்களுக்காக காத்திருப்பதையும் விசித்திரமாக பார்த்தவர்களும் இருக்கிறார்கள், பிறகு எனக்கும் கடிதங்கள் வராமல் போயிற்று என்றாலும் கடிதங்கள் மீதான நம்புதல் எனக்கு மாறவேயில்லை, கடிதங்களை நான் எழுதாமல் விட்டதுமில்லை.அவை பெரும் ஆசுவாசமாயிருக்கின்றன என்பதில் எந்த மாற்றமும் என்னிடமில்லை.

கடிதங்கள் போகவும் வரவும் அதிக காலம் எடுத்தக்கொண்டிருந்த ஆரம்ப காலங்களில் எவ்வளவு எதிர்பார்ப்புகளோடு இருந்திருப்பார்கள் இந்த மக்கள்; மிக மோசமான சம்பளமும் தொலைபேசி வசதிகள் கிடையாத அமைவிடங்களும் என கடிதங்கள் மீதான பற்றுதல் அதிகமாயிருந்த காலம் அது! இரவிரவாக கடிதம் எழுதி அதை வெகு கவனமாக அனுப்பி என இருந்த மனிதர்களை கடந்து வந்திருக்கிறோம். பிறகு கடிதப்போக்குவரத்து விரைவாகிப்போக எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதித்தள்ளி தொடர்ச்சியான தொடர்பிலிருந்த உறவுகள் நிறையவே இருக்கிறது. கடிதங்கள் மூலம் நெருங்கியிருந்த மனங்களைப்போல இப்பொழுது மலிந்திருக்கும் இணையமும் கைத்தொலைபேசிகளும் தருவதில்லை. அவை புரிதலை, நிதானத்தை கணிசமாக குறைத்திருக்கிறதென்றே நம்பத்தோன்றுகிறது.

பிரிவின் துயரை, தனிமையின் வெறுமையை சீரற்ற நாளாந்தங்களை சுகமற்ற சூழலை நாட்களை எழுதியே கடந்த, உணர்ந்த பல உறவுகள் இருக்கிறது சொல்ல முடியாதவற்றைக்கூட கடிதங்கள் மூலமாக சொல்ல முடிந்திருக்கலாம். அறிமுகம் மட்டுமே இருக்கிற பலரது நெருக்கத்துக்கு கடிதங்கள் உதவியிருக்கிறது. சந்திக்கிற தூரத்தில் இருக்கிற ஆட்கள் கூட கடிதங்கள் மூலமே நெருங்கியிருக்கிற கதைகளெல்லாம் இருக்கிறது. நானும் இப்படியான சில கடிதங்களை எழுதியிருக்கிறேன், ஒவ்வொரு நாளும் பார்க்கக்கூடியவர்தான் என்றாலும் கடிதங்கள் எழுதியிருக்கிறோம். அது ஒருவகையில் சுவாரஸ்யமும் நெருக்கமுமானதாய் இருந்தது. இன்னமும் அப்படியான கடிதங்கள் பலரிடம் இருக்கவும் கூடலாம்.


இந்த சந்தர்ப்பத்தில ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகிறது 'அப்பா கதைத்தது' என்று பெயரெழுதப்பட்ட கசட் ( Cassette ) ஒன்று எங்கள் வீட்டில் பல காலமாக இருந்தது.

அப்பருக்கு சரியான குரல்! அவர் கதைக்கிறது ஒரு தனி நடையோட இருக்கும், அனுபவிச்சு கதைக்கிற ஆள் அவர். கதைச்சது என்ன என்பது அவ்வளவாக நினைவில்லாவிட்டாலும் அந்த குரலில் இருந்த உற்சாகம் சந்தோசம் தனிமை சோகம் என இயல்பாக வெளிப்படையாக இருந்த அதன் உணர்வுகள்,பாவங்கள் எல்லாம் எனக்கு அந்த முகத்தை மனதுக்குள் கொண்டு வரக்கூடிய அளவுக்கு இப்பொழுதும் நினைவிருக்கிறது. கம்பீரமான அந்தக்குரல் அறுந்து,உடைந்து சவுதியிலிருந்து அப்பர் வந்தபொழுது எனக்கு பத்து வயதுதான் இருக்கும். அதற்கு பிறகு அப்பரோடு நான் பேசியதே மிகக்குறைவு கடந்த முறை ஊருக்கு போயிருந்த பொழுது பழைய கதைகளை விடுபட்ட குரலில் சொல்லச்சொல்ல கேட்டுக் கொண்டிருந்தேன்


அது ஒரு பின்மதிய நேரம் எனக்கு குடிக்க வேண்டும் போலிருந்தது,அப்பாவிடம் கேட்டேன் தனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்(அப்பா முன்பெல்லாம் குடியை அனுபவிக்கத்தெரிந்த ஆள்). உண்மையில் நான் இதை இவ்வளவு தாமதமாக கேட்டிருக்க கூடாது. நான் பெரும்பாலும் அப்பரை குரல் வழியாகவே நினைவில் வைத்திருக்கிறேன் என்பது இப்பொழுது தோன்றுகிறது.நான் செய்யாததும் நிறைய இருக்கிறது.

இப்படி கசட்டுகளில் கதைத்து பதிந்து அவற்றை அனுப்பிய காலமும் இருக்கிறது இது பெரும்பாலும் மத்திய கிழக்கில் இருந்தவர்களுக்கான அனுபவமாகத்தான் இருக்க முடியும் மிக மட்டமான சம்பளத்தொகையும் தொலைபேசி கட்டணங்களின் அளவும் அதுக்கான முக்கிய காரணங்களாக இருக்கலாம்.



என்னைப்பொறுத்த வரையில் கடிதங்களுக்கு வடிவம் அவசியமற்றது அவை துண்டு துண்டாகவோ சின்னக்குறிப்புகளாகவோ எழுத்துப்பிழைகளுடனோ கசங்கியோ கிழிந்தோ எப்படியும் இருக்கலாம். எதையும் எழுதாமல் கூட அனுப்பப்பட்ட கடிதங்களும் இருக்கிறது. "என்ன செய்யப்போறியள்" என்று மட்டும் எழுதி கையொப்பமிட்டிருந்த கறுப்பியின் கடிதம் எனக்குள் நிரப்பிய சொற்களை அதன் சுமையை என்னால் இதுவரையும் எழுதிவிட முடியாத அந்த கடிதத்தின் முழுமைய எவ்வளவு முயன்றும் எனக்கு திருப்தியான பதிலை எழுதிவிட முடியாத (உறங்க விடாத இரவுகளை கொடுத்த மோசமான போதையில் இருந்த இருபத்தொரு நாட்கள் அவை) அந்த கடிதத்தின் சாயலை இதுவரை வேறெந்த கடிதமும் அடையவில்லை. இது வரையுமான என் வாழ்வின் ஆகச்சிறந்த கடிதங்களை அவள்தான் எழுதியிருக்கிறாள்.

பகிர்தலுக்கான அத்தனை சாத்தியங்களும் கொண்டிருந்த, கொண்டிருக்கிற சாதனம் கைப்பட எழுதிய கடிதங்களாகத்தான் இருக்க முடியும் குரல் வழி சொல்ல முடியாத பலதும் கூட, எழுதிவிட தெரிந்த குணமும் அவற்றை புரிந்து கொள்கிற மனமும் முன்பிருந்தது. அவரவருக்கென்று ஒரு மொழி எல்லோரிடமும் இருந்தது. இப்பொழுது எவ்வளவுதான் பேச முடிந்தாலும் அளந்தே பேசுகிறதும் எச்சரிக்கை உணர்வுகளோடுட கதைக்கப்பழகி விட்டிருக்கிறதுமான மிகச்சுருங்கிய மனங்களே இருக்கிறதாய் இணையமெங்கும் பரவிக்கிடக்கிற அனுபவங்களில் காணக்கிடைக்கிற மனிதர்கள் சாட்சியாகிறார்கள்.


கடிதங்கள் எப்பொழுதும் அணுக்கமானவை.அவை நமக்கு தேவையான உறவுகளில் பொருந்தும் தன்மையுடையவை நண்பனாக, அம்மாவாக, காதலியாக,எதிரியாக, முகம் தெரியாத யாரோவாக, கடவுளாக, வன்மத்தை தீர்க்கிற அடிமையாக, முன்பொரு முறை கலந்திருந்த பெண்ணொருத்தியாக என அத்தனை பரிமாணங்களிலும் பொருந்தக்கூடியவை. கடிதங்கள் கட்டாயம் அனுப்பட்டே ஆகவேண்டும் என்பதுமல்ல,பதில் வந்தே ஆகவேண்டும் என்பதும் இல்லை ஆனால் எழுதப்படவேண்டியவை பாதுகாக்கப்பட வேண்டியவை.


இன்றைக்கும் ஒரு அன்பை கடிதத்தில் பகிர்வதில் இருக்கிற அலாதியும் உணர்வும் தருகிற அனுபவம் தனி. அதுவும் வாழ்வின் முதல் காதல் கடிதங்கள் தருகிற அனுபவம் இன்றைக்கு பலர் இழந்து போகிற ஒன்றாகியிருக்கிறது.என்னுடைய முதல் காதல் கடிதம் என்று நான் சொல்லக்கூடிய ஒன்றும் இப்பொழுது என்னிடமில்லை இந்த விசயத்தில் கறுப்பிக்கும் எனக்கும் ஒரு வழக்கிருக்கிறது.கறுப்பிக்கு கடிதம் எழுதுவது இயல்பாக வரும் ஒரு கலை வெந்தயத்தை அடுக்கி வைத்தது போல கொஞ்சம் சரிவான சின்னச்சின்ன எழுத்துக்கள் அவளுடையது.எழுதுகிற அவளை எழுதுகிற சூழலை நிகழாக கொண்டு வந்துவிடுகிற நடை அது. கடிதத்துக்குள்ளே அங்கங்கே குறுக்கிடுகிற குணம் அவளிடமிருந்துதான் எனக்கு வந்திருக்கலாம்.

வாசித்துக்கொண்டு போகையில் "கொஞ்சம் பொறுங்கோ கை வேர்க்குது" என்றெழுதியிருப்பாள் ஊன்றிவைத்திருக்கிற இடதுகையும்,பின்னிவிட்டிருக்கிற கூந்தல் சரியும் நெஞ்சும், குவிந்திருக்கிற வலது கை-விரல்களும் கொஞ்சமாய் வியர்திருக்கிற அவளும் என கிறங்கிப்போகிற அந்த அறையின் வாசனையை கடிதத்துக்குள் கொண்டு வர ஒரே வசனம் போதுமாயிருக்கும்.சில நேரங்களில் ஒரு கையை ஊன்றி சின்னப்பிள்ளைகள் போல குழுமாடு பிடிச்சுக்கொண்டு அவள் எழுதுகிற விதமே நாள் முழுக்க பார்க்ககூடிய நளினமாயிருக்கும்


"கடிதம் இப்பதான் அரைவாசி ஒரு தேத்தண்ணியை போட்டுக்கொண்டு வாங்கோ சேர்ந்திருந்து வாசிக்கலாம்" என்றெழுதியிருப்பாள்: என்னை வேண்டுமென்றே சீண்டுகிற தருணங்களில் ஒரு மாதிரியாகச் சுழிக்கிற உதடுகளும் சிரிக்கிற கன்னங்களும் எழுதமுடியாத அழகில் அசைகிற புருவங்களும் நினைவுக்கு வர... "போடி கறுப்பியென" வாய்விட்டே சொல்லிவிடுவேன்.


"அந்த நைட்டிதான் போட்டிருக்கிறன், மேசையிலை சாஞ்சிருந்து எழுதிக்கொண்டிருக்கிறன்" என்றெழுதி என்னை திணறடிக்கிற வேலையை வெகு சாதாரணமாக எழுதிவிட்டு, ம்ம்... போதும் போதும் கனக்க கற்பனை பண்ண வேண்டாமென அடுத்த வரியிலேயே என்னை திரும்ப கடிதத்துக்கு கொண்டுவரும் வேலையையும் செய்திருப்பாள்.

ஒவ்வொரு கடிதத்திலும் என்னை தனக்கு இன்னும், இன்னும் நெருக்கமாக உணாத்துகிற கடிதங்கள் அவளுடையது.நான் உரிமையுள்ளவன் என்றவள் எழுதாமல் எழுதுகிற கடிதங்கள் அவை. அவளுடைய எல்லா தேவைகளும் என்னைக்குறித்தே இருந்தன அதுவே அவள் இனியெப்பொழுதும் கடிதங்கள் எழுதாதவளாக அகிப்போகவும் காரணமாயிருந்தது.



கடந்து வந்த கடிதங்கள் காலத்தின் பதிவுகள்தான் அவை பாடல்களைப்போல புகைப்படங்களைப்போல ஒரு பெரிய நிகழை அதன் காலத்தை வாழ்வின் உயிர்ப்பான தருணங்களை அனுபவிக்கத்தவறிய கணங்களை உணரத்தவறிய விசயங்களை கொண்டு வந்து தருகிற சாட்சிகளாயிருக்கின்றன. அது யார் யாருக்கெழுதிய கடிதங்கள் என்றாலும் கடிதங்கள் காவாந்து பண்ணவேண்டியவை கைவிடப்பட்ட கடிதங்களின் துயரம் பெரியது. யாருக்கும் அவசியமற்ற கடிதம் என்ற ஒன்றை யாராலும் எழுதிவிட முடியாது யாராலும் எழுதிவிட முடியாது தேவையற்றவை என தவிர்க்கப்படுகிற கடிதங்கள் கூட தொலைக்கப்பட வேண்டியவை அல்ல. தீர்ந்து போன காலத்தின் தீராத சாட்சியங்களாய் கடிதங்கள் இருக்கின்றன.


#
என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு லெட்டர்,
கடிதம் எழுத தேவையானதெல்லாம் ஒரு பெயர்மட்டும்தான் - கற்றது தமிழ்.


#
எழுதிய ஒரே கடிதத்திலும் உன்னை நினைக்கிற நேரங்கள் அந்தரங்கம் நிரம்பியவை என்றெழுதிய பேரின்ப நாயகியின் கலைத்துப்போட்ட எழுத்துக்களால் ஆன கடிதமொன்று இன்னமும் இருக்கிறது.இதை அவள் வேறொரு விதமாக எழுதியிருந்தாள் அது ரகசியம்.


#
எல்லாவிதத்திலும் உங்களுக்கு பிடித்தவளாகவே இருக்க வேண்டும் என்பது என் ஆசை கண்ணா, இதை ஆசை என்பதா தேவை என்பதா anyone. உன்னை முழுவதுமாக நான் நிரம்பவேண்டும், எந்த தடைகளுமில்லாமல் சுதந்திரமாய் உன் ஆக்கினைகளை அனுபவிக்க வேண்டும் - திருகோணமலையில் இருக்கும்பொழுது கறுப்பி எழுதிய கடிதத்திலிருந்து.


#
தம்பி உனக்கு வயது காணும் நீ சின்னப்பிள்ளை இல்லை - அம்மா.


_______________________________________________________________


என்னுடைய வாசனை வருகிற உன் கடிதங்களை வாங்கி வைத்திருந்த
உன்பச்சை நிற பெட்டியை என்ன செய்தாய்
எரித்து விட்டதாக சொன்ன எல்லா கடிதங்களையம் நினைவுக்குள் வைத்திருக்கிறாயா
சாம்பலாகிய கடிதங்கள் ஒரு போதும் நினைவுகளை கரைத்து விடுவதில்லை

நமக்கிடையே உரையாடல் இல்லாதிருக்கலாம்
எனக்கும் உனக்கும் இடையில் எல்லாச் சொற்களும் தீர்ந்து போயிருக்கலாம்

இருந்தும்...

வேறுபக்கம் திரும்புகிற உனது பார்வைகளை சரிசெய்யவோ
எதிர்ப்படுகிற உன் அருகாமையை இலகுவாக்கவோ
இருவருக்குமான அந்தரத்தை தவிர்க்கவோ
இடைவெளியின் நிச்சயத்தை உறுதிப்படுத்தவோ
கடைசிக் கடிதமென்றொன்றை எழுதிவிடு.

இதுவே கடைசிக்கடிதமென்றொரு கதையை
இதுவே கடைசி சந்திப்பென்றொரு நிகழ்வை
நமக்குள் நிகழ்த்த காலத்தை அனுமதி

கடிதங்களை கைவிடுதலும் பிரியங்களை கடந்து போதலும்
செய்து பார்க்க்கூடியவை என்பதில் ஒரு மாற்றுமில்லை அவை
கைவிடுபவர்களை விட்டு நீங்குவதில்லை
என்பதிலும் ஒரு மாற்றமுமில்லை.
___________________________________________


சம்பந்தப்பட்ட குறிப்பு:

எண்பதுகளில் பிறந்தவர்கள் வரைக்குமே கடிதங்களும் கசட்டுகளும் ( Cassette ) உச்ச பாவனையில் இருந்திருக்கிறது. இப்படி நாமே மறந்து போன பழைய விசயங்கள், நான் சேமித்து வைத்திருந்த இவைகள் எல்லாம் பலதும் கைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. என்னுடைய வாழ்வியலிலிருந்தும் என்னை தூர வைத்திருக்கிற காலத்தை சபிப்பதில் என்ன நடந்துவிடப்போகிறது இந்த மிகமோசமான நடைமுறை வாழ்வென்கிற சமூக அமைப்பில்.

______________________________________________

இதனை பகிர்வதற்கான எந்த முகாந்திரமும் சமீபத்தில் நிகழவில்லை என்றாலும் பல நாட்களாக கிடப்பிலிருந்த இதனை பகிர்வதற்கு கீழே இருக்கிற குறிப்பு காரணமாயிருக்கலாம்.

*
சரிசெய்யப்படாமல் கிடந்த மீயுருவை மாற்றிப்பார்த்திருக்கிறேன் ஒழுங்கற்றவைகளின் மீதான ஆர்வம் ஒருபோதும் குறைவதில்லை நமக்கு, இருந்தாலும் தளத்தை சரியாக திறக்க முடியாமல் இருந்த சிரமத்திற்காக இப்படி மாற்றியிருக்கிறேன்.

*
இதை மாற்றித்தரும்படி குண்டம்மாவை கேட்டிருந்தேன் தனக்கு தெரியேல்லை எண்டு சிணுங்கினாள். அது என்னுடைய கடவுச்சொல்லை பயன்படுத்துவதன் அசௌகரியத்தை தவிர்த்தல் என்பது எனக்குத்தெரிந்தாலும் அவளிடம் தனகுவதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தானே செயகிறது- அப்ப பாருங்களன்.

Wednesday, October 26, 2011

தீபாவளி - தொடர்பற்ற சில குறிப்புகள்.

பெரும்பாலும் மக்கி, மறந்து கொண்டிருக்கிற மூளையிலிருந்து அவசரமான பொழுதொன்றில் தட்டச்சு செய்யப்பட்ட சீரற்ற இந்த குறிப்புகளை வாசிக்கப்போகும் உங்களுக்கு நன்றி.

______________________________________

எல்லா தீபாவளிக்கும் எழுத நினைத்த விடுபட்டுப் போனவைகள்தான் அதிகம். இந்த முறையும் அது போலவே,இருந்தும் இந்த சின்னக்குறிப்பைச்சரி எழுத ஒண்ண காலம் கனிந்திருக்கிறது.


காற்சட்டை காலங்களில் இருந்து நினைவிருக்கிற தீபாவளியை இனி நினைவின் அடுக்குகளில் இருந்து தேடி எழுதுவதற்குள் அடுத்த தீபாவளி வந்தாலும் வந்துவிடலாம் ஆக இதை எழுதிக்கிக்கொண்டிருக்கும் பொழுது என்னென்ன எழுத வருகிறதோ அதையெல்லாம் தீபாவளிக்கான குறிப்பாக எழுதிவிடலாம்.


#
சின்ன வயதிலிருந்தே நான் ஆசைப்பட்டது போல பண்டிகைகள் எனக்கு அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை என்றுதான் இப்பொழுது எனக்கு நினைவிருக்கிறது. ஆனாலும் பண்டிகைகளுக்கு முந்திய சில நாட்களில் இருந்தே வருகிற இந்த கிளர்வான நாட்களும் பரபரப்பும் அனுபவிக்க அலாதியானவை. பண்டிகைகளிலும் இந்த தயார்படுத்தலில் இருக்கிற மனங்களையும் ,ஊரையும், மக்களையும் உள்வாங்குதல் அலாதியானது அது ஒவ்வொரு வயதிற்கும் ஒவ்வொரு விசயங்களை கவனிக்கிறதாக இருக்கும் அப்படி தயாராகத் தொடங்குகிற பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று.


#
புது உடுப்பு, பலகாரம்-விதம்விதமான சாப்பாடு, சொந்தக்காரர்கள், வெடி, பெடியள், விளையாட்டு:கிரிக்கெட் மச், தொலைக்காட்சி விசேட நிகழ்ச்சிகள், புதிய படங்கள், பொம்பிளைப்பிள்ளையளை பாக்க்வெண்டே ஊர் சுத்துறது, காதல், போதை,சீன் - என்று அந்தந்த வயதுக்கு அந்தந்த விசயங்களில் பண்டிகைகள் கடந்து போய்விடும். பெரும்பாலும் பதின்மத்தின் இறுதிகளில் இருந்து இருபதகளின் தொடக்கம் வரை படம் - பெடியள் - காதல் -கொண்டாட்டம் என்று கழிகிற பண்டிகைகள் இருபதுகளின் மீதங்களில் கொஞ்சம் பரபரப்பானதுபோன்ற ஒரு மாதிரியான பகல் பொழுதுகளையம் அல்லது சலிப்பையும் போதை மிகுந்த முன்னிரவுப் பொழுதுகளையும் கொண்டு வரத்தொடங்கியது.


#
காதல் மிகுந்த தீபாவளியை நானும் கடந்து வந்திருக்கலாம் எனிலும் இப்பொழுது எழுத அப்படியொன்றும் நினைவுக்கு வரவில்லை. நினைவிலிருப்பதெல்லாம் நான் அவளை சந்திக்க் முடியாத அளவுக்கு போதையில் இருந்த சித்திரைப்பொங்கல்தான். பெரும்பாலும் கடுகடுப்பாகவே இருக்கும் பண்டிகைக்கு அடுத்த நாட்கள்.ஆனால் அந்த வருடப்பிறப்புக்கு அடுத்தநாள் அற்பதமானதாக இருந்தது. குடிக்கவேண்டாம் என்று கோபித்து,கெஞ்சி,அழுது, திட்டி என்று அன்பை வெவ்வேறு வடிவங்களில் நிகழ்த்திக்கொண்டிருந்தாள்; ஏதோவொரு கணத்தில் உடைந்து அழத்தொடங்கிய என்னை மார்புக்குள் ஏந்திக்கொண்டாள். நான் அவளை சமாளிக்க வேண்டியது மாறி அவள் என்னை சமாதானம் பண்ணிக்கொண்டிருந்தாள். மார்புக்குள் முகம் புதைப்பது இல்லாது போதலைப்போல அதுவொரு அதி உன்னதம்.

#
கமலா மாமி வீட்டை போறது எண்டுறது ஒரு கடமை மாதிரியே இருக்கும் சின்ன வயதில. உண்மைல நான் ஒரு நாளும் இவவை மாமி என்று கூப்பிட்ட நினைவே எனக்கில்லை அனாலும் மற்றையவர்களிடம் கதைக்கிற பொழுது கமலா-மாமி என்தான் கதைத்திருக்கிறேன். இவவுக்கு நாலைஞ்சு பொம்பிளைப்பிள்ளையள் இருந்தாலும் அவையள் எல்லாம் போன தலை முறை ஆக்கள் மாதிரிதான் எனக்கு தெரியும், அதோடு என்னுடைய வீடிருந்த இடமும் அவையளின்ரை வீடிருந்த இடமும் வேறை வேறை சூழல் எண்டுறதால எனக்கு அவையளோடை சரியா முகம் பார்க்கக்கூட நெருக்கம் இருந்ததில்லை முந்திய நாட்களில்(நெருக்கம் இருந்ததில்லை அல்லது அவர்கள் அந்த இடைவெளியை எப்பொழுதும் வைத்திருக்க் விரும்பினார்கள் என்றும் சொல்லலாம் )பின்னாளில் அதற்கான தெளிவும் இயல்பும் வந்ததன் பின்னர் அவர்களை காணவே முடியாத தூரத்திற்கு போயிருந்தார்கள். இப்பொழுது அவர்கள் எல்லோரும் கதைக்கவே முடியாத தூரத்தில் இருக்கிறார்கள். கமலா மாமிக்கு ஒரு மகன் இருந்தார் என்றுதான் எனக்கு தெரியும் அவரை கண்டதாக எனக்கு நினைவே இல்லாத நாட்களின் முன்பே அவர் கனடாவுக்குள்ளை குடியேறியிருந்தார் நான் கிட்டத்தட்ட இருபத்தைந்து பிறகு சவுதியிலிருந்து இதை தட்டச்சிக்கொண்டிருக்கிறேன்.


#
என்னுடைய பால்யம் சீனவெடிகளை கண்டிராத காலமாய்தான் இருந்தது. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணம் இவைகளுக்கு மூடிய கதவுகளை கொண்டிருந்தது. இதை படிக்கிற சிலருக்கு "வால்க்கட்டையில" வெடி அடிச்ச நினைவிருக்கலாம். இதை நான் மினக்கெட்டு இருந்து செய்திருக்கிறன். "படீர்" என பயங்கரமான சத்தத்தில வெடிக்கிற அளவுக்கு நெருப்புக்குச்சு மருந்து அடைஞ்சு வெடி அடிச்சிருக்கிறம். வால்கட்டை வெடிச்சு சன்னம் கூட பறந்திருக்கு. உண்மைல இந்த தொழில் நுட்பம் எல்லாம் சின்ன வயதிலேயே எங்களிடம் வந்திருக்கிற அளவுக்கு நாங்கள் இவைகளோடு பழக்கப்பட்டிருந்தோம்.


#
கிரிக்கெட் விளையாட தொடங்கியதன் பிறகு அனெகமான பண்டிகை நாட்கள் உள்ளுர் அணிகளின் பலப்பரீடசையாகத்தான் இருக்கும். சின்ன வயதில் ஒரு மச்சும் விடாமல் விளையாடி இருக்கிறேன். பிறகு எல்லா மச்சுக்கும் போயிருந்தாலும் முன்பைப்போல இருந்த ஆர்வம் இல்லாது போயிற்று. ஆரம்பகால கிரிக்கெட் எல்லோருமாக விளையாடுவதாய் இருந்தது. பிறகு அது தனித்தனியான ஆட்கள் விளையாடுவதாக மாறிற்று.




#
சண்டிவியில (அப்பல்லாம் சண்டிவி எண்டுதான் சொல்லுவம் இப்பதான் கனக்க சானல்)நிகழ்ச்சிகள் பாத்த்திருக்கிறோம். பண்டிகைகளுக்கு ஒரே இரவில் நாலு படம் பார்த்த காலம் போய், படம் பார்க்கிற பொறுமை இல்லாமல் போக பின்னர் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறோம். பிறகு விளம்பரங்கள் விசரைக்கிளப்புற தொலைக்காட்சியை பார்ப்பதே இல்லை என்றாகிற்று பண்டிகை நாட்களில் இங்கே வந்து ஒரு கட்டத்தில் தமிழ் சானல்கள் எதையும் பார்க்கவே முடியாத அளவில் இருந்திருக்கிறேன் இப்பொழுது zee aflam அந்த அரேபிய பெண்ணுக்காக.




Wiam Dhamani.

#
ராணுவ கனரக வாகனமொன்றோடு மோதிவிடாது தப்பித்த விபத்தோடு முடிந்து போன தீபாவளி அநியாயம். எங்கடை ஊரின் பொய்யான வழக்கங்களிலும்,மனிதர்களிலும் வறட்டுச் சரடுகளிலும் அன்றைக்கு பலமான கோபம் மற்றொரு முறையாக வந்திருந்ததென நினைக்கிறேன் குடித்திருக்க வேண்டிய இரவு அது.


#
குடிக்க பழகிய பின்னர் கொஞ்சம் சலிப்பானதாயும் பரபரப்பை போல ஒன்றையும் கொண்ட பகல் பொழுதுகளையும் போதைமிகுந்த முன்னிரவுகளையுமே பண்டிகைகள் தந்திருக்கின்றன.


#
வல்லிபுரக்கோவிலில் நராகாசுரன் பார்த்தநினைவிருக்கிறது, வடக்கு வாசலில் வைத்து 108மண்டி போடுறது ஒரு சாகச நிகழ்வைப்போல இருக்கும். சின்ன வயதில் ஆச்சரியத்தோடு அதை எண்ணிக் கொண்டிருப்பேன். கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை, தீபாவளியே ஒரு அதிகாரவார்க்கத்தின் பண்டிகை என்கிற எல்லா கதைகளையும் மீறி நாங்கள் இன்றைககும் சூரன் பார்க்கப்போக தயாராயிருக்கிறோம்; என்ன இருந்தாலும் மாயவனுக்கு ரசிகைகள் அதிகம் என்பதே அதற்கான முக்கிய காரணமாயிருக்கலாம். இன்னுமொன்று லேசான மழைக்கான முகாந்திரத்தோடு இருக்கிற வானமும் ஆலயத்தின் சூழலும், காதல் நிறைந்த பெண்களும், பழக்கப்படுத்தப்பட்ட பக்கதி மனங்களும் அந்த பெரிய வெளிவீதியில் உலாவருகிற கடவுளும் ஒரு விதமான அனுபவம்தான்.


#


எனக்கு கூடப்பிறந்தவள் ஒருத்திக்கு இன்றைக்கு பிறந்த நாள். தீபாவளிக்கு முதல்நாளோ அடுத்த நாளோ அல்லத தீபாவளியன்றோ வந்துவிடுகிற இவளுடைய முன்னைய பிறந்த நாட்களை பற்றி இப்பொழுது சொல்லிக்கொள்ளும்படி எதுவும் எனக்கு நினைவில் வரவில்லை, இது இப்படி இருக்கக்கூடாது என்பதுதான் உண்மை, ஆனாலும் என்ன செய்ய பின்பொரு அவசரமற்ற பொழுதில் அதனை எழுத முயல்கிறேன்.

பகிடியா சொல்லுறாளா உண்மைக்குமே சொல்லுறாளா எண்டு தெரியாதமாதிரி அடவைஸ் வைக்கிறது இவளுடைய ஸ்டைல் உதாரணத்துக்கு "அதை ஏன் நீ யோசிக்கிற வீட்டைப்பற்றியெல்லாம் நீ யோசிக்காதை" எண்டுவாள்; இதை விட வேறை எப்படி திட்ட ஏலும் இது அவள் திட்டுற மாதிரியே இருக்காது சாதாரணமாக கதைக்கிறமாதிரியே மருந்தைக்குடுக்கிறது. இவளுடைய கல்யாணத்துக்கு பத்து லச்சம் வேணுமெண்டு ஒரு SMS மட்டும்தான் அனுப்பி இருந்தாள் ஆனால் ஒரு கிழமை நித்திரை இல்லாமல் பண்ணின குறுந்தகவல் அது, உண்மையில் அது கடுந்தகவல்! வெளிப்படையா பாத்தால் அவள் என்னிடம் காசு வாங்கினது மாதிரிதான் இருக்கும் அனால் இன்றைக்கும் என்னுடைய காப்புறுதி தொகை கட்டிக்கொண்டிருக்கிறது இவள்தான், நான் உழைக்கிற காசு எனக்கே காணாதெண்டு சொல்லி அடிக்கடி வாங்கி கட்டுறது நான் சொந்த செலவுல வைக்கிற சூனியம்.

இன்னும் சில நாட்களில் தாயாகவிருக்கிற இவளுக்கு இது; கல்யாணமாகி வருகிற முதல் தீபாவளியும், பிறந்தநாளும் நல்லா இரு ரீச்சர்; காலம் உனக்கு நீ விரும்புகிற வாழ்வைக் கொடுக்கட்டும், உன் கடவுள்கள் எப்பொழுதும் உன்னோடு இருக்கட்டும்.



#
இன்னுமொரு தீபாவளியும் இருக்கிறது அது பண்டிகை நாட்களின் புடைவைக்கடை அனுபவங்கள். அது ஒரு தனிப்பதிவாக எழுதலாம் என்பதில் இப்பொழுது தவிர்க்கப்படுகிறது. அல்லது அவரவர் கற்பனைக்கு விடப்படுகிறது. பண்டிகை நாட்களுக்கு முந்திய பெருந்தெருக்களும் சந்தைகளும் எப்பொழுதும் சுவாரஸ்யமானவை. "எங்க இருந்துதான் இவ்வளவு சனமும் வருதோ" என்பதைப்போல யாழ்ப்பாணம் ரவுணுக்குள்ள அலைமோதுகிற சனங்களை பண்டிகை நாட்களுக்கு முதல் நாள் பார்க்கலாம், இந்தக்கூட்டத்தை பார்க்கவென்றே பஸ் பிடிச்சு யாழ்ப்பாணம் போன கதையெல்லாம் இருக்கு.

புடைவைக்கடையில் வேலை செய்கிற அனுபவம் ஒரு விதமானது. வேண்டாம் என்று போய்விடுகிற வியாபாரம்தான் என்றாலும் சில நேரங்களில் தேவதைகளுக்கு ஆடை பரிமாறுகிற சந்தர்ப்பம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கள்ளச்சிரிப்போடு கடைக்குள் நுழைவது எங்கடை ஊர் பெண்களின் உத்தி; நினைச்ச விலைக்குத்தான் வாங்கிக்கொண்டு போவாளவை. புடைவைக்கடையில் வேலை செய்த சொற்ப நாட்களில் சில முகங்களை கடந்திருக்கிறேன் நினைவில் இருந்து மறைந்து விடுவதற்குள் அந்த முகங்களை சந்திக்கும் ஆசையும் இருக்கிறது சே..! என்ன வாழ்வு இது நான் எப்பொழுதும் எனக்குப் பொருந்தாதவைகளையே தெரிவு செய்திருக்கிறேன். எனக்கானவற்றோடு செய்கிற சமரசங்கள் மனதை லேசாக இருக்கவிடுவதில்லை அவை அவநம்பிக்கைகளை தருவது, வெறுப்பை அதிகம் பண்ணுவதாய் இருக்கிறது இந்த ஒவ்வாத நாட்கள்.

#
எழுதஎழுத எழுதமுடியாத நிலைதான் எனக்கு இப்படியான நினைவுப்பகிர்வுகளில் இருக்கிற சங்கடம். ஒரு கதை சொல்லிக்கான லாவகம் என்னிடம் இல்லாமல் இருக்கலாம் அல்லது மிகச்சிதறுண்ட துண்டுகளாகவே எனக்கு இந்த நினைவுகள் இருக்கிறது.

எல்லாம் போக கடல் கடந்துவிட்ட சில வருடங்களில் இது ஐந்தாவது தீபாவளியென நினைக்கிறேன், சித்திரைக்கு வந்தவனை தீபாவளிக்குத்தான் முதன் முதலில் அழைத்திருந்தாள் கறுப்பி! மிகநீளமான அந்த ஆறுமாதங்களையும் கடந்ததில் நான் இப்பொழுது இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்; அவள் வாசிக்கவே போவதில்லை என்றபோதிலும்.


எல்லாம் போக இன்று காலையில் அழைத்து-

என்ன செய்யுற உங்க; நானொருத்தி இங்க இருக்கிறன், அப்பர் இருக்கிறார் எண்டு கேட்டிருந்தாள் அம்மா. என் வாழ்தலின் மிக முக்கிய தருணங்களுள் ஒன்றாக இந்தக்கேள்வி இருக்கலாம். சில குரல்கள் எப்பொழுதும் எங்களை உயிர்ப்பிக்கிறது, அது என்ன வார்த்தைகளோடு வருவதாயிருந்தாலும்.


#

தொழில் நிமித்தம் வீட்டைப்பிரிந்திருக்கிறதே பெரிய துன்பமாயிருக்குமெனில் சொந்த வீடுகளிலுமிருந்து துரத்தப்பட்ட என் சனத்தின் பண்டிகைகள் எப்படி இருந்திருக்கும் துரத்தப்படுதலும், திணித்தலும், அடையாளங்களை சிதைத்தலும் மிக மோசமான அரசியல் வன் முறைகள். சீனவெடி, என்ன வெடி! நாங்கள் பெரும் ஆட்லெறிகளோடெல்லாம் தீபாவளி கொண்டாடியிருக்கிறோம். என்று சொல்வதற்கு எனக்கு இளையவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் எங்களுடைய நாட்டில். மக்களிடம் அரசியலை கொண்டுசெல்ல விரும்புபவர்கள் முதலில் மக்களை பேச அனுமதியுங்கள்.மக்களின்அரசியல் மக்களாலேயே பேசப்படவேண்டும்.


#
எல்லோருக்கும் தீபாவளி சீக்கிரமே வரட்டும்.


_________________________________________________

26ம் திகதி பகிர்ந்திருக்க வேண்டியது சில சிக்கல்களால் இன்றைக்கு.


Picture - Google.

Monday, October 3, 2011

ஊதாநிற பூவைச்சூடியவளின் விலகுதலின் மீது.

சாத்தியமற்ற ஒரு புள்ளியில் இருந்து
நாம் உரையாடிக்கொண்டிருநதோம் என்
எதுவுமற்றவைகளின் மீது நின்றபடி நீ
எல்லாவற்றையும் வசப்படுத்திகொண்டிருந்தாய்
அன்பை நிராகரிக்கிற என் அவநம்பிக்கைளின் மீது
உன் கரிசனங்களை நிரப்பிக்கொண்டிருந்தாய்

எப்பொழுதும் அருகிருப்பதாய்
உன் அன்பிருந்தது
கூட வருகிற துணையாக உன்குரல்
கேட்டுக் கொண்டேயிருந்தது
யாருமற்ற நாட்களில் எல்லோரும்
என்னுடனிருக்கிறதாய் நம்பிக்கொண்டிருந்தேன்

ஏனென்றறியாத கசகசப்பான பின்னிரவொன்றில்
நானறியாத உன தன்முனைப்புகளின் மீதொரு
காரணத்தை வைத்துக்கொண்டு
என்னை விலகத்தொடங்குகிறாய் நீ

விலகுதலிலும் துன்பம்
விலகுதலுக்கான காரணங்கள் இல்லாமலோ தெரியாமலோ இருப்பது.

பெரும் குற்றவுணர்வுக்குள் இருக்கிறது காலம்
பனி விழுகிற உன் நகரத்தின் தெருக்களில்
அலைகிறதெனது வாழ்வு.

_____________________________________________

உண்மையில் நான் உனக்கு என்ன துன்பம் செய்தேன் என்பது எனக்கு நினைவில் இல்லை,தெரிந்தே நான் எதையும் செய்திருக்க மாட்டேன் என்றே இன்னமும் நான் நம்புகிறேன்.என்னிடமிருந்த சிக்கல்களை நான் உன்மீது பிரயோகித்திருக்கக்கூடும் அதை நீ இவ்வளவு தூரத்துக்கு நினைவில் வைத்திருக்கத்தேவையில்லை. எனக்கே நினைவில் இல்லாத அதை நீ நினைவில் வைத்துக்கொண்டு எதற்கு இவ்வளவு துன்பத்தை நமக்குள் வைத்திருக்கிறாய். உன்னைக்குறித்த என் தேவதை பிம்பம் ஒரு நாளும் உடையப் போவதில்லை; நீ எப்பொழுதும் தேவதையாகத்தான் இருக்கிறாய்.

நான் எப்பொழுதும் அன்பை 'செய்யத்தெரியாதவனாகவே' இருந்திருக்கிறேன்.ஏன் எனக்கதை புரிந்து கொள்ளவும் தெரிந்திருக்கவில்லை என்று ஒப்புக்கொள்கிறேன்.எல்லா துன்பங்களுக்கும் நானே காரணமாயிருக்கிறேன், என் எல்லா நன்மைகளுக்கும் நீ வாசல்களாயிருக்கிறாய். நீ என்னை கண்டுகொள்ளாதிருப்பதும் விலகுவதும் என்னை துன்புறுத்துவதாய் இருக்கிறது.மனதளவில் பெரும் குற்றவுணர்வுக்குள் இருக்கிறேன்.

உன்னுடைய அன்பின் சாத்தியங்கள் என்னை மீளவும் கொண்டு வரும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது உன்னால் முடியும். எனக்கும் உனக்குமான நெருக்கத்தின் இடைவெளி உண்மையெனில் என் மீதான கோபம் உனக்கு இன்னமும் மீதமிருக்கிறதெனில் நாம் பேசலாம். உன்னுடைய அழைப்புக்காக காத்திருக்கிறது எனது நாட்கள்.

____________________________________________

இந்த உரையாடலில் வருகிற இவளுக்கு இன்றைக்கு பிறந்தநாள்.நான் குடிக்கிறது இவளுக்கு பிரச்சனையாயிருப்பதனால் இன்றைக்கு முதல் குடிப்பதில்லை என்று எழுதி வைக்கிறேன்.


Happy Birthday ____________ .

Tuesday, September 27, 2011

எழுதிப்பார்த்தல் அல்லது இருப்பை உறுதிப்படுத்துதல்.

இணையத்தில் நான்றிந்த எல்லோரும் எங்கேயாவது எதையாவது எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இணையமும் எதையாவது புதிது புதிதாக அவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.


Facebook_ல் கணக்கை தொடங்க எவ்வளவோ சந்தர்ப்பம் இருந்தும் சத்தம் இல்லாமல் இருந்தேன். நண்பன் ஒருவனின் அழைப்புக்கு பிறகு சரி அப்படி என்னதான் இதிலே இருக்கிறதென்று உள்ளே நுழைந்து பார்த்தால், உரில இல்லாத ஆட்களே இல்லையென்றமாதிரி எல்லோரையம் பார்க்க முடிந்தது. 2010 இன் தொடக்கத்தில் ஆச்சரியப்படத்தக்க வகையில் எல்லோருமே இருந்தார்கள் பிறகு மெல்ல மெல்ல சிலர் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதாவது ரிவிட்டரிலும் இடைக்கிடை face book வந்து போவதற்கே முடியாமல் இருக்கிறது எனக்கு. எப்படி Facebook, twitter, Google buzz, Google + என்று எல்லாவற்றிலும் கணக்கு வைதிருக்கவும் பராமரிக்கவும், இயங்கவும் முடிகிறது. எப்பொழுதும் நிரம்பிக்கிடக்கிறது Google Buzz தற்செய்லாக நுழைந்தால் படு ஆரவாரமாக இருக்கிறார்கள் தோழர்கள் அதிலும் பெரும்பாலும் காணக்கிடைப்பதில்லை என்று நினைத்துக்கொண்டிருந்த நண்பர்கள் பலரும் அங்கே இருக்கிறார்கள்.


இதைக்குறித்து இரண்டு மூன்று முறை எழுதி பிறகு எனக்கெதுக்கு,என்று பகிராமல் அப்படியே விட்டுட்டன்.இங்கே சொல்வதற்கு நிறைய இருந்தாலும் இப்பொழுது நான் சொல்ல வந்தது வேறு.


உண்மையில் எழுதாமல் இருப்பதிலும் பகிராமல் இருப்பதில்தான் சிக்கலே இருக்கலாம்.ஆக எதையாவது எழுதியே ஆகவேண்டும், எழுதுதல் என்பது நீங்கள் படித்தேயாகவேண்டும் என்பதற்கானவை அல்ல என்றாலும் எதையாவது பொதுவில் வைப்பது இருப்பை உறுதிப்படுத்துதல் என்றாகிறது. இஃது இந்த தனியே அலைகிற, அடைதல் கிடைக்காத ஆன்மாவொன்றின் மீளுதல்களாய் இருக்கலாம்.


எவ்வளவுதான் முயன்றாலும் ஒன்றிவிட முடியாத மனிதர்களே என்னை சூழ்ந்திருக்கிறார்கள், இது என்னுடைய பிழையாகவும் இருக்கலாம். சும்மா இருத்தலை வெறுக்கவும் அதை தவிர வேறெதையும் செய்யவும் முடியாத ஒரு தவிப்பையும் தருகிறது இந்த சூழல். மேலதிகமாய் எதையும் செய்ய உந்துவதில்லை உடலும், மனமும். புதிதாக சில விசயங்களை செய்து பாக்கலாம் என்றிருக்கிறேன், நாட்களை 'வழமை' என்பதாக வைத்திருப்பதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறது?! எப்டியும் போகிற நாள்தான், ஆனால் அது நான் கடக்கிற நாளாக வேண்டும். இதுவொன்றும் அவ்வளவு சாதாரணமாக இருக்க முடியாது என்றும் தோன்றுகிறது, நாளை மற்றுமொரு நாள்தானே!


இப்போதைக்கு மெய்நிகரில் வாழப்பழகி விட்டிருக்கிற இந்த உடலும் மனமும் உண்மையை வெகு சமீபமாக பார்க்கையில் திணறிவிடக்கூடும், இந்த நாட்கள் தருகிற அசௌகரியம் பயம் தருவதாய் இருக்கிறது. ஒரே மாதிரியான நாட்களும் சலிப்பும் ஒருவிதமான கடுகடுப்பை எப்பொதும் கொண்டிருக்கிறன. மிக மந்தமான பிரக்ஞையோடிருக்கிற இந்த நாட்கள் இப்போதைக்கு கேவலமாகத்தெரிந்தாலும் பின்பொரு உன்னதமான பொழுதில் மென் முறுவலை வரவழைக்கக்கூடியவை என்று நம்புகிறேன். நம்புவோமாக.


இங்கே எழுதப்படுபவைகள் எல்லாம் எனக்காக நான் செய்பவை.எழுதுதல் என்பது எனக்காக நான் செய்வதாகத்தான் எப்பொழுதும் இருக்கும். உனக்கான திருப்தியை, சொறிதலை எதிர்பார்த்து நீ இன்னொருவனின் உலகத்துக்குள் நுழைய முடியாது வீணாக ஒரு அருமையான இலக்கியத்தை இழப்பதற்கு முயற்சிக்காமலிருப்பது உனது சந்ததிகளுக்கு நல்லது.

____________________________________________________________________


பொதுவில் சில :

#
திலீபனைப்பற்றி குறிப்பை எழுதியே ஆகவேண்டும் என்பதில் ஒரு அலுப்பாயிருக்கிறது. அவன் சின்ன வயசிலயே மனசில ஊறிப்போன ஒருத்தன். உங்களைப்போல அல்லது உங்களிலும் பார்க்க அவனை வெகு,வெகு அருகாமையில் நான் உணர்ந்திருக்கிறேன்.


#
தணிக்கைக்குழுவுக்கான எல்லைக்கோடுகளை சாதாரணமாக அகலம் பண்ணிக் கொண்டிருக்கிறது ஹிந்தி சினிமா, தமிழில் ஏன் இவ்வளவு திணறல் இந்த போலி அளவீடுகளை, பாதி மறைத்தலை இன்னும் எவ்வளவு காலத்துக்கு செய்யப்போகிறோம்.


#
The Piano Teacher - இந்தப்படத்துல நடிக்கிறப்போ அந்த நடிகைக்கு வயது அண்ணளவாக 50இருக்கலாம் : படம் குறித்து எதையாவது சொல்லியே ஆகவேண்டும் என்பதற்கு.


#

இந்தி சினிமா எவ்வளவு அழகிகளை கொண்டிருக்கிறது,சமீபத்தில் பாத்த அழகிகளுள் ஒருத்தி.




Radhika Apte @ Shor in the City as sapna.



#
The Dirty Picture - டிசம்பருக்கு வரப்போகிற படம் ட்ரெய்லரே கலங்குது வித்யாபாலனுக்கும், இந்த படம் சொல்லப்போகிற கதைக்கு சொந்தக்காரிக்கும் என் மனதளவில் இருக்கிற வித்தியாசத்தை உணர முடிகிறது.அந்த கண்ணகளும் நிறமும்.





#
ஒரு
கவிதையை எழுதி இருக்கலாம்
அதை எழுதத்தெரிந்தால்
அல்லது சொற்கள் கிடைத்தால்
அலையும் இந்த சொற்கள்
இலகுவில் வரிசைக்குள் வருவதில்லை.


______________________________________________________________

இந்த பகிர்வு சொல்லும் விசயம் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் இலக்கியத்தில் இடிவிழ.

_________________________________________


மிகுதி நேரமும் சூழலும் கிடைக்கும்பொழுது.

Saturday, July 30, 2011

ஸ்ரீதேவி,சில பாடல்கள்...

சமீப நாட்களில் நான் கேட்ட பாடல்களில் பெரும்பாலும் ஸ்ரீதேவியின் பாடல்கள் இருப்பதாய் நினைக்கிறேன். கடந்த இரவில் கேட்டுக்கொண்டிருந்த இரண்டு பாடல்களில் இது ஒன்று. பாரதியாரை துணைக்கு வைத்துக்கொண்டு கண்ணதாசன் எழுதிய பாடல்.





//
மோகனப்புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப்போலிருந்தேன்
ஊமையைப்போலிருந்தேன்...
//

நாணம் மறைக்கிற அந்த காதலின் இன்பத்தை அனுபவிச்சு சொல்லுறதுக்கு இதைவிட வேறென்ன மொழி வேணும்.

ஸ்ரீதேவி அந்த வேடத்தில் பொருந்துவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.தமிழில்தான் ஸ்ரீதேவியின் திறமை ஓரளவுக்கேனும் பயன்படுத்தப்பட்டிருப்பதாய் நான் நினைக்கிறேன் கமல் அடியெடுத்து பாடிக்கொடுத்ததும் அவர் காட்டுகிற அந்த பாவம் இப்பபொழுதிருக்கிற நடிகைகளில் எத்தனைபேருக்கு வரக்கூடும்.

காட்சிப்படுத்தலில் சில சறுக்கல்கள் இருந்தாலும் ஸ்ரீதேவியைப்போலவொரு அழகியொருத்தியை அல்லது மனதுக்கு நெருக்கமான பெண்மையொன்றை பாடச்சொல்லி கேட்டுக்கொண்டிருப்பதில் சலிப்பேதும் இருக்காதென்பது இந்த தனிமையின் நாட்கள் சொல்லுகிற உண்மை.

___________________________________________________



//
பூலோகம் மறைய மறைய
தெய்விகம் தெரிய தெரிய
வைபோகம்தான்.
//

துள்ளுகிற இளமையும், நளினமும் நடனமும், அந்த முகமுமாய் ஸ்ரீதேவி என்கிற அழகி. அழகில் தழையப்பொருந்துகிற சேலையில் 'என்ன வடிவடா அது'. இந்தப்பாடலை பார்க்கிற நேரங்களில் எல்லாம் பாழும் இந்த நாட்களின் மந்தம் எரிச்சலாயிருக்கும். பாடலில் நான் வியக்கிற இன்னுமொன்று எப்படி இருக்கினறன இந்த சேலைகள் அவை பெண்ணுடலுக்கே உரியனவை போல.





_______________________________________________

//
குங்குமத் தேரில்
நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு
ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்//

"ஆகாயகங்கை பூந்தேன் மலர் சூடி"பாடலில் இந்த வரிகள் இரண்டாம் முறை வரும்பொழுது இருக்கிற அழகை நெருக்கமான பெண்மைகளிடம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் சாதாரணமாய் நிகழ்கிறதாய் இருந்தாலும் காதலிகள் "சாகடிக்கிறடி" என்று கிறங்க வைக்கிற அநியாயத்துக்கு அழகாய் இருக்கிற சாயல்களில் இதுவுமொன்று.

தொடக்கத்திலேயே நம்மை பாடலுக்குள் கொண்டு போய்விடுகிறது ஜானகியின் குரல்,என்ன குரல் அது! மலேசியா வாசுதேவனினன் குரல் இந்தப்பாடலுக்கு பொருந்திவிடுகிறது இளையராஜாவுக்கு குரலை இசையாகவும் இசையை குரலாகவும் செய்யத்தெரிகிறது,சமயங்களில் மௌனத்தையும்.

_____________________________________________________


எனக்கு பிடித்தமான பாடல்கள் என்று இவற்றை எப்பொழுதும் சொல்ல முடியாவிட்டாலும் இவை அனேகம் பேருக்கு பிடிக்கிற பாடல்கள்தான். பாடல்களை @facebook பகிரலாம் என்று நான் நினைக்கும்பொழுதெல்லாம் யாரோ ஒருவர் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள், பார்க்கலாம் இனி அவ்வப்போது அந்தந்த நேரத்தில் கேட்டுக்கொண்டிருக்கிற பாடல்களை பகிராலம் என்றிருக்கிறேன்.

இங்கே சொல்ல வேண்டிய இன்னுமொன்று எல்லா பாடல்களும் எப்பொழுதும் ஒரே மனோநிலையை கொடுப்பதில்லை அதே போல் எல்லா நேரங்களிலும் பிடித்தமான பாடல்களைக்கூட கேட்க முடிவதில்லை.

ஒரு பாடல் தனியே இசையாகவோ,காட்சியாகவோ,குரலாகவோ இருப்பதேயில்லை அது யாரையாவது எதையாவது நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது.உனக்கும் எனக்கும் பிடித்தாமான பாடல் அறையில் நிரம்பிக்கொண்டிருக்கிறது, வழிகிற உன் நினைவுகளை மதுக்கோப்பைகளில் நிரப்பிக்கொண்டிருக்கிறேன். என்றென்றைக்குமானதாய் இருந்து விடுகின்றன சில பாடல்கள் எப்பொழுதும் தீராததாய் இருந்து விடுகின்றன நினைவுகள்

நீயொரு
இசையாகவும்
நினைவாகவும்
எப்பொழுதுமிருக்கிறாய்.

___________________________________________________



இந்த பதிவின் சாயலுக்கு வெளியே ஒரு சின்ன குறிப்பு:

ஸ்ரீதேவிக்கு பதின்மூன்று வயதாகும்பொழுது மூன்றுமுடிச்சு படம் வெளிவந்திருந்தது. அப்ப கமலுக்கு வயது 22 ரஜனிக்கு வயது 26 ரஜனியின் அப்பாவா நடிச்ச கல்கத்தா விஸ்வநாதனுக்கு வயது47. 13 வயதிலேயே ரஜனியை போடா கண்ணா போ என்று கடுப்பேற்றுகிற ஒரு பெரிய கதாநாயகிநாக ஸ்ரீதேவி இருந்தும் பிற்காலங்களில் ரஜனியை விழுந்து விழுந்து காதலிக்கிறவராகவே வர முடிந்திருக்கிறது ரஜனியும் வயதாக ஆக நடிப்பதையெல்லாம் விட்டு வசனம் பேசவும் வேறெதுவும் செய்யவும் பழகிக்கொண்டார்.


எனக்குத்தெரிந்து வெளிநாட்டுப்படங்களில் கலக்குகிற அனேகம் நடிகைகள் முப்பதுகளின் தொடக்கதில் இருக்கிறவர்கள்தான் ஆனால் இந்திய சினிமா குறிப்பாக தென்னிந்தியா சினிமா மிகமோசமான கதாநாயக வழிபாடுகளைக் கொண்டது என்பதில் நடிகைகளின் நிலை கவலைக்கிடமானதாகவே இருக்கிறது.

கமலும் ஸ்ரீதேவியும் கிட்டத்தட்ட 27 படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள், இப்பொழுது சினிமா அப்படி இருப்பதில்லை. ஒரு நடிகை மூன்று படங்களில் சேர்ந்து நடிப்பது என்ன தொடர்ந்து மூன்று வருடம் இருப்பதே பெரிய விசயமாயிருக்கிறது. புதிய நடிகைகளின் வரவும் போட்டியும் அதிகரித்திருக்கிற அதேநேரத்தில் புதிய நடிகைகள் அல்லது பெண்கள் தேவைப்பட்டுக்கொண்டே இருப்பதும் அலசப்பட வேண்டிய விசயங்களில் ஒன்று.


மொத்தமாக சினிமா ஓரளவுக்கு இந்த விசயத்தில் மாறிக்கொண்டிருந்தாலும் தென்னிந்திய சினிமா பெண்களை பெரும்பாலும் கவர்ச்சிமுதலீடாகவும் சினிமாவை பாலியல் வணிகமாகவுமே இன்னமும் வைத்திருப்பதாய் நம்புகிறேன்.

நடிப்பதை விட்டு உலகப்படங்கள் பார்க்கப்பழகிக்கொண்ட உலகநாயகர் மாதிரி ஆக்களின் மூலம் த்ரிஷாவுக்கு செருப்பா நடிக்கவும் தயாயிருக்கிற மனங்கள்தானே தமிழ் மனங்கள். தமிழ்நாட்டையோ தமிழ்மனங்களையோ திருத்தவே முடியாது. இரத்தங்கொடுத்து படம் பாக்கிற பேயன்கள் இருக்கும் வரை பல்லிளிக்கிற தொலைக்காட்சிகள் இருக்கும் வரை இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.


ஒரு முக்கிய குறிப்பு அல்லது தடம்மாற்றுதல் :.

வரும் August13ம் திகதி சிவகாசியில் பிறந்து மும்பையில் வாழ்ந்து வருகிற மாலினி ஐயராகிய மயிலு என்கிற ஸ்ரீதேவிக்கு பிறந்த நாள் என்பதை அறிகிறேன். "நாடிருக்கிற கேட்டில இப்ப இதான் முக்கியம்" என்று நினைக்கிறவர்கள் என்னை திட்டவும் மற்றவர்கள் விரும்பினால் வாழ்த்தவும் தடையொன்றும் இல்லை.




"Kubsuratki khabi umar nai jathe"