Saturday, July 23, 2011

சாத்தான்.

அளவில்லாத வரைக்கும் குடிக்கலாம்..
ஆடைகள் அவிழ்வது தெரியாமல் உறங்கலாம்
கடந்து போன பெண்ணொருத்தியை
கனவுகளில் கொண்டு வரலாம்.
இந்த இரவுகளை சபிக்கலாம்
சுய உச்சங்களுக்கான காரணங்களை நியாயப்படுத்தலாம்
என்ன இருந்தாலும் என்னை காறி உமிழ்கிற தூரத்தில்
எந்த கடவுள்களும் இல்லை என்பது ஆசுவாசமாயிருக்கிறது.

Monday, May 23, 2011

ஒரு பாடல் அல்லது மாறுதலுக்கான குறிப்பு.




தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்
உண்மை சொல்லு பெண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம்.



இதை நான் பாவப்பட்ட என்றுதான் எப்பொழுதும் பாடியிருக்கிறேன். கேட்ட காலம் முதல் பிடித்தமானதாய் இருக்கிற இந்த வரிகளுக்கு காரணமெல்லாம் தெரியாது,ஒரு வேளை நீயாக இருக்கலாம். நீயோ உன் வாசல்களை திறக்கவே மாட்டேன் என்றிருக்கிறாய்.

________________________________________________________________

முட்டம் மக்கள் எதை மறந்திருந்தாலும் கடலோரக்கவிதை படத்தை மறக்க மாட்டார்கள். முட்டம் மக்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் அந்த கடலை,அலைகளை, அழகை அறிமுகம் செய்தவர்,திரையில் நிரப்பியவர் பாராதிராஜா. நான் அறிந்த வரையில் கடலோரக்கவிதைகள் படம் முழுவதும் முட்டத்தில் எடுக்காவிட்டாலும் பெரும்பங்கு காட்சிகள் முட்டத்தில் எடுத்ததாக அறிகிறேன்.கடலோர கிராம வழக்குகளை பாரதிராஜா சொல்லி இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை,கடல் பூக்கள் படங்களும் முட்டத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை கொண்டிருக்கின்றன.

_______________________________________________

வைரமுத்துவும் இளைராஜாவும் சேர்ந்து தந்த மயக்கங்களில் இதுவும் ஒன்று, இதுதான் கடைசியானது எனவும் அறிகிறேன்.

இந்த மாதிரிப்பாடல்களெல்லாம் இளையராஜா என்கிறவர்தான் தந்திருக்கிறார். தமிழிசை என்று மட்டுமே சொல்லி விட முடியாத- பொங்குகிற மனதை, பொத்திங்கிடந்த உணர்வை, காதலை, தன்னிலையின் மாற்றங்களை,தவிப்பை கோர்வையாக்கிவிடுகிற இந்த இசைக்கும், குரலுக்கும் நாம் வெறுமனே இளையராஜா தமிழ் மட்டும்தான் உலகத்தரம் புதிய இசைகள் என்று நமக்கு மீறிய வார்த்தைகளை சொல்வதில் எனக்கு உடன் பாடில்லை. இசையை அந்த மக்களின் கலாச்சாரத்தை பதிவிக்கிற, காலம் கடக்கிற ஒன்றாக இதைத்தான் சொல்ல முடிகிறது.அனேகம் பேர் சொல்வது இசைக்கு மொழியில்லை என்பது; சரிதான் ஆனால் நினைவுகள் இருக்கிறது இசை எப்பொழுதும் நினைவிலேயே கட்டி எழுப்பப்படுவதாக நான் நம்புகிறேன்.

என்னுடைய நினைவுகளை இந்த பாடல்கள் தருகிறது. நினைவை நகர்த்துகிற, நிகழை மறக்கடிக்கிற, நினைவை கிளர்த்துகிற இசை இப்படியான சில பாடல்களிலேயே இருக்கிறது

________________________________________________________


##
இப்பொழுது இந்த குறிப்பை எழுதுவதற்கும் சில நினைவுகளும் நீயும் காரணமாயிருக்கலாம்.

##
இதை எழுதிய நாளுக்கும் இன்றைக்கும் இடையில் ஒரு சில நாட்களே இருக்கலாம் ஆனால் இந்தக்கேள்வியை இன்னும் பலமாக கேட்கிற நிலையில்தான் நீ இருக்கிறாய்.

##

வெகு நாட்களுக்கு பிறகான எழுதக்கிடைக்கிற இந்த மனோநிலைக்கும் உனக்கும்.

Saturday, March 26, 2011

பேசப்படாத சொற்கள்...

எப்பொழுதும் பிடித்தமான சொற்களை பேச முடிவதில்லை
எனக்கும் அவளுக்கும் இடையில் கூட நிகழ்வதில்லை
எப்போதும் அணுக்கமான சொற்களை எழுதவும் முடிவதில்லை எனக்கு
எல்லோருக்கும் அணுக்கமான சொற்களையும் கூட...

பொதுவாக எவ்வளவு பேசினாலும் தீராதவை
பல நேரங்களில் தீர்ந்த பிறகும் திருப்தி தராதவை
எப்பொழுதாவது ஒற்றைச்சொல்லில் நிரம்பிவிடுகிறது மனம்
சில நேரங்களில் சொல்ல முடியாதவையும் கூட
தேவையான நேரங்களில் தாமதமாகி விடுகிறவைகளின் விலைகள்
கொடுக்க முடியாததாகவே இருக்கிறது

எனதும் உனதும் மனங்களைப்போல அவை
ஒரு போதும் கெட்டுப்போவதில்லை

இன்னும்...இன்னும்
வெகு அரிதாகவே அவை தேவைப்படாமலிருந்தாலும்
வெளியில் சொற்கள் சொற்களாகவே இருக்கின்றன.


_____________________________________________________


பேசிவிட முடியாத எல்லாச்சொற்களையும் போலவே சரியாக எழுதப்படாத இந்த சொற்கள் குறித்த சொற்களும்.

பெரும்பாலும் மனிதர்கள் சொற்களால் நிரம்பி இருந்தாலும் எல்லோருக்கும் அவற்றையெல்லாம் பேசக்கிடைப்பதில்லை.

சொற்கள் குறித்து பேச நிறைய இருந்தாலும் இப்போதைக்கு இவ்வளவும்.

Friday, March 4, 2011

அன்பை மறுதலித்தல் அல்லது மன்றாடுதல்.

"
ஒன்றினுக்காய் உருகுவது
ஒன்றினுக்காய் இன்னொன்றினை
விட்டுக்கொடுப்பது
சதா அதே நினைப்பாய் இருப்பது
எங்கு சென்றாலும் பின் தொடர்வது
கேர் கேரிங்
வித் லவ்
பிரியங்களுடன்
முத்தங்களுடன்

இதையெல்லாம் விட ஆபாசமான சொற்கள்
வேறெதுவும் இருக்க முடியாது... "
- அய்யனார்.


நீ எனக்கு ஏதோ ஒரு நினைவில்லாத நாளில் அறிமுகமாகியிருந்தாய் ஆனால் உன் அறிமுகம் எனக்கு நினைவிருக்கிறது.'நீ யார்' என்கிற கேள்விகளோடு நம் உரையாடல் தொடங்கியிருந்தது,கூடவேஅந்த புகைப்படத்தை எனக்கு அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

தமிழ் சினிமாவின் தாக்கம் அதிகமாய் உள்ள உரையாடல் உன்னிடமிருந்தது. நீயும் உன் தோழிகளும் எப்பொழுதும் அப்படித்தான் என்றாலும் உன்னிடம் குறைந்த பட்டசமெனினும் உண்மைகள் இருந்தன அது இந்த உண்மையற்ற உலகின் அதிகபட்சமாய் இருந்தது. அது எனக்கு பிடித்திருக்கிறது இப்பொழுதும் நீ உண்மைத்தன்மைகளோடு இருக்கிறாய் என நம்புகிறேன். முழுவதுமாய் உண்மையாய் யாராலும் இருக்க முடிவதில்லை. யாராலும் என பொதுமைப்படுத்துவதில் எனக்கு உடன் பாடில்லை எனக்கு முடிவதில்லை.ஆனால் முடிந்தவரை உண்மையாய் இருக்கிறேன் என நம்புகிறேன் இல்லையெனில் என்னால் குடிக்காமல் இத்தனை நாட்கள் இருக்க முடியாது. உண்மைகளை பேசுதலும், உண்மையாய் இருத்தலும் ஒருவகையில் போதையானது. உண்மை விரைவில் சலிக்கும் என்றாலும் அதன் நகர்வுகள் அதிசாத்தியமானவை.

ஒரு உண்மை முடியத்தொடங்கும்பொழுதே அது அடுத்த நகர்வை தந்து விடுகிறது.குற்றவுணர்வுகளின் வஞ்சனைகள் எதுவுமில்லாமல் விலகிவிட உண்மைகளுக்கு சாத்தியம் அதிகமாய் இருக்கிறது. உடல் தனக்கான பசியை எப்பொழுதும் தக்க வைத்திருக்கிறது. ஒரே உடல்தான் பாவம் என்று நீ நம்புகிறவைகளையும் புனிதம் என நீ நம்புகிறவைகளையும் செய்கிறது.பாவமும் புனிதமும் உடல் சார்ந்தே கட்டமைக்கப்படுகிற உனக்கும் எனக்கும் தெரிந்த இந்த சூழல் போலிகளின் குரூரபிம்பங்களை மறைப்பதற்கான மேடையாகவிருக்கிறது உள்ளேயிருக்கிற குப்பைகளை தெளிவாக தவிர்த்து ஒழுக்கம் பேசுகிற சூழல்தானே நம்முடையது. மூடிவைத்தாலும் பாவம் பாவம்தான்.

உனக்கு முன்பொரு முறை சொல்லியிருப்பதைப்போல உன் குரல்களை என்னிடம் அனுப்பு உண்வுகளோடு உயாடப்பழகு குரல்களால் ஒரு கட்டத்துக்கு பிறகு பொய் பேச முடிவதில்லை. தன்முனைப்புகள் அறுந்து போக அவை தம் உடல்களை பேச தொடங்கிவிடுகிறன்றன நிர்வாணமான சொற்கள் உன்மத்தமாய் இருக்கக்கூடும் அவை பொய் பேசுவதில்லை என்பதாலேயே அது சலித்துப்போக்கூடும். மற்றுமொரு தருணம் வரும் வரைக்கும் உண்மைகள் காத்திருக்கின்றன எந்த குற்றவுணர்வும் உண்மைகளுக்கு இருப்பதில்லை பிரிவுகளுக்கு பிறகும் அவைகளால் நிகழுக்கு பொருந்த நெருங்க முடியும்.


இந்த உரையாடலுக்கு சற்றும் சம்பந்தமில்லாதவை என்று நான் நம்புகிற சில விசயங்களை இங்கே தட்டச்ச வேண்டியிருக்கிறது.முன் பின் அறியாத முகம் தெரியாத இரு உடல்களின் தொலைபேசி வழியான புணர்வுகளின் பரவல் குறித்து நீ அறிந்திருப்பாய், அந்த குரல்கள் உண்மையாய் இருக்கக்கூடும். அவை வெறுமனே பேசப்படுகிற வார்த்தைகளை அலங்காரம் செய்யப்பட்ட வெறும் சொற்களை உடல்கள் கண்டு கொண்ட பிறகு அவை தமக்கான பசியை தீர்த்துக்கொள்வதில் தீவிரமாய் இயங்க ஆரம்பிக்கின்றன. அவை மூடி வைக்கப்பட்டிருக்கற உனக்கும் எனக்கும் தெரிந்த இந்த சூழலின் போலித்தனங்களின் தடைகளை தமக்குத்தெரிந்த வழிகளினல் மீறுகின்றன. அவை ஆபத்தானவையாய் இருப்பினும் கூட திடீரென கிடைக்கிற உண்மையின் கிளர்வு மற்றும் உடலின் வேட்கைக்கான தற்காலிக தீர்வும் அசந்தர்ப்பங்களாக கசப்பான இந்த விசயங்களை நடத்தி விடுகின்றன.திறந்து விடப்பட்ட யாழப்பாணத்தின் இந்தப்பூனைகளா என்கிறதைப் போலானவர்களின் அந்தரங்கங்கள் குறித்து இவை பேசினாலும் உண்மை மிக மோசமான நிலையில் இருக்கிறது.

இந்த வெறும் விளக்கமற்ற குரல்களிலும் எனக்கு கோபமிருப்பதனால் இதை பின்பொரு விரிவான தளத்தில் உரையாடுவதற்காக விட்டுவிடலாம்.

________________________________________

காதல் குறித்த உன் அத்தனை கேள்விகளும் என்னிடமும் இருக்கிறது ஆனால் குறைந்த பட்டசமேனும் உண்மையான பதில்கள் என்னிடம் இருக்கிறது அவை உன்னிடம் இல்லாமல் போகலாம்.

தனக்கான ஒரு பொருந்தலை, உடலை, மொழியை ஒரு உயிர் கண்டு கொள்கிற கணங்கள் காதல் என்பதாய் இருக்கக்கூடும். உடலை தவிர்த்து மொழி தனியேயும் மொழியை தவிர்த்து உடல் தனியேயும் இயங்குவது நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு உறவாக இருக்கலாம்.மொழி என்பது சத்தங்களால் ஆனது மட்டுமல்ல பேசாதிருத்தலும் ஒரு வகையில் பேசுதலே.

உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்பதற்கான முழுமையை நீ கண்டு கொள்வதற்கு நீயும் நானும் இன்னும் பேச வேண்டியிருக்கலாம். அதை சொல்வதன் தயக்கம் உன் உண்மைத்தன்மைகளின் மீதான கேள்விளை எழுப்புகிறது. உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்பது ஒற்றைத்தன்மையுடையதாய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தனியே என்னைச்சார்ந்து மட்டும் இருக்க முடியாது.

அடிப்படையில் நீடித்த அன்பென்ற எதுவும் இருக்க முடியாது என்பதை நீ ஏற்றுக்கொள்கிறாய்தானே. எப்பொழுதும் காதல் நிரம்பிய வார்த்தைகளை என்னால் பேச முடியாது. எல்லா சமயங்களிலும் நம்பிக்கை தருகிற சொற்களை பேசுவது மிக மோசமான முகமூடிகளில் ஒன்றாய் இக்கலாம். வெறுமனே காத்திருப்புகளும் புனிதக்கதைகளும் கொண்டு காதல் பேச முடியாது. பசித்த உடல்கள் தோற்றுப்போய்விடுகின்றன; இதற்கு எனக்குதெரிந்து பத்து வருடங்கள் காதலித்த சயந்தனையும் சுனிதாவையும் குறித்த கதைகளை உதாரணமாக கொள்ளலாம் (எழுதப்படாத நாவல் ஒன்றில் நீளமான காதல் கதையிலிருந்து சில பகுதிகள் என்கிற கதையிலிருக்கிறது) சந்திக்க முடியாத தூரங்களில் இருக்கும் உறவில் (long distance relationship) எனக்கு பிடிப்பிருப்பதில்லை. அது வெறும் நிர்ப்பந்தங்களின் திணிப்பு, ஒரு வகையில் தன்னைத்தானே ஏமாற்றுதல். ஏற்கனவே இருந்த காதலையும் அன்பையும் கூட காத்திருப்பின் நிகழ் கலைத்துப்போட்டுவிடுகிறது என்பதே உண்மையாயக இருக்கலாம். காதல் தனித்திருக்கிற இரண்டு உடல்களின் மொழி, புரிதலின் வெளிப்பாடு. புனிதங்களும் ஒப்பனை செய்யப்பட்ட கதைகளும் அவற்றின் போதாமையை விரைவிலேயே நிரூபிக்கின்றன. அவை நம் சாதிய, மற்றும் கலாச்சார சமுதாய கட்டமைப்பின் சுதந்திரமற்ற தன்மையினால் வெளியே தெரியாமல் மூடப்படுகின்றன. அன்பு எப்பொழுதும் விறைத்த குறிகளைப்போல துருத்திக்கொண்டிருப்பதில்லை அது இயல்பாக வெளிப்படுகிற ஒன்று அதன் தருணங்களை கண்டடைதலும் நீட்டித்திருப்பதிலுமே பெரும்பாலான உறவுகள் வெற்றியடையக்கூடும் அவளை அவளாகவும் அவனை அவனாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது பொருந்துகிற உயிர்கள் ஒன்றை ஒன்று அதனதன் இயல்பு மாறாமல் ஏற்றக்கொள்தலே சிக்கலற்ற உறவு முறைக்கு சாத்தியமாயிருக்கலாம்.

காதல் எதிர்பார்ப்புகளின்பால் உருவாகிறது என்றாலும் திணித்தல் அதன் ஆயுளை குறைக்கிறது. புரிதல் என்கிற ஒன்றை குறித்து பேசாமல் எந்த உறவும் இருக்கவே முடியாது.
பரஸ்பரம் பயன் படுகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிற எந்த உறவும் தெரிந்தே சொல்கிற நேர்முக நிகழ்வுகளின் பொய்களைப்போலானவை, வெறும் மேடைகளுக்கானவை திரைக்குப்பின்னால் அவை ரகசிய விசாரணை அறைகளின் மூலையில் இருக்கிற இருளைப்போல அழுத்தமாய் உணரக்கூடியவை.

போதும் மாயா... சோர்வாயிருக்கிறது இப்போதிருக்கிற மனோநிலையில் அன்பை எவ்வளவு மறுதலித்தாலும் அது தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை.
இதை நான் உன்னோடு பேசவேண்டும் என நினைத்திருக்கவில்லை.ஆனால் யாருடனாவது பேசினால் தீரும் என்றிருந்திருக்கிறேன் வழக்கம்போல 'வேற பிராக்கில்லை' என்றே இதையும் சகித்துக்கொள்வாயாக.




உனக்கு பிடிக்காத சொற்களை
நான் எழுதாமலிருந்திருக்கலாம்
எனக்கு பிடித்தமான சொற்களை
நீ பேசாமலிருந்திருக்கலாம்


என்னை நீ அறிவாய் என்பதில்
எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது மாயா
உனது நெருக்கம்
எனக்கு நம்பிக்கை தருவதாய் இருக்கிறது
ஒப்பனை செய்யப்பட்ட வார்த்தைகளை
இனிமலும் உன்னோடு பேசப்போவதில்லை

நேரடியான சொற்களைக்கொண்டு இந்த
கசப்பான உரையாடலை மறந்து விடுவோம்

என்னை சகிக்கிற உன் திமிரை
மதுக்கோப்பைகளில் வழிய விட்டபடி
முத்தங்களுக்கான இடைவெளிகளில் அமர்ந்தபடி
இரவு முழுவதும் பேசலாம்.

ஏதோ ஒரு கணத்திலேனும்
காதல் நிகழும் படிக்கு நானும்
நிகழாதிருக்கும் படிக்கு நீயும்
பிடித்தமான பூனைக்குட்டிகளாய் மாறிவிடலாம்.


____________________________________________


பின் குறிப்பு:

//
இந்த பகிர்வை சாத்தியப்படுத்துகிற மாயா- 'ரகசியங்கள் உலாவுகிற அறையில் உறங்குபவள் பற்றிய குறிப்புகளுக்கு' சொந்தக்காரி இவளைக்குறித்து பின்னர் பேசலாம். இதுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் என்னை சகிக்கிற அவளுடைய கோபங்களுக்கு நன்றி.

//
அய்யனாரை துணைக்களைத்தபடி நிலைதகவல்களில் உரையாடுதல் என்பது இந்த குழம்பலின் தொடக்கப்புள்ளி, நன்றி அய்யனார்.

Friday, February 25, 2011

திவ்ய பாரதி - ஒரு எழுதி முடிக்கப்படாத குறிப்பு.



இந்த முகம்..



இந்த கறுப்பு வெள்ளை புள்ளி போட்ட ஆடையில் இதே மாதிரியானதொரு தோற்றத்தில் பிராச்சி தேசாய் once upon a time in mumbai படத்தில் வந்திருப்பார்.





இந்த கண்கள்...





இந்த அழகின் திமிர்..

_________________________________________________________

எனக்குத்தெரிந்த அளவில் இருபத்தியொரு படங்கள், இந்திய ஆண்மனங்களின் கனவுகளில் நுழைந்தது, முன்னணி நடிகர்கள் அனேகரும் தங்கள் படங்களில் நடிக்கவேண்டுமென விரும்பிய ஒரே அழகி, குறுகிய காலத்தில் அதிக வெற்றிப்படங்கள் என வெறும் பத்தொன்பதே வயதில் செத்துப்போன திவ்யபாரதியின் மறைவு இன்றைக்கும் மர்மமானதாகவே இருக்கிறது.

வசீகரங்களின் அசாதாரணமரணம் எப்பொழுதும் புதிர் நிறைந்தாகவே இருக்கிறது ஷோபா சில்க் என்று தமிழ் மனங்களை கொள்ளையடித்திருந்த அழகிகளின் சாவு அழுத்தமானவைதாம்.
சாவு மறைந்துவிடுகிற மரணம் இவர்களுடையது காலம் எதிர்பாராமல் பிரபலமாகிவிடுகிற இந்த முகங்களின் நிலைத்தல் அசாத்தியமானது.


திவ்யபாரதியை அவர் சாவதற்கு முன் நான் திரையில் பார்த்ததே இல்லை என்றாலும் இன்றும் ஹிந்தி சினிமா ரசிகர்களின் மனதில் அவருக்கான இடம் இருக்கிறது என்பதுதான் உண்மை. இப்பொழுது இருக்கிற நடிகைகளை தெரிகிறதோ இல்லையோ திவ்யபாரதியை அனேகம்பேருக்கு தெரிந்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையில் சிங்கள நண்பர்களுக்கு திவ்யபாரதியை நனக்கு தெரிந்திருக்கிறது. இலங்கையைப்பொறுத்த வரையில் தமிழர்களைவிட சிங்களவர்களுக்கு ஹிந்திப்படங்கள் குறித்து அதிகம் தெரிந்திருந்தது. ஹிந்திப்படங்களை அதிகம் பார்க்கிறவர்களாக சிங்களவர்களே இருந்திருக்கிறார்கள்.





தற்செயலாகத்தான் இந்தப்பாடலை பார்க்க நேர்ந்தது அதற்கு பிறகே இவரைக்குறித்து தேடிப்பார்த்தேன் வெறும் பத்தொன்பதே வயதில் இறந்து போனர்,அது ஒரு துர்மரணமாய் இருந்தது. அத்தோடு இதேபொல முன்பொரு முறை சில்க் நடித்த ஒரு பாடலின் மூலம் அவரைக்குறித்து தேடிப்பார்த்தபொழுது அதே நாளில் பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் அவர் இறந்திருந்தார் என்று தெரிய துணுக்குற்றுப்போனேன். அங்கே நான் எழுதிய சின்னக்குறிப்பை இன்னொரு நண்பர் பகிர்ந்திருந்தார்.அது அந்த வருடத்தின் சில்க் குறித்த முதல் பகிர்வாய் இருந்தது.


இப்பொழுதும் இரண்டு நாட்களுக்கு முன்னர் திவ்யபாரதியை தேடிய பொழுது அவர் பிறந்தது feb 25 என அறிந்து கொண்டேன். அப்பொழுதுதான் பத்தொன்பதுக்கு வந்திருந்த திவ்யா சாகும் பொழுது கைவசம் ஏறக்குறைய பன்னிரண்டு படங்களை வைத்திருந்திருக்கிறார். 16வயதில் சினிமாவுக்குள் வந்து ஆக மூன்றே வருடங்களில் அதிகம் படங்களை தன் வசம் எடுத்துக்கொணட்ட திவ்யபாரதிக்கு தொழில் முறை எதிரிகள் கூட இருந்திருக்கலாம்.

மிக வெளிப்படையான இந்த அழகின் மரணம் ஒரு பின்னிரவில் நடந்திருக்கலாம். நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் இந்த குறிப்பை எழுதி முடித்திருக்கும் இந்த நேரத்திற்கு முன்பாக. மக்களை கவர்ந்துவிடுகிற மரணங்கள் ஒரு வித துர்க்கனவாகவே இருக்கின்றன. இந்தக்குறிப்பும் ஒரு துர்க்கனவின் குறிப்பே.


Divya Bharti:

பிறந்தது 25 february 1974 மும்பை.

மறைந்தது 05 April 1993 மும்பை.

Monday, February 21, 2011

சினிமா - சில உதிரிக்குறிப்புகள்.

நீங்கள் எப்போதும் புது முகங்களைத் தேடுகிறீர்கள் பெரிய ஹீரோக்கள் நீங்கள் கேட்டால் வர மாட்டார்களா என்ன ?

ஹீரோக்கள்- அவர்கள் எல்லாம் செய்து சாதித்து முடித்துவிட்டது போல இருக்கிறார்கள். இமேஜ் பார்க்கிறார்கள்.இமேஜ் என்பதை தூக்கி எறிந்துவிடக்கூடிய எந்த ஹீரோவுடனும் நான் பணியாற்றத் தயாராக இருக்கிறேன், சினிமா என்பது விளையாட்டு அல்ல என்பதை உணரும் எந்த நடிகரும் என்னோடு பணியாற்ற தகுதியானவர்தான். -


ஆனந்த விகடனின் ஏதோ ஒரு பேட்டியில் இயக்குனர் Anurag Kayshap.



இந்த பதிலுக்கு கச்சிதமாகப் பொருந்துகிற ஹீரோ Abhay Deol நான் பார்த்த இவருடைய முதல் படம் தேவ் டி தான்.அதற்கு பிறகு சில படங்களை பார்க்க வேண்டும் என்று பார்த்திருக்கிறேன். கடைசியாக பார்த்த இவருடைய படம் DevBenegal இயக்கிய Road,Movie. இரண்டு பெயர் போல இவருடைய மற்றைய படங்களுக்கும் பெயர்கள் அப்படித்தான் இருக்கிறது. பல நாட்கள் பார்க்காமல் இருந்து கடந்த வாரம்தான் பார்த்திருந்தேன். வெகு குறைவாகவே மக்கள் பயன்படுத்துகிற ஒரு தனித்த பாதையில் நெடுந்தூர பயணம் ஒன்றில் சந்திக்கிற நாலுபேரைக் குறித்தது இந்தப்படம்.

தகப்பனின் எண்ணெய் வியாபாரத்தை விரும்பாத நடுத்தர வர்க்கத்து கனவுகளை கொண்டிருக்கிற ஒருவன் அதிலிருந்து தப்புவதற்காக கிடைக்கிற சந்தர்ப்பமாக முன்னாளில் ஒரு நகரும் திரையரங்காக இருந்த ஒரு பழைய ட்ரக் வாகனத்தை வெகு தொலைவில் இருக்கிற நகரத்திற்கு கொண்டு செல்ல சம்மதிக்கிறான். அந்த பயணத்தில் அவன் சந்திக்கிற மனிதர்களும் சம்பவங்களும், முடிவில் அவன் தன்னை கண்டுகொள்வதுமாக கதை சொல்கிறது படம். தண்ணீரைத்தேடி அலைகிற ஜனங்களை கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறுமனே வெளியாக கிடக்கிற இந்த பூமியை பார்க்க பயமாக இருக்கிறது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த உலகம் தண்ணீரோடு இருக்கும்? எனக்கென்னவோ இந்தப்படத்தில் என்னை பாதித்தது தண்ணீர்தான். உலகம் எவ்வளவு விசயங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் மனித விழுமியங்களில் எவ்வளவு தாக்கங்களை உண்டு செய்கின்றன. உண்மையில் பயணங்கள் கற்றுத்தருகின்றன.


கடந்த சில வருடங்களாக திரையுலகில் இருந்தாலும் சில நல்ல படங்களை நடித்திருந்தாலும் இன்னும் ஒரு புது நடிகரைப்போலவே ஆர்வமாய் இயங்குவது அபய்டியோலின் பலமாய் இருக்கலாம். இவரின் பெரும்பாலான படங்கள் இந்தியத்திரையுலகின் வழமையான கதாநாயகத் தனங்களோடு பொருந்துவதே இல்லை. அதுவே இவரை நல்ல நடிகராக காட்ட போதுமானதாய் இருக்கிறது . தேவ்-டி படத்தின் தேவ் பாத்திரத்தை செய்வதற்கு இமேஜ் போன்ற ஒளிவட்டங்கள் இருக்கிற நடிகர்களால் முடியாது. இவர் நடிக்கிற பாத்திரங்களை தமிழில் இருக்கிற நடிகர்கள் நடிப்பதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ தெரியாது. கதா நாயக வழிபாடும் பால் ஊத்துகிற ரசிகனும் இருந்தால் எப்படி நடக்கும்.


குஷாரிஷ் (Guzaarish)

Sanjai Leela Bansali செய்திருக்கிற இந்த படத்தை என்ன வாழ்க்கை இது, என்ன் செய்து கொண்டிருக்கிறேன் நான் என்கிற ஒரு சினம்பிடித்த மனோநிலையோடு சரியில்லாத உடம்பு நிலையில் பின்னிரவொன்றில் பார்க்கத்தொடங்கினேன். படத்தின் பாதி போகிற வரைக்கும் கூட என்னிடம் பெரிய ஒன்றுதல் எதுவும் இருக்கவில்லை.ஆனால் படம் எடுத்திருந்த விதம் என்னை தொடர்ந்தும் அதனை பார்க்க வைத்தது என்றே நினைக்கிறேன் ஒளிப்பதிவு அல்லது ஒளியை திரையில் பயன்படுத்துவது என்கிற விசயத்தில் இந்த இயக்குனரின் ரசனை நுட்பமானது அது அவருடைய மற்றைய படங்களிலேயே உணரமுடியும் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனை முழுமையாக பயன்படுத்தியதும் இவர் என்று கூட சொல்லலாம். பிளாக் (Black) மற்றும் சாவரியா படங்கள் அதற்கு சாட்சியாகலாம். படம் தொடங்குகிற அந்த முதல் நொடியே படத்தின் நேர்த்தியை சொல்கிறது .


குறைவான ஒளியிலேயே கண்கள் பிரகாசமாய் இருக்கிறது. அது போல திரையில் ஒளியை அளந்து வைக்கிற நுட்பம் காட்சி ஊடகத்துக்கு மிக முக்கியமானது என்றே நினைக்கிறேன். ஒரு மஜிக் கலைஞனின் கண்கள் ஒளி நிரம்பியவை அவனது வாழ்வு குறித்த திரையில் கமராவையும், ஒளியையும் சரியான விகிதத்தில் பயன் படுத்தியிருக்கிறதாய் நான் நம்புகிறேன். ஒரிஜினல் டிவிடியில் அல்லது திரையில் காண்கையில் அனுபவிக்க முடியும் இந்த ஒளிப்பதிவின், தொழில் நுட்பத்தின் விசாலத்தை.


உடம்பில் தலையைத்தவிர வேறெதையும் அசைக்க முடியாத மஜீஷியன் ஒருவனது வாழ்வை, வாழ்வின் மீதான காதலை சொல்கிற படத்துக்கு இயக்குனர் தெரிவு செய்திருந்தது ஹிருத்திக் ரோஷனை. ஹிந்தி தி ரையுலக நடிகர்களின் எண்ணிக்கையோ அல்லது வருகிறவர்கள் ஒவ்வொருவரும் மற்றொருவரை மிஞ்சுகிற அளவுக்கு இருப்பதிலோ என்னவோ ஹிருத்திக் முந்தையை படங்களில் இருந்து ஒரு பாய்ச்சலே நடத்தியிருக்கிறார் அவருடைய உடல் மொழியிலும் பார்க்க அந்த குரலில் இருக்கிற உணர்வு போதுமானதாயிருக்கிறது. இந்தக்கதையைப் பொறுத்தவரையில் ஹிருத்திக்கின் உடல்மொழியும் குரலும் பொருந்திக்கொள்கிறது. அது அந்த பாத்திரத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. முன்னாள் மெஜிக் கலைஞன் ஒருவனது தன் கருணைக்கொலைக்கான மனு குறித்த உரையாடல், நினைவுகள், துணைச்சம்பங்களோடு பயணிக்கிற கதையில். அவரை பராமரிக்கிற அழகான தாதியாக வருகிறார் ஐஸ்வர்யா, ஹா... அவர் வெறும் அழகி மட்டுமல்ல. சொல்லியே ஆகவேண்டிய ஒன்று ஐஸ்வர்யாவை சரியாக பயன்படுத்திய இயக்குனர்களில் இவரும் ஒருவர். இந்த நேரத்தில் நீங்கள் எந்திரனை நினைத்தால் உங்கள் மீது இடிவிழுக.ஐஸ்வர்யா இன்னும் குறைந்தது பத்து வருடங்களுக்கு நடிக்கலாம். படத்தில் ஹிருத்திக் சொல்வது போல இப்படி ஒரு Nurse இருந்தால் எப்படி?!



வாழ்வை இருப்பை குறித்த கேள்விகள் இருக்கிற மனங்களை கவரக்கூடிய படம். நிற்கவிடாமல் துரத்துகிற பணம் பின்னால் ஓடுகிற வாழ்வில் சில இடைத் தங்கல்களைத்தானும் கண்டிராத மனங்களுக்கு சலிப்பாயிருக்கலாம் இந்தப்படம். the Sea inside படம் குறித்த பகிர்வுகள் வாசித்திருந்ததன் மூலம் இந்தப்படம் பார்க்கையில் எனக்கு அந்தப்படத்தின் ஞாபகம் வந்து போயிற்று. படம் பார்த்து முடித்த பொழுதில் Facebookல் எழுதிய சின்ன் குறிப்பு பின் வருமாறு.
//Guzaarish - a hindi film by Sanjai Leela Bhansali : எனக்கிருந்த மனோநிலையோ என்னவோ படத்தின் கடைசி நிமிடங்களில் கரைந்து போனேன்.நெடு நாட்கள் இல்லாத கண்ணீர் ஏதோ காரணங்களுக்காக மனதார செலவாகியிருந்தது. வாழ்க்கை ரொம்ப சின்னது நண்பர்களே மன்னிப்பதற்கு தயங்கவே வேண்டாம், சிரிப்பதற்கு கிடைக்கிற எந்த சந்தர்ப்பத்தையும் இழந்துவிடாதீர்கள்.

Sau gram z...indagi yeh
Sambhaal ke kharchi hai - from the movie//


Life is very short my friends... but it's long enough if you live with all your heart. so , go on break the rules, forgive quickly, love truly and never regret anything that made you smile.


Dhobi Ghat:

அமீர்கான் தயாரிப்பில் அவருடைய மனைவி இயக்கி வெளிவந்திருந்த இந்த படத்தை போன வியாழனன்று பார்த்திருந்தேன்.இப்பல்லாம் ஹிந்திப்படம் பாக்கிறதுக்கு ஆங்கிலம் அநியாயத்திற்கு தேவைப்படுகிறது. படம் கிளைத்தன்மைகளோடு பயணித்தாலும் தொகுப்பில் நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிற திரைக்கதையாக உணர்கிறேன். சின்னசின்னதாய் ரசிக்க விசயங்கள் இருக்கிறது. பின்னணியில் வருகிற அந்த பாடல்களின் இசை எனக்கு பிடித்திருந்தது. அவள் தனியாகவும் அவன் அந்தப்படத்தையும் வரைகிற பொழுதுகளில் இருவருக்கும் இடையில் இருக்கிற உணர்வு ஒரே நேரத்தில் அதனை திரையில் காட்சிப்படுத்திய இயக்குனரின் தனித்தன்மை.அமீர்கான்,மோனிக்காவின் உடல் மொழி.அமீர் அந்த சாவை கண்டுகொண்டபின் அந்த இரவில் முடிகிற காட்சி, வண்ணம் கலையாத கைகளோடும் அந்த செயினோடும் கடற்கரையில் அமர்ந்திருப்பதாய் தொடர்வதும், இந்தக்காட்சியில் யாஸ்மின் கடலைக்குறித்து முன்னர் பேசிய வசனங்கள் நினைவுக்கு வருவதும் அவற்றின் கவித்துவமாய் இருக்ககலாம். அந்த கமாராவில் கதை சொல்லுகிற பெண்ணும் அந்த குரலும் படம் முடிந்த பிறகும் கேட்டபடியும் அலைந்தபடியும் இருப்பது.படத்தின் வசனங்களும் அளவாய் போதுமாய் இருந்தன. படம் நல்லாயிருந்தது என்பதை இப்படி சொல்லத்தெரியாமல் சொல்லுறதும் ஒரு இருக்கப்படாத குணம்தான்.
அமைதியான மனோநிலையை தரக்கூடிய அமைதியான படம்.

__________________________________________________

பல நாட்களாகியும் எழுத முடியாமல் போன இந்த குறிப்பை எழுத தொடங்கி கிட்டத்தட்ட மூன்று வாரங்களாகிறது. அடுத்த நகர்வுக்கு முன்னதாக இது ஒரு உதிரிக்குறிப்பாய் இருக்கட்டும். ஒழுங்கே இல்லாத சப்பென்ற இந்த குறிப்பை கிடப்பில் போடுகிற ஒவ்வாமையை தவிர்ப்பதற்காக இங்கே பகிரப்படுகிறது.

ஒரு குறிப்பை எழுதவே நேரம் கிடைக்கவில்லை buzz, twitter, blog, Facebook என எப்படித்தான் நேரம் ஒதுக்க முடிகிறதோ உங்களுக்கெல்லாம்?

Friday, January 21, 2011

நிகழ் குறிப்பு.

காலப்பெரு நதியில்...
நம் இருத்தலுக்கான புள்ளி நகர்ந்துகொண்டேயிருக்கிறது
கை மீறுகிற எல்லாம்
நாம் எழுதாமல்விட்ட புரட்சியாய் இருக்கலாம்
உனக்குப்புரியாத மொழிகளில் எழுதுவதில்
எனக்கு நம்பிக்கை இருப்பதில்லை...

உன் பாதுகாப்பான பெரு நகரங்களுக்கு
என்னை அழைத்துப்போ அவை
எங்காவது பனி விழுகிற நிலப்பரப்புகளில் இருக்கட்டும்.

உண்மையைச் சொல்லப்போனால்...


எல்லா தத்துவங்களையும்
பேசவும் வாசிக்கவும் தெரிகிறது
ஒருபிடி உதவியை...
விடிய விடிய யோசிக்கவேண்டியிருக்கிறது.

__________________________________________________

குறிப்பு: கடல் கடந்த இலக்கியம் என்பதும் இந்த சொற்கூட்டத்துக்கு வைக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்று.