Saturday, October 17, 2009

இடைவெளி...



image: lariza.com

எதை எழுதுவது... எழுதாமல் இருப்பதில் கனம் கூடிக்கொண்டேயிருக்கிறதா மூளை? இல்லையா... பிறகேன் இப்படி அலைக்கழிகிறது மனம். நிறைவடையாமல் இருக்கிறது நாட்கள்!

பைத்தியக்காரத்தனங்களோடிருக்கிறது இயல்பு... எனக்கிருக்கிற மனநிலை பாதிப்புக்கு என்ன பெயர்... தீபாவளிக்கு என்ன விஷேசம்... அவள் இந்த முறை வாழ்த்தனுப்பாவாளா? தமிழ்மணம்...வலைப்பதிவுகள்... கட்டுடைப்புகளின் சாத்தியமின்மை. உன்னைப்போல் ஒருவனும் வெடிகுண்டு முருகேசனும். ஒன்லைனுக்கு வராத அய்யனார்... அகப்படாமல் இருக்கிற சன்னாசி. சாருநிவேதிதா... இணையத்தேடு பொறிகள். எழுதாமல் கடந்து போன ஒரு மாதம்... இந்த பக்கதின் இரண்டாவது வருட நிறைவு.

கதைக்காமல் இருக்கிற காதல்... யாழ்ப்பாணத்து பொம்பிளைகளும் சமுதாய கட்டமைப்புகளும். எனக்கு நடக்கப்போகிற கல்யாணம்...வரப்போகிற மனைவி. சொல்லிக்கொண்டு பிரிந்த அவள்...நவீனத்துவங்களின் பிரதி...பழக்கப்படாத எழுத்து...வாசித்து முடிக்காத நவீனன் டைரி...சுசீலா...ஆதர்சங்ககளின் நாயகி.

ராஜபக்க்ஷேயும் தமிழக அரசியலும்...பிரபாகரனும் பிம்பத்தகர்ப்புகளும். மார்க்கசியமும் புதிய தோழர்களும்...காத்திருப்பின் இடைத்தங்கல் முகாம்கள்...மக்கள் மயமாக்கப்பட்ட வன்முறைகள். முனகிக்கொண்டிருக்கிற மாற்றுக்கருத்தியல்...அதிகாரங்களின் தீர்வு.பயமுறுத்திக்கொண்டிருக்கிற பணம்...விருப்பமில்லாத சராசரி வாழ்க்கை. திசைகளை தீர்மானிக்காத பயணம்... குறைந்தளவு போலித்தனங்களோடிருக்கிற இரவு...குறிகள் சொல்கிற கதைகள்... கடைமைக்கு நிகழ்கிற புணர்வுகள்...நிர்பந்தம் சுமக்கிற உறவுகள்.

இன்னும் படிக்கலாம் என்கிற யோசனை.சிறப்புத்தேர்ச்சி அடைய நினைக்கிற சமையல் கலை. சமையல், சமைதல்,சமைத்தல் என்பவை பற்றிய ரசனைகள்.எதிர்காலம் என்கிற திணிப்புகளும் தயார்படுத்தல்களும். ஏற்றுக்கொள்கிற பக்குவமில்லாத மனது... அம்மணமாயிருக்கிற உண்மை... திரவ வடிவிலான ஒழுக்கம். போலிகள் வரைகிற விதிகள்... உடல் மீதான புலன்களின் ஆதிக்கம்.

முன்றாந்தரத்து நீலப்படங்கள்...உடல் மீது நிகழ்கிற வன்முறை... சத்தம் நிறுத்திவைத்து அவற்றைப்பார்க்கிற ஒருவனின் சப்பைக்கட்டுகள்... கடவுள் அமைத்து வைத்த மேடை... கடவுளை உணர்கிற சாராயக்கடை. யாரென்றே தெரியாத ஒருத்தியின் உள்ளாடைகள் பற்றிய ஆராய்ச்சி... தொலைபேசியினூடான வெளியேற்றங்கள்.

எழுதுவதென்கிற நமைச்சல்...அசௌகரியம் தருகிற சூழல்...திணிக்கப்பட்ட வாழ்வு. எழுதாமல் இருக்கிறதன் பாதிப்பும் விளைவும். தோழிகள் இல்லாத அரபு தேசம்... மறைவில் கழுவுகிற அழுக்கு... புனிதங்களின் மீதான அவநம்பிக்கை...பாவம் புண்ணியம் பணியாரம்!
தன்முனைப்புகளின் மீதிருக்கிற அக்கறையும் பிடித்தமும்.முகங்களை மறைக்கிற குறிகள் தனிமைப்படுத்தலின் விளைவு. பலவீனர்களின் பிரசங்கம்...குற்றவுணர்வுகள் இணையச்சாமியார்களின் வளர்ச்சி. கடவுளை தேடுகிற கூகுள்,இணையக்குழுமங்களில் கடவுளின் பங்களிப்பு...மின்னஞ்சலில் வருகிற பக்தி.

இடைக்காலப்பாடல்களின் வாசனை... இரவில் அணிகிற ஆடை.பருத்தித்துறை ஊராம் பளக்கொடி பேராம்.ஊரிலிருக்கிற குடும்பம்...அப்பாவோடு பேச நியை இருக்கிறது... அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய நம்பிக்கை. தீர்க்கவேண்டிய கடன்...பொறுப்புகள் அல்லது நிர்ப்பந்தங்கள். எதிர்காலம்...திட்டமிடல்... கோடு போட்டு வைத்திருக்கிற வாழ்கை. சும்மா இருத்தல்... கணங்களில் வாழ்தல்!

வாசித்தல்... எழுதுதல்...எழுதாமலிருத்தல்...எழுதவேண்டும் என்கிற இருக்கப்படாத குணம். எழுதுதல்...எழுதி எழுதி எழுத்தாகுதல். நானெழுதுகிற நாவல்... எழுத நினைக்கிற ஊரின் கதை... ஊரின் மறைவாய் கதைக்கப்படுகிற பெண்கள். அவள் எனக்கு சொன்ன கதை... பிரதியை எழுதுகிற ஆசிரியன்... ஆசிரியன் இறந்து போன பிரதி... வாசகனுக்கும் எழுத்துக்குமான இடைவெளி-



வாசிக்கிறவன் எழுதாமலிருக்கிற சொற்களை கண்டடைதலுக்கான பிரதியிலிருக்கிற சாத்தியங்கள்.


தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லியே ஆகவேண்டுமா...?



நீ கற்பனை செய்கிற எனக்கான பிம்பங்களில்
பொருந்த முடியாமைக்கு வருந்துகிறேன் தோழி..
நீ அறியாத ஆதிக்கணமொன்றில் நிகழ்திருக்கலாம்
நெருக்கத்திற்கான முதல் துளி...
நீள் வளையப்பாதையில் இயங்குகிற பூமி
எந்தக்கணத்திலும் நின்று போகலாம்...
தன் முனைப்புகள் இல்லாத ஈர்ப்பின் மீது
நீடித்திருக்கிறது காதல்
இடவெளிகள் மாறுகிற கணங்களில் நிகழக்கூடும்
இயங்க மறுக்கிற பூமியும்
நெருக்கத்திற்கான கடைசித்துளியும்.



புனைவுகளையும் கனவுகளையும் சாத்தியப்படுத்துகிற உனக்கு...

Wednesday, September 9, 2009

கதையாட வந்த கதை...





"வயதுபோய்கொணடிருக்கு இதுவரையும் இந்த உலகத்துக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்ற ஏக்கத்தில் ஏதாவது எனக்கு தெரிந்ததை எழுதலாமெண்டு (ஒருத்தரும் படிக்காட்டாலும் பரவாயில்லை) வந்திருக்கிறன் அன்பு நெஞ்சங்களே…உள்ள வரலாம்தானே…?"

எப்படி ஆரம்பித்திருக்கிறேன் என்று மறுபடி வாசித்துப்பார்க்கையில் சத்தமாய் சிரிக்கத்தான் தோன்றுகிறது.எழுத இருந்த கதையை தயக்கமில்லாமல் எழுத வைத்த இந்த தொடர் பதிவின் தொடக்க நண்பருக்கும்,பனையூரான் மற்றும் அருண்மொழி என்கிற சொந்தங்களின் அழைப்புக்கும் நன்றி.தாமதத்துக்கான காரணம் கடைசியில் இருக்கிறது நண்பர்களே.


அடிப்படையில் நானொரு வேற்றுக்கிரக வாசி..
(உன்னை பதிவெழுத வந்த கதைதான் சொல்லச்சொல்லி இருக்கிறோம்)
தளம்பல் நிலையிலிருக்கிற மனது,"ஒரு..விதமான" மொழி, தனித்தும் கூடியும் இருக்க விரும்புகிற குணம்,திறந்து வைத்த வாழ்க்கை,என்று எனக்கே புதிதாய் தெரிகிற ஒருவன்!அப்படி இருந்த இவனுக்குத்தான் வேற்றுக்கிரகத்தின் இளவரசன் என்று பெயர் வைத்துக்கொண்டேன். எப்பொழுதும் கற்பனைகளில்தான் வாழ்வு சுகமானதாய் இருக்கிறது. திட்டமிட்டு வைத்திருக்கிற எதிர்காலம் நினைத்துப்பார்க்கிற கடந்தகாலம் என சந்தோசமாயிருக்கிற மனது. நிகழ்காலத்தில் சந்தோசமாயிருப்பது என்னவோ வாசிக்கிற, காதலிக்கிற, எழுதுகிற அல்லது போதையிலிருக்கிற பொழுதுகளில்தான்.முதல் சொன்ன மூன்றுமே இந்த போதையைப்போல் இருப்பதற்கு நான் பொறுப்பல்ல.

பொதுவாகவே மொழியை அனுபவிக்கத்தொடங்கிய நாளில் இருந்து நாட்குறிப்பு,அது, இது, கவிதை என்கிறபெயரில் ஏதாவது என்று கையில கிடைக்கிற கடதாசிகளில் நரி வெருட்டினது மாதிரி இடைக்கிடை எழுதுவது எனக்கொரு வியாதியாயிருந்தது. நாட்குறிப்பை தொடர்ச்சியாய் எழுதாதற்காக என்னை இதுவரையும் எத்தனை தடைவைகள் திட்டியிருப்பேன் என்று எனக்கு நினைவில் இல்லை.அப்படி நாளொன்றுக்கு இருபத்தினாலு மணி நேரங்கள் போதமால் இருந்த வாழ்க்கை முறையில் இருந்து வெளியேறி; ஒரே விதமான நாட்களில் சலிக்க ஆரம்பித்திருந்ததும் என்னுடைய வாழ்க்கை முறைக்கு சற்றும் தொடர்பில்லாததுமான ஒரு வாழ்க்கைக்குள் அகப்பட்டுக்கொண்ட என்னை விடுவிக்க கிடைத்த விசயம் இணையம்.

வெளியேற்ற முடியாத படிக்கு நிறைந்து கிடக்கிற சொற்களை வலுக்கட்டாயமாக யாரிடமாவது திணிக்கிற முயற்சியில் எழுத ஆரம்பித்ததுதான் என் நினவின் வெளியில் நான்(URL)என்கிற என்னுடைய உலகம் பதிவுக்கு அப்படித்தான் பெயர் வைத்திருந்தேன். சொல்லித்தீராத காதல்,அவள்கள்,அனுபவித்த உலகம், பெருங்கருவிருளெனச் சூழ்ந்தும் பொழியாது விலகுகிற மேகங்களென எழுதப்படாத சொற்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வகை திண்ம நிலைக்கென்னை அழைத்துப்போக...

இனி வேண்டாம் இந்த வில்லங்கம் என தேடிக்கொண்ட ஒரு வெளியேற்றம்தான் இணையமும் எழுதுதலும்.நானொரு எழுதுபவன் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்.நானொரு சொற்கள் தின்னுகிற மிருகம் அது முதலாவது. சின்ன வயதிலிருந்தே வாசிக்கிற பழக்கம் இருந்திருந்தாலும் எவற்றை வாசிப்பென்பது இணையம் எனக்கு கொடுத்த முக்கியமான விசயங்களில் ஒன்று.

இதே போல என்னை ஆச்சரியப்படுத்துகிற அல்லது எனக்கு கிடைத்த முக்கியமான விசயம் என்னுடைய அலைவரிசையில் குவிந்து கிடக்கிற இணையத்து நண்பர்கள் அப்படி நெருக்கமான எழுத்துகளை எழுதுபவர்கள் அனேகம் ஆண்களாய் போனார்கள்.முகம் தெரியாத நட்பு மனதுக்கு நெருக்கமாகி விடுகிற இந்த சாத்தியப்பாடுகளை இணையம் கொடுத்திருக்கிறது.ஒரு சில நண்பர்களை நேரில் பார்த்தும் இருக்கிறேன்.இங்கே அடைபட்டுக்கிடந்த வாழ்வை எழுத்தின் மூலகம் திறந்து கொடுத்திருக்கிறது இணையம் . இலக்கியம் வாசிப்பென கதையாடுவதற்கு அருகாமையில் ஜமாலன், முபாரக், ரௌத்ரன் என்று நல்ல வட்டம் ஒன்று வாய்த்திருக்கிறது.

சவுதி எனக்கு கொடுத்த விசயம் வாசிப்பும் சொற்கள் தின்னுகிற எனக்கான வெளியும்தான்.

ஆனால் பல எழுத்தையும் புத்தகங்களையும் பார்க்கிற பொழுதுகளில் எரிச்சல் உண்டாகுவதற்கும் எதையோ இழந்தது போல இருப்பதற்கும் எனக்குள் இருக்கிற சொற்கள் காரணமாக இருக்கலாம் என்பது எப்பொழுதும் என்னை உறுத்திக்கொண்டிருந்த விசயம்.இந்த வாக்கியத்தை தனிப்பதிவாக எழுத முடியும்.நானும் எழுத வந்ததுக்கு இதுவும் ஒரு காரணமாகலாம்.

காதல் என்கிற சொல்லைத்தான் இணையத்தில் முதன் முதலாக தமிழில் தேடினேன் அப்பொழுது அறியக்கிடைத்ததுதான் சந்திரவதானாவின் பதிவு,அங்கிருந்து ஆரம்பித்ததுதான் வலைப்பதிவுகள் வாசிப்பு.மதிகந்தசாமியின் வலைப்பதிவுகள் பட்டியலில் இருந்து தொடங்கியது பயணம், நிறைய பதிவுகளை யாரென்றே தெரியாமல் வாசித்துக்கொண்டிருந்தேன்.பதிவுக்கு வரமுன்பே பதிவரசியல் பதிவுகள் எல்லாம் படித்திருந்தேன்.இந்த காதல் சார்ந்ததொரு மிமுதி அறிமுகத்தை மற்றொரு பதிவில் எழுதுவேன்.


இரவுப்பணியில் இருந்த ஒரு நாள் வழக்கம்போல வாசித்துக்கொண்டிருந்த பதிவுகளில் ஒன்று நளாயினி தாமரைச்செல்வனுடையது. "சரி யாழ்ப்பாணத்து ஆள்தானே கதைச்சுப்பாக்கலாம்" என்கிற ஒரு உந்துதலில் அழைத்து அறிமுகப்படுத்திக்கொண்டேன்.சிலமாதங்களில் என் சம்பளம் முழுவதையுமே பேசித்தீர்த்திருந்த என் தொலைபேசிச்சிக்கலை அவரிடம் சொன்னேன். அவரே அழைத்து சரி சொல்லுங்கோ என்ற அறிமுகத்தினூடு பகிர்ந்து கொண்டவை நிறைய,பதிவர்கள் என்கிற வரிசையில் எனக்கு முதல் அறிமுகமானது இவதான்.

நல்ல தோழியான அவரிடமிருந்து இப்படித்தான் பதிவது என்கிற தொழில் நுட்பத்தை தெரிந்து கொண்டேன். உங்களுக்கு பாமினியில் எழுதத்தெரியுமா என்று கேட்டவர்; அவர் பயன்படுத்திக்கொண்டிருந்த சுரதாவின் பொங்கு தமிழ் எழுதியை அறிமுகப்படுத்தினார். மங்கலாக நினைவிலிருந்த பாமினி விசைப்பலகையை நினைவிலெடுத்துக்கொண்டு ஆரம்பித்த அற்றிலிருந்து இன்று வரையும் அதே சுரதாவின் பொங்கு தமிழ் எழுதியேதான் நான் பயன் படுத்திக்கொண்டிருப்பது.

சுரதாவின் பாமனியிலிருந்து யுனிகோட் முறையில் எனக்கிருக்கிற பிரச்சனை நேரச்சிக்கலும் இந்த கமாவை தட்டச்சினால் 'இ'னாவாக வருவதும்தான் மற்றும்படி பெரிதாக வேறெந்த சிக்கலும் தெரியவில்லை ஒரு வேளை இது பழக்கப்படதால் இருக்கலாம் ஆனால் NHM-எழுதி வசதியாயிருக்கிறது என்றுதான் பலரது கருத்தும் இருக்கிறது ஒரே ஒரு முறை பயன் படுத்தி பார்த்திருக்கிறேன் மடிக்கணினி ஒன்றில்.சுரதா பிரச்சனையில்லாமல் இருக்கிறது.

பெரும்பாலும் அலுவலக கணினியிலேயே இணையம் பயன் படுத்துகிறேன் என்பதும் நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் எதையும் தரவிறக்கி சேமிக்க முடியாது என்கிற காரணத்தினாலும் இப்பொழுதும் வேறெந்த வழிக்கும் போகவில்லை.அது தவிர இந்த கணினி தொடர்பான தொழில் நுட்பம் எனக்கு அப்பாற்பட்ட விசயமாகவே எப்பொழுதுமிருக்கிறது அல்லது சலிப்பூட்டுவதாய் இருக்கிறது. கணினி என்கிற விசயத்தின் மீதிருந்த ஆச்சரியமும் விருப்பமும் அது கிடைக்காமல் போன நாளிலிருந்து அல்லது எனக்கு பிடித்தமான துறை ஒன்றிற்குள் நுழைந்ததிலிருந்து இல்லாமல் போயிற்று.



அருண் மொழி வர்மன்:
என்னைப்போலவே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எண்டு குதியன் குத்திக்கொண்டு திரிஞ்ச அதே செட்தான். தீவிர எழுதுத்துகளில் முன்னேறிக்கொண்டிருக்கிற ஒருவர்.கனேடிய இலக்கியச்சூழலில் இருந்து புறப்பட்டிருக்கிற இன்னொரு இலக்கியப்புயல் இது பல கரைகளை கடக்கும் என்பது மட்டும் தெளிவாயிருக்கிறது. உண்மையில் கனடாவிலிருக்கிற இந்த இலக்கியவட்டத்துக்காகவே குறைந்தளவு காலமேனும் கனடாவில் வாழவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதோடு பதிவுலகம் சாராத சில பேருக்கு தகடும் குடுக்க இருக்கு.

பனையூரான்

ஒரே ஊர், வட்டமா இருந்து சோடா குடிச்ச அளவுக்கு நெருக்கம் இருக்கு. இவ்வளவும் போதும் எனக்கு அவருக்குமான தொடர்பைப்பற்றி சொல்ல. ஆள் ஒரு மண்டைக்காய் . பரந்த பார்வையோடு எழுத ஆரம்பித்திருக்கிற இவருடைய எழுத்துக்கள் இன்னும் தீவிரமாகலாம்.குறுக்கால ஆராய்கிறபழக்கம் இருக்கிற இவர் எழுதுகிற விசயங்கள் இன்னும் பல பரிமாணங்களை பெறக்கூடும்.



இனி நான் சண்டைக்கு வராத ஆட்களாய் பார்த்து மாட்டி விட வேண்டும்...

ரௌத்ரன் - தீவிரமான தேடல்களோடு இருக்கிற இவர் இப்பொழுது இதே ஊரில் பொழுது போகமால் இருக்கிறார்.

நளாயினி நல்ல தோழி இந்த உலகத்துக்குள் வருவதற்கு பாதை கொடுத்தவர்.இலகுவான மொழியில் எழுதிச்செல்கிற, பல நாட்களாக எழுதாமல் மறைந்திருக்கிற இவரை இந்த முறை எப்படியும் எழுத வைத்து விட வேண்டும்.


முரண்வெளி - இவருடைய வாசிப்பும் பதிவுகளும் அடர்த்தியானதொன்று அடிக்கடி பெயர் மாறி இடம்மாறி எழுதிக்கொண்டிருந்த இவர் இப்பொழுது facebook கில் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்.



1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

3. கதை சொல்லுபவர்கள் தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழில்நுட்பங்கள் சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்...


சொல்லாமல் விட்ட விசயங்கள் இருக்கிற, எண்ணிக்கை வரிசையில் நூறைத்தொட்டிருக்கிற இந்தப்பதிவு.

எனக்கான கூட்டை சுமந்திருக்கிற தும்பளைக்கு...

Monday, September 7, 2009

பயம்...!




சமநிலை இல்லாத உடம்பு
பெரும்பாரமெனவிருக்க விடிந்த பிறகே
உறங்கப்பழகியிருக்கிற இந்த நாட்களை
கெட்டுப்போன கண்களோடு
பார்த்துக்கொண்டிருக்கிறது இரவு

குறையாமல் இருக்கிற குளிருக்குத் தெரிவதில்லை
இன்னும் நான் இப்படியே இருக்க வேண்டிய
நாட்களின் எண்ணிக்கை மீதமிருப்பது,

என்னோடு ஒத்துழைக்க மறுக்கிற நாட்கள்
என்னை அவளுக்கு அறிமுகப்படுத்த
வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறது,

யாரையும் குறைசொல்ல முடியாதபடிக்கு இருக்கிறது
என்னை பரிசோதிக்கிற நிகழ்வில்
குற்றவுணர்வின் நியாயம்,

எல்லோரும் உறங்கிய பின்னிரவுகளில்
அந்தரங்கம் திறந்து கிடக்க
பயமுறுத்திக்கொண்டிருக்கிறது சுயம்!



picture: flickr

குறிப்புகள்:

\\
எதையோ எழுதத்தொடங்கிய சொற்கள் இப்படி முடிந்திருக்கிறது. எண்பத்தொரு வெள்ளைநிறத்தாள்களை கறுப்பு மற்றும் நீல நிறச் சொற்கள் கொண்டு நிரப்பியிருந்த அந்தக்கதையிலிருந்து சில சொற்களை மட்டும் எடுத்து கோர்திருக்கிறேன்.

\\
எழுதியவனும் இல்லாத முடிவும் இல்லாத இந்தக்கதைக்கு நான் வைத்திருக்கிற தலைப்பு- ஆயிரத்து இரு நூற்று இருபத்தேழு நாட்கள் திறக்கப்படாத ஜன்னல்.

\\
இந்தக்கதைக்கும் எனக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.எனக்கு தெரிந்த வகையில் குளிர் என்பதொரு குறியீடாக இருக்கலாம்.

Monday, August 24, 2009

And, Now...






எப்பொழுதும் தீராத சொற்களோடு
எழுதுபவனொருவன் இருந்தான் என்னிடம்
ஏகாந்தம் மிகுகிற நேரங்களிலெல்லாம்
என்னுள் நிரம்புகிற சொற்களை வரைந்து கொண்டிருப்பான்,

எழுதி எழுதி எழுதித்தீராமல்
இருந்தது அவளுக்கான சொற்கள்.

எதிர்பாராததொரு மத்தியானத்தில்
என்னை மறந்து விடென்று விலகிப்போனாள்.

சொற்கள் நிரம்பித்திணற,
இப்பொழுது...
காணாமல் போனான் எழுதுபவன்!


பின்குறிப்புகள்:

ஆயில்யன்

தல

ரொம்ப நல்லவரு

ஜமால்

சென்னை ஆச்சி.



எப்பூடி..

Friday, August 14, 2009

பல்லிகள் உலாவுகிற அறை...




பூச்சி...

மல்லாந்து கிடக்கிற கரப்பான் பூச்சியின்
காற்றில் அலைகிற கால்களைப்போல
நூலிழைப்பிரியத்திற்காய் காத்திருக்கிறதெனது காலம்,

பழக்கமில்லாத தெருவில் உறுமுகிற நாயொன்றின்-
சாயலோடு என்னை பார்த்துக்கொண்டிருக்கிறது
சுவர் மீது விழித்திருக்கிற பல்லி,

அது அசையாமல் வைத்திருக்கிற வாலின் இலக்கு
எதிரேயிருக்கிற பூச்சியை குறி வைத்திருக்கிறது
விலகுதலுக்கு காத்திருக்கிறது பூச்சி,

வினாடிகளை சப்திக்கிற கடிகாரம்
பரலோகத்திலிருக்கிற பிதாக்களை எழுப்பிக்கொண்டிருக்கிறது
பல்லி பூச்சியை கவ்வுகிற வினாடியில்...

என்னை கடந்து போகிறது காலம்!



பின் குறிப்புகள்:

பல்லியும், பூச்சியும், கரப்பான்களும் பலவகைப் படிமங்களுக்கு அடிகோல்கிற விசயங்கள். மீதமிருக்கிற போதையோடு உறங்கப்போகையில் பல்லிகள் பற்றி எழுகிற சொற்களை எழுதி வைக்கத்தவறிவிடுகிறது எனது சோம்பல் அல்லது அலட்சியம்.

பல்லி முட்டைகள், கறுப்பு எச்சங்கள், அடிக்கடி பேசிச்செல்கிற பல்லிச்சத்தங்கள் என இருக்கும் என்னுடைய அறை. அப்பொழுதெல்லாம் பல்லிகளை கவனிப்பதற்கே நேரம் இருப்பதில்லை இப்பொழுது பல்லிகள் கனவில் வேறு வருகிறது ஆனால் பல்லிகளை காண்பதுதான் அரிதாயிருக்கிறது.மேசையிலிருக்கிற கொப்பிகளின் மேல் புணர்கிற பல்லிகளைக்கூட கவனித்ததில்லை என்னுடைய இரவுகள்.அந்த அளவுக்கு இரவுகளை களவாடியிருந்ததவள் நினைவுகள்.

கடந்த இரவில் குடித்துவைத்த தேத்தண்ணிக்கிளாசை சரிக்கிற சாம்பல் நிறப்பல்லி ஒவ்வொரு காலையிலும் என் கண்களில் படும். பல நாட்களை நான் கொஞ்சம் பெரிய அளவில் பயமுறுத்துவது போல் பார்க்கிற அந்த பல்லிக்கான புன்முறுவல் அல்லது வசையோடு தொடங்கியிருக்கிறேன்.ஆனால் ஒரு போதும் அதனை தாக்க முயன்றதில்லை.

இந்த சொற்களை எழுதிக்கொண்டிருக்கையில் கூட காதல், பெண்மை, காமம், குற்றவுணர்வு பயம், என நிறைய விசயங்கள் வந்து போயிற்று. இந்தசொற்களுனுக்கான புரிதல்களை உங்களிடமே விட்டுவிடுகிறேன்!

பல்லிகள் எப்பொழுதும் பேசுவவதில்லை.எப்பொழுதாவது பேசுகின்றன அப்பொழுது அவை பயமுறுத்தவும் செய்கின்றன.

தொடர்ந்து பல்லிகள் பேசுவதை கேட்கலாம்.


picture: http://www.redbubble.com/

Friday, August 7, 2009

பெரு நினைவுகள் எழுதுகிற சிறு குறிப்புகள் - 01





தேகம் திமிர் பிடித்தலைந்து கொண்டிருக்கிற காலமிது
பிடிமானமில்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறது மனது
கட்டிப்போடுகிற பிரியங்கள் கொண்டென்னை இறுகப்பற்றிக்கொள்
உனக்கான யதார்த்தங்களை சுமந்தலைகிறதெனது உயிர்
என்னை கையாள்கிற நிதானங்கள் உனக்கிருக்கிறதாய்
உனது பற்றுதலுக்கு காத்திருக்கிறதெனது கணங்கள்
காலம் இனிய பதிலொன்றை சொல்லக்கூடும்
நீ என்னை காதலிக்காமல் இருந்து விடாதே.

____________________________________________________

பார்க்கிற பெண்களோடெல்லாம் தனகிக்கொண்டு திரிந்த என்னோடு தனகுகிறவளாக வந்த ராட்சஸி, மயக்கம் தருகிற கறுப்பு நிறமென காலத்தை கடத்திக்கொண்டு போகிற அழகுகளோடு எனக்குள் வரையப்பட்டிருந்த பெண்மைய உருவெடுத்து நடமாடினாள்.

காலம் நானறிய என் வாழ்வை கொண்டாடத்தொடங்கிய நாட்களின் தொடக்கமிது பரவசங்களை புதிது புதிதாய் அறிமுகம் செய்து கொண்டே இருந்தாள் அவள். இது வரை எழுதப்பட்ட என் வாழ்வின் வாசனை மிகுந்த நாட்குறிப்புகளுக்கு சொந்தக்காரியாய் அவளிருக்கிறாள்.

ஞாபகங்கள் தின்று கொண்டிருக்கிற எனக்குள் இருந்து பெருகிக்கொண்டிருக்கிற சொற்களை எழுதத் தொடங்கியிருக்கிறேன் இது இத்தோடு முடிந்து விடுகிற விசயம் போல் தெரியவில்லை இதன் முடிவில் அல்லது ஏதோவொரு பகுதியல் உங்களுக்கு கறுப்பியை அறிமுகப்படுத்துவேன்.


picture:photographersdirect.com

Thursday, August 6, 2009

சுவாரஸ்யமில்லாத பதிவு...

என்ன கேட்டாலும் சலிக்காமல் செய்து கொடுக்கிற அன்பானவர். அட பாவிகளா நாந்தானா கிடைச்சேன் என்று கேட்டாலும் என் அறுவைகளுக்கெல்லாம் கழுத்தைக்கொடுத்து விட்டு சிரித்தபடி இருக்கிற தல தமிழ்பிரியன் மூலமாக கிடைத்திருந்தது ஒரு சந்தர்ப்பம். ஆனால் அதை எப்படி பயன் படுத்துவதென்று தெரியவில்லை அனேகமாய் எனக்கு தெரிந்த அனைவரும் ஏதோ ஒரு வரிடமிருந்து இந்து பகிர்வை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.


எனக்கு புதிதாய் யாரையும் தெரியவில்லை நேரமில்லாததும் என் அடிப்படை இயல்புகளில் ஒன்றான மிகு சோம்பலையும் தவிர்க்க முடியாததில் அதிகம் படிக்கவும் முடிவதில்லை இணையத்தில், அதனால் பல பதிவர்களை தவற விட்டுக்கொண்டிருக்கிறேன்.


பழையவர்களை திரும்ப எழுத அழைப்பதற்காகத்தான் இந்த சந்தர்ப்பத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன் யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத படிக்கு நேரம் சதி செய்திருக்கிறது ஆனால் மனதுக்குள் நிறையப்பேரை நினைத்திருந்தேன்.இதில் முக்கியமான ஒரு பதிவர் அண்ணன் செந்தழல்ரவிதான்.





இது மட்டுமல்ல இளமைக்காலங்கள் என்று ஒரு தொடர் பதிவுக்கும் என்னை அழைத்திருந்தார் அந்த பதிவையும் எழுதுகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேனேயொழிய எழுதவில்லை( இதை தானேய்யா மூணு மாதமா சொல்லுற). இதை ஒரு சில குறிப்புகள், புகைப்படங்களோடு தரலாம் என நினைத்திருக்கிறேன் ஆனால் புகைப்படங்களும் உறுதியான தகவல்களும் எனக்கின்னும் கிடைக்கவில்லை அவ்வளவுதான் இதுக்கான காரணம்.

முடிந்தவரை ஞானசம்பந்தர் கலைமன்றம் பற்றி முழுமையான ஆவணமாக அதனை எழுத நினைத்திருக்கிறேன் அதனால இந்த இளைமைக்காலங்கள் தொடர் பதிவை எழுதுறதுக்கு எனக்கு பதிலாக நிஜமா நல்லவைனை மேடைக்கு அழைக்கிறேன், அண்ணன் கொசுவத்தி சுத்துறதுல நெம்ப திறமையான ஆள் என்பது அவரது பதிவுகளை படிச்ச ஆக்களுக்கு தெரியும் அழகா feel பண்ணி எழுதுவார்.

பணி நிமித்தம் வேறு இடத்துக்கு மாற்றலாக வேண்டிய காரணம் இருப்பதால் இன்றொடு இணையத்தொடர்புகள் சில நாட்களுக்கு இருக்காதென்று உங்களுக்கெல்லாம் நல்ல செய்தி சொல்லி இருக்கும் தமிழ்பிரியன் படிக்க வேண்டும் என்பதற்காகவே அவசரமாய் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

*நேற்றெழுதிய பதிவு,ஆனா சோகம் என்னன்னா அதை இப்பொழுதுதான் பதிவாக்க முடிந்திருக்கிறது.


சவுதி வாழ்க்கையில் எனக்கிருக்கிற ஒரே வரவு இணையம்தான். இணையம் மூலம்தான் வேறொரு உலகம் எனக்கு கிடைத்திருக்கிறது.முன்னர் இருந்த நிலையிலிருந்து வெகுவாக மாறியிருக்கிறேன் இது பற்றி பின்னர்.ஏற்கனவே இருக்கனிற ஜமாலன்,முபாரக்(இவர்கள் இருவரும் இங்கே இருப்பது எனக்கு கிடைத்த சந்தர்ப்பம், அவர்களுக்கு அமைந்த கொடுமை)மற்றும் gulftamilan ஆகியோரோடு ரௌத்ரனும் அருகே வந்து சேர்ந்திருக்கிறார். இவருக்கு என்னை விட வயது அதிகமிருக்குமென்று நினைத்தேன் பெயர்தான் ரௌத்ரனே ஒழிய மென்மையாய் பெண்களுக்கு மிகப்பிடிக்கிற தோற்றத்தில் கலரும் மீசையுமாய் கலக்கலாய் இருக்கிறார்.

)

Gulftamilan -
பழைய காலம் முதலான வலைப்பூ வாசகர் பல பதிவர்களுக்கு மறந்து போன அவர்கள் பதிவுகளை கூட நினைவில் வைத்திருக்கிற ஒருவர்.


விதண்டாவாதம்:

இவனுக்கெல்லாம் ஒரு பதிவர்ங்கிற அங்கீகாரத்தை கொடுத்தா பதிவே எழுதாம பதிவு போடுறான் பாருய்யா என்று நிறைய குத்துகள் வரும் என்ன செய்வது மக்கள் நேரமின்மை சதி செய்து விட்டது.(எழுத தெரியவில்லை என்பதை வேறெப்படி சொல்ல)


*விருது கொடுத்த அண்ணனுக்கு நன்றிகள்.