#
ஆதிப் பெண்தெய்வமென வரலாற்றின்
பெரு மௌனங்களை சுமந்தபடி இருக்கிறாய் நீ
ஒரு பிரார்த்தனைப் பாடலென
உன் முன்னே விழுந்து கிடக்கிறதெனது காதல்.
#
தொப்பலாய் நனைத்துவிடுகிற
எதிர்பாராத நாளொன்றின் பெருமழையென
பரவசத்தையும் தவிப்பையும்
சேர்ததே தந்துவிட்டுப்போகிறது
உன் ஒவ்வொரு வருகையும்.
#
தானறியாமல் கூடவேயிருக்கிற
பிடித்தமான பாடல் வரிகளின் முணுமுணுப்பைபோல
தலையணையில் உறங்குகிற குட்டிப்பூனையின் உறக்கத்தை
கலைக்காமல் விட்டுவிடுகிற மனோநிலையைப்போல
முற்றத்து செவ்வரத்தம் பூக்களை
நின்று ரசிக்கிற தருணமொன்றாக
மோசமான நாளொன்றின் முடிவில் கிடைக்கிற
அம்மாவின் அழைப்பைப்போல
இன்னும் இன்னும்...
இங்கே எழுதி முடிக்காமல் விடுகிற
இந்த கவிதையைப்போல.
#
இன்றைக்கு எதையாவது எழுதியே ஆகவேண்டும் என்று நிலைகொள்ளாத மனோநிலையை இழுத்துப்பிடித்துக்கொண்டு எழுது-எழுது என்றால் என்னை ஒரு ஓரமாக விட்டுவிட்டு அதுபாட்டுக்கு என் அவஸ்தைகளை ரசித்துக்கொண்டிருக்கிறது.
காதல்.
_________________________________
எல்லா துன்பங்களிலிருந்தும் என்னை மீட்டெடுக்கும் உந்தன் கருணைக்கு.
No comments:
Post a Comment