Thursday, March 25, 2010

உன் நளினங்களை எழுதிப்பழகிய சொற்கள்.

ம்ஹீம்,இல்ல,என்னத்துக்கு, ஆஹாங் அல்லது மிக மெல்லிய மௌனம் என்பதாகத்தான் இருக்கும் நான் முத்தம் கேட்கிற பொழுதுகளில் உன்னுடைய பதில்கள் அல்லது செயல்கள். எப்பொழுதும் முத்தங்களை கேட்பதும் எப்பொழுதும் இந்த வார்த்தைகளை கொண்டு மறுப்பதும் பிடித்தமான சலிக்காததொரு இயல்பாகிவிட்டிருந்தது நமக்கு.

"எத்தனையாவது இது
ஒரு நாளைக்கு எத்தனையப்பா கேப்பியள்" என்கிற
உன் விருப்பம் நிறைந்த சலிப்புகளுக்காவே கேட்கலாம்
நீ தராமல் விடுகிற முத்தங்களை.





__________________________________________________


"நான் குளிக்கப்போகிறேன் நனைய வருகிறீர்களா" என்றொரு குறுந்தகவலை அனுப்பியிருந்தாய் நான் விழித்திருக்காத ஒரு காலைப்பொழுதில் இது போதாதா எனக்கு.


நீ குளித்துக்கொண்டிருக்கிறாய் என்று தெரிந்தே நான் எடுக்கும் அழைப்புகளும் உன் ஈரப்பதில்களும் எத்துணை தவம் செய்திருக்கிறது இந்த தொலைபேசிகள்.

“வேற நேரம் இல்லையே கோல் எடுக்க
குளிக்க விடுங்கோப்பா மனிசரை,ஒழுங்கா குளிக்கக்கூட விடாதுகள்”
என்கிற உன் பாவனைகள் தருகிற தொல்லையை விடவா
நான் எடுக்கும் அழைப்புகள் உன்னை தொல்லை செய்கிறது.

__________________________________________________________


“நீ என்னதான் குளிச்சாலும் கறுப்பிதானடி”

“அந்த கறுப்பிலதானே மயங்கினியள்”

“ஆர் மயங்கினது ஏதோ பாவம் மச்சாள் எண்டு 'லவ்' பண்ணினா ஆக்களைப்பார் மயங்கினதாம்”

“போடா... உங்களுக்கு ஆர் பொம்பிளை தாறது ஏதோ பாக்கியத்தின்ரை(மாமியின் பெயர்) மகள் கிடைச்சிருக்கு,அவற்ரை நினைப்பை பார் ஏதோ வரிசைல நிக்கிறாளுகள் எண்டமாதிரி”

நீ
குளித்து உதறிய
கூந்தலின் துளிகளில்
கரைந்து போனவன் நான்.

___________________________________________________




“ஹையோ இதைக்கல்யாணம் கட்டி என்ன பாடுபடப்போறனோ வெளிக்கிட விடப்பா சாறி கட்ட வேண்டாமே”

காதலர்களாக காதலித்துக்கொண்டிருக்கும் காலைப்பொழுதில் என் அழைப்புக்கான உன் சிணுங்கல் இதுவாயிருந்தது.

இப்படி நீ சொன்ன அந்த காலைப்பொழுதிலிருந்து தினமும் காலையில் அவசரமாய் ஆயத்தமாகிற உன்னை சீண்டுவதே காலைப்பொழுதுகளின் மிகப்பிடித்தமான வேலையாயிருக்கிறது எனக்கு.

அவசரமாய் ஆயத்தமாகிக்கொண்டிருக்கிற
உன்னை சீண்டுவதே எனக்கு வேலையாகிப்போயிற்று
முத்தங்களுக்கும் சிணுங்கல்களுக்கும் இடையில்
நீ அணிகிற சேலைகளுக்கு தெரியுமா, அவை
எழுதப்படாத எத்தனையோ கவிதைகளை
சுமந்து கொண்டிருக்கின்றன என்பது.

___________________________________________________

எப்பொழுதும் உற்சாகமாய் இருக்கிற உன்னுடைய இயல்பு
எனக்கு நேரெதிர் திசைகளில் இருந்தாலும்
என்னை உன்னிடம் அழைத்து வருகிற நிஜமாகவும்
அதுவே இருக்கிறது.

_________________________________________________

வேறெந்த மொழிகளிலும் எழுதி விட முடியாத உன்னை
என் காதல் கொண்டு எழுத ஆரம்பித்திருக்கிறேன்
எப்பொழுதும் கூடவே இரு நானெந்த
எழுத்துப்பிழைகளையும் செய்து விடக்கூடாது.

______________________________________________________

நீ பேசும்பொழுது மட்டுமல்ல
உன்னோடு பேசும் பொழுதுகளிலும்
மொழி அழகாகி விடுகிறது.

______________________________________________________

வாழ்க்கை பயப்படுத்துகிற இந்தக்கணங்களில்
ஏதாவது சொல்லாமல் விலகிப்போகதே
உருகி உருகி ஒரு நாள்
உன் காதல் என்னை கொன்று விடும் என்றாலும்
கடைசியாய் நீ சொல்லிப்போன வார்த்தைகள் மீதமிருக்கக்கூடும்.

_______________________________________________

என்னிடமிருந்த எல்லா கேள்விகளுக்கும்
பதில்கள்
உன்னிடமே இருந்தது
கேட்க முடியாத உன் குரலைப்போலவே
ரகசியமாய் இருக்கிறது
இன்னமும் சொல்லாத என் காதல்.

_________________________________________________

ரகசியமானதொரு அற்புதமாய் இருக்கிறது உன் பிம்பம்
கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் திரும்பத்திரும்ப
என்னை உன்னிடம் அழைத்து வருகிற
உன் பிரியத்தின் ஒவ்வொரு நிகழ்விலும்
ஒளிந்து கொண்டிருக்கிறது
நீ பேச மறுத்த உன் காதல்.

_______________________________________________________



//
அரைப்பாவாடை சட்டையில் அடம்பிடிக்கிற
உன்னைப்போலிருந்தில்லை வேறெந்த தேவதைகளும்.

//
ஒற்றைப்புருவம் உயர்த்துகிற இந்த வித்தையை
பிறந்ததிலிருந்தே கற்றுக்கொண்டாயா
எவ்வளவு அழகாய் வன்முறை செய்கிறது உன் கண்கள்.

____________________________________________________

இந்தச்சொற்களை எழுதி வைக்கும் பொறுமையோ நினைவில் வைத்திருக்கும் தன்மையோ இல்லாத இந்த நாட்களில் இப்படியான வரிகளை எழுதிப்பார்க்கிற மனோநிலைக்கான சந்தர்ப்பத்தை கொடுத்த பராக்கிரமநிதிக்கு.

19 comments:

ஆயில்யன் said...

காதல் செய்யுங்கள் :)


உமது காதலால்,உணர்வுகளை உருக்கிடும் காதல் வரிகள் எமக்கு வாசிப்புக்கு கிடைக்கட்டும் :)))

Thamiz Priyan said...

அச்சச்ச்சோ.. தம்பிக்கு இன்னும் கண்ணாலம் ஆகலியோ? அதான் இப்படி உருகி திளைக்குது... சீக்கிரமா கறுப்பியைக் கண்ணாலம் கட்டு.... மயக்கம் எல்லாம் போயிடும்.:-))

ஆயில்யன் said...

@ சென்ஷி


எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் :)))

ஆயில்யன் said...

2 தமிழ் பிரியன்


காதல் கவிதைகள் - கல்யாணம் கட்டினாலும் போகாது ஓய்!

இது கூட உமக்கு புரிபடலயா ஹய்யோ ஹய்யோ!

Thamiz Priyan said...

2 ஆயில்யன்
ஓய்.. உமக்கு இன்னும் கண்ணாலம் ஆகல... ஆனப்பறம் இதையே சொல்றீரான்னு பாக்குவோம்ல.. ;-))

தமிழ் மதுரம் said...

வணக்கம் தமிழன்! என்ன கனநாளாகக் காணேல்லை? எப்படிச் சுகம்?

தமிழ் மதுரம் said...

போன முறை அரேபிய நாட்டு அழகி பற்றி எழுதி கலக்கினீர்கள். இந்த முறை தமிழ்க் காதலா?

கவிதையின் எல்லா வரிகளுமே கலப்படமற்ற நிஜமான வார்த்தைகள். எதனை மேற்கோளிட்டு விமர்சிப்பதென்றே தெரியவில்லை. உங்கள் இலக்கிய நயம் அரேபியாவின் வறண்ட மணற்துகள்களினூடே எங்களைச் சேரும் போது எப்படி இருக்கிறது தெரியுமா? உங்கள் இலக்கிய மொழிகள் படிக்கும் போது மனதிற்குள் ஒரு எதிர்பாராத இனம் புரியாத உணர்வினை ஏற்படுத்துகின்றன.

தீபிகா சரவணன் said...

தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு

http://www.tamilarkalblogs.com/page.php?page=அன்னௌன்செமென்ட் இந்த இணைப்பினை பார்க்கவும்.

தமிழன்-கறுப்பி... said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே, அன்றைக்கு பிறகு இன்றைக்குத்தான் இந்தப்பக்கம் வருகிறேன், பின்னர் பகிரலாம்.

Thamira said...

காதல் வழிகிறது அத்தனை வரிகளிலும்.

/உன்னை
என் காதல் கொண்டு எழுத ஆரம்பித்திருக்கிறேன்
எப்பொழுதும் கூடவே இரு நானெந்த
எழுத்துப்பிழைகளையும் செய்து விடக்கூடாது./ ரசனை.

நவீன் ப்ரகாஷ் said...

தமிழ்... நீநீநீண்ண்ட நாட்களுக்குப்பின் வருகிறேன்...:) காதல் தோய்ந்த வரிகளில் நனைவது இன்னமும் இன்பமாய் இருக்கிறது... மிகவும் ரசித்தேன்.. வாழ்த்துக்கள்...

hiuhiuw said...

யோவ்! இதப் படிச்சுட்டு என் டார்லிங் என்னிக்காச்சும் எங்கிட்ட முத்தம் கேட்டு இருக்கியா? எம்மேல உனக்கு ஆசயே இல்ல அப்பிடி இப்பிடின்னு ஒரே தகராறு நேத்து

Unknown said...

உங்கள் படைப்புகள் அனைத்தும் மிகவும் வித்தியாசமானவை ......எப்படி? இப்படி????

Unknown said...

I forgot to say..[:)] I am Nandini.I am ur fan.....I saw ur all post before,But not to write to u. Now I got time to comment ..U r giving to all nice pain WITHOUT hurt..

தமிழ் மதுரம் said...

தமிழன் உங்களிட்டை ஜீமெயில் இருக்கோ? இருந்தால் ஒருக்கால் எனக்கு உங்கடை மெயில் ஐடியை அனுப்ப முடியுமோ? melbkamal@gmail.com

-பருத்தியன்- said...

நன்றி நண்பா..... உனது காதலின் இனிமையினை உணர்த்தும் அந்த இனிமையான சினுங்கல் வரிகளில் என் காதலையும் நினைத்து இரசித்தேன்.

நடக்கட்டும்! நடக்கட்டும்!

தமிழன்-கறுப்பி... said...

@நன்றி ஆயில்யன்..

@தல நல்லது நடக்கட்டும். :)

@ஆயில்யன் எதுக்கய்யா இப்ப அந்தாளை.. :)

@தல ஏன் பொறாமை..

@கமல் நல்லா இருக்கிறேன்..
நன்றி கமல், மடலனுப்புகிறேன் கொஞ்சம் நேரமின்மை..

@ நன்றி தீபிகா..

@ நன்றி தாமிரா அண்ணே..

@ நவீன் என்னய்யா, ஆளைக்- காணேல்லை, நீண்ட நாட்களுக்கு பிறகு பார்ப்பதில் சந்தோசம், காதல் எப்பவும் அப்படித்தானே.. :)

@ராஜன் இப்படியான வாய்ப்புகளை தவற விடக்கூடாது. ;)

@ செல்வி- நன்றி இந்தப்பெயரை நெருக்கமாக உணர்கிறேன்.

@ பருத்தியன் நன்றி நண்பா,என்ன சத்தத்தையெ காணேல்லை..

Nandini said...

இதில் இருக்கும் url பார்க்கவும்.

தமிழன்-கறுப்பி... said...

Nandini said...
//இதில் இருக்கும் url பார்க்கவும்.//


ம்ம்... பார்த்தேன் நடக்கட்டும்.

ஆனால் அது யாரென்று தெரியாதே! :)