Sunday, March 7, 2010

ஈஷாவும் சாம்பல் நிறக்கதையும்.

இலங்கையில் பிறந்து இப்பொழுது நான்கு வருடங்களாக சவுதிஅரேபியாவில் இருக்கிற என்பெயர் வல்லவன் ஈழமைந்தன்.என்னை பேஸ்புக்கில் (facebook) இப்படித்தான் உங்களுக்கு தெரியும்.

பெருங்குழப்பங்களும் சிக்கல்களும் நிறைந்த இந்த சமுதாயத்தின் கட்டமைப்புகளில் அழுந்தி உழன்று கொண்டிருக்கிற இந்த முகநூல் பக்கத்தின் பெயரை சுமந்தலைகிற நான் அகம் புறம் என்கிற இருவெளிகளிலும் தளம்பல் நிலையிலிருக்கிற அழுக்குகளை தாங்கியிருக்கிற ஒரு விலங்காக என்னை உணர்ந்து கொள்கிறேன். இனியெப்பொழுதும் என்னை சிபாரிசு செய்யாதீர்கள் தோழர்களே நானுங்கள் நண்பர்கள் பட்டியலில் இருப்பது எனக்கு குற்றவுணர்வைத்தருகிறது.

இந்த குறிப்பை எழுதும்கணங்கள் வரையிலும் என் பிறவிமீது படிந்திருக்கிற அழுக்கை எந்த மீட்பர்களும் இதுவரை நீக்க விரும்பவில்லை. நான் இது வரை போகாத பெண்களிடமிருந்தும் இந்தப்பெயரின் உடலுக்கான முழுமையை கண்டடைய முடியவில்லை. ஆதியிலே மாமிசம் இருந்ததாகவும் அது நிர்வாணமாய அலைந்ததாகவும் தேவதூதர்கள் சொல்லிய புனித நூல்களிலே கண்டிருக்கிறேன். எனக்கான மாமிசத்தை சுமந்தலைகிற அந்து தேவதூதர்கள் இந்த உடலின் முழுமைக்கான மாற்றுடலை எப்பொழுது தரக்கூடும்.

அதிகாரத்தின் மீது பிரியமுள்ள என் சனங்களே நானிந்தப்பெயரை வெறுக்கிறேன் என் உடலினிருந்தும் வெளியேறிவிடத்தீர்மானித்திருக்கிறேன் சகல ஜீவராசிகளையும் ஜலப்பிரளயத்திலிருந்து தப்புவித்த நோவா நைல் நதியின் கரையோரங்களில் பிரசன்னம் இறங்குவதற்கான பிரார்த்தனைகளில் இருப்பதாக கடைசியாய் என்னோடு இரவைப்பகிர்ந்த லெபனானில் இருந்து வந்திருந்த ஈஷா சொல்லியிருந்தாள். உண்மையில் இவளுடைய பெயரை என்னால் சரியாய் சொல்ல முடியாமல் இருக்கவே இவளுக்கு ஈஷா என்று பெயர் வைத்திருந்தேன்.

லெபானான் பெண்கள் எப்படியிருப்பார்க்ள் என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் உங்களை நான்ஸியின் மீது ஆணையாக நானே கொலை செய்து விடுவேன். இவள் சவுதிய அரேபியாவின் அடைக்கப்படட கலாச்சாரத்தின் போலிகளையும் அதன் உடைபடுதல்களையும் மற்றொரு முறையாக பகிர்வதற்கு அமைக்கப்பட்டிருக்கிற (இது சவுதி அரேபியா உலகுக்கு காட்டியிருக்கிற தங்களின் கலாச்சார அளவீடுகளின் தளர்வுத்தன்மை எனவும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்) பல்கலைக்கழகத்தில் (KAUST) படித்துக் கொண்டிருக்கிறவள். எனக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக அறிமுகமாகியிருந்தாள். அறிமுகமான முதல் நாளிலேயே "you are short but your work is sooo... good" என்று கறுப்பாடைகளால் மறைக்படாத பெருந்தனங்கள் குலுங்க சிரித்தபடி "i'm Iesha" என கையை நீட்டினாள் (இதே வசனத்தை அவள் இன்னொரு சந்தர்ப்பத்திலும் சொல்லி இருந்தாள்)பல மாதங்களுக்கு மேலாக எந்தப்பெண்களது கையும் தீண்டப்படாமலிருந்த கையை நடுக்கத்தோடு நீட்டினேன்.



ஈஷா உண்மையில் அநேகம் லெபனியப்பெண்களைப்போல அழகாகவும், கொஞ்சம் யாழ்ப்பாணப் பெண்களைப்போல திமிரோடும் இருந்தாள் (யாழ்ப்பாணப் பெண்கள் அழகில்லையா என்கிற குறுக்கால போற கேள்வி இங்கே தேவையற்றது).இவள் என்னிடம் பேசத்தொடங்கியதற்கு நான் சமைத்துக்கொடுத்திருந்த “Grilled Shrimp Scampi" காரணமாயிருந்தது. இத்தனை வருட இந்த அனுபவங்களில் ஒரு லெபனான் அழகியை கவிழ்க்க முடிந்த சமையல் காரனாயிருப்பதில் பெருமகிழ்வு என்று எழுதுவது என் கட்டமைப்பு பிம்பங்களுக்கு மாறானதாக இருக்கக்கூடும் என்பதால் "any how cooking is not only my job it's an art and i love it" என்று என் வழக்கமானதும் உண்மையானதுமான பதிலை சொல்லி வைத்தேன். ohhh nice.. என்று நன்றி கூறி விடைபெற்றவள் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் நெருக்கமாகியிருந்தாள்.சின்னச்சின்னதாய் ஏதேதோ பேசிக்கொண்டோம்.
பேசிக்கொண்டே ஓடிப்போன இரண்டரை மாதங்களில் காண்கிற தருணங்களில் எந்த இடமாயிருந்தாலும் கட்டியணைத்து கன்னங்களால் முத்தமிடுவளவுக்கு நெருக்கமாகியிருந்தாள்.

எல்லோருக்கும் வயித்தெரிச்சலை கிளப்பிக்கொண்டிருந்த எனக்கும் ஈஷாவுக்குமான நெருக்கத்தை எனக்கு மேற்பார்வை பொறுப்பிலிருக்கிற அலோசியஸ் சபித்துக் கொண்டேயிருந்தார்,இவரும் அதே இலங்கையின் தென்பகுதியில் இருந்து வந்தவர்தான்.

இவளோ யாரையும் கண்டு கொள்ளாமல் என் சங்கடமான நிலையும் மீறி "ஹபீபி" என அழைக்த்தொடங்கியிருந்தாள். அவள் அப்படி அழைப்பதற்கு காரணம் நானேதான் எனக்கு அரேபியப்பெண்கள் ஹபீபி என்றழைக்கிற விதம் நிறையப்பிடிக்குமென்பதாய் அவளிடம் அவளோடு யாருமற்ற வராந்தாவில் நிகழ்ந்த இரண்டரை நிமிட நீள முத்தத்திற்கு பிறகு சொல்லியிருந்தேன்.

கடந்த சனிக்கிழமை வந்தவள் இந்த வார விடுமுறையை தன்னோடு கழிக்கும்படியும் மறக்காமல் ஆயத்தங்களோடு வந்துவிடு என்றும் சொல்லிப்போனாள். என்ன ஆயத்தம் செய்யவேண்டியிருக்கிறது ஒரு இரவு தங்குவற்கு என்கிற என்ன அலட்சியத்தை தலையணைகளை இறுக்கியபடி அவள் கொண்டு வந்தாயா என்ற பின்னரே புரிந்து கொண்டேன். இல்லையென்றால் தன்னுடைய கைப்பையில் இருக்குமென்றவளை உனக்கும் எனக்கும் இடையில் அது தேவைப்படாதென கூறி அவள் உதடுகளை பேசவிடாமல் முத்தமிட ஆரம்பித்தேன்.

ஏவாளின் சாயல்களோடும் எனக்குப்பிடித்தமான சாயாவோடும் என்னை என்னை எழுப்பிய வெள்ளிக்கிழமையின் காலைப்பொழுதில் நான் அது வரை அறிந்திராத உணர்வுகளை கொடுத்தபடியிருந்தாள் சாயாவை பருகி முடிக்கும் வரை எதுவுமே பேசாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தவள் ஹபீபி இனி நமக்கான சந்தர்ப்பங்கள் அமையப்போவதில்லை என சலனமற்ற கண்களோடு கூறினாள்.

இந்தக்கதை இத்தோடு முடியவில்லை ஆனால் இதற்கு மேல் என்னால் சொல்லவும் முடியாது.

வளைவான கண்ணாடிக்குவளைகளில் நீந்துகிற
தங்க மீன்களென இருக்கிறது உன் கண்கள்
நான் எப்பொழுதும் எழுதி விட முடியாத மொழிகளை
அவை என்னோடு பேசுகின்றன
உனக்கான தயார்படுத்தல்களில்
எப்பொழுதும் தோற்றுப்போகிறவனாகவே நானிருக்கிறேன்
ஏழுகடல் மலைகள் தாண்டிய குகையின் பேழைக்குள் அடைப்பட்ட
அற்புதமென என்னை அலைக்கழிக்கிறது உனது பிம்பம்
என் நிறைதலுக்கான தருணம் உன்னோடே நிகழக்கூடுமென்பதாய்
நம்புகிறது பற்றுதலுக்கு காத்திருக்கிற என் வாழ்நாட்கள்.


_______________________________________



“எங்க விட்டனான் சரி...
உன்னத இசையும் மங்கள வெளிச்சமும் நிறைந்ததாய் என்னுடைய தெருக்கள் இருந்தன இருப்பதையே நானும் விரும்பகிறேன். கிடைத்திருக்கிற இந்த நாட்களின் மீது எனக்கு தீராத அவா இருக்கிறது. எப்படி பார்த்தாலும் அவை போதாதவையாகவே இருக்கின்றன. நான் அவற்றை நிதானமாக கடந்து போக ஆசைப்படுகிறேன்.

என் தெருவில் உங்களை வரவேற்கிறதற்கு நான் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறேன் நீங்கள் உங்களளுடைய திணிக்கப்படாத பெயர்களோடு வாருங்கள். உண்மை முகங்களை கொண்டு வாருங்கள் அவை குரூரமானதாய் இருந்தாலும் உங்களை இயல்பாய் அணுக முடியம் என்னால்.

இந்த உடலை எனக்கு பிடிக்கவில்லை எனக்கான வாழ்விலிருந்து நான் விலகுவதைப்போல எப்பொழுதும் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கப்பண்ணுகிற இந்த புறச்சூழலும் அதற்குண்டான நிறங்களும் பெயர்களும் குணங்களும் என்னை இயல்பிலிருந்தும் சம நிலையிலிருந்தும் தள்ளி விழுத்துகின்றன. நீங்கள் உங்களுடைய கதைகளைப்பேசலாம் அதிலொன்றும் தவறில்லை நானும் பேசலாம் என்பதை ஏன் மறுக்கிறீர்கள்.

குற்றங்கள் பழகிப்போன ஒரு விலங்காய் நானிருக்கிறேன் நேர்மையாகச்சொல்வதானால் நானொரு கீழ்ப்படிய மறுத்த தேவதூதன் எதையுமே நம்பாதவன் என்னைக்கூட. பயம் எப்பொழுதும் என் முதுகில் குந்தியிருந்து என்னை தள்ளிக்கொண்டிருக்கிறது. சாத்தான்கள் என் அறையில் விருப்பத்தோடு குடியேறுகின்றன நானில்லாத என்னுடைய அறையில் அவை பெருங்குரலெடுத்து பாடுவதாயும், புகையும் மதுவின் வாடையும் திறக்கப்படாத ஜன்னல்கள் வழியே வருவதாகவும் ஸ்தியாக்கு சொல்லியிருக்கிறான்.அவனிடம் ஒரு பூனையும் நீளமான தாடியும் இருந்தது.

___________________________________________________

உங்களுக்கு பெயர் சொல்ல விரும்பாத- சில இரவுகளையும் நிறையக்கதைகளையும், எண்ணிவிடக்கூடிய பகல் நேர முத்தங்களையும் என்னோடு பகிர்ந்த சிங்கள தோழியொருத்திக்கு -

(அவளுடைய பெயரை நான் தான் சொல்ல விரும்பவில்லை)


என்னுடைய அப்பப்பா எனக்கு ஒரு கதை சொல்லுவார்; தான் ராசாதானியொன்றில் விருந்தாளியாய் இருந்து வந்ததாகவும், அந்த மன்னனிடம் வியாபார உறவுகளை வைத்திருந்ததாயும், கடலுணவுகளையும் புகையிலையும் பெற்றுக்கொள்கிற மன்னன் ரத்தினங்களும் பணமும் தருவதாகவும் சொல்லியிருக்கிறார். பரிசாக இவருக்கு கொடுக்கப்பட்ட வயலொன்று அந்த மன்னனின் ஆட்களை வைத்தே விளைவிக்கப்பட்டு விளைச்சல் வீடு வரைக்கும்வந்து சேர்ந்ததாய் சொல்லியிருக்கிறார்.

பழைய கதைகளை எதற்கு பேசவேண்டும் நமக்கென்று ஒரு கதை இருக்க வேண்டும் என நீ நினைக்கிறாய்தானே நாம் ஒரு புதிய கதையை எழுதுவோம்; இங்கேதான் பழைய கதைகள் நமக்கு தேவைப்படுகிறது. பழைய கதைகளை நாம் அறிந்திராவிட்டால் புதிய கதைகளை நம்மால் எப்படி முழுமையாய் சொல்ல முடியும். ஆகவே நீ உன் சனங்களை பழக்கப்படுத்து சாம்பல் நிறத்தில் எழுதப்பட்ட அந்தக்கதைகளில் வேறெந்த மூலக்கூறுகளும் திணிக்கப்படாமல் இருந்ததென்கிற உண்மையை கூறு. நானும் என் மக்களுக்கு கதை சொல்ல முயல்கிறேன் என்னைப்பொறுத்த வரையில் எனக்கு இது ஒன்றும் வானைப்பிளக்கிற செயலாக தெரியவில்லை. நீயும் அறிந்திருப்பாய் தானே அது என்னுடைய சனத்தின் தனித்துவமான இயல்பு.

___________________________________________

இனிய நோவாவே...

சந்ததிகள் பிறந்து கொண்டேயிருக்கிறது அவைகள் இறந்து கொண்டும் இருக்கின்றன பிரசன்னம் மட்டும் இன்னமும் இறங்காமலே இருக்கிறது. கதைகளும் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.


என் இப்போதைய நாட்களைப்போலவே குழப்பமாயும் திருப்தியில்லாமலும் வெறுமையாயும் வெறுப்பாயும் இருக்கிற எனக்கு எழுத்தெரியாத இந்தக்கதை. இந்த வெறும் நாட்களின் விட முடியாத விசயமென என்னோடு தங்கிவிட்டிருக்கிற இணையத்தில் ஒரு போதையைப்போல பயன்படுத்தத் தொடங்கியிருக்கிற முகநூலின் போலிகளின் மீதான கோபங்களுக்கு.


pictures :
Thought Patternes
deviantart

7 comments:

Thamiz Priyan said...

ஸ்தம்பிக்க வைக்கின்றது.

ஆயில்யன் said...

எனக்குள் பிரம்மிப்பினை ஏற்படுத்தியது நான்ஸியுடனான நாட்களை காதலுடன் கடத்திச்சென்ற வாழ்க்கை!

//என் இப்போதைய நாட்களைப்போலவே குழப்பமாயும் திருப்தியில்லாமலும் வெறுமையாயும் வெறுப்பாயும் இருக்கிற எனக்கு எழுத்தெரியாத இந்தக்கதை//

புரிந்தும் புரியாமலும் இருப்பது வாழ்க்கை! பயணத்தில் பெறுகின்ற அனுபவங்களினை ஒரு போதும் ஒதுக்கிவிட்டுச்செல்ல முயற்சிக்கவேண்டாம்! போலிகளின் மீதான கோபத்தினை விட, போலித்தனமற்ற மகிழ்ச்சியினை அன்பினை பிறருக்கு அளித்திருங்கள்! அகத்திலும் முகத்திலும்-புத்தகத்திலும் - :)

gulf-tamilan said...

/விளங்கேல்லை/
எனக்கும் விளங்கல???

ரௌத்ரன் said...

அய்யனாரை வாசித்து நாசமாய் போன பல கோடி(!!!!) ரசிகர்களில் நீரும் ஒருத்தராகி போனதில் ஏக சந்தோஷம்யா எனக்கு...

jokes apart...நல்ல சூழ்நிலை அமைஞ்சா ரொம்ப அருமையா எழுத முடியும்யா உம்மால்..இந்த நாதாறி தேசத்தில ஒரு கற்பனையும் வராது... இங்க இருந்து கிட்டே நீர் இந்த போடு போடறீர் :)

லெபனான் தேச அழகியாமே..ங்கொய்யால..உமக்கு பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணனும்யா :))

ரொம்ப பிடிச்சுருக்குயா உம்ம இடுகை..ஆனா இதுல இருக்குற போலி தனத்துக்கு நேரா பார்க்கும் போது வசமா வாங்கி கட்டிப்பீர் அதுவும் உறுதி.எழுதும்..எழுதி குவியும் :)))

தமிழ் மதுரம் said...

இத்தனை வருட இந்த அனுபவங்களில் ஒரு லெபனான் அழகியை கவிழ்க்க முடிந்த சமையல் காரனாயிருப்பதில் பெருமகிழ்வு என்று எழுதுவது என் கட்டமைப்பு பிம்பங்களுக்கு மாறானதாக இருக்கக்கூடும் //



ஆஹா.... நல்லாச் சமைப்பீங்களோ:)
)

தனிமையின் ஏக்கம் கலந்த உணர்வின் வெளிபாடாய் அமைந்துள்ளது பதிவு...

உரை நடையால் அசத்துகிறீர்கள்.

ஆர்வா said...

கதையை விட அதை கொண்டு செல்லும் முறை அழகாய் இருக்கிறது.. படங்களும் கலக்கல்

தமிழன்-கறுப்பி... said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.

யோவ் ரௌத்ரன் ஏனய்யா? :)