Sunday, January 10, 2010

புதிய நாட்களின் ஆரம்பம்.

புதிய நாட்களின் ஆரம்பம் - தாமதமான சில குறிப்புகள்.


சென்றவருடத்தைப்போலல்லாது இலேசான போதையும் மிகுந்த கொண்டாட்டமானதுமான ஒரு மனோ நிலையோடே தொடங்கியிருக்கிறது இந்த வருடம்.இருந்தாலும் இந்த வருடம் பெரிய மாற்றங்களைக்கொண்டு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எனக்குள் இருந்ததோ என்னவோ ஒரு மாதிரி அழுத்தமாகத்தான் ஆரம்பித்திருக்கிறது.கொண்டாட்டத்துக்குரிய மனோ நிலையை கொண்டு வருவதற்கு நிறையவே முயன்றிருக்கிறேன் என்பதாய் ஒரு உணர்வு எனக்கு உறுத்திக்கொண்டிருக்கிறது.அழுத்தம் நிறைந்த ஆரம்பமாக தோன்றுவதற்கான காரணம் அதுவாக இருக்கக்கூடும்.முத்தங்களோடு ஆரம்பித்த பழைய சில வருடங்கள் பற்றிய நினைவுகளும் கூடச் சேர்ந்து கொள்கின்றது.


இரண்டாயிரத்து ஒன்பது நினைத்ததை விட வேகமாக கடந்திருக்கிறது நினைக்காத பல விசயங்களையும் நிகழ்த்திக்கொண்டு. போர் துரத்துகிற மனிதர்கள் பற்றியதொரு துயரக்கதையை இந்த வருடம் முழுவதும் பேசிக்கொண்டே இருந்தது எனக்குத்தெரிந்த உலகம். வாழ்க்கை இன்னமும் மீதமிருப்பதாய் நம்பியிருக்கிறார்கள் மிகச்சொற்பமான என் மனிதர்கள்.

இதுவரையும் தொடர்பிலிருந்த தேவதை ஒருத்தியின் தொடர்பு கடந்த வருடத்தின் கடைசிகளில் இல்லாமல் போயிருக்கிறது.இரண்டாயிரத்து ஒன்பதின் தனிப்பட்டவலிகளில் ஆகக்க கடினமானது இதுவாயிருக்கலாம்.

புலம்புதல் என்பதிலும் வாசித்துக்கரைதல் என்பதை அதிகமாக உணர்ந்திருக்கிறேன். இப்பொழுதே வாசிக்க வேண்டும் என்கிற புத்தகங்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் கூடிக்கொண்டேயிருக்கிறது. கடந்த வருட இணைய வாழ்வின் இன்னொரு முக்கியமான விசயம் பலரது நெடுநாள் நச்சரிப்புக்கு பிறகு முகபுத்தக(facebook) ஜோதியில் ஐக்கியமாகியது.பெரும்பங்கான பேர்கள் பொழுது போக்காய் இயங்கினாலும். facebook செய்திருக்கிற முக்கியமன விசயங்களில் ஒன்று மீண்டும் புதுப்பிக்கப்டுகிற தொடர்புகளும் தேடித்தந்திருக்கிற பழைய உறவுகளும்.இது பற்றி மற்றொரு பகிர்வில் சொல்கிறேன்.

எவ்வளவுதான் குரூரங்களும் நம்பிக்கையின்மைகளும் சுற்றிக்கிடந்தாலும் வாழ்வின் நகர்தலுக்கான நம்பிக்கைகள் எங்கேயிருந்தாவது கிடைத்துக்கோண்டேயிருக்கிறது.அழுத்தம் மிகுந்த பல இரவுகளை கொடுத்திருக்கிறது 2009! நானாகவே வெளியேறி வந்திருக்கிறேன் என்பதாகத்தான் இப்பொழுது தோன்றுகிறது. இன்னமும் கொஞ்சம் தெளிவு வந்திருப்பதாய் நம்புகிறேன். அதற்கு என் தனிமையை தோள்செய்த புத்தகங்ளுக்கும்,பார்க்கக்கிடைத்த திரைப்படங்களுக்கும் என்னை மீட்டெடுத்த சொற்களை எழுதியவர்களுக்கும் நன்றி.

அருகிலிருந்தவர்களோடு பகிர்ந்து கொண்டதை தவிர்த்து ஓரிருவரை தவிர யாருக்கும் அழைப்பை ஏற்படுத்தாத இந்த வருடத்தின் தொடக்கம் எனக்கு எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறது. நான் எதிர்பார்க்கிற எதிர்பாராவின்மைகள் அப்பொழுதே தொடங்கியிருக்கலாம்.

எப்போதும் போல எழுதாத சொற்களின் திணறல் குறைவதாக தெரியவில்லை! உள்ளிருக்கும் சாத்தான் விழிக்கும்வரை நான் புலம்பலாம்.முன்னிலும் தீவிரமாக பணம் என்னை துரத்த ஆரம்பித்திருக்கிறது.வேறெதுவும் சொல்லத் தோன்றாவிட்டாலும், நம்பிக்கையோடிருக்கிறார்கள் சில மனிதர்கள்; மீதமிருக்கிற கண்ணிவெடிகளை உழுது விதைக்கிற நிலமும் விளையத்தான் போகிறது.

8 comments:

ஆயில்யன் said...

ஆண்டின் துவக்கத்தில் அன்பு மிகும் நெகிழ்வுடன் வாழ்த்துக்கிறேன்! நினைத்த காரியங்களில் நிறைவேற்றம் பெறும் இந்த ஆண்டில்....!


பல வரிகளில் மிக உள்ளார்ந்து ரசித்தேன்!

Thamiz Priyan said...

\\\ஆயில்யன் said...

ஆண்டின் துவக்கத்தில் அன்பு மிகும் நெகிழ்வுடன் வாழ்த்துக்கிறேன்! நினைத்த காரியங்களில் நிறைவேற்றம் பெறும் இந்த ஆண்டில்....!


பல வரிகளில் மிக உள்ளார்ந்து ரசித்தேன்! \\\

அதே அதே

gulf-tamilan said...

//சில மனிதர்கள் மீதமிருக்கிற கண்ணிவெடிகளை உழுது விதைக்கிற நிலமும் விளையத்தான் போகிறது.//

ம்!!!

gulf-tamilan said...

//தொடர்பிலிருந்த தேவதை ஒருத்தியின் தொடர்பு கடந்த வருடத்தின் கடைசிகளில் இல்லாமல் போயிருக்கிறது.//
அ(ட)ப்பாவி அவளுக்காகத்தான் status message 'available for girls only' போட்டுயிருகிறியா!!!

ஆடுமாடு said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

தமிழன்-கறுப்பி... said...

//நன்றி ஆயில்யன்

//நன்றி தல

//நன்றி gulf tamilanஅது சும்மா கதைகள் உப்பிடித்தான் தெரியாதோ?

//
@ஆடுமாடு
நன்றி அண்ணன் முதல் பின்னூட்டம் என்று நினைக்கிறேன்.

நன்றி ராடன்.

தமிழன்-கறுப்பி... said...

எல்லோருக்கும்,
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

:)

அருண்மொழிவர்மன் said...

எனது 2009 ம் கிட்டத்தட்ட இப்படியே போனது.

இடையில் திருமணம், பல் நாட்கலின் பின்னர் இலங்கை பயணம் என்பன மறக்கவே முடியாத அனுபவங்கள்.....

ஆனால் ஏனோ தெரியவில்லை, கொண்டாட்டமான மனநிலை மற்றும் பெரிதும் குறைந்தே இருக்கிறது